சண்டியரே 6
வேறு ஒருவருடன் தன் மகளுக்கு நிச்சயம் பண்ணி வந்ததை தியாகேசன் சொல்ல..
“அதெப்படி என் தம்பியோடு என் பொண்ணுக்கு நிச்சயம் பண்ணிட்டு வேற ஒருத்தனை மாப்பிள்ளை பாப்பிங்களா? முடியவே முடியாது..! நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்” என்று கமலாம்பிகை சண்டை போட மயிலுமே அப்பா இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை அவளுமே திகைத்து நின்றாள்.
“அப்போ உன் தம்பி ஆதிரன் தனியா இருந்தாப்புடி.. அவனை கட்டி வச்ச என் பொண்ணு சந்தோஷமா சொத்து சொத்தோட இருப்பானு நினைச்சேன். ஆனா இப்போ எங்கிருந்தோ அந்த ஓடுகாலியோடு புள்ளனு ஒரு பொண்ண தூக்கிட்டு வந்து இருக்காப்படி.. அந்த ஓடுகாலி எந்த ஜாதிய பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த புள்ளையை பெத்தானோ.. அந்த பிள்ளைக்கெல்லாம் என் பொண்ணு போய் சேவகம் செய்ய முடியாது..!”
“அதுமட்டுமா.. நாளைக்கு அந்த புள்ளையும் என்னைய தாத்தானு கூப்பிடுவா? அதை எல்லாம் என் காதுல நான் கேட்கணுமா? மாட்டவே மாட்டேன்..! ஒரு குடிகார பயலுக்கு என் பொண்ண கட்டி வச்சாலும் வைப்பனே தவிர, அந்த வீட்டுக்கு மருமகளா நான் அனுப்ப மாட்டேன்” என்றார் தியாகேசன் முடிவாக..!!
“என்ன..!!” என்று திகைத்து நெஞ்சில் கை வைத்தார் கமலாம்பிகை..!
பின் வீரியத்தை விட காரியம் பெருசு என்று எண்ணிய கமலா கோபத்தை விடுத்து கணவனிடம் பக்குவமாக எடுத்துச் சொல்ல முயன்றார்.
“அவன் விவாகரத்தானவங்க.. அதுவும் மொத பொண்டாட்டியை ஊர் முன்னால போட்டு அத்தன அடிச்சு.. கொடுமைப்படுத்தி.. அவ பஞ்சாயத்துல பிராது கொடுத்து போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணி அதுக்கப்புறம் அவன்ட இருந்து டைவர்ஸ் வாங்கிட்டு போனவ.. அவனுக்கா நம்ம பொண்ண பேசி இருக்கீங்க? அவனை கட்டிக்கிட்டா நம்ம பொண்ணு எப்படிங்க நல்லா இருப்பா யோசிச்சு பாருங்க?” என்று பொறுமையாக எடுத்துரைக்க அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் தியாகேசன் இல்லை.
“இங்க பாரு கமலா.. நான் சொன்னா சொன்னது தான். அந்த லோகநாதன் தான் எனக்கு மாப்பிள்ளை.!” என்று வீம்பாக நின்றார்.
“நீ எல்லாம் ஒரு அப்பனா தெரிஞ்சே புள்ளைய பாழுங் கிணத்தில தள்ளுறேன்னு சொல்ற? குடிகார பய குடிகார பயலோட கூட்டு சேர்ந்துட்டியோ?”
அந்த வார்த்தைகளை தியாகேசனால் தாங்க முடியவில்லை. ஆண் என்ற ஆணவம் தலைதூக்க விட்டார் ஒரு அறை கமலாம்பிகை கன்னத்தில்.
அம்மா என்று சுருண்டு விழுந்தது விட்டார் அவர். விழுந்த வேகத்தில் தலை தரையில் மோதி நெற்றியில் புடைத்து போனது.
மயிலும் மயூரனும் அம்மா என்று அலறி தாங்கிக் கொள்ள கொஞ்சம் அப்படியே மயக்கத்திற்கு சென்று விட்டார் கமலாம்பிகை.
“செத்து கித்து போய்டாதடி நாளைக்கு பொண்ணோட கல்யாணம் இருக்கு.. முடிச்சிட்டு கூட செத்துப் போ..” என்று அவ்வளவு அலட்சியமாக வார்த்தையை விட்டுவிட்டு மூவரையும் உள்ளே வைத்து வெளியே பூட்டிவிட்டு சென்றார்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும் என்பது போல நாளை விடியல் வரை இவர்களை அடைத்து வைத்திருந்தால் போதும்.. அதன் பிறகு உருட்டி மிரட்டி கோவிலுக்கு அழைத்து சென்று கல்யாணத்தை முடித்து விட்டால்.. அதன் பிறகு யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று இறுமாப்பு தியாகேசனுக்கு.
கொஞ்சம் கூட அவருக்கு பின் பக்கம் கதவை திறந்து இவர்கள் தப்பித்து விடலாம் என்று எண்ணமே இல்லை..!!
அதனால் வீட்டு திண்ணையில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டவர், நாளைய பற்றிய பெரும் கனவில் தான் வன்மமாக சிரித்துக் கொண்டிருந்தார்.
ஆம் வன்மம் தான்..!
மச்சான் மீதுதான்..!
ஆனால் அது ஆதிரனை கொண்டு இல்லை..
ஆரூரனை கொண்டு..!!
“ஓய் மாமா பாத்துக்கிட்டே இரும்யா.. உம்ம பொண்ண கட்டி, உன்னை மாமனாராக்கி என் புள்ளைக்கு தாத்தாவாக்கி.. அவன விட்டு உம்ம மூஞ்சுல உச்சா போக வைக்கல நான் ஆரூரன் இல்ல..” என்று பதின்ம வயதில் சண்டியர் கணக்காய் தொடையை தட்டி தன் முன்னே கெத்தாக கூறிய, அந்த குரலும்.. அந்த முகமும் என்றும் மறக்காது தியாகேசனுக்கு..!!
அதன் பின் ஆரூரன் ஊரை விட்டு சென்றாலும் அவன் மீது கொண்ட பகை தியாகேசனுக்கு சற்றும் குறையவே இல்லை. இத்தனை வருடங்களாக மாமனார் வீடு பக்கம் சென்றது கூட இல்லை.
வரிசையாக பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போதெல்லாம் தடங்கல் வர.. மனதளவில் சோர்ந்து போனார் தியாகேசன்.
“அதுதான் ஆரூரன் இல்லையே.. ஆதிரன் மட்டும் தானே அவனுக்கு பெண் கொடுத்தால் என்ன?” என்று அவரது பங்காளிகளே கேட்டு அதன் பிறகு தான் மாமனாருக்கு தூது அனுப்பினார் தியாகேசன்.
தியாகேசன் நினைத்தப்படியே தான் எல்லாம் நடந்தது. அவருக்குத்தான் விஜயராகவன் பேத்தி மீது கொண்ட பாசத்தின் அளவு தெரியுமே? அந்த பாசத்தை வைத்து மடக்கி தன் மகளை அவர்கள் வீட்டு மருமகளாக்கி.. ஆதிரனுக்கு மனைவியாக்கி.. தன் முன்னால் சவால் விட்டவனின் முகத்தில் கரிய பூசிவதை எண்ணி அத்தனை பெருமை கொண்டார். அதைவிட நிம்மதி கொண்டார் என்பதே சாலச்சிறந்தது..!
சிவ ஆரூரன் என்ற ஒருவன் இனி இல்லவே இல்லை..! அவர்கள் குடும்பத்தில் இருந்தும் சரி ஊரிலிருந்தும் சரி என்று நிம்மதியாக இருக்க..
இப்பொழுது ஆரூரனின் வாரிசு என்று வந்த பிள்ளையை இவரால் எப்படி ஏற்க முடியும்?
அந்த பிள்ளைக்கு தாதி வேலை பார்க்க தன் மகளை எப்படி அனுப்ப முடியும் ?
அப்படியே அந்த பிள்ளையை வேறொரு வேலையாளை வைத்து வளர்த்தாலும், நாளை பின்ன சாதிசனமே ‘பச்ச பிள்ளையே இப்படி வேலைக்காரன் கிட்ட தூக்கி கொடுத்திட்டியேனு’ அவரைத் காறித் துப்பும் அல்லவா?
இதையெல்லாம் நினைக்கவே மேனி எல்லாம் கொதித்தது தியாகேசனுக்கு..!
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்று ஒரு வழக்கு உண்டு..!
அதுபோல ஊரை விட்டும் போயும் என் திட்டத்தை பாழாக்கி என் நிம்மதியை கெடுத்து விட்டான் இந்த ஆரூரன் என்ற பல்லை கடித்தார் தியாகேசன்.
இந்நேரம் எவ்வளவு சந்தோஷமாக இருக்க வேண்டிய தருணம்..! எத்தனை பொறுப்பாக மகளை கன்னிகாத்தானம் செய்து மச்சான் ஆதிரனுக்கு கொடுக்க ஆவலாக இருந்தார்.
அனைத்தும் காலாவதியாகி போயும் போயும் அந்த லோகநாதனுக்கு என் மகளை கொடுக்க வேண்டிய நிலைமையை ஆக்கிவிட்டானே இந்த ஆரூரன்..!
“ஏலே ஆரூரா.. என் கையில் நீ கிடைக்கும்போது இருக்குடா உனக்கு.!!” என்று இவர் தன் போல தன் பிரச்சினைகளை எண்ணியே தூக்கம் வராமல் படுத்திருக்க..
உள்ள இருந்த மூன்று ஜீவன்களுக்கும் தூக்கம் வரவில்லை.
கமலாம்பிகை பொறுமிக் கொண்டிருந்தார். எப்படி உங்க அப்பனாலே இப்படி ஒரு முடிவு எடுக்க முடிஞ்சது? என் தம்பிக்கு உன்ன கட்டல.. சரி.! போயும் போயும் அந்த பொறுக்கி பயலே போய் மாப்பிள்ளையா கொண்டு வந்து இருக்காரே.. இந்த கூறுக்கெட்ட மனுஷன்..!” என்று கடுகடுத்தவர்,
“இந்த பயல கல்யாணம் பண்ணிட்டு வந்தா.. நாளைக்கு மாமியார் வீட்டுக்கு வந்தான்னா பொண்ணுன்னு பார்ப்பானா இல்ல அவ அம்மான்னு பார்ப்பானா?? எல்லாமே அவன் கண்ணுக்கு பொண்ணா தான் தெரியும்..!! தூணுக்கு புடவை கட்டினாலே அத தொட்டு தொட்டு உரசர ஜென்மம் அவன்..” என்ற பல்லை கடித்தவர்,
‘இவனை இப்படியே விடக்கூடாது’ என்று தங்கள் ஃபோனை தேட மூவர் ஃபோனுமே அங்கே இல்லை. அதனை தன் பட்டாபட்டி அண்ட்ராயரில் பத்திரமாக வைத்திருந்தார் தியாகேசன்.
“இப்ப என்னடி பண்றது உங்க அப்பன் நம்ம போனை எல்லாம் ஆட்டைய போட்டு வச்சுட்டான் போல..” என்று அவர் வருந்த,
“ம்மா.. நான் வேணா போய் கொல்லப் பக்க கதவை திறந்து வேம்பு போன் வாங்கி மாமாவுக்கு பேசவா மா?” என்று கேட்டாள் மயிலு.
“வேணாம் வேணாம்..! இவ்வளோ செய்ற மனுஷன் அப்பப்போ உள்ள வந்து எட்டிப் பார்க்க மாட்டாருனு எப்படி நம்பறது? அதுவுமில்லாம அர்த்த ராத்திரில அடுத்த வீடானாலும் பொம்பள புள்ள நீ போறது சரியில்ல..” என்றவர்,
மயூரனை பார்த்து “நீ மெல்லமா ஓசைப்படாம கதவை திறந்து கிட்டு எப்படியாவது தாத்தா வீட்டுக்கு போயிடு.. உங்க மாமா கிட்ட விஷயத்த சொல்லி கையோட கூட்டிட்டு வா” என்று அனுப்பி வைத்தார் கமலாம்பிகை.
இப்படி மனைவி திட்டம் போட்டு பின் கதவு வழியாக மகனை அனுப்பி வைப்பார் என்று எள்ளளவும் எண்ணவில்லை தியாகேசன்.
அவர் பேசிய பேச்சுக்கும் அடித்த அடிக்கும் வீட்டில் மூவரும் அழுது கரைந்து கொண்டு இருப்பார்கள் என்று நினைத்தவர்,
“எதற்கும் மூன்று பேரும் என்ன செய்கிறாங்கனு பார்ப்போம்?”
என்று சத்தம் செய்யாமல் மெதுவாக கதவை திறந்து பார்க்க.. அங்கே தூணில் சாய்ந்தவாறு காலை நீட்டி கமலாம்பிகை அமர்ந்திருக்க.. அவர் பக்கத்தில் சுருண்டு படுத்து கண்களை மூடி தூங்குவது போல படுத்திருந்தாள் மயில்.
மகனை தேட.. அவனது அறை லேசாக திறந்து உள்ளே விடிவிளக்கு எரிய.. அவனும் தூங்கி விட்டான் போல என்று நினைத்து மீண்டும் கதவை பூட்டிக்கொண்டு ஜெம்பமாக வாயிலில் கயிற்று கட்டிலில் படுத்து விட்டார் தியாகேசன்.
15 வயது பாலகன் தான் மயூரன் இருட்டில் நடக்க அவனுக்குமே பயமாக தான் இருந்தது. ஆனாலும் பழகிய ஊரு.. அதைவிட இப்போது உள்ள சூழ்நிலையில் மாமனை அழைத்து வந்தே ஆக வேண்டும் என்று மன வைராக்கியத்தோடு எட்டு போட்டு நடந்து ஒருவழியாக தாத்தா வீட்டுக்கு வந்து விட்டான்.
அங்கே வாயிலில் பந்தல் தோரணம் விளக்கு அலங்காரங்கள் என்று கல்யாண களையோடு வீடு இருந்தாலும், சொந்த பந்தங்கள் பெரும்பாலும் சுற்றியுள்ளவர்கள் என்பதால் காலை நேரே திருமணத்துக்கு வந்து விடுவதாக சொல்லி இருக்க.. வீட்டில் சில தூரத்து உறவு பெண்களும் விஜயராகவன் மற்றும் ஆதிரன் மட்டுமே இருந்தனர்.
“தாத்தா..” என்றபடி மூச்சிரைக்க வந்தவனை பார்த்த விஜயராகவன்
“என்ன யா மயூரா? இந்த நேரத்துல தனியா வந்து இருக்க.. அம்மா ஏதாவது விஷயம் சொல்லிவிட்டுச்சா..?” என்றதும் அங்கிருந்தவர்கள் எல்லாம் என்ன விஷயம் என்பது போல எட்டி எட்டிப் பார்க்க..
“அது ஒன்னும் இல்லப்பா கல்யாணம் பிளவுஸ் ஆரி டிசைன் பண்ண நான் வெளியூரில் கொடுத்திருந்தேன். வந்திருச்சானு கேட்டு வர உங்க பேத்தி அனுப்பி இருப்பா.. அப்படித்தானே மயூரா?” என்று ஆதிரன் அழுத்தமாக அவன் கண்களை பார்த்து கேட்க, மாமனின் கண்ணசைவில் அதனைப் புரிந்து கொண்டவன் ஆமாம் என்றான்.
“வா வா கல்யாண ஜவுளி எல்லாம் இங்கன அப்பா ரூம்ல தான் இருக்கு. நான் எடுத்து தரேன். அது மட்டும் இல்லை உனக்குமே டிரஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். அதையும் உன்கிட்ட கொடுக்கணும்னு நினைச்சேன்.. மறந்திட்டேன்” என்றவன் உள்ளே நுழைந்து நிஜமாவே மயூரனுக்கு என்று வாங்கி வைத்திருந்த உடையை நீட்ட.. மயூரனோ கண்களில் கண்ணீரோடு மாமாவின் இடுப்பை கட்டிக் கொண்டான் மயூரன்.
என்ன இருந்தாலும் தாய்க்கு பின் தாய்மாமன் அல்லவா?
“டேய்.. இப்ப என்ன? ஏன் இப்படி அழுகிற? சின்ன புள்ளையா நீ? மாமா தானே வாங்கி கொடுத்தேன் உங்க அப்பாரு அலும்பு பண்ணா ஆம்பள புள்ள நீ தைரியமா இருக்கணுமா இல்லையா?” என்று தேற்றினான் மருமகனை.
“அப்பா.. அப்பா.. அம்மாவ..” என்று கண்ணீர் பெருக அரைகுறையாக திக்கி திணறியவனின் பேச்சு கேட்டு விஜயராகவன் பதறி,
“என்னடா என்ன ஆச்சு அம்மாவுக்கு? என் பொண்ண என்னடா பண்ணாரு உங்க அப்பா சொல்லுடா?” என்று பதட்டமாகி கேட்க..
“அப்பா கொஞ்ச நேரம் அமைதியா இருங்க..!” என்று அவரை கட்டிலில் அமர வைத்தவன், மருமகனையும் அமர வைத்து “என்ன நடந்துச்சுனு அழுகாம தெளிவா சொல்லு” என்று கேட்டான் ஆதிரன்.
மயூரன் ஒரே மூச்சில் நடந்ததை அனைத்தையும் கூற..
“டேய் கிளம்புடா குரு.. நம்ம பங்காளிய எல்லாம் கிளப்பு. என்ன நெனச்சிட்டு இருக்கான் உன் அத்தாங்காரன் மனசுல.. சரி ஏதோ கோவத்துல இருக்கான் பார்த்து பேசி பொறுமையா நாளைக்கு கல்யாணம் முடிக்கலாம்னு பார்த்தா.. என் வீட்டுக்கு பரிசம் போட்ட பொண்ண அடுத்தவன் வீட்டுக்கு அனுப்புவானா? எப்படி நடக்குதுன்னு பாக்குறேன்?” என்று அந்த வயதிலும் வேட்டியை கட்டிக்கொண்டு கிளம்பியவரை தடுத்து நிறுத்தினான் ஆதிரன்.
“அப்பா இது கோபப்படும் தருணம் இல்லை. நிதானமாக செயல்பட வேண்டிய தருணம்” என்றதும் விஜயராகவன் சட்டென்று அமர்ந்தாலும் தன் மகளை அடித்து விட்டான் என்று தாளவே முடியவில்லை அவரால்.
கூடவே பேத்தி.. அவளைப் போயும் போயும் ஒரு குடிகாரனுக்கு கல்யாணம் பண்ண எண்ணி இருக்கிறானே.. அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை பாசம் வைத்த தாத்தாவால்.
மரியாதை எல்லாம் காற்றில் பறக்க மருமகனாவது ஒன்னாவது என்று அவன் இவன் என்று பேச ஆரம்பித்து விட்டார்.
“எப்படி டா விட்டுக் கொடுக்க முடியும்? இதுக்கு முன்னாடி அத்தனை மாப்பிள்ளைனு பார்த்தேன். சரி.. அப்ப கூட ஏதோ போனா போகுதுன்னு விட்டேன். அவனா தானே சிமிழி பெரியப்பாவ அனுப்பி வைத்து பேச சொன்னான்.. இப்ப எல்லாம் முடிவான சமயத்துல போயும் போயும் அந்த பொறுக்கி பயலே என் பேத்திக்கு கட்டி வைப்பானாமா? வகுந்துடுவேன் வகுந்து அவனை..!” என்றவர் எங்கு அந்த வீச்சருவாள் என்பது போல அவர் தேட..
அவரை அமுக்கி பிடித்து அமர வைப்பதற்குள் போதும் போதும் என்றானது ஆதிரனுக்கும் மயிரனுக்கும்.
“தாத்தா.. மாமா சொல்றது தான் சரி. மாமா கிட்ட விடுங்க கண்டிப்பா மாமா இந்த பிரச்சினையை சால்வ் பண்ணுவாங்க. எனக்கு மாமா மேல நம்பிக்கை இருக்கு” என்றான் மயூரன் நம்பிக்கையாக.
“அப்படி சொல்லுடா மருமகனே..!” என்று அவனை தட்டிக் கொடுத்தவன், “சரிபா நீங்க ஓய்வு எடுங்க. யாரு கேட்டாலும் நான் போய் மயூரன வீட்டில் விடப் போறதா மட்டும் சொல்லுங்க சரியா!” என்றவன் அவனுக்கு எடுத்த உடையை கொடுத்து,
“இத கையில் எடுத்துட்டு வாடா.. அப்பதான் யாருக்கும் சந்தேகம் வராது” என்றப்படி மருமகனை அழைத்து சென்றான் ஆதிரன்.
இரண்டு தெரு தள்ளியே வண்டியை நிறுத்தினான் ஆதிரன்.
“ஏன் மாமா?”
“என் புல்லட்டு வண்டி காட்டி கொடுத்துடும் மயூரா உங்க அப்பன் கிட்ட.. பொத்தினாப்ல நீ எப்படி வந்தியோ அப்படியே உள்ள போகணும்.. சரியா?” என்றதும் சரி என்று அவன் தலையாட்ட..
சரி வா என்று இருவரும் பின்பக்கமாக வீட்டுக்குள் நுழைந்தனர்.
“நீ முதல்ல போய் அம்மா கிட்ட விஷயத்தை சொல்லி சமையல்கட்டுப் பக்கம் கூட்டிட்டு வா” என்றதும் அதன்படி மெல்ல பதுங்கி பதுங்கி சென்றான் மயூரன்.
மாமா கொடுத்த உடையை பத்திரமாக தன் அறையில் வைத்து விட்டு கண்ணை மூடி அமர்ந்திருந்த தாயைத் தொட்டு எழப்ப திடுக்கிட்டு விழித்தவரிடன் “மாமா வந்து இருக்கார் மா.. இங்கே சமயகட்டுல இருக்காரு” என்றான்.
“ஆரூரா…!” என்று இறைவனை வேண்டியவர், மகளை அழைத்துக் கொண்டு வேகமாக சமையலறைக்கு வந்தவர் மகளைப் பிடித்து தம்பியின் கையில் கொடுத்து “இப்பவே நீ கூட்டிட்டு போய்டு டா தம்பி” என்று கண்கள் கலங்கினார் கமலாம்பிகை.
ஆதிரன் அக்காவை தான் ஆராய்ந்தான். நெற்றியைப் பார்க்க அதுவோ புடைத்து கன்னிப் போய் இருந்தது. நடுங்கும் விரல்களால் அதைத் தொட்டு பார்த்தான். கூடவே தியாகேசன் அடித்த அடியால் அவரது ஒரு கன்னமும் அவரது சிவந்த நிறத்தில் விரல் தடங்கள் தெரிய கன்னி கருத்திருக்க.. அக்காவின் முகத்தை பற்றி இருபுறமும் திரும்பியவன் “இதுக்கெல்லாம் சேர்த்து இருக்கு உன் புருஷனுக்கு..” என்ற பல்லை கடித்தான்.
பட்டென்று தம்பியின் கையை தட்டி விட்டவர் “இப்போ ஆராய்ச்சி பண்றதுக்கு நேரம் இல்லை. நான் சொன்னது புரிஞ்சுதா? முதலில் இவள கூட்டிட்டு நீ கிளம்பு” என்று வாசல் பக்கம் பார்த்தவாறு அவசரப்படுத்தினார்.
“நான் என்ன திருட்டு பயலா? இல்ல திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிக்க போறேனா? சொந்த பந்தத்தை எல்லாம் பத்திரிக்கை வச்சு அழைச்சு, கெடா வெட்டி விருந்து வைத்து அங்க எல்லாம் ஏற்பாடு நடந்துட்டு இருக்கு.. நீ இழுத்துட்டு போ டான்னு சொல்ற? இங்க பாரு நாளைக்கு குறித்த நேரத்துல உன் பொண்ணுக்கும் எனக்கும் தான் கல்யாணம் நடக்கும் அதை எந்த கொம்பனா இருந்தாலும் சரி என் மாமனா இருந்தாலும் சரி ஒன்னும்..” என்று தன்னுடைய தலை முடியை பிடுங்கி காட்டியவன் “புரியுதா? இப்ப போய் நீ நிம்மதியா உறங்கு” என்று அக்காவை அனுப்பி வைத்தான்.
மயூரனிடம் “நீ அம்மாவை உன் ரூம்ல தூங்க வை” என்றான்.
“சரி மாமா.. வா மா.. அதான் மாமா சொல்லிட்டாங்கள.. கவலைப்படாத மா” என்று அன்னையை அவன் அழைத்து சென்றான். அவர்களோடு செல்லாமல் பின்தங்கி நின்றாள் மயிலு.
“உனக்கு என்ன தனியா சொல்லணுமா? கிளம்பு கிளம்பு..” என்றவன் பின் கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல இவளும் அவனோடு வந்தவள் சற்றென்று மாமனின் கையை எட்டிப் பிடித்தாள்.
“மாமா.. பயமா இருக்கு மாமா..” என்று கண்களும் உடம்பும் அந்த பயத்தை வெளிப்படையாக காட்ட,
அவளை தோளோடு அணைத்தவன், “ம்ப்ச் என்ன டி ஏன் மாமா மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டு அவளது கன்னத்தை தட்ட…
“நெனச்சேன் டா..! நீ இப்படி ஏதாவது திருட்டுத்தனம் பண்ணுவேன்னு அப்படியெல்லாம் அவ கைய உன்னைய பிடிக்க விட்டுடுவேனா?” என்றபடி அங்கு வந்து குதித்தான் திடீர் மாப்பிள்ளை லோகநாதன்.
“கைய என்னடா கை.. என் பொண்டாட்டி என்ன வேணாலும் பண்ணுவேன்” என்றவன் தன் நெஞ்சில் சாய்ந்திருந்த தங்க மயிலின் பொன் முகத்தை நிமிர்த்தி இரு கைகளாலும் அவள் கன்னத்தை தாங்கி இதழ்களோடு இதழ்கள் கோர்த்தான், கோர்த்த கைகளை விடாமலே…
தொடரும்..
super
👌👌👌👌👌👌👌👌👌👌👌