ATM Tamil Romantic Novels

மையல் கொண்டேன் மாதீரா 2

மாதீரா 2

 

 

“தஷா… அடியே தஷா.. சீக்கிரம் கிளம்பு டி. நாழியாகிறதோனோ?” என்ற சந்திரமதியின் புலம்பலில் தலைவாரிக் கொண்டிருந்தவள் “இதோ மா!!””என்று குரல் கொடுத்தாள், குரலே அவ்வளவு மென்மையாக வந்தது.

 

“கோதை கோதை… அடியே.. உங்க அக்கா கிளம்பிட்டா. நீ இன்னும் அந்த பாத்ரூமை கட்டிண்டு அழு!! குளிக்க போனா ஒன்றரை மணி நேரம் ஆறது நோக்கு. அப்படி அதுக்குள்ள என்னதான் செய்வியோ? சீக்கிரம் வந்து தொலையடி!” என்று சின்ன மகளிடம் கடிந்து விட்டு அடுத்து அவரின் வீட்டுக்காரர் சந்திரசேகரிடம் சென்றார்.

 

“அப்படி என்னதான் அந்த நியூஸ் பேப்பரில் வைச்சி‌ருப்பேளோ நேக்கு தெரியல… உத்து உத்து அதையே ஒரு மணிநேரம் பார்த்துகிட்டே இருக்கேள். சீக்கிரம் கிளம்புங்க னா” என்று அவர் குடித்து வைத்திருந்த காஃபி டபராவை எடுத்து கொண்டு அடுத்து சமையலறைக்கு விஜயம் செய்தார்.

காலில் சக்கரம் கட்டாத குறைதான் காலையில் சந்திரமதிக்கு!!

 

“ஒழுங்கா கும்பகோணத்தில் குப்பையை கொட்டிண்டு இருந்தேன். அங்கிருந்து தஞ்சாவூர் திருச்சி கரூர்னு கடைசியா இந்த திருநெல்வேலியில் வந்து உட்கார வைச்சுட்டார் இந்த மனுஷன்!! இந்த ஊரும்.. இந்த ஊர் ஆட்களையும் பார்த்தாலே பயந்து பயந்து வர்றது நேக்கு. இதுல வயசு பொண்ணுங்க ரெண்டு பேரையும் வச்சுண்டு எப்படித்தான் காலம் தள்ள போறேனோ… பெருமாளே!! ஏன்னா டிரான்ஸ்ஃபர் நீங்களா கேட்குறேளா.. இல்ல அவாளா தரளா? எதுக்கும் இந்த முறையை அவா மறந்தா கூட.. நீங்களாவே கேட்டு வாங்கிடுங்கோ னா!! ரொம்ப நாள் இந்த ஊர்ல என்னால குப்பை கொட்ட முடியாது” என்று காலை உணவை கல்லூரியில் படிக்க செல்லும் இளைய மகளுக்கும் கல்லூரிக்கு பாடம் எடுக்க செல்லும் மூத்த மகளுக்கும் கட்டி வைத்தார்.

 

சந்திரசேகரன் போக்குவரத்து துறையில் மேலதிகாரியாக இருக்கிறார். அவர் பல இடங்களில் நேர்மையாக இருந்ததற்கான பரிசுதான் இந்த ட்ரான்ஸ்ஃபர்!! நேர்மையாக இருப்பவர்கள் ஊமையாக இருந்தால் பெரிதாக பாதிக்கப்படுவதில்லை. ஆனால் அவர்கள் கொஞ்சம் வீர் கொண்டு.. எதையும் கண்டு.. ஒதுங்கிப் போக முடியாது என வாயைக் கொடுத்தால் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான்!! டிரான்ஸ்ஃபரை..

 

ம்ம்ம்.. பொறுத்து பார்ப்போம் சந்திரசேகரன் நெல்லையில் நிலைத்து நிற்பாரா என்று??!! சந்தேகம் தான்!! ஈசாவை சந்திக்கும் வரையில் வேலைக்கு உத்திரவாதம் உண்டு!!

 

பாளையங்கோட்டை கல்வி நிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்று அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பாளையங்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்வி நிலையங்களில் ஒன்று ‘அகத்தியா!!’.

காலங்காலமாக திருநெல்வேலியின் பாரம்பரிய குடும்பத்தால் நடத்தப்பட்டு வரும் கல்விக் குழுமம். தற்போதைய அதனுடைய நிர்வாகி ஆத்மநாதன். கூடவே நெல்லையின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் அவரே!!

எம்எல்ஏ ஆத்மநாதன் அண்ணாச்சி!!

 

யோகா நேச்சுரோபதி முடித்துவிட்டு அகத்தியா கல்வி குழுமத்தில் ஆசிரியையாக பணியில் சேர்ந்து இருக்கிறாள் தஷா!! சாதாரணமாக பள்ளிக்கூடங்களில் யோகாவுக்கு என்று தனி ஆசிரியர்கள் தற்போதெல்லாம் நியமிக்கப்பட்டு வரும் நிலையில்… பல்லாண்டு காலமாக இருக்கும் அகத்தியா கல்வி குழுமத்தில் இதற்கென்று ஒரு தனி ஆசிரியர் குழுவே இருக்கிறது!! அதில் இளம் ஆசிரியராக துடிப்போடு வேலை ஆர்வத்தோடு வலம் வருகிறாள் தஷா!!

 

பாடம் கற்பதை விட கற்பிப்பதில் ஏக பிரியம் தஷாவுக்கு. கூடவே இசை துறையிலும் வல்லுநி வேறு. ஆக மொத்தம் பிடித்தமான வேலையில் கடந்த இரண்டு மாதங்களாக சந்தோஷத்தோடு பணிபுரிந்து வருகிறாள்.

 

“தாட்ஷாயிணி…!!!” என்று முழு பெயரை அழுத்தம் திருத்தமாக சந்திரசேகரன் உச்சரிக்கையில் கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கும் தஷாவுக்கு. எல்லா பிரிவும் சம்மதமே அதனால் மூத்த மகளுக்கு தாட்ஷாயிணி என்று உலகாளும் உமையின் பெயரையும், சின்ன மகளுக்கு கோதைநாயகி என்று அந்த கோதை நாச்சியாரின் நினைவாக பெயர் வைத்துள்ளார்.

 

“என்னப்பா… சொல்லுங்கோ!!” என்று அவள் வந்து நின்ற விதமே பெண்ணுக்கு தான் கூப்பிடுவது பிடிக்கவில்லை என்று அறிந்திருந்தாலும் சந்திரசேகர் இந்நாள் வரை அதை மாற்றவே இல்லை. 

 

தஷா அலைஸ் தாட்ஷாயணி..

சந்தனத்தில் மஞ்சளை குலைத்த நிறம் மினுக்க.. காண்டீபம் என இரு புருவங்களும் வளைந்து காஜலில் இன்னும் பொலிவுடன் இருக்க.. கயல் விழிகள் நீண்டு ஐலைனர் உதவியுடன் பார்ப்பவரை தூண்டிலிட்டு இழுக்க.. சற்று தட்டையான மொழு மொழு வென்ற மூக்கு உரசி பார்க்க தூண்ட… மெல்லிய செங்காந்தள் இதழ்கள் லிப் கிளாஸில் மின்ன.. அதன் மேல் உள்ள மச்சம் அம்மஞ்சள் வண்ண தேகத்தில் எடுப்பாய் தோன்றி நம்மை வீழ்த்த.. காண்பவரை கட்டி போடும் அழகில்லை அவள்!! கண்களை அவளை விட்டு திருப்ப முடியா அழகி!! பேரழகி!! அதிலும் பேச்சு கூட அதிர்ந்து வராது. அவ்வளவு மென்மையானவள். அவள் ப்ளஸ் டூவில் எடுத்த மதிப்பெண்ணுக்கு மருத்துவத்தில் அழைப்பு வர.. இரத்தம் காயம் என்று இதற்கு பயந்தே அவள் நேச்சுரோபதி எடுத்து படித்தாள்.

 

சின்னவள் கோதைநாயகியும் தஷாவுக்கு சளைத்தவள் அல்ல அழகில்.. குறும்பில்.. குணத்தில்!!

 

“எவ்வளவு அழகான பெயர் தாட்ஷாயணி!! அதை சுருக்கி தஷா.. மஷானு.. ச்ச்ச கேட்க நன்னாவா இருக்கு??” என்று சடைத்துக் கொள்வார் தந்தை.

 

“எக்கேடோ போங்க.. அப்பாவும் பொண்ணுங்களும்!! இடையில நா வந்து சப்போர்ட் பண்ணினா நேக்கு தான் ரிப்பீட் அடிப்பேள்! நேக்கு வேல இருக்கு போங்கடி!!” என்று விரட்டி விடுவார் பெண்களை உதவிக்கு கூப்பிட்டால் சந்திரமதி.

 

தந்தையை மாற்ற முடியாது என்று தெரிந்தாலும் பெண்கள் இருவரும் தங்கள் விருப்பிமின்மையை முகத்தில் காட்டவும் தவறுவதில்லை!!

 

மகளிடம் ஸ்கூட்டர் சாவியை கொடுக்க விழி விரித்து பார்த்தாள் தஷா அதை நம்ப முடியாமல்…

 

“நம்ம அப்பாவா இது? நேக்கு நம்ப முடியலையே.. அடியே கோதை.. சீக்கிரம் வந்து என்னை பிடிடி… பிடிடி… நேக்கு தள்ளாடுறது!!” என்று நடித்த மகளைச் செல்லமாக முறைத்தார் சந்திரசேகரன்.

 

சந்திரசேகரன் அப்படித்தான்!! பெண்கள் இருவரும் நன்றாக வண்டி ஓட்டுகிறார்கள் என்று தெரிந்த பின்பு முறையாக லைசென்ஸ் அப்ளை செய்து வந்தவுடன் தான் வண்டி ஓட்ட அனுமதிப்பார். வண்டியை தஷா வேலைக்கு சேரும் முன்னே வாங்கிவிட்டார் தான். ஆனால் வேலைக்கு செல்லும் போது ஓட்ட அனுமதிக்கவில்லை. அடிக்கடி லோக்கலில் அவளை ஓட்ட செய்து பார்த்து, பின்பு டிராபிக்கில் அவள் பின்னே அமர்ந்து அவள் ஓட்டும் விதத்தை அனுமானித்து, அவள் தவறு செய்யும்போது ஒரு அதிகாரியாய் கண்டித்து, எப்படி எப்படி செல்ல வேண்டும் என்று வழிமுறைகளை அவளுக்கு போதித்து… என்று பெரிய பாடமே எடுக்க, பாடம் எடுக்கும் இந்த லெக்சரர் ஜதி நொந்தே போய்விட்டாள். “நேக்கு வண்டியே வேணாம் பா!!” என்று கையெடுத்து கும்பிட்டு அவரிடம் அன்று கொடுத்தவள் தான் அதன்பிறகு கல்லூரி பேரூந்தில் தான் செல்வது.

 

இன்று அதிசயமாக அப்பா அவளிடம் சாவியை நீட்ட.. அவளால் நம்பவே முடியாமல் பேச.. அதற்குள் கோதை வந்து டக்கென்று வண்டி சாவியை எடுத்துக் கொள்ள…

 

“நோ கோதை!! நீ இன்னும் நேக்கு டெமோ ஓட்டி காட்டவில்லை. வண்டிய ஓட்டி காட்டு! அதன் பிறகு தான் தருவேன்” என்று கண்டிப்புடன் கூறினார்.

 

“அப்போ இந்த ஜென்மத்தில நான் வண்டியை ஓட்ட போறதில்லையா கோபால்?” என்று அப்பாவியாக கண்களை விரித்து கேட்டவளை கண்டதும் அனைவருக்கும் சிரிப்பு வந்தது.

 

பின் தந்தையை பார்த்து “வேறு வழியே இல்லையா ஆபீஸர்?” என்று வடிவேல் பாணியில் அவள் கேட்க…

 

“இல்லையே… ஆஃபிஸர்… இல்லையே!!” என்று சிவாஜி கணேசன் போல அவர் பதில் உரைக்க..  

 

“இருக்கு ஆஃபிஸர்…. நம்ம அப்பா அந்த ஆஃபிஸில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி போனா!!” என்று தஷா கூறி சிரிக்க…

 

“ட்ரான்ஸ்பருக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை தலைவரே… வாய்ப்பில்லை!!” என்று இரு மகள்களின் கன்னத்தையும் நிமிண்டி கூறினார் சந்திரசேகரன்.

 

“ஆஹான்… ஒரே ஒரு‌ கேஸ்ல மட்டும் நேர்மையாக இருங்க ஆபீஸர் அப்போ கிடைக்கும் பாருங்க ட்ரான்ஸ்ஃபர்!!” என்று தஷா கூற கோதை அவளுக்கு வைஃபை கொடுக்க…

 

“வாலுங்களா… ஸ்கூட்டி வேண்டாம்ல அப்போ??” என்றவுடன் “அச்சச்சோ!!! இதுவே ஆறு மாசம் கழிச்சு கையில கிடைச்சிருக்கு.. விடுவேனா அதை கொடுங்கோ இப்படி” என்று சாவியை பறித்து கொண்டு ஓடினாள் தஷா. பின் வால் பிடித்துச் சென்றாள் கோதை.

 

பெண் பிள்ளைகள் வாழும் வீடு உயிர்ப்புள்ள இடம்!! எப்போதும் கேட்கும் கொலுசுகளின் ஜல்ஜல் ஒலியும்… சதங்கையாய் ஒலிக்கும் சிரிப்பொலியும்… என்றுமே இனிமை தான்!!

 

கேலியும் சிரிப்புமாய் காலையிலேயே களைகட்டியது அவர்களது வீடு!!

சந்திரசேகர் கண்டிப்பானவர் தான். ஆனால் அந்த கண்டிப்பிலும் நியாயம் இருக்கும். சுதந்திரம் கொடுப்பவர் தான், ஆனால் அதிலும் ஒரு எல்லைக் கோடு இருக்கும். இக்காலத்துக்கு தகுந்த தந்தையைப் போலவே பிள்ளைகளோடு கிண்டல் கேலி என்று விளையாடினாலும் அதன் பின்னே மகள்களின் மீது முழு கவனம் இருக்கும். பெண்களின் நினைவில் சற்றே லயித்து இருந்தவர், ஒரு பெருமூச்சு விட்டபடி தானும் அலுவலகம் செல்ல கிளம்பினார். மகளதிகாரம் என்றும் அலாதி தான்!!

 

இப்படியாக தந்தையிடம் லோல்பட்டு லெக்சர் வாங்கி வாங்கிய ஸ்கூட்டியில் தாமிரபரணி ஆற்றைக் கடக்க அந்த பாலத்தில் அகத்தியா கல்விக் குழுமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள் தஷா!!

 

முதல்முறையாக இவ்வளவு தூரம் பயணம் செய்கிறாள் ஸ்கூட்டியில் அதுவும் தனியாக… பின்னே உட்கார்ந்து அப்படி போ.. இங்கே மெதுவாக போ.. சிக்னல் போட்டுட்டான் நிறுத்து… இண்டிக்கேட்டர் போடு… அங்கே ஒருத்தன் கிராஸ் பண்றான் பாரு நீ பிரேக் புடி… ஏன் எப்ப பார்த்தாலும் ப்ரேக்ல கை வைக்குற… என்று அட்வைஸ் கொடுத்துக் கொண்டே வரும் தந்தையின் தொணதொணப்பு இல்லாது தனித்து பயணம்!!

 

சந்தோஷ வானில் சிறகடித்து பறவையாய் பறந்து கொண்டிருந்தாள் தஷா!! அவளது உலகம் மிகவும் சிறியது. கனவுகளும் மிகவும் சொற்பமானவையே!! அன்னை தந்தை செல்ல தங்கை அதற்கு அடுத்து அவளுடைய வேலை அவ்வளவு தான்!! அதிலேயே ஒவ்வொரு விஷயத்திலும் சந்தோசமாக இருக்க கற்றுக் கொள்ளும் பெண்!! எதார்த்தவாதி.. பொறமைசாலி!! அதேசமயம் சீண்டினால் மட்டுமே சீறும் பெண் புலி தான்!! பொதுவில் சாது தான்!! தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் பெண். அதிர்ந்து பேச மாட்டாள். ஆனாலும் பேசும் இரு வரிகள் கூட திருக்குறளாய் இருக்கும் நச்சென்று!!

 

ஆனால் விதி சதி செய்ய காத்திருப்பது இந்த தஷாவுக்கு தெரியவில்லை!! 

 

இப்படி வீடே உலகம் என்று இருக்கும் பெண் ஒரு பக்கம்… ஊரையே வீடாக்கி கொண்டு திரியும் ஆண் ஒரு பக்கம்… இந்த இருவரையும் ஒருவரை ஒருவர் பார்க்க வைக்க இம்முறை க்யூப்பிட் இல்லைங்க… ஜார்ஜ் தான் வழிவகுத்தான்!!

 

ஆம் ஜார்ஜ் மூலமாக… ஈசாவின் வாழ்க்கைக்குள் நுழைய மேலே உள்ளவன் ப்ளான் செய்ய.. அதன் முதன் ஏற்பாடாக ஈசா வீசிய அருவாள் தஷாவின் புஜத்தை முத்தமிட்டு சென்றது. சற்று அழுத்தமாக!!

 

என்ன ஜியா வழக்கமாக உங்க ஹீரோஸ் தானே செய்வான்?

 

இது நெல்லையாக்கும் மக்கா… ஹீரோ அருவா கூட முத்தம் கொடுக்கும் ஹீரோயினியை!! நம்ம தாட்ஷாயிணியை!!

 

அருவாள் முத்தமிட்ட இடத்தில்…

அருவியாய் இரத்த ஓட..

அதற்குள் ஜார்ஜ் தப்பிக்க பார்க்க..‌

அவனை இழுத்து தலையை தன் அக்குளுக்குள் வைத்து புறங்கையால் கும்மு கும்முனு கும்மிய ஈசன்…  

அப்போது தான் ஸ்கூட்டரில் இருந்து மயங்கி விழுந்த தஷாவை கவனித்தான்.

 

“எவ இவ???” என்று சுற்றும் புறமும் பார்க்க.. வண்டிகள் அவ்வழியே ஒன்றுமே வரவில்லை. காரணம் ஈசாவின் விழுதுகள் வந்து விட்டிருந்தனர். அவர்கள் இப்பாலத்தின் வழியே யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை. இருபுறமும் மறைத்து நின்றிருந்தனர் கையில் அருவாளோடு!! பின்னே ஏன் எவனும் அந்த பக்கம் வர போகிறான்.

 

அவன் தஷாவை பார்க்க அவளோ அரைமயக்கத்தில் ஈசாவை தான் பார்த்தாள். கீழே கிடந்த பெண்ணுக்கு ஆஜானுபாகுவாக தன் அருகே ஒருத்தன் நிற்பது ஏதோ ராட்சசன் நிற்பது போலவே தோன்ற… இன்னும் கண்ணை சுழட்டி எடுத்தது அவளுக்கு. அதிலும் அவளைப் பார்த்துக்கொண்டே அக்குளுக்குள் தலையை மாட்டிருந்த அந்த ஜார்ஜின் முகத்தை ஓங்கி ஓங்கி தன் ஆத்திரம் தீர குத்தி உடைத்தான் ஈசா. அதில் இரத்தம் குபுக் குபக்கென்று வர.. அதில் சில துளிகள் அவள் மீதும் விழ… கோழி ரத்தத்தை பார்த்தாலே பயந்து விழும் பெண்… மனித இரத்தம், அதுவும் தன் மீது விழ…. அவ்வளோ தான் வீல் என்று சத்தத்தோடு மயங்கி சரிந்தாள்.

 

அவள் மயங்கியதை பார்த்திருந்தவன் மெல்ல ஜார்ஜை திரும்பி பார்க்க அவனோ குற்றுயிரும் கொலை உயிருமாக கிடந்தான். அவனை எட்டி ஒரு தள்ளு தள்ளிவிட்டு… அவள் கையை ஆராய அங்கே இரத்தம் வர “ரத்தத்தைப் பார்த்து பயந்து மயக்கம் போட்டுடுச்சு போல இந்த பீஸூ!! இதெல்லாம் யாரு இங்க காலங்காத்தால சம்பவம் நடக்கும் இடத்திற்கு வர சொன்னா?” என்று திட்டிக்கொண்டே தனது சட்டையை கழட்டி ரத்தம் வந்த இடத்தில் வைத்து வேகமாக கட்டியவன், சுற்றுமுற்றும் பார்க்க பாலத்தின் ஓரத்தில் இரண்டு பக்கமும் அவனது ஆட்கள் இருந்தனர். இவனோ பாலத்தின் நடுவே இருக்க வேறு வழியில்லாமல் அவளை அலேக்காக தூக்கி தன் தோள் மீது போட்டுக் கொண்டு நடந்தான்.

 

முதல் முறை பெண்ணின் ஸ்பரிசம்!! மென்மையிலும் மென்மையாக… அவனை ஏதோ செய்தது. 

நடக்கும் போது கேட்ட அவளது மெல்லிய கொலுசின் ஒலி..

பூவையள் சூடியிருந்த பூவின் மணம்…

அவள் மேனியில் இருந்த வந்த கஸ்தூரி மஞ்சளின் மணம் என்று அவனை ஏதோ ஒரு சுழலுக்குள் ஆழ்த்தியது!!

 

“என்ன வெயிட்டே இல்ல இந்த பொண்ணு.. இவ எல்லாம் சாப்பாடு சாப்பிடுறாளா இல்ல வெறும் காத்த சாப்பிட்டு உயிர் வாழுறாளா? கேட்டாக்க ஃபேஷன் சொல்லுவாளுங்க… எல்லாம் கல்யாணம் வரைக்கும் தான். அதுக்கப்புறம் திங்கறது மட்டும்தான் இவங்களோட முழுநேர வேலையாக இருக்கும்!!” என்று அந்த சூழலில் இருந்து விடுபட இவனாக ஏதேதோ கற்பனை செய்துகொண்டே அப்பாலத்தில் நடந்து வந்தான்.

 

அப்போது அவள் ஏதோ உளறி கீழே விழ போக… இறுக்கி பிடித்தான் இல்லையென்ற சிற்றிடையை!!

 

பெண்ணவளின் மெல்லிடையில் அவனது முரட்டுக் கரம் பதிந்திருக்க.. அது வெல்வெட்டு போல வழுவழுக்க.. எங்கே மீண்டும் விழுந்து விடுவாளோ என்று சற்று அழுத்தி பிடித்துக் கொண்டான்.

 

அந்த பிடி இனி இந்த ஜென்மத்திற்கு விடப் போவதில்லை அன்று‌ அக்கணம் அவனுக்குமே தெரியாது!!

 

அன்று நெல்லை ட்ரண்டே வெற்று உடம்போடு ஈசன் ஒரு பொண்ணை தூக்கிச் சென்றது தான்!!

 

அதைப் பார்த்த சந்திரமதியோ பொருமாளே!! என்று மயங்கி விழுந்தார்.

1 thought on “மையல் கொண்டேன் மாதீரா 2”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top