ATM Tamil Romantic Novels

கள்ளூறும் காதல் வேளையில்… 3

கள்ளூறும்.. 3

 

ஒவ்வொரு கோடைக்கும் உங்களை ஒவ்வொரு கோடை வாஸ்துதலத்துக்கு அழைச்சிட்டு போகும் உங்க ஜியா.. 

 

இந்த வருடம் சுற்றிக் காட்டப் போவது ‘கேரளாவின் ஊட்டி’ என செல்லமாக அழைக்கப்படும் வயநாடு. 

 

வாங்க.. வாங்க… போலாம் ரைட்..!!

 

வயநாடு… இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதி.

 

பசுமையான மலைகள்.. 

பச்சை வயல்வெளிகள்.. பாரம்பரியமிக்க இடங்கள்..

பார்க்கும் இடமெங்கும் கண்களை பறிக்கும் இயற்கை அன்னையின் எழில் கோலங்கள்..!!

 

இயற்கை அன்னைக்கு ஏன் இந்த பாரபட்சமுமோ.. கேரளத்தை குறிப்பாக இந்த வயநாட்டை அத்தனை அழகோடு படைத்துவிட்டாள்.

 

சுற்றுலாவை சந்தோஷமாகக் கழிக்க கேரளாவில் பல இடங்கள் உள்ளன. அதில் வயநாடு கொஞ்சம் ஸ்பெஷல் ஆனது.

 

மசாலா மற்றும் நறுமண தோட்டங்களுக்கும் வன உயிரினங்களுக்கும் பிரசித்தி பெற்ற வயநாட்டைச் சுற்றிலும் காடுகள் சூழ்ந்துள்ளது. தமிழ்நாட்டின் முதுமலை சரணாலயமும் கர்நாடகாவின் பந்திபூர் சரணாலயமும் வயநாட்டில் தான் சந்திக்கின்றன. 

 

தமிழ்நாடு – கேரளா எல்லையில் அமைந்துள்ள வயநாடு இயற்கை விரும்பிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. 

 

இவ்வளவு புகழ்வாய்ந்த வயநாட்டை தன் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் குடும்பம் தான் வர்மா குடும்பம்..!!

 

இந்தியாவின் “நறுமணத் தோட்டம்” என வயநாடு அழைக்கப்படுகிறது.

ஆனால்.. அந்த நறுமண தோட்டத்தை உலகெங்கும் சந்தைப்படுத்துவதில் தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்தியாவிலேயே முதலிடத்தில் திகழ்கிறது வர்மா’ஸ் அரோமா..!!

 

இங்கு இவர்கள் விற்காத பொருட்களே கிடையாது எனலாம்.

 

ஏலக்காய், மிளகு, கிராம்பு போன்றவற்றை மட்டுமல்ல.. பல்வேறு வகையான பழத் தோட்டங்கள் அதிகளவில் இவர்களுக்கு இருக்கின்றன, அவற்றில் இருந்தும் டிரை ஃப்ரூட்ஸ் ஜாம் என்று உற்பத்தி செய்கிறார்கள்.

 

அது மட்டுமா.. காஃபி தோட்டங்களும் மிகுதியாக உள்ளன. இவற்றின் நறுமணம் ஒட்டுமொத்த வயநாட்டையே ரம்மியமாக்குகிறதோ இல்லையோ வர்மா’ஸ் குடும்பத்தை நல்ல செல்வ செழிப்பாக வைத்திருக்கிறது.

 

இந்த தொழில் மூலம்தான் அவர்களை உலகம் அறிந்தததா என்றால்? அதுவும் இல்லை இந்த தொழில் இப்பொழுது அவர்களை உலக சந்தையில் முன்னணியில் வைத்தாலும்.. அதற்கு முன்னே அவர்களின் சமஸ்தானங்கள் தென் இந்தியாவில் புகழ்பெற்றவை..!!

 

திருவாங்கூர் சமஸ்தானத்தின் வழிவழி வந்தவர்கள் அவர்கள்.

 

இத்துணை பாரம்பரிய புகழும்..

பண வளமும்.. ஆட்கள் பலமும் கொண்ட வர்மா குடும்பத்தின் இளவரசி தான் ரோஷினி வர்மா..!!

 

இப்படிப்பட்ட இளவரசிக்கு எப்படிப்பட்ட இடத்தில் நிச்சயம் செய்திருப்பார்கள்??

 

கண்டிப்பாக இந்தியாவின் மற்றொரு பணக்காரர்.. பணக்காரர் என்பதை விட பணம் அரசியல் ஆளுமை கொண்டவர்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும்.. அப்படிப்பட்ட குடும்பத்தோடு சம்பந்தம் வைத்திருக்க..

 

அதையெல்லாம் கலைத்துவிட்டு நம் பரோட்டா சூரி போல ‘எல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல்ல இருந்து போடுங்கடா.!’ என்பது போல பெண்ணை கரெக்ட் செய்து தட்டி தூக்கி விட்டான் அதர்வா.

 

அதுவும் வர்மா குடும்பத்தின் தற்போதைய இளவரசன் தாரக் மகாதேவ் வர்மா அறியாமல்..!!

 

எந்த அளவுக்கு தொழிலில் முனைப்போடு கூர் புத்தியோடு வேகமாக ஓடுகிறானோ அதேபோல தன் உடம்புக்கும் மனதுக்கும் அவ்வப்போது ஓய்வு கொடுப்பதற்காக அவன் 15 நாட்கள் வெளியே பறந்து விடுவதும் உண்டு.

 

மலைவாழ் தலத்தில் பிறந்து வளர்ந்து உலகமெல்லாம் சுற்றினாலும் ஓய்வுக்காக அவன் செல்லும் இடமும் இம்மாதிரியான மலை சார்ந்தப் பகுதிகளாக தான் தேர்ந்தெடுப்பான்.

 

தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளும் பிடிவாதக்காரன்..! 

தான் நினைத்ததை நடத்திக் காட்டும் வீம்புகாரன்..! 

தான் விரும்பியதை அடைந்துக் காட்டும் ஆணவக்காரன்..!!

தான் பிடித்த முயலுக்கு காலே இல்லை என்று கூறும் வாய்ஜாலகாரன்..!!

ஆனால்… அனைத்தையும் அடாவடியாய் கொண்டு இல்லை. கூர் பார்வையிலும் ஒற்றை புருவ நெரிப்பிலும் எதிராளியின் மனதில் பயத்தை மூட்டி விடுவான் இந்த தாரக் மகாதேவ்..!!

 

“எந்தா.. சுகமாணோ??” என்று அவன் கேட்கும் அந்த தொணியே அவன் எதிரே இருப்பவரை கதி கலங்க வைத்து, தான் செய்த தவறு அனைத்தையும் கடகடவென்று ஒப்பித்து விடுவார்.

 

“சுகமானோ..!” என்ற வார்த்தையின் பின்னே மறைந்திருக்கும் பொருள் என்னவோ நீ உண்மையை கூறவில்லை என்றால் சுகமில்லை என்பதாகும்.

 

இத்தனை பிரச்சனை பிடித்தவனின் தங்கையை தான் திருட்டுத்தனமாக மணந்து இருக்கிறான் அதர்வா.

 

மலைச் சார்ந்த பகுதிக்கு ஓய்வுக்கு தாரக் சென்றால்.. அதிகமாக டவர் இருக்காத காரணத்தினால் அவனின் பிஏ சுஜித்திடம் மட்டும் தகவல் தெரிவித்துவிட்டு 15 நாட்கள் முழுமையாக தன் தனிமையை அனுபவித்து வருவான். மூளைக்கும் புத்திக்கும் புத்துணர்ச்சி கொடுத்து விட்டு, இன்னும் இன்னும் அடுத்தடுத்து ஓடுவான்.

 

அப்படி அவன் சென்ற அந்தக் கணத்தை தான் தனக்கு பயன்படுத்திக் கொண்டு அதர்வா ரோஷினி திருமணம் செய்து கொண்டான். ரோஷினி மூலமாகவே அவன் அண்ணனை பற்றி அனைத்தும் அறிந்திருந்தவன், அவனின் நல்ல காலம் ரோஷினி கர்ப்பம் என்று உறுதிப்படுத்திய இரண்டாவது வாரத்தில் தாரக் மகாதேவ் ஓய்வெடுக்க சென்று விட்டான் என்று தெரிந்து, அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டான் அதர்வா.

 

அதர்வா தட்டி தூக்கும் அளவு எல்லாம் தங்கையை அவ்வளவு பாதுகாப்பில்லாமல் விட்டு வைத்திருப்பவன் அல்ல தாரக் மகாதேவ்.

 

எப்பொழுதும் அவளுக்கு பாதுகாப்புக்கு என்று தனது மாமன் மகன் விஷ்ரூபை அவளுக்கு எதிர் பிளாட்டில் தங்க வைத்திருந்தான். கூடவே இரண்டு பவுன்சர்களும் எப்பொழுதும் அங்கே இருப்பார்கள்.

 

இத்தனையும் ரோஷினி மூலம் அறிந்து கொண்ட அதர்வா, ரோஷினி கர்ப்பம் என்று தெரிந்தவுடன் சிறிது நாட்கள் அமைதியாக இருந்து தாரக் ஓய்வெடுக்கும் செல்லும் நேரம் பார்த்து இங்கே அனைத்தையும் முடித்து விட்டான்.

 

விஷ்ரூபும் தனது அத்தை மகனிடம் விஷயத்தை சொல்ல முயன்று தோற்றவன், எப்படியும் ரோஷினி வீட்டுக்கு வருவாள்.. அல்லது மற்ற உடைமைகளை எடுக்க வந்து தானே ஆக வேண்டும் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று இவன் அங்கு வீடு செல்லும் முன் தன் நண்பியை விட்டு முக்கியமானவற்றை எடுத்து வர சொல்லிவிட்டாள் ரோஷினி ரிதன்யாவின் அறிவுரையின் பேரில்..

 

பூட்டியிருந்த கதவு முன்னே காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி போல ஆனது விஷ்ரூப் நிலைமை..

 

நிலைமை அவன் கை மீறிப்போனது என்று அவன் அறிந்து கொள்ளவே 10 நாட்கள் ஓடி விட்டது.

 

அதன் பின்னே அவன் சுஜித்தை பிடிக்க மேலும் இரண்டு மூன்று நாட்கள் ஓட.. இவன் சுஜித்திடம் செய்தி சொன்னதும் அவன் முதலாளியின் மாமன் மகன் என்று பாராமல் அத்தனை பேச்சு.. அத்தனை விலாசு..!!

 

“சின்ன மேடமை பார்த்துக்காம அப்படி என்ன உனக்கு வேலை?” என்று. தாரக்கோடு இருந்ததால என்னவோ அவன் என்னென்ன கேள்விகள் கேட்பான் என்று கணித்து அத்தனையும் இவனிடம் கேட்டு ஒரு வழி ஆகிவிட்டான். பின் தாரக்கை தொடர்பு கொள்ள முயல அவனோ தொடர்புக்கு எல்லைக்கு அப்பால் இருந்தான்.

 

“ஐயோ.. போச்சு போச்சு இப்ப என்ன செய்றது.. என்ட ஐயப்பா.. ஈ ப்ராவாசியம் எங்கனங்கிலும் என்னே ரக்ஷிக்கு?” என்று புலம்பியவன் பெரிய முதலாளிடம் விஷயத்தைக் கொண்டு செல்லலாமா என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே.. தாரக் மகாதேவிடமிருந்து ஃபோன் வர இவன் சொன்ன விஷயத்தை கேட்டவனின் கழுத்து நரம்புகளோ புடைத்தது கோபத்தில்.

 

‘இந்த தாரக் மகாதேவ்வின் தங்கையை தூக்கும் அளவுக்கு எவனுக்கு தைரியம் இருக்கிறது?’ என்று கோபத்தோடு கிளம்பி வந்தவனுக்கு, இதற்கு பின்னால் தம்பியை பாதுகாக்க.. ரோஷினியை மறைத்து வைக்க.. அனைத்துக்கும் சூத்திரதாரி ஒரு பெண் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.

 

“வாட் சுஜித்?” என்று ஒற்றை புருவம் நெரித்து கூர்ந்து பார்த்து கேட்டான் தாரக், சுஜித்தோ பம்மியப்படி “ஆமா.. தேவ்வேட்டா..” என்று தலையாட்டினான்.

 

பெரும்பாலும் வெளியில் தாரக்கை குறிப்பிடும் போது மட்டும் தான் சுஜித் அவனை சார் என்று குறிப்பிடுவது மற்றபடி அந்த “ஏட்டா..” என்று அழைப்பு தான் தாரக்குக்கு பிடித்தம்.

 

“அந்தப் பெண்ணோட ஜாதகம் இன் அண்ட் அவுட் எல்லாமே எனக்கு தெரியணும்” என்று மலையாளத்தில் சீறினான். அதை சிரம் மேல் எடுத்துக்கொண்டு ஓடினான் சுஜித் ரிதன்யாவின் தகவல்களை திரட்ட…

 

அதற்குள் தன் ஆளுமையை பயன்படுத்தி தங்கை எப்பொழுதிலிருந்து கல்லூரி வரவில்லை? என்று கடைசியாக வந்தாள்? கல்லூரியில் அவளோட நடவடிக்கைகள் என்னென்ன? என்று அனைத்தையும் அறிந்து வைத்திருந்தான் தாரக். விஷயங்கள் தெரிய தெரிய அவனுக்கோ அத்தனை கடுமை முகத்தில்.

 

அதர்வாவும் முதல் நாள் தான் தாரக் பற்றி சில பல விஷயங்களை கூறி “நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் ரிது” என்று புலம்பி இருக்க “நான் பாத்துக்குறேன் டா..! அக்கா இருக்க பயமேன்.. தம்பி..” என்றவள் தான் இப்பொழுது தாரக்கின் பிடியில்..

 

எத்தனை மணிநேரங்கள் மயக்கத்தில் உணர்வுகள் அற்று கிடந்தாளோ.. எதுவும் அறியவில்லை. எங்கெங்கோ யார் யாரோ ஓடும் சத்தங்கள்.. என்னென்னவோ பேசும் குரல்கள் அனைத்தும் மிக மிக மெலிதாய் கேட்க.. கிணற்றுக்குள் இருக்கிறோமோ? என்று எண்ணம் வலுப்பெற.. லேசாக சுயநினைவுக்குத் திரும்பியவளின் விழிகள் லேசாகத் திறக்க.. கண்கள் எல்லாம் எரிந்தது திகுதிகுவென்று.

 

“ரிது.. வேர் ஆர் யூ கேர்ள்?” என்று தனக்கு தானே பேசிக்கொண்டு மெல்ல கண்களை திறக்க முயற்சித்தவள், சோர்வோடு மீண்டும் கண்களை மூடி கொண்டாள். ஆனாலும்.. விடாமுயற்சியாய் கண்களை திறக்க, சரியாக அந்நேரம் அவளை அடைத்து வைத்திருந்த அந்த அலிபாபா குகை போன்ற அறைக்கதவு படாரென்று திறக்கப்பட்டது.

 

கண்கள் வெளிச்சத்திற்கு பழகாததால் இமைகள் மீண்டும் மூடிக் கொண்டன..

 

 “அவளின்ட மேல் வெள்ளம் ஒழிக்ககா” என்றவனின் கட்டளையான குரலில் வேகவேகமாக வந்த சில ஆட்கள் அவள் மேல் குளிர்ந்த நீரை குடம் குடமாக ஊற்றினர்.

 

“அவுச்… டேய்‌ மட மாக்கான்ஸ்… ஊத்துறதுதான் ஊத்துறிங்க சுடுதண்ணியா ஊத்துங்க டா.. ஏற்கனவே குளுறுது” என்று தீனக் குரலில் தீட்டினாள்.

 

“இன்னும் வெள்ளம் ஒழிக்கடா” என்ற தாரக்கின் அழுத்தமான வார்ததையில் குளிர்ந்த நீரில் குளித்தாள் ரிதன்யா.

 

குளிர்ந்த நீரின் உபயத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலையிலிருந்து மீண்டு விழிகள் தெளிவு பெற..

 

“வலிச்சு வான்குகா..” என்றவனின் கட்டளையில் அவளின் புஜத்தை இருபுறமும் இருவர் பிடித்துக் கொள்ள, நிற்க முடியாமல் துவண்டாள்.. தள்ளாடினாள்.. பாவை.

 

ஆனால் அவர்களோ பாவை என்று பாவமே பார்க்காமல் பரபரவென்று இழுத்து சென்றனர்.

 

அவள் வாயோ அப்போதும் நிற்காமல் செந்தமிழில் அவர்களை நிந்தித்துக் கொண்டே இருந்தது.

 

அவர்களுக்கு புரிந்தால் அல்லவா? நீ ஏதோ தனியாக பேசிக்கொள் என்பது போல அவர்கள் கருமமே கண்ணாக தாரக் சொன்னதை செய்தனர்.

 

அவளை இருவரும் தரதரவென்று இழுத்து வந்தனர். இப்பொழுது சற்று மயக்க நிலையிலிருந்து அவள் திரும்பி இருக்க சுற்றுப்புறமும் ஆராய்ந்தாள். அவளை இழுத்து சென்ற இடம் ஏதோ பேஸ்மெண்ட் போல இருந்தது.

 

‘இம்மாதிரி அடைச்சி வைச்சு இம்சை பண்ணவே ரெடி பண்ணி வச்சிருக்கீங்களா டா.. மல்லூஸ்” என்று வாய் தான் போல புலம்ப கண்களோ ஒவ்வொன்றையும் கூர்ந்து பார்த்து புத்தியில் சேகரித்துக் கொண்டே வந்தது.

 

ஆறடிக்கும் மேலான உயரத்தில் கழுகுப்பார்வையோடு அமர்ந்திருந்தவன் முன்னால் நிறுத்தப்பட்டாள் ரிதன்யா.

அவளால் சரியாக கூட நிற்க முடியவில்லை கால்கள் துவள.. துவள.. அவளின் புஜத்தை பற்றியவாறு நிற்க வைக்க முயன்றனர் தாரக்கின் ஆட்கள்.

 

அவன் அருகில் செல்ல செல்ல

விழிகள் விரிந்தது ரிதன்யாவுக்கு. அவன் முகம் தெளிவாகத் தெரியத் தொடங்க, தன் ஆட்களுக்கு நடுவே நின்றிருந்தவளை விழிகளைச் சுருக்கிப் பார்த்தவாறு வந்து அருகே அவளை அளவிட்டபடி நின்றான் தாரக்.

 

அவனைப் பார்த்ததுமே அவனுடைய ஆட்களின் முகத்தில் தெரிந்த பவ்யமும் பயமும் விசுவாசமும் “இவன் தான் இந்த கூட்டத்துக்கு பாஸா? இப்ப எல்லாம் கொள்ளை கூட்டம் தலைவனா தனியா எவனும் இல்ல போல.. இப்படி கும்பலோட கும்பலா கலந்து இருக்கானுங்க தொழிலதிபர் என்கிற பெயருல” என்று நக்கலாக நினைத்துக் கொண்டாள்.

 

அவனும் அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, தன் பின்னால் எப்போதும் மறைத்து வைத்திருக்கும் தன் துப்பாக்கியை முன்னால் இருந்த மேசையில் வைத்தவன், ஏற்கனவே இவன் அமர்ந்திருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அரச தோரணையில் அமர்ந்தான். அவளை இழுத்து வரும் போதும் அங்கே தான் அமர்ந்திருந்தான். அப்போது தெரியாத அவனின் உருவம் இப்பொழுது மிக மிக தெளிவாக..!!

 

“பெரிய ராசான நினைப்பு?” என்று இளக்காரமாக நினைத்த ரிதன்யாவுக்கு இன்னும் அவனின் உயரம் தெரியவில்லை..!!

 

அவனின் கண்ணசைவில்

அங்கிருந்த அடியாளொருவன் அவளை மீண்டும் தரதரவென்று இழுத்துக்கொண்டுச் சென்று அவன் முன்னால் நிறுத்தினான்.

 

“ரோஷினி எவ்விட?” என்று அவன் கேட்ட விதத்தில் அவளின் நடு முதுகில் குளிர்ந்த வாள் சொருகியது போன்று அத்தனை நடுங்கியது.

 

“யாரு? யாரு ரோஷினி?” என்று பயந்து ஓட துடிக்கும் பயத்தை இழுத்து பிடித்துக் கொண்டு கேட்டாள் ரிதன்யா.

 

நாடியை நீவி விட்டவாறு தலையை சரித்து ரிதன்யாவை மேலும் கீழும் பார்த்தவனின் ஒற்றை புருவம் நெரித்து

 

“ஆஹான்.. நின்னுக்கு அறியலா? ம்ம்ம்..??” என்று பெருங்குரலெடுத்து சிரித்தான் தாரக் மகாதேவ்..!!

 

மலங்க மலங்க விழித்தவள் “நிஜமா எனக்கு எதுவும் தெரியாது.. நான் யார் தெரியுமா? ஒரு லாயர்.! அதுவும் ஹைகோர்ட் கிரிமினல் லாயரின் ஜூனியர் நான். நீங்க இப்படி எனக்கு கடத்திட்டு வந்தது தெரிஞ்சா…”

 

“தெரிஞ்சா??? என்ன பண்ணிடுவாராம் ரங்கராஜன்?” என்று திமிராக தமிழில் கேட்டவனை கண்டு அவள்தான் கொஞ்சம் பயந்து போனாள்.

 

 ‘அப்போ என் பேக்கிரவுண்ட் எல்லாத்தையும் கிண்டி கிளறி தான் என்னை தூக்கிட்டு வந்திருக்கான். ஸ்மார்ட் மூவ்..!’ என்று அவனின் புத்திக் கூர்மையை மெச்சிக்கொண்டாள் அந்நிலையிலும்.

 

“ரோஷினி எவ்விட?” என்று இம்முறை மலையாளத்தில் அவன் அழுத்தி கேட்க..

 

எத்தனை துல்கர் சல்மான் படம் பார்த்திருப்பாள். அவளுக்கா புரியாது புரிந்தாலுமே புரியாதது போலவே முகத்தை வைத்துக்கொண்டு “நீங்க என்ன கேட்கிறீங்க எனக்கு புரியவே இல்லை.. ஏதோ ரோஷினினு பேர் சொல்றீங்க.. அப்படி யாரும் எனக்கு தெரியவே தெரியாது. நீங்க என்னை தப்பா தூக்கிட்டு வந்துட்டீங்க.!!” என்று கடைசி வரியை வடிவேல் மாடுலேஷனில் அவள் கூற..

 

விழிகளைச் சுருக்கி அவளை கூர்ந்து நோக்கியவனின் புருவங்களோ முடிச்சிட்டன.

முதலில் அவளை பேச விட்டவன், இப்படி கேட்டால் அவள் கண்டிப்பாக பதில் கூற போவதில்லை என்று உணர்ந்து, தாரக் தன் அடியாளைப் பார்த்த பார்வையில் அடுத்து அவன் ரிதன்யாவின் நெற்றிப்பொட்டில் வைத்த துப்பாக்கியில் அவளுடைய வார்த்தைகள் தானாக தொண்டைக்குள் மறைந்தன.

 

அவளோ பயத்தில் எச்சிலை விழுங்கியவாறு நடுநடுங்கிப் போய் நிற்க, அவளின் பயத்தை ரசித்தவாறு எழுந்தவனின் அழுத்தமாக ஓரடி அவளை நோக்கி எடுத்து வைக்க.. அதே நேரம் தானாக அவளின் கால்கள் தள்ளாட்டதோடு இரண்டடி பின்னால் நகர்ந்தன, அவளையும் அறியாமல்…

 

“ஓஹ்.. ரோஷினி எங்கன்னு உனக்கு தெரியாது? அப்படி தானே?

 

உன் தம்பி அவளை கல்யாணம் பண்ணது உனக்கு தெரியாது? அப்படித்தானே?

 

அன்னைக்கு அவள உன் பாதுகாப்பில் வேறொரு இடத்தில் சேஃப் ஆகிட்டே.. உனக்கு தெரியாது? அப்படித்தானே?

 

 உன் தம்பி இப்போ எங்கன்னும் உனக்கு தெரியாது? அப்படிதானே?” 

 

அப்படித்தானே அப்படித்தானே என்று அவன் கேட்க கேட்க அதுவும் தமிழில் அவனது வார்த்தைகள் கேட்க கேட்க மனதுக்குள் திகில் அடித்தது அவளுக்கு.

 

பயத்தில் இதழ்களை நாவால் ஈரமாக்கிக்கொண்டவள், முயன்று தன் உடல் நடுக்கத்தை மறைத்துக் கொண்டாள். ஆனால் அவனின் 

கூர்மையான பார்வைக்கு தப்பவில்லை. 

 

பயம்..!! எதிராளியின் பயம்..!! அந்த பயம் தான் அவனின் பலம்..!! தம்பியின் பெயரை சொன்ன உடனேயே ஒரு தனியாவுக்குள் பயம் எழுந்தது தொண்டைக்குழி ஏறி இறங்க அவள் நின்ற விதம்.. 

வழக்கம் போல் அவனுக்குள் கர்வத்தை உருவாக்க.. 

 

தாரக்கின் இதழ்கள் ஏளனமாக வளைந்தன. “நான் தேவ்.. தாரக் மகாதேவ்..!! இன்னும் எத்தனை நாள் ஆனாலும் உண்மையை கூறாதவரை நீ இங்கேதான்.! ஆனால் உன் தம்பி எங்கே இருக்கிறான்னு உனக்கு தெரியுமா? எனி ஐடியா?” என்று மர்ம சிரிப்புடன் கேட்டவன் தொணியே அவளின் முதுகுத்தண்டை சில்லிட வைத்தது.

 

‘பெண்ணென்று பார்க்காமல் தனக்கே இவ்வளவு கொடுமை செய்கிறான் என்றால்… தம்பியின் நிலை??’ எண்ணிப் பார்க்கவே பயந்து வந்தது அவளுக்கு.

 

“ஹா.. ஹா.. எக்ஸாக்ட்லி..! தாராளமா பத்து நிமிஷம் டைம் எடுத்துக்கோ.. அதுக்குள்ள எல்லா உண்மையும் எனக்கு வந்தாகணும்!” என்றவன்,

 

போகிற போக்கில் “ஆமா.. உங்க அப்பா இப்போ ஹைதராபாத்தில் தானே இருக்கிறார்? ஆனா இருக்கிறாரா..??” என்று கேட்டுக் கொண்டு சென்றவனை பார்த்தவள் உடம்பும் மனமும் தள்ளாட தொப்பு என்று அமர்ந்தாள்.

 

கள்ளூறும்..

 

 

 

 

 

 

4 thoughts on “கள்ளூறும் காதல் வேளையில்… 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top