சண்டியரே 2
“மாமா..யோவ் மாமா.. உன்னைய தான் யா.. என்னய்யா நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்க.. பின்னால வரவள எங்கேயாவது அம்போன்னு விட்டுட்டு போற நீயு?” என்று டிவிஎஸ் ஃபிப்டியை ஓட்டிக்கொண்டே வந்தவளை யார் என்று புரியாமல் தலையை சொரிந்தபடி பார்த்தான் அந்த ஹீரோ ஸ்பெல்ண்டரை ஓட்டிக் கொண்டிருந்தவன்.
வண்டியை வேகமாக ஓட்டி அவனை வளைத்து அவன் வண்டி முன்னே கொண்டு வந்து நிறுத்தியவள் மூச்சு வாங்க “கொடராச்சேரியில இருந்து உம் பின்னால தானே வந்துகிட்டு இருக்கேன்.நீ பாட்டுக்கு பொசுக்குன்னு ரோட்ட கிராஸ் பண்ணிட்ட.. பின்னால வரவள பத்திரமா கூட்டிட்டு போகணும் பொறுப்பு இல்லையா மாமோய் உனக்கு? அவ்வளவு தூரம் பின்னால வந்த மயிலு மேல பாசமே இல்ல மாமோய் உனக்கு.. எக்கோவ்.. மாமன் செயலு சரியில்ல பாத்துக்கோ..!” என்று புகார் கூற,
அவனோ தலையை சொறிந்து கொண்டு “யாருமா அது மயிலு?” என்று கேட்கும் முன்னே அதை அதிகாரத்தோடு கேட்டாள் அவன் பின்னே அமர்ந்திருந்த அவன் மனைவி..
“வேற யாரு..நான் தேன் மயிலு.. தங்க மயிலு!!” என்று கூறியவள், “வரட்டா மாமோய்.. எக்கோவ் நல்லா பாத்துக்கோ மாமன” என்றவள், அவள் வந்த டிவிஎஸ் பிஃப்டியில் பறக்க..
அங்கே அதற்கு பின் அந்த கணவனின் நிலையை பற்றி நாம் சொல்லவும் வேண்டுமா?
இப்படி ஒரு குடும்பத்திற்குள் கும்மி அடித்து சாதாரணமாக செல்கிறாளே என்று யாரும் நம் நாயகியை தவறாக எண்ணக்கூடாது.
பாவம் பிள்ளைக்கு ஸ்கூட்டி டிவிஎஸ் பிப்டி ஓட்டலாம் நன்றாக வரும். ஆனால் ரோடு கிராஸ் பண்ணும் போது தான் கொஞ்சம் கையும் காலெல்லாம் ஜெர்க் அடிக்கும்.
அச்சமயத்தில் யாராவது அவளோடு ரோடு கிராஸ் பண்ண வந்தால் இவளும் அப்படியே கிராஸ் பண்ணி அந்த பக்கம் லேண்ட் ஆகி விடுவாள்.
அதுபோல கொடராச்சேரிக்கு ஒரு வேலையாக சென்றவள், திரும்பி வரும் வழியில் முன்னே சென்று கொண்டிருந்த அந்த ஹீரோ ஸ்பெல்ண்டரை தான் பின் தொடர்ந்து வந்தாள்.
அதிலும் இவள் சற்று கிராஸ் செய்வதற்கு தடுமாறும் இடங்களிலும் அவன் அசால்டாக கிராஸ் செய்ய.. அதை பின்பற்றி வந்து தான் இப்பொழுது கடைசி நேரத்தில் அவனை நழுவ விட்டு.. அவனை திட்டியும் விட்டு.. போதாக்குறைக்கு அவன் குடும்பத்தில் கும்மியும் அடித்து விட்டு செல்கிறாள்.. நம் நாயகி தங்கமயில்!!
“மா மா..எம்மோவ்…” என்று கத்தியபடியே உள்ளே நுழைந்த மகளிடம் “அப்படியே விருட்டுனு உள்ள வராதனு எத்தனை தடவ உனக்கு சொல்லி இருக்கேன். எவ்வளவு பட்டாலும் வராது உனக்கு.. கை கால் கழுவிட்டு வா” என்று அதட்டினார் கமலாம்பிகை.
“சரி சரி..என்னை கத்தி கத்தி உனக்கு பிபி ஏத்திக்காத.!” என்றவள் தாவணியை இழுத்து சொருகி விட்டு கை கால் கழுவி உள்ளே வந்தாள்.
“என்ன ஆச்சு? எல்லாம் கொடுத்துட்டு வந்துட்டியா?” கமலா கேட்டதும்,
“ம்ம்ம்..இனிமே அடுத்த வாரம் போனா போதும்” என்றாள்.
“ஒவ்வொரு பிள்ளைங்க என்ன அழகா படிக்குதுங்க..படிச்சு ஊர் மெச்ச வேலை பாக்குதுங்க.. நீ என்னடானா..” என்று மகளை பேசிக்கொண்டு நீர் மோரை கரைத்து வந்து அவள் கையில் திணித்தார் கமலா.
“இங்க பாருமா..எது வருதோ அதுதான் வரும். வராததை எல்லாம் வா வான்னு சொல்லி வம்படியான இழுத்து வச்சிட்டு இருக்க கூடாது. எனக்கு இவ்வளவுதான் படிப்பு வந்துச்சு.. இதுக்கு மேல வராது..! நீ என்னை கொண்டு போய் காலேஜ் சேர்த்து விட்டாலும் செமஸ்டர் பீஸ்.. காலேஜ் பீஸ்.. பஸ் பீஸ்.. எக்ஸாம் பீஸ்.. புக் பீஸ்.. எப்பா சொல்லும்போதே மூச்சு முட்டுது பாரு.. இத்தன பீஸ்சும் தண்டம் தான்.! இதெல்லாம் சேர்த்து வைத்து நகையா சேர்த்து வை நான் புருஷன் வீட்டுக்கு போகும்போது எடுத்துட்டு போறேன்” என்றவள் அன்னை கொடுத்த நீர் மோரை குடித்தாள்.
“வாய் மட்டும் இல்லேன்னா உன்னை எல்லாம் நாய் கூட சீண்டாது டி.! வாக்கப்பட்டு போற வீட்டில இந்த வாயால என்ன என்ன பிரச்சனை உனக்கு வரப்போகுதோ?” என்று மகளிடமிருந்து சொம்பை வாங்கிக் கொண்டு அவள் கன்னத்தை நொடித்துவிட்டு சென்றார் கமலா.
“கல்யாணம் தானே அதுக்கு என்ன இப்போ அவசரம்..* என்றவள் “அம்மா நான் வேம்ப பாக்க போறேன்..” என்றபடி வேகமாக அங்கிருந்து ஓடிய மகளை
“ஏய் நில்லுடி நில்லு..உச்சிமணி நேரத்துல ஊர சுத்தாதனு நான் எத்தன தடவை சொல்லி இருக்கேன். கேக்குதா பாரு.. அப்படியே அப்பன மாதிரியே வந்து வாயச்சு இருக்கு சொன்ன பேச்சைக் கேட்குறதே இல்ல..” என்று திட்டிக்கொண்டு வேலையை பார்க்க சென்றார் கமலா.
“வாடி..வாடி.. வாடி.. உன்ன தாண்டி எதிர்பார்த்துட்டு இருந்தேன்” என்று வீட்டுக்குள் நுழைந்த தங்கமயிலை கைப்பிடித்து இழுத்துக் கொண்டு தங்கள் வீட்டுக்கு கொல்லப்புறத்தில் இருக்கும் மாமரத்துக்கு அடியில் அமர்ந்தாள் வேம்பு.
ஊர் புறத்தில் இது ஒரு வழக்கம். தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறந்தால் வேம்பு வேண்டாமிருதம் இந்த மாதிரி பெயர்களை வைத்தால் அடுத்து கசந்து போய் ஆண் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
ஆனால் வேம்புவின் குடும்பத்தில் அது நடக்கவில்லை முதலில் அல்லி ஆனந்தி என்று இரு பெண் குழந்தைகளுக்கு பின் மூன்றாவதாக வேம்பு பிறந்தாலும் அதற்கு அடுத்து குழந்தை ஏதும் பிறக்கவில்லை அவள் அன்னைக்கு.
“ஏண்டி முந்தா நாளு மாப்பிள்ளை பார்க்க வந்தவர ஓட ஓட விரட்டிட்டியாம்? என்னடி நடந்துச்சு?” என்று கேட்ட வேம்பை கண்டுகொள்ளாமல்..
மாமரத்து அடியில் நின்று ஒரு கல்லை எடுத்து குறி பார்த்து மாங்காவின் மீது எறிய குறி தவறாமல் தொப்பென்று வந்து விழுந்தது இரண்டு மூன்று மாங்காய்கள் குலையாய்.
“எங்க அம்மா பார்த்துச்சு என்னை கொன்னு போடும் சீக்கிரம் எடுத்து மறச்சு வை டி” என்றாள் வேம்பு.
அதை அப்படியே தாவணிக்குள் போட்டுக் கொண்டவள் ஒரு மாங்காய் எடுத்து அருகில் இருந்த கல்லால் உடைத்தாள். பின்பு அதை சப்புக்கோட்டி சாப்பிட்டுக் கொண்டு “என்ன இருந்தாலும் திருட்டு மாங்காய் ருசியே ருசிடி.. அதுவும் உன் வீட்டு திருட்டு மாங்கா இருக்கு பாரேன்.. ம்ம்ம்..” என்றதும் அவளை முறைத்தாள் வேம்பு.
“ஒழுங்கு மரியாதையா என்ன நடந்துச்சுனு சொல்லு..நான் வேற அன்னைக்கு வீட்டுக்கு தூரம். இல்லனா லைவாவே பார்த்து இருப்பேன்” என்று பார்க்க முடியாமல் போனதை நினைத்து ஆதங்கப்பட்டு கொண்டாள் வேம்பு.
இருவருக்கும் ஒரே வயது தான் அதுவும் இருவரும் 12-வதுக்கு பிறகு படிக்கவே இல்லை. இப்பொழுது தான் வேம்புவின் முதல் அக்கா அல்லிக்கு திருமணம் முடிந்திருக்க, அடுத்து ஆனந்தி அதற்குப் பிறகு தான் வேம்பு.
இந்த உயிர் தோழிகளோ ஒரே மேடையில் திருமணம் இல்லை என்றாலும் அட்லீஸ்ட் ஒரே வருடத்திலாவது இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சங்கல்பம் எடுத்திருப்பவர்கள்.
“எனக்கு முன்னாடி திருமணம் செய்து கொண்டு போன..உனக்கு ஃபர்ஸ்ட் நைட்டே நடக்காது டி..!” என்று ஒருத்தி மாத்தி ஒருத்தி இருவரும் சாபம் கொடுத்துக் கொண்டார்கள்.
அம்புட்டு நட்பு..!!
எங்கே இந்த சம்பந்தம் அமைந்து விட்டதோ என்று ஒருவித ஆர்வ பரபரப்போடு தான் கேட்டாள் வேம்பு. பொறுமையாக பாதி மாங்காயை காலி செய்த பிறகு வாயைத் திறந்தாள் தங்கமயில்.
“கவலைப்படாத மச்சி..அப்படியெல்லாம் ஒன்னும் ஆகல அந்த மாப்பிள்ளையை விரட்டி விட்டுட்டேன்” என்றதும் கண்கள் மின்ன “எப்படி டி விரட்டி விட்ட?” என்று ஆர்வமாக கேட்டாள் வேம்பு.
“அது ஒன்னும் இல்ல மச்சி வழக்கம் போல என்னைய அலங்கரிச்சு கூட்டிட்டு போனாங்க… வீட்டுக்குள்ளனா சொந்த பந்தங்கள் அது இதுன்னு பேசும்..கடைசில எப்படியும் முட்டிக்கும். ஆனா.. கோயிலுக்கு அதெல்லாம் முடியாதுன்னு எங்க அப்பா பயங்கரமா பிளான் பண்ணி தான் என்னைய கூட்டிட்டு போனாரு.. ஆனா நாம யாரு..??” என்று ஜாக்கெட்டில் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள் தங்கமயில்.
“உள்ள போனதும் என்னைய ஓரமா உட்கார வைச்சுட்டு இவங்க எல்லாம் பேசிக்கிட்டே இருந்தாங்களா..??” என்றவளின் பேச்சில் இடையிட்டு “ஆமா மாப்பிள்ளை எந்த ஊரு காரன்?” என்று கேட்டாள் வேம்பு.
“திருத்துறைப்பூண்டியாம்..பாரேன்.. அங்கிருந்து இங்க வந்து என்கிட்ட அடி வாங்கணும்னு இருந்திருக்கு” என்று வாயை பொத்திக்கொண்டு சிரித்தாள் மயிலு.
“என்ன அடிச்சியா..??” கண்களை விரித்தாள் வேம்பு.
“பின்ன சும்மா விடுவாங்களா? உங்க வீட்டு அடியா.. எங்க வீட்டு அடியா? வளைச்சி வளைச்சு சாத்தி அனுப்பி விட்டேன் இல்ல..” என்று சிரித்தாள் மயிலு.
“புரியும்படியா சொல்லி தொலையேண்டி. பாரு எனக்கு ஆர்வம் தாங்கல..” என்ற வேம்பு அவளை நன்றாக தன் புறம் திருப்பி கேட்டாள்.
“என்னைய உக்கார வச்சுட்டு இவங்க பாட்டுக்கு சம்மந்தம் பேச போய்ட்டாங்க..அந்த மாப்பிள்ளையும் என்ன ஓரக்கண்ணால பாத்துக்கிட்டே இருந்தான். அவன் மூஞ்சியும் முழியும்.. மீசையும்.. அதெல்லாம் மீசையாடி? மீசைன்னா எப்படி இருக்கணும் தெரியுமா.?” அவள் கண்களில் கனவு தெரிய…
“உங்க மாமன் வைச்சு இருக்கார் பாரு அவர மாதிரி இருக்கணும்” என்ற வேம்புவின் கண்களில் கண்ட சில்மிஷத்தில் அவள் தலையில் நறுக்கு என்று குட்டு வைத்தாள் மயிலு.
“என் மாமாவ பத்தி பேசினா கொன்னுடுவேன்”
“ஏன் நீ உன் மாமா கட்டிக்க போறியா?”
“அய்யய்யோ..என் மாமாவையா? அது கஞ்சிய சட்டைக்கு போடுதா வயித்துக்கு போடுதானே தெரியாம வெறைச்சிகிட்டே திரியும். இதுல எங்க அப்பாவுக்கும் அதுக்கும் ஆகாது. எங்க அம்மாச்சி வேற செத்துப் போச்சு.. அந்த குடும்பத்துக்கு நான் போனா எல்லா வேலையும் நம்ம தலையில தான் கட்டுவாங்க.. எப்பா சாமி அதெல்லாம் நமக்கு ஆகாது” என்று கையெடுத்து கும்பிட்டாள்.
“அப்பாடி..!! மகமாயி உனக்கு மாவிளக்கு போடுறேன்! இப்ப தாண்டி எனக்கு நிம்மதியா இருக்கு.. எங்க உன் மாமன கட்டி நீ இதே ஊர்ல செட்டில் ஆயிடுவியோனு பயந்துட்டேன்” என்றவளை முறைத்தாள் மயிலு.
“சரி சரி என்னைய பாசமா பாக்காத ஆத்தா..அங்கன நடந்த விஷயத்தை சொல்லு” என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு ஆர்வமாக மயிலின் முகத்தை பார்த்தாள் வேம்பு.
“வழக்கம்போல தான் அந்த தகர டப்பா மூஞ்சனுக்கு என் மூஞ்ச போனா போதுன்னு புடிச்சு போச்சாம் டி..வந்துச்சு எனக்கு கோபம். ஆனாலும் ஆத்திரத்தை அடக்கி உட்கார்ந்து இருந்தேன். அப்புறம் பார்த்தா நகை நட்டு ஆரம்பிச்சாங்க விக்கிற விலைவாசியில அந்த தகர டப்பனுக்கு பத்து பவுனு போடணுமாம். ஆத்தி.. என்ன அநியாயம் பாத்தியா.. இருடா மவனே எல்லாத்துக்கும் சேர்த்து வைக்கிறேன்னு பொறுமையா காத்துகிட்டு இருந்தேன்”
“இதுல அந்த மாப்பிள்ளை ஓட அம்மா பேசினாலும் பரவால டி..அண்ணிக்காரியாம்.. அவ அவங்க வீட்டுக்கு ஒத்த பொண்ணாம். அவ்ளோ சீர்வரிசை கொண்டு வந்தாளாம். அதே மாதிரி சீர்வரிசையை எனக்கும் கொடுத்து அனுப்பனுமாம். அப்பதான் ஓரக்கத்தி பிரச்சனை வராதாமாம்”
“மாமியார் நாத்தனார் பிரச்சனை எல்லாம் போய் இப்ப ஓரகத்தி பிரச்சினை தாண்டி பெரும் பிரச்சனையா இருக்கு” என்று வேம்புவும் சொல்லி சிரிக்க..
“அதேதான்..அதை தனியா போட்டோ புடிச்சு வச்சுக்கிட்டேன் என் கண்ணுல.. உனக்கும் இருக்குடின்னு..”
“அப்புறம் என்ன இப்போதைக்கு இதை பேசி முடிச்சிட்டோம். மறுக்கா இன்னொரு தடவை பேசலான்னு இவங்க பேசிட்டு இருக்கும் போதே உச்சிக்கால பூஜை ஆரம்பிச்சுட்டு பஞ்சவாத்தியத்தை போட்டுவிட்டு அம்மனுக்கு தீபாராதன காட்டுனாங்களா.. அவ்வளவுதான் சாமி வந்த மாதிரி கைய மேல முறுக்கி ஆடிக்கிட்டே பார்த்தா பக்கத்துல வேப்பிலை மிஸ்ஸிங்..”
“சோ..சேட் டி..” என்று சிரித்தாள் வேம்பு.
“வேப்பிலை மிஸ்ஸிங்னா நாம சாமி இல்லையா என்ன? முழிய உருட்டி நாக்கை துரத்தி கை இரண்டையும் மேலே ஊத்தி வாயில குலவை சத்தம் போட்டதும் பார்க்கணுமே.. என் பக்கத்துல நிக்க வச்சு இருந்த மாப்பிள்ளை ஒரே ஜம்புல அவங்க அம்மாவுக்கு பின்னால போய் ஒளிஞ்சிட்டான்..” என்று வயிறு பிடித்துக் கொண்டு சிரித்தாள் மயிலு.
“அப்புறம்..என்னாச்சு அந்த பீஸூ..?” என்று சுவாரசியமாக கதை கேட்டாள் வேம்பு.
“அப்புறம் என்ன நாக்கை துருத்தி அவன் முன்னால நின்னு “டேய் நீ தான் மாப்பிள்ளையா..வா டா இங்கன?’ நான் போட்ட சத்தத்துல ‘எம்மோவ்.. என்னைய விட்டுடாத எம்மோவ்னு’ அவன் அம்மா முந்தாணைய விடாமல் புடிச்சுக்கிட்டே வந்து என் முன்னால நின்னான்”
“ஹா..ஹா.. ஹா…”
“ஏன் டா என்னோட குலக்கொழுந்து ஒத்த பொண்ணு..அந்த பொண்ணுக்கு நீ மாப்பிள்ளையா? அதுவும் அத்தனை வரதட்சணை கேப்பியா நீனு? நான் முழிய முழிச்சி பார்க்க.. அப்பதான் நம்ம பெரியாச்சி அம்மனுக்கு படையல் போட்டு வச்சிருந்தாங்க. அதிலிருந்து ரெண்டு குச்சியை உருவி பொண்ணு பார்க்க வருவியா?? வருவியா?? நிறைய நகை கேப்பியா? கேட்பியான்னு.. காலிலேயே செம போடு.. அவன் பயந்து கத்தி அலற..
“இடையில காப்பாத்த வந்த அவ அண்ணிக்காரிக்கும் ரெண்டு போடு..நல்ல பன்னுலேயே.. குந்தாணியால இனி உட்கார முடியாது எழ முடியாது.. வலியில அவ மூஞ்சி போன போக்க பார்க்கணுமே எலி மூஞ்சி மாதிரி..” என்று தான் மாப்பிள்ளை விரட்டி விட்ட கதையை அவ்வளவு சுவாரசியமாக சொல்லிக் கொண்டிருந்தாள் மயிலு.
இடையில் இடையில் வேம்பு அவள் புஜத்தை சுரண்டியதையோ கைகளைத் தட்டியதையோ கவனிக்கவே இல்லை. அத்தனை சந்தோஷத்தோடு சுவாரசியமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
‘எப்படி என்னை நீ பெண் பார்க்க வரலாம்? அதுவும் இவ்வளவு நகை கேப்பியா?’ என்ற ஆதங்கமும் கோபமுமாக இருந்தவள் அனைத்தையும் போக்கிக்க அடித்து துரத்தி விட்டாள். அவர்கள் வலியோடு ஓடியதை கூறி கூறி சிரித்து சிரித்து பேசினாள் மயிலு.
“அப்புறம்..??” என்ற குரலில் “என்ன வேம்பு உன் குரலை திடீர்னு கட்ட குரலா போச்சு.. அப்புறம்தான் ஹைலைட்டே..” என்றவள்,
“எங்க அப்பா அம்மாவையே எனக்கு உண்மையிலேயே சாமி தான் வந்ததுன்னு நம்ப வச்சு அவங்களையும் என் கால்ல விழ வச்சுட்டேன்ல..” என்று சிரியோ சிரி என்று சிரித்தவள் முன்னே.. கையில் கட்ட வார்கோலோடு மண்டை ஓடு இல்லா பத்திரகாளி இல்லை இல்லை இவ்வூருக்கு பொருத்தமாக சொல்ல வேண்டும் என்றால் பெரியாச்சி என்கிற பேச்சியம்மன் போல நின்றிருந்தார் கமலாம்பிகை.
பின் கேட்கவும் வேண்டுமா கட்டவார்க்கோல் பிய்ய பிய்ய அடித்து நொறுக்கி விட்டார் மகளை.
அவ்வளவு அடித்தும் ஆத்திரம் தீராமல் மகளை வீட்டுக்குள் தரத் தரவென்று இழுத்து அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தார்.
அந்த அழுகை இயலாமையின் வெளிப்பாடு..! பெரும்பாலான அன்னையர்கள் போல..
‘இந்த மனுஷனை எதிர்த்து நம்ம தம்பிக்கு பொண்ண கட்டி கொடுக்க முடியல..வர்ற மாப்பிள்ளையையும் இந்த மாதிரி இவ பண்றதால.. சொந்தத்திடம் ஒரே பேச்சு ஏச்சு. பொம்பளையா நான் என்னத்த தான் பாக்குறது? இவ இப்படி செய்வதற்கு பொம்பள புள்ளைய ஒழுங்கா வளர்க்க துப்பு இல்லன்னு எனக்கும் தான் ஏச்சு பேச்சு..” என்று தன் போல புலம்பி கொண்டு இருந்தவர், ஒரு முடிவு எடுத்தவர் போல முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கணவனுக்கு அழைத்து,
“இங்க பாரு யா..நீ என்ன செய்வீரோ ஏது செய்வீரோ எனக்கு தெரியாது! யாரு கால பிடிப்பீரோ இல்ல வால பிடிப்பீரோ.. என் தம்பி தான் என் பொண்ணுக்கு மாப்பிள்ளையா வரணும். யாரையாவது பேச அனுப்பும்” என்று மனைவியின் இந்த திடீர் குரலில் அதுவும் அழுத்தமான கட்டளையான குரலில் திகைத்துவிட்டார் தியாகேசன்.
பொதுவாக மரியாதை இல்லாம பேசமாட்டார் கமலா. அவர் இப்படி பேச எதுவோ நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டார் தியாகேசன்.
இதுவரை ஒரு பத்து மாப்பிள்ளையாவது பார்த்து விட்டு சென்று இருப்பார்கள். ஏதாவது காரணம் கொண்டு முட்டி விடும் தற்செயலாக நடக்கிறது என்று நினைத்திருக்க.. ஒருவேளை மகள் தான் இதற்கு காரணமாக இருப்பாளே என்று நேற்று அவள் சாமி வந்து மாப்பிள்ளை அடித்து விதத்தில் இருந்து அவருக்கு ஒரு யோசனை.
அதற்கு தக்கபடி மனைவியும் இப்பொழுது இப்படி கட்டளையாக கூற..
“ஏன் நம் மச்சினன் தானே? என்னதான் பிரச்சனை இருந்தாலும் உறவு விட்டுப் போயிடுமா என்ன?” என்று இரு குடும்பத்துக்கும் பொதுவான பெரியவரை மாமனாருக்கு தூது அனுப்பி விட்டார் தியாகேசன். அதை மனைவியிடம் தெரியப்படுத்த அவருக்கோ தலைகால் புரியவில்லை. அத்தனை வேண்டுதல்கள் வைத்துக் கொண்டு காத்திருந்தார்.
“அப்பா எனக்கு இது சரிப்பட்டு வரணும்னு தோணலப்பா..அத்தானல தான் தம்பி ஊரை விட்டு போனான். அவன எங்கேனு தெரியாம.. நாம மனசுல கஷ்டப்பட்டுகிட்டு இருக்கிறோம். இப்ப இவரு கூட சம்பந்தம் வைத்துக்கொள்ள வேணுமா? அக்கா தான் இல்லைன்னு சொல்லல.. ஆனா எனக்கு தம்பியும் முக்கியம். அதனால அவங்கள வேற இடம் பார்க்க சொல்லுங்க” என்று ஆதிரன் மறுத்துவிட்டான்.
“அவசரப்பட்டு பேசாத அப்பு..பெரியவங்க சொன்னா அதுல ஆயிரம் காரண காரியம் இருக்கும். அந்த பக்கம் யாரு உன் அக்கா தானே? அது கஷ்டப்பட விடலாமா? பொறந்த வீட்டு பொண்ணுங்க கண்ணை சிந்தன அது குலத்துக்கு ஆகாது அப்பு” என்று பொறுமையாக அந்த பெரியவர் விளக்க இவனோ மசிவதாய் தெரியவில்லை.
“பெரியப்பா தேர்த்திருவிழா முடியட்டும் அதுக்கப்புறம் நம்ம பேசி ஒரு முடிவுக்கு வரலாம்” என்றார் ராகவன்.
ஆனால் தேர் திருவிழா நெருங்க நெருங்க குரு ஆதிரனுக்கோ மனதெல்லாம் கனத்து போய் இருந்தது. மற்றவர்களோ இங்கே மகிழ்ச்சியோடு துள்ளி குதித்து ஆர்ப்பாட்டமாய் திருவிழாவை கொண்டாட.. இவனோ பிரிந்து சென்ற தம்பியை நினைத்து மனதில் துக்கத்தோடு இருந்தான்.
தேர் திருவிழாவில் அங்கு இளைஞர்களை வழிநடத்தி செல்பவனும் ஆதிரன் தான்.
எப்பொழுதும் தம்பி நினைப்பு மனதில் ஓரம் அவனை கவலையில் ஆழ்த்தினாலும்.. அதை முகத்தில் காட்டாமல் இன் முகமாகவே வளைய வருபவன் இன்றோ யோசனையோடு சுற்றிக் கொண்டிருந்தான்.
காரணம் விஜயராகவன் தன் பேத்தியையே மருமகளாக எடுப்பது என்று தீர்மானித்து விட்டார் என்று அவர் முகத்திலேயே தெரிந்தது.
அதனைத் தடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான் ஆதிரன்.
super
Mayilu super 👌👌
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌