ATM Tamil Romantic Novels

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 17

வானவில் 17

 

“என்னது மச்சானா??” என்று அதிர்ந்து தன்முன் நின்றவனை பார்த்திருந்தாள் வர்ணா. மனதுக்குள் அவனின் இந்த உரிமை ஒருவித மெச்சுதலை கொடுத்தது. ஆனால் இதெல்லாம் போதவே போதாது!! முற்றுமுழுதாக தன்னை புரிந்து கொண்டிருக்க வேண்டும்!! தான் தப்பு செய்யவில்லை என்று இவன் இந்நேரம் கண்டு கொண்டிருக்க வேண்டும்!! அது எல்லாத்தையும் விட்டு.. சிறையெடுத்து.. 

காயம் படுத்தியப்பின்.. இப்போ மட்டும் என்ன லவ்வு வேண்டிக்கிடக்கு இவனுக்கு? என்று ஒரு கோபம் அவளிடம்!!

 

உரிமை உள்ள இடத்தில் தான் கோபம் மட்டுமல்ல தாபமும் பெருகும்!!

 

கோபத்திற்கு அவள்!! 

தாபத்திற்கு அவன்!!

காதலுக்கு??

 

என்னவள் நல்லவள்.. குற்றமற்றவள்.. புடமிட்ட தங்கம்.. என்று தெரிந்த பின் வரும் அவனுடைய காதலை விட அவளது தப்பு தவறுகளை அறிந்து அதனோடு வந்த அவனது காதல் பெரிதல்லவா?? நங்கையின் மனம் அதனை புரிந்து கொள்ள மறுத்தலித்தது.

 

பேதை மனம் சற்றே பேதலித்தது உண்மைதான்.. ஆணவனின் காதலில்!! ஆனாலும் பெண்ணவளின் உள்ளுள் சுனையாய் உறிய காதல் பிரவாகம் கொள்ள காலம் எடுக்கும்!!

 

சுனை நீரை போல தேனினும் இனியது அவள் காதல்!! ஆம் காதலே தான்!!

 

காதல் என்பதை விட மையல் என்பது பொருத்தமாக இருக்கும்!! 

பிரியாமணி சொன்னவுடன் அவனைப்பற்றி எழுதும் பொழுது.. பெரும்பாலும் அவனை பற்றிய தகவல்களை படிக்கும் போது.. என்னதான் சொத்து இருந்தாலும் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு எப்படி இன்று தனியாக வளர்ந்து இருக்கிறானே என்று முதலில் ஒரு ஆச்சரியம்!!

 

அதன் பின்பு அவனுடைய பழக்க வழக்கங்கள்.. அதாவது டீட்டோடேலர் ஆயிருந்தது. அது வியப்பளித்தது இவளுக்கு!! இவ்வளவு பணம் இருந்தும் கை சுத்தமாக இருக்கிறானே? என்று!!

 

அதிலும் சிறிது சிறிதாய் அவனை பற்றி சேகரித்து எழுத எழுத ஒரு கிரேஸ்.. பின் க்ரஷ்.. ஈர்ப்பு.. மையல் அவனின் பால்!!

 

சிறிது சிறிதாய் அவளை அறியாமலேயே அவளின் அகம் நுழைந்து இருந்தான் இந்த அகம் பிடித்தவன்!!

 

ஆனால் பெரும்பாலும் விநாயக் தன்னுடைய புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டது கிடையாது. ஏதோ ஒன்று இரண்டு மேகசினிலும் செய்தித்தாள்களில் மட்டுமே அத்தி பூத்தாற் போல் வரும். அதுவும் இலங்கையில் மட்டுமே!! மத்தபடி அவனுடைய வலைத்தள படங்கள் அனைத்தையும் தன் டீமை வைத்து அவ்வப்போது அழித்திருந்தான்.

 

அதையும் தாண்டி தான்.. அவன் பின்னே ஆளை விட்டு அவன் செல்லும் இடங்களுக்கு ஆட்களை அனுப்பி.. அவனுடைய சில புகைப்படங்களை எடுத்து அதனை மார்பிங் மூலம் மாற்றி தான் ஆதித்தும் ப்ரியாமணியும் அந்த பிளாக்கில் பதிவிட்டது. அதனால் உருவமில்லா ஒரு மனிதன் மீது மையல் கொண்டிருந்த மனம் அன்று அவன் தான் இவன் என்று தெரியும் போது நொறுங்கிய போயிருந்தது வர்ணாவுக்கு!! 

 

முதலில் தான் உருவம் கொடுக்காத.. தன் மையிலுக்கு சொந்தக்காரன் தன் முன்னே உருக்கொண்டு நின்றது வர்ணாவுக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தாலும்… அவை அனைத்தும் பொங்கி வந்த பாலில் தண்ணீரைத் தெளிப்பது போல அத்தனை சந்தோஷமும் அடைந்தது பிளாக்கில் அவனைப் பற்றி அவதூராக எழுதியதைப் படிக்கும் போதும்..

 

அவள் நினைத்திருந்தால் அவனிடமிருந்து தப்பித்து இருக்கலாம். எப்போதுமே துருதுருவென்று இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்கும் வர்ணாவுக்கு இந்திராணியை சமாளித்து விட்டுச் செல்வதெல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது. கண்ணுக்குத் தெரியாத செக்யூரிட்டி அந்த வீட்டை சுற்றி இருந்தது வர்ணாவுக்கு தெரியாது அல்லவா?? ஆனால் ஏதோ ஒன்று அவனிடம் இருந்து தப்பிக்கும் எண்ணமே அவளுக்கு வரவில்லை.

 

எப்படி உயர்ந்த இடத்தில் இருந்தவனை இப்படி நாமே செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வும்.. அப்படிப்பட்ட நல்ல மனதை இப்படி நம்மை கடத்தி கீழறங்கி துன்பறுத்தும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியும்.. அவளை உள்ளுக்குள் கொல்லும் போது அதனை தவிர்க்க இயலாமல் தஞ்சமடைந்தது மாலை நேரத்தில் அந்த பால்கனியில் தான்!!

 

ஆனால் அவளே எதிர்பாராதது இவனின் நெஞ்சத்தில் தன் மீதான காதல் பிறக்கும் என்று!! அது இவ்வாறு அணை உடைந்த வெள்ளமாய் பிரவாகம் எடுத்து தன்னை தேடி வரும் என்றும் அவள் கனவிலும் நினைக்காதது!!

 

விஜயனும் சாருமதியும் வந்து பேசிய போது கூட விநாயக் பற்றி இவள் ஒரு வார்த்தை கூறவில்லை. ஏனென்றால் குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவனுக்கு அதிக தண்டனை அல்லவா?? ‘அவனை இவ்வாறு செய்யத் தூண்டியது நான் தானே!’ என்ற குற்ற உணர்ச்சியில் இவள் வாய்மூடி மௌனியாக இருக்க.. அவர்களே இவளை அனுப்பி வைத்துவிட்டனர்.

 

சென்னை வந்து ஹாஸ்டலில் நெருங்கும் போதுதான் சூர்யா பற்றி நினைவு வர ‘அவளிடம் என்ன சொல்லி சமாளிப்பது இத்தனை நாட்கள் எங்கே சென்றாய் என்று கேட்டால்?’ என்று பயந்தவாறு இவள் உள்ளே வர.. 

 

சூர்யாவோ.. சர்வசாதாரணமாக “என்னடி ட்ரைனிங் எல்லாம் முடிஞ்சுதா? இப்பதான் மும்பையில் இருந்து வரியா? எனக்கு போன் பண்ணா நான் வந்து உன்னை பிக்கப் பண்ண வந்திருப்பேன் தானே.. ஆமா லக்கேஜ் எங்கே?” என்று சாவதானமாக கேட்கும் போதுதான் அவன் இங்கே இம்மாதிரியான ஒரு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான் என்று அவளுக்கு தெரியும். மனதில் சற்று ஆசுவாசம்.

 

அப்போ நம்மை பற்றியது நம்முடனே போகட்டும் என்று நினைத்தவள்,

“நேரா ஏர்போர்ட்ல இருந்து ஆபீஸ் போயிட்டேன்‌டி. லக்கேஜ் எல்லாம் அங்கே இருக்கு! அதுல ஆபீஸில் திங்ஸ் இருக்கு அங்கே வச்சுட்டு வந்துட்டேன். நாளைக்கு எடுத்துட்டு வரேன்” என்றவள் அமைதியாக படுத்துவிட்டாள். சூரியாவும் அவளுக்கு அசதி என்று தன் அலுவலகத்திற்கு சென்று விட்டாள்.

 

இரண்டு நாள் ஓய்வுக்குப் பின் அலுவலகம் சென்று பார்க்க அங்கே கேள்விப்பட்டது அவளை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

இவளுக்கு இனி அங்கே வேலை செய்ய பிடித்தம் இல்லை. அதனோடு தன் பெயரை இவர்கள் எப்படி இப்படி பயன்படுத்தலாம் என்று அவ்வளவு கோபம் பெண்ணிற்கு!! அதனால் இந்த விஷயத்தை சும்மா விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு தான் இவள் மீண்டும் அங்கே அலுவலகத்துக்கு சென்றது. ஆனால் ஆதி சேனலை வேற ஒருத்தருக்கு விற்று விட்டதாகவும் மீண்டும் தொடங்கும் போதுதான் அனைவருக்கும் வேலை என்று விட.. 

 

முதலில் அவளுக்கு வந்த எண்ணமே “ஐயையோ எப்படி நான் தப்பு செய்யவில்லை என்று நிரூபிப்பது?” என்று எண்ணம் தான்!! அவளுக்கு என்னவோ விநாயக் முன் தான் குற்றம் சாட்டப்பட்டவளாய்.. தப்பு செய்தவளாய் நிற்க கூட பிடிக்கவில்லை.

 

எப்படியாவது சென்னை சென்ற பின் அவனிடம் உண்மையை ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தாள். இப்போது அதற்கு வாய்ப்பே இல்லாமல் போக.. “மொத்தமாக முடிந்தது!! எக்காலத்திலும் அவனிடம் என்னை நிரூபிக்கவே முடியாது அவன் முன் தப்பு செய்தவளாய் அற்ப புழுவாய் நிற்க வேண்டியதுதான்!! இனி இங்கிருந்து என்ன செய்ய?” என்று வருந்தியவள் பின் தங்கள் ஊருக்கு கிளம்பி வந்தது.

 

ஆனாலும் அவ்வப்போது மையல் கொண்ட மனதில் தையல் மனதில் நர்த்தனம் ஆடினான் ஆணவன்!!

 

இப்படியே நாட்கள் செல்ல.. தீடீரென்று ஒரு‌நாள்.. அந்த ஒரு நாள்.. அவள் எதிர்பாராத ஒரு‌ நாள்..

விநாயக் அவளை தேடி வந்து நின்ற அந்த கணம்!! ஆனந்த அதிர்ச்சியில் அவளால் பேச முடியாமல் உறைந்த அந்த கணம்!!

 

 நீர் பூத்த கனலாக உள்ளிருந்த அந்த மையல் சற்றே தலையை எடுத்து பார்த்து அவனை கண்ணுக்குள் நிறைவாக நிறுத்திக்கொண்டது.

 

அதனிலும் அவனது சீண்டல் தீண்டல் ‘எங்கே மறுபடியும் தப்பு செய்கிறானோ?’ என்று இவள் படபடக்க.. அனைத்தையும் மறுத்து ‘இம்முறை உன்னை சிறை எடுக்க அல்ல கைபிடிக்க வந்தேன்!! அதுவும் உன் காதலோடு!!’ என்று அவன் கூறுகையில் மங்கையின் உவகைக்கு அளவே இல்லை!! 

 

ஆனாலும் உள்ளுக்குள் அந்த குற்ற உணர்வு குறுகுறுப்பு அதனிலும் தீர விசாரிக்காமல் அவன் செய்தது என்று மனம் வீம்பு என்னும் கொம்பை தலையில் மாட்டிக் கொண்டு அலைய.. இவள் அவனை அலைய விட்டாள்.

 

அதுவும் அசிதன் வந்து இறங்கிய பிறகு இன்னும் வசதி ஆகிப்போனது மங்கைக்கு தன் கோமகனின் காதலின் ஆழத்தை காண!!

 

“என்னது மச்சானா? நான் எதுக்கு உங்களை மச்சானு கூப்பிடணும்? எங்க அம்மா என்ன உங்க அப்பா கூட பிறந்தாங்களா? இல்ல உங்க அப்பா தான் எங்க அம்மா கூட பொறந்தாங்களா? என் அப்பாக்களுக்கு உங்க அப்பா என்ன மாமனா மச்சானா?” என்று அவள் மூச்சுவிடாமல் கட்டபொம்மன் வசனம் பேச…

 

‘ஒரே ஒரு வார்த்தை தானே கூப்பிட சொன்னோம்? இவ என்ன இப்படி நான்ஸ்டாப்பா பேசுறா?’ என்று அயர்ந்துதான் போனான் இந்த அயல் நாட்டுக் காரன்!!

 

அவள் இதழ்களை தன் இரு விரல்களால் பிடித்து “போதும்டி நிறுத்து!! நீ பாட்டு இப்படி பேசுனா என் காதில் இருந்து ரத்தம் வந்துரும் போல” என்று அவன் மறுகையின் ஒற்றை விரலால் காதைக் குடைந்து காட்ட..

 

மீண்டும் அவள் பேசியது ஞணன நமன என்று கேட்க அவனுக்கு அவ்வளவு சிரிப்பு!! அதெல்லாம் விடுத்து “இப்ப நீ என்ன மசினானு கூப்பிட போறியா இல்லையா?” என்று மீண்டு விட்ட காதல் கொண்ட கர்வத்தோடு அவள் இடையை வளைத்து கேட்க..

 

அவன் மெல்லிடையை வன் மென்மையாய் தொட்ட போது மெல்லிடையாளோ.. உள்ளுக்குள் 

சிலிர்த்தாள்.. 

சிணுங்கினாள்.. 

சிறு வெட்கம் கொண்டாள்!! ஆனால் வெளியிலும் நேத்திரங்களில் அதனை மறைத்தாள் காரிகை!!

 

“சொல்ல முடியாது! நான் சொல்ல முடியாது!!” என்று இவள் வீம்போடு பார்க்க..

 

“அப்போ அவனை மட்டும் அத்தான் சொல்ற?” என்று பொறாமையில் அவன் பொங்க..

 

‘வாடா வா மாட்டினியா?’ என்று இதழ்களில் முகிழ்த்து சிரிப்பை மடித்து மறைத்துக் கொண்டாள். “அவர் என் சொந்த அத்தை பையன் அந்த உரிமையில் உறவில் அவரை கூப்பிட்டேன். உங்களை எதுக்கு நான் அப்படி கூப்பிடனும்” என்று ஒற்றை புருவத்தை தூக்கி அவள் கேட்டு விதத்தில் மொத்தமாய் வீழ்ந்து தான் போனான்.

 

நாளுக்கு நாள் அவள் மேல் கொண்ட காதலும்.. அவள் சிறு சிறு அசைவுகளில் கூட தன் மனம் கொள்ளும் தாபமும்.. அவனை அனலாய் உள்ளுக்குள் தவிக்க வைத்தது. அதே நேரம் முதல் முறை உணர்கின்ற உணர்வு ஆலங்கட்டி மழையில் நனைந்து உணர்வையும் சேர்த்தே கொடுத்தது!!

 

அனலும்.. ஆலங்கட்டி மழையும்.. எப்படி இருக்கும் என்று ஒருங்கே உணர வைத்தாள் இந்த சேட்டைக்காரி!!

 

அவள் இடைப்பற்றி நெருக்கமாக இவன் இருக்க, “அவன் உறவுகாரன் மட்டும்தான் டி.. நான் உரிமைக்காரன் டி!” என்று கூற.. அவளும் அவனிடம் மீண்டும் வம்பு வளர்த்துக் கொண்டிருக்க இவர்களைத் தேடி வந்துவிட்டான் அசிதன்.

 

“என் வண்ணக்கிளி.. அத்த பெத்த அன்னக்கிளி.. மச்சக்கன்னி..” என்று விதவிதமாய் அழைத்துக் கொண்டே அவன் மாடி ஏறி வர..

 

“ஐயையோ அத்தான் வந்துட்டாங்க” என்று இவன் அவனை உதறித்தள்ள முற்பட அவனோ சிறிதும் அசையாமல் “நீ சொன்னால்தான் விடுவேன் இல்லனா உங்க அத்தான் வந்த ஃப்ரீ சோ பார்க்கட்டும் என்று அப்படியே லிப்ஸை கடித்து வைத்து விடுவேன்” என்றான்.

 

“நீங்க கடிச்சா நானும் கடிப்பேன்!!” என்றாள் அவள் வீம்பாக..

 

“ஐ அம் வெயிட்டிங்!!” என்றதும் தான் அவள் சொன்ன வார்த்தை புரிய.. அவள் தலையில் தட்டிக் கொள்ள அதற்குள் கதவை தட்டி விட்டான் அசிதன்!!

 

“என் வர்ணா வண்ணக்கிளி.. என்னடி பண்ற? சீக்கிரம் வா நேரமாகுது.. கால பூஜைக்கு கிளம்பு சொன்னா இவ அர்த்தஜாம பூஜைக்கு தான் கிளம்பி வருவா போல!” என்று அவன் வெளியே அலுத்துக்கொண்டு கூற..

 

“இதோ அத்தான். வந்திட்டேன்!!” என்றவள் இவனின் கையை உதறி விலக முற்பட்டாலும்.. அவன் விடுவேனா என்று இறுக்கி இருக்க.. 

 

முறைத்து மிரட்டி என்று என்ன செய்தாலும் அவன் விடாமலிருக்க கண்களை சுருக்கி‌.. தலையை சாய்த்து.. இதழ்களால் மெல்ல கெஞ்சி அவள் கேட்க.. அதை ரசித்து பார்த்தாலும் இவளை இப்போது விட்டால் கூப்பிடவே மாட்டாள் என்று நினைத்தவன், இருபக்கமும் தலையாட்டி “இப்போதே சொல்!! அப்போதுதான் விடுவேன்!!” என்று மெல்லமாய் வாய் அசைத்தான்.

 

அப்போதும் சொல்லாமல் முறுக்கிக்கொள்ள.. “உன் அத்தானை உள்ள கூப்பிடட்டுமா?” என்று அவளிடம் கிசுகிசுக்க ‘முடிந்தால் செய்யேன்!’ என்று தெனாவெட்டாக அவள் நிற்க..

 

“அசி..” என்று அவன் கூப்பிட தொடங்கியவுடன் இம்முறை அவனது மீசை அடர்ந்த இதழ்களை தன் மெல்லிய இதழ்கள் கொண்டு அடைத்திருந்தாள் பெண்!!

 

அவளின் இந்த திடீர் அதிரடியில் விநாயக் அதிர்ந்து விழிகளால் அவளை விழுங்க.. அவனை மெல்ல விடுத்தவள் கண்ணில் அவன் கண்டது என்ன?

 

விருப்பமா?

ஆசையா?

நேசமா?

அன்பா?

பிடித்தமா??

அதையும் தாண்டிய காதலா? ம்ஹீம் அவன் உற்று பார்ப்பதற்குள் வால்நட்சத்திரம் மாதிரி சட்டென்று மின்னி மறைந்து போனது அந்த பாவம்!!

 

அவன் குழம்பி தவிக்கையிலேயே.. 

அவனிடம் இருந்து பிரிந்தவள், “வரட்டுமா?” என்று அவனிடம் கண்ணடித்து கேட்டவளை இன்னும் ஆச்சரியம் அகலாமல் விழி விரித்து அவன் பார்க்க..

 

அவளோ கதவை திறந்து “வந்துட்டேன் அத்தான் போகலாம்!” என்று அசிதன் கையை பிடித்து மாடிப்படியை கடந்து சென்றே விட்டாள்.

 

இவர்களை ஓரக் கண்ணால் கவனித்துக் கொண்டிருந்த கியூபிட் சிலையென சமைந்து நிற்பவனைப் பார்த்து “என்ன இவன் ஒத்த கிஸ்ஸூக்கே எப்படி சிலையா நிக்குறான்?? அடேய்.. விநாயக்.. விநாயக்..” என்று தன் வில்லால் அவனை உலுக்க.. ஒரு வழியாக உயிர் வந்தது சிலைக்கு.

 

“அப்பாடி!!” என்று நிம்மதி பெரு மூச்சு விட்டது கியூபிட்.

 

முதல் முறை தன்னவளாக தானாக முன்வந்து கொடுத்த முத்தம்.. உயிர்வரை இனித்தது!!

உறைந்து நிற்க வைத்தது!!

உள்ளுக்குள் சிலிர்த்தது!!

 

அடுத்த நொடி.. பாய்ந்து சென்று

விட்டான் அவர்கள் பின்னாடி!!

 

ஆனால் வர்ணாவின் அறைக்குள்ளிருந்து இவன் வெளிவந்ததை யோசனையோடு மட்டும் அல்லாமல் சற்று கோபத்தோடு பார்த்தது இரு விழிகள்!!

 

கோவிலுக்கு காரில்தான் சென்றார்கள் அசிதனும் வர்ணாவும்.

இவன் பாண்டி பிரதர்ஸ் ஒருவரின் பைக்கை எடுத்துக்கொண்டு பின்னாடியே பறந்து சென்றான்.

 

கோயிலுக்குள் சென்று அவர்கள் அய்யனாரை வணங்கி சௌடாம்பிகை சொன்ன வழிபாடு எல்லாம் செய்து கொண்டிருக்க அருகில் வர்ணா..

 

பூசாரி கேட்க கேட்க இவன் பூஜை பொருட்களை எடுத்துக் கொடுக்க ஆரத்தி காட்டி அதனை அவர்களிடம் காட்டிய பூசாரி.. அடுத்து பிரசாதம் கொடுக்கும்போது அசிதன் போன் அடிக்க.. அவளோ அவனை முறைக்க.. “இரு இரு கட் பண்ணுறன்!” என்று அவன் திரும்பிக்கொண்டு போனில் மெதுவாக யாரிடமோ பேசினான்.

 

அதை அறியாத வர்ணா அய்யனாரை பார்த்துக் கொண்டு கையிலிருந்த விபூதியை அருகில் இருந்தவன் நெற்றியில் பூசி விட்டாள். அதோடு மட்டுமல்லாமல் அவன் மூக்கை மீது கையை வைத்து ஒரு எக்கு எக்கி அவன் நெற்றியில் ஊதிவிட.. அதை வாங்கியவனுக்கோ சொல்ல முடியா பேருவகை!!

 

ஏதோ தோன்ற சட்டென்று நிமிர்ந்து பார்க்க.. அவளருகில் வசீகர சிரிப்புடன் விநாயக்!!

 

தள்ளி நின்று கொண்டு போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருநந்தான் அசிதன்!! தன் அருகில் விநாயக்!!.

 

இவளோ அவனை முறைக்க அவன் முகத்தில் மந்தகாசப் புன்னகை முதன்முதலாக இருவரும் ஜோடியாக நின்று சாமி கும்பிட்டு அதுவும் அவர்களது குலதெய்வம்!! அதனோடு அவள் உரிமையோடு நெற்றியில் இட்ட விபூதி என்று விநாயக் ஒரு வித பரவசத்தில் பறந்தான்.

 

‘இன்னைக்கு உனக்கு அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டமடா!’ என்று சந்தோஷத்தோடு முறைத்துக் கொண்டு கோவிலை வலம் வந்தவள் பின்னே வால் பிடித்துச் சென்றான். 

 

அதற்குள் போன் பேசி வந்த அசிதன் வர்ணாவை காணாமல் “எங்க போன இவ?” என்று தேடி வர.. இவர்கள் இருவரும் பேசிக்கொண்டே சாமியை வலம் வருவதை கூர்ந்த பார்வையோடு பார்த்தான் அசிதன்!! 

 

அவன் பார்வையில் ஏதோ இருவரும் சிரித்து பேசுவது போல சாதாரணமாக பட்டாலும் அவள் திட்டிகொண்டே வர இவன் சிரித்துக் கொண்டே அதை வாங்கிக் கொண்டே வந்தான்.

 

“எப்படி ஏன் உயிரை எடுக்கிறீர்கள்? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? அதுவும் இப்படி பின்னாடியேவா வருவாங்க? ரெண்டு ஸ்டெப் பின்னாடி போக வேண்டியதுதானே? ஐயோ அந்த பக்கத்து வீட்டு மாமா வராறே.. அவரு சரியான ஒரு பிபிசி வாய் ஊருக்குள்ள போய் என்னென்ன பேச வாரோ?” என்று இவள் பதட்டத்துடன் அங்கு வந்தவர் போனவர்களை எல்லாம் ஒவ்வொரு முறை கூறி ஒவ்வொருவரையும் ஒரு பட்டப்பெயர் வைத்து கூறிக் கொண்டே வர அவளின் வாய் கொள்ளா பேச்சு அவனுக்கு கொள்ளையாக பிடித்தது.

 

சாமியை நினைத்து வலம் வந்தார்களோ இல்லையோ இருவரும் இருவரை நினைத்துக்கொண்டு மூன்றுக்கு பதிலாக ஐந்து முறை வலம் வந்தார்கள்.

 

வெளியில் வந்த பார்க்க அசிதன் கேள்வியோடு விநாயக்கை பார்க்க.. அவனும் ஆச்சரியத்தோடு “ஓஹ் நீங்களும் கோவிலுக்கு வந்திங்களா பாஸ்? எனக்கு தெரியாதே? தெரிந்திருந்தால் காலையில உங்களுடைய சேர்ந்து வந்திருப்பேனே!” என்று தெரியாதவனை போல நடித்து “சரி போவோமா?” என்று அவர்களுடைய இணைந்து வெளியில் வந்தான்.

 

அங்கே காரோ அசையாத வண்ணம் பஞ்சராகி நின்றது அதுவும் இரண்டு டயர்களில் “ஓஹ் ஷிட்!!” என்று நெற்றியை அசிதன் தேய்த்துக்கொள்ள.. இவனும் தான் வந்த என்ஃபீல்டை எடுத்து அவர்கள் பக்கம் வந்தவன் “என்ன ஆச்சு?” என்று கேட்க அசிதன் கையை காட்ட “இங்கே மெக்கானிக் எங்கு இருப்பார் என்று எனக்கு தெரியாதே? ஒரு வேளை நீங்க போய் கூட்டிட்டு வரீங்களா நான் இங்கே வெயிட் பண்றேன்!!” என்றான் ரொம்ப நல்லவனாக!!.

 

“இல்ல.. எனக்கு தெரியும் நான் போன் பண்ணி அவரை வர சொல்லிக்கிறேன் நீங்க கிளம்புங்க” என்றான் அசிதன் அவனுக்கு குறையாதவனாக!!.

 

“சரி அப்போ வர்ணா.. நீ வா நாம போலாம்!!” என்றான் வெகு உரிமையாக!!

 

“எது?? நான் வண்டியில வரணுமா?” என்று ஜெர்க் ஆகி வர்ணா பார்க்க “ஆமாம் வயசு பொண்ணு நீ.. எப்ப மெக்கானிக் வந்து ரிப்பேர் பண்ணி வரது.. அதுவரைக்கும் இங்கே நிப்பியா? நான் வீட்டுக்கு தான் போறேன். கோயிலுக்கு போய்ட்டு வெளியில எங்கேயும் போகாம நேரா வீட்டுக்கு தான் போகணும் எங்க அம்மா சொல்லிக் கொடுத்து இருக்காங்க. அதனால நான் போறேன் உன்ன வீட்ல விட்டுடுறேன்” என்று கூப்பிட அசிதனுக்கும் வேறு வழி தெரியவில்லை. மெக்கானிக் வந்து அதுவும் ஒன்றுக்கு 2 வீலர் பஞ்சர் பார்க்க வேண்டுமே!! சரி என்று தலை அசைத்தான் வர்ணாவிடம் போக சொல்லி..

 

குதுகலத்துடன் விநாயக்!!

 

ஆராய்ச்சியுடன் அசிதன்!!

 

மனதில் இருக்கும் மையலை மறைத்து வர்ணா!!

 

அரை மணி நேரத்தில் வரவேண்டிய அவர்களது வீட்டிற்கு.. இல்லாத மேடு பள்ளங்களில் எல்லாம் வழிந்து வழிந்து ஏறி சென்று அருகில் செல்லும் சைக்கிள் கூட இவர்களை ஓவர்டேக் செய்து போகுமளவு மெதுவாகவே வந்து சேர்ந்தான் விநாயக் வீட்டிற்கு.

 

“யோவ்.. ராயல் என்ஃபீல்டுக்குனு ஒரு கெத்து இருந்துச்சு!! இன்னைக்கு நீ ஓடிட்டு வந்ததுல அதுக்கு போயே போச்சு!!” என்று கத்திக் கொண்டே வந்தாள் வர்ணா வரும் வழியில் எல்லாம்..

 

அவன் எங்கே அதை காதில் கொண்டான்.. காதல் கொண்டான் அவளின் அருகாமையில்!!

 

அவளின் ஸ்பரிசத்தில் அவ்வப்போது உரசும் மென்மையிலும் சிறகை விரித்து பறக்கும் பறவையென வானத்தில் பறந்தது மிதந்தது அவன் மனது!!

 

இதோ இவன் அவளை பாதுகாப்பாய் அழைத்து வந்தது போல வீட்டு பெண்களிடம் ஒரு பில்டப் செய்து அன்னைமார்களிடம் பவ்வியமாக நடித்து தன் அறைக்கு சென்றான்.

 

அன்று இரவு வானில் உலா வரும் வெண்ணிலவை பார்த்துக் கொண்டே அன்றைய நிகழ்ச்சிகளின் நினைவுகளில் சுகமாக சுகித்திருந்தவனின் நினைவை கலைக்கவே வந்தான் அசிதன் “என்ன மிஸ்டர் விநாயக் லவ்வா?” என்று!!

 

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல ஆண்களின் மனதை ஒரு ஆணால் ஈசியாக உணர்ந்து கொள்ள முடியும். அதனால் விநாயக்கும் மறைக்காமல் “ஆமாம்!!” என்று தலை அசைக்க.. அடுத்த நிமிடம் அவனது காலர் இல்லாத டிஷர்ட்டை கழுத்தோடு சேர்த்துப் பிடித்து “அப்புறம் என்ன இதுக்குடா அவளை நீ கடத்தி வைத்திருந்த?” என்ற அசிதன் கண்களில் அத்தனை ஆத்திரம்!!

 

வானவில் வளரும்..

6 thoughts on “வானவில்லே எனை வளைத்ததேனடி.. 17”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top