சண்டியரே 3
தேர் திருவிழா முடிந்து இரவு உணவுக்கு உள்ளே வந்த ஆதிரன் மிகவும் கலைத்து தெரிந்தான். தந்தையை பார்க்க அவர் உள்ளே கூடத்தில் நின்றிருந்தார்.
“எத இப்படி உத்து பார்த்துக் கொண்டே நிற்கிறார் அப்பா?” என்றபடி அவர் பின்னால் சென்று பார்க்க..
மனைவி பிள்ளைகளோடு அவர் குடும்பமாய் இருந்த புகைப்படமும் அடுத்தது இரு மகன்களும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
தம்பி நினைவில் அப்பா இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டவனும் *அப்பா..” என்று அவர் தோளை தொட, கண்கள் கலங்க அவனைத் திரும்பி பார்த்தார்.
“ஆனாலும் இந்த சின்னவனுக்கு இவ்வளவு கல் நெஞ்சம் ஆகாது யா..பாரு இந்த அப்பாவை இன்னும் மன்னிக்கவே இல்லை.. நாம இதே ஊர்ல தானே இருக்கோம். வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போலாம் தானே? பிடிக்காதவன நான் இழுத்து வச்சுக்க போறேனா என்ன? நான் சாகறதுக்குள்ளயாவது என்னைய ஒரு தடவ வந்து பார்ப்பான யா எம்மவன்?” என்று நெஞ்சு விம்ம கேட்கும் தந்தையே அணைத்துக் கொண்டவன்,
“அவன் எங்க இருந்தாலும் அவன் நினைப்பெல்லாம் நம்மை சுத்தி தான் பா இருக்கும். ஏதோ கொஞ்சம் வீம்புக்காரன்.. பிடிவாதக்காரன்.. மத்தபடி ரொம்ப நல்லவன் பா. தம்பி.. கண்டிப்பா வருவான்..! கவலைப்படாதீங்க..! சரி வாங்க சாப்பிடலாம்” என்று அவரை அழைத்துக்கொண்டு சாப்பிட சென்றான்.
சாப்பாட்டையும் சாப்பிடாமல் கைகளால் அளந்து கொண்டே இருந்தவரை பார்த்தவனுக்கு என்ன சொல்லி இவரை மாற்ற என்று தெரியவில்லை.
அப்போதுதான் இன்று திருவிழாவின்போது இருவர் பேசிக் கொண்ட போது தங்மயிலு பெயர் அடிப்பட, என்ன ஏது என்று ஆதிரன் விசாரிக்க அவர்களும் தங்கமயிலுக்கு சாமி வந்ததை பற்றி கூறினர்.
“அப்பா..உங்க பேத்தி என்ன செஞ்சா தெரியுமா? உங்களுக்கு தெரியாம இருக்குமா என்ன?” என்று சாப்பிட்டுக் கொண்டே ஓரப்பார்வை தந்தையை பார்த்தபடி கூறினான் ஆதிரன்.
பேத்தி என்று கேட்ட உடனே அவர் முகத்தில் தானாக ஒரு தேஜஸ். முதல் பேத்தி அதுவும் ஒற்றை பேத்தி என்று மிகுந்த செல்லம் அனைவரிடமும்..
அவள் பிறந்ததில் இருந்து பாதி நாள் இவர் தான் அவளை தூக்கிக்கொண்டு திரிவார். கமலாம்பிகை கூட அப்பாவை திட்டி மகளை கண்டித்து அதற்கு பின்னே பள்ளிக்கு அனுப்பினாலும் மதியம் பேத்தியை பார்க்க சென்றவரோடு அழுது அடம் பிடித்து வந்து விடுவாள் மயிலு.
இப்பொழுது சில வருடங்களாக எட்டி இருந்து பார்க்கும் நிலை..! நீண்ட பெருமூச்சு அவரிடம்.
சில நாட்களாக பேத்தி வீட்டில் இருந்து கைவினைப் பொருட்களை செய்வதை கேள்விப்பட்டிருந்தார். அவளும் அவளது தோழிகளுக்குமாக செய்வதை எடுத்துச் சென்று கொடராச்சேரியில் இருக்கும் பல்பொருள் அங்காடியிலும் திருவாரூரில் ஒரு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலும் கொடுத்து விட்டு வருவது அவருக்கு காத்து வழி வந்த செய்தி..!!
அவ்வப்போது இம்மாதிரி செய்திகள் வரும்போது எல்லாம் பேத்தியை நினைத்து பெருமை கொள்வார் தாத்தாவாய்..!!
அதனாலேயே சொந்தக்கார பெரியவர் வந்து பேசும்போது பேச்சை முறித்து விடாமல் சற்று தள்ளிப் போட்டார்.
‘மகனாக பேத்தியை பத்தி பேசுகிறானே?’ என்று ஆச்சரியத்துடன் “என்ன யா? என்ன ஆச்சுது? என்ன செஞ்சா எம்ம பேத்தி? எனக்கு ஏதும் செய்தி வரலையே?” என்று ஆர்வமாக கேட்டார்.
“ஒரு வாரம் முன்ன உங்க மாப்பிள்ளை அவருக்கு பொண்ணு பாக்க மாப்பிள்ளையை திருத்துறைப்பூண்டியில் இருந்து வர வெச்சிருந்தாராம்..” என்றதும் அதுவரை ஆர்வமாக கேட்டவர் உம் என்று உறுமினார்.
அவரின் உறுமலில் பேத்தியை வெளியில் கொடுக்க மனுஷனுக்கு விருப்பம் இல்லை என்று புரிந்தது ஆதிரனுக்கு
“நகை நட்டு வரதட்சணை சீர் சனத்தி கொஞ்சம் அதிகம் கேட்ருப்பாங்க போல..உங்க பேத்திய பத்தி தான் தெரிஞ்சுதாச்சே.. பெண்ணியம் அது இதுனு பேசுவாளே..” என்று மீசையை நீவிகொண்ட விஜயராகவன் “எம் பேத்திய அப்படித்தான் நான் வளர்த்தேன்..!” என்றார்.
“நல்லா வளத்திங்க போங்க..!அதுக்குன்னு மாப்பிள்ளையை ஓட ஓட விரட்டி விடுவாளாமா?” என்றதும் விஜயராகவனை ஜெர்க் ஆகி “என்னது மாப்பிள்ளையை விரட்டி விட்டாளா?” என்று கேட்டார்.
“ஆமாம் சாமி வந்தது போல நடிச்சு..” என்றான் இட்லியை பிட்டு வாயில் வைத்த படி தந்தையை பார்த்து..
மகனை புரியாமல் பார்த்தவரிடம் தெள்ளத் தெளிவாக எல்லாத்தையும் விளக்கி கூறினான்.
அவருக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை. கடகடவென்று சிரிக்க..
“ஆனாலும் உங்க பேத்திக்கு உண்மையிலேயே சாமி வந்ததாதான் ஊர் பூராவும் நெனச்சிட்டு இருக்கு..கூடவே இந்த மாதிரி சாமி வந்த பொண்ண யார் கட்டிப்பாங்கணும் பேச்சும் விழுது..” என்றவன் சட்டென்று நாக்கை கடித்துக்கொண்டு பேச்சை நிறுத்திக் கொண்டான்.
பேச்சுப் போகும் திசை சரியில்லையே இவரின் மனதை மாற்றுவதாக நினைத்து.. என் மணநாளை குறித்து விடுவார் போலேயே என்று..!!
“எம்ம பேத்தி என்னைய போல புத்திசாலி யா..பாரு எப்படி ரோசன பண்ணி அந்த பயபுள்ளய விரட்டி விட்டு இருக்கான்னு.. சாமி வர்றதெல்லாம் கொடுப்பினை யா..! அந்த மாதிரி புள்ள வீட்டுக்கு வருது எல்லாம் வரம்..! கண்டப்படி பேசுற பக்கிபயலுவோலுக்கு அதெல்லாம் தெரியுமா? இல்லை புரியுமா?” என்றபடி உணவில் கவனமானார்.
“அப்பா அது உண்மையா சாமி வர்றவங்களுக்கு..!சாமி வந்த மாதிரி நடிக்கிறவங்களுக்கு இல்ல..” என்று கண்டிப்பாக கூறிய மகனை பார்த்து தலையாட்டி சிரித்தார் விஜயராகவன்.
அப்படியே சிறுவயதில் அவள் செய்த சேட்டைகள் எல்லாம் கூறி பேசி என்று முற்றிலுமாக மனம் அவருக்கு மாறுபட்டு இருக்க.. தந்தையின் மனம் தம்பியிடம் இருந்து மாறிவிட்டது என்று சற்று நிம்மதியோடு படுக்கைக்கு சென்றான் குரு ஆதிரன்.
ஆனால் அவன் நிம்மதியை பறித்தாற் போல மறுநாள் காலையில் “என் பேத்திய எனக்கு மருமகளா கொண்டு வரலாம்னு நினைக்கிறேன் யா குரு..” என்று தன் முடிவை உறுதியாக கூற..
“அப்பா..!” என்று அதிர்ந்து கத்தி விட்டான் ஆதிரன்.
“அக்கா பொண்ணு கட்டுற முறைதானாலும்..அவ நான் தூக்கி வளர்த்தவப்பா.. நான் எப்படி அவளை கட்ட முடியும்? வேற நல்ல மாப்பிள்ளையை பாருங்க.. என் சொத்து வித்தாவது அவளுக்கு நான் நல்ல முறையில் சீர் செனத்தி செய்து கல்யாணத்த பண்ணி வைக்கிறேன். அதுக்காக.. நான்.. எப்படிப்பா?” என்றவன் தலையை கோதிக் கொண்டான்.
மகனை கூர்ந்து பார்த்தார் தந்தை.
“ம்ப்ச்..நெருங்குன உறவுல கல்யாணம் பண்ண கூடாதுன்னு விஞ்ஞானமே சொல்லுது பா” என்று அப்பொழுதும் அவன் முட்டுக்கட்டை போட..
“அதெல்லாம் எனக்கு தெரியாது தம்பி. நானும் என் அய்த்த மகள தான் கட்டுனேன். உன் அத்தானும் உன் அம்மாளோட சொந்த சித்தப்பா பையன் தான். நீங்க எல்லாம் ஆரோக்கியமா தானே பொறந்திங்க வளர்ந்திங்க.. அப்புறம் என்ன யா?
என் பேத்தி தான் என் வீட்டு மருமக நான் முடிவு பண்ணிட்டேன்” என்று நிலையாக நின்று விட்டார் ராகவன்.
ஆதிரனும் தலையால் தண்ணீர் குடித்து பார்த்து எவ்வளவோ மன்றாடி தன் பேச்சுக்கு துணையாக அறிவியல் மட்டுமல்லாமல் இயற்பியல் வேதியல் என்று அனைத்து இயலையும் கொண்டு வந்து கொட்டினால்…
தந்தையோ உனக்கு நான் சளைத்தவன் கிடையாது என்று கல்யாணமானால் அனைத்தும் சரியாக விடும் என்று வாழ்வியலை கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இரண்டு நாட்கள் இப்படியே மெதுவாகத்தான் சென்றது. மூன்றாவது நாள் “எப்படிப்பா தம்பி இல்லாமல் நான் மட்டும் கல்யாணம் பண்ண முடியும்? அவனை தேடிகிட்டு தான் இருக்கேன். கிடைச்சதும் கண்டிப்பா…” என்று ஆரம்பித்தவன் பேச்சை பாதையில் கையை தூக்கி நிறுத்தினார் ராகவன்.
“நீங்க ரெண்டு பேரும் பத்து நிமிஷம் இடைவேளையில பிறந்து இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒண்ணா கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. எப்படியும் ஆறு மாசம் ஒரு வருஷ இடைவெளியில தான் கல்யாணம் பண்ணி வைப்பேன். அது மாதிரி நினைச்சுக்கோ.. உன் தம்பியை தேடுறபடி தேடு அதுக்காக உன் வாழ்க்கையை அப்படியே என்னால போட்டு வைக்க முடியாது. ஒரு பக்கம் நீ.. இன்னொரு பக்கம் என் பேத்தி..! இன்னும் ஒரு வாரத்தில் உங்களுக்கு நிச்சயதார்த்தம்” என்று சென்றவரை பார்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை அவனால்.
அடுத்த மூன்றாவது நாள் முறையாக தன் பெரியப்பாவை வீட்டுக்கு அழைத்து தன் விருப்பத்தை கூறி பொண்ணு பார்க்க வரும் போதே நிச்சயதார்த்தத்தையும் முடித்துவிடலாம் என்று சொல்லி அனுப்பி விட்டார்.
தியாகேசனுக்கு ஒரு பக்கம் எதிர்பார்ப்பு இருந்தாலும்.. மறுபக்கம் தன் மேலுள்ள கோபத்தால் எங்கே பேத்தியை வேண்டாம் என்று விடுவாரோ என்று பயம் இருக்கத்தான் செய்தது. அதை காட்டிக் கொள்ளாமல் இருந்தவர் இன்று மாமனாரிடம் இருந்து செய்தி வந்ததும் உடனே மனைவியிடம் தெரிவிக்க மகிழ்ச்சி கடலில் துள்ளாத குறை தான் கமலாம்பிகை.
அப்புறம் என்ன தடபுடலாக நிச்சயதார்த்தத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடக்க.. அந்தோ பாவம் யாரும் தங்கமயில் இடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை.
பெண்ணிடம் விஷயத்தை சொன்னார்களே தவிர அவளின் விருப்பத்தை கேட்கவில்லை.
“சின்ன வயசுல இருந்து அது விருப்பமா? இது விருப்பமா? இது பிடிக்குமா? அது பிடிக்குமா என்று ஒரு ஹேர் கிளிப் பேண்ட்டுக்கு கேட்குறவக அஞ்சு நிமிஷத்துல கரைஞ்சு போற ஐஸ்கிரீம்ல இருந்து என் விருப்பத்தை கேட்கிற நீங்க.. ஆய்சுக்கு கட்டி வாழ போற கணவனை தேர்ந்தெடுக்கிறதுல மட்டும் ஏன் என் விருப்பத்த கேக்க மாட்டேங்கிறீக?” என்று பக்கம் பக்கமாக தங்கமயில் மனப்பாடம் செய்து பேசிய டயலாக் எல்லாத்தையும் “சீ பே..” என்று தட்டி விட்டு தன் காரியத்தில் கண்ணாக இருந்தார் கமலாம்பிகை.
பிறப்பிலேயே குறும்பு அதிகம். அதுவும் செல்லம் கொடுத்து தாத்தாவும் ஒரு பக்கம் இந்த பக்கம் தந்தையும் அவளை ஏற்றி விட்டிருக்க படிப்பு வராமல் போய் இருக்க பெண்ணை நினைத்து கவலை கொள்ளாத நாளே கிடையாது கமலாவிற்கு.
இந்த காலத்தில் ஒரு டிகிரி முடிக்காத பெண்ணை யாராவது கட்டுவார்களா? பெண்களுக்கு கல்வி முக்கியம் என்று எத்தனை எடுத்துக் கூறினாலும்… அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்காய் தான் போகும் தங்க மயிலுக்கு. அவளுக்கு ஏனோ படிப்பின் மீது ஆர்வத்தை காட்டிலும் கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். இவள் பாதிநாள் பள்ளிக்கு போவதே கைவினைப் பொருட்கள் கற்றுத் தரும் ஆசிரியைக்காக மட்டுமே..
கல்யாணம் எனும் சந்தையில் அழகு மட்டும் போதுமா? ஆஸ்தி மட்டும் போதுமா? அதை தாண்டி படிப்பு முக்கியமல்லவா? அதை சொல்லி மட்டம் தட்டி நாளை யாரும் தன் பெண்ணை ஏதும் கூறி விடக்கூடாது என்று அன்னையாய் தவித்தவருக்கு கங்கை நீராய் வந்தான் தம்பி.
தந்தையே கோபத்தை மறந்து இறங்கி வந்திருக்க.. இதை தள்ளி போட விட்டு விடுவாரா என்ன? உடனே சொந்த பந்தங்களுக்கு எல்லாம் சொல்லி சாப்பாடு முதல் வெளியே பந்தல் தோரணம் வாழைமரம் என்று அடுக்கடுக்காக உத்தரவு போட்டுக் கொண்டே இருந்தார் கமலா.. தியாகேசனே திகைத்துப் போகும் அளவுக்கு..
வேம்பிடம் சொல்லி சொல்லி புலம்பி கொண்டிருந்தாள் மயிலு.
வேம்புக்குமே மன வேதனை தான் “என்னடி இப்படி கடைசில பொசுக்குனு உங்க மாமன கட்டிக்க போறேன்னு சொல்லிட்ட? என்ன இருந்தாலும் என் சைட் இல்லையா? எப்படி உன் கல்யாணத்துல முகத்தை சந்தோஷமா வச்சு என்னால நிக்க முடியும்?” என்றவளின் தலையில் நறுக்கு நறுக்குன்னு என்று குட்டு போட்டவள்,
“நானே இந்த கல்யாணம் வேணான்னு இருக்கேன். நீ வேற என்னைய கடுப்பேத்தாதடி..?” என்று முந்தானையை திருகிக் கொண்டு அமர்ந்தவள், அருகே சென்ற வேம்புவோ “ஏன்டி இங்கே புலம்பறத்துக்கு பதிலா உன் மாமனோட பேசலாம் இல்ல.. உங்க மாமன்ட்ட எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொன்னா மீறி உன்னை கட்டிடவா போறாங்க?” என்று ஐடியா கொடுத்தாள்.
“அடியேய்..இந்த ஐடியா நல்லா இருக்கே?” என்று கண்கள் மின்ன கூறியவள் பின் இடுங்கிய கண்களோடு நண்பியை பார்த்து “நீ அவ்வளவு எல்லாம் நல்லவ இல்லையே டி?” என்று கேட்டாள்.
“என்ன இருந்தாலும் நான் சைட் அடிச்ச என்னோட கிரஷ் டி அவர்..!அவர உன்னோட ஜோடியா பாக்கும்போது அதுவும் பிரண்டோட புருஷனா பார்க்கும்போது.. அந்த வலி இருக்கே வலி.. அதவிட அவர மனசால அண்ணனு எப்படி டி கூப்பிட முடியும்? மனசு வலிக்கும் இல்ல..! அதுதான் கடைசி கடைசியா நம்ம சைடும் இருந்து ஒரு முயற்சி பண்ணிப் பார்ப்போமே.. இந்தக் கல்யாணத்தை நிறுத்த..” என்றதும் அவள் முதுகில் குத்தியவள்,
“ஆனாலும் உன் ஐடியா எனக்கு பிடிச்சிருக்கு..!அந்த ஒரு காரணத்துக்காக உன்னைய விடுறேன்டி பக்கி” என்றவள் வேம்பு ஃபோனில் இருந்து ஆதிரனுக்கு அழைத்தாள்.
அந்நேரம் முக்கியமான வேறு அழைப்பில் இருந்த ஆதிரனால் இவளுக்கு திருப்பி அழைக்க முடியவில்லை. அதுவும் இல்லாமல் மயில் அவள் நம்பரிலிருந்து அழைத்து இருந்தால் கூட அக்கா மகள் ஏதோ சொல்வதற்காக அழைத்து இருக்கிறாள் என்று திரும்பி அழைத்திருப்பானோ என்னவோ?
ஆனால் வேம்புவின் நம்பர் அவனிடம் இல்லையே? ஏதோ அன்நோன் நம்பர் என்று அதை அப்படியே விட்டுவிட்டான்.
ஒருவேளை அழைத்திருந்தால் விதி மாறி இருக்குமோ??
நிச்சயதார்த்தத்திற்கு பட்டு நகைகள் என்று மகளிடமே எடுக்க சொல்லிவிட்டார் விஜயராகவன்.
திடுதிப்பென்று தங்கள் வீட்டிற்கு வந்த தந்தையை கண்கள் கலங்க வரவேற்றார் கமலாம்பிகை.
“வாங்க மாமா..!” என்று வாய் நிறைய அழைத்தார் தியாகேசன். அப்பொழுது அவர் பெண் இவர் வீட்டில் வாழ அதனால் முறுக்கிக்கொண்டு திரிந்தார். இப்போது இவர் பெண் அவர் வீட்டில் வாழப்போகிறாள் அல்லவா.. இப்போதும் அதே மாப்பிள்ளை முறுக்கை காட்ட முடியாது அல்லவா? அந்த மரியாதை தான்..!
விஜயராகவன் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பது போல பெரிய மனிதராகவே நடந்து கொண்டார்.
“சொல்லுங்க மாமா..” என்றதும் ஒரு பையில் பணத்தை பொதுவாக இருவரிடம் கொடுத்தவர் “இதுல பணம் இருக்கு கமலா.. பேத்திக்கு புடிச்ச மாதிரி புடவை நீயே எடுத்துக்க.. நம்ம வீட்ல பொண்ணுங்க யாரும் இல்ல இதெல்லாம் பார்த்து பார்த்து செய்ய.. அதனால நீ தான் செய்யணும்” என்றதும் கலங்கி விட்டார் கமலாம்பிகை.
“என்னப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க..யாரும் இல்லைன்னு நீங்க எப்படி சொல்லலாம்? நான் பாத்துக்குறேன் பா” என்றார் கமலாம்பிகை முகம் நிறைய புன்னகையோடு.
நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள் இரவு நள்ளிரவு வரையிலும் ஆதிரன் வீடு வரவே இல்லை. மகனை விருப்பத்திற்கு மாறாக செய்வதால் இப்படி செய்கிறானோ என்று சற்று கலக்கமாக கூட இருந்தது விஜயராகவனுக்கு.
இரண்டு மூன்று முறை அழைத்தும் “அப்பா வேலையா இருக்கேன் நான் அப்புறம் கூப்பிடுறேன்” என்று கத்தரித்து விட்டான் மகன். அப்படி என்ன வேலை என்று யோசித்தாலும் சற்று பதட்டமாகவே இருந்தார் விஜயராகவன்.
இரண்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தவன் அசதியாக உள்ளே வர அப்பொழுதும் கூடத்தில் சாய்வு இருக்கையில் மகனுக்காக காத்திருந்து தூங்கி இருந்த தந்தையை பார்த்து தலையாட்டி கொண்டவன் அப்பா என்று அவரை எழுப்பினான்.
“என்ன இங்க படுத்து இருக்கீங்க ரூம்ல போய் படுக்க வேண்டியது தானே?” என்று அவரை கை தாங்கலாக பிடிக்க..
“நீயேன் யா இவ்வளவு நேரம் கழிச்சு வந்திருக்க? போன் பண்ணாலும் எடுத்து சரியாக என்ன விஷயம்னு சொல்லல? ஏன் இவ்வளவு நேரம்? ஒருவேளை கல்யாணம் உனக்கு பிடிக்கலைனு..” என்று கேட்க..
“அச்சோ.அப்பா..ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க நம்ம கரும்பாலைக்கு நாளைக்கு இன்ஸ்பெக்ஷன் வரானுங்க. எவனோ தப்பா சொல்லி கொளுத்தி போட்டுட்டானுவோ போல.. நம்ம சைடுல இருந்து கணக்கு அவ்வளவு வீக் இல்ல.. ஆனாலும் சில பேருக்கு நம்ம இந்த பணத்திலிருந்து விவசாயிகளுக்கு வட்டிக்கு கொடுத்தோம் குறைஞ்ச வட்டினாலும் அது இந்த கம்பெனியில் இருந்து நம் கணக்கிலிருந்து எடுத்து கொடுத்தது கூடாது இல்லையா? அதெல்லாம் கொஞ்சம் நேர் செய்ய வேண்டியதா இருந்தது. காலைல எத்தனை மணிக்கு வரானுங்களோ தெரியல” என்றபடி தந்தையை அவன் அறையில் விட்டவன் “நான் காலையில வெள்ளனாகவே போய்டுவேன் ப்பா” என்றான்.
“தம்பி நாளைக்கு உனக்கு நிச்சயம் யா” என்று அவர் ஞாபகப்படுத்த,
தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டவன் “நிச்சயதார்த்துக்கு மாப்பிள்ளை இருக்கணும்னு அவசியம் இல்லப்பா நீங்களே பாத்துக்கோங்க.. கல்யாணத்துக்கு பாத்துக்கலாம்” என்றபடி சென்று விட்டான்.
அதன்படி நிச்சயத்திற்கு அவன் வரவே இல்லை மற்றவர்கள் தான் ஏன் மாப்பிள்ளை வரவில்லை என்று அத்தனை கேட்டாலும் விஜயராகவனும் ஒற்றை பதிலாய் இன்ஸ்பெக்ஷன் கரும்பு ஆலையில் என்று முடித்துவிட்டார்.
கொடுத்த வாக்கை காப்பாற்றும் வாக்கு சுத்தம் உள்ளவர் விஜயராகவன் என்பதால் மேற்கொண்டு உறவுகள் யாரும் அவரை நோண்டி நெருங்கி கேட்கவில்லை. அதனால் மாப்பிள்ளை இன்றி நிச்சயம் நடந்தது.
தங்கமயிலுக்கும் இந்த கல்யாணத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. அதனால் ‘அவன் வந்தால் என்ன? வரலைன்னா என்ன? மாமனா இருந்தாலும் ஐ டோன்ட் லைக் யூ போடா.!’ என்ற மாதிரியே அமர்ந்திருந்தாள்.
மகனுக்கு ஏனோ இந்த திருமணத்தில் அவ்வளவு ஆர்வம் இல்லை என்று புரிந்து கொண்ட ராகவன் தம்பியை நினைத்துக் கொண்டே இவன் இருக்கிறானோ என்று யோசித்தார்.
அதன்படி திருமணத்தையும் விரைவாக இவனுக்கு முடிக்க வேண்டும் என்று மருமகனிடம் கூற, அவருக்கு அதைவிட வேறென்ன வேலை திருமண ஏற்பாடுகளை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
திருமணத்திற்கு பத்து நாட்களுக்கு முன் “அவசர வேலையா சென்னை வரைக்கும் போறேன்பா.. போயிட்டு ஒரு வாரத்துல வந்துடுவேன்!” என்று முழு விஷயத்தை கூறாமல் பதறி எடுத்துக் கொண்டு காரை எடுத்துச் செல்லும் மகனை யோசனையாக பார்த்தார் ராகவன்.
அவரால் திருமணம் நெருங்கும் வேலையில் வெளியூர் செல்ல வேண்டாம் என்று தடுக்கவும் முடியவில்லை.
சொன்னது போலவே ஒரு வாரம் கழித்து வந்தவன் கையிலோ ஆறு மாத குழந்தை. பெண் குழந்தை..!
முகம் பொலிவு இழந்து கையில் குழந்தையோடு வந்தவனை பார்த்த விஜயராகவன் அதிர்ந்து “என்ன யா இது? யார் குழந்தை?” என்று கேட்க கண்களில் கண்ணீர் வர உதடு கடித்து நின்றவன்,
“சிவா பொண்ணு பா..அவன் போய்ட்டான் நம்மள விட்டு…” என்று கதறினான்.
Имплантация all on 6: какие факторы влияют на стоимость, секреты доступной имплантации.
Все на 6 имплантах [url=https://allon6-implants.ru/]https://allon6-implants.ru/[/url] .
👌👌👌👌👌👌👌👌👌👌👌