18
நடுஇரவில் கெட்ட கனவு கண்டு அதில் மகனை பார்த்து விட துடித்து தனி சாட்ரடட் ப்ளைட் மூலம் வந்தார் விஜயேந்திரன். ஆரனுக்கு அதிர்ச்சி கொடுக்க.. அதுவும் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று எண்ணி சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்க.. இங்கே அவருக்கு மயூரியை பார்த்து அப்பட்டமான அதிர்ச்சி!! இன்பமான பேரதிர்ச்சி!! அதுவும் அவரது உதடுகள் தன் போல “வேதா” என்று முணுமுணுத்தது ஆசையாக.. காதலாக.. தவிப்பாக.. தகிப்பாக..
மயூரி வெளியே சென்றதும், அசுரனின் முகத்தில் வழக்கம் போல இகழ்ச்சி புன்னகை வந்து ஒட்டிக் கொண்டாலும், அவளின் பத்திரத்தை எண்ணியவன் தன் டிரைவருக்கு போன் செய்து கொண்டே வெளியில் வந்தான். அங்கே தந்தையைக் கண்டு அதிர்ந்தான் என்றால் அவரின் முகத்தில் தோன்றிய பாவனைகளும் மயூரி போன திசையை பார்த்திருந்த அவரின் வெறித்த பார்வையும் கண்டு தந்தை மயூரியை கண்டு கொண்டார் என்று புரிந்து கொண்டான்.
“ப்பா..” என்று ஆதுரமாக அவன் அழைக்க.. அது அவர் காதில் விழவே இல்லை. அவரின் நினைவு முழுக்க இப்போது மயூரியை பார்த்த அந்த உருவத்திலேயே லயித்திருந்தது. உதடுகள் “வேதா.. வேதா.. வேதா..” என்று நொடி கூட இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டே இருந்தது.
அவரின் நிலையை பார்த்தவனுக்கு ‘இதுக்கு தான் இவரை இந்த ஊர் பக்கமே வர வேண்டாம் என்று வைத்திருந்தேன். ஆனாலும் பிடிவாதம்.. பிடிவாதம்!! அவ்ளோ பிடிவாதம் ஆகாது!!’ மனதுக்குள் எண்ண... அவனுக்குள் இருக்கும் பிடிவாதமே அவரிடம் இருந்து தான் வந்தது என்று அறியாமல்!!
பின் இரண்டு அடி தூரத்தில் நின்று கொண்டிருக்கும் அவரது மெய்க்காப்பாளரை பார்வையாலே ஆரன் எரிக்க.. அவனும் கையை பிசைந்து கொண்டு “சார்.. சார்..” என்று அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் தந்தி அடித்தான்.
தந்தை அருகே சென்று அவரின் தோளை அழுத்தமாக பிடித்து “அப்பா..” என்று இவன் கூப்பிட, சட்டென்று இனிய கனவிலிருந்து விழித்தவர் போல மகனை பார்த்தவர் மயூரி சென்ற திசையை தன் ஒரு கையால் காட்டி..
கண்களால் அவனிடம் கேள்வி கேட்க அவனும் கண்களைமூடி ஆமாம் என்று பதில் அளித்தவன், “உள்ளே போய் பேசலாம்.. வாங்க!!” என்று மெதுவாக தந்தை அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டே வந்தான். அவரை சற்றுமுன் மயூரி போட்டோ பார்த்த அறைக்குள் அழைத்து சென்றான்.
அங்கே இருந்த அந்த ஓவியத்தை பார்த்தவருக்கு கண்கள் கலங்க.. மெல்ல அதன் அருகே சென்று அந்த ஓவியத்தை வருடினார் மென்மையாக..
“வேதா.. என் வேதா” என்றார் கண்கள் கலங்க.. குரல் நடுங்க..
“ஆமா உங்க வேதாவே தான். முதல்ல வந்து ரெஸ்ட் எடுங்க..” என்று அவரை குழந்தை போல மெதுவாக தூக்கி அங்கிருந்த மெத்தையில் படுக்க வைத்து மிதமாக ஏசியை ஆன் செய்து விட்டான்.
ஆனால் அவரது கண்களோ அந்தப் ஓவியத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க..
“நீங்க இப்படி இதையே பார்த்துகிட்டு இருந்தீங்க.. கண்டிப்பா தூங்க மாட்டீங்க. அப்புறம் இந்த பெயிண்டிங் நான் எடுத்திட்டு போய்டுவேன். சம்ஜே?” என்று கேட்க அவரோ பதறிப்போய் “வேணாம்.. வேணாம்!!” என்று தலை அசைத்தார் வார்த்தைகள் வர முடியா துக்கத்தில்..
வேண்டாம் என்று தலையை ஆட்டி மகனின் கையை நன்றாக இருந்த ஒற்றைக் கையால் அழுத்தமாக பிடித்துக் கொண்டார். அது ஒன்றே பற்று என.. கண்களை மூடி தூங்க ஆரம்பித்தார் மகனின் சொல்லுக்காக..
ஆனால் அவர் மனதிலோ அவர் வேதாவின் உடனான இனிய கற்பனைகள்!!
அவர் வேதாவின்
கொஞ்சும் மொழிகள்..
கெஞ்சும் பார்வைகள்..
கோப சிணுங்கல்கள்..
செல்ல சண்டைகள்..
தாப ஷணங்கள்..
கூடல் பொழுதுகள்..
அந்தரங்க சம்பாஷணைகள்..
என்று நித்தமும் எண்ணி சிரிப்பது போல இன்றும் அந்தக் கனவுகள் உடனே இல்லை இல்லை நினைவுகளாய் இருந்து கனவுகளாக மாற கொஞ்சம் கொஞ்சமாக துயிலில் ஆழ்ந்தார் விஜயேந்திரன்.
தந்தை நன்றாக தூங்கும் வரை அவரை பார்த்துக் கொண்டு.. அவர் கைகளை பிடித்துக் கொண்டு.. மெல்ல அவர் தலையை வருடிக் கொண்டு.. அருகே அமர்ந்து இருந்தான் ஆரன் வித்யூத்!!
எப்படி கம்பீரமாக வலம் வந்த தந்தை!! ஆளுமையும் அதே நேரம் கருணையும் கொண்ட முகத்தில் இன்று வெறும் சுருக்கங்கள் மட்டுமே எஞ்சி இருந்தன..
காலம் செய்த கோலத்தால் ஏற்பட்ட மாற்றங்களா? இல்லை! இல்லை!! காலம் கொடுத்த அதிர்ஷ்டத்தில் நயவஞ்சகர்களின் வஞ்சத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் இவை!!
தந்தை முகத்தை ஆதுரமாக வருடியவனின் மனதில் அவ்வளவு வலி!!
அந்த வலிகள் எல்லாம் வன்மங்களாக மாறிக்கொண்டிருந்தது செந்தூராரின் குடும்பத்தின் மீது!!
தந்தை நன்றாக தூங்கியவுடன் வெளியில் வந்தவன் அவரின் மெய்க்காப்பாளரை வாங்கு வாங்கு என்று ஹிந்தியில் வறுத்து எடுத்து விட்டான். “இனி என்னைக் கேட்காமல் அவரை எங்கும் அழைத்துச் செல்லக் கூடாது!!” என்று கட்டளை பிறப்பித்தவன் அதன்பின்னே தன் அறைக்குள் நுழைந்தான்.
ஆனால் ஏனோ தனிமையில் இருக்க.. இருக்க.. அவனது மனத்தின் ரணம் அதிகரிப்பது போல் தோன்ற, அந்த ரணத்தை ஆற்றும் அவனது மயூ பேபி அருகில் வேண்டும் என்று அவனின் ஒவ்வொரு அணுக்களும் துடித்தது.
மயூரி அழுது கொண்டு வெளியே வந்தவள், என்றும் ரசிக்கும் அவளது நீலநிற பார்வை என்று ஏனோ வெறுப்பாக வந்தது. வெளியில் வந்தவள் அவளை அழைக்க வந்த டிரைவரை தவிர்த்துவிட்டு கேப் புக் செய்துகொண்டு அருகில் உள்ள திருச்செந்தூர் முருகனை தரிசிக்க சென்று விட்டாள் அமைதியை தேடி..
அதே நேரம் செந்தூரார் வீட்டில்.. இன்னும் ஒரு வாரத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தெய்வானை அம்மாள் கூற.. அனைவருக்கும் அது அதிர்ச்சியே!!
“ஒரு வாரத்தில் எல்லாம் முடியவே முடியாது. வேலையை கூட ஈவண்ட் ஆட்களிடம் விட்டுவிட்டாலும் பத்திரிக்கை வைப்பது நமது கடமை.. ஒரு வாரத்தில் எப்படி வைக்க முடியும்?” என்று குருபரன் தனது விருப்பமின்மையை கூற, ஆனால் தெய்வானை அம்மாள் அழுத்தமாக அமர்ந்திருந்தார்.
எப்பொழுதும் போல மெய்யறிவு தான் இருவரையும் சமாதானம் செய்ய பேசினார். “அக்கா மூணு கல்யாணம் நடக்க போகுது. ரஞ்சனி மாமனார் வீட்ல எல்லாம் இதை எப்படி ஏத்துக்குவாங்க? சொல்லுங்க! அவங்களுக்கும் சொந்தபந்தங்கள் நிறைய இருக்கும் தானே? வேணா ஒண்ணு பண்ணுவோம் இதுக்கு அடுத்தடுத்து நல்ல ஒரு முகூர்த்தங்களே இல்லையா? அந்த முகூர்த்தத்தில் பார்த்துக்கலாம். கொஞ்சம் நாமும் இறங்கி போகணும் இல்லையா கா..” என்று பேசிப் பேசி கல்யாணத்தை அடுத்த பத்து நாட்களுக்கு வரும் முகூர்த்தத்தில் வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.
ரஞ்சனிக்கு முடிவு செய்த மாப்பிள்ளை செந்தில்நாதன் குடும்பத்திற்கும் அவர்கள் கூற அவர்கள் குடும்பத்திலிருந்து பெண் கிடைப்பதே எங்களுக்கு வரம் என்று அந்த தேதிக்கு அவர்களும் சம்மதித்து விட்டார்கள்.
அதன்பின் பத்திரிகையை அடிக்க பெரியவர்கள் மட்டும் அமர்ந்து யார் யார் பேர் சேர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது மெய்யறிவு அக்காவின் அருகே அமர்ந்து “அக்கா…” என்று எதோ சொல்ல வருவதும் தயங்குவதுமாக இருக்க..
“என்ன தம்பி.. சொல்லுபா!!” என்று ஊக்கினார்.
“அது வந்து.. அந்த விஜ..” என்று அவர் ஆரம்பிக்கும் முன்னமே “மாமா!!!” என்று கர்ஜித்தார் குருபரன்.
பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்ட மெய்யறிவனும் மச்சானிடம் ஏதோ பேசப் போக.. அவரும் கண்களாலேயே தன் தங்கை வேதவள்ளியை காட்ட.. இவர்கள் பேச வந்த விஷயத்தை புரிந்து கொண்ட வேதவள்ளியோ நடுக்கத்தோடு அமர்ந்திருந்தார்.
அவர் அருகே சென்று கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்ட மெய்யறிவு “வள்ளிமா.. நிஜமா நான் ஞாபகப்படுத்த சொல்ல வரல.. ஆனா முறையினு ஒன்னு இருக்கு இல்லையா?” என்று ஏதேதோ பேசி சமாதானப்படுத்த முயல.. “வேணாம் மாமா!!” என்று உதடுகள் துடிக்க கண்கள் கலங்க கூறிய வேதவள்ளி அடுத்த நிமிடம் உள்ளே எழுந்து சென்றுவிட்டார்.
குருபரன் குற்றம்சாட்டும் பார்வையோடு தன் மாமனை பார்க்க.. மச்சானை பார்த்தவர் “நீங்களே எழுதுங்க.. நான் வள்ளியை பார்த்துட்டு வரேன்!” என்று அவரை சமாதானப்படுத்த உள்ளே சென்றுவிட்டார் மெய்யறிவு.
மோகனாவும் ராகவனும் அவர்கள் சென்ற திசையை பார்த்தவாறு அமர்ந்திருக்க.. தொண்டையைக் கணைத்து குருபரன் “அங்க பார்த்தது போதும்! இங்கே பத்திரிக்கைக்கு கவனிங்க!!” என்று எந்தெந்த சொந்தங்களின் பெயர்களை எழுதலாம் என்று ஒருவாறு லிஸ்ட் தயாரித்து பத்திரிக்கைக்கு நல்ல நேரத்தில் அடிக்க கொடுத்தார்கள்.
மறுநாளே பத்திரிக்கை முறையாக அடித்து வந்திருக்க.. மறுபடியும் குடும்பத்தோடு குலதெய்வ கோயிலுக்கு பத்திரிக்கை வைக்க சென்று வந்தனர் செந்தூரன் குடும்பத்தார். இம்முறை ரஞ்சனியின் மாப்பிள்ளை செந்தில்நாதன் குடும்பமும் வந்திருந்தது.
ரஞ்சனிக்கு செந்தில்நாதனின் ஆசை கொண்ட பார்வையை பார்க்க பிடிக்கவே இல்லை. “அதுவும் பேர பாரு செந்தில்நாதனு.. சரியான பட்டிக்காட்டான் பேரு!! பேரு வச்சிருக்காங்க.. இதுல இவங்களுக்கு இவ்வளவு சொத்து இருந்து என்ன பிரயோஜனம்?” என்று அவள் கண்களுக்கு நிமிலனைத் தவிர வேறு யாரையும் தெரியவே இல்லை.. தன் இணையாக!!
முதல் இரண்டு நாட்கள் ஏதோ மௌன நிலையிலேயே இருந்தார் விஜயேந்திரன். ஆரனும் தந்தையிடம் அதிக பேச்சு கொடுக்காமல் அவர் போக்கில் விட்டாலும் அவரின் கண் பார்வையிலேயே அமர்ந்துதான் தன் வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தாரன்.
கோபித்து சென்ற மயூரியை சரி சமாதானம் நினைவு எல்லாம் அவன் இல்லை. அதிலும் தந்தையின் முகமே சரியில்லையென அதைக் கண்டவன், அடுத்த இரண்டு நாட்களும் ஹிமேஷ் பென்னியிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு வீட்டிலிருந்து தந்தையைக் கவனித்துக் கொண்டே தன் வேலையை பார்த்தாள்.
இவனை தொடர்பு கொள்ள முயன்று தோற்று இருந்த நிரஞ்சன் சபரி வழியாக கேட்டும் இவனைப் பார்க்க முடியவில்லை. பின்ன பென்னி ஹிமேஷ் என்று முட்டி மோதிக்கொண்டு இருந்தாலும் “யாரையும் இரண்டு நாட்களுக்கு அனுமதிக்காதே!!” என்று கூறிய ஆரனின் வார்த்தை வேதவாக்காக எடுத்துக் கொள்ளப்பட.. நிரஞ்சன் தவித்து போனான். வேறுவழியின்றி பென்னியிடம் அன்றுமாலை சண்டை போட அந்த விஷயம் ஆரனின் காதுக்கு எட்ட நிரஞ்சனை வீட்டிற்கு வரவழைத்தான்.
தந்தை அங்கே பால்கனியில் அமர்ந்து இருக்க அவரை பார்த்துக் கொண்டே வேலை செய்தவன், நான் நிரஞ்சனை அழைத்துக்கொண்டு உதவியாளன் வர தந்தையிடம் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஹாலுக்கு சென்று நிரஞ்சனை வரவேற்றான்.
“சொல்லுங்க நிரஞ்சன் கூல் ஆர் ஹாட்?” என்று கேட்டு சிரித்தவனை பார்த்த நிரஞ்சனுக்கு அவ்வளவு கோபம்!!
“உங்களால நான் ஒரு வாரமா தலையை பிய்ச்சு கிட்டு சுத்திகிட்டு இருக்கேன் தெரியுமா ஆரன்? ஆனா நீங்க என்னமோ இவ்வளவு கேஷுவலா இருக்கீங்க.. அதுவும் இந்த ரெண்டு நாளா உங்களை பார்க்கறதுக்குத்தான் எவ்வளவு பாடு பட்டேனு எனக்குதான் தெரியும். எனக்கு இருக்குற டென்ஷன் கூட உங்களுக்கு இல்லையா? அங்க பத்திரிக்கை அடிச்சு சொந்தக்காரர்கள் எல்லாம் கொடுக்கிறது.. பட்டு எடுக்கிறதுனு திருமண வேலை ஜரூராக போது.. நீங்க என்னமோ ஜோக் சீனு பார்ப்பது போல என்னை பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கீங்க?” என்று புலம்பிக் கொண்டிருந்தாள் நிரஞ்சன்.
“ஸ்ஸப்பா.. கடல் பக்கத்துல இருந்தாலும் உங்க ஊரு கொஞ்சம் ஹாட்டா தான் இருக்கு! அதுக்கு கொஞ்சமும் குறையாமல் நீங்கள் இவ்ளோ ஹார்டா வந்து இருக்கீங்க?” என்று வேலையாட்களுக்கு பணித்து “சாருக்கு ஜில்லுனு ஜிகர்தண்டா கொண்டு வா!!” என்றான்.
“என்னது ஜில்லனு ஜிகர்தண்டாவா? நான் என்ன பேசினேன் நீங்க என்ன சொல்றீங்க?” என்று நிரஞ்சன் அலுத்துக் கொள்ள..
“நிஜமாவே ஜிகர்தண்டா செம டேஸ்ட் நிரஞ்ஜன்!! இதுக்காக என்னோட குக்குக்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் கொடுத்து இருக்கேன். அவ்வளவு சூப்பரா செய்வார்! நானும் தமிழ்நாட்டுல நிறைய ஐட்டம்ஸ் சாப்பிட்டு இருக்கேன். ஆனா.. இதோட டேஸ்ட் வேற லெவல் தான்!! என்ஜாய் பண்ணுவோம்!!” என இரண்டு பெரிய கோப்பைகளில் சிலுசிலுவென்று வந்திருக்க அதை பார்த்ததும் நிரஞ்சனா ஆசையோடு எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.
அவனின் மனநிலையை மாற்றிய பின்பு “இப்ப சொல்லுங்க நிரஞ்சன் ரெண்டு வாரமா என்னை ரொம்ப தேடி இருக்கீங்க போல?” என்று சிரித்தான் ஆரன்.
“தெரிஞ்சுகிட்டு தெரியாத மாதிரி நடிக்கிறதுல உங்களை மிஞ்ச ஆளே இல்ல ஆரன். இதுவரைக்கும் நானும் நிறைய ப்ளான் போட்டு பார்த்தேன்.. எதுவும் வொர்க் அவுட் ஆகுற மாதிரி தெரியல.. அதான் உங்ககிட்ட நேராக வந்து கேட்கலாம்னு பார்த்தா என்னால உங்களை பார்க்கவே முடியல.. நான்தான் மயூரியை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சேன். அவளுக்கு உங்க கூட கல்யாணம் நடந்தா..
நிமிலன் ஆராதனா கல்யாணம் நடக்காது. எங்க அம்மா ரஞ்சனியை நிமிலனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போட்டி போடுவாங்க.. யார் வாழ்க்கையுமே நிம்மதியா சந்தோசமா இருக்காது ஆரன்!! ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.. ஏதாவது சீக்கிரம் நடவடிக்கை எடுங்க.. அதை சொல்லிட்டு போகத்தான் வந்தேன்” என்று அவன் எழுந்து கொண்டான்.
“நான் இருந்த டென்ஷனுக்கு இந்த குளுகுளு ஜிகர்தண்டா சூப்பர்!!” என்று கூற சிரித்தபடியே அவனை வழியனுப்பி வைத்தாலும் மனதில் பல கணக்குகள் ஆரனுக்கு..
இரண்டு நாட்கள் தன் வேதா நினைவிலேயே சுற்றி சுழன்று கொண்டிருந்த விஜயேந்திரன் ஒருவழியாக மகனை பார்த்தார். அதற்குத்தானே காத்துக் கொண்டிருந்தான். “ஒரு ரைட் போயிட்டு வரலாமா அப்பா?” என்று அவரை அழைத்துக் கொண்டு சென்றான்.
கடற்கரை ஓரம் அழைத்துக் கொண்டு வந்தவன் அந்த ஈரக்காற்றில் மன வெம்மைகள் எல்லாம் பறந்து போக “இப்போ கேளுங்க இல்ல என்கிட்ட என்ன சொல்லணும்.. சொல்லுங்க? இப்படி அரக்கப்பரக்க வந்து இருக்கீங்களே!!” என்று தந்தையை அறிந்தவனாக தனயன் கேட்க..
எப்பொழுதும் போல மகனின் இந்த அறிவில் மெச்சுதலான புன்னகையோடு “நீ சொல்லு ஆரன்? என்கிட்ட நீ சொல்லி விட்டு வந்தது ஒன்னு.. இப்போ இங்கே நடந்து கொண்டிருக்கிறது ஒன்னு! அப்புறம் அந்த பொண்ணு அப்படியே வேதா..” என்று அவர் ஆரம்பிக்க அவரது கையைப் பிடித்து “அவ தான் உங்க வருங்கால மருமகள் பேரு மயூரி இந்திராக்ஷி. செந்தூர குடும்பத்தின் பெண் வாரிசு அதாவது குருபரனின் மகள்!!” என்று கூற..
“வேண்டாம்!! இது வேண்டாம்!! திரும்பவும் சரித்திரம் திரும்புது எனக்கு பயமாயிருக்கு. என் வாழ்க்கை எப்படி போனாலும் என் மகனோட வாழ்க்கை எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் ஆரன்”
“இதுக்கு தான் நீ இங்க வரவே வேண்டாம்னு சொன்னேன். ஆனால் ஏதோ சொல்லி ஏதோ செய்து என்னை சரிக்கட்டி இப்ப எங்க வந்து நிற்கிற பார்த்தியா நீ? நான் சொல்றதை கேளு!! மும்பைக்கே போய் விடுவோம்” என்று எங்கே மகனது வாழ்க்கையும் தன் வாழ்க்கை போல சூனியம் ஆகிவிடுமோ என்று தந்தையாக பயம் கொண்டு துடித்தார் விஜயேந்திரன்.
“அப்பா.. ப்ளீஸ்!! ப்ளீஸ்!! கன்ட்ரோல் யுவர் செல்ஃப்!!” என்று அவரது கைகளை தன் கைகளால் பொதித்து தன் இதயத்தைத் அருகில் வைத்தவன் “அவங்களை அப்படியே சும்மா விட்டுட்டு போக சொல்லுறிங்களா அப்பா? கண்டிப்பா முடியாது!! விஜயேந்திரனுக்கு அவங்க செய்ததற்கு திருப்பி தர வந்திருக்கிறான் இந்த ஆரன்!! அரசன் அன்று கொல்லுவான்! தெய்வம் நின்று கொல்லும்.. ஆனால் இந்த வழக்கில் ஆரன் ஆற அமர அவர்களை கொல்ல போறேன் பா.. நீங்க அனுபவிச்சு இந்த வனவாசத்திற்கு காரணமான எல்லோரையும் சூரசம்ஹாரம் பண்ண வந்திருக்கேன். உங்க ஒவ்வொரு கண்ணீர் துளிக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இப்போ அவங்களுக்கு அதனால பொறுத்திருந்து பாருங்க.. ஆரனின் ஆட்டத்தை!!” என்று விழிகள் ரெண்டும் சிவக்க.. கழுத்து நரம்புகள் எல்லாம் புடைக்க.. வீர வசனம் பேசவில்லை ஆரன். நிறுத்தி நிதானமாக அழுத்தமாக ஒவ்வொரு வார்த்தையையும் அவன் பேசிய விதமே தன் மகன் அனைத்தையும் திறம்பட செய்து முடிப்பான் என்ற நம்பிக்கையை விஜயேந்திரனுக்கு அளித்தது.
தன்னால் முடியாததை.. காதலால் கோழையாய் போன என்னால் முடியாததை.. என் பையன் செய்து முடிப்பான் என்ற எண்ணமே மனதுக்குள் அவருக்கு ஒரு புது தெம்பை அளித்தாலும், ஆனால் இதனால் பாதிக்கப்படப்போவது ஒரு பெண் அல்லவா என்று தயக்கத்துடன் மகனை பார்த்து “ஆரன்… மயூரி..??” என்று அவர் இழுக்க..
“அவளுக்கு என்ன? சந்தோஷமா நம்ம வீட்டில் உங்களுக்கு மருமகளா.. எனக்கு பொண்டாட்டியா இருப்பா!! அதுல எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்!” என்றான் ஆரன்.
“சந்தோஷம் சரி? ஆனால் மன நிம்மதியோடு இருப்பாளா?” என்று மகனை அறிந்தவனாக விஜேந்திரன் கேள்வி கேட்க.. இக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தந்தையின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டான் ஆரன்!!
யாவருக்கும் நிற்காமல் நாட்கள் கடந்து ஓட அதன்பின் மயூரியையும் இவன் தொந்தரவு செய்யவில்லை. வரதராஜனிடம் பத்து நாட்கள் மும்பை செல்வதாகவும் அதனால் மயூரி அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று கூறிவிட அதையும் வரதராஜன் மயூரியிடம் கூற அவளுக்கும் மனது விட்டே போனது.
நிரஞ்சன் அவ்வளவு தூரம் சொல்லி இருக்க அதுவும் ஆரனை சந்தித்து வந்ததையும் சொல்லி இருக்க.. எப்படி திருமணத்திற்கு நிறுத்த ஏதாவது செய்வான் என்று இவள் எதிர்பார்த்திருக்க.. ஆனால் அவனும் பத்து நாட்கள் மும்பைக்கு சென்று விட்டான் என்றால் அதற்குள் திருமணமே முடிந்து விடுமே? என்ற நினைக்க முனுக்கு என்று கண்களில் தண்ணீர் வந்தது.
“இது வேற.. இப்ப எல்லாம் அடிக்கடி இப்படி வந்து தொலைக்கிறது!!” என்று வெறுப்புடன் கண்ணீரைத் துடைத்து இரவெல்லாம் உறக்கமில்லாமல் தவித்தாள் மயூரி.
அவ்வப்போது ஆராதனாவும் மயூரியிடம் வந்து “அண்ணா எதுவும் சொன்னாங்களா? என்ன முடிவு பண்ணி இருக்கீங்க? எனக்கு தாண்டி பக் பக்குனு இருக்கு.. மனசே சரியில்ல டி!” என்று அவள் நிலைமையை புரியாமல் ஆரா வேறு புலம்பி செல்லுவாள்.
ஒவ்வொரு தடவையும் நான் தான் அவன் பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறேன். அவன் என்னை எவ்வளவு அவமானப்படுத்தும் போதும் என் மனது அவன் பின்னே தான் செல்கிறது. அவனிடம் சொன்னது போலதான் திருமணத்தன்று அவன் வரவில்லை என்றால்.. ஆராதனா நிமிலன் திருமணத்தை முதலில் முடித்துவிட்டு திருமணம் பிடிக்கவில்லை என்று எழுந்து கொள்ள வேண்டியதுதான்!! கடைசிவரை மயூரி இந்திராக்ஷி குருபரன் ஆகவே இருந்து கொள்கிறேன்!! இவன் ஒன்னும் எனக்கு வாழ்க்கை தர வேண்டாம் என்று அவள் கடுகடுப்புடன் இருந்தாள் மயூரி.
“காதல் என்பது இரு கை தட்டும் ஓசை அல்லவா? ஒரு கை மட்டுமே தட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?” என்று கேட்டுக்கொண்டே அவளது மனசாட்சி முன்னே வந்தது.
என்ன என்று புரியாமல் அவள் பார்க்க..
“ஆமாம் காதலுக்காக அவன்தான் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும்.. கல்யாணத்திற்கு அவன்தான் அதிரடியாக ஏதும் செய்ய வேண்டும்.. என்று நீ எதிர்பார்க்கிற அல்லவா? ஆனால் உன் காதலுக்காக நீ என்ன செய்தாய்? இதுவரை அவனிடம் முத்தங்களைப் பெற்றுக் கொண்டதைத் தவிர..” என்று இகழ்ச்சியாக மனசாட்சி கேட்க அவளுக்கு சுருக்கென்று நெருஞ்சி முள்ளாய் தைத்தது அந்த வார்த்தைகள்.
‘உண்மைதானே இதுவரை நான் என்ன செய்திருக்கிறேன் என் காதலுக்கு? அவன் அத்துமீறும் பொழுது கோபப்பட்டதைத்தவிர..
யாரிடமும் என் மனதை திறந்து என் காதலை சொல்லவில்லை இப்போது என்ன செய்வது?’ என்று குழம்பிக் கொண்டிருந்தாள்.
மறுநாள் ஆராதனாவோடு மேக்கப் சிட்டிங்க்காக சென்றவள் ஆரனின் மடியிலேயே சிட்டிங் ஆகி இருந்தாள்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Waiting for next episode sis please post soon
Super sis 💞