ATM Tamil Romantic Novels

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 1

ஆசைகள் உன்னிடம் அசுரனே..

 

ஜியா

 

1

 

தேவர்களை காத்து..

 

சூரனவனை வதைத்து..

 

வேலனவன் தன் சினம் தணிக்க..

 

கடலலைகள் அவன் பாதம் பணிக்க..

 

நின்ற இடம்.. 

 

 

அன்றைய திருஜெயந்திபுரம்!

இன்றைய திருச்செந்தூர்!!

 

 

“சஷ்டியை நோக்கச் சரவண பவனார்..

 

சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்..”

 

 

என்ற வரிகளை பாடியவாறு தன்னிடம் ஆரத்தியை காட்டும் தன் மருமகள் வத்சலாவிடம் புன்னகையோடு ஆரத்தி எடுத்துக்கொண்டு திருநீரை மட்டும் எடுத்து பூசிக் கொண்டார் தெய்வானை அம்மாள் “அப்பா முருகா” என்று!!

 

அவர் அருகில் நின்றிருந்த தன் கணவன் குருபரன் இடமும் ஆரத்தி காட்ட, அவரும் விபூதி எடுத்துக்கொண்டு மனைவிக்கு குங்குமம் வைத்து விட்டார். மென்னகையோடு அதை ஏற்றுக் கொண்டு மீண்டும் பூஜை அறைக்கு வத்சலா திரும்ப..

 

 

“உண்மையிலேயே இந்த பொண்ணு மட்டும் உனக்கு பொண்டாட்டியா வரலைன்னா இந்த வீடு இப்படி இன்னிக்கு ஒத்துமையா இருந்திருக்காது குரு” என்று தினமும் ஒரு முறையாவது சொல்லும் அந்த வார்த்தையை இன்றும் சொன்னார் தெய்வானை!!

 

 

அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்று குருபரனுக்கும் தெரியும்! ஆனால் அதை ஆமோதித்தோ சாதகமாகவோ ஒரு வார்த்தை பேசமாட்டார். அவருக்கு தெரியும் கணவனாய் இதே வார்த்தையை சொன்னால் அதனின் வீரியம் வேற மாதிரி இருக்கும் அந்த வீட்டில் என்று!! அதனால் இது போல் வார்த்தைகள் எல்லாம் அவர் கடந்து விடுவார்.

 

 

மாமியாரின் இந்த காலை கந்தசஷ்டி வத்சலாவுக்கு பழக்கமே!! அதற்கு மௌன குருவாய் இருக்கும் தன் கணவன் குருபரனையும் அறிந்ததே!!

 

“அண்ணி!!”

 

அந்த அழைப்பில் பூஜை அறை பக்கம் செல்ல இருந்தவர் நின்று திரும்பிப் பார்த்தார்.

 

ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் பாவங்களை காட்ட முடியுமா என்ன?

முடியும்!! வேதவள்ளியால் மட்டுமே முடியும்!!

 

 

அழைப்பது என்னவோ கனிவாக இருந்தாலும் அதில் ஒரு ஆளுமையும் சேர்ந்திருக்கும்!

 

அது தான் வேதவள்ளி!!

 

வத்சலாவின் மூத்த நாத்தனார்!!

குருபரனின் செல்ல தங்கை!!

தெய்வானை அம்மாளின் பிரியத்திற்குரிய மகள்!!

 

 

அந்த வீட்டில் பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரை அனைவருக்கும் வேதவள்ளியின் வாக்கு வேதவாக்கு தான்!!

 

அதற்காக அனைவரையும் உருட்டி மிரட்டி பணிய வைக்க எல்லாம் மாட்டார். அதிகார வார்த்தைகளிலும் அன்பு மிளிரும்! அதை மீறி செல்லவே இயலாத வகையில் தான் அவரது பேச்சு நடவடிக்கை அனைத்துமே!!

 

 

அண்ணியிடம் வந்து ஆரத்தி எடுத்துக்கொண்டு குங்குமமிட்டு கொண்டவர், அவரைப்பார்த்து மலர்ந்த சிரிப்பை ஒன்று கொடுத்தார். பார்ப்பவரையும் சேர்த்து சிரிக்க வைக்கும் சிரிப்பு!!

 

 

“வேதா மா.. மாமா வந்துட்டாரா? நேத்து நைட்டு ஷிப்மன்ட் ஒன்னு வரவேண்டியது இருக்குன்னு தூத்துக்குடி வரைக்கும் போனார். நைட் லேட்டாகும் சொன்னாரு எப்ப வந்தார்?” என்று குருபரன் கேட்க..

 

“வந்துட்டார் ணா.. நைட் ரெண்டு மணிக்கு மேலானது அவர் வரும்போது” என்றவருக்கு வேலையாட்கள் வந்து காபி கொடுக்க வாங்கிக்கொண்டு “அண்ணி வாங்க காபி குடிக்க!!” என்று வத்சலாவையும் அழைத்தார்.

 

எப்போதும் தன் குடும்பத்தில் உள்ளவரை எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டார் வேதவள்ளி!!

 

இவர்கள் நால்வரும் பேசிக்கொண்டே தங்கள் காலை வேளை காபியைக் குடித்து கொண்டிருக்கும்போதே வேக வேகமாக வந்தார் மோகனவள்ளி.. அவ்வீட்டின் இரண்டாவது பெண்.

 

 

“இதுதான் நீ வர நேரமா?” தெய்வானை அவரை முறைக்க “கொஞ்சம் லேட் ஆயிடுச்சு அம்மா!” என்றவாறு அம்மாவிடம் சிரித்துவிட்டு பூஜை அறை நோக்கி சென்றவர் “காலையில நிம்மதியா படுத்து தூங்க முடியுதா இந்த வீட்டுல? ஆறு மணிக்கே குளிச்சிட்டு வந்து சாமி கும்பிட்டா தான் காபி கூட.. இவங்க ஆளுமைக்கு.. அடக்குமுறைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு!!” என்று முணுமுணுத்துக்கொண்டே நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு வந்தவருக்கு வத்சலா காபி கொடுக்க வாங்கிக்கொண்டு அண்ணனின் அருகில் அமர்ந்தார்.

 

“எங்க மாப்பிள்ளையை இன்னும் காணோம்?” என்று குருபரன் கேட்க..

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க அண்ணா” என்றவாறு கணவனை எழுப்ப சென்றார் மோகனா.

 

அண்ணன் தங்கைகள் என கூட்டுக் குடும்பமாக வாழும் வீடு அது!! செந்தூர் அழகப்பனின் வீடு!!

 

அவரை “”செந்தூரார்!!” என்று தான் தொழில் வட்டாரத்தில் அழைப்பார்கள்!! அவரது மனைவி தெய்வானை அம்மாள். மகன் குருபரன், மகள்கள் வேதவள்ளி மோகனவள்ளி. திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனின் தீவிர பக்தர்!!

 

 

திருச்செந்தூர் தூத்துக்குடி.. இவர்கள் செய்யாத தொழில்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உப்பளம் தொடங்கி.. மீன்கள் இறால் ஏற்றுமதி.. முத்து வியாபாரம்.. என்று கடல் சார்ந்த தொழிலில் மட்டும் அல்லாது அந்த கடலில் விடப்படும் கப்பல்களை கட்டுமானிக்கவும், பழைய கப்பல்களை வாங்கி அதன் பாகங்களை உடைத்து விற்பனை செய்யும் தொழில்கள் தான் இவர்களுக்கு இப்போது பிரதானம்!!

 

 

குருபரன் வத்சலா தம்பதியினருக்கு நிமிலன் அழகப்பன்.. மயூரி இந்திராக்ஷி என்ற இரு மக்கள் செல்வங்கள்.

 

வேதவள்ளி மெய்யறிவு தம்பதியினருக்கு ஒற்றை மகள் மட்டுமே. அதுவும் தவமாய் தவமிருந்து பெற்ற மகள், ஆராதனா!!

 

மோகனவள்ளி தம்பதியருக்கு நிரஞ்சன் ரஞ்சனி என்ற இரு பிள்ளைகள்.

 

நிமிலன் தன் தந்தை குருவுடன் சேர்ந்து தொழிலில் இருக்க.. அந்த வீட்டின் மற்றொரு ஆண்மகனான நிரஞ்சன் வக்கீலாக இருக்கிறான்.

 

பெண்கள் மூவரும் கிட்டத்தட்ட ஒரே வயது!! ஆறு மாதங்கள் என்ற 

இடைவெளி தான்!

 

அனைவரையும் விட மயூரி.. அந்த வீட்டில் செல்லம். காரணம் வத்சலாவுக்கு நிமிலனுக்கு அடுத்து இரு குழந்தைகள் கருவிலேயே கலைந்து விட.. மூன்றாவதாக அனைவரின் வேண்டுதலால் வந்து பிறந்தவள் என்பதால் சற்று செல்லம் அதிகம்.

 

 

அவளும் ஆராதனாவும் ரொம்ப நெருக்கம் மற்றவர்களைக் காட்டிலும்.. எப்படியும் ஆரா தான் தனக்கு அண்ணியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள் மயூரி. ஏனோ இரண்டாவது அத்தையின் குடும்பத்தை அவ்வளவாக பிடிக்காது அவளுக்கு.

 

 

இந்த ஆறு மணிக்கு எழும் கட்டுப்பாடு எல்லாம் பெண்களுக்கும் மருமகளுக்கு மட்டும் தான் அந்த வீட்டில். பிள்ளைகளுக்கு சற்று தளர்வு கொடுத்துவிடுவார் தெய்வானை அந்த தளர்வு ஏழு மணி வரை மட்டுமே.. 

 

 

இன்னார்க்கு இன்னாரென்று இறைவன் வகுத்து இருப்பான். அதனால் இப்பொழுது குடும்ப நல் உறவாக இருக்கும் போது, அதிலும் கூட்டு குடும்பமாக இருக்கும் போது யாரையும் யாருடனும் முடிச்சு போட்டு பேசக்கூடாது என்று தெய்வானை உத்தரவிட்டு இருக்க.. தங்கள் மனதுக்குள் ஆசைகள் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை யாரும்!!

 

 

ஆனால் மோகனாவிற்கு தன் பெண்ணை ரஞ்சனியை நிமிலனுக்கு கொடுத்து மயூரியை தன் மகன் நிரஞ்சனுக்கு முடித்து வைத்து அந்தக் குடும்பத்தோடு இரண்டற முழுவதுமாக கலந்துவிட வேண்டும் என்று மிக முனைப்பாக இருக்கிறார்.

 

 

அதிலும் ரஞ்சனிக்கு போட்டியாக அக்காவின் மகள் இருக்க.. மயூரிக்கு அவரது மகன் மட்டுமே.. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியாக நம்புபவர். அதனால் அவ்வப்போது தன் மகனை விட்டு மயூரியிடம் காதல் வார்த்தைகளை பேச சொல்வார்.. 

 

“சட்டப்படி தப்பு.. எது?? இப்படி அம்மா நீ என்னை லவ் பண்ண சொல்லி தூண்டுறது” என்று நேர்மையான அந்த வக்கீலும் அடிக்கடி சட்டத்தை தன் கையில் எடுத்து சுற்றியுள்ளவர்களை அலற வைப்பான்.

 

 

மோகனவள்ளியின் கணவர் ராகவன், ஏதோ நானும் இந்த வீட்டில் இருக்கிறேன் என்று இருப்பவர். இவர் செந்தூராரின் தூரத்து உறவு. 

 

 

பிள்ளைகளில் மூத்தவனான நிமிலன் அழகப்பன் தாத்தாவின் பெயரை தாங்கியது போல, அவரது கம்பெனியையும் அப்பா மற்றும் மாமன் மெய்யறிவின் துணையோடு தாங்கிக் கொண்டிருக்கிறான். 

 

 

ஆராதனா நகைகள் வடிவமைப்பதற்கு படித்துவிட்டு தற்போது அவர்களது நகைக்கடை ஒன்றில் தூத்துக்குடியின் பிரதானமான முத்தை கொண்டு தனது கற்பனைகளை வடித்து வருகிறாள்.

 

 

ரஞ்சனி அவளின் அம்மா போதனையில் எப்படியும் நிமிலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கு இணையாக வராத பிடெக் மரைன் படித்தாள். இப்பொழுது அவர்கள் செந்தூரார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை என்ற பெயரில் ஏதோ ஒன்று செய்கிறாள்.

 

 

மயூரிக்கு பிடித்தது என்னவோ தன் அண்ணன் போல அந்த கப்பல் கட்டுமானத் தொழில் தான். ஆனால் ஏற்கனவே ரஞ்சனி அதுதான் படிப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று சேர்ந்துவிட.. இவளை ஆடிட்டருக்கு படிக்க வைத்தார் வேதவள்ளி. 

 

 

கடல் மீது கொண்ட அந்த மோகம் என்னவோ அவளுக்கு இதுவரை தீரவே இல்லை!! அந்த ஆழ் நீல நிறத்தை காணும் போது மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு!!

 

 

விடுமுறை நாட்களில் இவர்கள் எல்லாம் அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் க்ரூஸ் கப்பலில் செல்லும்பொழுது, அந்த ஆழ் கடலின் நீல நிறத்தை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருப்பாள் மெய் மறந்து மயூரி இந்திராக்ஷி!!

 

 

இப்படி ஒவ்வொரு பிள்ளைகளும் அவர்கள் தொழில் சார்ந்த படிப்புகளைப் படித்து, வருங்காலத்தில் தொழிலை கையெடுக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரையும் செதுக்கிக் கொண்டிருந்தார் வேதவள்ளி. ஆம்!! அந்த வீட்டின் பொறுப்புகளிலிருந்து அண்ணனுக்கு தொழிலில் துணை செய்வதோடு பிள்ளைகளின் படிப்பு எதிர்காலம் என்று அனைத்தையும் செய்பவர் வேதவள்ளி. கனகச்சிதமாக தொலைநோக்கு சிந்தனையுடன் தான் பார்ப்பார் அனைத்தையும்!!

 

 

ஆனால் அதை தன்னிச்சையாக செய்யாமல் குடும்பத்தில் உள்ளவர்களோடு கலந்து தன் வாதங்களை முன்னிறுத்தி அவர்களையும் சம்மதிக்க வைத்து விடுவார்.

 

 

“பெரியம்மா.. என்னை வக்கீலாக சொன்னதுக்கு சிவனேன்னு நீங்க வக்கீலாகி இருக்கலாம். பாயிண்ட் எல்லாம் சும்மா பக்காவா பறக்குது” என்று சிலாகித்துக் கொள்வான் நிரஞ்சன் அவ்வப்போது. கண்களில் ஒரு ஏக்கம் மின்னல் வந்த சில நொடியிலேயே பறந்துபோகும் அவருக்கு.

 

 

 

குடும்பமே பறந்து பறந்து தொழில் செய்து கொண்டிருக்க வீட்டின் மருமகளான வத்சலா.. பொறுமையின் சிகரம்!! அனைத்திற்கும் ஒரு புன்சிரிப்பு மட்டுமே!! அவர்கள் குடும்ப கோவில் டிரஸ்டை மாமியாரோடு அவர் கவனித்து கொண்டிருக்கிறார்.

 

 

எப்பொழுதும் இந்த பெரிய குடும்பம் ஒன்று கூடுவது அவர்களது காலை சாப்பாடு வேலையில் தான். மதியம் அவரவர் விருப்பப்பட்டால் வீட்டிற்கு வருவது அல்லது தொழில் பார்க்கும் இடத்தில் உண்பது. இரவும் அப்படித்தான்.. பெரும்பாலும் பெண் பிள்ளைகள் முன்னமே வீட்டுக்கு வந்து விடுவதால் தன் பாட்டியோடு வீட்டிலுள்ள பெண்கள் உணவருந்தி விடுவர். 

 

 

ஆண்கள் எப்பொழுதும் பின்னிரவு வேளையில்தான் வருவார்கள், அதிலும் சிலசமயம் வெளியிலேயே உணவினை முடித்து வந்து விடுவார்கள். கணவன் வந்தவுடன் பரிமாறிவிட்டு தான் சாப்பிட வேண்டும் என்று கட்டுப்பெட்டி தனத்தை எல்லாம் தெய்வயானை தூக்கி பரணில் போட்டு விட்டார். 

 

 

 

“அவன் வரும் வரை நீ பசியோடு இருந்தால் உன் உடம்பு என்னத்துக்கு ஆவது? ஆம்பளைங்க வெளியிலேயே பாதி நேரம் சாப்பிடுவாங்க. நீ ராத்திரி எல்லாம் அவனுக்காக காத்து இருக்காதே” என்று மகள்களுக்கு மட்டுமல்ல மருமகளுக்கும் உபதேசிப்பவர்.

 

 

இவ்வாறு எந்தவித சலனமும் சஞ்சலமும் சண்டைகளும் இல்லாமல் ஆழ்கடலில் செல்லும் படகை போல அங்கங்கே சிறிது தழும்பல்கள் இருந்தாலும் அமைதியாகவே சென்றது இவர்களது குடும்பம்.

 

 

அப்போது அவர்கள் அறியவில்லை சுனாமியாய் ஒருத்தன் வருவான் என்று!! அவர்கள் குடும்பத்தை கலைப்பான் என்று!!

 

 

அரபிக்கடலில் தனது சொந்த கப்பலில்..

நின்று விரிந்து பரந்த அந்த நீலக்கடலை..

பார்த்து கொண்டிருந்தான் அந்த நெடியவன்!!

 

 

நெடு நெடு என்ற உயரத்தோடு.. கட்டு மஸ்தான உடற்கட்டோடு.. கடல் காற்றில் பறக்கும் அலை கேசத்தை

சற்றும் கண்டும் கொள்ளாமல்.. கூர் பார்வையுடன்‌ வெகு தொலைவில் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த சின்ன கப்பலை விழி எடுக்காமல் இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

 

“ஏவி சாப்? தட் துஷ்மன் துர்கேஷ்…” என்று அவனின் பிஏ ஹிமேஷ் வாயை திறக்க..

 

ஒற்றை கையை உயர்த்தி அவனைப் பேச வேண்டாம் என்று தடுத்தவன், “ஜஸ்ட் வாட்ச் மேன்!” என்றவனின் தொணி அருகில் இருப்பவனை அலற செய்தது. 

 

 

அலட்டல் இல்லை! 

அதிகாரம் இல்லை!

அதிர்ந்து கூட பேசவில்லை!

 

ஆனால்.. அந்த குரலின் அழுத்தம் கூடவே இதழின் கடையோரத்தில் நெளியும் இகழ்ச்சி புன்னகை.

 

 

அதுவே சொன்னது அவன் ஆபத்தானவன்! 

 

கடலுக்கு இணையாக அவனது கண்களின் பாவைகளும் நீல நிறத்தை தான் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. சாந்தமாக இருக்கும் போது வெளிர் நிறத்திலும் சற்றே அவன் அரக்கனாக மாறும்போது ஆழ்ந்த நேரத்திலும் அவனது மூடுக்கு ஏற்ப மாறும் நீல நிற பாவை கொண்ட அரக்கனவன்!

 

 

சற்றுநேரத்தில் அந்த துர்கேஷ் இவன் பயணம் செய்து கொண்டிருக்கும் அதே கப்பலுக்கு அழைத்துவரப்பட்டான். இழுத்து வரப்பட்டான் என்று சொல்லுவதே பொருந்தும்!

 

 

“ஏவி சாப்… ஏவி சாப்… மாப் கரோ…” என்றவன் வாய் திறக்கும் முன் அவனது வாயில் திணிக்கப்பட்ட அந்த பொருளில் திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டான்.

 

 

அது! கொக்கைன்.. அதுவும் அவன் விற்பனை செய்து கொண்டிருக்கும் கொக்கைன். இது எப்படி இவருக்கு தெரிந்தது? அதுவரை அவன் செய்த தில்லுமுல்லுகளை கண்டுபிடித்தால் மட்டுமே இங்கு அழைத்து வரப்பட்டான் என்று நம்பிக்கொண்டிருந்த துர்கேசுக்கு இப்போது சகலமும் ஆட்டம் கண்டது.

 

 

இனி இறப்பது உறுதி என்பது தெள்ளத் தெளிவாக புரிந்துவிட்டது.

 

 

எந்தவித சமாளிப்பும் ஏவியிடம் செல்லுபடியாகாது என்றும் அவனுக்குத் தெரியும்.  

 

 

 

தவறு செய்யும்போது தெரியாத குடும்பமும் குழந்தைகளும் இப்போது கண் முன்னே தெரிய அவர்களுக்காக வேணும் என்று அவனது காலடியை பற்ற போக அவனை சற்றும் கண்டுகொள்ளாமல் தனது கப்பலில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெட்டிகளை தான் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

 

 

 

“ஏவி சாப்.. ஏவி சாப்..” அந்த வார்த்தைகள் கூட திக்கித் திணறித்தான் அவன் வாயிலிருந்து அந்த கொக்கேனையும் தாண்டி வெளிவந்தது.

 

 

“உன்ன நம்பி இந்த கப்பலை கொடுத்தால்.. உன் இஷ்டத்துக்கு வரவுக் கணக்கு பண்ணவ.. அதைக் கூட விடலாம். ஆனால் என் கப்பலையே கொக்கேன் கடத்தி இருக்க.. உனக்கு எவ்வளவு நெஞ்சில திண்ணக்கம் இருக்கணும். அப்போ பயம் விட்டு போச்சு.. இந்த ஏவி.. மேல உனக்கு பயம் விட்டு போச்சு! அப்படித்தானே?” என்று அவன் கண்களை பார்த்து கேட்க, அந்த கண்களின் ஆழ்ந்த நீல நிறத்தை கண்டு உடலெல்லாம் விதிர்விதிர்த்து அவனுக்கு.

 

 

“ஏதோ பணத்தாசைல…” என்று வாயை எடுத்தவனின் வாய்க்குள் இன்னும் கொஞ்சம் கொக்கைன் கொடுக்கப்பட,

 

 

 “இதுக்கு தானே ஆசைப் பட்ட? இதை திண்ணு சாவு!” என்றவன் சற்றும் இரக்கமில்லாமல் அவன் எதிரிலேயே இருக்கையில் அமர்ந்து கால் மீது கால் போட்டபடி அவனைத்தான் பார்த்திருந்தான்.

 

 

 

சிறிது சிறிதாக அவனுக்குள் இறங்கிய அந்த கொக்கைனின் போதை.. அவனின் மூளையை மதிமயங்கி செய்ய.. தன்னை முழுதாக மறந்தவன், ஏதேதோ உளறினான்.. ஏதேதோ பேசினான். அங்குமிங்கும் ஓடினான்.. அந்த தளம் முழுவதும் ஓடி திரிந்தான்.. கீழே உருண்டு பிரண்டவன், திடீரென்று கத்திக் கதறி அழ ஆரம்பித்தான். அதற்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக கண்கள் மேலே சொருக.. அதீத போதை அவனின் இதயத்துடிப்பை குறைக்க சிறிது சிறிதாக அவனது ஆவி அடங்கியது. 

 

 

அதை கண்ணார கண்டு ரசித்தவன், “இவன் பாடியை அவன் வீட்டு வாசல் முன் போடுங்க.. இனிமே எவனுக்கும் இந்த ஏவிக்கு துரோகம் பண்ண நினைக்கவே கூடாது!” என்று உறுமியவன் வேகமாக அந்தக் கப்பலில் இருந்து சிறு போட்டு மூலம் மும்பை கடற்கரையை நோக்கிச் சென்றான்.

 

 

 

அவன் ஏவி.. ஆரன் வித்யூத்!!

 

 

மும்பை தமிழன்! சிறிது நாளிலேயே கப்பல் தொழிலில் மட்டுமல்ல அதன் கட்டுமானத்திலும் முன்னணியில் திகழும் ஏவி குரூப்பின் தலைவன் அவன்!

 

 

இவன் வந்த அரை மணி நேரத்தில் அந்த துர்கேஷை ஆரன் சொன்னதுபோல் செய்துவிட்டு இவன் முன் ஆஜரானான்‌ ஹிமேஷ்!

 

 

“நான் சொன்ன அந்த ஷிப்போட டீல் ஓகே ஆயிடுச்சா?” என்று கேட்க இவன் எள் என்பதற்கு முன் எண்ணெயாக இருப்பவன் ஹிமேஷ்.. 

 

 

“ஓகே ஆகிடுச்சு சார்” என்றான் ஹிமேஷ்.

 

 

“ஓகே!” என்றவன் முகத்தில் ஒரு குரூர புன்னகை.. அவனின் பார்வை எதிரே இருந்த மேப்பில் வட்டமிட்டு இருந்த திருச்செந்தூரை வெறித்தது.

 

 

இப்போது அவனின் நீல பாவை ஆழ்ந்த நீல நிறத்தில் இருக்க காரணம் என்னவோ?

 

அரக்கனை வதம் செய்த சிவமைந்தனின் தலத்தில்..

 

இனி இவ்வரக்கனின் ஆட்டம் ஆரம்பம்!!

7 thoughts on “ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top