ATM Tamil Romantic Novels

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 5

 

5

 

 

ஆரனின் மயூபேபி.. இந்திராக்ஷி ஆனது எப்படி??

 

 

மயூ பேபி.. மயூ பேபி என்று குழைந்து குழைந்து அழைத்தவன், இன்று இந்திராக்ஷி என்று மானைக் கண்ட வேங்கையாக கண்களில் வெறியுடன் அழைக்கக் காரணம் என்ன??

 

 

மறுநாள் மதியம் வரை அனைத்தும் நன்றாகத்தான் சென்றது. அதன் பின் தான் அனர்த்தம் ஆனாது.

 

 

 

அங்கே செந்தூராரின் வீட்டில் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல், மயூரியை தெளிய வைத்து ஒருவழியாக சமாளித்து.. அவளை அறைக்குள் கொண்டு போய் தள்ளிவிட்டான் நிரஞ்சன். “அப்பாடி மிஷின் கம்ப்ளீட்!” என்று பெருமூச்சுடன் அவனும் தூங்கிவிட..

 

 

 

இங்கே மயூரி உறக்கத்தில் இருந்தாலும், கனவில் ஏதோ தோன்றி தோன்றி மறைந்தன.. மயூ பேபி.. என்ற கிறக்கமான அழைப்பும்.. இதழ் உரசல்களும்.. இறுக்கமான இடை அணைப்பும்.. தழுவல்களும்.. கழுத்து வளைவில் முகம் புதைத்தவனின் மெல்லிய கடித்தல்களும்.. என்று முகம் தெரியாத மாயவனிடம் சிக்கி சுழன்று கொண்டிருந்தாள்‌ பெண் கனவில் நினைவினை போல..

 

 

அவனின்‌ ஒவ்வொரு மயூ பேபி அழைப்பின் முடிவிலும் இதழ்களில் தரும் இச் இச் முத்தங்கள் அவனின் ஈரங்களை விட்டு செல்ல.. அரண்டு புரண்டு எழுந்து அமர்ந்தாள்.

 

 

வியர்வை ஆறாய் ஓடி இருக்க தொப்பென்று நினைந்திருந்தது அவளது இரவு உடை.. முகத்தில் எல்லாம் முத்து முத்தாக வியர்வை வழிந்து அவளது இதழ்களை ஈரமாக்கியிருந்தது. கனவுகளின் தாக்கத்தால் இதழ்களை நடுங்கும் விரல்களால் தொட்டவள், அங்கிருந்த ஈரத்தை உணர்ந்து இன்னும் விதிர்விதிர்த்து போனாள்.

 

 

“நோ.. நோ..” என்று‌ கண்ணாடி முன்னாடி சென்று அவளை ஆராயந்தாள். இதழ்களில் எங்கேனும் பல் பட்டு எரிகிறதா.. இல்லை இதழ்கள் நீண்ட நெடிய முத்தத்தில் வீங்கியே விட்டனவா.. கழுத்தோரம் அவன் கொடுத்த கடித்ததில் பற்தடம் பதிந்து விட்டனவா.. என்று அவள் இரவு உடையை தளர்த்தி முன்னும் பின்னும் ஆராய்ந்தாள்.. ஏதொ முதலிரவு முடித்து வந்த நங்கையாட்டம்.

 

 

மங்கையின் மனக் கலக்கத்திற்கு காரணமான மன்னவனோ அன்று இரவு வெகு நாளைக்கு பிறகு நிம்மதியாக தூங்கினான். 

 

 

பெண்மையின் மென்மை ஸ்பரிசமும் பெண்ணவளின் குழைவும்.. அவள் விழிகள் ஆடிய நர்த்தனங்களும்.. அவனுக்கு அப்படி ஒரு உவகையை தந்திருக்க.. அதை நினைத்துக் கொண்டே புன்னகையோடு உறங்கச் சென்றவனின் மனம் முழுவதும் மகிழ்ச்சியை வியாபித்திருக்க.. மறுநாள் காலையும் அதே சந்தோசத்தோடு எழுந்தான். 

 

ஆரன் அறிந்து ஒரு பெண்ணின் முதல் முத்தம்! இதழ் முத்தம்!! 

 

மும்பையில்.. பார்ட்டிகளில் தெரிந்த பழகிய பெண்களோடு நாகரிகம் என்ற பெயரில்.. பெயரளவில் கன்னம் இழைத்து கட்டிபிடித்து உதட்டை குவித்து தள்ளி நின்று முத்தமிட்டதோடு‌ சரி.. ஆனால் இவ்வளவு நெருக்கத்தில்.. பெண்ணின் இதழ்களை கொய்தது.. அதில் இரண்டற கலந்து லயித்தது.. அவள் இதழ் ரசம் பருகியது.. இதுவே முதல் முறை! 

 

 

முத்தத்தின் சுவையே அறியாத பெண்ணொருத்தி முதன் முதலில் ஒரு ஆணின் முத்தத்தை உணரும் போது எப்படி வினை புரிவாள்??

 

கூசி நெளிவாள்.. உணர்வின் பிடியில் துடிப்பாள்..

 

அன்பனவன் அருகாமையில் குழைவாள்.. அவன் கரங்களில் நெகிழ்வாள்.. இது எதுவும் அன்றில்லை அவளிடம்.. அவன் முத்தத்தை ஆரம்பித்ததுமே அவள்‌ ஆழ்ந்த மயக்கத்தில்.. அதை நினைத்தவனுக்கு அப்படி ஒரு புன்னகை!

 

 

“அடேய் ஆரன்.. அவளே போதையில் இருந்தாளட..” என்று அவனது மனம் எள்ளி நகையாட, முதல் முறையாக உதட்டை கடித்து வெட்க புன்னகை சிந்தினான் மாறன் அவன், அவனின் ரதியை நினைத்து.

 

 

எப்படி பார்த்தவுடன் எந்த பெண்ணை பிடித்தது என்று அவனுக்கு புரியவில்லை. கோவிலில் பார்த்த போது இருந்த சிறிய சலனம்.. சிக்னலில் பார்த்தபோது எப்படி இவள் என்னை சலனப்படுத்தலாம் என்ற மெல்லிய செல்லக் கோபம்.. நேற்றைய ஈர்ப்பாக மாறி எப்படி முத்தத்தில் முடிந்தது என்று அறியவில்லை ஆரன். ஆராயவும் அவனுக்கு விருப்பமில்லை.. மனம் செல்லும் வழியிலேயே அவளோடு பயணிக்க முடிவு செய்து விட்டான். அவள் விஷயத்தில் மட்டும்!!

 

 

இங்கு மயூரியோ இரவில் வராத தூக்கத்தை வா வா என்று வரவழைத்து.. ஒரு வழியாக உறங்கி காலையில் எழுந்தவளை மீண்டும் தொற்றிக்கொண்டது பதட்டம்.

 

தொண்டையினில் இனம்புரியாத மெர்குரி உருண்டைகள் உருண்டோடி வரள செய்வதாய்.. 

 

அவன் முத்தமிட்ட போது உரசிய உடல்கள் இப்போது நன்றாக நினைவில் நினைக்க சிலிர்ப்பாய்..

 

அணைத்திருக்கும் போது இடையை இறுக்கிய அந்த வலிய கரங்களின் நினைவு இப்போது இம்சையாய்..

 

 

அச்சச்சோ.. இன்னும் என்னவெல்லாம் செய்தானோ?

 

என்ற ஒரு தவிப்பு.!!

 

திரும்பவும் வந்துவிடுவானோ என்ற பயம்!!

 

திரும்பவும் அவனை நேரில் கண்டால்.. அடிவயிற்றில் சுரந்த அமிலம் மெல்ல மேலெழுந்து மார்புக்குழியில வந்து தகித்தது.

 

 

எப்பொழுதும் நாகரீகமான முறையில் தான் உடை அணிவாள் மயூரி. உடை அணியும் முன் மீண்டும் அவளது கைகள் கழுத்து பகுதியையும் உதட்டையும் தடவி சரி பார்த்துக் கொண்டாள். இருந்தும் காலர் வைத்த சுடியும்.. ஃபுல் ஸ்லீவ் என இறங்கி வந்தவளை வித்தியாசமாக யாரும் பார்க்கவில்லை என்றாலும்.. இவளுக்கோ அவர்கள் பார்வை தன்னையே இனிப்பை மொய்க்கும் ஈக்கள் என சுற்றுவதை போல இருந்தது.

 

 

ஒருவழியாக சாப்பாட்டை பேருக்கு கொறித்து வேலைக்கு கிளம்புறேன் என்று தனது வெஸ்பாவை எடுத்து வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் தான் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது அவளால்..

 

 

“எல்லாம் அந்த நிரஞ்சன் பக்கியால் வந்தது. இவன் எதுக்கு என்னை அவன் பிரண்டு கொடுத்த பார்ட்டிக்கு என்ன இழுத்துட்டு போனான்? தெரியலையே.. எல்லாம் சின்னத்த வேலையா தான் இருக்கும். என்னை இவனோடு இப்படி ஜோடியா சேர்த்து சேர்த்து வெளியில் சுற்ற வைத்து கல்யாணத்தில் கொண்டு வந்து விடலாம் என நினைக்கிறார்கள். அதெல்லாம் இந்த மயூரியிடம் நடக்காது. இவனால் நேத்து என்னென்ன ஆச்சு? இரு டா மகனே என் கையில் மாட்டு நீ!” என்று காலையில் சீக்கிரமே தந்தைமார்களோடு வெளியே சென்றுவிட்ட நிரஞ்சனை வாயில் போட்டு அவலென இடித்துக் கொண்டே வந்தாள் அவள் வேலை செய்யும் இடம் வரும்வரை..

 

 

வேலையில் முழுதாக மனது ஈடுபட முடியவில்லை அவளால். சட்டென்று யாரேனும் அருகில் வந்தால் கனவின் தாக்கம் வரவும் விதிர்விதிர்த்து போனாள். 

 

“ஒழுங்கா வேலை செய்யக் கூட விட மாட்டேன் என்கிறானே அவன்? யார் அவனு கூட எனக்கு தெரியலையே?” என்று வாய்விட்டு புலம்பாத குறைதான்.

 

ஆரன் அவன் தான் கனவின் நாயகன்‌ என்று அறியாமல்..

 

காலையில் எழுந்து வழக்கம்போல அவனது தந்தைக்கு கால் செய்ய அப்பொழுதுதான் பிசியோதெரபிஸ்ட் வந்து முடங்கிக் கிடந்த அவரது கால்களுக்கும் மற்ற கைக்கும் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். இவன் அவர்களை தொந்தரவு செய்யாமல் வீடியோ காலில் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். தந்தைக்கு உதவிக்கு என்று இருவரை அவன் நியமித்திருக்க அவர்கள் மூலம்தான் இந்த காலை கலந்துரையாடல்..

 

 

அவர்கள் சென்றபின் மகனிடம் காலை வாழ்த்து சொன்னவர் பாதியிலேயே நிறுத்திவிட்டு மகனை தான் கூர்ந்து கவனித்தார். இந்த இடைப்பட்ட நாட்களில் அவன் முகத்தில் இல்லாத அந்த பழைய சோபையும் கண்களில் தெரிந்த மகிழ்ச்சியும் அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அதை பற்றி எதுவும் கேட்கவில்லை. கேட்டாலும் அவன் சொல்ல மாட்டான் என்பதை அவர் அறிவார். அதனால் அவனை அவதானித்தப்படியே பேசினார். இவனும் பொதுவாக தொழில் விஷயங்கள் அவரது உடல்நிலை பற்றி கேட்டுக் கொண்டதோடு முடித்து விட்டான்.

 

 

 

 

காலை புதிதாக கட்டப்பட்டுள்ள அவனது ஆறு அடுக்கு அலுவலகத்தில் வெளியே நின்று ஒருமுறை அண்ணார்ந்து பார்த்துவிட்டு உள்ளே சென்றான் ஆரன். செந்தூராரின் அலுவலகம் ஐந்தடுக்கு என்று அவனுக்கு தெரியும். அதனாலதான் அவர்களோடு ஒரு அடுக்கு கூட கட்டி இருந்தான். 

 

 

காலையில் பென்னி வந்திருக்க அவனிடம் நேற்று சந்தித்தவர்களை பற்றி யார் என்ன எப்படி என்று விவாதித்துக் கொண்டிருந்தான். “இந்த முறை நான் டீலிங்கை ரெண்டா பிரிச்சு குடுக்கலாம்னு இருக்கேன் பென்னி.. முதல் டீலிங் கப்பலை உடைக்க.. நாம நேற்று பார்த்தவர்களில் ரெண்டு மூணு பேரை செலக்ட் பண்ணி இருக்கேன். அவங்கள ஒருத்தவங்களோட கப்பலை உடைப்பதற்கான டீலிங் போடப்போறேன். அடுத்து அப்படி உடைக்கப்பட்ட பாகங்களை விற்க.. அதை வாங்குவதற்கு இன்னும் சில பேரை வைத்து இருக்கேன். அவங்களில் மொத்தமாகவோ இல்லை தனியா தனியாகவோ டீலிங் போட்டு அதை விற்கலாம்னு இருக்கேன்” என்று கூறியவன் யோசனையாக பார்த்தான் பென்னி.

 

 

“சொல்லு பென்னி.. என்ன யோசனை? என்னடா இவன் கிறுக்கன் மாதிரி இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் பிச்சு பிச்சு கொடுக்குற மாதிரி கொடுக்கிறான் யோசிக்கிறியா? எல்லாத்தையும் ஒரே ஆள்ட்ட விட்டா இவ்வளோ தலைவலி நமக்கு வராது என்று யோசிக்கிறியா?” என்று அவனின் யோசனையை இவன் பின்பாயின்ட் செய்ய..

 

 

“ஆமாம் சார்!” என்று தலையாட்டினான் அவன். 

 

 

“அத்தனையும் அப்படியே தூக்கி ஒருத்தங்க கையில் கொடுத்தா.. அந்த பெரிய புள்ளி ஒருத்தரோட மட்டும்தான் எனக்கு டீலிங்கும் நட்பும் இருக்கும்‌. ஆனால் இதே நான் இந்த மாதிரி பிரிச்சு பிரிச்சு கொடுத்தேனா இந்த திருச்செந்தூர் தூத்துக்குடி திருநெல்வேலி இருக்கிற சின்ன சின்ன வியாபாரிகளில் இருந்து பெரிய தொழிலதிபர்கள் வரைக்கும் எனக்கு அறிமுகம் கிடைக்கும். அது தான் தொழிலுக்கும் நல்லது” என்று கூறிய ஆரனை மெச்சுதலாக பார்த்தான் பென்னி.

 

“சார் இன்னைக்கு மாலை ஒரு மீட்டிங் இருக்கு. இந்த கப்பல் கட்டுமான சங்கத்தில் இருந்து ஏற்பாடு செஞ்சிருக்காங்க.. இங்குள்ள பெரிய தலைகள் எல்லாம் இந்த மீட்டிங்கு வருவாங்க.. நீங்களும் கலந்து கிட்டீங்கன்னா அவங்களோட அறிமுகமும்.. நட்பும் உங்களுக்கு கிடைக்கும்” என்றான் பென்னி.

 

 

‘நேற்றுதான் ஒரு பார்ட்டி என்று மறுபடியுமா?’ என்று கேட்டு வராமல் இருந்து விடுவானோ என்று சற்று பயத்தோடுதான் சொன்னான் பென்னி.

 

 

 

“கண்டிப்பா பென்னி!! கண்டிப்பா!! இந்த மீட்டிங்கில் நான் கலந்துக்கிட்டே ஆக வேண்டும். அப்பதான் என்னோட எதிரிங்க யார்? நண்பர்கள் யார்? என எல்லாரையும் நல்லா தெரிஞ்சுக்க முடியும்!” என்று கண்கள் பளப்பளக்க அவன் கூறியதைக் கேட்ட பென்னியின் கண்களுக்கு ஏதோ வேட்டையாடும் வேங்கை போலவே ஆரன் தெரிய.. “சார்….” என்று தொண்டை வரள அழைத்தான் பென்னி.

 

 

 

சட்டென்று தனது முகத்தை நார்மல் ஆக்கிக் கொண்டு அவனை பார்த்து ஒற்றைக் கண்ணை சிமிட்டினான் ஆரன். “தொழில்துறையில் யார் யார் நமக்கு போட்டியாக இருக்காங்கனு தெரிஞ்சுக்கணும் இல்லையா பென்னி?? அதை தான் சொன்னேன்!!” என்று கூறி புன்னகைத்த ஆரனை பார்த்தவனுக்கு சடுதியில் மாறும் அவனது மாற்றத்தை கண்டு ஏன் என்று புரியவில்லை.

 

 

“ஓகே பென்னி.. மீட்டிங் போகும் போது நான் உங்களோட ஜாயின் பண்ணிக்கிறேன். அதுவரைக்கும் முதல் டீலிங்கு இதுல மூணு பேரை செலக்ட் பண்ணி வச்சிருக்கேன். அவங்களைப் பத்தின ஃபுல் டீடைல்ஸ் இந்த டீலிங்கு அவங்க எவ்வளவு கோட் பண்ணுவாங்கனு.. எல்லா டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி கொண்டுட்டு வாங்க” என்று அவன் முன்னே ஒரு பேப்பரை நீட்டினான் ஆரன்.

 

 

“சரி சார்” என்று அந்த பேப்பரை வாங்கிக் கொண்டு வெளியே சென்றான் பென்னி.

 

மனம் முழுவதும் பழைய நினைவுகள் கசடாய் பரவ.. எழுந்தவன் ஜன்னல் வழியே வெளியே வெறித்தான். 

 

 

“வந்துட்டேன் செந்தூராரே.. இதோ இன்னைக்கு உங்க வீட்டு ஆட்களை நேர்ல பார்க்கப் போறேன்! ஜஸ்ட் வெயிட் ஃபார் ஆரன் ஆக்சன்!” என்றவனின் வார்த்தைகள் கூர் வாளை போல வந்தது.

 

 

“பழிவாங்குவதையே நினைத்து உடலை கெடுத்துக் கொள்ளாதே கண்ணா! சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்!” என்று தந்தையின் வார்த்தைகள் காதில் ஆட.. 

 

 

“நான் மறந்தாலும் என் உணவு வேளைகளை நீங்க மறக்க மாட்டேங்கிறீங்க ப்பா..” என்று சிரித்துக்கொண்டவன், மதிய உணவு உண்ண அருகிலிருந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றான்.

 

 

மதியம் வரை தாக்க பிடித்தவள் அதற்கு மேல் முடியாது என்று நிரஞ்சனை அழைத்து “வந்து ஒழுங்கு மரியாதையா பிக்கப் பண்ண வா!” என்று அவள் பற்களை கடித்து பேசியதிலேயே.. “அய்யோ.. எஸ்கேப் ஆகலாமுனு பார்த்த மாட்டிகிட்டோமே.. இவ பெரியப்பா மாமா கிட்ட சொன்னா நாம அவ்வளவுதான்!” என்று அவள் சொன்னப்படியே காரோடு அவள் ஆபீஸின் முன்னால் நின்றான் நிரஞ்சன்.

 

 

 

தனது வெஸ்பாவை வரதராஜன் ஆபீஸ்லேயே விட்டு விட்டு அவனை முறைத்துக் கொண்டே காரின் முன்பக்கம் ஏறி அமர்ந்தாள் மயூரி. 

 

 

மயூரி.. மயூ.. மயூ.. என்று அவள் கெஞ்சலாக அழைத்து சமாதானம் செய்ய முனைய..

 

 

“முதல்ல ஒரு ரெஸ்ட்டாரெண்டுக்கு வண்டியை விடு டா.. பசி உயிர போகுது. முதல்ல என்‌ வயித்த கவனிக்கிறேன். அப்புறம் உன்னை கவனிக்கிறேன் டா” என்று முஷ்டியை முறுக்கி காட்டவும்.. சிறுவயதிலிருந்து சட்டென்று கோபம் வந்தால் கையை நீட்டி விடுவாள் மயூரி. அதனால் பயத்துடனே இவனும் ஒரு நல்ல ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான்.

 

 

அந்தப் பயம் இவளை கொண்டு மட்டும் இல்லை.. இவள் ஒரு வார்த்தை சொன்னால், இவள் அண்ணன் நிமிலனும் நம்மை போட்டு புரட்டி எடுத்து விடுவானே என்று அவனை கொண்டும் தான்.

 

 

இவர்கள் ஒரு டேபிளை தேர்வுசெய்து எதிரெதிராக அமர்ந்து உணவுண்டு கொண்டிருக்க.. அப்போது மதிய உணவுக்காக அதே ஹோட்டலுக்குள் நுழைந்த ஆரனின் கண்களில் இவர்கள் விழ.. நேற்று அவளது பேச்சிலிருந்து நிரஞ்சன் அவளுக்கு அத்தை மகன் என்றும் கல்யாணம் புரோபோசல் இவர்களுக்குள் வரலாம் என்றும் புரிந்து இருந்தான். அதைத் தகர்க்க எண்ணம் கொண்டு நிரஞ்சனை பார்த்து கையசைத்து “ஹாய் நிரஞ்சன்!!” என்று அவன் அருகில் அமர்ந்தான்.

 

 

முதலில் ஆரனை சட்டென்று ஞாபகம் வராமல் முழித்தவன், அதற்கு பின் ஞாபகம் வந்தவனோ இன்னும் திருதிருவென்று முழித்தான் எதிரே இருந்த மயூரியை பார்த்தவாறு..

 

 

“அப்புறம் இவங்க உங்க தங்கச்சி தானே? போதை எல்லாம் தெளிஞ்சிட்டா? வீட்டுல ஒன்னும் சொல்லைல..” என்று அவன் குட்டை போட்டு உடைக்க..

 

 

தங்கச்சியில் நிரஞ்சனுக்கு புரை ஏற வைத்தவன்..

 

 

போதை தெளிஞ்சிடுச்சா என்றதில் மயூரிக்கு வாயில் வைத்த உணவு விக்கி கொண்டது.

 

 

க்க்.. க்க்.. க்க்.. என்று அவள் விக்க.. தண்ணீரை அவள் பக்கம் தள்ளியவன், அவளை பார்த்து உதட்டை நாவினால் ஈரம் செய்து காட்ட.. அவ்வளவு தான் மயூரிக்கு நேற்று நடந்தது முற்றிலும் புரிந்து போக, ‘இவன் தான் அவன்!’ ‘இவனே தான்!’ என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக தெளிந்தாள்.

 

 

தெளிந்த நொடி.. கண்கள் அவனை எதிர்கொண்டு பார்க்க முடியாமல் பட்டாம்பூச்சி சிறகுகளென அவள் இமைகள் அடித்துக் கொள்ள… அங்குமிங்கும் நிலைக்கொள்ளாமல் அலை பாய.. “வர்ரே வாவ்…” என்று முணுமுணுத்த அவன் இதழ்கள் அவள் முகத்தை விட்டு அகலவில்லை. அள்ளி அள்ளி பருகினான் இன்று கண்களால் அவளது அழகினை.. விழிகளின் நர்த்தனங்களை.. தெவிட்டவில்லை இன்னும் இன்னும் வேண்டும் என்பதாய் அவன் மனது எதிர்பார்த்தது.

 

 

இவன் விழிகளால் அவளை பருக..

 

அவள் இவனை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற.. இவர்களின் இந்த பரிமாற்றங்களை கண்டுக் கொள்ளாமல் நிரஞ்சன் பாட்டுக்கு நேற்று நடந்தவற்றை பேசிக் கொண்டிருந்தான்.

 

 

மயூரியின் அவஸ்தையான விழியசைவு, 

 

வறண்ட உதடுகளை நாவினால் ஈரப்படுத்திக் கொள்ளும் பாங்கு..

 

ஏறி இறங்கும் தொண்டைக்குழி..

 

கழுத்து நரம்புகளின் மெல்லிய துடிப்பசைவு..

 

படபடப்பில் விம்மியெழும் நெஞ்சின் நிமிர்வையும் பார்வையால் விழுங்கினான் ஆரன் இடது கையால் கன்னத்தை தாங்கி..

 

 

இரவின் கடைசி சொட்டு

 

தீரும்வரை நின் இதழ்களை

 

பருகி முடிக்க வேண்டுமடி ரதியே!!

 

என்று!!

 

 

அதற்குள் பென்னிடமிருந்து ஆரனுக்கு போன் வர.. “ஓகே ஓகே ஐ வில் பில் தேர் இன் 10 மினிட்ஸ்” என்று அருகிலிருந்த இருவரிடமும் “அர்ஜென்ட் வொர்க் கைஸ்.. கேட்ச் யூ லேட்டர்!!” என்று நிரஞ்சனிடம் கையை காட்டியவன், மயூரி பக்கம் திரும்பி “பை” என்று வேகமாக உரைத்தவன் “மயூ பேபி!!” என்று உதட்டை அசைத்து கூறிவிட்டு சென்றான்.

 

 

பசியே மறந்துபோனது பாவைக்கு அவனின் சீண்டலில்..

 

 

அதிலும் வர்ணஜாலம் காட்டும் அவனின் ஆழ்நீல நிற பாவை.. பெண்ணவளை ஆழியென தன்னுள் இழுத்தது.

 

 

“அய்யோ! ஹி இஸ் வெரி டேன்ஜரஸ்! வெரி வெரி டேன்ஜரஸ்!!” என்று தன்னை அறியாமல் அவள் வாய் முணுமுணுக்க..

 

 

“என்னாச்சு மயூரி?” என்று கேட்ட நிரஞ்சனை.. அருகிலிருந்த போக்ஸ் ஸ்பூன் மற்றும் சிறு கத்தி எடுத்து ஒவ்வொன்றாக அவன் மேல் எறிந்தாள் மயூரி. 

 

 

“எல்லாம் உன்னால தான் டா!! உன்னால தான்!! உன்னை யாருடா அந்த பார்ட்டிக்கு என்னை கூட்டிட்டு போக சொன்னது? எல்லாம் உன்னால தான்!!” என்று அவனுக்கு பார்ட்டியில் ஜீஸூக்கு பதில் மதுவை மாற்றி குடித்து விட்டதால் புலம்புகிறாள் என்று நினைத்தான்.. மாதுவின் மனம் அறியாமல்.. 

 

 

 

மாலை போல தன்னை சிரத்தை எடுத்து அலங்கரித்துக் கொண்டவன் மீண்டும் ஒரு முறை ஆறடி கண்ணாடியில் நிறைத்து நிற்கும் தன்னை ஒருமுறை பார்த்து திருப்தி கொண்டான். பென்னியோடு அந்த கப்பல் கட்டுமான சங்கம் நடத்தும் விழாவுக்கு சென்றான்.

 

 

போகும் வழியில் மொபைலில் நோண்டிக் கொண்டே வந்தவனின் கண்ணில் பட்டது முத்துக்களால் செய்யப்பட்ட வண்ணத்துப்பூச்சி போன்ற அழகிய பென்டன்ட்டும் காதணிகளும்.. அதை பார்த்த உடனே ஆரனுக்கு மயூரியின் கண்கள் ஞாபகம் வர யோசிக்காமல் உடனே ஆர்டர் செய்து விட்டான்.

 

 

விழா அரங்கத்திற்குள் சென்றவனை அங்குள்ள சிலர் அடையாளம் கண்டுகொண்டு கைகுலுக்கி பேச.. இவன் பின்னே வந்த இரண்டு பாடிகாட்ஸை வாயிலில் நிறுத்திவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தான். 

 

 

முதலில் அங்குள்ள செயலர் தலைவர் பொருளாளர் என்று ஒவ்வொருத்தராக பேசி அதன் பின்னே விழா முடித்து, தொழிலதிபர்கள் ஒருவருக்குள் ஒருவர் அறிமுகப்படுத்தி பேசிக் கொண்டிருக்கும்போது தான் இவனுக்கு அழைப்புக் கொடுத்த செயலாளர் சங்குமணி.. செந்தூராரின் குடும்பத்தை அவனுக்கு அறிமுகப்படுத்தினார்.

 

 

 

இந்த ஒரு தருணத்திற்காக தானே காத்திருந்தான். இதில் குருபரனை மட்டுமே அவனுக்கு தெரியும். வைத்த கண் வாங்காமல் அவரைத்தான் பார்த்தான். கூடவே மெய்யறிவன், ராகவன், நிமலன் நின்றிருக்க.. அவர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தினார் சங்குமணி..

 

 

 

மெல்ல தலையசைப்புடன் அவர்களிடம் கைக்குலுக்கியன் மனதில் எழுந்த வன்மத்தை கண்களில் காட்டாமல், சிரித்த முகத்தோடு அறிமுகமாகிக் கொண்டான்.

 

 

அவர்களுக்கும் இவன் ஏவி குரூப்ஸ் என்று அறிந்தவுடன் ஒரு மெல்லிய ஆச்சரியம் கூடவே போட்டியாளன் என்ற நினைப்போடு தான் அவர்களும் பார்த்தார்கள்.

 

 

மெல்ல தலையசைப்புடன் அவர்களிடமிருந்து விலகி மற்றவருடன் இவன் பேசும்

 

அந்த சமயம் தான் ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழைந்தான் நிரஞ்சன்.. “சாரி சாரி லேட்டாகிடுச்சு மாமா” என்று குருபரனிடம் கூறியவாறு..

 

 

மாமாவா?? மாமா என்றால் இவனும் இந்த குடும்பத்தவனா???

அப்படியென்றால் மயூரி.. என்று நினைத்தவனின் கண்கள் வலியில் இறுக மூடிக் கொண்டது. சில நிமிடங்கள்.. கழித்து திறந்தவனின் கண்களில் வன்மம் மட்டுமே!!

 

தொடரும்…

65 thoughts on “ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top