ATM Tamil Romantic Novels

சண்டியரே… சண்டியரே.. 24

சண்டியரே 24

 

வீட்டிற்கு வந்ததும் மாமனை கட்டிப்பிடித்து கதறிவிட்டாள் தங்கமயில். 

 

“ஏ லூசு எதுக்குடி அழுகுற? பேசுறவங்களை திரும்பி பேசாம இங்க வந்து என்கிட்ட அழுவுற? வீட்டுக்குள்ள தான் சூரப்புலி மாதிரி பேச வேண்டியது.. ஆனா வெளியில சுண்டஎலி என்ன?” என்று அவன் கிண்டல் செய்ய.. அவளின் அணைப்பு குறையவே இல்லை.. இன்னும் இன்னும் இறுகியது..!

 

 இருவரும் பேசிக் கொள்ளட்டும் என்று கமலாம்பிகை அப்பாவை அழைத்துக் கொண்டு அவருடைய அறைக்கு சென்று விட.. மனைவியை மெல்ல தங்கள் அறைக்கு அழைத்து வந்தான். 

 

மெல்ல மெல்ல அழுகை குறைந்து விசும்பலில் வந்து நிற்க..

 

“மயிலு.. அழுகைய நிறுத்திட்டினா இப்ப பேசலாமா?” என்றதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மயில்.

 

“அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்?” என்று கைகளைக் கட்டிக் கொண்டு அவன் கேட்க என்ன என்று புரியாமல் அவனைப் பார்த்தாள்.

 

“உன் நொப்பன் வீட்ல நடந்ததுக்காக என் கூட வந்துட்ட.. நாளைக்கு திரும்பவும் கோவிச்சுக்கிட்டு நீ போயிட்டா?” என்றவனை முறைத்தாள்.

 

“இன்னும் நமக்குள்ள எதுவும் சரியாகல.. அதே ஆரூரன் தான்..! ராகவிக்கு அப்பா தான்.! ஏற்கனவே ஒரு பெண் கூட வாழ்ந்தவன் தான்..!” என்று இரக்கமில்லாமல் அவள் இதயத்தில் கத்தியை சொருகினான்.

 

“நேத்தே உங்களுக்கு என்ன புரியவில்லையா?” என்று கண்களை துடைத்துக் கொண்டே கேட்டாள்.

 

“அது வேற டிபார்ட்மெண்ட் டி பொண்டாட்டி.. இது வேற டிபார்ட்மெண்ட்..! கணவன் மனைவிக்குள் ஊடல் கூடல் நடக்கிறது வேற டிபார்ட்மெண்ட்.. ஆனா அதை தாண்டி அவர்களுக்கிடையே இருக்கிற ஒரு புரிதல்.. பரஸ்பர நம்பிக்கை.. அது ரொம்ப முக்கியம்..! இது இரண்டும் இல்லைனா எதுவுமே செய்ய முடியாது” என்றவன் அவளை கூர்ந்து பார்த்தான். 

 

ஆரூரன் சொல்ல வருவது அவளுக்கு புரிந்தது. 

 

இனி என்னுடன் தான் உன் வாழ்க்கை என்றால்.. அந்த வாழ்க்கை சகித்துக் கொண்டு நீ வாழ வேண்டிய அவசியம் இல்லை. என்னை புரிந்து கொண்டு வாழும் புரிந்தலான வாழ்க்கை மட்டுமே எனக்கு வேண்டும் என்கிறான்.

 

“வாழ்க்கையில் புரிதல் மட்டும் போதுமா?” என்ற அவள் கேட்க..

 

“இல்லை தான்..! புரிதலோடு சேர்ந்த காதலும் வேண்டும்.. காமமும் வேண்டும்..! ஆனால் இப்போதைக்கு உன்னுடைய காதலை விட புரிதல் போதும் எனக்கு..” என்றான்.

 

“அப்போ என் மீதான உங்கள் காதல்? அது இப்போது இல்லை தானே அந்த காதலுக்கு தான் வேறு ஒருத்தி சொந்தம் ஆகிட்டாளே..” என்றாள் அடக்கப்பட்ட அழுகையோடு..!!

 

புரியாத வயதில் அவன் பேசிய “நீ எனக்காக மட்டும் தான்.. இந்த ஆரூரனுக்காக மட்டும் தான் நீ” என்ற வார்த்தைகள் இன்னும் பசு மரத்தாணி போது நெஞ்சில் பதிய வைத்திருந்தாள் மங்கை அவள். ஆனால்.. இவனோ.. வேறு பொண்ணோட வாழ்ந்திருக்கிறான் என்ற குமறல் அவளுக்கு.

 

அவளின் அடக்கப்பட்ட அழுகை.. துடிக்கும் இதழ்களும்.. கலங்கிய கண்களை பார்த்தவனின் மன துடித்தது அவளை தேற்றிட..! ஆனாலும் அவனுக்கு அவள் மனது தெரிய வேண்டி இருந்தது.

 

“அதற்கு என்ன செய்வது? விதி விளையாடிட்டு மயிலு?” என்று அவன் முகத்தை இறுக்கமாக வைத்து கண்கள் சிரிப்பில் மிழற்ற கூற..

 

“போயா பொல்லாத விதி..! நீ நினைச்சிருந்தா அப்பவே என்ன வந்து கட்டியிருக்க முடியும்? இங்க என்ன நடக்கிறது எல்லாம் தெரியும்னு சொன்ன தானே.. அப்ப எனக்கு மாப்பிள்ளை வந்தவங்கள நானும் மிரட்டி அனுப்புனதும் உனக்கு தெரிஞ்சி இருக்கும்ல.. அப்பவே என் மனசு உனக்கு தெரியல இல்ல.. இன்னொருத்திய கல்யாணம் பண்ணி கொஞ்சி குலாவி பிள்ளையும் பெத்துட்டு வந்து இப்ப அது இதுன்னு கத படிக்கிற..” என்று அவள் கடுப்படிக்க..

 

“எத்தனை மாப்பிள்ள வெரட்டி விட்ட நீ?” என்றதும் அவள் யோசனையோடு “இரண்டு மூணு மாப்பிள்ளைய..!” என்றாள்.

 

“மீதியெல்லாம் எப்படி போனாங்கன்னு உனக்கு தெரியுமா?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவன் கேட்க..

 

‘இதே போல தானே அன்று கூட்டத்தில் ஏதோ பேசினான்?’ என்று நினைவில் வர.. “நீயா மாமா..??” என்றாள் கண்கள் வெளியே தெறிக்க..

 

“எல்லாம் இந்த மாமன்தான்..!” என்று அவன் சாட்டை காலரை தூக்கி விட்டு கூற இன்னும் கோபம் முகிழ்த்தது அவளுக்கு. 

 

“யோவ்.. நீ தான் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிட்ட இல்ல.. அப்புறம் எவன் என்னை பொண்ணு பார்த்தா என்ன? கட்டிக்கிட்டா என்ன? குடும்பம் நடத்தினா என்ன? நீ ஏன் எல்லாத்தையும் தடுத்த?” என்று அவன் சட்டை காலரை கொத்தாக பிடித்து கத்தினாள்.

 

“இதுல சின்ன வயசுல வேற என் மனசுல “நீ என்னைக்கும் ஆரூரனுக்கு தான்..!” வார்த்தை விட்டுட்டு போயிட்ட. அது என்ன என்னன்னு யோசிச்சு யோசிச்சு உன்னையே நினைச்சுகிட்டு இருந்தவ நான்.. நீ என்னடானா மொத்தமா என்ன தூக்கி போட்டுட்ட இல்ல.. போயா.. நீயும் வேணாம்.. உன் லவ்வும் வேணாம்” என்று அவனை விட்டு விலகினாள்.

 

விலக முயன்றவளின் இடைப்பற்றி தன்னோடு இறுக்கி.. “என்னைய.. என்னைய.. நெனச்சிட்டு இருந்தியா மயிலு?” என்று கேட்டவனின் குரலில் சொல்ல முடியாது தவிப்பு இருந்தது.

 

“பின்ன.. ரெண்டுங்கட்டான் வயசு அது.‌ அந்த வயசுல நீ பாட்டு சொல்லிட்ட அதோட அர்த்தம் என்னன்னு கண்டுபிடிக்க எவ்ளோ கஷ்டமா இருந்து தெரியுமா? பத்தாதுக்கு ஆதி மாமாவோட எனக்கு கல்யாணம்னு தெரிஞ்சு அவர் கிட்ட பேசி கல்யாணத்தை நிறுத்த நான் எவ்வளவு போராடினேன் தெரியுமா? அதுக்கு அப்புறம் ஒரு கட்டத்தில் எனக்கே சலிச்சு போச்சு..” என்று அவள் சோகமாக அமர..

 

“ஆதிரனுக்கும் உன்னை கல்யாணம் பண்றதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லை மயில்..” என்றதும் அவள் சந்தேகமாக பார்க்க.. கண்களை மூடித் திறந்தவன் “கல்யாண சமயத்துல அதாவது தாலி கட்டுற நேரத்துல என்னை இங்கே வர சொல்லிட்டு அவன் வேற எங்காவது போலாம்னு தான் நாங்க பிளான் பண்ணி வைச்சிருந்தோம். ஆனா விதி அதுக்குள்ள வேற மாதிரி மாறிடுச்சு..” என்றதும் அவள் திகைத்து பார்த்தாள்.

 

“என்ன? ஆதி மாமாவா அப்படி பண்ணாங்க?” 

 

அவன் ஆமாம் என்று தலையசைக்க “இல்ல நீ பொய் சொல்ற மாமா.. நீங்க ரெண்டு பேரும் காண்டாக்ட்ல இருக்கிறது என்றால் அப்போ உனக்கு கல்யாணம் ஆனது ஆதி மாமாவுக்கு தெரிஞ்சி இருக்கும் தானே? அப்புறம் எப்படி உன்னை எனக்கு கல்யாணத்துக்கு பேசுவார்? ஆதி மாமா அப்படி எல்லாம் செய்ய மாட்டார்..!” என்றாள் தீர்க்கமாக..!

 

அவளின் ஆதி பற்றிய புரிந்துணர்வில் மெச்சிக்கொண்டவன் “சரியா சொன்ன.. ஆனா எனக்கு கல்யாணம் ஆகி இருந்தா தானே?” என்றதும் தூக்கி வாரி போட்டு அவனை பிடித்து தள்ளியவள்,

 

“யோவ்..! கொஞ்சம் கொஞ்சமா ஷாக் கொடு.. ஒரே நேரத்தில் பல ஷாக்க கொடுக்கிற..! உண்மையை சொல்லு நிஜமாகவே உனக்கு கல்யாணம் ஆகலையா?” என்று நடுங்கும் குரலோடு கூறியவளை பார்த்தவன் அவளை இழுக்க வர, அவன் கையை தட்டி விட்டு “எதா இருந்தாலும் பத்தடி தூரம் தள்ளி நின்னே பேசு.. அப்பதான் நீ என்ன சொல்றனு என்னால புரிஞ்சுக்க முடியும்” என்று கடுக்கடுத்தாள். அவளின் கடுப்பில் அவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வர, சிரித்தவனை முறைத்தாள்.

 

கைகளை கட்டிக்கொண்டு இரண்டடி மட்டுமே தள்ளி நின்றவன் புன் சிரிப்புடன் “இல்லை..! எனக்கு கல்யாணம் ஏற்கனவே ஆகல..!” என்று அவன் தலையசைக்க..

 

“அப்போ ராகவி??” என்று அவள் வெளியே வராத குரலில் மெல்ல கேட்க…

 

அவளையே கூர்ந்து பார்த்தவனும் பதில் அளிக்கவில்லை. “இந்த பட்டணத்தில் எல்லாம் சொல்வாங்களே ஒண்ணா இருக்கிறது.. அது பேரு.. ஹாங்.. லிவிங் டுகெதர்..! அது மாதிரி எதுவுமா? இல்ல இந்த வாடகைதாய்னு எதுவும் சொல்லுவாங்களே அந்த மாதிரியா? ஏதாவது சொல்லி தொலை யா? எனக்கு தலை எல்லாம் சுத்துது..!!” என்று இரு கைகளையும் அவள் பிடித்துக் கொண்டு கேட்க..

 

இதற்கு மேல் அவளிடம் மறைக்க விரும்பாமல் “ராகவி ஆதிரனுனோட பொண்ணு..!” என்றதும் அவளின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை..!!

 

“உனக்கு முதலில் இருந்து சொன்னா தான் புரியும். இங்க இருந்து கோச்சிக்கிட்டு நான் தஞ்சாவூர் போனேனா.. என்னால் அங்க ஸ்டடிய கண்டினியூ பண்ணவே முடியல.. ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தேன். அங்க இருக்கிற சீனியர் ப்ரொபஸருக்கு என்னைய ரொம்ப பிடிக்கும். அவர் என்கிட்ட கேட்கும் போது நான் எல்லா விஷயத்தையும் சொன்னேன். அவரு தான் எனக்கு ஆறுதல்..! அப்பதான் அவருக்கு லண்டன்ல உள்ள ஒரு ஆராய்ச்சி கூடத்துல வேலை கிடைச்சு இருப்பதாகவும் அதில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போவதாகவும் சொன்னார். என்னையும் கூட அழைச்சிட்டு போறீங்களா சார் நான் கேட்டவுடன், முதலில் யோசித்தவர். பின்பு என்னையும் கூட்டிட்டு போக எல்லா ப்ராசஸையும் பார்த்தார். அவருக்கும் குடும்பம் குட்டி எதுவும் கிடையாது. அங்கேயே என்ன படிக்க வச்சார். என்னோட பிஜியும் அங்கேதான் நான் முடிச்சேன்.. அப்பப்போ ஆதிரன் கிட்ட மட்டும் நான் பேசுவேன். ஆனா என்னைப் பற்றி யாரிடமும் சொல்லாதே என்று சொல்லிவிடுவேன்..!” என்றான். 

 

“ஆனா எனக்கு வந்த மாப்பிள்ளைகளை யார் மூலம் தடுத்து நிறுத்துன? கண்டிப்பா ஆதிரன் மாமா அதை செஞ்சிருக்கவே மாட்டார்.!” என்றாள் மயில். 

 

“ஹா.. ஹா.. கரெக்ட்.! நீ என்னைய தவிர யாரையும் கட்டிக்க கூடாதுனு வர மாப்பிள்ளை எல்லாம் தடுத்துடுடான்னு அந்த பொறம்போக்கு பையட்ட சொன்னா கேட்க மாட்டேன்ட்டான். அது எப்படிடா? நம்ம அக்கா பொண்ணு அவ.. அவ வாழ்க்கைல இந்த மாதிரியெல்லாம் பண்ண மாட்டேன்ட்டான். உனக்கு விருப்பம் இருந்தா நீ நேரா வந்து கேட்டு அவளை கட்டிக்க இல்லன்னா அவளுக்கு கிடைக்கிற நல்ல வாழ்க்கைய தடுக்காதனுட்டான். யோசிச்சு பாரு எனக்கு எவ்வளவு கோபம் வரும்?” என்றதும் மென் புன்னகை மயிலின் முகத்தில்..!

 

“அப்புறம் இவனை நம்பி சரிவராதுனு தவசியை கூட சேர்த்துக்கிட்டேன்” என்றான்.

 

“என்னது தவசி அண்ணனா?” என்றதும் ஆமாம் என்று கண்ணடித்து சிரித்தான். 

 

“கும்பகோணம் தானே அவனுக்கு.. அவங்க அப்பா நாச்சியார் கோவில குத்துவிளக்கு செய்ற கம்பெனி.. இவனும் கம்பெனி வேலைய தான் பாத்துட்டு அத அப்படியே கொஞ்சம் டெவலப் பண்ணி கடையலாம் இப்போ வச்சிருக்கான். அதுக்கு முன்ன மோஸ்ட்லி பட்டறைல தான் இருப்பான். அவன்கிட்ட பேசும் போதே உன் விஷயத்தை சொன்னேனா.. அவனுக்கு அது சப்பை மேட்டர்.. ரெண்டே நாளுல விஷயத்தை முடிச்சுட்டு எனக்கு போன் பண்ணிடுவான். அதனால தான் அவன் எனக்கு அவ்வளவு நெருக்கம்..!” என்றதும் கல்யாணத்திற்காக வந்தவனை யோசித்துப் பார்க்கையில் இப்பொழுது புரிந்தது மயிலுக்கு. 

 

“அடப்பாவிகளா..!! ரெண்டு பேரும் கூட்டு களவாணிகளா??” என்று அவள் அதிர..

 

“எஸ் ஆஃப் கோர்ஸ்..! வி ஆர் கிரைம் பார்ட்னர்ஸ்..!” என்று சிரித்தான் ஆரூரன். 

 

“இந்த விஷயம் எல்லாம் அம்மாவுக்கும் தாத்தாவுக்கும் தெரியுமா?” 

 

“இல்லை..! என்ற தலையசைத்தவன் “அப்பாக்கு மட்டும் நான் விஷயத்தை சொல்லிட்டேன். எதுவும் மறைக்க எனக்கு தோணல.. நம்ம பஞ்சாயத்துக்கு அப்புறம் தான் சொன்னேன். ஆனா அக்கா கிட்ட எதுவும் சொல்லல.. சொல்லணும்..! ஆனா அதுக்கு முன்னாடி இந்த ஊர் உலகத்துக்கு ஏன் நமக்கு கூட ராகவி நம்ம குழந்தை தான்..! அதாவது என் குழந்தையாகவே இருக்கட்டும்..!” என்றான். 

 

“ஏன் ஆதிரன் மாமாவுக்கு ஏதாவது ஆயிடுச்சா?” என்று கேட்டவளின் குரலோ அத்தனை நடுங்கியது.

 

இல்லை என்ற தலை அசைத்தவன் “இப்போதைக்கு நல்லா இருக்கான் ஆனா..” என்று அவன் பெருமூச்சு விட..

 

“என்ன ஆச்சுன்னு சொல்லுங்க.. மாமா.. எனக்கு ஆதி மாமாவுக்கு என்னன்னு தெரிஞ்சுக்காம படப்படனு இருக்கு” என்றாள்.

 

“ஆதிரன் ஒரு பொண்ண காதலிச்சான்னு சொன்னா உன்னால நம்ப முடியுமா?” என்றதும் இல்லை என்று தலை அசைத்தாள் வியப்பு அகலாமல்…

 

“ஆமா அதுவும் அந்தப் பெண் ஒரு டான்ஸர். என்னென்னமோ இடையில நடந்து போச்சு.. ஒரு ஆக்சிடெண்ட்ல அந்த பொண்ணுக்கு அடிபட்ட உடனே தான் இவனை காண்டாக்ட் பண்ணி இருக்காங்க. அதுவும் நம்ம கல்யாணத்துக்கு பத்து நாளுக்கு முன்னாடி.. அப்பதான் நானும் இந்தியா வந்து சேர்ந்தேன் எங்கள் திட்டத்தை செயல்படுத்த.. ஆதிரனுக்கு ஒரு பொண்ணு இருக்கிறதும் அப்பதான் அவனுக்கே தெரியும்.. அவன் காதலி ஒரு பக்கம் கோமாவில் கையில் குழந்தை.. என்ன செய்வது என்று புரியாமல் இருக்க.. நான் தான் இது ஆரூரன் குழந்தையாக இருக்கட்டும் நான் ஆதிரனாகவே ஊருக்கு செல்கிறேனு சொல்லி வந்தேன்” என்றான். 

 

“இப்போ அவங்களுக்கு சரியாயிடுச்சா?” என்று மயில் கேட்க..

 

“இன்னும் இல்ல.. இழந்த காலத்தை சரி செய்ய.. தொலைந்த காதலை மீட்க அங்கே ஆதிரன் அவன் காதலியோடு போராடிக் கொண்டிருக்கிறான்” என்றான் எங்கோ பார்த்து..!!

 

“எல்லோருக்கும் காதல் உடனே கிடைத்து விடுவதில்லை மயிலு..” என்றதும் அதை உணர்ந்தவள் ஓடிவந்து மாமனை கட்டிக் கொண்டாள்..!! அவனும் அந்த அணைப்பை இறுக்கினான்.

 

“சரி நீ வெயிட் பண்ணு நான் போய் குளிச்சிட்டு வரேன்..! ஹாஸ்பிடல் கிளம்பணும்” என்று அவன் குளித்துவிட்டு வர.. கமலாம்பிகை ராகவிக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்க.. மயூரன் பள்ளிக்கு சென்று இருந்தான். 

 

விஜயராகவனும் ஆரூரனும் சாப்பிட்டுக் கொண்டிருக்க மயில் தான் இருவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள். மெல்லப்பேச்சு அது பாட்டுக்கு சென்று கொண்டிருக்க..

 

“லோகநாதனை எதாவது செய்யணும் யா சிவா” என்று விஜயராகவன் கடுப்பாக கூற..

 

“அதை நான் பார்த்துக்கிறேன் பா..” என்று போது ஆரூரனுக்கு அப்பொழுது ஃபோன் வந்தது. 

 

யார் என்று பார்க்க தியாகேசனிடமிருந்து..

 

“இந்த ஆள் எதுக்கு இப்ப கூப்பிடறாரு தெரியலையே..?” என்று அவன் கட் செய்ய.. திரும்ப திரும்ப அழைத்துக் கொண்டே இருந்தார். 

 

“என்ன இவரு ஓயாமல் அடிக்கிறாரு” என்று எடுத்து காதில் வைத்தவன் “என்ன யா உனக்கு இப்போ பிரச்சனை?” என்று கடுப்புடன் கேட்க அந்த பக்கம் தியாகேசனோ.‌

 

“மாப்பிள்ள.. என்னைய வந்து காப்பாத்து யா மாப்பிள்ள.. தயவுசெய்து என்னை வந்து காப்பாத்து மாப்பிள்ளை..” என்று கதறினார். 

 

என்ன சொல்கிறார் என்று புரியாமல் “காட்டு கோயிலுக்கு வா மாப்பிள்ள..” என்றதோடு யாரோ அவரிடம் இருந்து போனை பிடிங்கி செல்வதை போல தோன்ற..

 

“ஏய் மயிலு.. உன் நொப்பன் யாருகிட்டயோ வசமா மாட்டிக்கிட்டாரு போல.. அநேகமா அந்த லோகநாதன் கிட்ட தான் நினைக்கிறேன். நான் என்னன்னு பாக்க போறேன்” என்று கிளம்பினான்.

 

“தனியா போகாத சிவா நம் ஆளுங்க ரெண்டு மூணு பேர கூட்டிட்டு போ” என்று தந்தை கூறியதும் அப்பொழுது வேலைக்கு வந்திருந்த தையான் மற்றும் சிறு ஆட்களை கூட்டிக்கொண்டு அந்த காட்டுக் கோயிலுக்கு சென்றான்.

 

சென்றவனும் இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. 

 

ஆம்.. அங்கே மாப்பிள்ளை கோலத்தில் தியாகேசனை இருவர் பிடித்திருக்க.. அருகிலோ ஒரு பேரிளம் பெண் நின்றிருந்தாள். அவள் யார்? இவரை எதுக்கு இங்கே கட்டி தூக்கி வந்து இருக்கிறார்கள்? என்று புரியாமல் பார்த்து இருக்க லோகநாதன் தான் வந்தான். 

 

“என்ன பாக்குற இது என்னோட அத்தை.. ஒன்னு விட்டு ரெண்டு விட்டு இல்ல சொந்த அத்தை.. என்ன புருஷன் குடிச்சு குடிச்சு மட்டை ஆகி எப்ப பாத்தாலும் எங்க அத்தையை போட்டு அடிச்சுகிட்டே துன்புறுத்திக்கிட்டே இருந்தான். எங்க அத்தை ஒரே ஒரு நாள்.. ஒரே ஒரு அடி தான் பூரி கட்டையால அடிச்சுது.. பொசுக்குனு மண்டைய போட்டுட்டான் அந்த பாவி.. எங்க அத்தையும் இவ்ளோ நாள் தனியா தான் இருந்துச்சு.. அதுக்கு தான் இவரோட சேர்த்து வைக்கலாம்னு பெரிய மனுசு பண்ணிட்டேன். எப்படியும் உன் அக்கா தான் வரப் போறது கிடையாது. அதனால என் மாமனுக்கு நானே கல்யாணம் பண்ணி வச்சு.. அதுக்கப்புறம் அவர் குடும்பத்தையும் சொத்தையும் நான் பார்த்துக்கிறேன்..” என்றதும் நெற்றியில் கை வைத்துக் கொண்ட ஆரூரனுக்கோ சிரிப்பும் கோபமும் சரிவிகிதத்தில் வந்தது. 

 

தியாகேசன் நிலைமையை கண்டு சிரிப்போ சிரிப்பு..! திரும்பவும் என் மயில் மீது இவன் கை வைக்க நினைக்கிறானே என்று அத்தனை கோபம்..!

 

“இங்க பாரு லோகநாதா.. நான் ரொம்ப நல்ல மூடுல இருக்கேன் தயவு செய்து இப்பவே நீ என்ன பண்ற ஓடிப் போயிடு..! இல்ல இருக்கிற கோவத்துல உன்னை நார் நாரா பிச்சு போட்டுருவேன்” என்று ஆரூரன் அதட்ட…

 

“ஓ அப்படி என்ன பண்ணிட்டுவ? பாத்தியா என் பக்கம் எத்தனை ஆட்கள்..” என்று காட்ட 10 ஆட்கள் கூடி நின்றனர். 

 

“நானும் சும்மா வரல என் பக்கம் ஆட்களை கூட்டிட்டு தான் வந்து இருக்கேன்..” என்றதும் தையான் அவனோடு சேர்ந்து இன்னும் ஐந்து நாட்கள் வந்தனர். அதுவும் கையில் அப்பொழுது வேலைக்கு கொண்டு வந்திருந்த மண்வெட்டி கடப்பாரை கோடாலி போன்றவற்றை ஆரூரனின் காரில் இருந்து எடுத்துக் கொண்டு வர.. அவர்களை பார்த்ததும் ஜெர்கான லோகநாதன் “அத்தை சீக்கிரம் இந்த ஆள் கைல இருந்து தாலியை கட்டிக்க.. நான் போட்டோ எடுத்துக்கிறேன்” என்றவனை “உன்னை எல்லாம்..!!” என்று பாய்ந்த ஆரூரன் லோகநாதனை பிடித்து தள்ளி விட்டான்.

 

அதற்குள் அந்த பெண்மணி லோகநாதனுக்கு பத்து மடங்காய் இருப்பாள் போல.. “யோவ் நீ தாலிய கட்ட கூட வேண்டாம். தாலியில கையை பிடித்து அப்படியே போட்டவுக்கு போஸ் மட்டும் கொடு.. தாலியை நானே கட்டுகிறேன்” என்று ஆர்ப்பாட்டமாய் அடிக்கிரலில் கத்த அதில் பயந்தே விட்டார் தியாகேசன்.

 

சிறிது நேரம் அந்த விளையாட்டை பார்த்து இருந்தான் ஆரூரன்.

 

“யோவ் மாமோய்.. இந்த அத்தையும் நல்லா தான் யா இருக்கு.. கட்டிக்க..!” என்றான் ஆரூரன்.

 

“செஞ்சதெல்லாம் தப்பு தான். உன் கால்ல விழுந்ததுனாலும் மன்னிப்பு கேட்கிறேன் தயவுசெய்து இந்த கொடுமைக்கார கூட்டத்து கிட்ட என்னை மாட்டிவிட்டுடாதடா.. அதுக்கு பதில் என்னைய ஜெயிலுக்கு கூட அனுப்பு.. நான் மனசார ஏத்துக்கிறேன்.. இல்லையா காலம் முழுக்க உங்க வீட்டு மாட்டு கொட்டுல்ல வேணாலும் என்னை கட்டிப்போடு.. நான் வீட்டுக்குள்ளே வரல அங்கே இருந்து இருக்கிறேன்.. இந்த பஜாரி கூட்டத்தோடு என்னை கோர்த்து விடாதே டா.. எனக்கு இப்பவே ஹார்ட் அட்டாக் வந்துரும் போல..” என்று அவர் பேச பேச நிஜமாகவே அவருக்கு உடம்பு எல்லாம் வியர்த்து கொட்டியது. 

 

ஏனென்றால் லோகநாதன் அத்தனை பயமுறுத்தி வைத்திருந்தான். “உன் பொண்ணுக்கு இரண்டாவது கல்யாணம் செய்றேன்ல.. நீ உனக்கு செஞ்சுக்கோ.. நீ செஞ்சு காட்டினா அந்த கமலாம்பிகை ஆரூரனும் வெந்து போவாங்க.. அக்கா வாழ்க்கைக்காக அவன் வந்து நிற்பான் இல்ல.. அப்ப நான் என் மயில வாங்கிக்கிறேன்” என்று அவன் மீண்டும் திட்டம் போட…

 

ஐயோ என்று அலறின தியாகேசனுக்கு ‘சும்மா இருந்தவனை சீண்டி விட்டுடோமோ.. வேலியில போன ஓணானை நாமலே பிடித்து வேட்டிக்குள்ள விட்டுக் கொண்டோமோ’ என்று நொந்து நூடுல்ஸாக..

 

அவரை அப்படியே குண்டு கட்டாக தூக்கி வந்து புது மாப்பிள்ளை ஆக்கி நிறுத்திவிட்டான் காட்டுக் கோவிலில்..!

 

“இருடா அவசரத்துக்கு போயிட்டு வரேன்..” என்று மரத்துக்கு பின்னால் அவர் இயற்கை உபாதைக்கு செல்வது போல சென்று தான் ஆரூரனுக்கு ஃபோன் அடித்தார். இந்த நிலைமையில் தன்னை காப்பவன் அவன் மட்டுமே என்று..!

 

 அதுபோல வந்தவனும் இப்பொழுது வேடிக்கை பார்த்து நிற்கிறானே என்று பயந்து “டேய் என்னை காப்பாத்து டா..!” என்று அவர் அலற..

 

“மாப்பிள்ளை நான்..! மரியாதை.. எனக்கு மரியாதை கொடுக்கணும். உம்ம இஷ்டத்துக்கு அவன் இவன்ங்குற.. எனக்கு நீ சரியான மாமனார் கிடையாது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அந்த மிலிட்டர் ரிட்டனை என் மாமனார் ஆக்கிக்கிறேன். இந்த புது அத்தையே நீ வச்சுக்கோ..” என்றதும் ஆடியே போய்விட்டார் தியாகேசன். 

 

அதுவும் பல்லெல்லாம் பான்பராக்கு கரையோடு அண்டா சைஸ் ஆங்காரியாய் ஊச்சு கொண்டை போட்டு அதில் கூடை பூவை சுற்றிக்கொண்டு கந்தாங்கி சேலையோடு கால்களில் அத்தனை பெரிய சலங்கை கொலுசோடு அலங்கார பூசிதையாய் எதிரே நின்ற அந்த பெண்மணியை பார்த்து அரண்டு போய்விட்டார் தியாகேசன். சாந்த சொரூபியாக வளைய வரும் தன் கமலாம்பிகை சாட்சாத் அந்த கடவுள் கமலாம்பிகையாய் அவராக்கு தோன்ற.. சுத்தமாக ஆரூரனிடம் மடிந்து விட்டார். 

 

“மாப்ள என்ன மன்னிச்சிடுங்க மாப்பிள.. தயவு செய்து என்னை காப்பாத்துங்க மாப்பிள்ள.. இனிமே உங்க பேச்சுக்கு எதிர் பேச்சே பேச மாட்டேனுங்க.. உங்க வாழ்க்கையில் நான் தலையிடவே மாட்டேனுங்க.. ஒரு ஓரமா உங்க வீட்ல வீட்டோட மாப்பிள்ளை இருந்தாலும் சரிங்க இல்லை நீங்க பெரிய மனசு பண்ணி உங்க அக்காவை என் கூட அனுப்பி வச்சாலும் சரிங்க.. நான் நல்லா பார்த்துக்கிறேன் மாப்பிள்ளை. உங்க அக்காவை கஷ்டப்படுத்த மாட்டேன் மாப்பிள்ள.. அவள் என்னை அடிச்சா கூட சத்தமா அழாம வாயை பொத்தி அழுகிறேன் மாப்பிள்ளை” என்று அவர் மூச்சு இரைக்க இரைக்க.. கண்களில் இருந்து கண்ணீர் ஊற்ற ஊற்ற.. அவர் பேசிய விதத்தில்.. 

 

ஒட்டு மொத்த ஆண்களின் மனசே கலங்கியது என்று தான் சொல்ல வேண்டும்..!!

 

கூடவே அவர் உடலும் வியர்த்து கொட்ட ஒரு மருத்துவராய் அவரின் உடல்நிலையும் அவனுக்கு புரிய, லோகநாதனின் ஆட்களும் தன் ஆட்களும் அங்கே சண்டை போடுவதை பார்த்துவிட்டு தியாகேசனை பிடித்து இருந்த இருவரையும் ஒரே உதையில் எட்டித் தள்ளியவன் அந்த பொம்பளையை திருப்பி பார்த்து ஒரு முறைக்க…

 

அவளோ அலட்சிய சிரிப்போடு நின்றிருந்தவள், “யோவ் தம்பி.. என்னை என்ன சாதாரண பொம்பளை என்று நினைத்தாயா?” என்று சிரித்தபடி கேட்க..

 

 “ஒரே ஒரு ஊசி தான்.. போட்டேன் வச்சுக்கோ.. உன் ஹார்ட்டு நின்னுடும் நான் ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் தெரியுமா?” என்றதும் உயிருக்கு பயந்து அவள் ஓட்டம் பிடித்தாள்.

 

அப்புறம் என்ன லோகநாதனை நைய புடைத்து தூர்வாரி மூட்டையாக கட்டியவர்கள் கொண்டு போய் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலர்களும் முன்னால் இவன் செய்ததை எல்லாம் கேட்டுக் கொண்டே கடைசியாக தியாகேசனை மாப்பிள்ளையாக பார்த்தனர் என்றதும் அதிர்வோடு பார்த்தவர்கள் கடைசியில் சிரித்து விட்டனர். 

 

“சார் கேஸ் பாக்குறதுக்கு சிரிப்பு மாதிரி இருந்தாலும்.. ஆனா ரொம்ப அபாயமானது பாத்துக்கோங்க.. என் மாமனார ஹாஸ்பிடல் கொண்டு போகணும்” என்று தையான் மற்றவர்களை அங்கே பார்க்க சொல்லிவிட்டு இவன் மாமனாரை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் வந்து விட்டான். 

 

வீட்டிற்கு விஷயம் தெரியப்படுத்த அனைவரும் வந்தாலும் கமலாம்பிகை அவனிடம்‌ கண்கள் கலங்கினார். “ஒன்னும் இல்லக்கா லைட்டா ஈசிஜில கொஞ்சம் மாற்றம் இருக்கு. ஆனா இந்த மாதிரி இவரு கத்திக்கிட்டே இருந்தாருன்னா அட்டாக்குக்கு நிறைய சான்ஸ் இருக்கு சொல்லிட்டேன்..!” என்றதும் மீண்டும் அவருக்கு ஒரு கர்வம் என்ன இருந்தாலும் என் குடும்பம் என்னை விட்டு விடாது என்று..!!

 

ஆனால் மனைவியோ “இனி உன் வீட்டு பக்கமே நான் வரமாட்டேன் நான் எங்க அப்பா வீட்டுல இருந்திருக்கிறேன். உன்னை பார்க்கவே எனக்கு புடிக்கல..” என்று பேச மயூரனும் தந்தை முறைத்துக் கொண்டு இருந்தான்.

 

விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து அத்தனை கோபம் அவனுக்கு தந்தையின் மீது..!

 

வேறு வழி இன்றி அனைவரிடமும் இவர் தான் பணிந்து போக வேண்டி இருந்தது. 

 

குடும்பத்தில் பணிந்து போவதால் அவன் கெட்டுப் போவதில்லை..! அதைப்போல விட்டுக் கொடுக்கும் உறவுகளும் கெட்டுப் போவதில்லை..!  

 

உறவுகளுக்காக விட்டுக் கொடுக்கலாம். ஆனால் தன்மானத்தை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை அதற்கும் ஒரு எல்லை உண்டு..! என்று ஆரூரன் தான் அத்தனை எடுத்துக் கூறி கூடவே “உன் கவனிப்பில் அவர வைத்திருக்கிறது தான் கா நல்லது..! அவர் இப்ப உயிரோட இருக்கார். அதனால நம்ம சண்டை போடுறோம் தள்ளி வைக்கிறோம்.‌ ஆனால் அவருக்கு இதுவே ஏதாவது ஒன்று ஆகி இருந்தால்..” அதை கேட்டதும் பதைபதைத்து போனார் கமலாம்பிகை. 

 

ஒரு வழியாக கமாலாம்பிகை கணவன் வீடு சென்றார் மயூரனை அழைத்துக் கொண்டு..!

 

அதன் பிறகு மரியாதையாக ஆரூரனை நடத்தினார் தியாகேசன். ஒன்று தன் குடும்பம் முக்கியம் என்று புரிந்து கொண்டார். அடுத்து தன் உடல்நிலையும் முக்கியம் என்று புரிந்து கொண்டார்.

 

அதற்கு இப்போது வைத்தியம் பார்ப்பது ஆரூரன் தானே? ஆக மொத்தம் குடும்பத்திற்காகவும் தன் உடல் நலத்திற்காகவும் ஆரூரனை கொண்டாடினார்.

 

அதனால் தானாக ஒரு பணிவு வந்துவிட்டது. முறைப்படி அவன் வீட்டுக்கு வந்து அழைத்து மறு வீடு அழைத்துச் சென்றார். விருந்து வைத்து அசத்தினார், இவனோ மயிலிடம் “ஏன்‌டி.. நிஜமாகவே இவரு உன் நொப்பன் தானா டி? என்றதும் அவள் முறைக்க..

 

“என்னதான் மாமா மேல காதல் இருந்தாலும் அதை இப்படி நீ கோபமா பார்த்து நிரூபிக்க வேணாம் மயிலு? அப்புறம் நானும் என் லவ்ச என் மாமனாருக்கு முன்னரே காட்ட வேண்டி இருக்கும்” என்றதும்.. அவள் நறுக்கு என்று கிள்ளி வைக்க.. 

 

“போடி.. உன் கொப்பங் மவளே..!” என்று திட்டினான் ஆரூரன். 

 

தந்தை மேல் கோபம் இருந்தாலும் தாய்க்காக அவரை மன்னித்து விட்டாள் மயில். அதுவும் இல்லாமல் தவறு செய்யாதவர்கள் தான் யார்? அதை புரிந்து சரி செய்து கொண்டாலே போதும் அல்லவா? இந்த பிறப்பில் தான் இந்த உறவுகள் எல்லாம்.. அதைக் கொண்டுதான் கோபம் வன்மம் ஆத்திரம் எல்லாம்..!

அடுத்த ஒரு பிறப்பு என்பது நமக்கு தெரியாது அல்லவா?

 

ஆரூரன் அன்று சொன்னது போல அடுத்த மூன்றாவது மாதமே மயில் கர்ப்பமாக.. கெத்தாக மாமனார் முன் மீசையை முறுக்கி காட்டினான். 

இப்போது ஊரை கூட்டி மனைவியின் வளைகாப்பை விமர்சையாக அவன் செய்து கொண்டிருந்தான். அன்று மனைவியை தவறாக பேசியவர்கள் முன் தனது மனைவியோடு வலம் வந்து அவர்கள் மூக்கு உடைத்தான்.

 

அதேசமயம் அங்கே கோமாவில் இருந்த தன் காதலி கண்விழிக்க தவம் கிடந்தான்.. குரு ஆதிரன்..!!

 

(அவர்கள் கதை தனியொரு கதையாக வரும்)

 

சுபம்..!!

 

 

4 thoughts on “சண்டியரே… சண்டியரே.. 24”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top