ATM Tamil Romantic Novels

கள்ளூறும் காதல் வேளையில்… 1

கள்ளூறும் காதல் வேளையில்…

 

1

 

ஜியா ஜானவி ❤️

 

சென்னை..

பரபரப்புக்கு பழகிவிட்ட நகரம்..! தமிழகத்தின் தலைநகரம் மட்டும் அல்லாமல் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் அச்சென்னையை சுற்றியே.. இதுதான் வழக்கம்.. இதுதான் பழக்கம்.. இதுதான் பேச்சு வழக்கு.. என்று இல்லாமல் அனைத்து மாவட்டங்களும் கலந்த கலவையின் அழகிய நிறம் சென்னை..!!

 

சென்னையில் பரபரப்புக்கு மட்டுமல்லாமல் அதனின் வெயிலுக்கும் மாசுவுக்கும் பழகியிருந்தனர் நம் மக்கள்.

 

சென்னை உயர்நீதிமன்றம்..

 

பிரபல கிரிமினல் லாயர் ரங்கராஜன் தன் வாத திறமையை முழுதாக அங்கு காட்டிக் கொண்டிருக்க, அவர் கேட்கும் சாட்சிகளுக்கான ஆதரங்களுக்கான தகவல்களை எல்லாம் அருகில் நின்று எடுத்துக் கொடுத்தபடி நின்று இருந்தாள், அவரின் ஜூனியர்களில் ஒருத்தியான ரிதன்யா பிரபாகரன்.

 

நெடுநெடுவென்ற உயரம் காட்டன் புடவைக்கு மேல் வக்கீலுக்கான கருப்பு அங்கி அணிந்திருந்தாள். அவளின் அழகிய கண்களும் அதன் கருத்தும் ரங்கராஜனையும் அவரை சுற்றியுமே இருந்தது. கூர்ந்து உள்வாங்கியது அங்கே நடந்த சம்பாஷனையை!! அவரின் வாதத் திறமையை..!! வழக்கு செல்லும் போக்கை என்று‌..

 

ப்ரெஞ்சுப்பேட்ல் இருந்த அவளது கற்றை முடி அவள் குனிந்து ரங்கராஜன் கேட்கும் தரவுகளை எடுத்து கொடுக்கும் போதெல்லாம் அவ்வப்போது முன்னால் விழுந்து அவளை தொந்தரவு செய்ய.. அதையெல்லாம் கொஞ்சம் கூட மதிக்காமல் பின்னால் தள்ளி விட்டு முன்னுச்சி முடிகளை மேல் உதட்டை குவித்து ஊதி விட்டவள், வழக்கில் தன் கவனத்தை செலுத்தினாள்.

சில சமயம் ரங்கராஜனிடமும் கண்களால் செய்திகளை பறிமாறினாள்.

 

ஒரு கன்ஸ்டிரக்ஷன் கம்பெனிக்கு எதிராக போடப்பட்டிருந்த வழக்கு. அதில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் தான் ரங்கராஜன் வழக்காடி கொண்டு இருந்தார்.

 

அப்படி வழக்காடுவதனால் மட்டும் அவர் உத்தமர்.. நியாஸ்தர்.. உண்மைக்கும் சத்தியத்துக்கும் போர் கொடி பிடிப்பவர்.. வாய்மையே வெல்லும் என்று வழக்காடு மன்றத்தின் வார்த்தையை வாழ்க்கைக்காக எடுத்துக் கொள்பவர் அப்படி எல்லாம் நினைக்கக்கூடாது..!

 

இதில் பணத்திற்காக மட்டும் அனைத்தையும் அவர் செய்யக் கூடியவர் அல்ல பணத்தையும் தாண்டி ஒன்று பப்ளிசிட்டி..!!

 

இந்த வழக்கை அந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நம்பி வீடு வாங்கியவர்கள் அனைவரும் ஒரு குழுவாக சேர்ந்து இவரிடம் எடுத்து வர.. முதலில் யோசித்து அவருடைய தனிப்பட்ட படையை அங்கே ஃபீல்டு ஒர்க்கு அனுப்பி விஷயங்களை எல்லாம் கிரகித்து, பின் தன் ஜூனியர் படையோடு விவாதித்து அதன் பின்னே தான் இந்த வழக்கை எடுத்துக் கொண்டார்.

 

பெரும்பாலும் பார்த்த உடனே சில வக்கீல்களுக்கு உள்ளுணர்வு சொல்லிவிடும் அல்லவா? இதில் யார் மீது தவறு? யார் மீது தவறு இல்லை என்று..!

 

அப்படியும் மீறி தவறு இழைத்தவர்கள் பக்கம் அவர்களுக்காக வாதாடுகிறார் என்றால்.. அதற்கு நிறைய காரணங்கள் காரியங்கள் இருக்கின்றன!

 

எங்கும் எதிலும் பணம் மட்டுமே பிரதானமில்லை..!!

 

அதை தாண்டி சில விஷயங்களுக்காக செய்து கொடுப்பார்கள். 

 

அதேபோலத்தான் ரங்கராஜனும் இங்கே பணத்துக்காக வாதாட வில்லை. அதை தாண்டியும் அவருக்கு என்று சில கொள்கைகள் உண்டு அதற்காகத்தான் இந்த வாழ்க்கை எடுத்து வாதாடி கொண்டியிருக்கிறார்.

 

மோசமான கட்டுமானத்தினால் அந்த கன்ஸ்ட்ரக்ஷனை நம்பி வீடு வாங்கியிருந்தவர்கள் பலர் 

இன்று வீடு இழந்து நிற்க.. அதற்காகத்தான் இங்கே வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

 

இது சிவில் வழக்காக இருக்க வேண்டியது. அங்கே சில உயிர்கள் பலியாகி இருக்க.. கிரிமினல் வழக்காக மாற்றப்பட்டு கிரிமினல் லாயர் ரங்கராஜனின் கையில் வந்திருக்கிறது.

 

தீர்ப்பு இவர்கள் பக்கம் என்றால் அவர் கனவிலும் நினைக்க முடியாத மிகப் பெரும் தொகையை ஒன்று கைமாறி இருக்கும். அதில் கணிசமான தொகையும் இவளுக்கு சம்பளமாக வரும் என்பது திண்ணம்..!

 

பணத்திற்கு அல்ல..! பணத்தைக் காட்டிலும் அதைத் தாண்டி இத்தனை குடும்பங்களின் நல் மதிப்பை வாழ்ததை பெறுவதற்காகவா என்றால்.. அதுவும் இல்லை..!!

 

அங்கே வீடு வாங்கியவர்களில் பெரும்பான்மையானவர்கள் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளவர்கள். அதாவது நிறைய பேர் மத்திய மாநில அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள். பெரும்பாலும் வீடு அவர்களின் ஒரு சொத்து அசட்டாக அங்கே சேர்க்கப்பட.. 

 

அதற்காக இப்படி மோசம் செய்தால் விடுவார்களா என்ன? இதற்காக ரங்கராஜனை பிடித்து வழக்கை கொடுத்து, தங்கள் பக்கம் ஜெயித்ததை பார்த்து சந்தோஷம் அடைந்தார்கள்.

 

ஆம்..! இந்திய வரலாற்றில் முதன் முறையாக வழக்கை பல வாய்தாக்களுக்கு எடுத்துச் செல்லாமல் மூன்றே மூன்று மாதத்திலேயே முடித்து வைத்த பெருமை நம் கிரிமினல் லாயர் ரங்கராஜனையும் அவரது பிரதான ஜூனியர் ரிதன்யா பிரபாகரனையும் மட்டும் சேரும்.

 

“வெல்டன் ரிதன்யா.. நல்ல ஃபீல்ட் வொர்க் உன் டீம் வெச்சி செஞ்சிட்ட.. குட்..!” என்று தீர்ப்பு தங்கள் பக்கம் சாதகமானதும் அவர் வாழ்த்த..

 

“கன்க்ட்ராஸ் சார் அண்ட் தேங்க்யூ சார்.. உங்க வாதத்திறமை முன்னாடி அவனெல்லாம் நிக்க முடியுமா சார்? டெல்லியில் இருந்து வந்தாலும் எங்க சார் தான் கெத்து!”

என்று தான் அவரின் ஜூனியர் என்பதை நிரூபித்தவள், அவரிடம் விடைப்பெற்று முகம் முழுக்க புன்னகையோடு வெளியில் வந்தாள் ரிதன்யா..

 

அவளது வெஸ்பாவை ஒரு முறை பார்த்தவள் “ஒரே தூசி..” என்று வேக வேகமாக தூசை தட்டி விட்டு வண்டி எடுக்க முனைய “அக்கா.. அக்கா..” என்று அழைத்தப்படி வேகமாக ஓடி வந்தான் அதர்வா பிரபாகரன்..!!

 

தம்பியை பார்த்ததும் “என்னடா எலி ஏரோப்ளைன்ல ஓடுது.. அதிசயமா அக்கா என்கிறான்? அதுவும் இந்நேரம் மருத்துவமனையில் இருக்க வேண்டியவன் இங்கே எதற்கு வந்தான்? அப்போ எங்கையோ சிக்கிட்டான் போல..” என்றபடி அவனை கூர்ந்து பார்த்தாள் ரிதன்யா.

 

“நீ உங்க சேம்பருக்கு வருவேன்னு அங்க வெயிட் பண்ணிட்டு இருந்தேன். பார்த்தா உன் சீனியர் மட்டும் தான் வந்தார். உன்னை கேட்டேன் நீ கிளம்பிட்டேன்னு சொன்னார்”  

 

“ஆமாம்டா.. கேஸ் முடிஞ்சா அதோட எல்லாம் முடிஞ்சிடுமா.. அதுக்கப்புறம் அடுத்தடுத்து பாக்கணும் தானே.. அதற்காக ஒரு வேலை விஷயமா கிளம்புறேன். என்ன விஷயம்?” என்று அவள் தம்பியை கேட்க.. 

 

“கொஞ்சம் பர்சனலா பேசணும் கா” என்றான் அதர்வா..

 

சுற்றி முற்றி பார்வையை ஓட்டினாள் ரிதன்யா. அவர்களை சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் இவர்கள் இருவரும் தனியாகத்தான் இருந்தனர்.

 

“ஏன்டா.. என் பின்னால் என்ன‌ ஜூனியர்ஸ் பட்டாளம் இருக்காங்களா? நான் மட்டும் தானே இருக்கேன். சொல்லு என்ன விஷயம்.. இல்ல கிளம்பு வீட்டுல ஈவ்னிங் பேசிக்கலாம்” என்றவள், ஆக்சிலேட்டரை முறுக்க, சட்டென்று அக்காவின் பைக் முன்னே நின்று அதனை தடுத்து பிடித்தான் அதர்வா.

 

சொல்லு என்பது போல் அவள் முறைத்து நிற்க..

 

“அக்கா.. நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்” என்றான் அதர்வா.

 

ரிதன்யா ஆச்சரியப்படவும் இல்லை அதிர்ச்சி அடையவும் இல்லை.

“எனக்கு அல்ரெடி தெரியும்” என்று அலட்சியமாக கைக்கட்டி தம்பியை கூர்ந்தாள் ரிதன்யா.

 

இத்தனைக்கும் அக்காவுக்கும் தம்பிக்கும் பெரிய வயது வித்தியாசம் எல்லாம் இல்லை பிரதன்யாவுக்கு 26 இவனுக்கு 24 இந்த வயதில் உனக்கு காதல் தேவையா என்றபடி தான் பார்த்திருந்தாள் ரிதன்யா. அதைவிட காதல் என்ற பேச்சை எடுத்தாலே அவளுக்கு கம்பளிப்பூச்சியை பார்த்த உணர்வு!! அசூசையாக உணருவாள்..!!

 

‘தெரியுமா?’ என்று திகைத்து அவன் பார்க்க, அவனை உதடு வளைத்து அலட்சியமாக பார்த்தவள் “சீனியருக்கே கேஸூக்காக நான் தான்.. என் டீம் வச்சு தான் ஃபீல்டு ஒர்க் பண்றேன். அவருக்கே பண்ணும் போது..” என்று அவனை மேலும் கீழும் பார்க்க ஓகே என்று கைகூப்பியவன் “இப்போ கொஞ்சம் பிரச்சனை.. அது வந்து..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரங்கராஜனின் மற்றொரு ஜூனியரான‌ சுதர்சன் அங்கே வந்தான் “ரித்து..!” என்று அழைத்துக் கொண்டே..

 

“ம்ப்ச்.. இவனா? இவன் எதுக்கு இங்கே வரான்? அறுவ..!” என்று முணுமுணுத்துக் கொண்டே அவனை திரும்பிப் பார்த்தாள் ரிதன்யா.

 

“நீ இன்னும் கிளம்பலையா ரித்து? நீ வேலை முடிச்சு கொடுத்தாதான் அதுக்கு அடுத்தது நான் பிரசஸ் பண்ண முடியும்? நீ இந்நேரம் முடிச்சிட்டு வந்து இருப்பேன்னு நினைச்சேன்” என்றவன் அங்கே நின்று இந்த அதர்வாவை பார்த்து “ஹாய் அதர்வா..” என்று கை நீட்ட அவனும் வேண்டா வெறுப்பாய் “ஹாய்.!” என்று அவன் கை குலுக்கினான்.

 

“என்ன இந்த நேரத்தில் இங்க? எதுவும் பிரச்சனையா? என்கிட்ட சொல்லு ரிதுவுக்கு முக்கியமான வேலை இருக்கு. நான் பாத்துக்குறேன்.. சொல்லு..” என்று அவனின் அதீத உரிமையும் ஒட்டுதலும் அதர்வாவுக்கு பிடிக்காமல் ரிதன்யாவை பார்க்க.. அவளோ சுட்டு விரலால் காதை குடைந்து கொண்டு “நீ கிளம்பு” என்று கண்களால் சேதி சொன்னாள்.

 

“இங்க பக்கத்துல ஒரு பிரண்டு பார்க்க வந்தேன்.. அக்கா இருந்தா அவளோடு வீட்டுக்கு போய்டலாமேனு தான் அவளை பார்க்க வந்தேன்” என்றவன் ரிதன்யா புறம் திரும்பி “அப்போ வீட்டுக்கு போகலையா? போகிற வழியில் என்னை இறக்கி விடு” என்று அவள் பின்னே ஏறிக்கொள்ள வட போச்சே என்பது போல செல்லும் ரிதன்யாவையும் அதர்வாவையும் பார்த்து நின்றிருந்தான் சுதர்சன்.

 

ரிதன்யாவை ஒருதலையாக லவ்வாங்கிக் கொண்டிருக்கிறான் சுதர்சன் கடந்த மூன்று வருடங்களாக.. ஆனால் அவன் தன்னை பார்க்கிறான் கொஞ்சம் விட்டால் ப்ரொபோஸ் பண்ணுவான் என்று தெரிந்தும் கண்களாலேயே அவனை எட்டி நிறுத்தி இருந்தாள் ரிதன்யா.

 

ஒரு முறை தோழியின் தங்கைக்கு எவனோ காதல் கடிதம் கொடுத்தான் என்று அவனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி வெளுத்துக் கொண்டு இருந்தாள் ரிதன்யா. சுதர்சனுக்கு அதனை பார்த்ததிலிருந்து உள்ளுக்குள் ஒரு பயம்.! தான் எப்படி இவளிடம் காதலை சொல்லி? கல்யாணம் பண்ணி..?? ம்ஹும் தைரியமே இல்லை அவனுக்கு!!

 

நெருங்கி வருவான்.. ஆனால் சொல்லமாட்டான்.!! நுனி நாக்கு வரும் வரை வார்த்தை அவள் கண் பார்வையில் சட்டென்று பேக் அடித்து உள்ளே சென்று விடும். இப்படியாக மூன்று ஆண்டுகளை கடத்திக் கொண்டிருக்கிறான் சுதர்ஸன்.

 

அடுத்த இரு வாரமும் அதர்வாவால் ரிதன்யாவை பிடிக்க முடியவில்லை. அந்த கன்ஸ்ட்ரக்ஷன் வழக்கு முடிந்ததும் நஷ்டஈடு தொகை என்று வந்ததை எல்லாம் சரி பார்த்து வாங்கி கொடுக்கும் முக்கியமான வேலையை ரங்கராஜன் இவளிடம் அளித்துவிட்டார்.

 

 இரவு 10 மணி மேல் தான் வீட்டுக்கு வருபவள் அசந்து விடுவாள். இவன் எங்கிருந்து அக்காவை பிடிக்க? இவனும் எவ்வளவோ முயன்றும் “ஒரு டூ வீக்ஸ் பொருத்துக்கோ ஆது.. என்னால் இப்போ முடியவே முடியாது வொர்க் கழுத்தை நெறிக்குது” என்று சோர்ந்து வருபவளிடம் சொல்ல முடியாமல் தயங்கி தயங்கி நின்றான்‌ அதர்வா..!!

 

“டூ வீக்ஸா…” என்று அதிர்ந்தான்.

 

“அம்மா எனக்கு இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும்” என்று தன் கேஸ் பைல்களை ஆராய்ந்து கொண்டே பேசிய மகளை முறைத்தார் கிருத்திகா.

 

ஒரு பிரபல பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருக்கிறார்.

 

பிரபாகரன் அதாவது குடும்பத் தலைவர் மத்திய அரசாங்கத்தின் முக்கிய அரசாங்க பதவியில் இருக்கிறார். இப்பொழுது வேலை நிமித்தமாக அவர் ஹைதராபாத்தில் இருக்கிறார்.

 

அப்பொழுது வீட்டுக்கு வேலைக்கு வந்து சுமதியை பார்த்து “உனக்கு இதுதான் வேலைக்கு வர நேரமா?” என்று கடிந்தார் கிருத்திகா. அவர் எப்போதுமே சற்று கண்டிப்பானவர்.! அதுவும் ஆசிரியர் அதிலும் கணக்காசிரியர் என்றால் கேட்கவும் வேண்டுமா? பள்ளியில் இருக்கும் அதே தோரணை வீட்டிலும் எப்பொழுது எடுபடும். 

 

அதிலும் தான் கணக்கு வாத்தியாராக இருக்க கணக்கே வராத மகளை போட்டு படுத்தி எடுத்து விடுவார் அவர். அதற்கு பயந்து ரிதன்யா நன்றாக வந்தாலும் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுக்கவே இல்லை தன் வழியை தானே தீர்மானித்துக் கொண்ட மகள் மீது அவ்வப்போது கோபம் தான் வரும் அன்னைக்கு.

 

ஆனால் அதர்வா அப்படியே அம்மாவின் மகன்.. வார்ப்பு..!! அதன்படி நன்றாக படித்து இப்பொழுது ஹவுஸ் சர்ஜனாக இருக்கிறான்.

 

வழக்கம்போல எல்லார் வீடும் மாதிரி மகள் அப்பாவின் செல்லம் மகன் அம்மாவின் செல்லம் என்று சொல்லத்தான் ஆசை.. ஆனால் கிருத்திகா பாசத்தையுமே கண்டிப்போடு தான் காட்டுவார் என்பதால் இருவருமே அப்பாவிடம் தான் செல்லம் ஜாஸ்தி.

 

சுமதியை பார்த்தவர் “ஏன் சுமதி ஒரு வட்டமா இருக்க?” என்றதும் “என்னங்க டீச்சரம்மா செய்ய மறுபடியும் இந்த கழுதை கணக்கு பாடத்தில் கம்மி மார்க் வாங்கி இருக்கு. காலைல போய் ஸ்கூல்ல அவங்க டீச்சரை பார்த்து சொல்லி விட்டுட்டு வந்தேன் அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சுங்க டீச்சரம்மா” என்றார்.

 

“உன் பொண்ணு இன்னையிலிருந்து சாயந்திரம் நீ வரும்போது கூட்டிட்டு வா.. நான் ஒரு அரை மணி நேரம் டியூஷன் எடுக்கிறேன்” என்றதும் “எது நீங்களா?” என்று நெஞ்சில் கை வைத்து அதிர்ந்த ரிதன்யா அடுத்து கடகடவென்று சிரித்தாள்.

 

“எதுக்குடி சிரிக்கிற?” என்று கிருத்திகா கையில் கரண்டியோடு வர…

 

“மா.. மா.. ப்ளீஸ் இரு நான் சிரிச்சுக்குறேன்” என்று அருகில் இருந்த சோபாவில் அப்படியே படுத்துக் கொண்டு சிரித்த மகளை கண்டு காண்டனார் கிருத்திகா.

 

“பின்ன போன தடவை அந்த பொண்ணு டியூஷன் எடுக்கிறேன்னு என்னம்மா படுத்தி வச்ச தெரியுமா? அதுக்கப்புறம் ஒரு வாரம் அந்த பிள்ளைக்கு ஜன்னிகண்டுடிச்சு.. இல்ல எந்த தைரியத்தில் அந்த பொண்ண மறுபடியும் டியூஷன் வர சொல்ற நீ? அந்த புள்ளையை ஸ்கூல்ல வேணும்னு ஓட வைக்க போற பாரு..” என்றவள், 

 

சுமதியின் புறம் திரும்பி “அக்கா கணக்கு மட்டுமே படிப்பு இல்ல! அவளுக்கு அது வரலைன்னா ஜஸ்ட் பாஸ் ஆனா போதும் விடுங்க.. அவளுக்கு எந்த சப்ஜெக்ட் நல்லா வருதோ அதுல முன்னுக்கு கொண்டு வாங்க.. இந்த டீச்சர் ஆயிரம் சொல்லுவாங்க.. எல்லாவற்றிலும் பர்ஃபெக்க்ஷனா யாராலும் இருக்க முடியாது கா” என்று அன்னையை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே அவள் கூற.. அவரோ கண்களை உருட்டி கோபமாக பார்க்க… 

 

“நான் இன்னைக்கு சாப்பாட்டை வெளியில் பார்த்துக்குறேன் டீச்சரம்மா..” என்று சத்தமாக கூறிவிட்டு ஓடிய மகளை ஆயாசமாக பார்த்தார் கிருத்திகா.

 

சுமதி இப்ப நான் என்ன செய்வது என்பது போல நிற்க..

 

“அதுதான் வக்கீலம்மா சொல்லிட்டாங்க இல்ல.. போ போ வேலையை பார்த்து முடி.. எனக்கு இன்னைக்கு மதியத்துக்கு மேல தான் ஸ்கூல்” என்ற படி சுமதியிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இவரும் கிளம்பினார்.

 

ஒரு வழியாக அந்த கன்ஸ்ட்ரக்ஷன் வழக்கு முடிந்து அந்த செட்டில்மெண்ட் எல்லாம் வந்து முடிந்திருக்க.. அடுத்த ஏதோ ஒரு வழக்குக்கு ஜூனியர்களோடு டிஸ்கஷன் நடத்திக் கொண்டிருந்தார் ரங்கராஜன்.

 

சுதர்சன் வெகு மும்முரமாக கையில் குறிப்பேட்டை வைத்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்க ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாலும் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் ரிதன்யா. 

 

“இந்த பீஸ் எல்லாம் இன்னும் ஸ்கூலில் இருந்தே வெளிவரவில்லை! நீ எல்லாம் 90ஸ் கிட்ட கூட இல்லடா 80ஸ் கிட்!” என்று முணுமுணுத்தாள்.

 

அப்பொழுது விடாமல் ரிதன்யாவின் ஃபோன் அடித்துக் கொண்டே இருக்க “இந்த நேரத்துல யாரு?” என்று பார்க்க அவள் பீல்ட் ஒர்க் செய்ய சொல்லும் பையன் ஒருவனிடம் இருந்து ஃபோன் வந்தது.

 

“இவன் எதுக்கு இப்போ ஃபோன் பண்றான்? அவனுக்கு எந்த ஃபீல் வொர்க்கும் நான் கொடுக்கலையே?” என்று யோசித்தபடி ஃபோனை பார்த்த ள்.

 

உடனே ரங்கராஜன் “ரிதன்யா.!!” என்ற ஒரு அதட்டல் போட “சார் ஒரு டூ மினிட்ஸ்.. ப்ளீஸ்..” என்று அவசரமாக வெளியே சென்றாள்.

 

“ஹலோ முரளி.. என்ன விஷயம்?” என்று ரிதன்யா கேட்க…

 

“லாயர் அக்கா இன்னைக்கு காலைல நான் கோயில் வந்து இருந்தேன் அப்போ இங்கே உங்க தம்பி ஒரு பொண்ணு கூட..” என்றதும் அவளுக்கு திடுக்கிட்டது.

 

“என்னது? என்ன ஆச்சு? பொண்ணு கூட…” என்று அவள் திடுக்கிட்டு கேட்க..

 

“கல்யாணம் பண்ணிட்டு இருக்கார் கா” என்றதும் இவள் அதிர்ச்சி விலகாமல் நிற்க.. 

 

“அக்கா.. சீக்கிரம் வாங்க.. ஏதோ பிரச்சனை போல..” என்றவனிடம் எந்த இடம் கோவில் என்று விசாரித்துக் கொண்டு ரங்கராஜனை பார்த்து “சார் வெரி அர்ஜென்ட் நான் போயாகணும்” என்றதும் அவரோ ‘நீ செய்வது எனக்கு பிடிக்கவில்லை!’ என்ற முகத்தை காட்ட..

 

இப்பொழுது இவருக்கு சமாதானம் சொல்ல நேரமில்லை என்று சிட்டாக பறந்து விட்டாள் ரிதன்யா.

 

அந்த முரளி பையன் சொன்னது உண்மைதான் என்பது போல வேஷ்டி சட்டையில் கழுத்தில் மாலையோடு அதர்வா நின்று இருக்க.. அவனுக்கு பின்னால் மிதமான அலங்காரத்தில் பட்டுப் புடவையில் நின்றிருந்தாள் அழகிய பெண்ணொருத்தி.

 

“இந்த பையன் கிட்ட இப்ப தானே சொன்னேன். அதுக்குள்ள என்ன அவசரம்னு போய் அந்த பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கான். எரும.. எரும .. இவனை..” என்று பல்லை கடித்துக் கொண்டே அவர்களை நெருங்க..

 

யாரோ எதிரில் நின்று அதர்வாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேகமாக வந்தவள், அதர்வாவை பிடித்து சண்டை போட்டவனை பிடித்து ஓரம் தள்ளிவிட்டு இவள் தம்பி கன்னத்தில் ஒன்று விட, அவனும் கன்னத்தை தடவியப்படியே அக்காவை முறைத்தான்.

 

“நான்தான் ஒரு டூ வீக்ஸ் போகட்டும்னு சொன்னேன் இல்லையா? அப்புறம் என்னடா உனக்கு இவ்வளவு அவசரம்?” என்று எட்டி அந்த பெண்ணை பார்த்துக்கொண்டு இவள் அடிக்குரலில் சீற..

 

“ஆமா.. ரொம்ப அவசரம் தான். என் பிரச்சனை உனக்கு பெருசில்ல.. காதுல வாங்க நேரமில்லை..! ஆனா ஊர் பிரச்சனையை மட்டும் தீர்த்து வைக்கிறேன் கிளம்பிடு..” என்று தம்பி முறுக்கிக் கொள்ள..

 

“அவன் யாரு உன் சட்டையை புடிச்சு கேட்டுட்டு இருந்தான” என்று அக்காளாக தம்பியை திட்டியவனை திரும்பி பார்த்தவள் மேலும் கீழுமாக அவனை ஆராய்ந்து “நீ யாரு பிரச்சனை பண்ண? பொண்ண பெத்தியா? இல்ல கூட பொறந்தியா?” என்று அவள் கேட்ட தொணியும் அவள் அணிந்திருந்த கருப்பு அங்கியும் அவளை வக்கீலாய் காட்ட..

 

“என்ன ஆள் வச்சி மிரட்டுறியா நீ? நான் யாருன்னு உங்களுக்கு காட்டுறேன்.. இருங்க..!” என்றவன் புரியாத அதுவும் ரிதன்யாவுக்கு புரியாத பாஷையில் திட்டிக் கொண்டே சென்று விட்டான்.

 

“என்னடா அது? என்னடா நடக்குது?” என்றவளிடம்..

 

“தனியா பேசணும்.. கொஞ்சம் இப்படி வாயேன்” என்று தனியாக அக்காவை அழைத்து வந்தவன் “அதோ சண்டை போட்டு போறான்ல அவன தான் இவளுக்கு கல்யாணம் வைக்கிறதுனு வீட்ல பேச்சு..”

 

“சரிடா.. பேசட்டும்.! இந்த பொண்ணு ஃபர்ஸ்ட் இயர் தானடா படிச்சிட்டு இருக்கா! உனக்கு ஏன்டா அவ்வளவு அவசரம்?” என்று கேட்டான்.

 

“மூணு வருஷம் லவ் கா..” என்றான் இருக்கும் மனைவியை கர்வமாக பார்த்து..

 

“மூணு வருஷமா?” என்று அதிர்ந்த ரிதன்யாவை பார்த்து சிரித்தவன்,

 

“எஸ்.. நான் ஒரு தடவை கேரளாவுக்கு கேம்ப் போனதுல இருந்து எங்க லவ் ஆரம்பிச்சுருச்சு” என்றான்.

 

“அப்ப அந்த பொண்ணு பத்தாவது தானடா படிச்சிருக்கும்..”

 

“ஆமா.. பத்தாவுலேயே லவ் பத்திக்கிச்சு..” என்றவனை மனைவியை காதலாய் பார்க்க.. அதனை கண்டு தலையில் அடித்துக் கொண்டாள் ரிதன்யா.

 

“இந்த கருமம் எல்லாம் என் முன்ன பண்ணாதே! இந்த பொண்ணு இப்ப மேஜர் தானடா..! அப்புறமா நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன் தானே? ஏன் உனக்கு இவ்வளவு அவசரம்?” என்று மறுபடியும் ரிதன்யா திட்ட

 

“எனக்கு அவசரம் இல்லை..” என்றவன் திரும்பி அந்த பெண்ணை பார்க்க அவளோ சங்கடமாக தலையை குனிந்து கொள்ள..

 

“அப்போ அவளுக்கு அவசரமா?” என்று கேட்க.. அவள் பதறி கண்களை விரித்து அதர்வாவின் புஜத்தை இறுக பற்றிக் கொண்டாள்.

 

“எங்க ரெண்டு பேருக்கும் அவசரம் இல்ல.! ஆனா..” என்ற இழுத்தான்..

 

“ஆனா அவன்னானு கிளாஸ் எடுக்காம.. சொல்லி தொலை டா” என்று ரிதன்யா திட்டினான்.

 

“உன் மருக புள்ளைக்கு தான் அவசரமாம்” என்றவன் இறுக கண்களை மூடிக்கொள்ள..

 

“எதே?? மருமக புள்ளையா!!!! அந்த பொண்ணே சின்ன புள்ளை மாதிரி தானடா இருக்கா??!!” என்று அதிர்ந்து நின்றாள் ரிதன்யா..!!

 

கள்ளூறும்…

7 thoughts on “கள்ளூறும் காதல் வேளையில்… 1”

  1. அடுத்த எபி எப்ப போடுவீங்க fasta podungaaa very very interesting iam waiting 👍👍👍👍👍👍👍👍👍👍 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top