ATM Tamil Romantic Novels

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 6

 

6

 

 

சங்க விழாவில்.. 

நேரம் நெருங்க நெருங்க ஆரனால் அந்த வலியை.. மயூரி அவர்கள் வீட்டு பெண் என்ற‌ உண்மையை நிதர்சனத்தை தாங்க முடியவில்லை.

 

முதல் முதலாக அரும்பு விட்ட காதல்.. விரிந்து மலர்ந்து மணம் பரப்பும் முன்னால்.. காய்ந்து கருகியது போன்று உள்ளுக்குள் தகித்தது ஆரனுக்கு.

 

அவ்வப்போது யாரும் அறியாமல் தன் இடது பக்க நெஞ்சை நீவி கொண்டான். பேசும்போது நிறைய கவனச்சிதறல் வந்தது. தலையைக் கோதி.. உதட்டை கடித்து.. நெற்றியைத் தேய்த்து.. புருவத்தை நீவி.. என்று அவனது அலைப்புறுதல் அப்பட்டமாக தெரிந்தது.

 

 

எவ்வளவு எதிர்பார்ப்புகளோடு அங்கு இருக்கும் தொழிலதிபர்களின் நட்பையும் கவனத்தையும் கவர்ந்து விட வேண்டுமென்றும்.. தனித்துவமாக தெரிய வேண்டுமென்றும்.. தன்னை அலங்காரப்படுத்தி தயார்படுத்தி வந்திருக்க.. மயூரி என்ற ஒற்றை சொல் அவனை தடம் புரள வைத்தது.

 

 

“அவ்வளவு இளகிய மனமா ஆரன் உனக்கு? நோ.. டோண்ட்‌ டவுன் ஆரன். பீ ஸ்ட்ராங்.. அண்ட் ஸ்டே ஸ்ட்ராங் ஆரன்!” என்று‌ அவனுக்குள் உறுப் போட்டு கொண்டவன்

அதற்கு மேல் அங்கே இருக்க வேண்டுமா என்று அவன் மனது கேட்க.. இல்லை.. வேலை.. லட்சியம் முக்கியம் என்று அறிவு எடுத்துரைக்க.. முயன்று தன்னை கட்டுப்படுத்தி வரவழைக்கப்பட்ட புன்னகையோடு அங்கிருந்தவர்களோடு மீண்டும் உரையாடி விட்டு தான் கிளம்பினான். அப்பவும் பெருமானவர்கள் எல்லாம் அங்கே தான்.. விருந்து முடியகூட இல்லை.

 

 

அவனும் அன்பும் பாசம் நேசம் கொண்ட எதார்த்த மனிதன் தான். ஆனால் அது எல்லாவற்றையும் விட அந்தப் பழிவாங்கும் வெறி சற்று அதிகமாக இருந்து அவனை இவ்வளவு தூரம் முனைப்பாக செயல்பட வைத்தது. இப்போது அவனுள் இருந்த எதார்த்த மனிதன் சற்றே உள்ளுக்குள் மறைய, இந்த பழி வெறி கொண்ட அசுரன் தலையெடுத்தான்.

 

 

தன்னை அழைத்த பொருளாளர் சங்குமணியிடம் கூறிவிட்டு ஆரன் பார்க்கிங்கை நோக்கி வரவும்.. அதே சமயம் நிமிலன் வரவும் சரியாக இருந்தது.

 

 

போன் பேசிக் கொண்டே வந்து கொண்டிருந்தான். “ஓகே.. ஓகே நான் வரேன்! நீ வெயிட் பண்ணு.. வண்டிய உங்க ஆபீஸ்ல போட்டுடு. அப்புறம் மெக்கானிக் வைச்சு ரிப்பேர் பண்ணிக் கொள்ளலாம்.. இதோ கிளம்பிட்டேன் மயூரி.. இதோ வண்டி எடுக்க போறேன்!” என்று அவன் பேச்சில் இருந்தே மயூரியை அழைக்க செல்கிறான் என்று புரிந்தது. எதிர்ப்பட்ட ஆரனிடம் எவ்வாறு முறைத்துக் கொண்டு செல்வது என்று நாகரீகம் கருதி மெலிதாக புன்னகைத்துவிட்டு நிமிலன் நகர.. அந்த புன்னகை கூட பஞ்சமானது ஆரனின் முகத்தில்..

 

அதன்பின் வண்டி பஞ்சரான மயூரியை அழைத்துக்கொண்டு ஆராதனாவை அழைக்க அவர்கள் கடை சென்ற பொழுதுதான் அந்த வண்ணத்துப்பூச்சி பென்டனை அவள் பார்த்து ஆர்டர் செய்ய விருப்பம் கொள்ள.. ஆராதனா அது ஏற்கனவே விற்பனையாகி விட்டது என்று கூறினாள். அதை ஆரன் தான் வாங்கி இருக்கிறான் என்று அறியவில்லை.. அந்த வண்ணத்துப்பூச்சி சிறகடித்து அவளிடம்தான் வரப்போகிறது என்றும் அப்போது அவளுக்குத் தெரியவில்லை.

 

இப்போதைக்கு ஆரன் அலுவலகத்தின் ஆறாவது மாடி தான் அவனது வசிக்கும் தளம்.. காலை இரவு என்று இரு வேளை தந்தைக்கு மறக்காமல் அழைத்து விடுவான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும்.. இப்பொழுது தந்தையிடம் பேச அவனுக்கு மனதில்லை. தன் முகத்தை வைத்து ஏதோ சரியில்லை என்று நிச்சயம் கண்டு கொள்வார். ஆனாலும் தந்தையை தவிர்க்க இயலாது என்று வெகுநேரம் சென்றே தந்தைக்கு அழைத்தான். அதுவும் அவர் துயில் கொள்ளும் நேரத்தை அறிந்து அந்த நேரத்தில்..

 

“சாரிப்பா! ஒரு பார்ட்டி.. அதான் லேட் ஆகிடுச்சு!” என்று ஆரம்பித்தவன் அங்கு சந்தித்தவர்களைப் பற்றியும் செந்தூராரின் குடும்பத்தில் வந்தவர்கள் பற்றியும் தந்தையிடம் சொல்லிக்கொண்டு இருந்தான். பெரும்பாலும் அவர் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து.

 

 

விஜயேந்திரனுக்கு அவன் சொல்வது ஒரு புறம் மூளையில் சென்று பதிவாகி கொண்டிருந்தாலும், அவரது கண்கள் மகனின் முகத்தை தான் ஆராய்ந்து கொண்டிருந்தது. காலையில் அவர் பார்த்த மகிழ்ச்சிக்கு பதில் வலி தெரிந்தது கண்களில்.. மலர்ந்து சோபையாக இருந்த அவனது முகம் வாடிய மலரை போல கூம்பி இருந்தது. மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் வித்தியாசம் தெரியாமல் இருக்கலாம் பெற்றவர் அறியாததா மகனின் மனதை..

 

 

சொல்ல வேண்டியதாக இருந்தால் அவனை சொல்லுவான் என்று “சரி கண்ணா!! எப்பவும் வேலையே நினைத்து யோசிச்சுக்கிட்டு இருக்காம.. மனசை ரிலாக்சா வச்சுக்கோ! திருச்செந்தூரை சுத்தி பாக்குறதுக்கு நிறைய இடம் இருக்கு.. அப்பப்போ ரிலாக்சேஷனுக்கு அங்க போயிட்டு வா.. எப்போதும் வேலை வேலைன்னு அது பின்னே ஓடாதே!!” என்று மறைமுகமாக மகனுக்கு ஆறுதல் அளித்தார்.

 

 

“சரி ப்பா.. சரி ப்பா..!!” என்று தந்தையிடம் தலையாட்டியவன் அவர் போனை வைத்து அடுத்த நிமிடம் ஆவேசமாகி அருகிலிருந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்தான். நொடியில் தன் கட்டுப்பாட்டை இழப்பவன் எல்லாம் இல்லை. கோபம் அதிகம் வரும் தான். ஆனால் தற்போதெல்லாம் அதைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டிருந்தான். இன்று கற்றது அனைத்தும் கை கடந்து போய் இருந்தது.

 

 

எப்படி? எப்படி ஏமாந்தேன்? அந்த வீட்டுப் பெண் என்று தெரிந்தும் எப்படி என் மனது அவள்பால் சென்றது? என்று மீண்டும் மீண்டும் அவனுக்கு தன் மீது கோபம். ஆனால் காதல் என்பது யார்? என்ன? எப்போது என்று ஜாதகம் பார்த்தோ நல்ல நேரம் கெட்ட நேரம் என்று நேரம் பார்த்தோ வருவது இல்லையே..

 

அழகிய பூ மலரும் அந்த நேரத்திலோ..

மேகத்தினிடையே நிலவவள் முகத்தை காட்டி மறையும் கனத்திலோ..

நட்சத்திரங்கள் கண் சிமிட்டும் நாழிகைகளிலோ..

கரு மேகத்திலிருந்து மண்ணை தொடும் மழை பொழியும் ஷனத்திலோ..

குளிர்ந்த வாடைக்காற்று உடம்பைத் தழுவி செல்லும் மணித் துளிகளிலோ..

 

இந்தக் காதலானது எப்படி கண் வழியே நுழைந்து கருத்தில் புகுந்து ரத்த நாளங்களில் பரவி படர்ந்து இதயத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் விந்தையை எந்த விஞ்ஞானியும் இந்நாள்வரை கண்டதில்லை..

 

அப்படியிருக்க.. இரண்டு மூன்று முறை பார்த்து அவன் மனதில் உள்புகுந்து ஆட்டிப்படைக்கும் அந்த கூர் மூக்கு அழகியை.. எங்கனம் மறப்பான்?

 

அதுவும்‌ அன்றைய பார்க்கிங் தின முத்த அச்சாரத்திற்குப்பின் அவளின் ஸ்பரிசமும் மணமும் மென்மையும் தன்னை சுற்றியே இருப்பதாக காலை முதல் அவன் எண்ணியிருக்க.. மாலையோ அவள் உனக்கு கிடையாது விலகி போ மனமே என்றால்.. அடம்பிடித்த குழந்தையாய் அவள்தான் வேண்டும் என்று அழுதது மனம்!!

 

மீண்டும் விரல்களுக்குள் தஞ்சம் புகுந்து கொண்டது, அவனை அமைதி படுத்திட.. அமைதி புறாவாய் வெள்ளை உடை அணிந்த நிக்கோட்டின்!

 

நிகோட்டின் ஆல்கஹாலால் அடங்கிவிடுமா இந்த காதல் போதை? இவையெல்லாவற்றையும் விட காதலியின் ஒற்றை நாண பார்வையும் உதட்டுச் சுழிப்பும் தரும் போதை இருக்கிறதே.. அப்பப்பா ராஜபோதை அல்லவா அது!

 

 

மறுநாள் இவை அனைத்தையும் மறக்க முடியாமல் மறைத்து தன் அலுவலக வாழ்க்கைக்குள் தன்னை புகுத்திக் கொண்டான் ஆரன்.

 

முதல் நாள் அவன் கேட்டு அனுப்பிய விவரங்களைப் பென்னி கொண்டு வந்து கொடுத்திட, அவற்றைப் பற்றிய டீலிங் அனைத்தையும் பேசி முடித்து வெற்றிகரமாக திருச்செந்தூரில் முதல் புராஜெக்டை முடித்திருந்தான். அடுத்தடுத்து என்று அவன் ஆன்-லைன் வழியில் அவனுக்கு தெரிந்தவர்கள் வழியே அடுத்த ப்ராஜக்ட் செந்தூரார் குரூப்ஸ் கைகளுக்கு கிடைக்காமல் செய்ய வேண்டியவற்றை செவ்வனே செய்து கொண்டிருக்கும் வேளையில் அந்த செந்தூராரின் நகை கடையில் இருந்து அவனுக்கு பார்சல் தேடிவந்தது.. அந்த முத்துப்பென்ட்டன் வண்ணத்துப்பூச்சி சிறகை விரித்து அவனிடம் பறந்து வந்து கைகளில் தவழ்ந்தது.

 

முதலில் அதை காதலாக ஏக்கமாக பார்த்திருந்தவன் பார்வை சற்று மாற உள்ளுக்குள் இருந்த அசுரன் விழித்துக்கொண்டு அவனின் மயூ பேபியை விழுங்கி ஏப்பம் விட்டு “இந்திராக்ஷி.. ஐ அம் கம்மிங் ஃபார் யூ” என்று கர்ஜித்தான்!!

 

செத்தூராரின் அலுவலகம்..

 

குருபரன் நிமலன் மெய்யறிவன் வசீகரன் என்று உறவுகள் ஒன்றாக இருந்து வேலை செய்தாலும் அவரவர்களுக்கு என்று தனித்தனி பிரிவுகளை படை நடத்திச் சென்று கொண்டிருந்தார்கள். அதுவே அவர்களின் இந்நாள்வரை வெற்றிக்கான காரணமும் கூட..

 

 

குருபரன் மேனேஜ்மென்ட் பார்த்துக் கொண்டாலும் இந்த கப்பல் சம்பந்தப்பட்ட டீலிங் எல்லாம் அவரின் பார்வைக்கு முதன்மையாக வரும். அதை மற்றவர்களோடு சற்று விவாதித்து அமௌன்ட் கோட் செய்து அனுப்புவார்.

 

 

மெரைன் டெக்னாலஜி படித்த நிமிலன், அப்பா சொல்லும் ப்ராஜெக்ட் கப்பலின் கட்டுமானத்தையும் அதனால் எவ்வளவு நமக்கு லாபம் கிடைக்கும் என்பதையும் துல்லியமாக கணித்து கூறி விடுவான். அப்படி வாங்கப்படும் பழைய கப்பல்கள் உடைக்கப்படும் பகுதி நிமலன் கண்பார்வையில்..

 

அதன் பிறகு மெய்யறிவனின் வேலை. பழக்கவழக்கங்கள் நிறைய அவருக்கு இந்த தொழில் வட்டாரத்தில். யாருக்கு எப்படிப்பட்ட பொருட்கள் வேண்டும் என்பதை துல்லியமாக கணித்து தன் பேச்சின் ஊடே அதை வாங்கவும் வைத்துவிடுவார்.

 

 

அப்போது ராகவன்? வெத்து வேட்டோ??! ஆமாம் என்று சொல்லமுடியாது இல்லை.. என்றும் சொல்ல முடியாது. பொதுவாக எல்லா பக்கமும் தலையை ஆட்டி தான் வைக்க வேண்டும். நால்வரில் யாருடன் வேண்டுமானாலும் வேலையில் சேர்ந்து கொள்வார். அவரை பெரும்பாலும் மெய்யறிவன் தான் பயன்படுத்திக் கொள்வது.

 

மெய்யறிவன் விற்பனை செய்யும் உடைத்த கப்பல் பாகங்களுக்கான பணம் பெரும்பாலும் கொடுத்து விடுவார்கள். அப்படியும் ஒன்றிரண்டு பேர் பணத்தை இழுத்தடிப்பார்கள்.. பணத்தை வைத்துக்கொண்டு வேண்டுமென்றே நாட்களை கடத்துவதுமாக இருப்பார்கள் இன்னும் சிலபேர்.. அவர்களிடம்தான் பணம் இருக்கிறதே மெதுவாக கொடுத்தால்தான் என்ற அலட்சியம் வேறு.. அப்படிப்பட்டவர்களுக்கு ராகவன் தான் சரி.

 

 

அடியார்கள் புடை சூழ கோபத்துடன் மீசையை முறுக்கி.. நெஞ்சு விடைத்து.. தொடையைத் தட்டி வைத்து எல்லாம் பணத்தை வசூல் செய்யும் ரகம் அல்ல இவர். அதற்கும் மேலே..

 

 

சரியாக அந்த பார்ட்டி எந்த இடத்தில் இருக்கிறார் என்ற தகவலை மெய்யறிவன் கொடுத்துவிட.. மதிய நேரத்தில் அதுவும் சாப்பிடும் நேரத்தில் ஒரு படையுடன் அங்கே போய் அமர்ந்து விடுவார் ராகவன். அந்த நபரும் வளவளவென்று பேசினாலும்.. ‘ஆத்தா வையும்.. சந்தைக்கு போனும் காசு கொடு’ என்கிற மாதிரி “பணத்தை எப்போ தருவீங்க!!!?’ என்று இடைவிடாத கேட்பவர் இடையில் மதிய உணவையும் வரவழைத்து விடுவார் அவர்களது செலவிலேயே..

 

அவர் ஒருத்தரே ஒரு குடும்பம் சாப்பிடும் அளவு சாப்பிடுவார். இதில் அவர் கூட சென்றிருக்கும் படை ஒரு ஊரே சாப்பிடுவதுபோல சாப்பிடும். ஒருமுறை.. இருமுறை தாங்குவார்கள். அதற்குமேல் இவரை கண்டால் அலறி தான் போவார்கள். 

 

 

“சின்ன மாமாவால.. நடக்குற ஒரே நல்ல காரியம் இதுதான்!” என்று அவர் செய்து விட்டு வந்ததை கூறும்போது விழுந்து விழுந்து சிரிப்பான் நிமிலன்.

 

 

இதில் ரஞ்சனி எந்த தொழிலுக்குள்ளும் வரமாட்டாள்.‌ பேருக்கு வருவதும், நிமிலனிடம் நின்று சிரிப்பதும்.‌.. பிறகு பார்லர் ஷாப்பிங் என்று கிளம்பி விடுவதும் தான் அவளின் தலையாய வேலை.

 

 

இவர்களின் சட்ட ஆலோசகர் அந்த வட்டாரத்திலேயே ஒரு பெரும்புள்ளி வக்கீல்தான். ஆனால் அவ்வப்போது இவர்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கி தானும் வக்கீல் தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறான் நிரஞ்சன். தற்போது ஜூனியரிலிருந்து சீனியராக புரமோஷனாகி தனியே கடை போட்டு அமர்ந்து உள்ளான். 

 

 

யாராவது வந்தால் சட்ட புத்தகத்தை உன்னிப்பாக பார்ப்பது போல அவன் பார்க்கும் பொழுது ‘ஆளே இல்லாத கடைக்கு யாருக்குடா டீ ஆத்துறிங்க?’ என்ற டயலாக் தான் ஞாபகம் வரும்.

 

இப்போது சில மாதங்களாக அவர்களின் தலையாய ஆடிட்டர் மயூரி இந்திராக்ஷி தான். பெரிய பெரிய விஐபிகளுக்கு வரதராஜன் தான் செய்து கொடுக்க.. அவர்கள் கம்பெனியை மட்டும் வேறு யாருக்கும் கொடுத்துவிட முடியுமா? அந்த வகையில் வருமானம் போனது பற்றி வரதராஜனுக்கு மிக வருத்தமே! ஆனாலும் வெளியில் பெருந்தன்மையாக தன் கிட்ட வேலை கற்றவள். அதனால் திறமையாக தான் இருப்பாள் என்று அவளையே பார்க்க சொல்லிவிட்டேன் என்பார்.

 

 

இப்படியாக நாட்கள் சென்று கொண்டிருந்த போதுதான் ஒருமுறை சட்ட ஆலோசகருக்காக நிரஞ்சனை அணுகினான் ஆரன். விரலை சுண்டினால் ஓடிவர அத்தனை நபர்கள் இருக்க.. இவன் அவனை தேடி சென்றதன் காரணம் என்னவாக இருக்கும் மயூரி அல்லாது..

 

அந்த குடும்பத்தில் யாருடனாவது தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நிரஞ்சனை நாடினான் ஆரனாக அல்ல வித்யூதாக..

 

 

வழக்கம்போல தன் ஆபீஸில் ஈ ஓட்டிக்கொண்டிருந்தான் நிரஞ்சன். “ஹாய் நிரஞ்சன்!” தனக்கு முன்னால் வசீகர சிரிப்புடன் நின்றிருந்த வித்யூத்தை பார்த்தவனின் கை அனிச்சையாக ஹாய் என்று தூக்கினாலும் முதலில் ஞாபகம் வர மறுத்து பின்பு தான் வந்தது.

 

 

“வாங்க.. வாங்க.. உக்காருங்க.. ஹான்ன்.. உங்க பேரு..”

 

“வித்யூத்!!”

 

“எஸ்.. எஸ்.. சாரி.. மறந்திட்டேன்”

 

“இட்ஸ் ஓகே நிரஞ்சன்.. புதுசா இங்க பிஸினஸ் ஆரம்பிச்சியிருக்கேன். சோ.. ஐ நீட் லீகல் அட்வைஸர்!” என்று கூறியவுடன் ஆர்வமாக நிரஞ்சன் பார்க்க..

 

“அதுதான் உங்க கிட்ட ஹெல்ப் கேட்டு வந்து இருக்கேன் நிரஞ்சன். உங்களுக்கு தெரிஞ்ச ஒரு நல்ல லீகல் அட்வைசரை…” என்றவுடன் அவனுக்கு முகம் தொங்கிப் போய் விட்டது.

 

“சோ.. சாரி.. இப்படி கேட்கிறது தப்பு தான். பட் நீங்க ஆல்ரெடி செந்தூரார் குரூப்ஸூக்கு லீகல் அட்வைஸரா இருக்கிங்க. சோ அதான் உங்கள மாதிரி ஒரு டேலன்ட் லாயரை விட்டுட்டு வேற ஒரு லாயரை தேடுற நிலைமை எனக்கு!” என்று சோகம் போல முகத்தை வைத்து சொன்னான் ஆரன். இவனுக்கு நடிக்கவா சொல்ல வேண்டும்?

 

இப்பொழுது நிரஞ்சனின் முகமும் மலர்ந்து சிரித்தது. “எனக்கு தெரிஞ்ச ஒரு ப்ரெண்ட் இருக்கான். ரொம்ப டேலன்ட் ஆனா பையன். ஆனால்.. சரியான ஆள் இல்லாம கேஸ் இல்லாம கஷ்டப்படுறான்” என்று அவன் நண்பனைப் பற்றி விவரித்துக் கொண்டே இருக்கும் பொழுது அவனது போன் இசைத்தது.

 

“எக்ஸ்க்யூஸ் மீ” என்று ஆரனிடம் கூறிவிட்டு “சொல்லு மயூரி என்ன விஷயம்?’ என்று கேட்க “சரி சரி வா.. வா.. நான் ஆபீஸ்ல தான் இருக்கேன்” என்று போனை வைத்தான்.

 

 

ஆரன் யார் என்றெல்லாம் கேட்கவில்லை. அமைதியாக அவனைப் பார்க்க.. அவனே வாய் விட்டான்.. “மயூரி தான். இங்க வருகிறாள்!” என்று முடிக்குமுன்..

 

“கம் டு த பாயிண்ட் நிரஞ்சன்! நீங்க உங்க ஃப்ரெண்ட் கிட்ட எவ்வளவு சீக்கிரம் சொல்றிங்களோ அவளோ நல்லது. அவரை இன்னிக்கே இப்பவே பார்க்க முடிந்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம். நாளைக்கு ஒரு முக்கியமான டீலிங் போடணும்”. என இல்லாத டீலிங்கை அவன் இழுத்து பேச.. நண்பனுக்காக பார்த்த நிரஞ்சனும் உடனே நண்பனுக்கு போன் செய்ய.. அவனோ திருச்செந்தூரில் இருந்து சற்று தொலைவில் இருப்பதாகவும், கார் வைத்திருக்கிற நிரஞ்சன் அவனை வந்து பிக்கப் செய்ய வேண்டும் என்று கேட்டான்.

 

 

“டேய் இதெல்லாம் உனக்கு அதிகமா தெரியலையா டா?” என்று நிரஞ்சன் ஆரனுக்கு தெரியாமல் அவனிடம் கோபத்தில் கத்த..

 

 

“மச்சான்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு ஆள் கிடைச்சிருக்கு. அடேய் என் வாழ்க்கையில் விளக்கேற்றி வைடா.. பெண்ணுனாலும் சரி பையனாலும் சரி எனக்கு எந்தப் பிள்ளை பிறந்தாலும் அதுக்கு உன் பெயரையே வைக்கிறேன் டா!” என்று அவன் அந்தப்பக்கம் ஐஸ் வைக்க “வந்து தொலைக்கிறேன்” என்று போனை வைத்தவன், ஆரனிடம் “சார் ஒரு டூவன்டி மினிட்ஸ் வெயிட் பண்ண முடியுமா? நான் உடனே அவனை அழைச்சிட்டு வந்திடுறேன். அவன்கிட்ட பழைய ஓல்டு டிவிஸ் பிட்டி தான் இருக்கு. அதில் வந்தா.. அந்த 20 கிமீ வேகத்தில் வந்தானா நாளைக்கு தான் வந்து சேருவான்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். 

 

“இந்த வித்யூத் நினைத்தால் இன்னைக்கு ஒரே நாளுல அவரோட பொருளாதாரமே மாறும்!” என்றவுடன் நண்பனுக்காக ஓடினான்.. மாமன் மகளை மறந்து..

 

 

நிரஞ்சன் சென்ற அடுத்த பத்தாவது நிமிடம் அவனது அலுவலகத்திற்குள் நுழைந்தாள் மயூரி.. “நிரஞ்சா ஒரு விஐபிக்கு லீகல் அட்வைஸ் ஒன்னு வேணும்டா.. பேமெண்ட் பத்தி கவலைப்படாதே…” என்று கூறிக் கொண்டு உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த ஆரனை எதிர்ப்பார்க்காமல்.. பார்த்ததும் வார்த்தை வெளிவராமல்.. விழி விரித்து நிற்க.. 

 

 

உள்ளிருக்கும் காதல் மனம் அவளை பார்த்ததும் வெளியே எட்டிப்பார்க்க.. அவனை அசுரன் அடக்கிவைக்க.. இரண்டும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி கலவையாய் வெளிவந்தான் காதல் அசுரன் அவன்!!

 

கண்களிலே காதலும்.. உதட்டிலே பைசாச புன்னகையும் கலந்து நின்றானவன்!

 

“ஹாய் மயூ பேபி.. வாட் எ சர்ப்ரைஸ்!” என்றவன் இன்ச் இன்சாக அவளை கண்களால் பருகியப்படி நெருங்கினான்.

 

இதுநாள் வரை அன்று கேட்டது கனவாகவா போய் விடாதா என்று தவித்தவள்.. நேற்று அவன் கண் சொன்ன சேதி கண்டு துடித்தவள்.. இன்று அவன் வாய் வார்த்தையை கேட்டவுடன் சிலை எனச் சமைந்து நின்றாள்.

 

லயம் தப்பி துடித்த இதயத்தோடு தனை நெருங்கும் அவனை பார்த்தவள், அடுத்த நொடி “நா..நான் அப்புறம் வரேன்” என்று வெளியே செல்ல முனைய.. இவனோ அவளுக்கு முன் சென்று பாதி வழியை அடைத்தப்படி நிற்க.. 

அவனை உரசாமல் உடலை வளைத்து நெளித்து செல்ல முற்பட்டவள் முன், கொஞ்சமும் ஒதுங்காமல் நின்றான் ஆரன்.

 

 

அவனின் செய்கையில் கண் இமைகள் படபடக்க.. உள்ளே அழுந்தி.. இறுக மூடியது. அவன் கைகள் அவளின் கைகளை மெல்ல பற்ற.. அவள் குழைந்து நெளிய..

 

அவனோ நெருக்கமாக நெருக்கி.. அவன் திரண்ட நெஞ்சை மெதுவாக அவள் மார்போடு பதித்து அழுத்தினான். அவளோ பயந்து பின்னால் நகர்ந்து அறை கதவோடு ஒன்றினாள். அவனும் விடாமல் அவளை நெருக்கினான்.

 

இருவரின் அங்கங்கள் மட்டுமல்ல அதரங்கள் கூட ஒட்டி உறவாடிய நிலை.. சிகரெட் உபயத்தால் சற்றே கருமை பூசிய அவன் உதடுகள் அவளின் மெல்லிய உதடுகளை ஒட்டியே நின்றன.. 

ஒரேயடியாக அழுந்தி உறவாடவும் இல்லை.. விலக்கவும் இல்லை… 

அவள் உதடுகளை கவ்வி கொய்யவும் இல்லை.. 

 

ஏதேனும் செய்திருந்தால் கூட அவளின் இந்த தவிப்பு.. தகிப்பு ஓய்ந்திருக்கும். இப்போதோ ஓயாத அலைகளாய் அவளை புரட்டி போட்டது அவனின் நெருக்கம் தந்த சிலிர்ப்பும்.. தாகமும்.

55 thoughts on “ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 6”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top