9
கப்பல் அதிகாரி அமர்ந்திருக்க வேண்டிய இருக்கையில் அமர்ந்திருக்க அதிர்ச்சியில் தன் மாமனை திரும்பி பார்த்தான் நிமிலன்.
அவருக்கும் அதே அதிர்ச்சி தான்! ஆனால் இத்தனை வருட தொழில் அனுபவத்தில் அதை முகத்தில் காட்டாமல் மறைக்க தெரிந்தவர். மருமகனின் தோளை ஆதரவாக தட்டி உள்ளே போ என்று கண்களால் செய்கை காட்டினார்.
அறைக்குள் நுழையும் இருவரையும் தான் அமர்ந்திருந்த இருக்கையில் அரைவட்டமாக அடித்துக் கொண்டே ஒரு கையை கன்னத்தில் தாங்கியவாறு ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஆரன்.
“சொல்லுங்க மிஸ்டர் நிமலன்.. நிமலன் தானே? அண்ட் நீங்க அவர் மாமா ம்ப்ச் சட்டுன்னு பேரு ஞாபகம் இல்ல.. சாரி ஃபார் தட்.. ப்ளீஸ் பீ சீட்டட்!” என்று எதிரில் இருந்த இருக்கைகளை காட்டினான்.
வார்த்தைகளில் அவ்வளவு ஒரு விருந்தோம்பல்.. ஆனால் கண்களில் அதற்கு எதிரான நக்கல்.
“எதற்கு என்னை பார்க்க வந்தீங்க?” என்று இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே ஆரன் கேட்க, ஏன் வந்தார்கள் என்று தெரிந்தும்.
“உன்னை நாங்க பார்க்க வரவில்லை. இந்த கப்பல் அதிகாரியை தான் பார்க்க வந்தோம்!” என்றான் கடுப்பை அடக்கிய குரலில் நிமிலன்.
“சோ சாரி.. அவர் இந்நேரம் இந்திய எல்லையை தாண்டி போயிருப்பார். அவரை பார்க்கணும்னா நீங்க வந்த அதே கப்பலில் தொடர்ந்து போகணும். ஆனா உங்க கப்பலுக்கு இன்டர்நேஷனல் பர்மிட் இருக்கா? அவரை தொடர்ந்து போக ?”என்ற அவனின் குரலில் சந்தேகமின்றி நக்கலே வழிந்திருந்தது.
அவனின் சீண்டலும் நக்கலும் நிமிலனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்த.. அவன் முஷ்டியை இறுக்கி தனது கோபத்தை கட்டுப்படுத்த முனைந்து கொண்டிருந்தான்.
அப்படி எல்லாம் உன்னை கட்டுப்படுத்த விடுவேனா என்பதுபோல சவாலான பார்வை பார்த்து மெதுவாக அவன் பக்கம் குனிந்து “இல்லையா?? செந்தூரார் குரூப்ஸ் பெரிய குரூப்னு கேள்விப்பட்டேன்.. ம்ப்ச் இண்டர்ஷனல் பர்மிட் இல்லாமல் இருக்கீங்க.. சோ சேட்!! நான் வேணா என்னுடைய போட்டை உங்களுக்கு தரவா? இங்க மட்டும் இல்ல மும்பையில ஓடுற என்னோட எல்லா ஷிப் அண்ட் போட்டுக்கும் இன்டர்நேஷனல் பிரமிட் உண்டு” என்றவன் இப்போது நன்றாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான் ஒரு அரசனின் தோரணையில் ஆரன்.
மெய்யறிவு கண்களாலேயே மருமகனிடம் ‘வார்த்தையை விடாதே அமைதியாக இரு!’ என்று அடக்கிவிட்டு, ஆரனின் பக்கம் திரும்பி “எங்களுக்கான கவலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் மிஸ்டர் ஏவி.. நாங்க கேட்க வந்தது இந்த கப்பல் வாங்குவதற்கான கொட்டேஷன் கொடுக்க வேண்டிய அதிகாரியை.. அவர் இருக்க வேண்டிய இடத்தில் தான் இப்போ நீங்க இருக்கீங்க” என்று அவர் கூற இருகைகளையும் விரித்தவன் “அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே சார்.. அவர் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கேன்னு. அப்போ அதுக்கு என்ன அர்த்தம்?” என்று அவரைத் திரும்ப கேள்வி கேட்க…
இரண்டொரு நிமிடம்தான் குழம்பினார். உடனே அவன் கூறியதன் அர்த்தம் புரிந்து அவனை அதிர்ச்சியோடு பார்க்க.. “புரிஞ்சிடுச்சு போல..” என்று சிரிப்புடன் அவர்களைப் பார்த்தான் ஆரன்.
“என்ன மாமா??” என்று நிமலன் இருவரையும் மாற மாறிப் பார்த்துக் கொண்டு கேட்க..
“என்ன சார்… மருமகனுக்கு தொழிலை மட்டும் கற்றுக் கொடுத்தால் போதாது. அதில் உள்ள சூட்சுமங்களையும் கத்துக் கொடுக்கணும். இன்னும் பயிற்சி தேவை அமைச்சரே!!” என்று சொல்லி சிரித்தவனின் குரல்வளையை நெரிக்கும் வேகம் நிமிலனிற்கு வந்தாலும், அதை காட்டாமல்.. அவன் பேச்சில் இருந்தே இந்த கப்பலை அவன் முடித்து விட்டான் என்பதை உணர்ந்து கொண்டான்.
இனியும் இங்கே அமர்ந்திருப்பது எந்த பயனும் இல்லை என்று எழுந்தவன் “வாங்க மாமா போகலாம்” என்று கதவு வரை சென்றவன், திரும்பி அவனைப்பார்த்து “கவுண்ட் யுவர் டேஸ்!” என்று அதிகாரமாக சொல்ல..
“அச்சா!!” என்றவனின் குரலில் ஆயிரம் அர்த்தங்கள் ஓடியது.
பின்பு குரலை இலகுவாக்கி “ஐ அம் வெயிட்டிங் மாப்பி!” என்று கூறிவனை முறைக்க மட்டுமே முடிந்தது நிமிலனால்.
“என்னது மாப்பியா??” என்று அவன் எந்த மாதிரியான அர்த்தத்தில் சொன்னான் என தேடும் முன் மெய்யறிவு இவனை அங்கிருந்து அழைத்து சென்றார்.
“விடுங்க மாமா.. அந்த ஏவி பேசின பேச்சுக்கு.. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு.. அவன் மூக்கிலேயே ரெண்டு குத்து குத்தனும்போல இருக்கு.. எப்படி நக்கல் அடிக்கிறான் பாத்தீங்களா? என்னமோ இவன் ப்ளான் பண்ணிட்டு தான் வந்து இருக்கான் மாமா.. அது மட்டும் எனக்கு நல்லா புரியுது!” என்று அந்தக் கப்பலிலிருந்து இறங்கி அவர்கள் வந்திருந்த அந்த சிறிய போட்டுக்கு செல்லும்வரை நிமிலனின் வாய் முழுக்க முழுக்க அவனைப் பற்றிய புகார்களே!!
ஆனால் இது எதற்கும் மெய்யறிவு ஆமாம் இல்லை என்று கூறவும் இல்லை. ஒரு சிறு தலையசைப்பும் கொடுக்கவில்லை. ஆழ்ந்த யோசனையிலேயே மருமகன் பின்னே வந்து கொண்டிருந்தார்.
அவர்கள் போட்டில் ஏறியதும் அது புறப்பட.. “என்ன மாமா நான் இவ்வளவு பேசிக்கிட்டே வரேன். நீங்க ஒண்ணுமே பதில் பேசாமல் இருக்கீங்க!” என்று கை கால்களை உதைத்து பேசும் நிமிலனை கண்டவருக்கு சிரிப்பு வந்தது.
“இன்னும் நீ அதே பதினைந்து வயது சிறுவன் போலத்தான் தெரிகிறாய் நிமிலா எனக்கு!”
“மாமா…” என்றான் சலுகையாக கோபத்தை விடுத்து..
“வேகத்தோடு விவேகமும் இருந்தால் தான் நிமிலா.. இந்த தொழிலில் நம்ம நிலைத்திருக்கமுடியும். திறமையை மட்டுமே பத்தாது பலசமயம்.. இதோ இந்த முறை நீ வேகத்தோட செயல்பட அவன் கொஞ்சம் விவேகமா செயல்பட்டு கப்பலை தட்டி தூக்கிட்டான். ஆனால் அடுத்த முறை அவனுக்கு பெரிய அடியா கொடுக்கணும்.. அவன் எழுந்திருக்கவே கூடாது. இந்த தூத்துக்குடி திருச்செந்தூரை பத்தி இனிமே அவன் கனவிலும் நினைக்க கூடாது” என்று இப்போது வெளிப்பட்ட அவரின் வார்த்தைகள் அதில் இருந்த உஷ்ணம் அப்படியே நிமிலனுக்குள்ளும் இறங்கியது.
ஒரு வார்த்தை வெல்லும்!
ஒரு வார்த்தை கொல்லும்! என்று சொல்வார்கள்.. இப்போது மெய்யறிவின் இந்த வார்த்தைகள் யாரை கொல்லவோ?? இல்லை யாரை வெல்லவோ??
இப்படியாக மேலும் மூன்று மாதங்கள் ஓடியது. இந்த மூன்று மாதங்களும் செந்தூராரின் குரூப்பின் கண்களில் விரலை விட்டு ஆட்டினான் என்றே சொல்லலாம் ஆரன்.
ஆரன் வந்ததற்குப் பின் இதுவரை எந்த நாட்டுக் கப்பல்களும் இல்லை அந்த கம்பெனியுடன் டீலிங்.. என்று எதுவுமே செந்தூராரின் குரூப்புக்கு போகவே இல்லை.
அவன் இங்கே நுழைந்து விடுவானோ? அங்கே நுழைந்து விடுவானோ? என்று இவர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாத குறையாக பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஆரன் எத்தனுக்கு எத்தனாக இவர்கள் புள்ளியில் நுழையும் முன்னே கோலத்தில் புகுந்து அதை முழுவதும் முடித்து விடுவான்.
முதலில் அவனை சிறு எறும்பாக தான் பாவித்தார்கள் அவர்கள் குடும்பமே.. அவர்கள் அசைக்க முடியாத இடத்தில் இருப்பதாய் நினைப்பு வேறு. ஆனால்
பெரிய களிறின் காதுக்குள் புகுந்த சிற்றெறும்பாய் அவர்களுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தான் ஆரன்.
செந்தூராரின் குரூப்பின் டைரக்டர்.. இணை டைரக்டர்.. துணை டைரக்டர் என்று இதுவரை எது எதுக்கோ மீட்டிங் போட்டு பேசியவர்கள் இன்று இந்த ஆரனை எப்படி சமாளிக்க என்பதாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
என்ன பேசி.. என்ன பிரயோஜனம்! இவர்களுக்கு கப்பல் பற்றிய தகவல் வந்து சேரும் பொழுது அந்த கப்பலை அவன் அவனுடையது ஆக்கியிருந்தான்.
“இது எப்படி சாத்தியம்? எவ்வாறு சாத்தியம்? ஒருவேளை அந்த கம்பெனிக்கு ஆள் வைத்து இருப்பானோ?” என்று ராகவன் கேட்க..
“ஒரே கம்பெனி என்று இருந்தா அதுக்குள்ள ஆள் வைத்திருக்கலாம்! ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கம்பெனியில் இருந்து வரும்போது எல்லா இடத்திலும் இவனோட ஆட்கள் இருக்க முடியும் என்ன?” நிமிலன் பதில் கூற..
“ஒருவேளை அப்படி அவன் ஆட்களை வைத்து இருந்தால்…” என்று குருபரன் தனது சந்தேகத்தை கேட்க..
“அப்படி எல்லா கம்பெனியிலும் ஆட்களை அவன் வைத்திருக்க வேண்டும் என்றால்.. அங்கு எல்லோரிடமும் இவனுக்கு சற்று பழக்கம் வேண்டும். அந்த பழக்கம் ஒரே வருடத்தில் வந்ததாக கண்டிப்பாக இருக்க முடியாது. அப்படி என்றால் அவன் தென்னிந்தியாவில் நாம் எப்படியோ அதே மாதிரி வட இந்தியா என்று மட்டும் சொல்ல கூட முடியாது மற்ற எல்லா நாடுகளிலும் இவனுக்கு தொழில்கள் இருக்க வேண்டும்.. அப்படி இன்டர்நேஷனல் அளவில் பிசினஸ் செய்யும் அவன் ஏன் நம்மிடம் வந்து மோத வேண்டும்? குறிப்பாக இந்த கப்பல் கட்டும் தொழிலில் மட்டும்?” என்று மெய்யறிவன் தனது அனுபவ அறிவை வெளிப்படுத்தினார்.
அவரின் இந்த வித்தியாசமான கோணம் அனைவரையும் சிந்திக்க வைத்தது. கூடவே அப்படியும் இருக்குமோ என்று யோசனை வேறு..
“இல்லை மாமா.. நான் விசாரித்த வரையில் ஏவி குரூப்ஸ் அவ்வளவு பெரிய ஆட்கள் எல்லாம் இல்லை. அதாவது இன்டர்நேஷனல் அளவில் தொழில் செய்யும் அளவுக்கு!” என்று நிமிலன் மெய்யறிவிடம் கூற…
“உனக்கு வந்த இன்ஃபர்மேஷன் சரியா?” என்று குருபரன் மகனைக் கூர்ந்து பார்த்து கேட்டார்.
“ஹண்ட்ரட் பர்சன்ட் சரிப்பா.. நான் க்ராஸ் செக் வேற செய்திட்டேன்.. நான் விசாரிக்கச் சொன்ன டிடெக்டிவ் ஏஜென்சி ஒன்று வட நாட்டில் உள்ளது. சோ அவங்க சொன்ன எல்லாம் இன்ஃபர்மேஷன் உண்மைதான்.. இன்டர்நேஷனல் அளவில் எல்லாம் அவனது தொழில் பரந்துவிரிந்த கிடைக்கவில்லை. ஆனால் எப்படியோ எங்கேயோ ஏதோ ஒரு இடத்தில் அவனுக்கு யாரோ உதவி செய்கிறார்கள்” என்று இடியாப்ப சிக்கலாய் இருக்கும் இந்த ஆரனின் நூலினை எப்படியாவது பற்றி விட துடித்துக் கொண்டிருந்தார்கள் செந்தூராரின் குரூப்ஸ்.
“அவன் எப்படியோ போகட்டும்.. ஆனால் ஏன் நமக்கு தொல்லை கொடுக்கிறான்?” என்று ராகவன் மீண்டும் குழப்பத்தை தத்தெடுக்க..
“இவ்வளவு நேரமா அதை பத்திதான் பேசறோம்!” என்று கடுப்புடன் நிமிலன் கூறினான்.
“நிமிலா…” என்று கண்டித்தார் மெய்யறிவு.
“பின்ன என்ன மாமா? இந்த நாலு மாசத்தில் மட்டும் கிட்டத்தட்ட மூணு கப்பல் வந்துட்டு போயிட்டு.. ஆனா ஒன்றை கூட நம்மலாள டீலிங் போட முடியல.. எத்தனை கோடிகள் தெரியுமா? எவ்வளவு இழப்பு நமக்கு? இதில் நாம சிறிய வகை கப்பல்களை எல்லாம் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்திடுறோம். நாம் நம்பி இருக்குறதே இம்மாதிரியான பெரிய கொழுத்த கப்பல்களை தானே.. இப்படியே சென்று இருந்தால் நாமும் இந்த கம்பெனியை இழுத்து மூட வேண்டியதுதான். இல்லையென்றால் சற்றே கீழே இறங்கி மற்ற சிறு கம்பெனிகளோடு போட்டி போட்டு அதை சிறு கப்பலுக்கு நாமும் டீலிங்கும் எடுக்க வேண்டிய நிலைமை வரும்” என்றான் கோபம் ஆதங்கம் வருத்தம் வலி எல்லாம் சேர்த்து…
மகனின் இந்த சோர்வான முகத்தை இதுவரை பார்த்ததில்லை குருபரன். பெரும்பாலும் இவர்கள் தொழில் எல்லாம் நல்ல முறையில் தான் நடக்கும். ஆங்காங்கே சிலர் யாரும் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து அவர்களை சமாளிக்க ராகவனை தான் அனுப்புவார்கள். மற்றபடி அடியாட்களை வைத்து மிரட்டி தொழில் எல்லாம் செய்யவில்லை என்று சொல்லமுடியாது அவ்வப்போது தேவைப்படும் போது ஒன்று இரண்டு இடத்தில் செய்பவர்கள்தான். அதனை தொழில் எத்திக்ஸ் என்று கூற்றோடு கடந்து விடுவார்கள்.
“இனிமேலும் அவன் நமக்கு தொல்லை கொடுத்தால் ..நம்முடைய அணுகுமுறையே அவனிடம் வேறு மாதிரியாகத்தான் இருக்கும்!” என்றார் குருபரன் அழுத்தமாக…
பெரும்பாலும் அப்படிப்பட்ட தருணங்களில் ராகவனை அவர்கள் அருகில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அவர் முன் இம்மாதிரி பேச்சு கூட இருக்காது. இன்று கேட்டதும் சட்டென தூக்கிவாரிப் போட்டு மச்சானின் இந்த புதிய பரிமாணத்தில் பயந்தவராய் ராகவன் “என்ன மாதிரி அணுகுமுறை மச்சான்??” என்று பயத்தோடு கேட்க..
“இம்.. தட்டி தூக்கிட வேண்டியதான் அவனை.. சின்ன எறும்புனு அவனை அசால்ட்டாக விட்டால்.. நம்ம காதுக்குள்ள இப்போ வந்து குத்துது கொடையுது. இவனுக்கெல்லாம் ஜீவகாருண்யம் எல்லாம் பார்க்க முடியாது! அதுவும் தொழில் என்று வந்த பிறகு சுத்தமாக பார்க்கமுடியாது! தட்டி தூக்க வேண்டியதுதான். அவன் இந்த நாலு மாசமாக ஆனானப்பட்ட குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறான்” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் அதே தருணத்தில் அவர்களின் அறையை திறந்து உள்ளே வந்த மயூரி காதில் இவை அனைத்தும் அப்படியே நுழைந்தது.
‘என்ன? யாரை தூக்கணும்? என்ன இப்படி பேசிக்கிட்டு இருக்காங்க?’ என்று அவள் யோசித்தபடி கதவு ஹேண்டிலை பிடித்தபடி நின்று கொண்டிருக்க… மெய்யறிவு தான் முதலில் அவளை கண்டுகொண்டார். “மயூரி மா” என்று அவர் அழைக்க சுதாரித்து உள்ளே வந்தாள் மயூரி. அதேநேரம் மற்றவர்களிடம் கண்ணை காட்டி இந்த பேச்சை தொடர வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்தார் மெய்யறிவு.
எப்போதும் போல வந்து அவர்களுடனே மதிய உணவை முடித்து, அவர்கள் கம்பெனியில் சில வேலைகளை செய்து விட்டு அண்ணனுடனே வீட்டிற்கு கிளம்பினாள் மயூரி. மனதில் ஓரத்தில் நெருஞ்சி முள்ளாய் இவர்கள் பேசியது குத்திக் கொண்டே இருந்தாலும் எதை கேட்பது என்று தெரியாமல் இப்போதைக்கு வேண்டாம் என அமைதியாகிவிட்டாள்.
இங்கே செந்தூரார் குரூப்ஸ் ஆரனை பற்றிய தலையை பிடித்துக்கொண்டு அவன் தகவல்களை அக்குவேறு ஆணிவேராக பார்த்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்.. அவர்கள் குடும்பத்தை சல்லி சல்லியாக முடிக்கும் வேலையின் முதல் படியை ஆரம்பித்து இருந்தான் அவன்.
அந்த பெரிய ஹோட்டலில் டேபிள் புக் பண்ணி இருக்க அதில் அமர்ந்திருந்தார் வரதராஜன் சிறு பதட்டத்துடன்..
இதுநாள் வரை எத்தனையோ பெரிய பெரிய விஐபிகளை எல்லாம் அவர் பார்த்திருக்கிறார். பெரும்பாலும் அவர்கள் அவருடைய இடத்திற்கு வரச் சொல்வார்கள் இல்லை என்றால் இவரை வந்து பார்ப்பார்கள். ஆனால் இப்போது வந்திருக்கும் இந்த க்ளையண்ட் இப்படி பெரிய ஹோட்டலில் டின்னர் உடன் பேசலாம் என்று அழைத்து இருக்கிறானே என்று உள்ளுக்குள் ஏக சந்தோசம் அவருக்கு.
முன்னமே அவருக்கு எந்த டேபிள் என்று தகவல் தெரிவிக்கப்பட, கொஞ்சம் பதட்டத்தோடு அமர்ந்திருந்தவரை கூர்மையாக பார்த்துக்கொண்டு சாவகாசமாக வந்து சேர்ந்தான் ஆரன் வித்யூத்!!
கூடவே பென்னியும் ஹிமேஷூம் அவனோடு வந்து இருந்தாலும் அவர்கள் இந்த டேபிளில் இருந்து சற்று தள்ளி தான் அமர்ந்திருந்தார்கள். எப்பொழுதும் போல ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு, தங்களுக்கான உணவு வரவழைத்து அமைதியாக உண்டு கொண்டிருந்தார்கள். ஆனால் கவனம் முழுவதும் ஆரனிடம் தான். அவன் கண்ணசைத்து தலையசைத்து கூப்பிட்டாலும் பறந்து அவன் முன்னே நிற்கும் ஆவலுடன்…
ஆரனின் நடை உடை பாவனைகளிலேயே ‘நல்ல கொழுத்த மீனா தான் நம்ம கிட்ட மாட்டி இருக்கு பெரிய தொகையை கறந்திடனும்’ என்று பலமான கணக்குகளுடன் அமர்ந்திருந்தார் வரதராஜன்.
“ஹலோ மிஸ்டர் வரதராஜன்.. ஐ அம் ஏவி.. எம்டி ஆஃப் ஏவி குரூப்ஸ்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
ஏற்கனவே ஏவி குரூப்ஸூடன் தான் உங்களுக்கு ஒரு சிறிய கெட் டு கெதர் என்று அவனது பிஏ பேசி இருக்க.. இப்போது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனை ஆஆஆ வென வாயைப் பிளந்து இவர் பார்த்திருக்க.. அவர் முன்னே கையாட்டி சொடுக்கு போட்ட பின் தான் சுயநினைவுக்கு வந்தார். அசட்டு சிரிப்புடன் அவனது கையைப் பற்றிக் கூறினார் “நான் வரதராஜன் சார்.. நான் ஆடிட்டர் சார்!” என்று.
பின் சம்பிரதாயமான சில பேச்சுவார்த்தைகளோடு அவருக்கு தேவையான உணவை வரவழைக்க அவரிடமே பணித்தான். இதில் ஏக குஷியாகி போனவர், இதுவரை பெரிய பெரிய ஹோட்டல்களில் பணத்திற்கு பயந்து சாப்பிட முடியாத ஆகாரங்களாக தேடி கண்டுபிடித்து வரவழைத்துக் கொண்டார். அவன் தனக்கு ஒரு சூப் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டான். அங்கே டேபிளில் பரப்பபட்டவையை பார்த்தவுடன் அவருக்கு தான் என்னமோ போல் ஆனது. ஆனாலும் கிடைக்கும் வாய்ப்பை வலிக்க பயன்படுத்திக் கொள்ளும் நினைவோடு இந்த வெட்கத்தை எல்லாம் சற்று தூரம் நிறுத்தி உணவில் விளையாட ஆரம்பித்தார்.
ஆரனும் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வீக்னஸ் என்று மெல்லச் சிரித்து தனது சூப்பை ரசித்து குடித்து கொண்டிருந்தான்.
ஓரளவு சாப்பாடு முடிக்கும் முன்.. “சீ மிஸ்டர் வரதராஜன்.. நான் இங்க திருச்செந்தூர் வந்து கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆகுது. ஒரளவு எனக்கு இங்கே தொழில் பிக்கப் ஆயிருக்கு. எனக்கு இப்போ ஒரு நல்ல ஆடிட்டர் அசிஸ்டன்ட் தேவை. அதுவும் புல் டைம் ஜாப் கூட தேவையில்லை. மார்னிங் டு ஆப்டர்நூன் வரைக்கும் இருந்தா போதும். ஆனால் என் டீடைல்ஸ் எல்லாம் பக்காவாக ஹேண்டில் பண்ணனும். அதே நேரம் ரொம்ப சீக்கெரட்டாவும் இருக்கணும். அதுக்கு தான் உங்களை தேடி வந்தேன். இந்த தென் மாவட்டத்திலேயே நீங்கதான் மிகப் பெரிய ஆடிட்டர். உங்ககிட்ட இல்லாத ஜூனியர்ஸா?” என்று அழகாக வலை விரித்தான் ஆரன்.
அவர் நினைத்ததோ அவனது ஆடிட்டிங் மட்டும் பார்க்க வேண்டுமென்று.. அதுக்கே பெரிய தொகையாக கறக்க நினைத்து இருந்தவர், இப்படி அவனுடன் வேலை செய்யவே ஒரு ஜூனியர் தேவை என்றவுடன் அவ்வளவுதான் மனதுக்குள் பல கணக்குகள் வழிந்தோடியது. ஆனால் அவன் கேட்ட அந்த திறமையான ஜூனியராக அவர் கண்முன் வந்தவள் என்னவோ மயூரி இந்திராக்ஷி தான்!
எப்பொழுதும் ஒரு பெருமையுடன் தான் மற்றவர்களுக்கு அவளை அறிமுகப் படுத்துவார் அதாவது ‘செந்தூரார் பேத்தி!’ என்று..
பெரும்பாலும் அதில் பலபேர் ‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?’ ‘மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுக் கொடுக்கணும்?’ என்று வசனங்களை எல்லாம் பேசி ஒத்துக்கொள்வார்கள். அதே வழிமுறையை ஆரனிடமும் கையாண்டார் வரதராஜன்.
நீங்க சொன்ன மாதிரியே எல்லா தகுதிகளையும் உடன் ஒரு ஜூனியர் பொண்ணு இருக்கு சார்.. டேலண்ட்னா பொண்ணு.. அதுமட்டுமல்ல பெரிய குடும்பத்துப் வாரிசு. ஆனால் எந்த பந்தாவும் இல்லாமல் அவ்ளோ அழகா திறமையை வேலை பார்க்கும். செந்தூராரின் பேத்தி மயூரி இந்திராக்ஷி!” என்றார் பெருமையோடு…
ஆக விரித்த வலையில் அருமையாக வந்த மாட்டிக்கொண்டது பக்ஷி என்று வேடனாக சிரித்த ஆரன் “வாட் செந்தூராரின் பேத்தியா? அவங்க உங்ககிட்ட ஜூனியரா இருக்காங்களா?” என்று தெரியாதது போலவே ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் கேட்டான் ஆரன்.
அவரும் பெருமிதமாக தலையாட்ட “எனக்கு அவங்க வேணாம்?” என்றவனின் பேச்சில், வாயிலிருந்த சிக்கன் லாலிபாப் வெளியே விழுவது கூட தெரியாமல் விழி விரித்துப் பார்த்தார் வரதராஜன்.
“ஆமாம் சார்.. நீங்கள் திறமை மட்டும் பத்தாது. அது கூட எனக்கு சீக்கெரட் மெயிண்டென் பண்ணனும்னு.. இவங்கள நான் வேலைக்கு எடுத்தால் என்னோட ஆப்போனன்ட் குரூப்ஸ் ஆன செந்தூரார் குரூப்புக்கு என்கிட்டே இருந்தே தகவலை திருடி கொடுக்க மாட்டாங்கனு என்ன நிச்சயம்? எந்த நம்பிக்கையில் அவங்கள நான் வேலைக்கு எடுக்கிறது?” என்று அவன் கேட்ட கேள்வியில் இவர்தான் விழிபிதுங்கி போனார்.
அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என்று எவ்வளவோ கன்வீன்ஸ் செய்தார். அதன் பிறகு அவன் ஒரு கண்டிஷன் போட்டான் “அப்படி என்றால் அந்தப் பெண் இங்கு என்னிடம் வேலை பார்ப்பதை அவர்கள் வீட்டில் சொல்லக்கூடாது.. அதேபோல ஒரு சின்ன டவுட் வந்தாலும் உங்க மத்த எல்லாரையும் ஐ வில் ப்யர்ட்!” என்று அவனது அதிகாரத் தோரணையில் சற்றே மிரண்டார் வரதராஜன். ஆனால் ஆரனை விட மனமில்லாமல் அவன் சொன்ன அனைத்துக்கும் தலையை தலையை ஆட்டிவிட்டு சென்றவர் மறுநாள் மயூரியை அழைத்தார்.
அவளிடம் அவன் கூறிய அனைத்தையும் கூறி “இந்த ஏவியை நீ தான் ஹான்டில் பண்ணனும் மயூரி நம்ம கன்சல்டன்சிக்குனு ஒரு பெயர் இருக்கு. அந்தப் பெயரை நீதான் காப்பாத்தணும்” என்று பேசி பேசியே அவளையும் ஒத்துக் கொள்ள வைத்து, அடுத்த அரைமணி நேரத்தில் அவளை அவன் முன் நிறுத்தி இருந்தார் வரதராஜன்.
யாரோ ஒரு ஏவி என்று இவள் வந்து இருக்க அங்கே கப்போர்டில் சாய்ந்தாவாறு “வெல்கம் மிஸ் மயூரி இந்திராக்ஷி! என்ன நீங்களே என்னை தேடி வந்திடிங்க.. அப்போ ஓகே வா!” என்றான் நக்கலாக..
👌👌👌👌👌👌