ATM Tamil Romantic Novels

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 2

2

 

ஆரனின் ஆட்டம் அதகளமாக ஆரம்பித்தது. அதன் எதிரொலி திருச்செந்தூரில்..

 

 

அன்று காலை நேர உணவின்போது அனைவரும் ஒன்று கூடி இருக்கும் வேளையில் தன் தங்கையின் கணவரும் ஒன்றுவிட்ட மாமனுமான மெய்யறிவனிடம், “ஆமா மாமா..நேத்து போயிட்டு பாத்துட்டு வந்த அந்த டீலிங் என்னாச்சு.. இந்த முறை அந்த ஷிப் டீலிங் நமக்கு கிடைக்கும் தானே?” என்று கண்களில் ஆவலை தேக்கிவைத்து கேட்டார் குருபரன்.

 

 

 

இப்போது வந்திருப்பது அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனத்தின் ஒரு பழைய கப்பல். அதன் பெறுமானமும் வெகு அதிகம். இந்த டீலிங் மட்டும் ஓகே ஆகி விட்டால் அடுத்தடுத்து அவர்களது கப்பல்களையும் இவர்களே வாங்கிக் கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். சும்மா இல்லை ஒரு கப்பலிலேயே பல கோடி ரூபாயை அசால்ட்டாக லாபங்களை பார்த்து விடலாம்.

 

 

 

ஏற்கனவே தூத்துக்குடியில் இவர்கள் ஆதிக்கம் தான். இப்பொழுது இந்த டீலிங் மட்டும் கிடைத்து விட்டால் தமிழ்நாடு முழுக்க செந்தூராரின் ஷிப்பிங் கம்பெனி முதலாவதாக வந்துவிடும். இப்படியாக பல கனவு கோட்டைகளை கட்டி வைத்திருந்தனர் அந்த குடும்பத்தினர்.

 

 

ஆர்வமுடன் தன்னை பார்த்து கேட்கும் மச்சானாகிய மாப்பிள்ளையிடம், “இல்ல மாப்பிள.. நானும் எவ்வளவோ ட்ரை பண்ணனேன்” என்று சோர்ந்தாற் போல சொன்னார் மெய்யறிவன்.

 

 

“இதே உங்க சின்ன மாப்பிள்ளை போய் இருந்தால் இந்நேரம் டீலிங்கை முடித்துருப்பார் ணா. ம்ஹீம் எங்க.. யாரு அவரை நம்புறிங்க?” என்று அவர் உண்டு அவரு சப்பாத்தி உண்டு என்று இருந்த ராகவனை இதில் கோர்த்துவிட்டார் மோகனா.. 

 

 

 

“நான் எப்போ அப்படி சொன்னேன்?” என்று வருத்தத்துடன் தெரிவித்த ராகவன் “அண்ணனாலையே முடியல.. இதுல என்னால் எப்படி முடியும்?? காமெடி பண்ணாத மோகனா!” சும்மா விடாது மனைவியின் மூக்கை அப்போதே உடைத்தார்.

 

 

“தப்பு.. எது? இதுவரைக்கும் இந்த மாதிரி டீலிங்ன்னா என்னன்னு தெரியாம இத்தனை வருஷம் வளர்ந்த அப்பாவ இப்படி கோர்த்து விடுறது?” என்றான். வேறு யாரு? மோகனாவின் தவப்புதல்வன் சட்ட நாயகன் நிரஞ்சனே!!

 

 

‘எனக்கு வந்து வாய்த்ததும் சரி இல்லை! நான் பெத்ததும் சரி இல்லை!’ என்று மனதுக்குள் நொந்து கொள்ள மட்டும்தான் முடிந்தது மோகனாவால்.

 

 

இது அவ்வப்போது அங்கே நடப்பது தான்! அதனால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் அங்குள்ளவர்கள் குறிப்பாக மெய்யறிவன்.

 

 

“அப்புறம் அந்த டீலிங் யாருக்கு சைன் ஆச்சு?” என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் குருபரனிடம்..

 

 

தென்னிந்தியாவில் விரல்விட்டு எண்ணிவிடும் ஆட்களில் இவர்கள் குடும்பமும் ஒன்று. தூத்துக்குடிக்கு வரும் அந்தக் கப்பலை இவர்களை தவிர யார் எடுக்கமுடியும்? 

 

 

ரவுடிகள் தங்கள் எல்லைக்களை வகுத்து வைத்திருப்பது போல, ‘நான் உன் ஏரியாவுக்கு வரமாட்டேன்! என் ஏரியாவுக்கு நீ வரக்கூடாது!’ என்பது போலத்தான், எல்லையில்லா பரந்து விரிந்த கடல்களிலும் எல்லைளை பிரித்து வைத்திருந்தனர் இவர்கள். 

 

 

“யார் நம்ம இடத்தில் நுழைந்தது? நமக்கு தெரியாமல்? நேற்று பொழிந்த மழையில் இன்று முளைத்த காளானாக இருக்கும்!” என்று சிறிது கோபம் குருபரனிடம்.

 

 

“ஏவி.. ஏவி குரூப்ஸ்!!” என்றான் நிமிலன் சாப்பிட்டப்படியே..

 

 

“என்னது ஏவி? ஒன்னும் புரியல?” என்று கேட்ட தந்தையை பார்த்து “அந்த ஷிப் டீலிங்கை எடுத்திருப்பது ஏவி குரூப்ஸ் பா” என்றான்‌ சாப்பாட்டில் கவனமாகவே..

 

 

“உனக்கு எப்படிடா தெரியும்?” என்று மாமனுக்கு சற்று ஆச்சரியம்..

 

 

“என்ன மாமா? நான் உங்க கூட தானே தொழில் பண்றேன். இது கூட தெரிஞ்சுக்கலைனா உங்க ட்ரெய்னிங் எல்லாம் பத்தலைனு அர்த்தம்! எப்படி உங்க பெருமையை காப்பாற்றிவிட்டேனா?” என்று புருவம் உயர்த்து கேட்ட மருமகனை வாஞ்சையோடு பார்த்தனர் அத்தைமார்கள். நிமிலன் என்றால் இரு அத்தைகளுக்கும் கொள்ளை பிரியம்.

 

 

“அப்படியே உங்க தாத்தா மாதிரியே இருக்கு ராசா.. உன்னை பார்க்க.. என்ன அந்த மீசை மட்டும் இன்னும் கொஞ்சம் பெருசா வைச்சு இருக்கலாம்.. அசல் அப்படியே இருந்துப்ப!” என்று பெருமூச்சோடு செந்தூராரை ஞாபகப்படுத்தினார் தெய்வானை.

 

 

“சரி! சரி! அதை பார்த்துட்டு அப்படியே சும்மா இருக்காத.. அந்த ஏபி குரூப்ஸ் யாரு என்ன எல்லாம் தெரிஞ்சு வைச்சிக்கோ.. இவ்வளவு நாளு இல்லாமல் புதுசாக எங்க இருந்து முளைச்சான் இவன்? அந்த குரூப்ஸ் பத்தின டீடைல்ஸ் எல்லாம் எனக்கு இன்னைக்குள்ள வேணும்” என்று குருபரன் மகனிடம் ஆணையிட.. வேதவள்ளி அமைதியாக இவர்கள் பேசுவதை எல்லாம் அவதானித்துக் கொண்டே இருந்தார்.

 

 

“ஓகே பா!!” என்றான் நிமிலன்.

 

 

மெய்யறிவன் ஏதோ யோசனையிலேயே சாப்பாட்டை அளந்தவாறே அமர்ந்திருந்தார். இதுவரை இப்படி வந்த எந்த டீலிங்கும் அவர் கைவிட்டு போனதில்லை.. இன்று எப்படி? என்றே அவரது யோசனை!!

 

 

“மாமா..!?” என்று வேதவள்ளி அழைக்க.. அவரது நினைவுகள் இங்கில்லை.

 

 

எப்பொழுதும் மாமா என்ற அழைப்புக்கு புன்னகை முகமாக “சொல்லு வேதா மா!” என்பவர் இன்று தன்னை மறந்த நிலையில் இருக்க, அவர் தோளை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினார் வேதவள்ளி.

 

 

“என்ன? என்ன வேதா?” என்றார்.

 

“ஏன் இப்படி இருக்கீங்க? ஒரு ஷிப்டீலிங் தானே போச்சு! அதற்காக இப்படி கவுந்து உட்கார்ந்திருந்தா ஆச்சா? ஈஸி மாமா.. அடுத்த டீலிங் நம்ம கைக்கு தான் வருது. ரொம்ப போட்டு மனச அலட்டிக்காம சாப்பிடுங்க மாமா” என்று மனைவியின் அக்கறையில் சிரித்துக்கொண்டே உணவை உண்டார் மெய்யறிவன்.

 

 

மும்பை!! அதே காலை சாப்பாட்டு நேரம்..

 

அந்த பிரம்மாண்ட டைனிங் டேபிளில் தனக்கு எதிரில் அமர்ந்திருக்கும் தந்தைக்கு வாஞ்சையோடு உணவு ஊட்டிக் கொண்டிருந்தான் ஆரன் வித்யூத்!!

 

 

“ஆரு.. என்னால சாப்பிட முடியும் பா.. நீ சாப்பிடு! டைம் ஆகுது பாரு. அப்புறம் நீ சாப்பிடும் நேரம் அந்த ஹிமேஷ் வந்து உன்னையே உத்து உத்துப் பார்த்துக் கொண்டிருப்பான். அவனை பார்க்க வச்சிக்கிட்டு நீயும் சரியாக சாப்பிட முடியாம எழுந்து ஓடுவ.. அப்புறம் வெளியில எங்க ஒழுங்கா சாப்பிட போற? சாப்பிடு கண்ணா!” என்று பாசத்துடன் நன்றாக இருக்கும் ஒரு‌கையால் மகனின் தாடையை தடவியவாறு கூறினார் விஜயேந்திரன்.

 

 

தந்தையின் அன்பில் என்றும் போல் இன்றும் நெகிழ்ந்தாலும் அதை முழுமையாக காட்டிக்கொள்ள இப்போது உள்ள அவனுடைய நிலைமை தடுக்க.. ஒரு புன்னகையுடன் அவருக்கு ஊட்டுவதை தொடர்ந்தான்.

 

 

‘இவன் எங்கே நான் சொல்வதை கேட்க போகிறான்? இவனெல்லம் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் தான்!’ என்று மனதுக்குள் அவர் நினைத்துக்கொண்டே இரு பக்கமும் தலையசைக்க.. மெல்ல இதழ் பிரித்தவன் “அதேதான்! அதேதான்! அந்த சுப்பன் தான்! கூடிய சீக்கிரம் சூரசம்ஹாரம் பண்ண போறான்!!” என்றவனின் கண்கள் பழி உணர்வில் பளபளக்க குரலோ அப்பாவிடம் பேசும் இருந்த ஆரன் போய் அரக்கனாயிருந்தான்.

 

குரலில் மட்டும் பேதத்தைக் காட்ட முடியுமா? இதோ காட்டிக் கொண்டிருக்கிறானே!!

 

அதுவும் அவனின் அப்பாவை இந்த நிலைமையில் பார்க்கும் போது, அவனின் அரக்கத்தனம் கூடக்கூட அந்த நீலநிற பாவையும் ஆழ்ந்த நிறத்திற்கு சென்று கொண்டிருந்தது.

 

 

ஆரனா? அரக்கனா?? 

 

 

“அடுத்த வாரம் திருச்செந்தூர் போறேன் பா!” என்று அப்பாவின் விழிகளுக்குள் ஆழ்ந்து நோக்கிக் கொண்டு கூற.. ஒரு முறை கண்ணை மூடி திறந்தவர், “அவசியமா ஆரு?” என்றார் மகன் என்ன செய்ய காத்து இருக்கிறான் என்பதை புரிந்து.

 

 

“கண்டிப்பா!! அதுவும் என் கையால தான்!!” என்றவனின் முகம் கோபத்தில் சிவக்க.. சட்டென்று தனது மகனின் கைகளை அழுத்தமாக பற்றி “ஆரு காம் டவுன்! காம் டவுன்!!” என்றார்.

 

 

உலகிலேயே அவனை சாந்தமாக்க கூடிய குரல் ஒன்று உண்டு என்றால் அது அவன் அப்பாவின் குரல் மட்டுமே!!

 

 

ஆனால் தன் வசம் இழந்து தன்னையே மறக்க வைக்கும் குரலையும் அந்த குரலின் சொந்தக்காரியையும்.. தான் சூரசம்ஹாரம் நடத்தும் அதே தலத்தில்.. அதே வீட்டில் சந்திக்க போகிறான்.. என்று கூறினால் நம்மையும் பார்வையாலேயே வெட்டி வீழ்ந்திடுவானோ??!!

 

 

செந்தூரார் அலுவலகம்…

 

தனித்தனியாக இவர்கள் தொழில்களை பார்த்து வந்தாலும் அனைவருக்குமான அலுவலகம் அதுதான்! கம்பீரமாக வீற்றிருந்தது ஐந்து அடுக்கு அலுவலகம்!!

 

டைரக்டர் சீட்டில் அமர்ந்திருந்த குருபரனுக்கு எதிர்புறம் அமர்ந்திருந்தனர் மெய்யறிவனும் நிமிலனும் இருவரும் ஜாயிண்ட் டைரக்டர்ஸ்..

 

 

“பா நீங்க கேட்ட அந்த ஏவி குரூப்ஸ் பத்தின டீடெயில்ஸ் என்னால முழுசா சேகரிக்க முடியல. ஆனா இந்த கம்பெனி இப்பதான் புதுசா ஒரு ஒன் இயர்ல் ஆரம்பிச்சிருக்காங்க.. இதோட எம்டி ஏவின் தான் எல்லோரும் கூப்பிடுறாங்க. ஆனால் அவனை யாரும் இதுவரைக்கும் நேரா பார்த்ததில்லை. முக்காவாசி டீலிங் எல்லாம் இவன் ஆன்லைனில் இருந்து தான் முடிக்கிறானு பேசுகிறாங்க. இந்த குரூப்ஸ் ஓட தலைமையகம் மும்பை! ஆனால் அவங்க ஏன் இப்ப தமிழ்நாட்டுல அதுவும் தூத்துக்குடியை டார்கெட் பண்றாங்கன்னு யோசனையா இருக்கு?” என்றான் தனக்கு தெரிந்த தகவலை நிமிலன்.

 

 

“இது வழக்கமா எங்கேயும் நடக்கிற தான் தம்பி! ஒரு இடத்தில அவங்களுக்கு சரியா இல்லைன்னா இல்ல தங்கள் எல்லையை விரிவுபடுத்த ஏற்கனவே நல்லா நடக்குற இடத்துக்கு போய் அங்கு ஆட்டையை போடுறது இல்ல குழப்பி விடுறது. இப்படி சில பல வேலைகளை செய்வார்கள் கார்ப்பரேட் கம்பெனிஸ்!! அவங்க தான் இந்த மாதிரி ஒரு போலியான கம்பெனியை சட்டுன்னு க்ரியேட் செய்து இப்படி எல்லாம் பண்ணுவானுங்க” என்றார்‌ குருபரன்.

 

 

“இருக்கலாம் மாப்பிள்ள! பார்ப்போம்!! எப்படி இருந்தாலும் அடுத்தடுத்த ஷிப் டீலிங் அவங்க கைக்கு போகாம பாத்துக்கணும். நாமெல்லாம் ஒத்துமையா இருக்குற வரைக்கும் இங்கே வெளியாளுங்க யாரும் நுழையவே முடியாது” என்று இவர்கள் சூளுரைத்துக் கொண்டிருந்த அதே நேரம்…

 

 

திருச்செந்தூரில் தன் காலை பதித்திருந்தான் ஆரன் வித்யூத்!!

 

 

அதுவும் ஃப்ளைட்டில் எல்லாம் வரவில்லை அவனின் ஆஸ்தான சொகுசு படகில் தான். அது அவனுக்கே அவனுக்காய் அவனே நிர்மாணம் செய்தது. சகல வசதிகளும் கொண்டது. இன்னும் சிறிது நாட்களுக்கு இல்லையில்லை மாதங்களுக்கு அவனது ஜாகை திருச்செந்தூரில் தான். எப்படி ஒரு ஊருக்கு மாற்றம் செய்யும்போது அவனவன் அவனுக்கு பிடித்த கார் பைக் எடுத்துட்டு வருவது போல இவனுக்கு பிடித்த அவனின் போட்டிலேயே வந்திருந்தான் தூத்துக்குடி துறைமுகத்திற்கு.

 

 

 

கூடவே அவனது ஹிமேஷ் மற்றும் பாடிகார்ட்ஸ். ஹிமேஷ் ஒரு பக்கா மராட்டியன் தமிழில் வார்த்தை கேட்டோமானால் பொங்கல்.. இட்லி.. சாம்பார்.. ரஜினி.. ரஹ்மான்.. என்பான். இவனை வைத்துக் கொண்டு இங்கே என்ன செய்வது? இந்த இடத்தை இங்குள்ள ஆட்களை தெரிந்த புரிந்த ஒருத்தன் தேவை என்பது திருச்செந்தூரை அவன் டார்கெட் செய்யும் போதே கணித்து விட்டான். 

 

 

இதோ இவன் தூத்துக்குடி துறைமுகத்தில் காலை வைக்கும்போதே வந்துவிட்டான் அட்டகாசமான வரவேற்புடன் பென்னி.. பென்னிராஜ்.

 

 

“வாங்க.. வாங்க சார்” என்று நம்ம ஊர் அரசியல்வாதிகள் வரவேற்கும் போது போடும் ஆறடி ரோஜாப்பூ மாலையை அசால்டாக தூக்கிக்கொண்டு வந்தவனை பார்த்து ஹிமேஷ் மிரள.. 

 

 

“ஏவி சாப்.. ஏவி சாப்.. கோன் திஸ் பாகல்?” என்று அவனை பார்த்ததும் பிடிக்காமல் போனது ஹிமேஷூக்கு.

 

 

முதல் குழந்தை இருக்கும்போது இரண்டாவது குழந்தையின் மீது பெற்றோர்கள் காட்டும் அந்த பாசம் நேசத்தை கண்டால் ஒருவித பொறாமை உணர்வுடன், அந்த குழந்தையை கண்டால் முகத்தை திருப்பிக் கொள்ளுமே மூத்த குழந்தை.. அது போல தான் ஹிமேஷூம்.

 

 

அவனைப் பார்த்ததும் இவன் முகத்தை திருப்பி கொண்டதையும் கவனித்த ஆரனுக்கு மனதுக்குள் சிரிப்பு. 

 

 

ஹிமேஷின் முகத்தை எல்லாம் கவனிக்கவில்லை பென்னி, நேராக வந்தவன் அந்த மாலையை அவன் கழுத்தில் போட்டு கையில் ஒரு பூச்செண்டு கொடுக்க முதலில் அவனுக்காக பொறுத்தவன், அடுத்த நொடி அதை கழட்டி அவன் கையில் கொடுத்துவிட்டு “இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் இந்த மாதிரி தூக்கிகிட்டு வராதே நீ பாட்டுக்கு. எனக்குன்னு சில பிரின்ஸிபில்ஸ் அண்ட் டிகினிடிக் இருக்கு. சம்ஜே?” என்று அழுத்தமான குரலில் சொன்னதும் “சரி சார்! சரி சார்! முதன் முதல்ல உங்கள பார்க்கிறேன் சார். அதனால ஒரு எக்சைட்மென்டில் செஞ்சுட்டேன் சார்!” என்று மன்னிப்பில்லாத மன்னிப்பை கேட்டான்.

 

 

அதற்கு பின் ஆரனின் கார்களை பின் தொடர்ந்தது பென்னியின் கார்..

 

அந்த மட்டில் ஹிமேஷூக்கு வெகு சந்தோஷம். ‘நாம மட்டும் நம்ம பாஸ் கூட ஒன்னா போறோம்.. அவன் பின்னால தான் வரான்’ அப்பட்டமாக அந்த சந்தோஷம் அவன் முகத்தில் தெரிய பெருமிதமாக பின்னாலிருந்த ஆரனையும் சைடு மிரர் வழியாக பென்னியின் காரையும் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

 

 

“இத்தனை வருஷமா என் கூட இருக்கான். இதுக்கெல்லாம் கூட ஒரு அல்ப சந்தோஷம் இவனுக்கு!!” என்று ஹிமேஷின் நடவடிக்கைகளைப் பார்த்து இரு பக்கமும் தலையாட்டிய ஆரன் அதன் பின் அவனது கவனத்தை சாலையில் வைத்தான்.

 

 

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அவர்களது காரை சட்டென்று ஒரு இடத்தில் நிறுத்த சொன்னான் ஆரன்.

 

 

பின்னால் வந்திருந்த பென்னியும் இறங்கி நின்றவனை பார்த்து அவசரமாக ஓடி வந்து “எதும் வேணுமா சார்?” என்று பவ்யமாக கேட்க “முதல்ல கோயிலுக்கு போவோமா? அந்த செந்தூரனை பாக்கணும்!” என்றான்.

 

 

ஆரன் சொன்னவுடன் முதல்முதலில் இங்கே தொழில் செய்ய வந்திருப்பதால் கோவிலுக்கு செல்ல நினைக்கிறான் என்று பென்னி நினைத்திருக்க, ஆனால் அந்த கோவில் அவன் வாழ்வோடு தொடர்புடையது என்பதை அவன் மட்டுமே அறிவான்!!

 

 

திருச்செந்தூரன் மட்டுமல்ல அந்த செந்தூரரின் குடும்பம் கூட!!

 

 

ஆரன் சொல்லுக்கு மறு சொல் ஏது? அடுத்த நிமிடம் அவன் கூட வந்த பாதுகாப்பு ஆட்கள் பென்னி அனைவரின் கார்களும் திருச்செந்தூர் கோவிலை நோக்கி சென்றது. பென்னி அங்கு தனக்கு தெரிந்தவர்கள் மூலம் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்ய.. 

 

 

ஆண்டவன் முன்பு கை கூப்பி வணங்கவில்லை அவன்!!

 

இரு கைகளை கட்டிக்கொண்டு ஆண்டவனைத்தான் ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். மனதில் பல எண்ணங்கள் வெடித்து சிதறி அவனை நிலைகுலைய வைத்தது.

 

 

“நீ எனக்கு எவ்வளவு தடைகளை ரணங்களை கொடுத்தாலும் 

அதனை எல்லாம் கடந்து இதோ உன் முன்னால் தைரியமாக நிற்கிறேன் பார்!! இனி யாராலும் அவர்களை என்னிடம் இருந்து காப்பாற்ற முடியாது!” என்று இவன் பார்க்க.. 

 

 

செந்திலாண்டவரோ அமைதியான‌ புன்னகையுடன் அவனை பார்த்தார்.

 

‘நான் போடும் கணக்குகளை நானன்றி வேறு யார் அறிய முடியும்?’ என்று!! 

 

 

வேலனை பார்த்து தன் வேலையை முடிப்பேன் என்று உறுதி பூண்டவன், அத்தலத்தை சுற்றி வேகமாக வர, நொடி பொழுதில் அவன் மேல் வந்து மோதினாள் அழகிய பெண்ணொருத்தி!! 

 

 

அவளின் பார்வை அடி மேல் அடி எடுத்து வைக்கும் தன் அடி பிரதட்சணத்தில் கவனமாய் இருக்க..

 

பக்கவாட்டில் சட்டென்று திரும்பிய ஆரனை கவனிக்காமல் அவன் மீது மோத.. முருகா! முருகா! என்று உச்சரித்த அந்த மாதுளை மொட்டு இதழ்கள் அவன் நெஞ்சினில் வாகாக பதிய.. அவளது நெற்றியில் தீட்டியிருந்த குங்குமமும் திருநீறும் அவனது இளம் நீல நிற சட்டையில் அம்சமாக ஒட்டிக்கொண்டது. 

 

 

ஆரனின் வலு கைகள் அவளின் கொடி இடையினை இறுக்கியிருக்க..

 

அவளது தளிர் விரல்கள் அவனின் சட்டை காலரை பற்றியிருக்க.. அவளது கயல் விழிகளோ பயத்தில் இமையெனும் சிறகை மூடிக் கொள்ள.. அந்தோ பாவம்! ஆரனை அவள் பார்க்கவில்லை.

 

 

ஆனால் நம் ஹீரோவுக்கு அவளின் திவ்யதரிசனம் மிக நன்றாகவே கிடைத்தது. கூடவே பெண்மையின் ஸ்பரிசமும்!! வாசமும்!!

 

 

சட்டென்று “மயூரி…” என்று குரல் வர, கண்களை திறந்து அவனிடம் “சாரி! சாரி!” என்றவள் வேகமாக குரல் வந்த திசையில் “இதோ வரேன்!” என்று தன் அடிப் பிரதட்சணத்தை தொடர்ந்தாள்.

 

 

அப்பாடி!! நம் வேலையை செவ்வனே ஆற்று விட்டோமென்று செந்திலாண்டவர் முறுவலிக்க..

 

 

“மயூரி!!” என்று மெதுவாக கூறிப் பார்த்த ஆரன் அறியவில்லை.. அவள் செந்தூராரின் பேத்தி என்று!!

 

 

காரண காரியங்கள் அறிந்தா காதல் வரும்?!!

24 thoughts on “ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 2”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top