ATM Tamil Romantic Novels

உயிரோடு விளையாடும் அழகியே 05&06

அத்தியாயம் 5

 

வேதவள்ளியின் உயிரற்ற உடலை பார்த்த சஞ்சயின் அழுகையை யாராலும் மறக்க முடியாது. அவன் கதறியழுததைப் பார்த்த ராசாத்தி அம்மாள் ஒரு முடிவுடன் தனக்கு தெரிந்த கேரள நம்பூதிரியிடம் சென்றார். அதே நேரத்தில் அன்பரே! அன்பரே! என்று தனது வாழ்க்கையை நாசமாக்கிய அந்த கரிய நிழலருவத்தை தேடிச் சென்றான் சஞ்சய். 

 

“ஏய்.. எங்கடி இருக்க? வெளிய வாடி..” என தனது வீட்டின் நடுகூடத்தில் இருந்து கத்தினான் சஞ்சய். சுற்றியிருந்த அனைவரும் அவனை வித்தியாசமாக பார்ப்பதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கத்திக் கொண்டிருந்தான். 

 

“அன்பரே! அன்பரேன்னு என் சோலிய முடிச்சுட்டல நீ.. இப்ப நீ வெளிய வரப் போறியா? இல்லயா?” என கத்தியவனின் அருகில் வந்தான் விஜய்.

 

“இங்கப்பாரு சஞ்சு.. காம் டவுன்.. உன்னோட வேதனையை எங்களால புரிஞ்சுக்க முடியுது.. ஆனா இப்புடி நடந்துக்குறதப் பார்த்த எங்களுக்கு ரொம்ப பயமாயிக்கு டா..”

 

“என்ன நான் லூசாகிட்டேனோன்னு நினைச்சு பயப்படுறீங்களா? இல்ல.. நான் லூசு இல்ல.. இந்த ***** தான் என்னைய அப்படி மாத்திட்டா.. உனக்கு ஒன்னு தெரியுமா விஜய்.. என்னோட வேதா பூ மாதிரி.. ரொம்ப ரொம்ப சாஃப்ட்.. அவளை இப்புடி.. இப்புடி பொட்டலம் போட்டு கட்டிக் கொடுத்தனுங்க.. அதுக்கெல்லாம் காரணம் யாரு? இதோ இங்க இருக்குற அவ தான்.. எனக்கு நல்லாத் தெரியும்.. இங்க என்னோட பக்கத்துல நின்று தான், நான் துடிக்குறத நல்லா கண் குளிரப் பார்த்துட்டுருக்கா.. ஏய் நல்லா கேட்டுக்கடி.. உன்னைய அழிக்க சக்தி வாய்ந்த சம்யார இறக்குவேண்டி.. இது என்னோட வேதா மேல சத்தியம் டி..” எனக் கூறிய சஞ்சயை மெல்ல தனதறைக்கு அழைத்துச் சென்ற நந்தினியும் ரக்ஷிதாவும் பாலில் சிறிது தூக்க மருந்து கலந்து குடிக்க வைத்தனர். 

 

“அண்ணி.. சஞ்சுவை இப்படி என்னால பார்க்கவே முடியல..”

 

“ஆமா.. நந்தினி.. பாவம்.. எப்படி வேதாவோட இழப்பு தாங்கப் போறானோ?” என சஞ்சயை அறைக்குள் விட்டுவிட்டு இருவரும் வெளியே வந்த போது, நல்ல உறக்கத்தில் இருந்த அவனது கனவில் வந்தாள் அவள். வேதவள்ளியா? இல்லை.. அவன் இவ்வாறு துடிப்பதற்கு காரணமான அந்த கரிய நிழலுருவம் வந்தது. கனவென்று அறியாத சஞ்சய் அவளைப் பார்த்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். 

 

“ஹேய் யார் நீ? எதுக்கு இங்க வந்த?”

 

“அன்பரே! நன்றாக என்னைப் பாருங்கள்.. நான் தான் தேவகன்னிகா..”

 

“பெயரைச் சொன்ன உடனே தெரிஞ்சுக்குறதுக்கு நீ என்ன நயன்தாராவா?”

 

“யார் அந்த நயன்தாரா? அவளும் நாம் செல்லும் பாதைக்கு இடைஞ்சலாக வந்தால் அவளையும் கொல்லுவேன்..”

 

“அடியேய்.. அவங்க லேடி சூப்பர் ஸ்டார்.. அவங்கள விக்னேஷ் சிவன் பார்த்துக்குவாரு.. முதல்ல நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லு..”

 

“கேளுங்க அன்பரே..”

 

“அய்யயய்ய.. முதல்ல இந்த அன்பரே.. அன்பரேன்னு சொல்லி.. என்னோட உசுரு எடுக்குறத நிறுத்து..”

 

“அன்பரே.. வேண்டாமென்றால் வேறு எப்படி உங்களை கூப்பிடுவது..”

 

“தெருப்பொறுக்கி நாயேன்னு கூட என்னை கூப்பிடு.. ஆனா தயவுசெய்து அன்பரேன்னு மட்டும் கூப்பிடாதே..”

 

“ஆனா நான் இப்படி கூப்பிட்டாத்தானே.. உங்களுக்கு பிடிக்கும்..”

 

“அட ச்சீ.. தள்ளி நில்லு.. டச் பண்ணாம பேசு..”

 

“எனக்கு உரிமையானவர் நீங்க.. என்னையன்றி வேறு யாராலும் உங்களை இப்படி தொட இயலாது.. தொடவும் விட மாட்டேன்.. இன்னும் சில காலம் தான்.. நாம் இப்படி தனித்தனியே பிரித்திருப்போம்.. அதன்பிறகு நாம் இருவர் மட்டுமே நம் உலகில் தனியாக.. ஆனந்தமாக இருக்கலாம்..”

 

“ஏய்.. எதுக்கு டி என்னோட வேதவ கொன்ன? அவ.. அவ.. ஒரு குழந்தை மாதிரி டி.. அவ என்னோட தேவதை டி.. இப்படி அவளை கொன்னுட்டியே.. நீயெல்லாம் ஒரு பேயா?”

 

“அன்பரே! அவளை உங்களுக்கு தெரியவில்லையா? நாம் இருவரும் இப்படி தனித்தனியாக பிரித்து என்னை இத்தனை வருடங்களாக அரூபமாக அலையவிட்டவள்.. அதனால் தான் அவளை கொன்றேன்..”

 

“ஹேய்.. லூசு.. லூசு.. அவ எனக்கு பொண்டாட்டி டி..”

 

“இல்ல.. உனக்கு நான் மட்டும் தான் பொண்டாட்டி.. புரிஞ்சுதா?” என ஆக்ரோஷமானாள் தேவகன்னிகா. இவ்வளவு நேரம் வரை அவனின் மீதிருந்த காதல் மறைந்து இப்போது ஆக்ரோஷமாக காணப்பட்டாள். 

 

“ஹேய்.. என்னைய என்ன மிரட்டுறியா? என்ன பண்ணுவ? மிஞ்சி மிஞ்சி போனா கொல்லுவியா? கொல்லுடி.. கொல்லுடிங்குறேன்.. பெரிசா பேச வந்துட்டா..”

 

“அன்பரே! நீங்க சொல்லி நான் கேட்காமல் இருப்பேனா? நிச்சயம் உங்கள் உயிரை என் கையால் தான் எடுப்பேன்.. ஆனால் அதற்கான நேரமும் காலமும் இன்னும் வரவில்லையே.. இன்னும் மூன்று திங்களில் உங்களுக்கும் எனக்கும் திருமணம்.. அது முடிந்ததும் நான் உங்களுடன் இணைந்து விட்டால், பல சக்திகளை பெறுவேன்.. உங்களது கன்னித்தன்மை எனக்கு மட்டுமே சொந்தம்.. அதனை பெற்றதும் நம்மை அழித்தவர்களை நாம் அழிக்கப் போகிறோம்..”

 

“அப்போ நீ இன்னும் பல கொலைங்க பண்ண போற? நீ என்னவாச்சும் பண்ணித் தொல.. எனக்கு என்னோட வேதா தான் வேணும்.. அவளை இப்போ இங்க வரச் சொல்லு.. நீதானே அவளைக் கொன்ன.. அப்போ நீயே அவளைக் கொண்டு வா..”

 

“இறந்தவளை எப்படி மீட்டுக் கொண்டு வர முடியும்?”

 

“ஏன் நீ வரல? அது மாதிரி அவளையும் கொண்டு வா..”

 

“அவள் செய்த தவறுக்கு இத்தனை வருடங்கள் கழித்து தண்டனை அனுபவித்தாள்.. ஆனால் எந்த தவறும் செய்யாமல்.. தாலி கட்டிய மறுநிமிடம் அவளால் உயிர் நீத்த எனக்கு இறைவன் கொடுத்த வரம் தான்.. இந்த சக்திகள் அனைத்தும்..”

 

“இங்கப்பாரு.. நீ சொல்றபடி.. பார்த்தா.. அது லாங் லாங் அகோ.. சோ லாங் அங்கோலா இருந்துருக்கனும்.. இப்போ இந்த ஜென்மத்துல அவ நல்ல பொண்ணு.. என்னோட லவ்வர்.. அவளை எப்படி நீ கொல்லலாம்? பேயா இருந்தா என்ன வேணா செய்வியா?”

 

“உங்களை அடையறதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்?”

 

“நீ என்னை அடையப் போறியா? நீ இப்படி சொல்ல சொல்லத்தான் உன்னை தோற்கடிக்கனும்னு வெறியே வருது டி.. இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்க.. உனக்காகவே நான் இன்னொரு பொண்ணு கல்யாணம் பண்ணிப்பேன்.. என்னோட வேதாவை இதுக்காக தானே கொன்ன.. அந்த பொண்ணு கூட குடும்பம் நடத்தி ஒரு புள்ளயவும் பெத்து அதுக்கு வேதான்னு பேரு வைப்பேன்.. நீ என்னடி பண்ணுவ?”

 

அவன் பேசிய அனைத்தும் கேட்ட அவளுக்கு கோபம் வருகையில் அமைந்து விடவே, அவனது கழுத்தைப் பிடித்து நெறிக்க ஆரம்பித்தாள். 

 

“என்ன.. என்னைய விட்டுட்டு நீ இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணுவியா? அதை என்கிட்டயே சொல்ல உனக்கு என்ன தைரியம் இருக்கனும்? நான் நினைச்சா உன்னை இப்பவே.. இந்த நிமிஷமே கொல்ல முடியும்.. ஆனா உன்னோட கன்னித்தன்மை எனக்கு வேணும்.. அதுனால எனக்கு அபரிமிதமான சக்தி கிடைக்கும்.. அப்போ தான் உன் மொத்த குடும்பத்தோடு சேர்த்து அவனையும் அழிக்க முடியும்..” என தேவகன்னிகா கூற, தூங்கிக் கொண்டிருந்தவன் கையும் காலும் வெட்டி வெட்டி இழுத்தது. கனவில் அவளுடன் பேசிக் கொண்டிருந்தவனின் உடல் நிஜ உலகில் வாழ்விற்கும் சாவிற்கும் போராடியது. சஞ்சய் துடிக்கும் சத்தம் கேட்ட நந்தினி உள்ளே வந்து பார்த்த போது, சஞ்சயின் கைகளே அவனது கழுத்தை வெறித்துக் கொண்டிருந்தது. பதறியபடி ஓடி வந்தவள் தன் பலம் மொத்தத்தையும் உபயோகித்து அவனது கழுத்தில் இருந்த அவனது கையை எடுத்து விட்டாள். 

 

“அடப்பாவி.. ஏன்டா இப்படி பண்ற? காதலி செத்துப் போயிட்டான்னு நீயும் சாகப் போறியா? எங்க யாரையும் நீ நினைச்சுக் கூட பார்க்கல இல்ல..” என ஓவென அழுகல் தொடங்கினாள். சட்டென அந்நேரம் மலையாள நம்பூதிரிகள் அவ்வீட்டின் உள்ளே காலெடுத்து வைக்கவும், காற்றானது சூறாவளி காற்று போல் அவ்வீட்டை சுழற்றி அடிக்கத் தொடங்கியது. வீட்டில் இருந்த ஜன்னல், கதவுகள் யாவும் பட்பட்டென அடிக்கும் ஓசையில் அந்த வீடே அதிர்ந்தது. அவர்கள் குடும்பத்தில் நந்தினி மற்றும் விஜயைத் தவிர மீதி இருக்கும் அனைவரையும் பின்னால் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு அனுப்பி வைத்திருந்தார் ராசாத்தி அம்மாள். நந்தினி தனது கைப்பேசியை எடுக்காத காரணத்தினால் அவ்வீட்டிற்குள் மாட்டிக் கொண்டாள். விஜய் இங்கு நடப்பது எதையும் நம்பவில்லை. ஆதலால் அவனும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்ப்பதற்காக அவ்வீட்டில் இருந்தான். 

 

நம்பூதிரிகள் முன்னேறும் ஒவ்வொரு அடியிலும் அவ்வீடே அதிர்ந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் யாவும் உயரே பறக்கத் தொடங்கின. இதனைப் பார்த்த நந்தினி பயந்து போய் விஜயின் பின்னால் சென்று நின்று கொண்டாள். நம்பூதிரிகள் அவ்வீட்டின் முதற்வாசப்படியை மிதிக்கும் போது அவ்வீட்டின் நிலவாசற்படியில் கட்டியிருந்த கனமான பூஞ்ஜாடி அவரது தலையில் விழுந்து உடைந்தது. அதன்காரணமாக அவரது தலையில் இருந்து ரத்தம் வரவே பதறிப்போன ராசாத்தி அம்மாளை தன் கையசைவில் அமைதியாக இருக்கச் சொன்னார். அதனையும் மீறி அவர் வீட்டிற்குள் செல்ல காலெடுத்து வைக்கவும், ‘ஆஆஆஆஆஆ.. வராத.. போயிடு..’ என அலறல் சத்தம் அங்கிருந்த அனைவருக்கும் கேட்டது. 

 

நம்பூதிரிகளின் சிஷ்யர்கள் அனைவரும் சேர்ந்து அவ்வீட்டின் ஈசானிய மூலையில் இருந்த ஒரு சிறிய அறையில் பூஜை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் செய்யும் பூஜையை செய்யவிடாமல் அங்காங்கே இருந்த பொருட்களை தூக்கி அவர்கள் மீது போட்டு உடைத்து இடையூறு செய்தது. இறுதியில் மந்திரங்கள் ஓதி அந்த தேவகன்னிகா ஆவியை சக்கரத்தில் வந்து உட்கார வைக்க அழைத்தார். ஆனால் அது வரவேயில்லை. 

 

“ஏய் எங்கயிருக்க? வந்து இந்த சக்கரத்துல உட்காரு..” என கத்திய நம்பூதிரியின் குரலுக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை. 

 

“என்ன சாமி? எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாம.. நிசப்தமாக இருக்கு..”

 

“ஒரு ப்ரேதாத்மாக்கு உடல் கிடைக்குற வரை தான்.. நாம அதை கட்டுப்படுத்த முடியும்.. இப்போ அது நின்ன பிள்ளைங்கல்ல யாரோ ஒருத்தரோட உடம்புல இருக்கு.. அதுனால நான் சொல்ற மாதிரி செய்ங்க.. உங்க பசங்களோட கழுத்துல இந்த தாயத்து கட்டுங்க.. யார் இதை கட்டமறுக்குறாங்களோ.. அவங்கள இங்க கூட்டிட்டு வாங்க..” என சக்கரம் போன்ற அமைப்புள்ள டாலரை அவர் கையில் கொடுத்தார். அதனை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே வந்தவர், சஞ்சய் மற்றும் நந்தினி கழுத்தில் கட்டி விட்டார்; விஜயை தவிர. விஜயின் கழுத்தில் அந்த டாலரை கட்டுவதற்காக சென்றவரை ஓங்கி மிதித்தான் விஜய். 

 

“ஏய்.. என்ன தைரியம் உனக்கு? என்னை விரட்ட.. என்னோட கழுத்துலயே இதை கட்டுவதற்கு வந்துருப்ப?” என ஆக்ரோஷமாக காணப்பட்ட விஜயின் நடையில் பெண்மை மிளிர்ந்தது. அவன் பார்ப்பதற்கு ஆணாக இருந்தாலும் அவன் நடந்து கொள்ளும் முறை யாவும் பெண்ணாக இருந்தது. 

 

அத்தியாயம் 6

 

தன் தாயை தாக்கிய விஜயின் உடம்பில் இருக்கும் ‌தேவகன்னிகாவை திருப்பி தாக்கவென சென்ற சஞ்சயை தடுத்து நிறுத்தினார் நம்பூதிரிகள்.‌

 

“ஆ ஆவி இப்பம் ரொம்ப உக்ரமாயிட்டு இருக்கும்.. அதனால் நீங்க போக வேண்டா..” எனக் கூறியவர் தனது சிஷ்யர்களை அனுப்பி விஜயை பிடித்து இழுத்து வரச் செய்தார். சிஷ்யர்களை தாக்கினாலும் தொடர்ந்து ஓதப்படும் மந்திரத்திற்கு எதிராக அதனால் செயல்பட இயலவில்லை. விஜயை இழுத்து வந்து பூஜை சக்கரத்தில் அமர வைத்தனர். அவனின் தலையில் ஏதோ மை போன்று தடவிய உடனே விஜய் மயங்கி கீழே விழுந்தான். ஆனால் அந்த ஆத்மா மட்டும் கரிய நிழலுருவமாக அந்த அவ்விடத்தில் அமர்ந்திருந்ததைக் கண்டு நந்தினியும் சஞ்சயும் அதிர்ச்சியில் தனது இரு கைகளைக் கொண்டு வாயை மூடிக் கொண்டனர். சக்கரத்தின் வட்டத்திற்குள் அமர்ந்திருந்ததிடம், ” யார் நீ?” என கேட்டார் நம்பூதிரி. அதனை கேட்ட அந்நிழலுருவம் அழகிய பெண் உருவத்தை அடைந்தது. 

 

“நான் தேவகன்னிகா..”

 

“எங்கிருந்து வந்திருக்க?”

 

“ஹாஹாஹா… நான் எங்கிருந்தும் வரவில்லை.. இவர்கள் தான் நானிருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார்கள்.. இது என் இடம்.. என்னுடைய சமாதி இருக்கும் இடம்.. அதன் மேல் தான் நீங்க எல்லோரும் இப்போது இருக்கிறீர்கள்..”

 

“இந்த குடும்பத்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”

 

“இதோ நிற்குறாளே ஒன்னும் அறியாதவள் போல்.. இவள் கணவன் தான் என்னை உயிரோடு துடிக்க துடிக்க கொன்றது.. அவனை பழிவாங்கத் தான் நான் இத்தனை வருடங்களாக இங்கு தவமிருக்கிறேன்..”

 

“ஆ ஆளை தாக்குவதை விட்டுவிட்டு எந்துக்கானும் ஈ சஞ்சயை தொந்தரவு செய்யனும்?”

 

“இந்த சஞ்சய் எனது காதலன் காரிமாறன்.. இவனுடன் என்னை சேர விடாமல் பிரித்து கொன்று விட்டான்.. அந்த செங்கோடன்..”

 

“எந்துக்கானு ஆ வேதாக்குட்டியை கொன்ன?”

 

“எனது அன்பர்.. அவளை விவாகிக்க கூடாதுன்னு தான்.. அவளோட அப்பனும் அவளும் எனக்கு செஞ்ச துரோகத்துக்கு.. அவர்களுக்கு அளித்த மரணமே சரியான தண்டனை..”

 

“இந்த குடும்பம் எப்பவோ செஞ்ச பாவத்துக்கு இப்ப தண்டிக்கப் போறியா?”

 

“ஆமா.. தப்பே செய்யாத நான் இவங்களால் கொலை செய்யப்பட்டல.. அதே மாதிரி நான் அனுபவித்த வேதனையை இவர்களுக்கு திருப்பித் தருவது தான் சரியானது.. இவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு நானும் என் அன்பரும் எங்கள் உலகிற்கு சென்று இன்புற்றிருப்போம்..” 

 

“அது ஞான் இருக்க வரை நடக்காது பெண்ணே..” எனக் கூறியவர், சில மந்திரங்களை ஓத அதனை கேட்ட தேவகன்னிகா அலறத் தொடங்கினாள். அவளை ஒரு சிறு கலசத்திற்குள் அடைத்து வைத்து அதன்மீது மஞ்சள் துணியைப் போட்டு அதன் மேல் மந்திர உச்சாரத்துடன் சிவப்பு கயிற்றை கட்டினார். அதனை தன் சிஷ்யர்களிடம் கொடுத்து அங்கிருந்த ஆலமரத்தின் புகைக்க சொன்னார். அவர்களும் அதே போல் புதைத்துவிட்டு வந்தனர். அப்போது அவரிடம் வந்த ராசாத்தி அம்மாள்,

 

“சாமி.. இனிமே அது எங்களை தொந்தரவு செய்யாதில்ல..” எனக் கேட்க சிரித்தார் நம்பூதிரிகள். 

 

“இவ எப்ப வேணும்னாலும் வெளிய வரலாம்..”

 

“சாமி?”

 

“ஆ தேவகன்னிகை தேவகணத்தில் பிறந்த உங்க மகன் சஞ்சயோடு விவாகம் கழிச்சு ஒன்னு சேர்ந்தால் பல அபூர்வமான சக்தி அந்த ப்ரேதாத்மாவிற்கு கிட்டும்.. அதனால் ஆடி மாதம் பூரநட்சத்திரத்தில் பிறந்த தெய்வசக்தி வாய்ந்த பெண்ணை வரும் அமாவாசைக்குள் உங்கள் மகன் சஞ்சயிற்கு விவாகம் செய்து வைக்க வேண்டும்.. அவளால் மட்டும் தான் சஞ்சயையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாத்த முடியும்.. தவறினால் அடுத்து வரும் பௌர்ணமிக்குள் அக்கன்னிகா உங்கள் குடும்பத்தை அழிப்பது நிச்சயம்..”

 

“சாமி.. நாங்க உங்களைத் தான் நம்பியிருக்கோம்.. இப்ப எங்கன்னு அந்த பொண்ணை போயி தேடுவோம்.. நீங்களே அந்த பொண்ணு இருக்கும் இடத்தை எங்களுக்கு காட்டுங்க..” என ராசாத்தி அம்மாள் கேட்டதும் சோலி போட்டு பார்த்தவர், தன் கண்களை மூடிக் கொண்டு,

 

“முதலில் நீங்க இங்கனுருந்து போகனும்.. உங்க புருஷனோட பூர்வீகம் இருக்குற கிரமத்துல தான் அந்த பொண்ணு இருக்குது.. நீங்க அங்கப் போனதும்.. அந்த பொண்ணே உங்களைத் தேடி வருவா..” எனக் கூறிய நம்பூதிரி அவர் கையில் சில தாயத்துக்களை கொடுத்து ராசாத்தி அம்மாளிடம் சில விஷயங்களை கூறினார். அதன்படி அந்த வீட்டை காலி செய்தவர்கள் சபாபதியின் மதுரை ‌அருகே இருக்கும் பூர்வீக கிராமத்தை நோக்கி பயணம் செய்தனர். நம்பூதிரி அளித்த டாலரை தனது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் நண்டு செண்டு வரை அணிவித்தார். இவையாவும் மூடநம்பிக்கை எனக்கூறும் கணவனை சரிகட்டி அவரையும் தங்களுடன் அவரது கிராமத்திற்கு அழைத்து சென்றார் ராசாத்தி அம்மாள். அடுத்த வாரத்தில் தான் அமாவாசை வருகின்றது. அதற்குள் தெய்வ அம்சம் கொண்ட பெண்ணை எவ்வாறு கண்டுபிடிப்பது? என்ற யோசனையில் இருந்தார் ராசாத்தி அம்மாள். 

 

காரில் பயணம் செய்து கொண்டிருந்த ராசாத்தி அம்மாளின் மூளைக்குள் அந்த இஸ்திரிக்காரன் கூறிய பூராணக்கதையே ஓடிக் கொண்டிருந்தது. சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பாக ஒரு ஜமீன்தார் தன் மகன் மற்றும் மகளுடன் அந்த அரண்மனைப் போன்ற வீட்டை கட்டியிருக்கின்றார். ஜமீன்தாரின் மகனுக்கு தன் தோழனின் மகளையும் மகனையும் பெண் கொடுத்து பெண்ணெடுக்கும் வகையில் பேசி முடித்திருக்கின்றனர். இந்நிலையில் தான் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தேவகன்னிகாவிற்கும் ஜமீன்தார் மகன் காரிமாறனுக்கும் காதல் ஏற்பட்டு விட அவர்கள் இருவரும் ஊருக்குத் தெரியாமல் தாலி கட்டி கணவன் மனைவி ஆனார்கள். இவ்விஷயத்தை அறிந்த காரிமாறனின் தமக்கை இவர்களது காதல் விஷயத்தால் தனது விவாகம் நின்றுவிடுமோ என்ற அச்சத்தில் காரிமாறனுக்கு மணமுடிப்பதற்காக இருந்த வேதவள்ளியிடம் இதனை கூறிவிட்டாள். இதனை தனது தந்தையிடம் கூறிய வேதவள்ளி, நயவஞ்சகமாக காரிமாறனை வெளியே அழைத்துச் சென்றிருக்கும் சமயத்தில் அவளது தந்தையும் காரிமாறனின் தந்தை செங்கோடனும் சேர்ந்து தேவகன்னிகாவை உயிரோடு எரித்து கொன்றனர். அவளது சவத்தை யாருக்கும் தெரியாமல் தங்களது வீட்டிற்கு பின்னால் இருக்கும் கொள்ளபுறத்தில் புதைத்து சமாதி கட்டினர். திரும்பி வந்த காரிமாறன் தனது காதலியை தேடி தேடி மிகவும் சோர்வுற்று போய் தன் தந்தை கூறிய வேதவள்ளியை திருமணம் செய்ய மனமில்லாமல் விஷம் அருந்தி இறந்து போனான். மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாது, ஜமீன்தாரும் சிறிது நாட்களில்லேயே இறந்துவிட, அத்தோடு அங்கிருந்து அனைவரும் கிளம்பி சென்றுவிட்டனர். ஜமீன்தாரின் பூர்வீகம் வேறு இடமாக இருக்கவே இந்த வீட்டினை யாரும் கவனிக்கவில்லை. 

 

 காலப்போக்கில் பலரது கைமாற்றலுக்குப் பிறகு மீண்டும் விஜயின் மூலமாக அந்த அரண்மனை திறக்கப்பட்டது. வீட்டை புதுப்பிக்கும் எண்ணத்தில் அச்சமாதியை உடைத்து அந்த இடத்தினையும் சேர்த்து தங்களது வசதிக்கு ஏற்றவாறு அந்த அரண்மனையை மாற்றி அமைத்தது தான் தவறாக போயிற்று. தூங்கிக் கொண்டிருந்த மிருகத்தை தட்டி எழுப்பி விட்டான் விஜய். இறந்து போன வேதவள்ளியும் அவளது தந்தையும் தான் முன் ஜென்மத்தில் தேவகன்னிகா இறக்க காரணமாக இருந்தது. ஆதலால் முதல் பழியை அவர்களிடம் இருந்து ஆரம்பித்திருக்கிறாள். இதோ குடும்பத்தோடு திருநெல்வேலிக்கு அருகே உள்ள இராஜவல்லிபுரத்திற்கு வந்திருந்தார் ராசாத்தி அம்மாள். அன்று நடந்த நிகழ்வுகளால் மிகவும் அரண்டு போயிருந்தாள் நந்தினி. 

 

“அம்மா..”

 

“என்ன சஞ்சு?”

 

“இப்ப கூட்டிட்டு வந்துருக்கியே.. இங்க ஏதாவது கிளம்புமா?”

 

“ஏன்டா?”

 

“இல்ல.. எங்கயோ போற மாரியாத்தா.. என்மேல வந்து ஏறாத்தான்னு.. சிவனேன்னு இருந்த பேய.. தோண்டி வெளிய எடுத்து மொத்த குடும்பத்தையும் இப்படி நாடோடிகள் சசிகுமார் மாதிரி சம்போ.. சிவசம்போ.. சிவ சிவ சம்போன்னு அலைய வச்சுருக்கானே.. உங்க அருமை புதல்வன் விஜய்.. அதே மாதிரி இங்கயும் எதையாவது கிளம்பி விட்டுருக்கானா?”

 

“அதிகமா வாயடிக்காம.. உள்ளப் போ..”

 

“எங்க அந்த மலைமுழுங்கி மகாதேவன்? ஒரு பேயை ஏவி விட்டு நாம எல்லாத்தையும் அடிவாங்க வைச்ச.. அந்த தங்கத் திருமகன்”

 

“டேய்.. ஏற்கனவே அவே ரொம்ப பயந்து போயிருக்கான்.. நீ மேற்கொண்டு அவனை பயமுறுத்தாதே..”

 

“யாரு? அவனா? பயந்து போயிக்கானா? போம்மா.. அவே நாலு பேரை பயமுறுத்துவானே தவிர.. அவனாவது பயப்படுறதாவது..”

 

“சரிடா.. வீட்டுக்குள்ள வராம.. நீ எங்கப் போற?”

 

“சுத்தி வயலு.. பார்க்க கண்ணுக்கு எவ்ளோ குளிர்ச்சியா இருக்கு.. அப்புடியே ஒரு ரவுண்ட் போயிட்டு வாறேன்..” எனக் கூறிய சஞ்சய் வெளியே செல்ல கிளம்பினான். அவர்கள் வந்திருப்பது சபாபதியின் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டிற்கு தான். அந்த வீட்டைச் சுற்றி உள்ள எட்டு திசைகளிலும் நம்பூதிரி அளித்த தாயத்துக்களை புதைத்து வைத்திருந்தனர். அது அவர்களுக்கு தற்கால பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியிருந்தது. 

 

“ஆகா.. எவ்ளோ சூப்பரா இருக்கு.. புதிய வானம்.. வானம்.. வானம்.. புதிய பூமி.. பூமி.. பூமி.. அய்யோ ரொம்ப அழகாயிருக்கு..” என அங்கிருந்த கால்வாயைப் பார்த்து கூறிக் கொண்டு இருந்தவனின் மீது நீர்த்துளிகள் விழுந்தன.

 

“யாருடா அது? நம்ம மேல தண்ணி தெளிக்குறது” என பார்த்தவனின் முன் மார்பு வரை பாவாடைக் கட்டி கொண்டு தண்ணீருக்குள் குளித்துக் கொண்டிருந்த அந்த பெண் தெரிந்தாள். பார்ப்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போல் கொழுக் மொழுக்கென்று இருந்தவளின் வாய் மட்டும் கால்வாய் வரை சென்று வந்தது. அவன் அவளது அழகை ரசித்துக் கொண்டிருக்க, அவள் அவனை நார் நாராய் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருந்தாள். 

 

“ஏய்.. நீயெல்லாம் முன்ன பின்ன பொம்பளப்புள்ளய பார்த்ததேயில்லயா.. கொள்ளிக்கண்ணா.. முதல்ல உன்னைய யாரு இங்க வரச் சொன்னது? இப்ப நீயா போறியா? இல்ல இந்த கல்ல வைச்சு மண்டைய உடைக்கவா?” என திட்டியவள் கரைக்கு ஏறிவரும் போது தென்பட்ட அவளது முழங்காலில் இருந்து பாதம் வரை வழுவழுவென இருந்த திரண்ட கெண்டைக்கால் திரட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது பாவாடையின் முடிவில் சொட்டு சொட்டாய் வடிந்து கொண்டிருக்கும் அந்த தண்ணீர் துளிகளில் மீது பொறாமை வந்தது. அவை யாவும் வெண்ணெய் போல் குழைவாக இருக்கும் அவளது மேனியின் மேடு பள்ளங்களில் பயணித்து இறுதியாக மோட்சத்தை தேடி சென்று கொண்டிருப்பது போல் தோன்றியது. 

 

விடிந்தும் விடியாமல் இருக்கும் பிரம்ம நாழிகையில் அவர்கள் இவ்வாறு சண்டையிட்டு கொண்டிருப்பது யார் கண்ணுக்கும் தெரியவில்லை. தன்னை திட்டும் அவளது இதழில் வழிந்து கொண்டிருக்கும் நீரினை வைத்த கண் பாராமல் பார்த்துக் கொண்டிருக்கும் அவன் கன்னத்தில் சப்பென அறைந்தாள் அந்த தேவதைப்பெண். அவள் கையால் அடிவாங்கியதும் தான் உணர்வு வந்தவன் போல் சிலிர்த்து கொண்டான் சஞ்சய்.

 

“இப்போ.. நீ என்ன அடிச்சியா?”

 

“ஆமா.. பட்டிக்காட்டான் மிட்டாய பார்க்குறது மாதிரி மொறைச்சு மொறைச்சுப் பார்த்த.. அதான் அடிச்சேன்.. இனிமே எந்த பொண்ணையும் இப்புடி பார்க்க மாட்டேல்ல.. அதான்..” எனக் கூறி விலகிச் சென்றவளை தடுத்து தன் கைவளைவிற்குள் இழுத்தவன், இவ்வளவு நேரமும் அவனை உன்மத்தம் கொள்ளச் செய்த ஆரஞ்சு சுளை இதழ்களை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான். அவனை தள்ளிவிட எவ்வளவோ முயற்சித்தும் விடாப்பிடியாக தனது காரியத்தை சாதித்து கொண்டவன்,

 

“இனிமே உன்னைத் தவிர வேற எவளையும் மொறைச்சு மொறைச்சுப்  பார்க்கமாட்டேன்.. ஐ லவ் யூ டி.. மல்கோவா..” என அவளது கன்னத்தை தடவி அதில் முத்தமிட்டு சென்றவனை பார்த்து அதிர்ந்து போய் நின்றிருந்தாள் அந்த தேவதைப்பெண். நடப்பது அனைத்தும் காற்றில் கரைந்திருக்கும் அருவத்தின் பட் தவறவில்லை.. இனி என்னாகுமோ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top