ATM Tamil Romantic Novels

சண்டியரே… சண்டியரே.. 1

சண்டியரே 1

 

திருவாரூர்… கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதி சோழன் மூவரும் வாழ்ந்து அறத்தை நீதியை வளர்த்த இடம்..!

 

திருவாரூரையும் தியாகராசர் கோயிலையும் பிரித்து வரலாறே எழுத முடியாது. 

 

சோழநாட்டில் வழங்கிவரும் வேதாரண்யம் விளக்கழகு…

திருவாரூர் தேரழகு…

திருவிடைமருதூர் தெருவழகு..

மன்னார்குடி மதிலழகு… என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.

 

வெறும் சோழர்புராணமும் ஊர் அழகும் மட்டுமா??? இல்லை.. உலகமே போற்றும் கர்நாடக சங்கீதம் பிறந்ததும் இவ்வூரிலே..!!

 

ஆம்..! கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்களே.‌.!!

 

காவிரி ஆற்றின் வளமான வண்டல்பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் வட்டம்.. அதனால் அங்கே முப்போகம் விளையும் நெற்கதிர்கள்.

 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவாரூருக்கு அருகே இருக்கும் பொன்வயல் தான் நம் கதைக்களம்.

 

பொன்னான நெற்கதிர்கள் அதிகம் விளையும் வயல்களைக் கொண்ட கிராமம் என்பதே அதன் பொருள்..!!

 

ஒரு ஊருக்கு இத்தனை பெருமைகளா என்று ஆச்சரியம் தோன்றுகிறது அல்லவா??

 

தம் தமிழகத்தின் ஒவ்வொரு ஊர்களும் இத்தொண்மையும் பழமையும் பல சிறப்புகளையும் கொண்டது தான்.

 

ஆனால்.. நாம் தான் நம் தொண்மையையும்.. சிறப்புகளையும்.. அதாவது வேரையே மறந்து காலனி ஆதிக்கத்திலிருந்து வெளி வந்தாலும் இன்னும் அந்த கலாச்சாரத்திலிருந்து வெளிவர முடியாமல் சிக்கித் தவிக்கிறோம்..!!

 

“ஏய்..தையான்.. பருத்தி எடுத்தாச்சா? அங்க வேலைய முடிக்காம இங்க என்ன வெட்டி பேச்சு உனக்கு??” என்ற விஜயராகவனின் அதட்டலான கம்பீரக் குரலில்..

 

“இதோங்க அய்யா..” என்று ஓடிவந்து அவர் முன்னே தலையில் கட்டி இருந்து துண்டை அவிழ்த்து அக்கத்தில் வைத்துக் கொண்டு குனிந்து பவ்யமாக நின்றான் தையான். அவர்களிடம் மூன்றாவது தலைமுறையாக வேலை செய்யும் குடும்பம் தையானின் குடும்பம்.

 

“பருத்தி வேலை எல்லாம் ஆச்சுதுங்க..நம்ம சின்னவரு அங்கதான் இருக்காக மேற்கொண்டு பாத்துக்கிறேனாருங்க.. இன்னும் ரெண்டு நாள்ல தேர் திருவிழா இல்லைங்களா.. அதுக்கு தேன் எம் பொஞ்சாதி புள்ளைகளுக்கு துணி எடுக்க திருவாரூர் வர போகலாம்னு.. சின்னவர் கிட்ட கேட்டுட்டு தானுங்க வந்தேன்” என்று தலையை சொரிந்து கொண்டே கேட்டான்.

 

திருவாரூர் தேர் மிகவும் பிரசித்தி பெற்றது..!!

 

ஆழித்தேர் அசைந்தாடி வீதிகளில் வரும் அழகே அழகு தான்..!!

 

ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுப்பர். தேர் திருவிழா என்றாலே இரண்டு நாள் விடுப்பு கொடுத்து விடுவார் விஜயராகவன். அது தொன்று தொட்டு வரும் பழக்கம்.

 

“நீ வேலைய முடிச்சுட்ட சரி..உன் பொஞ்சாதி இன்னும் வேலை முடிக்கலையே தையான். 

 

என்ன சூரியகாந்தி?” என்று அந்த பேரிளம் பெண்ணை பார்த்து அவர் கேட்க..

 

அள்ளி முடித்த கொண்டையில் சிறு பிச்சிப்பூ வாடியிருக்க நெற்றி நிறைய குங்குமமும் வாயில் வெத்தலை போட்ட கறையும் தூக்கி சொருகிய புடவையை கட்டியிருந்த நேர்த்தியும் அத்தனை அழகானது. யார் சொன்னா கருப்பு அழகில்லை என்று???

 

“இல்லைங்க ஐயா..முடிச்சிட்டே நான் போறேனுங்க” என்றாள் சூரியகாந்தி.

 

“சரி சரி கிளம்பு..!அப்புறம் ஐயா ஐயான்னு என்னைய சுத்தி சுத்தி வந்து ஒரு வழி ஆக்கிடுவான் உன் புருஷன்.. கிளம்பு கிளம்பு” என்றதும் முகம் நிறைய புன்னகையோடு இருவரும் விஜயராகவனுக்கு நன்றி உரைத்து விட்டு வேக வேகமாக தங்கள் வீட்டை நோக்கி ஓடினர்.

 

வயலில் வேலை செய்த மற்றவரும் இவரை பார்த்துக் கொண்ட “ஐயா… எங்களுக்குங்க..” என்று இழுக்க,

 

“என்ன ஆரம்பிச்சிட்டீங்களா? சரி சரி கிளம்புங்க நாளைக்கு நேரத்தோடு வந்து இந்த வேலையெல்லாம் முடிச்சிடனும்” என்று சிறு கட்டளையோடு கூறியதும் அவர்களும் புன்னகையோடு தங்கள் வீட்டுக்கு சென்றனர்.

 

இங்கே வேலை செய்யும் முக்கால்வாசி பெயர் வழிவழியாய் இவர்கள் குடும்பம் மட்டுமல்லாமல் அவ்வூரில் இருக்கும் பெரிய குடும்பத்திற்கு வேலை செய்பவர்கள்.

 

விஜயராகவன் வீட்டு வேலைக்கு என்று பிரத்யேகமாக இருக்கும் சில பண்ணை ஆட்களும் உண்டு. அவர்களுக்கு வருடம் தோறும் தீபாவளி பொங்கல் மற்றும் இம்மாதிரி திருவிழா நாட்களில் புத்தாடை பணம் என்று கொடுப்பதுண்டு. அது மட்டுமல்லாமல் அறுவடை காலங்களில் என்னென்ன அறுவடை நடக்கிறதோ அதற்கு தகுந்தார் போல அவற்றிலும் சிறு பங்கு உண்டு கூலியைத் தவிர…

 

தொழிலாளர்களிடம் விசுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்பார்க்கிறாரோ அதே அளவு அவர்களுக்கு அள்ளிக் கொடுக்கவும் தயங்க மாட்டார் விஜயராகவன்.

 

அதனால் பெரும்பாலான தொழிலாளிகள் மற்ற வேலைக்குச் செல்லாமல் விவசாயத்தையும் பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றனர்.

 

விவசாயம் என்றால் வெறும் நெல் பயிர் பருத்தி கரும்பு மட்டும் கிடையாது அதை சார்ந்த தொழில்களும் உண்டு.

 

இவர்களுக்கென்று சொந்த நெல் அரவை மில் சர்க்கரை ஆலை பருத்தி பாதுகாக்க குடோன் விவசாயத்தை சார்ந்த நிறைய தொழில்களும் உள்ளன.

 

அதனால் வானம் பொய்த்துப் போய் சில சமயம் அவர்களுக்கு கையை விரித்து விட்டாலும், தொழில் மூலம் வரும் லாபத்தில் தன்னை நம்பியவர்களின் வயிறு வாட விடாமல் பார்த்துக் கொள்வார் விஜயராகவன்.

 

இவரின் இந்த குணம் அவர்களுக்கு தொன்று தொட்டு வந்தது. அதாவது காலம் காலமாக பெரும் பண்ணையார்கள் ஜமீன்தார்கள் என்று இருந்து.. இப்பொழுது சற்றே வளமை குறைந்த நிலைமை ஆனாலும் அந்த கொடை பண்பு மட்டும் இன்னும் அவர்கள் ரத்தத்திலேயே கலந்து உள்ளது.

 

ஆனால் இந்தக் கொடை பண்பை கண்டு பொறாமைப்படுபவர்களும் உண்டு. “பிழைக்க தெரியாதவன்..நல்லது பண்றேன்னு பண்ணையாட்கள் ரத்தத்தை உறிகிறவன்” என்று பலவாறு பேசுபவர்களும் தூற்றுபவர்களும் உண்டு‌.

 

பழுத்த மரம் தானே கல்லடி படும் என்று சிரித்துக்கொண்டே அதனை எல்லாம் கடந்து விடுவார் விஜயராகவன்.

 

அப்படி கடக்க முடியாமலும் சிலர் உண்டு. அதில் ஒருத்தர் தான் அவரது மாப்பிள்ளை தியாகேசன்.

 

பேர் என்னவோ அந்த ஈசனின் தியாக பெயர்தான். ஆனால் குணம் தான் கொஞ்சம் சிறுமை படைத்தது.

 

விஜயராகவனுக்கு கமலாம்பிகை மூத்த பெண். அவர் பிறந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகே ஒன்று அல்ல இரட்டையாய் இரண்டு ஆண் குழந்தைகள் குரு ஆதிரன், சிவ ஆரூரன்.

 

அவரின் தர்ம பத்தினியான தேவகி தன் கணவனை தர்மத்தை தனியாக செய்ய விட்டு நிம்மதியாக கைலாச பதவியை அடைந்து விட்டார். இளைய மகன் சிவ ஆரூரன் இப்பொழுது எங்கே இருக்கிறான் என்றே தெரியவில்லை..

 

இருக்கும் ஒரு மகன் குரு அதிரனும் அவரின் மகள் கமலாம்பிகை மட்டுமே..! ஆனால் கமலாம்பிகையின் கணவன் தியாகேசனின் சிறு புத்தியால் இப்போது இரு குடும்பத்திற்கும் சரிவர பேச்சு வார்த்தை இல்லை. 

 

ஆக மொத்தம் விஜயராகவனும் அவரது புதல்வன் குரு ஆதிரனும் மட்டுமே தற்போது அந்த இரண்டடுக்கு பெரிய வீட்டில் வசித்து வருகின்றனர்.

 

மாலை போல வீட்டில் அவர் அமர்ந்திருக்க.. வீட்டோடு‌ சமையலுக்கு எப்பொழுதுமே இருக்கும் வேலையாள் அவருக்கு டீ கொடுத்துவிட்டு செல்ல.. வாசலில் இருக்கும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி டீயை பருகிக் கொண்டிருக்கும் போதே புல்லட்டின் சத்தம் அவரின் காதை நிறைக்க..

 

 புன்னகை முகமாக நிமிர்ந்தவரை அதே புன்னகையோடு எதிர்கொண்டு வேக வேகமாக நடந்து வந்தான் குரு ஆதிரன்.

 

ஆறடிக்குமான உயரம்..

திராவிட நிறம்..

அந்த கற்றை முறுக்கு மீசையும் அவனின் கூரிய கண்களும் அவனின் வசீகரித்தை கூட்டிக் காட்டும்.

 

மகனை கண்ணெடுக்காமல் பார்த்தார் மற்றொரு மகனும் இப்படித்தான் இருப்பானோ? இதே போல கிராமத்து கட்டுக் காளையாக? அந்த மகனை பார்க்க ஏக்கம் பிறந்தது. இருவருமே ஐடென்டிக்கல் ட்வின்ஸ் என்பதால் மூத்த மகனிலேயே இரண்டாவது மகனையும் பார்த்து மனதை தேற்றிக் கொள்வார் விஜயராகவன்.

 

“வாப்பா குரு..என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட போல? பருத்தி வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சா?” என்று கேட்டார்.

 

“ஆச்சுப்பா எல்லாத்தையும் எடுத்து குடோனுக்கு அனுப்பி வைத்து காவலுக்கு ஆள போட்டுட்டு தான் வந்தேன்” என்றவன் வாசலில் சற்று தள்ளி இருக்கும் குழாயில் கை கால்களை கழுவினான்.

 

பழைய முறையில் கட்டிய வீடு தான் என்றாலும் முன்னை போல யாரும் முற்றத்தில் கை கால் கழுவதில்லை. அதுதான் பெருந் தொற்று வந்து நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டு சென்று இருக்கிறதே..!!

 

கை கால் கழுவியவன் ஆசுவாசமாக தந்தையின் அருகில் அமர உள்ளே பார்த்து “கலா தம்பிக்கு டீ கொண்டா” என்று உரக்க கூறினார் விஜயராகவன்.

 

“நீங்க எதுக்குப்பா இப்ப கத்துறீங்க நான் எப்படியும் உள்ளதான போவேன். நானே கலா அக்காகிட்ட கேட்டு வாங்கிக்க மாட்டேனா? அவர்களுக்கு காது வேற லேசா கேட்காது. நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு கத்தணுமா?” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கலா டீ கொண்டு வந்து புன்னகைய முகத்தோடு குருவின் கையில் கொடுத்தார்.

 

அதே புன்னகையோடு வாங்கிக் கொண்டவன் தந்தையிடம் அன்றைய தினம் நடந்ததை கூற அவரும் பயிர் எடுத்துக் கொண்டிருந்த வேலையைப் பற்றி கூற.. இருவரும் பரஸ்பரம் தங்கள் வேலைகளைப் பற்றி பகிர்ந்து கொண்டு அடுத்து என்ன என்பது போல விவாதித்துக் கொண்டிருந்தனர்.

 

“குரு..ரெண்டு நாளா தேர் திருவிழா வருது யா” என்றதும் தந்தையை அர்த்த புன்னகையோடு நிமிர்ந்து பார்த்தான் குரு.

 

“என்ன இப்ப அக்காக்கு போய் சீர் வச்சுட்டு வரணுமா?” என்று கேட்டான்.

 

“அவளுக்குனு இருக்கிறது நீ மட்டும் தானே யா.‌அதுவும் இல்லாம இதெல்லாம் முறையும் கூட தானே?”

 

“முறைதான். அக்காவுக்கு செய்றதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. ஆனாலும் உங்க மாப்பிள்ளை வாய் ஓயாதே..” என்று சலித்துக் கொண்டான்.

 

என்னதான் பேச்சுவார்த்தை இல்லை என்றாலும் வருடத்தில் தீபாவளி பொங்கல் தேர் திருவிழாவின் போது மறக்காமல் சீர் கொண்டு போய் செய்துவிட்டு வந்து விடுவான் குரு ஆதிரன்.

 

இவன் புல்லட்டு சத்தத்தை கேட்டாலே முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விடுவார் தியாகேசன். ஆனால் ஒரே ஒற்றை உடன்பிறப்பு அவனை எப்படி விட்டுக் கொடுப்பாள் கமலா?

 

எத்தனை உபசரித்தாலும் தண்ணீரைத் தவிர எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் பருகாமல் அக்காவிடம் சீர் கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்து விடுவான் குரு.

 

கமலாம்பிகைக்கும் வருத்தமாக தான் இருக்கும். ஆனாலும் கணவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தவர் வாழ்ந்து கொண்டிருப்பர் அவரை மீறியும் ஒன்றும் செய்ய முடியாமல், தம்பியின் பிடிவாதத்திலும் இரு கொள்ளி எறும்பாய் தவிப்பார்.

பெரும்பாலான இந்திய முக்கியமாக தமிழக பெண்களை போல…

 

“சரி நாளைக்கு கிளம்புறேன்..” என்றவன் அறைக்குள் சென்றான்.

 

சிறிது நேரத்திலேயே ரெடியாகி வந்தவனை தந்தை கேள்வியாக பார்க்க..

 

“திருவாரூர் வரை போய்ட்டு வரேன் பா. கொஞ்சம் வேலை இருக்கு. அப்படியே அக்காவுக்கு சீர் வைக்க தேவையான பொருளை வாங்கிட்டு வந்துடுவேன்” என்றவன் இப்பொழுது கார் எடுத்துக் கொண்டு சென்றான்.

 

என்னதான் வெளியில் சாதாரணமாக இருப்பது போல இருந்தாலும் மனதுக்குள் சின்ன மகனின் அந்த வார்த்தையும்.. வலி மிகுந்த முகமும்.. கலங்கிய கண்களும்.. ராகவனை திணறடித்தன.

 

‘என்னை நம்பலையாப்பா நீங்க?’ என்று மகனின் கெஞ்சலான குரல் அவரின் காதில் ஒலித்துக் கொண்டு அவரை தவிக்க வைத்துக் கொண்டுதான் இருந்தது. “அப்போ என் மேல நம்பிக்கை இல்லையா அப்பா உங்களுக்கு?” என்று இளம் மீசை முளைத்த அந்த 18 வயது இளைஞனின் தோற்றம் அவர் கண் முன்னே வந்து போக…

 

“தீர விசாரிக்காமல் தப்பு பண்ணிட்டேன் யா சிவா..ஐயா வந்துடு யா என்கிட்ட.. எங்க இருந்தாலும் வந்துடு யா… அப்பாவ மன்னிச்சுடு யா” என்று வேதனையாக கண்களை மூடிக்கொண்டார்.

 

நள்ளிரவு போல வீட்டுக்கு வந்த குரு ஆதிரன் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக சிறிது நேரம் நடந்துக் கொண்டிருந்தான்.. அவன் எதிர்ப்பார்த்த நபரிடம் இருந்து ஃபோன் வர.. நிம்மதி பெரு மூச்சு விட்டவனாக ஃபோன் காலை அட்டென் செய்து காதில் வைத்தான்.

 

மறுநாள் காலை அப்பாவிடம் சொல்லிக் கொண்டு அக்காவுக்கு சீர் வைக்க சென்றான் ஆதிரன்.

 

அதிசயமாக அவன் அக்காவின் கணவன் வெளி வராண்டாவில் அமர்ந்திருந்தவர் அவனை கண்டதும் வா என்பது போல தலையசைக்க.. ‘நாம் இன்னும் கனவில் இருக்கிறோமா?’ என்று நம்ப முடியாமல் தலையை உலுக்கிக் கொண்டு, இவனும் தலையசைத்து “அக்கா…” என்றப் படியே உள்ளே நுழைந்தான்.

 

“வா டா தம்பி..” என்றவர் கண்களும் முகமும் கவலையாகத்தான் இருந்தது.

 

“என்னாச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே.. 

 

“மாமா..பத்தாவது முடிக்க போறேன். நீங்க சொன்ன மாதிரியே சைக்கிள் வாங்கித் தரணும்?” என்றபடியே வந்த அக்கா மகன் மயூரனை பார்த்து சிரித்தவன் “கண்டிப்பா ஆனா பரிட்சையை பர்ஸ்ட் நல்லா எழுதி முடி” என்றான்.

 

“ஏற்கனவே சைக்கிள் ஒன்னு இருக்கே டா?” என்று மகனை முறைத்த கமலாம்பிகையை பார்த்த மகனோ “அதெல்லாம் ஒரு சைக்கிளா? எனக்கு கியர் வைத்த சைக்கிள் தான் வேணும்” என்று மாமனிடம் ஒட்டிக் கொண்டு அமர்ந்தான்.

 

“அடே அது விலை கூட?”

 

“ஆமா மா..ஜஸ்ட் பத்தாயிரம் தான்” என்றதும் தம்பியையும் மகனையும் முறைத்தார் கமலாம்பிகை.

 

“அட விடுக்கா..!நான் யாருக்கு செய்றேன்? என் மருமகனுக்கு தானே.. அவனும் மாமன்ற உரிமையில தான கேட்கிறான். நீ இதெல்லாம் கண்டுக்காத” என்றப்படி அவனுக்கு வாங்கி வந்த தின்பண்டங்களை அவன் கையில் கொடுத்தான் ஆதிரன்.

 

அதனை எடுத்துக் கொண்டு ஓடியவனிடம் “அக்கா கிட்ட ஷேர் பண்ணி சாப்பிடு மயூரா” என்றான் ஆதிரன்.

 

“அவளால இப்போ சாப்பிட முடியாது மாமா. அதனால எல்லாம் எனக்குத்தான்” என்றபடி வீட்டுக்குள் ஓடினான். ஆதிரன் ஏன் என்று அக்காவின் முகத்தை பார்த்தான் ஆதிரன்.

 

“உங்க அத்தான் பொண்ணு பாக்க ஆளை வர சொல்லிருந்தார்” என்றதும் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக அக்காவை பார்த்தான் ஆதிரன்.

 

‘கட்டிக்கிற முறையில் இரண்டு தம்பிகள் இருக்க..வெளியூரில் இருந்து வரும் மாப்பிள்ளைக்கு பெண்ணை கட்டி வைக்க விருப்பமில்லை தான் கமலாம்பிகைக்கு.. ஆனாலும் என்ன செய்வது காலநேரம்..’ என்று மூக்கை உறிஞ்சியப்படி பேசினார்.

 

“வழக்கம் போல வீட்டில பாக்காம கோவிலுக்கு வர சொல்லிட்டார்”

 

“நல்லது தானே அக்கா. அதுல என்ன பிரச்சனை?”

 

“பிரச்சனை புதுசா வேற வரணுமா? நான் பெத்து வச்சதே பெரிய பிரச்சனைதான்!” என்று நொடித்துக் கொண்டார்.

 

“ஏன் என்ன செஞ்சா?” அக்கா இவ்வளவு கவலை கொள்ளும்படி என்ன செய்திருப்பாள் அக்கா மகள் என்று யோசித்தான் ஆதிரன்.

 

“மாப்பிள்ளையை ஓட ஓட விரட்டிட்டா டா தம்பி” என்று மூக்கை உறிஞ்சினார் கமலாம்பிகை.

 

“எதே?? விரட்டிட்டாளா மாப்பிள்ளையவா? என்னக்கா சொல்ற?” என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டான்.

 

“சாமி..வந்து…” அவர் முடிக்கும் முன்

 

“சாமி வந்துச்சா? யாரு நம்ம மயிலுக்கா?” என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டவனிடம் ஆம் என்று கவலையோடு தலையாட்டினார் கமலாமாம்பிகை.

 

“இது எப்போதிலிருந்து?” 

 

“இதே ஊர்ல தான் சொந்த தம்பினு நீ இருக்க..ஆனா ஒரு நல்லது கெட்டதுக்கு வரியா போறியா? ஏதோ உன் அத்தாங்காரன் பேசினாருனு அதையே வம்படியா புடிச்சுகிட்டு நீயும் அப்பாவும் இறங்கி வராம இருக்கீங்க.. பொம்பள நான் ஒருத்தி என்ன பண்ணுவேன்? ரெண்டு குடும்பத்துக்கும் இடையில கடந்து அல்லாடுறேன்.. சீர் வைக்க வரவணும் ஒரு வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாம சீர வச்சிட்டு கிளம்பிடுற.. இப்ப பாரு பொட்ட புள்ளைய வச்சிட்டு நான் என்னன்னு அவஸ்தைப்படுறேன்” என்று கண்ணீர் வடித்தார்.

 

“அக்கா புரியும் படி சொல்லு எனக்கு ஒண்ணுமே புரியல..” என்று அக்காவின் கவலையை துடைக்க கேட்டான் ஆதிரன். ஆனால் அந்த கவலை அவனின் தலையில் வந்து அமர்ந்து கொள்ளும் என்று கனவா கண்டான்.

 

“சாமி வந்து என்ன சொல்லிச்சு?” என்று ஆதிரன் கேட்டான்.

 

என்னதான் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் இதுபோல சாமி காரியங்களில் அதிக நம்பிக்கை கொண்டவன் ஆதிரன். 

 

“ம்ம்ம். மாப்பிள்ளைய ஓடிட்டா..!! சொந்த பந்தங்கள் எல்லாம் இன்ன பேச்சுன்னு இல்லை..” என்று மீண்டும் மூக்கை சிந்தினார் கமலாம்பிகை.

 

இதற்குத் தான் ஒன்றும் செய்ய முடியாது. சீக்கிரம் எல்லாம் சரியாகும் என்று அக்காவை சமாதானப்படுத்திவிட்டு சீரை வைத்துவிட்டு இவன் செல்லும் வரை வாயிலேயே அமர்ந்திருந்தார் தியாகேசன், என்றும் இல்லாத திருநாளாக…

 

 

அது எதுக்கு என்று மறுநாள் புரிந்தது.. ஆம்.. மகளுக்கு மச்சானை கேட்டு சொந்கார பெரியவரை தூது அனுப்பினார் தியாகேசன்.

 

 

விஜயராகவன் சற்று யோசிக்க..

குரு ஆதிரன் மறுத்துவிட்டான்.. அவளை மணக்க..!!

4 thoughts on “சண்டியரே… சண்டியரே.. 1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top