ATM Tamil Romantic Novels

மையல் கொண்டேன் மாதீரா 4

மாதீரா 4

 

 

மெல்ல ராசு வீட்டுக்குள் எட்டிப் பார்த்தான் ஈசா என்ன செய்கிறான் என்று!! அவனோ அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கையில் அமர்ந்திருந்தான்.

 

ஆனால் ராசுக்குத்தான் அமைதி ஆவியாகி போயிருந்தது காரணம், குறுக்கே வந்து வெட்டுப்பட்ட தஷாவை தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு அதுவும் வெற்று உடம்போடு அவன் நடந்து வருவதை, எவனோ எங்கிருந்தோ போட்டோ எடுத்து வைரல் ஆகி இருக்க.. திருநெல்வேலியே‌ ட்ரெண்ட் ஆனது அந்த போட்டோ!!

 

இவனுக்கே பலபேர் அந்த போட்டோவை போட்டு பல மீம்ஸாய் அனுப்பியிருந்தனர். அனைத்தையும் பார்த்து ஒதுக்கித் தள்ளிவிட்டு யோசனையோடு அமர்ந்திருந்தான்.

கூடவே அத்தனை போன் கால் வந்திருந்தது… ஈசனின் அம்மாவிடமிருந்து, ஈசனின் அப்பாவின் வலதுகை ராவுத்தர் இடம் இருந்தும்.

 

எந்த போனையும் அவன் அட்டென்ட் செய்யவில்லை. ஈசனுக்கு தெரியாமல் அவ்வப்போது அவன் நலத்தை அவன் அம்மாவுக்கு தெரிவிப்பான். மற்றபடி ராவுத்தர் எல்லாம் இவனுக்கு போன் செய்து கேட்பது இல்லை. ஈசனைப் பற்றி அனைத்து விவரங்களும் அவர்களுக்கு சென்று விடும். ஆனால் “இன்று ஏன் அழைத்திருக்கிறார்? எதா இருந்தாலும் அண்ணேன்ட்ட சொல்லிடுதிவோம்!!” என்று அவன் தயங்கி தயங்கி மெல்ல எட்டி பார்க்க குளித்து வந்து, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாய் எதிரில் படுத்திருந்தவளை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஈசா.

 

“அண்ணே…” என்றவனிடம், “சாப்பாடு தானே? ரெடியா அதுக்குள்ள? எடுத்துட்டு வாம்ல” என்றான்.

 

“அதில்ல ணே…” என்றவன் மறுபடி ஆரம்பிக்கும் முன்..

 

“ஏம்ல.. இன்னும் ரெடி பண்ணலையா? பரவால்ல நம்ம பாண்டி மெஸ்ஸூல போய் வாங்கிட்டு வாலே” என்றான். ராசுவுக்கும் தெரியும், பசி வந்தால் இவன் மனுஷனாக இருக்க மாட்டான் என்று!!

 

ஏற்கனவே கோபம் வந்தால் அரக்கன் இதில் பசியும் சேர்ந்து கொண்டால் அவ்வளவுதான்!!! என்று பயந்தவன் சாப்பிட்டதும் சொல்லுவோம் என்று உணவு வாங்கச் செல்ல திரும்பினான்.

 

“ஏலே ராசு நில்லுவே.. உடம்பு நல்லா இருக்கனும்னா சத்தான ஆகாரமா என்னடே சாப்பிடுறது?” என்று கேட்க…

 

இவனுங்கள் எல்லாம் உயிருள்ள பூச்சிகளை மட்டுமே விட்டுவைத்து மற்றதை திங்கும் ரகம்!! இவனிடம் வந்து கேட்டால்? என்ன சொல்வான்? போட்டான் பாரு பட்டியலை ராசு!!

 

“அண்ணே… மீனில் ஒமேகா இருக்காம்!!”

 

“அது யாருடே ஓமேகா.. புதுசா இருக்கா? புது நடிகையோ?” என்றான் ஈசா.

 

“அது மீனுல இருக்கும் சத்து ணே.. இந்த நியூட்ரிஷியன் டாக்டர் எல்லாம் சொல்லுவாஇ இல்ல.. அது!!”

 

“அந்த கருமமா? நமக்கெல்லாம் எங்கடே நேரம் இருக்கு அந்த கருமத்தை எல்லாம் படிக்க!!” என்றவாறு இடது கையால் பிடரியை நீவி கொண்டான்.

 

“கோழியில பிராய்லர் கோழி ஆகவே ஆகாது ணே!! நாட்டுக்கோழி தேன் நல்லது அதுவும் சூடான உடம்பை குளிர்ச்சியாக்கும்!!”

 

“சரி அடுத்து…”

 

“அடுத்து தேன் ரொம்ப முக்கியம் ணே… நல்ல இளசான குறும்பாடு. அதோட தலையை கறி மூளை நம்ம தலைக்கு நல்லது ணே!!” என்றான் ராசு.

 

“யாரு… நம்ம தல அஜித்துக்கா?” என்றான் நக்கலாக ஈசன்.

 

“அய்யய்யோ… சாப்பிடுறவங்க தலைக்கு ணே!!” என்றான் அவசரமாக..

 

“அதோடு ணே.. ஈரல் நம்ம ஈரலுக்கு நல்லது. ரத்த பொரியல் செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்தம் விருத்தியாகும். நல்லி எல்லாம் போட்டு சூப் வைச்சுக் குடித்தால் நம்ம எலும்புகளுக்கு நல்ல வலு சேர்க்கும்” என்று பாண்டி விலாஸ் கடையில் வேலைக்கு சேர்ந்தவன் போலவே அனைத்தையும் இவன் கடகடவென்று சொல்லிக்கொண்டே போனான். எங்கே கேப் விட்டால் இடையில் ஏதாவது பேசி விடுவானோ என்று பயந்து..

 

“சரி டே.. அப்ப என்ன செய்ற இந்த பொண்ணுக்கு ரத்தம் நிறைய போய் இருக்கு. அதனால ரத்த பொரியல் கை வேற அடிபட்டு இருக்கு கொஞ்சம் கறியில மிளகு தூக்கலா போட்டு சுக்கா வாங்கிக்க.. அப்புறம்தான் மீனுல பொரிச்சது குழம்பில் போட்டுதுனு தனியா… இந்த நாட்டுக்கோழி இருக்குல்ல அதுல சூப்பும் அதுல க்ரேவியும்…” என்று அவனும் ஒரு பெரிய லிஸ்ட் சொல்லி, “இது எல்லாம் அரை மணிநேரத்திலேயே வாங்கிட்டு வர! சரியா லே?” என்றான்.

 

“சரிதான் ணே.. ஆனா இதெல்லாம்..” என்று கேட்க..

 

“போய் வாங்கிட்டு வாடே..” அவன் மிரட்டவும் ஓடிய விட்டான் ராசு.

 

மெல்ல கண் விழித்தாள் தஷா. உடம்பெல்லாம் ஏதோ ராட்சசன் அடித்துப் போட்டது மாதிரி வலி… மெல்ல கையை உயர்த்தி சோம்பல் எடுக்க முயற்சி செய்தாள். வலது கையைத் தூக்க பெரும் கணமாய் கனத்தது. அதோடு கூடிய சுருக்கென்று வழி வேறு.. என்ன ஆனது கைக்கு? என்று மெதுவாக கையை தூக்கி பார்க்க பெரும் கட்டு போடப்பட்டிருந்தது. அப்போதுதான் காலையில் நடந்த நிகழ்வுகள் ஒன்றொன்றாய் அவள் மனதில் படமாய் ஓட.. ‘இப்ப நாம எங்க இருக்கோம்?’ என்று வழக்கமாக மயக்கத்தில் இருந்தவர்கள் எழும் போது கேட்கும் அதே கேள்வியை கேட்டவாறு பார்த்தவள், அதிர்ந்து வலது கையை ஊன்ற முடியாமல் தன் இடது கையால் ஊன்றி எழுந்து அமர்ந்தே விட்டாள்.

 

முதலில் தன் உடைகளை பார்க்க அப்பாடி என்று பெரும் நிம்மதி!! அவள் இருந்த இடத்தை பார்க்க… அவளுக்கு பிடிக்காத ஒவ்வாத வாசனை அவளது அகராதியில் துர்நாற்றம் வீச.. மெல்ல இடது ஆள்காட்டி விரலால் மூக்கைத் தேய்த்து கொண்டே பார்க்க.. அவள் படுத்து இருந்த திவான் முன்னே இருந்த டேபிளில் பறப்பன ஊர்வன அனைத்தும் கடை பரப்பி வைக்கப்பட்டிருந்தது.

 

அவையெல்லாம் உயிரோடு இருக்கும்போது மட்டுமே இவள் பார்த்திருக்கிறாள். மற்றபடி இப்படி ஆவியை விட்டு ஆவியாகி கொதித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் பார்த்ததே கிடையாது. எங்கேனும் வழியில் பார்த்தால் கூட மூக்கையும் கண்ணையும் மூடிக்கொள்ளும் பெண்ணின் முன் தலை வாழை இலை பெரிதாக வைத்து வரிசையாக அனைத்தையும் சீர்வரிசை போல அடுக்கி வைத்து இருக்க… அவ்வளவுதான் அரண்டு போய் விட்டாள் இன்னும் அழுத்தமாக மூக்கை பிடித்துக் கொண்டு..

 

இது கூட சிறு அதிர்ச்சி தான் பெண்ணுக்கு!! ஆனால் அதைவிட

பெரிய அதிர்ச்சி எதிரே அமர்ந்து இருந்தது.

 

“சாப்பிடு புள்ள போன ரத்தமெல்லாம் உடம்புல ஊறனும் இல்ல.. புடிச்சது கூச்சப்படாம அள்ளி எடுத்து விளாசுல!!” என்று அந்த தலை வாழை இலையின் அடுத்த பக்கம் அமர்ந்து சிரிப்போடு பேசியவனை கண்டவனுக்கு மாயாபஜார் கடோத்கஜன் அமர்ந்து சாப்பிடுவது ஞாபகம் வர மீண்டும் மயங்கினாள்.

 

அருகில் இருந்த ஜக்கில் இருந்து தண்ணீர் எடுத்து அவன் முகத்தில் தெளித்தான். “இன்னிக்கு வரது எல்லாம் மயக்கம் போட்டு என் உயிர வாங்குதுக.. தாமிரபரணி ஆத்து தண்ணீரே தீர்ந்து போயிடும் போல!” என்று ஆத்திரத்தோடு புலம்பினான்.

 

கண்ணை மூடிக்கொண்டு எழும் கோபத்தை அடக்கி மீண்டும் அவளை எழுப்ப வேண்டி குனிந்த தருணம் ராசு வந்து நிற்க…

 

“என்னடே…??” என்று மொத்த கோபத்தையும் அவன் மீது காட்டினான்.

 

“அண்ணே… அது வந்து அம்மா” என்று இழுக்க, அவனை உருத்து முறைத்தான். ஏன் அம்மாவுக்கும் சொன்னாய் என்று கேள்வி அதில்..

 

“இல்லண்ணே!!! நான் எதுவும் சொல்லல அம்மாதேன் கேட்டாக.. சாமி சத்தியமா ணே!” என்ற தன் தலையில் கைவைத்து கூறியவன் “அம்மாவா தான் போன் பண்ணாங்க நான் எடுத்து பேச கூட இல்ல. கூடவே இராவுத்தர் ஐயாவும்…” என்கவும் ஈசா என்று தன் இடது கையால் பிடரியை தேய்த்துக் கொண்டான்.

 

‘அவங்களுக்கு எப்படி அதுக்குள்ள நியூஸ் போச்சு?’ என்று யோசிக்கும் முன் “எவனோ உங்கள போட்டோ எடுத்து டிரெண்ட் ஆகி இருக்கான் அண்ணே” என்று அந்த போட்டோவையும் அதோடு வந்த மீம்ஸையும் ராசு காட்ட இன்னும் வெறி ஏறியது அவனுக்கு.

 

“இதுவரைக்கும் இது வைரலானது போதும்ல. இனி ஒரு மீம்ஸ் ஒரு கூட இந்த போட்டோ வச்சு வரக்கூடாது. புரிஞ்சுதாம்ல!!” என்று கரஜித்தவன் வெளியே செல்ல திரும்ப, திரும்பி வந்து தசாவை பார்த்தான். ஏற்கனவே அந்த பெண் மருத்துவர் இவளை மருத்துவமனையில் சேர்த்து தையல் போட சொல்லி இருக்க, திரும்பவும் அவளை அள்ளியவன் “கார்…!!” என்று அழுத்தமான வார்த்தைகளில் ஓடிச்சென்று காரை எடுத்தான் ராசு.

 

பின்பக்கம் தசாவை கிடத்தி அவன் ராசுவை ஒருமுறை முறைக்கு “அண்ணே… நானும் ப்ளீஸ்..” என்றவனை கண்டுகொள்ளாமல் இவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொள்ள வண்டி வேகம் எடுத்தது, மறுபக்கம் ஓடிவந்து ஓடும் காரில் தொற்றிக் கொண்டான் ராசு.

 

ஒரு பிரபல மருத்துவமனையில் நிறுத்தியவன் அங்குள்ள ஆட்களை கொண்டே ஸ்ட்ரக்சரின் உதவியோடு அனுமதித்தான. பின் ராசுவிடம் “இந்த பொண்ணு விழித்தவுடன் டீடைல்ஸ் கேட்டு அவங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணு” என்றவனின் பேச்சும் தோரணையும் இப்பொழுது முழுதாக மாறி இருந்தது.

 

அவனை ஈரத்த பெண் தான்!! கொஞ்சமாகச் சலனப்படுத்திய பெண் தான்!! ஆனாலும் அவனுள் ஏதோ ஒரு தயக்கம்.. இப்போது உள்ள சூழ்நிலையா இல்லை அந்தப் பெண்ணின் வாழ்வு முறையா? ஏதோ ஒன்று இனம்புரியாத தவிப்பு அதனை தவிர்க்க அவளை தவிர்த்தான்.

 

அடுத்து நேராக கார் சென்றது அவர்களது வீட்டுக்கு.. இல்லை இல்லை இப்போது அவனது பெற்றோர்களின் வீடு!!

 

திருநெல்வேலி எம்எல்ஏ ஆத்மநாதனின் வீடு!!

 

வீடு என்பதை விட மாளிகை என்று சொன்னால் பொருந்தும். இரண்டு அடுக்கும் மேலே பெரும் மொட்டை மாடியுமாய் அக்கால கட்டக்கலைக்கு சான்றாய்.. இக்கால லக்ஷரி சௌகரியங்கள் அனைத்தையும் தனதாய் கொண்டு கம்பீரமாய் நின்றது அம்மாளிகை!!

 

பொதுவாக அவ்வீட்டை ‘நெல்லையார் கொட்டாரம்’ என்பர். 

நெல்லையார் என்ற அடைமொழி ஆத்மநாதனை கொண்டு அல்ல.. அவரது மாமனார் சிவஞான ஆதித்தனாரை கொண்டு!!

 

அந்த நெல்லையார் பட்டத்தைப் பெற தலையால் தண்ணிதான் குடிக்கிறார் ஆத்மநாதன். எங்கே… ம்ஹூம்!! ஆனாலும் நெல்லைக்காரர்களின் பாசம் தனிதான். ஆசையோடு அன்போடு ‘அண்ணாச்சி!’ என்ற அவர்களின் விளிப்பே தனிதான்!!

 

கதர் வேட்டி சட்டைகளும்.. கரை வேட்டி சட்டைகளும்.. ஜீன்ஸ் பேண்ட்களுமாய் ஆண்களின் கூட்டம் ஒருபக்கம் என்றால்.. அதற்கு இணையாக இல்லை என்றாலும் குறைந்தபட்சமாக பெண்களின் கூட்டம் ஒரு பக்கம்!! இன்று ஆத்மநாதன் எம்எல்ஏ அவர்கள் குடிசை மாற்று வாரியத்திற்காக கட்டப்பட்ட வீடுகளை திறப்பதற்காக செல்கிறார். அதற்குத்தான் தங்கள் அண்ணாச்சியை பத்திரமாக அழைத்துச் செல்ல காலையிலேயே அவரின் பக்தர்கள் கூட்டமும் காசு கொடுத்து வந்த நேசர்களின் கூட்டமும் அவரது வீட்டு மாளிகையை முற்றுகையிட்டு காத்துக்கொண்டிருந்தது. 

 

உள்ளே நுழையும் போதே வாசலுக்கு வந்து எதிர் கொண்டார் அவனது அன்னை உமையாள்!! மகனைப் பற்றி அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தாலும் கண்கள் நிறைய பார்த்தால் அல்லவா பெற்றோர் மனது நிறையும்?

 

பல வாரங்கள் சென்று மகனின் வருகை!! அதுவும் வீட்டுக்குள்ளே பரவசத்தில் அன்னை!!

 

“ஈசா..!!” என்று அழைத்துக் கொண்டு அவனை அனைத்து கண்ணீர்விட…

 

“ம்ப்ச்.. சும்மா இந்த மாதிரி கண்ணல டேம் தொறந்து விடாதீக.. தாமிரபரணி ஆத்திலே தண்ணி கொஞ்சமாத்தான் இருக்காம். அப்புறம் உங்கள கொண்டு போய் உட்கார வச்சுட்டு போறானுவ.. உங்க நம்ம ஊரு அரசியல்வாதிங்க செம வில்லங்கம் புடிச்சவியங்க” என்று அவன் இரு பொருளில் கூற அவனது புஜத்தில் குத்தினார் அன்னை விளையாட்டாக…

 

“இரு இரு உங்க அப்பா வரட்டும் சொல்றேன்!!” என்று!!

 

அந்த அப்பா என்ற வார்த்தையில் அவனது முகம் சுருங்க, “பழசெல்லாம் நினைக்காதே கண்ணு… அம்மாவுக்கு கஷ்டமாக இருக்குல” என்றார் கலங்கிய குரலில் அன்னை.

 

“சரி.. சரி.. ஒன்னும் பேசல வாங்க” என்று அன்னையை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவனை நேராக டைனிங் டேபிளில் தான் அமர்த்தினார் உமையாள். அது மகன் வருகிறான் என்று தெரிந்தவுடன் அவனுக்கு பிடித்த உணவுகளை பரிமாற ரசித்து சுவைத்து உண்டவன் “என்னதான் சொல்லு உமையா… உன் கை பக்குவத்துக்கு தனி ருசிதாம்ல” என்று அன்னையின் வலது கையைப் பிடித்து முத்தம் கொடுத்தவன் “வைர காப்பே போடலாம்” என்று மீண்டும் உணவை உள்ளே தள்ளினான்.

 

“என்ன அந்த குண்டன் மட்டும் தனியா உன்னோட சாப்பாடு திங்குறானு கொஞ்சம் பொறாமையா இருக்குலே” என்றான் அண்ணனை பற்றி…

 

“புள்ளைய கண்ணு வைக்காதடா” என்று பெரிய மகனுக்கு சப்போர்ட் வாங்கினார்.

 

“அது சரி!!” என்றவன் மீண்டும் ஆட்டுகாலுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தான்.

 

“அப்பப்போ வந்து அம்மாவை பார்த்து விட்டு போனா என்ன தங்கம்? அம்மா தனியா தானே இருக்கேன். இப்படி ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தீகனா நான் என்ன பண்றது சொல்லு லே? உங்க அப்பாரும் கட்சி ஆபீஸினு இப்படியே சுத்துற ஆளு.. நீங்களும் ஆளுக்கு ஒரு பக்கமா போயிட்டீக.. அம்மாவ நினைச்சு பார்க்க மாட்டீங்களா?” என்று அவன் அருகே அமர்ந்து தாடையை பற்றி தன் பக்கம் மகனை திருப்பி கெஞ்சலாக கேட்ட அன்னையை பார்த்ததும் மனமுருகி போனது மகனுக்கு. ஆனால் அதை வெளியே காட்டிக் கொண்டால் அவன் ஈசாவே இல்லையே?

 

அவனும் வேண்டுமென்றா அன்னையை தவிக்க விட்டு சென்றான். அவன் தந்தை கூறிய வார்த்தைகளின் அப்படி!! அதன் தாக்கம் இன்னமும் அவன் மனதை நெருடுகிறது. வலிக்கிறது!! இப்போதுகூட தந்தையை ஒருத்தன் தவறாக பேசினான் என்றுதான் அடி வெளுத்து விட்டு வந்திருந்தான். 

 

“ஆமா… அது என்ன தனியானு சொல்றீக? அதேன உங்க மூத்த புள்ள குண்டன் இருப்பானே?” என்று மீண்டும் அண்ணனை வம்பு வழக்க…

 

“அவங்க எங்க இருக்கான் இங்க.. அவன் ட்ரெய்னிங் போயிருக்கான்ம்ல” என்றார் மூக்கை உறிஞ்சியபடி..

 

“என்ன ட்ரைனிங்?” என்று கைகளை கழுவி வந்தவன் அன்னையின் முந்தானையை துடைத்தபடியே கேட்டான்.

 

“ஏதோ எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணினான். அதுக்கு ட்ரெய்னிங் கூப்பிட்டு இருக்காங்கன்னு டெல்லிக்கு போய் இருக்கான். போய் 15 நாளாவது!!” என்றார் பெருமூச்சு விட்டபடி…

 

“என்ன அதிசயம்?? பெரிய பிள்ளைய கைக்குள்ளேயே வைத்திருப்பாரே எம்எல்ஏ!! இப்ப எப்படி திடீர்னு விட்டாரு?” என்று சந்தேகத்தோடு கேட்க..

 

“அவர் எங்கு விட்டார்!! இவன்தான் அடிச்சு புடிச்சு ஏதேதோ சொல்லி போனோன்” என்றார்.

 

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டே இருக்கும்போது வாயிலில் மீண்டும் சலசலவென்று சத்தம் கேட்க “எம்எல்ஏ வந்துட்டார்!!” என்றான் நக்கலாக… “சும்மா இருடே!!” என்று மகன் அன்னை இருவரும் டைனிங் ஹாலில் இருந்து ஹாலுக்கு வந்தனர்.

 

உள்ளே நுழைந்தவர் கட்சி ஆட்களுடன் ஏதோ பேசிவிட்டு அடுத்த கட்டு ஹாலுக்கு வந்தார். ஹாலுக்குள் எந்த கட்சிக்காரர்களும் அவ்வளவு எளிதாக வரமாட்டார்கள். அதற்கு வெளியே உள்ள தாழ்வாரம் மிகப்பெரிதாக இருக்கும். அங்கேயே பெரும்பாலும் இருந்து விடுவார்கள். முக்கியமான வெகு சிலரே ஏதும் பேச வேண்டுமென்றால் அவரது அலுவலக அறைக்கு தான் செல்வார்கள். ராவுத்தர் மட்டுமே வீட்டுக்குள் வர அனுமதி.

 

வீட்டுக்குள் வந்தவர் இரண்டாவது மகனை கண்களா ஸ்கேன் செய்தபடியே நேராக டைனிங் ஹாலுக்கு சென்றார். “எம்எல்ஏ சாப்பிட வந்திருக்கிறாரு உமையா.. அதிசயமா வீட்டுக்கு?” என்று இவன் அன்னையின் காதில் கிசுகிசுத்தான்.

 

உமையாளுக்கும் பரிமாற அதே ஆச்சரியம் தான் அவரது முகத்திலும்..

 

“எப்படியும் உன் புள்ள வந்திருப்பான். அவனுக்கு பிடிச்சு தான் ஸ்பெஷலா செஞ்சப்ப.. அப்படியே நெல்லுக்கு பாய்கிறது புல்லுக்கும் பாயட்டுமே தான் சாப்பிட வந்தேன்” என்றார் சிரிப்போடு..

 

“ஏன் உங்களுக்குனு ஸ்பெஷலா எதுவும் செய்ததில்லையா?” என்று மனைவி கோபித்துக் கொள்ள..

 

“என்ன இருந்தாலும் மகன்னா ஸ்பெஷல் தானே.. புருசனை விட!!” என்றவாறு சாப்பாட்டை முடித்தார்.

 

“ஆமா.. உன் புள்ள காலைலேயே பண்ணி வச்சிருக்கிற பிரச்சினையை பார்த்தியா? ஏற்கனவே இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு.. இவன் வேற ஏன் இந்த சண்டித்தனம் எல்லாம் பண்றான்? பெரிய சண்டியருனு ஏதும் நினைப்பா அவனுக்கு மனசுல!” என்று கோபப்பட்டார்.

 

*அவன் என்ன வேணும்னா செஞ்சான்? உங்களை எவனோ சல்லிபய தப்பா பேசுனான். இவன் போய் லேசா ரெண்டு தட்டு தட்டி விட்டு வந்து இருக்கான்” என்றார் மகனுக்கு வக்காலத்து வாங்கிய படி…

 

“அது சரி.. லேசா இரண்டு தட்டு!!

அவனை இப்போ ஆஸ்பத்திரில சேர்த்திருக்கானுவோ உடம்பில் பாதி எலும்பு முடிஞ்சிருக்காம்.

அதானே புள்ளைங்க எல்லாம் விட்டு கொடுக்க மாட்டியே நீ!! ஆனாலும் கொஞ்சம் பெருமையா தான் இருக்கு அப்பனுக்கு ஒன்று இருந்தால் பிள்ளைகள் பாய்ந்து வருவது” என்று சிரித்தவர் மீசையை நீவி கொண்டே கைகளை கழுவி வந்தவர், உமையாள முந்தானையில் கை துடைக்க, ‘வெளியில தான் அப்பாவும் பிள்ளையும் உரசுகிறது உள்ளுக்குள்ள பாரு… ஒரு மாதிரி!!” என்று மனதுக்குள் நொடித்துக் கொண்டார்.

 

“ராவுத்தரே… அவன ஆஃபீஸ் ரூமுக்கு வரச் சொல்லுக!” என்றவாறு இவர் வீட்டின் உள்ளே இருந்த வழியாக ஆபீஸ் அறைக்குச் செல்ல இவனும் அவரை பின் தொடர்ந்து சென்றான்.

 

 

ஜார்ஜ் அடித்ததை பற்றி கேட்பார் என்று இவன் என்ன சொல்லலாம் என்று மனதுக்குள் வார்த்தைகளை கட்டமைத்துக் கொண்டிருக்க.. ஆத்மநாதன் கேட்டதோ “யார் அந்த பொண்ணு? எதுக்கு அந்த பொண்ணு எல்லாம் குஸ்தி நடக்குற இடத்துக்கு தூக்கிட்டு போனாராம்? இரும்படிக்கும் இடத்தில் பூக்கு என்ன வேலை?” என்று கேட்டதில் அதிர்ந்துதான் போனான் ஈசா என்ன சொல்லி சமாளிப்பது என்று!!

2 thoughts on “மையல் கொண்டேன் மாதீரா 4”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top