ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 14&15

அத்தியாயம் 14

 

“என்ன ஹர்ஷா? நீங்க இப்படி நடந்துக்குவீங்கன்னு நான் நினைக்கவேயில்ல!”

 

“அங்கிள்?”

 

“அந்த பொண்ணு உங்களை நம்பி வந்துருக்கா.. எவ்வளவு படிச்சவரு நீங்க போய் இப்படி நடந்துகிட்டீங்களே? சரி.. ஒத்துக்குறேன்.. இளம் வயசு தப்பு பண்ணிட்டீங்க.. ஆனா, அதுக்கு அந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு? அந்த பொண்ணையும் குழந்தையையும் ஒழுங்கா பார்த்துக்குங்க.. வயசு காலத்துல நாம பண்ற தப்புகளுக்கெல்லாம் நாடி நரம்பு தளர்ந்ததுக்கு அப்புறம் அனுபவிப்பீங்க.. சரி போனதெல்லாம் போகட்டும்.. அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி, எங்களுக்கு கல்யாண சாப்பாடு போடுற வழியப் பாருங்க..” என்று காலையில் வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் இடத்தில் சந்திக்கும் பெரியவர் கூறிச் செல்ல,

 

“என்னது? திரும்பவும் கல்யாணம் பண்ணி.. சாப்பாடு போடணுமா? ஒரு கல்யாணம் பண்ணியே மனுஷன் கயித்து மேல நடக்குற மாதிரி இருக்கு.. இதுல இன்னோரு கல்யாணமா?” என்று முணுமுணுத்தவாறே நடைபயிற்சி செய்து கொண்டிருந்தவனை பார்த்த கல்லூரி முதல்வர், அவன் அருகில் வந்து,

 

“நல்லவேளை உன்னைய‌ பார்த்துட்டேன்.. உன் பொண்டாட்டி சொன்னாளா?” என்று கேட்க, நேற்று தன்னை கல்லூரிக்கு வருமாறு அழைத்தது ஞாபகம் வரவே,

 

“ஆமா.. உங்களை வந்து பார்க்க சொன்னதா சொன்னா..” என்றவன் கூறியது தான் தாமதம், அவள் செய்த குறும்புதனத்தை கூறியவர்,

 

“அவளுக்கு இன்னும் ஒரு செமஸ்டர் தான் இருக்கு.. கடைசி செமஸ்டர் இன்டன்ஸிவ் பண்ணணும்.. அவளை ஏதாவது கம்பெனில சேர்த்து விடு, அதை வைச்சு தான் மார்க்..” என்றவர் கூறி செல்ல, சரியென தலையாட்டியவன், அங்கிருந்து கிளம்பிச் செல்ல, கார் நிறுத்தத்தில் அவரை சந்தித்த பெண்மணி,

 

“தம்பி நில்லுங்க.. நானே உங்க மேல கம்ப்ளைண்ட் பண்ணணும்னு இருந்தேன்..” என்று சொல்ல அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. 

 

“எதுக்கு என் மேல கம்ப்ளைண்ட் பண்ண போறீங்க?”

 

“எதுக்கா? இந்த வீடியோவை பாருங்க..” என்றவன் தன் மொபைலில் இருந்து வீடியோவை காட்ட, அதில் கசங்கி போயிருந்த புடவை கட்டிக் கொண்டு, பொழிவில்லாத முகத்துடன் தெரிந்த விளானி, 

 

“இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா? வாயும் வயிறுமா இருக்கேன்.. எனக்கு சோறு போடலேன்னாலும் பரவாயில்ல.. காலேஜ் கடைசி வருஷம் சேர்த்து படிக்க வைக்கமாட்டேங்குறாரு.. காலேஜ்ல கார்டியனா கூப்பிட்டாக் கூட வரமாட்டேங்குறாரு.. இவரை நம்பினதுக்கு என்னைய இப்படி மோசம் பண்ணிட்டாரு.. ஒரு பொண்ணுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம்? தயவு செஞ்சு அவரை என்கூட காலேஜ்கு வரச் சொல்லுங்க.. இந்த ஆணாதிக்க சமூகத்தில எப்படி படிப்பில்லாம, என் குழந்தையை வளர்க்க முடியும்? இந்த அவலைக்கு நியாயம் கிடைக்க ஹெல்ப் பண்ணுங்க..” என்று கூறி அழுதிருந்தாள். அவளைப் பற்றி தெரியாதவர்கள், அவ்வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக ஹர்ஷவர்தனை சிறைப்பிடிக்க எண்ணுவர். அப்படி நடிப்பை தத்ரூபமாக செய்திருந்தாள் விளானி.

 

“நான் அன்னைக்கே சொன்னேன்.. அந்த பொண்ணை ஒழுங்கா பார்த்துக்கோன்னு, இப்படி அழவிட்டுருக்க.. மாசமா வேற இருக்கா.. ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிடுச்சுனா, என்ன பண்ணுவ?”

 

“ஆண்ட்டி நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க.. அவளுக்கு இப்போ ஒரே தலை சுத்தல், வாந்தி, மயக்கம்.. அதுவுமில்லாம கடைசி செமஸ்டர் தான்.. அதான் வீட்டுல ரெஸ்ட் எடுக்க சொன்னேன்.. அதை தப்பா புரிஞ்சுகிட்டு, இந்த மாதிரி வீடியோ போட்டுட்டா..” என்றவன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூற,

 

“ப்ச்.. இந்த காலத்து பிள்ளைகளுக்கு எதுல தான் விளையாடணும்னு அறிவில்லாம போச்சு.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல..” என்றவர் வாயிற்குள் முணுமுணுக்க, அதனை கேட்ட ஹர்ஷவர்தன், மனதுக்குள் சிரித்தாலும், வெளியே முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டான். 

 

“நீ சொல்றதை இந்த தடவை நம்புறேன்.. ஆனாலும் அவளை நல்லா பார்த்துக்கோ.. இன்னொரு தடவை இப்படி அவ செய்யுறதை பார்த்தேன்.. ரெண்டு பேர் மேலயும் பப்ளிக் நியூஸின்ஸ் கேஸ் போட்டுடுவேன்.. ஜாக்கிரதை..” என்றவர் அங்கிருந்து செல்ல, 

 

“விளானிஇஇஇஇஇ..” என்று பற்களை நறநறவென கடித்தவாறு, அங்கிருந்து தன் வீட்டை நோக்கிச் சென்றான். கடந்த காலங்களில் திரைப்படங்கள் சமூகத்தினை கெடுத்து வந்தன. பிறகு தொலைக்காட்சி நாடகங்கள். இன்று சமூக வலைதளங்கள் கெடுத்து வருகின்றன. ஓர் ஊருக்குள் யாராவது புதிய நபர் ஒருவர் வந்தால் அவரைப் பற்றி ஏதும் தெரியாமலே தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதன் விளைவாக அந்த நபரை சிலர் சேர்ந்து தாக்குகின்றனர். கண்களால் பார்ப்பதை உண்மையாக எண்ணி, பொய்மைக்கு ஆதரவளிக்கின்றனர். நமது ஆறாம் அறிவான, பகுத்தறிவை உபயோகப்படுத்த மறந்து விடுகின்றனர். 

****************************************************

“மிஸ்டர். ஹரி.. இவங்க எல்லோரும் நாம செலக்ட் பண்ண டீம்..” என்று ஒவ்வொரு குழுவாக ஹரிஷான்த்திற்கு அறிமுகப்படுத்தினார் ஏஹெச் கம்பெனியின் ஜெனரல் மேனேஜர் சங்கர். அனைவரையும் அறிமுகப்படுத்தியவர்,

 

“அண்ட் தி லாஸ்ட் டீம்.. மிஸ் சிந்து.. மிஸ். பரிதிமதி.. மிஸ்டர் அசோக்.. மிஸ். ஹாசினி..” என்று கூற, அனைவருக்கும் வாழ்த்து கூறி, கை குழுக்கியபடி வந்தவன், ஹாசினி என்ற பெயரில், அவளை பார்த்து அப்படியே அதிர்ந்து போய் நின்றுவிட்டான். அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே, அதன் பின், அவனது முகத்தில் இருந்து எந்தவிதமான உணர்ச்சியும் தென்படவில்லை. 

 

“வெல்கம் டூ அவர் எஹெச்..” என்ற ஹரிஷான்த்தின் முகத்தை வைத்து, மனதில் நினைப்பதை கவனிக்க முடியாது திணறினாள் ஹாசினி.

 

“ம்ம்.. மீட் மிஸ்டர். ஆல்வின்.. அவர் ப்ளானிங் மேனேஜர்.. இன்னைக்கு நீங்க என்ன பண்ணணும்னு இவர் சொல்லுவார்.. அண்ட்.. மிஸ்டர். அசோக் டீம்.. கம் வித் மீ.. நீங்க என்கூட என் டீம்ல வொர்க் பண்ண போறீங்க..” என்றவனின் பார்வை சிறிதும் ஹாசினியின் மீது படியவில்லை. சிறிதும் இடைவேளியின்றி அவர்களுக்கு வேலை வழங்கிக் கொண்டிருந்தவனின் அருகில் செல்லவே அனைவரும் பயந்தனர். அங்கே இருக்கும் மற்ற டீம்களுடன் அமர்ந்து மதிய உணவை சுவைத்தவளுக்கு உள்ளே இறங்க மறுத்தது. பெங்களூரில் இருந்து வந்ததில் இருந்து, அவளிடம் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. அவள் அவனுக்கு செய்யும் எந்தவொரு செயலையும் ஏற்காது, அவனே தன் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டான். இன்று காலையில் அவள் செய்து வைத்த உணவையும் தொடவில்லை. அவன் சாப்பிட்டானா? இல்லையா? என்று தெரியாது, அவளுக்கு சாப்பிட மனமில்லை. கொண்டு வந்த உணவை, சாப்பிடாது மூடி வைத்த ஹாசினியை கேள்வியாக பார்த்தாள் சிந்து. 

 

“ப்ச்.. ஒன்னுமில்ல.. இப்போ.. வந்துடுறேன்..” என்றவள் அங்கிருந்து எழுந்து செல்ல, அவள் பின்னோடு எழுந்து செல்ல முயன்ற அசோக்கை தடுத்து,

 

“எங்க போற? அவ இப்ப வந்துடுவா.. அவ ஒன்னும் சின்னப்புள்ள இல்ல.. தொலைஞ்சு போக..” என்றவாறு தன்னுடன் அமர வைத்தாள் சிந்து. ஹரிஷான்த்தின் அறையில் சென்று பார்த்தவருக்கு அங்கு அவனில்லாது, ஏமாற்றமே மிஞ்சியது. திரும்பி வந்து கொண்டிருந்தவளின் கண்ணில் சரத் படவே, அவனிடம் ஹரிஷான்த்தை பற்றி விசாரித்தாள் ஹாசினி. அவன் வெளியே செல்வதற்காக கார் பார்க்கிங் பகுதிக்கு சென்றிருப்பதாக சரத் கூறிச் செல்ல, அவனைத் தேடி கார் பார்க்கிங் பகுதிக்கு செல்லலானாள் ஹாசினி. அங்கே அவள் கண்ட காட்சியில் கோபத்தின் உச்சிக்கே சென்றாள் ஹாசினி. அப்படி அவள் கண்ட காட்சி என்னவோ?

 

அத்தியாயம் 15

 

“ஹாய் ஹரி..” என்றவாறே காரைத் திறக்க முயன்ற ஹரிஷான்த்தின் அருகில் வந்து நின்றாள் காமினி. அவளை சிறிதும் மதிக்காது, காரை திறக்க முயன்றவனிடம் இருந்து சாவியை சட்டென பறித்துக் கொண்டவள், அதனை அவன் முன்னே ஆட்டி,

 

“சாவி வேணுமா? எடுத்துக்கோ..” என்றவாறு தனது ஆடைக்குள் போட, அவளை எரிச்சலோடு பார்த்தவன், தன் கைபேசியை எடுத்து, வாடகை காருக்கு அழைக்க முயல, அதனையும் எட்டி பறிக்க முயன்றாள் காமினி. அதனை அவளது கைக்கு எட்டாது தூக்கிப்பிடித்தவனின் மார்ப்பில் மோதியிருந்தாள் காமினி. இருவரும் ஒட்டியபடி நின்று கொண்டிருந்த நிலையை கண்ட ஹாசினிக்கு ரத்த அழுத்தம் உச்சக்கட்டத்தை தொட்டது. வேகமாக இருக்கும் இடையே வந்தவள், காமினியின் முதுகில் ஓங்கி தட்ட, சட்டென முன்னே குனிந்த காமினியின் உள்ளாடையில் இருந்த சாவி வழுக்கிக் கொண்டு, வெளியே விழுந்தது. அந்நேரத்தில் ஹாசினியை எதிர்பார்க்காத ஹரிஷான்த்தின் கண்கள் ஒருமுறை விரிந்து சுருங்கியது. சாவியை தன் கையில் வைத்துக் கொண்டு ஹாசினி, காமினியின் இடது கையை பின்முதுகுபுறமாக மடக்கி,

 

“யார் புருஷனை யார் வந்து டாவடிக்குறது? மவளே! இன்னொரு தடவை என் புருஷனோட உன்னை பார்த்தேன்? சானியை கரைச்சு மூஞ்சில உத்திடுவேன்.. ஜாக்கிரதை..” என்றவாறே விடுவிக்க, சட்டென திரும்பி அவர்களைப் பார்த்து முறைத்தாள் காமினி. 

 

“யாரு யார் புருஷனை டாவடிக்குறாங்கன்னு இவரைக் கேளு தெரியும்.. இவர் என்னைய தான் மேரேஜ்‌ பண்ணிருக்க  வேண்டியது.. அன்னைக்கு மட்டும் நான் ஓடிப் போகாம இருந்திருந்தா? இந்நேரம்..” 

 

“இந்நேரம்.. உன் புருஷன்.. உன்னைய லக்கப்ல உட்கார வைச்சுருப்பாரு.. கள்ளக் காதலுக்காக கட்டுன புருஷனை பெத்த புள்ளையை விட்டுட்டு ஓடிப் போன பொண்ணுங்கன்னு நியூஸ்ல காட்டும் போது பத்தோடு பதினொன்னுன்னு போயிடுவேன்.. அதையே நேர்ல பார்க்கும் போது விட்டு விலாசனும்னு தோணுது.. இங்கப்பாரு தாலி.. இது இவர் எனக்கு கட்டுனது, நான் இவருக்கு மட்டும் தான் பொண்டாட்டி.. புரியுதா? அதுவும் சட்டப்படி அதிகாரப்பூர்வமான பொண்டாட்டி.. இன்னொரு தடவை இவர் கூட ஒட்டிட்டு நிற்குறதையோ, பேசுறதையோ பார்த்தேன்..”

 

“அப்படித் தான் பண்ணுவேன்.. என்னை என்ன பண்ணுவ? உன்னால் என்ன பண்ண முடியும்?”

 

“ம்ம்.. உன்னைய இப்படி அலைய விட்டுட்டு ஊர் ஊரா சுத்திட்டு திரியுறானே உன் புருஷன்.. அவனுக்கு படம் போட்டு காட்டுவேன்.. அடக்கி வைக்க சொல்லி, உன் அப்பா கம்பெனி முன்னாடி உட்கார்ந்து தர்ணா போராட்டம் பண்ணுவேன்..”

 

“அப்போ.. நீ உன் புருஷன்கிட்ட மட்டும் எதுவும் கேட்டமாட்ட.. அவரே என்னைய இது வரைக்கும் ஒன்னும் சொல்லல.. என்னைய அவர் பின்னால வரக்கூடாதுன்னு சொல்ல நீ யாரு?”

 

“அவர் பொண்டாட்டி..”

 

“அவர் பொண்டாட்டி.. அவர் பொண்டாட்டின்னு.. நீ தான் கத்திட்டுருக்க, அவர் எதுவும் சொல்லாம நிற்குறாரே?! என்னைய பின்னாடி வரக்கூடாதுன்னு ஹரி சொல்லட்டும்.. நீ சொல்லாத..”

 

“அவருக்கு உன் மேல இஷ்டம் இல்லன்னு நான் நிரூபிச்சுட்டா நீ இவர் இருக்குற பக்கம் வரமாட்ட.. அப்படித் தானே?” என்ற ஹாசினி, ஹரிஷான்த்தின் புறம் திரும்பி, அவனது டையை பிடித்து தன் உயரத்திற்கு இழுத்தவள், அவனது இதழோடு தனது இதழை கோர்த்தாள். இதழ்களை இணைத்தது மட்டும் தான் ஹாசினி செய்தது, அதன் பின் நிலையை தன் எடுத்துக்கொண்டான் ஹரிஷான்த். அவளை தன் உயரத்திற்கு தூக்கியவன், அவளது இதழ்களை கவ்வி சுவைக்க, இதனை எதிரே நின்று பார்த்துக் கொண்டிருந்த காமினியின் கண்களில் குரோதம் தாண்டவமாடியது. கோபத்துடன் காமினி அங்கிருந்து சென்றதை கூட உணராது, இருவரும் தங்களது முத்தத்தில் மூழ்கியிருக்க, சற்று தூரத்தில் ஒலித்த காரின் ஓசையில் தன்னிலை மீட்டெடுத்தனர். அவளை கீழே இறக்கியவன், அவளை கூர்ந்து சில நிமிடங்கள் பார்க்க, அவனிடம் இருந்து தன் முகத்தை மறைத்தவள், சிவந்த முகத்துடன் அங்கிருந்து ஓட, எதுவும் பேசாது தனது காரில் ஏறியவன், அங்கே முன்னே இருக்கும் கண்ணாடியில் தனது உதட்டை பார்த்தவாறே காரை எடுத்தான். கார் பார்க்கிங்கில் இருந்து வேகமாக ஓடி வந்தவள், ஜெனரல் மேனேஜர் சங்கரின் மீது மோத, அவளை கீழே விழாது பிடித்து நிறுத்தியவன், 

 

“ஏன் இப்படி ஓடி வர்றீங்க? கீழே விழுந்துடப் போறீங்க? அப்புறம் உங்களுக்கு அடிபட்டுடும்.. உங்களுக்கு அடிபட்டா, என்னால தாங்க முடியாதுங்க.. ஏன்னா.. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று கூற, அதுவும் பேசும் எதுவும் அவளது கருத்தில் பதியவில்லை. அவளது எண்ணம் முழுவதும் ஹரிஷான்த் தன்னை அணைத்து, முத்தமிட்ட தருணத்தில் ஸ்தம்பித்து போயிருந்தது. இதை புரியாது, அவளது முகச்சிவப்பும் வெட்கமும் தனக்கானது என்று நினைத்துக் கொண்ட சங்கர், அவளை அணைக்க முற்பட, தன்னிச்சையாக அவனிடம் இருந்து விலகி ஓடினாள் ஹாசினி. அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்க, நடந்த நிகழ்வினால் பசி அடங்கியிருந்தது ஹாசினிக்கு. 

 

“என்ன ஹாசினி முகத்துல அப்படி ஒரு பிரகாசம்? உன்னைய பார்த்த அதிர்ச்சில உன் வீட்டுக்காரர், கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துட்டாரா?” 

 

“அது எப்படி உனக்கு தெரியும்?”

 

“அப்போ உண்மையிலேயே அதான் நடந்துச்சா?” என்று சிந்துவும் ஹாசினியும் கிசுகிசுப்பான குரலில் பேசிக் கொண்டிருக்க, அவர்கள் இருவரையும் பார்த்த அசோக் மற்றும் பரிதிமதி, 

 

“என்னாச்சு? ரெண்டு பேரும் கிசுகிசுப்பா பேசிட்டு இருக்கீங்க? சொன்னா நாங்களும் கேட்போம்ல?” என்று கேட்க, ஹாசினியை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்த சிந்து, 

 

“அசோக்.. பரிதி.. இதுக்கு மேல மறைக்க முடியாது.. ஹாசிக்கு மேரேஜாகிடுச்சு..” என்று உண்மையை அவர்களிடம் போட்டு உடைக்க, இருவரும் அதிர்ந்து போய் பார்த்தனர். அசோக்கின் மனதில் வானுயர கட்டி வைத்திருந்த காதல் கோட்டை சட்டென ஒரு நிமிடத்தில் தரைமட்டமானது. கண்களில் இருந்து நீர் இப்பொழுது விழுகவா? என்று நிற்க, தன்னை மறைத்துக் கொள்ள எண்ணியவன், சட்டென அங்கிருந்து எழுந்து செல்ல முயல,

 

“ஆனா, ரொம்ப நாளைக்கு பொண்டாட்டியா இருக்க மாட்டா.. பாவம்..” என்று சிந்து கூற, இப்போது மனக்குழப்பத்துடன் அவர்களை திரும்பிப் பார்த்தான் அசோக். 

 

“என்ன சொல்றியோ.. அதை விளங்க சொல்லவே மாட்டியா.. இப்படி இடியாப்பா சிக்கல் மாதிரி சொன்னா.. நாங்க என்னன்னு புரிஞ்சுக்குறது?” என்ற பரிதிமதியை பார்த்த ஹாசினி,

 

“யாரைக் கேட்டு என் விஷயத்தை போட்டு உடைச்ச? ஈவினிங் என்கூட தானே வருவ.. உனக்கு இருக்கு..” என்று வாயிற்குள் முணங்கியவாறே,

 

“ப்ச்.. இப்போ எதுக்கு அந்த கதையெல்லாம்? வேலையெல்லாம் தலைக்கு மேல இருக்கு..” என்ற ஹாசினி அங்கிருந்து எழுந்து செல்ல, அவள் பின்னோடு எழுந்து செல்ல முயன்ற சிந்துவை மடக்கியிருந்தனர் இருவரும். அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று உணர்ந்த சிந்து, நடந்த அத்தனையும் கூறி முடிக்க,

 

“அப்போ.. இந்த மேரேஜ்.. ஒரு ஃபேக் மேரேஜ்.. இன்னும் ஒரு வருஷத்துல ரெண்டு பேரும் பிரிஞ்சுடுவாங்க.. அப்படித்தானே?” என்ற பரிதிமதி, அசோக்கின் முகத்தை பார்க்க, அங்கே அவனது முகம் மீண்டும் ஒளிர்ந்திருந்தது. இதனை கவனித்த சிந்து,

 

“ஆனா..” என்று மேலும் ஏதோ கூறவென வாயெடுக்க,

 

“ஆனாவும் இல்ல.. ஆவன்னாவும் இல்ல.. ஹாசினியோட மனசுல இடம் பிடிக்க நிறைய சான்ஸ் இருக்கு.. அதை ஏன் அசோக் மிஸ் பண்ணணும்? அசோக்.. யு கேன் டூ இட்.. ஹாசினியோட மனசுல இடம் புடிச்சுட்டா, இந்த ஃபேக் மேரேஜ் முறிஞ்சதும், உங்க ரெண்டு பேருக்கும் ரியல் மேரேஜாகிடும்..” என்ற பரிதிமதி, அசோக்கை தன் கையோடு இழுத்துச் செல்ல,

 

“அடேய்.. இவ்வளோ ரிஸ்க் எடுத்து அவ ஏன் ஹரி சாரை கல்யாணம் பண்ணணும்னு யோசிக்க மாட்டீங்களா? முதல்ல அவ யாரை மேரேஜ் பண்ணிக்கிட்டான்னாவது தெரியுமா? ரெண்டு மாங்காவும் ஒன்னா சேர்ந்து போகுதுங்க.. என்ன பண்ண போகுதுங்களோ?” என்று பதிலளித்த சிந்துவின் குரல் காற்றில் கரைந்ததே ஒழிய அதனை கேட்க, அவ்விருவரும் அங்கில்லையே! சிந்து கூறவருவதை சிறிது காது கொடுத்து கேட்டிருந்தால், பின்னாளில் ஏற்படப் போகும் ஏமாற்றத்தில் இருந்து, அசோக் மீண்டிருப்பானோ? ஆனால் விதி வலியதாயிற்றே! 

6 thoughts on “என் மோகத் தீயே குளிராதே 14&15”

  1. Amazing epiii…. Waiting for nxt epiii quickly upload…. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top