ATM Tamil Romantic Novels

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 3

3

 

 

 

‘ஆடிட்டர் வரதராஜன்!!’ அந்த போர்டை பார்த்தப்படி தான் கேட்டைத் தாண்டி உள்ளே கொண்டு நிறுத்தினாள் தனது வெஸ்பாவை மயூரி. வரதராஜனிடம்தான் ஜூனியர் ஆடிட்டராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள் இவள்.

 

தூத்துக்குடி, மதுரை, திருச்செந்தூர், கன்னியாகுமரி இந்த வட்டாரத்தில் உள்ள தொழிலதிபர்களுக்கு எல்லாம் ஆடிட்டிங் என்றால் முதல் சாய்ஸ் வரதராஜன் தான்!!

 

 

வழக்கம் போல அவரது ஜூனியர் நான்கைந்து பேர் அங்கு அமர்ந்திருக்க மயூரி அவர்களுக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு அமர்ந்து கொண்டாள்.

 

 

“உங்க குடும்பம் பக்கா பிளானிங் பாரேன்!! ஒருத்தர் தொழில்.. ஒருத்தர் வக்கீல்.. ஒருத்தர் ஆடிட்டிங்.. ஒருத்தர் அந்த ஷிப் மேனேஜ்மென்ட்.. இன்னொருத்தர் நகைக்கடை இப்படி ஒவ்வொருத்தரையும் ஒவ்வொருவிதமாக ஒவ்வொரு தொழிலில் ஈடுபடுத்திட்டாங்க வெளியில எதுக்கும் ஆளு தேடாமல்.. தேவைப்படாமல்” என்று சொல்லி சிரித்தான் சுரேஷ். 

 

 

மெல்ல சிரித்தவள் “எல்லாம் எங்க பெரிய அத்தையோட தொலைநோக்கு பார்வை!!” என்று விட்டு, நேற்று அவள் பார்த்து முடித்து இருந்த பிரபல துணிக்கடை ஒன்றின் ஆடிட்டிங் கணக்கை கொண்டு போய் அவளது சீனியரிடம் சமர்ப்பித்தாள்.

 

 

“வா வா.. மயூரி.. உனக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. அந்த ஜவுளி கடைக்காரர் காலையில் இருந்து நாலைந்து முறை போன் பண்ணிட்டார். நாளைக்கு டேக்ஸூக்கு சம்மிட் பண்ணனுமாம். ஒரே குளறுபடி பண்ணி வச்சிட்டு நம்மள தூங்க விட மாட்டேங்கிறானுங்க” என்று புலம்பியவாறே மயூரி நீட்டிய பைலை வாங்கி பார்த்தார்.

 

 

அவர்கள் ஆங்காங்கே கோட்டை விட்டுருந்த கணக்கை எல்லாம் நேர்படுத்தி, சில இடங்களில் வரி விலக்கு வருமாறு சில பல தர்ம காரியங்களுக்கு அனுப்பிய பணத்திற்கான ரசீதுகளையும் சரியாக வைத்து எல்லாத்தையும் ஒரு குறை சொல்ல முடியாத அளவு பக்காவாக ரெடி பண்ணி வைத்து இருந்தாள் மயூரி.

 

 

பத்து நிமிடம் பார்வையை விலக்காமல் அந்த முழு ஃபைலையும் பார்வையிட்ட வரதுவுக்கு அப்பாடா என்றிருந்தது. பின் அவரின் மிகப்பெரிய விஐபி கஸ்டமர்களில் இந்த ஜவுளி நிறுவனத்தாரும் ஒன்று. திருச்செந்தூர் மட்டுமல்லாமல் தென்மாவட்டங்கள் பலவற்றில் இவர்களின் கிளைகளை அவரது நிறுவனம் நிறுவி இருந்தது.

 

“குட் ஜாப் மயூரி!!” என்று பாராட்டினார்.

 

“தேங்க்யூ சார்! அப்போ நான் கிளம்புறேன். எங்க கம்பெனியில கொஞ்சம் எனக்கு வேலை இருக்கு” என்று அவள் கூறியவுடன் அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் அனுமதித்தார்.

 

 

காரணம் பெரும்பாலும் இம்மாதிரியான கேஸ்களை திறம்பட செய்து முடிப்பவள் மயூரியே!! கூடவே அவர்களுடைய சொந்த நிறுவனத்திலும் இவளது வேலை உள்ளதால், பகுதிநேர மட்டுமே இங்கே வேலை பார்ப்பாள். சில நாட்கள் நிறைய வாடிக்கையாளர்களின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய நிலைமையில் இருந்தால், அப்போது நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்பவள். அதனால் மயூரி மீது எப்போதுமே ஒரு தனி அபிமானம் வரதராஜனுக்கு உண்டு! அதிலும் செந்தூராரின் பேத்தி இப்படி தன்னிடம் வேலை பார்ப்பதில் ஒரு பெருமை வேறு!!

 

 

தனது விஐபி கஸ்டமர்களின் முதல் சாய்ஸாக மயூரியை தான் அழைப்பார்.

 

“என் ஜூனியர் பொண்ணு யாருனு நினைச்சீங்க? செந்தூராரின் பேத்தி!! திறமையை சொல்லவா வேணும்? ஆனாலும் அவ்வளவு பணிவான பொண்ணு!!” என்று ஆரம்பக்கட்ட அறிமுகமே அதிரடியாக தான் இருக்கும் அவளுக்கு. 

 

 

“செந்தூராரின் பேத்தியா?” என்று வாயை பிளப்பவர்கள்.. “செந்தூராரினின் பேத்தி உங்க ஆபிஸிலா பரவாயில்லையே?!” என்று ஆச்சரியப்படுபவர்களும் நிறைய உண்டு.

 

 

 

பொதுவாக அப்படி கேட்பவர்களை எல்லாம் வரதராஜன் கர்வம் பொங்க பார்த்தால், மயூரி ஒரு மென்னகையுடன் கடந்து விடுவாள். ஆனால் உள்ளுக்குள் அந்த ‘செர்ந்துராரின் பேத்தி!’ என்ற பெயரை தான் காப்பாற்றி வருவதில் நிச்சயம் பெருமை உண்டு!! கர்வம் உண்டு!! ஆனால் தலைகணம் கிடையாது அவளுக்கு!!

 

 

மயூரி என்பவள் வரதராஜனை பொருத்த வரை, செந்தூராரின் பேத்தி என்பதிலேயே பல விஐபிக்கள் தன்னிடம் வருகிறார்கள். அவள் ஒரு தங்க முட்டையிடும் வாத்து என்று நினைத்து இருந்தார்!!

 

 

என்னதான் ஒருவர் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் அவருக்கு என்று தனித்திறமை.. செயல்களில் ஒழுங்கு நேர்த்தி இருக்க வேண்டும்! அப்படி இல்லை என்றால் எத்தனை பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் இந்த ஓடும் உலகத்தில் நிலைத்திருக்க முடியாது!!

 

 

ஏனோ அவ்வளவு பெரிய பட்டப்படிப்பு படித்த வரதராஜனுக்கு கூட இந்த எண்ணம் வரவே இல்லை!!

 

அன்று மதியம் போல தங்கள் அலுவலகத்தை நோக்கி வெஸ்பாவில் சென்று கொண்டிருந்தவள், டிராஃபிக் சிக்னலில் நின்று கொண்டிருந்த போது, முதுகை துளைக்கும் கூரிய பார்வை அவளை குறுகுறுக்க செய்ய, சட்டென்று திரும்பி பார்த்தாள். ஆனால் அவளுக்குப் பின் நிறைய வாகனங்கள் இருந்தது. எது? யார்? என்று தெரியவில்லை! ஆனால் ஒரு அசௌகரிய உணர்வு! இது பெண்களுக்கு என்று இருக்கும் தனித்துவ உணர்வு! யாரேனும் நம்மை விடாமல் பார்த்தாலோ.. இல்லை வேறு மாதிரி எண்ணங்களில் பார்த்தாலோ அது ஒரு எதிர்மறை அலையாய் நம்மைத் தாக்கும். அப்படித்தான் உணர்ந்தாள் மயூரி இந்திராக்ஷி!!

 

அவள் எங்கே உணர்ந்தாள்? அவளுக்கு அருகில் இருந்த காரில் கருப்பு கண்ணாடி பின்னிருந்து அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த ராட்சஷன் என்று!!

 

 

அந்த ஆழ் நீல நிற பாவை, இமை சிமிட்டாமல் பாவையவளை தான் தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தது என்று!!

 

 

சற்று நேரத்தில் கிரீன் சிக்னல் விழ, அது எதற்காம்?

 

 

பெண்ணவளை தொடர்ந்து வரும் அந்த ராட்சஷன்.. அவனுக்கான கிரீன் சிக்னலா இருக்குமோ?? 

 

 

சிறிது நேரத்திலேயே அவளுக்கு அந்த குறுகுறுப்பு இல்லாமல் போய்விட, அமைதியாக தங்கள் அலுவலகத்தை நோக்கி சென்றாள்.

 

 

மதியம் நேரம்.. வீட்டில் இருந்து ஆண்களுக்கு உணவு வந்திருக்க அதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் நிமிலன் மெய்யறிவு குருபரன் மூவரும் பெரிய டிஸ்கஷனில் இருந்தனர். 

 

 

ராகவனோ புலியென பசியில் உறுமும் தன் வயிற்றை சாய்ந்தப்படுத்த முடியாமல் அதை பூனைக்குட்டியாய் பாவித்து தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். 

 

 

மூவரும் என்ன பேசுகிறார் என்று ராகவனின் காதில் விழவில்லை. பசி காதை அடைத்திருந்தது. கடைசியில் நிமிலன் “நீங்க என்ன சொல்றீங்க சின்ன மாமா?” என்று அவரை பார்த்து கேட்க.. புரிந்தால்.. கவனித்து இருந்தால்.. அல்லவா ஏதேனும் கருத்து சொல்வதற்கு?

 

 

அவரும் சீட்டில் நெளிந்தபடி அவருடைய குலதெய்வமான கருவேலப்பட்டி அய்யனாரை துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தார். இவர் பதில் சொல்லவில்லை என்றால், அதற்கும் மச்சானும் சகலையும் கூடவே மருமகனும் இவரை ஏதோ அற்ப புழுவைப் போல பாவிப்பார்கள்.

 

 

 அதோடு மட்டுமல்லாமல் இதை அவளது சின்ன அத்தையிடமும் பகிர்ந்து கொள்வான் நிமிலன். இரவு சாப்பாட்டுக்கு முன் அல்லது காலையில் சாப்பாட்டுக்கு முன் மோகனா இவரை நிற்க வைத்து ஒரு முழு நீள உரையாற்றி விட்டே சோற்றை கண்ணில் காட்டுவார். இதையல்லாம் அந்த நேரத்தில் அவர் கண்முன் மின்னி மின்னி மறைய.. கூடவே வீட்டில் இருந்து வந்த சாப்பாட்டு கேரியரும் அவரும் முன்னே வந்து வந்து செல்ல…

 

 

“அய்யோ ஆண்டவா!! என்னை காப்பாற்று!” என்று அவர் வாய் விட்டு புலம்பும் நேரத்தில் கதவைத் திறந்து கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தாள் மயூரி.

 

 

“அப்பாடா!! நம்ம புலம்பல் அந்த இறைவனுக்கு கேட்டுடிச்சு. கோடான கோடி நன்றி இறைவா உனக்கு!!” என்று அவர் மனதுக்குள் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு மருமகளை பாசத்தோடு பார்த்தார்.

 

 

“மணி என்ன ஆகுது? நீங்க எல்லாம் இன்னும் சாப்பிடலையா? உங்கள நம்பி சாப்பிடலாம் நானும் வந்து இருக்கேன். என் வயிற்றை காய போடாதீங்க பா” என்று தந்தையின் அருகில் நின்று அவள் சிணுங்க‌… பெண் பசி என்ற பிறகு வியாபார டிஸ்கஷன் ஆவது ஒன்றாவது என்று “சரி சரி வாங்க சாப்பிடலாம்” என்று அவர்கள் அறைக்கு சற்றுத்தள்ளி இருந்த டைனிங் ஹாலில் அமர்ந்தனர். மயூரி அனைவருக்கும் பரிமாறினாள்.

 

 

 

மீண்டும் அவர்கள் தொழில் பற்றிய பேச்சை எடுக்க “24 மணி நேரமும் தொழிலதிபர்களாக இருக்காதீங்க! அப்பப்போ எனக்கு அண்ணனாகவும் மாமாவும் அப்பாவும் சித்தப்பாவும் இருங்க!” என்று நால்வரையும் அவள் கண்டிக்க..

 

 

“சரி சரி மயூ குட்டி! நாங்க அத பத்தி பேசல.. உன்னோட வேலையெல்லாம் எப்படி போகுது? இன்னிக்கு அந்த ஜவுளி தொழிலதிபருக்கு பக்காவா செஞ்சு முடிச்சிட்டியா?” என்று நிமிலன் தொழிலை விட்டு அவள் தொழிலை கையில்.. எடுக்க மயூரி பக்கத்தில் ஏதும் கிடைக்குமா என்று இவனை அடிக்க என பார்வையாலே தேடினாள்.

 

 

“ஓகே.. ஓகே கூல் மயூ!!” என்று அவன் காதை பிடித்து தங்கையிடம் மன்னிப்பு கேட்டான்.

 

 

“பொலச்சி போ!!” என்றவாறு சாப்பிட்டு முடித்தார்கள். “ஆமாம் நீங்க மட்டும் இருக்கீங்க.. எங்க ரஞ்சனியை காணோம்?” என்று கேட்க..

 

 

“நல்லா கேட்ட போ அவ வரதே பாதி நாள். அந்தப் பாதி நாளும் காலையில் வந்து அட்டென்ஸை போட்டுட்டு, மதியம் சாப்பிட போறேன் வீட்டுக்கு போனானா அவ்வளவுதான்.. மீதி நாள் பார்லர் பிரண்ட்ஸோட ஷாப்பிங் சுத்தவே அவளுக்கு நேரம் சரியாக இருக்கும்” என்று அலுத்துக் கொண்டான் நிமிலன்.

 

 

பின் தங்கையின் காதருகே குனிந்து “இவள எல்லாம் வேலைக்கு அனுப்பாதீங்க என்று சொன்னாலும் பாட்டியும் சின்ன அத்தையும் கேட்க மாட்டேங்கிறாங்க. அவள் வேலைக்கு வருவதற்கு வராமலே இருக்கலாம். இங்கே வந்த நொய் நொய்னு என்னையும் வேலை செய்யவே விடமாட்டா.. இம்சையை கூட்டுவா.. இம்சை அரசி!” என்று அவளின் பட்டப் பெயரோடு சொன்னதைக் கேட்டு மயூரி க்ளுக் என்று சிரித்து வைத்தாள்.

 

 

“நீ இப்போ பேசுனதை அப்படியே கொஞ்சம் சத்தமா பேசினேனு வை?”

 

“ஆத்தா!!” என்று இரு கையையும் கூப்பி கும்பிட்டு, “அதன் பிறகு வேற வினையே வேண்டாம். ஒரு வாரத்துக்கு அம்மாவும் மகளும் வச்சி செய்வாங்க என்னை! ஆள விடு.. எனக்கு நிறைய வேலை இருக்கு. அதை விட எனக்கு காது ரொம்ப முக்கியம்!!” என்று நகர்ந்து விட்டான் நிமிலன்.

 

 

மாலை போல் அனைவரும் வீடு திரும்பும் போது தனது வெஸ்வாவை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு அண்ணனுடன் காரில் ஏறிக்கொண்டாள் மயூரி.

 

 

 வீடு திரும்புகையில் அண்ணனின் வதனம் எப்போதும் இருக்கும் அந்த மகிழ்ச்சி இல்லாதிருப்பதை பார்த்து “என்ன ஆச்சு நிகி.. ஏன் உன் மூஞ்சி கொரானா வந்த கொரில்லா மாதிரி இருக்கு.. கண்டிப்பா ஃபேமிலி பிராப்ளமா இருக்காது. ஏன்னா அதுல தான் நீ தலையே கொடுக்க மாட்டியே! என்ன ஆபீஸ்ல என்ன பிராப்ளம்?” என்று தமையனை சரியாக அறிந்து கேட்டாள் மயூரி.

 

 

“வரவர நீயும் வேதா அத்தை மாதிரியே மாறிட்டு வர.. உன் பேச்சும் சிந்தனையும் அப்படித்தான் இருக்கு!” என்று தங்கையின் தலையில் கைவைத்து ஆட்டியவன், மற்றொரு கையால் வண்டி ஓட்டியபடி வந்தான்.

 

 

 

“பேச்ச மாத்தாதே.. நிகி! என்ன விஷயம்னு சொல்லு” என்றாள் கராராக.. அப்பவும் அவன் மௌனம் சாதிக்க “ஏன் எனக்கு தெரிய கூடாதுன்னு நினைக்கிறியா? என்று கேட்டாள்.

 

 

“தெரிய வேண்டாம்னு எல்லாம் நினைக்கல மயூரி.. நீ தெரிஞ்சு கொள்ளுற அளவு பெரிய விஷயம் எல்லாம் ஒன்னும் இல்லை. ஜஸ்ட் எப்பொழுதும் கம்பெனி’ஸ் இடையே நடக்குற போட்டி தான். வேற ஒன்றும் இல்லை” என்று கூறியவன் அறியவில்லை பின்னாளில் கூறியிருக்கலாம் என்று வருந்துவான் என்று!

 

“பெரிய விஷயம் இல்லைன்னா இங்கே ஏன் முடிச்சு விழுந்து இருக்கு நிகி?” என்று அண்ணனின் நெற்றி புருவங்களுக்கிடையே ஒற்றை விரலால் அவள் தொட்டுக்காட்ட.. “போடி போக்கிரி!! பெரிய இவ இவ!!” என்று தங்கையை கலாய்த்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் வீட்டை நெருங்கினார்கள்.

 

 

திருச்செந்தூரின் கடல் அலைகளை பார்த்தபடி அமைந்திருந்த அந்த வீட்டின் பால்கனியில் அமர்ந்து இருந்தான் ஆரன் வித்யூத்!!

 

 

கைகளில் மெலிதாக புகையை கக்கி கனன்று கொண்டிருந்த அவனது ஆறாம் விரலை அவனது இதழ்களுக்கு இடையே வைத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சி புகையை வெளியிட்டவனின் எண்ணங்களுக்குள் நின்று சுழன்று சுழட்டி அடித்தாள் கோவிலில் பார்த்த அந்த பெண்!!

 

 

அவள் யார் என்ன என்று அறிந்துகொள்ள.. இவன் பென்னியை கூப்பிடு முன்னே அந்த கோவில் பிரகாரத்தில் எங்கோ மறைந்து போனாள் மாது!!

 

 

அவள் உனக்கானவள் என்றால் மீண்டும் உன் கண்களில் படுவாள் என்று அவன் உள்ளுணர்வு கூற.. 

 

 

“ஓஹோ!!! ஷிட் ஆரன்.. நீ எதுக்காக இந்த ஊருக்கு வந்த.. இப்போ இங்க என்ன செய்துக்கொண்டு இருக்க?” என்று அவனின் அறிவு அறிவுறுத்த..

 

 

இப்பொழுது பெரும்பாலும் அறிவின் பக்கமே செவி சாய்ப்பவன், சடுதியில் அந்தப் பெண்ணை மறந்து தனது வேலைகளில் ஆழ்ந்து விட்டான்.

 

 

வந்த முதல் நாளே அவர்கள் டீலிங் எடுத்த கப்பல் இன்னும் ஒரு நாளில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து விடும் என தகவல் வந்திருக்க.. அதனை ஏலம் விடும் வேலையை தான் ஆரம்பித்திருந்தான் ஆரன் பென்னியின் உதவிகொண்டு.. கூடவே குறிப்புகள் எடுக்க ஹிமேஷ்.

 

 

 

மீண்டும் இவர்கள் இருவரும் மோதுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தாமல் இருவருக்கும் வேலைகளை தனித்தனியே பிரித்து கொடுத்து அனுப்பினான்.

 

 

என்னதான் பகல் முழுதும் வேலை வேலை என்று ஓடிய மனது இரவில் ஓய்வெடுக்க தந்தையின் மடியைத்தான் தேடியது. ஆனால் சில வருடங்களாக அவனின் தந்தைக்கு இவனே தாயுமானவனாக போயிருக்க.. எங்கனம் இவன் துயில் கொள்ள மடி தேடுவான் தந்தையிடத்தில்..

 

மனம் பலதையும் நினைக்க அனைத்தையும் திரெட் மில்லில் ஓடி ஓடி விரட்டி அடித்தவன் வியர்வை ஆறாய் பொங்க, அதன் பின்னே உடல் ஓய்வெடுக்க கெஞ்ச.. பால்கனியில் வந்து அமர்ந்தான் சிகரெட்டோடு.

 

 

கொஞ்ச நேரம் கடலலைகளை வெறித்தவனின் நினைவலைகளில் வந்தாள்.. 

 

கொஞ்சும் கிளியாக கோவிலில் பார்த்த பாவை அவள்!!

 

ஆரன் கைகளில் விழுந்த கொடிமுல்லை!!

 

அதே பெண்ணை இன்று மீண்டும் சிக்னலில் பார்க்கும்போது மனம் மீண்டும் தடுமாற தான் செய்தது.

 

 

“அப்படி என்ன நீ என் மனதை தடுமாற செய்கிறாய் பெண்ணே? வேண்டாம்! வேண்டாம்! எட்டியே நில்.. நான் எட்ட முடியா வானம்!!” என்று கோபமும் அவள் மீதே!!

 

 

கொஞ்சம் கோபமும்.. 

 

கொஞ்சும் தாபமும்..

 

அணங்கவள் மீதே!!

 

ஆரன் அவனுக்கு!!

 

 

 

மறுநாளே..

 

செழுமையான சிவந்த கன்னங்களும்.. 

 

நீண்டு அகன்ற மான் விழிகளும்.. செதுக்கி வைத்த மாதிரி நீண்ட மூக்கும்..

 

வலது பக்க மூக்கில் மினுக்கும் சிறிய வைர மூக்குத்தியும்..

 

கலைந்த தலையும்.. விரிந்த கண்களுமாய்…

 

அவன் அணைப்புக்குள் முழுமையாக அவள் வருவாள் என்றோ..

 

அவனின் தயக்கம் தடை எல்லாம் உடைத்து மெல்ல ஏந்திழை அவளின் முகத்தை ஏந்தி இருளில் அவள் உதடுகளை தேடிக் கவ்வி கொய்வான் என்றோ.. 

 

 

இன்றோ அது தெரியாமல்.. அவளின் நினைவுகளிலேயே சுழன்றான் ஆரன் வித்யூத்!!

40 thoughts on “ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top