யாயாவும் 2
“வாட் இஸ் அஸ்வத்??” என்ற ஜிஷ்ணுவின் கோப கத்தல் அவனின் ஏசி அறை தாண்டியும் வெளியில் கேட்டது.
ஒரு நிமிடம் வேலை செய்துக் கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் அவனின் மூடிய கதவை திரும்பிப் பார்த்துவிட்டு, பின் ஒரு தோள் குலுக்களுடன் வழக்கமாக நடப்பது தான் என்பது போல தங்கள் வேலையை தொடர்ந்தனர்.
ஜிஷ்ணுவின் கோபத்தின் வடிகால் அஸ்வத் தான். எந்த நேரத்தில் எந்த மொழியில் திட்டுகிறான் என்றெல்லாம் தெரியாது..!
கோபம் மிகும் நேரங்களில் அவனுக்கு தெரிந்த.. அவன் வாயில் வந்த மொழிகளில் எல்லாம் திட்டி தீர்த்து அவனை ஒரு வழியாக்கி விடுவான்.
அஸ்வத்தும் “அவுனு அவுனு அண்ணையா.. அடட்ந்த நா தப்பு (எல்லாம் என் தப்பு தான்)” என்று தன்னை ஒப்புக்கொடுத்து நின்று இருப்பான்.
அதே நேரம் கோபம் குறைந்ததும் ஜிஷ்ணு அவனிடம் மன்னிப்பு கேட்பானா என்று எதிர்பார்க்கெல்லாம் கூடாது..!
“அப்படித்தான்டா திட்டுவேன்..! அப்படித்தான் திட்டுவேன்..!” என்பதாய் தான் கோபம் குறைந்தாலும் இருப்பான் ஜிஷ்ணு.
ஆனால்.. இதெல்லாம் அஸ்வத்தும் எதிர்பார்க்க மாட்டான் ஜிஷ்ணுவிடம்.
ஆனால் இப்பொழுது அவன் கத்தி கொண்டு இருப்பதற்கான காரணம்..
அவனது ப்ராண்ட்டான ஆராவின் புதிய தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறான் ஜிஷ்ணு இந்த புது வருடம்.
அதற்காக புதிய வலைத்தளம் ஒன்றை உருவாக்கி அதில் அதற்கான விளம்பரங்களை செய்ய சொல்லி இருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த அளவு அதில் எந்தவித புதுமையும் இல்லை..! மக்களை ஒரு நிமிடமாயினும் பிடித்து நிறுத்தும் அளவிற்கு எந்த அலங்கார விஷயமும் இல்லை..!
அவனின் மாடல்களிலும் அவன் எதிர்பார்ப்பது அவர்களது அழகை விட அதனை எடுத்துக்காட்டும் அந்த அலங்காரம் தான்.
அவனோ மக்களை அழகுப்படுத்தும் அலங்காரம் மன்னன்..! அவனின் ஒவ்வொரு விஷயத்திலும் அந்த அலங்காரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இயல்பு தானே??
அஸ்வத் செய்து வந்திருந்த அந்த வலைத்தளம் வழக்கமாக ஒன்றாக இருந்ததே தவிர.. எவ்வித புதுமையும் இல்லை.
இத்தனைக்கும் அத்தனை ஆயிரங்கள் அதற்கு கொட்டி கொடுத்திருக்க.. அவன் எதிர்பார்ப்பு பொய்தற்காக தான் இந்த கத்தல்..!
இந்தியாவின் டாப் வெப் டிசைனர் வைத்து தான் அஸ்வத் இதனை உருவாக்கி இருந்தான். ஆனால் ஜிஷ்ணுவின் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. அவன் ஏதோ ஒரு புதுமையை எதிர்பார்க்கிறான் அதனை தெளிவாக.. அவன் மனதில் உள்ளதை கூறவும் முடியவில்லை.
அவன் கூறியதை வைத்து அந்த வெப் டிசைனர் இதனை தயார் செய்திருந்தனர். அவன் மனதில் உள்ள மாதிரி அவன் முன்னே உருபெற்று இருப்பதுடன் 80% கூட ஒத்துப் போயிருந்தது.
ஆனாலும் ஜிஷ்ணுவுக்கு திருப்திகரமாக இல்லை.
“சம்திங்.. சம்திங்.. ஏதோ மிஸ்ஸிங்..!” என்பதையே திரும்பத் திரும்ப சொல்லி.. இதுவரை மூன்று முறை மாற்றி விட்டான். நான்காவது முறை அவனின் ஒப்புதலுக்காக வந்தவற்றைப் பார்த்து கத்தியே விட்டான் ஜிஷ்ணு.
“எத்தனை தடவைடா உனக்கு சொல்றது? எல்லோரும் மாதிரி நம்மளும் இருந்தா நமக்கு என்னடா அதுல வித்தியாசம்..! லட்சங்களை கொட்டி இந்த புது ப்ராடக்ட்ட நாம மார்க்கெட்ல லான்ச் பண்றோம். அதுக்கு தகுந்த மாதிரியான அட்வர்டைஸ்மென்ட் ஒரு டிசைன் இருக்கணுமா இல்லையா? ஏதோ சப்பையா இருக்கு.. ஒரு சாதாரண பிரெஷ் எம்பிளாய் கிட்ட கொடுத்தா கூட இதைவிட நல்லா பக்காவா செய்து தருவான் போல.. இவன்கிட்ட ஆயிரம் ஆயிரமா கொட்டிக் கொடுத்தும் ஒன்னும் உருப்படி இல்லை. ஐ ஆம் நாட் சாட்டிஸ்பைடு..!” என்று கத்திவிட்டு வெளியில் சென்று விட்டான் ஜிஷ்ணு.
வெளியில் என்றால் அவனது ஃபார்முக்கு. அவனது அலுவலகம் இருப்பதோ பெங்களூரின் மிக முக்கிய இடத்தில்.. அங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அவனது பார்ம் அனைத்தும் இயற்கையான மூலிகைகளும் தாவரங்களும் வளரும் அழகிய பெரும் பண்ணை.
அவனது கம்பெனி ஆராவின் தயாரிப்பு முழுக்க முழுக்க மூலிகைகள் மற்றும் தாவரத்திலிருந்து எடுக்கும் எண்ணெய்கள் வைத்தே இருக்கும்.
அதற்கு ஏற்ப அவனது தயாரிப்புகளின் விலையும் சற்று அதிகமாக தான் இருக்கும்.
“உங்களை விட மத்த கம்பெனி ப்ராடக்ட்ஸ் கம்பியான விலைக்கு கொடுக்கிறாங்க? நீங்கள் ஏன் அது போல உங்களது ப்ராடக்ட்டையும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் அளவு விலை குறைக்க கூடாது?” என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால்..
ஒரு தோள் குலுக்கலோடு “ஒவ்வொரு தூய்மையான பொருளுக்கும் அதற்கான நியாயமான விலை இருக்கு. அதை கூட கொடுக்க முடியலன்னா போலிகள் உடனே நீங்கள் வாழ வேண்டியதுதான்..! இந்தியாவில் எங்கும் போலிகள் மயம்..!” என்று கூறி அழகான வசீகர சிரிப்போடு கடந்து விடுவான்.
யாரிடமும் சவாலாக பேசுவதோ.. கோபமாக கத்துவதோ.. திமிரான உடல்மொழியோ.. அவன் காட்டுவதில்லை. அவன் குடும்பத்தை தவிர..!
அதனால் ஜிஷ்ணு என்றால் இளைஞர்களின் ஐகான் ஆகவே திகழ்கிறான்..! உலா வருகிறான்..!
கூடவே அவனது அணுகுமுறை அனைவரிடமும் நிதானமாகவும் அதேசமயம் அழுத்தமாகவும் தன்னுடைய பதிலை அவன் சொல்லும் விதம் அவனது எதிரியை கூட கவரும்.
அதனால் தொழில் துறையில் இவனுக்கு போட்டிகள் இருக்குமே தவிர இவனிடம் வன்மம் காட்டும் போட்டியாளர்கள் குறைவு..!
நமது பலவீனங்கள் தான் எதிரிகளின் பலம் என்பதை நன்கு புரிந்தவன். தனது பலவீனம் எது என்று யாருக்கும் காட்டி விடமாட்டான்.
“பெண்ணுக்கும் பொண்ணுக்கும் மயங்காதவன் இப்பூவுலகில் கிடையாது” என்று பல வழிகளில் பொன்னையும் பொருளையும் ஏன் பெண்களையும் கூட அனுப்பி வைத்து, இவனை மடக்க பார்த்த அவனது எதிரிகளிடம் இருந்து லாவகமாக தப்பித்து.. இதோ இந்த அழகியல் துறையில் சில ஆண்டுகளாக முன்னணியில் நிற்கிறான். இல்லையில்லை அழகியல் துறையை ஆளுகிறான் ஜிஷ்ணு உபேந்திரா பசவராஜூ..!
அந்தப் பண்ணையின் பெரிய கதவு இவனது காருக்காக திறந்து வழி விட.. காரை நிறுத்தி சாவியை செக்யூரிட்டியிடம் தூக்கிப் போட்டவன், மெல்ல அந்த பண்ணை ஊடே நடந்து சென்றான்.
அங்கிருக்கும் ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு தாவரங்களுமே அவளது எண்ணம்.. அவளது ஆசை.. அவளது எதிர்கால திட்டமிடல்.. இன்று அனைத்தையும் அவன் சாதித்து இருக்கிறான் அவளின்றி..!
அவளை நினைத்ததும் கோபம் பெருக.. போட்டிருந்து கோட்டை கழட்டி தூர போட்டவன் முட்டி வரை பேண்டை தூக்கிவிட்டு.. கை சட்டையையும் மடக்கி சுருட்டி விட்டு அங்கே வேலை செய்யும் தொழிலாளர்களோடு இவனும் களப்பணியில் இறங்கி விட்டான்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இடைவிடாத வேலை அவர்களுடன். அவ்வப்போது இவனும் இப்படி வேலை செய்வதால் தொழிலாளர்களும் அதை வித்தியாசமாக கருதவில்லை.
அதே நேரம் ஓய்வுக்காக கூட செல்லாமல் இடைவிடாது அவன் வேலை செய்ய.. “எதனால் இப்படி நாம் முதலாளி கஷ்டப்படுகிறார்?” என்று அவனை நெருங்க பயந்து அவ்வப்போது அவனை திரும்பி பார்த்தவாறு தங்கள் வேலையை தொடர்ந்தனர் அங்கிருந்த ஊழியர்கள்.
வேர்க்க விறுவிறுக்க அவளது நினைவுகளையும்.. அவள் மீதான கோபத்தையும்.. அவளை மறக்க நினைத்து முடியாத தன் நிலையையும்.. எண்ணி முழு மூச்சாக தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொண்டான்.
தன்னை ஏமாற்றி சென்றவள் இப்பொழுது எங்கு இருக்கிறாள் என்று கூட தெரியாது. ஆனாலும் அவ்வப்போது வந்து செல்லும் அவள் நினைவின் தாக்கம் மறையும் வரை இவ்வாறு கடின வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொள்வான்.
ஜிஷ்ணு எங்க சென்றிருப்பான் என்று யூகம் இருந்தது அஸ்வத்திற்கு. அவனின் ஆரம்ப கட்டத்தில் இருந்து அவன் கூடவே இருப்பவனுக்கு அவனைப் பற்றி ஏ டு இசட் தெரியவில்லை என்றாலும் ஏ டு ஹெச் வரைக்கும் தெரியும்.
அதனால் அவனைத் தேடிக் கொண்டு இங்கு வந்தவன் அமைதியாக அந்தப் பண்ணையின் ஓய்வறையில் அமர்ந்திருந்தான்.
வேண்டாத நினைவுகள் எல்லாம் வேர்வைத் துளிகளாக கசிந்துருக அவற்றை குளிர்ந்த நீரினால் சுத்தமாக வழித்து எடுத்து புத்துணர்வோடு குளியல் அறையில் இருந்து வெளிவந்தவன் கண்டது என்னமோ பவ்யமாக அமைந்திருக்கும் அஸ்வத்தை தான்.
சற்றென்று ஒரு குறும்புன்னகை ஜிஷ்ணுவின் முகத்தில். அவ்வளவு திட்டியும் தன் மீது அவனுக்கு கோபம் வராது என்று தெரியும். ஆனாலும் இந்த பவ்யமான முகத்தை வைத்துக்கொண்டு தன்னை சமாதானப்படுத்த வந்திருப்பவனை கண்டதும் அவனுக்கு சிரிப்பு பீறிட்டது.
அவ்வளவுதான் ஜிஷ்ணு..! அவனுக்கு பிடித்தவர்கள் இடத்தில் அதிகமாக கோபத்தையோ வீம்பையோ பிடித்து வைத்திருக்க மாட்டான். ஆனால் இதே பிடிக்காதவர் இடத்தில் அனைத்தையும் பிடித்தே வைத்திருப்பான்.
ஜிஷ்ணு உடைமாற்றுவதை பார்த்துக் கொண்டிருந்தவனை கண்டு நக்கலோடு “ரே அஸ்வத்.. அட்டனு நுவ்வேனா? (அவனா நீ)” என்று ஜிஷ்ணு சிரிக்க..
“ஐயையோ அண்ணையா..!” என்று அலறி இரு கைகளாலும் வாயை பொத்திக்கொண்டவன்,
“அண்ணையா.. 10 பொண்ணு கிட்ட போயிட்டு வர ப்ளே பாய்னு வேணா என்னை சொல்லுங்க.. சந்தோஷமா ஒத்துக்குறேன். ஆனா ஒத்த ஆம்பளையும் நிமிர்ந்து பார்க்காத உத்தமன் நான்.. அவன் ஆணழகனாக இருந்தால் கூட.. கவர்ச்சியில் கண்ணனாய் இருந்தால் கூட.. ம்ஹீம் திரும்பி கூட பார்க்க மாட்டான் இந்த அஸ்வத்..! கண்ணியத்திற்கு மறு பெயர் அஸ்வத்..!” என்று டயலாக் பேசுபவனை கண்டு வெடித்து சிரித்தான் ஜிஷ்ணு.
“பத்து பொண்ணா? கணக்கு ரொம்ப கம்மியா இருக்கே டா கண்ணா?” என்று ஜிஷ்ணு சட்டை பட்டன்களை போட்டுக் கொண்டே கேட்க..
“அதெல்லாம் காளையர்களின் காதல் வாழ்க்கையில் சகஜம் அண்ணைய்யா..” என்றான் காலரை தூக்கி விட்டுக்கொண்டு..!
“இந்தக் கருமத்துக்கு பேரு காதலா ரா?” என்று உதட்டை துப்புவது போல அவனைப் பார்த்து செய்கை செய்தான் ஜிஷ்ணு.
“நான் என்ன அண்ணையா பண்ணுவது? ஒன்னு கூட செட் ஆக மாட்டேங்குது..! நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகத்தான் போகிறது” என்று முகத்தை சோகமாக வைத்து கூறினான் அஸ்வத்.
“பின்ன அந்தக் கருமம் பிடித்த காதல ஏன் டா பண்ணி தொலைற? வருஷத்துக்கு இல்லை இல்லை ஆறு மாசத்துக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட்னு கமிட் ஆக வேண்டியது. அப்புறம் அவ கழட்டிவிட்டான்னு தண்ணி அடிச்சு ரோடு ரோடா ரோயமியோ போல புலம்ப வேண்டியது. இதெல்லாம் ஒரு பொழப்பாடா?” என்று தலைவாரிக் கொண்டு ஜிஷ்ணு கேட்க..
“அதெல்லாம் சொன்னா உங்களுக்கு புரியாது. உங்களுக்கு புரியிற மாதிரி சொன்னாலும் என்னை தான் திட்டுவீங்க..! அண்ணையா.. இதெல்லாம் காதல் செய்யும் மாயம்..!” என்று சிரித்தான்.
“காதல் மாயம்னு சொன்ன பாரு அது மட்டும் தான் உண்மை..! நம்மை மாயம் செய்து நம் சந்தோஷம்.. நல்வாழ்வு.. நிம்மதி. ஏன் நம் செல்வம் அனைத்தையும் பறித்துக் கொண்டு போய்விடும். காதலிக்கும் பெண்ணும் மாயாவி.. அப்படிப்பட்ட மாயாவி என்னைக்கும் நம்பாதே ரா..!” என்று நடந்து கொண்டே அஸ்வத்துக்கு அறிவுரை மழை பொழிந்தவன் அறியவில்லை அந்த காதல் அவனுள்ளும் மாயம் செய்யும் என்று..!
“இங்க பாரு அஸ்வத் நாளைக்கு ஒரு அட்வர்டைஸ்மென்ட் கொடு.. இந்த வெப்சைட்டை நமக்கு சூப்பரா கிரியேட் பண்ணி தரே ஒரு ஃபீரிலான்ச்சர ஏற்பாடு பண்ணு. இன்டர்வியூ வச்சு வேணாலும் அவங்கள செலக்ட் பண்ணலாம். ஆனா எனக்கு பெஸ்ட்டா வேணும்..! நல்லா இருந்துச்சுன்னா அடுத்தடுத்து நம்மளோட ப்ராடக்டுக்கும் அவங்களே டிசைன் பண்ணி தரலாம். அதுக்கப்புறம் நம்ம ஸ்டாப் ஓட அமினிடிஸ் எல்லாம் உனக்கு தெரியும் தானே? அதையும் சேர்த்தே சொல்லு.. நோ இஷ்ஷீஸ்..!” என்றான்.
அப்பொழுதே சமூக ஊடகங்கள் அனைத்திலும் அந்த விளம்பரத்தை பரவச் செய்தான் அஸ்வத்.
அன்று இரவு நாளை மறுநாள் நடக்கவிருக்கும் அந்த நேர்முக தேர்வுக்கான வெப்சைட் தனது ஒற்றை படுக்கையறை கொண்ட வீட்டில் அமர்ந்து மிக நுட்பமாக உருவாக்கிக் கொண்டிருந்தாள் ஆரணி வெண்பா.
அவள் தயாரித்த க்ஷவற்றையெல்லாம் ஒரு முறை நன்கு சரி பார்த்துக் கொண்டு அந்த நேர்முகத் தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு சென்றாள் ஆரணி.
“ஃப்ரீலான்ஸர்களுக்கு இது ஒரு பிரபலமான தேர்வாகும் மற்றும் தேவைப்படும் துறை..! உங்க திறமையை நீங்க காட்டுனிங்கனா உங்களுக்கான வாய்ப்புகள் வந்து குவியும்..!
எங்க கம்பெனி “ஆரா” அதனுடைய தயாரிப்புகளை இணையதளம் உள்ள எந்த இடமும் அதன் வலைப்பக்கங்கள் சிறந்த தேடல் முடிவுகளில் காட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறது. இது எங்களின் வணிகம் அப்புறம் வருமான ஓட்டத்தை உருவாக்கும்..” என்று ஆர்ப்பாட்டமாக தனது உரையை ஆற்றினான் அஸ்வத், தன் முன்னே குழுமி இருக்கும் அந்த 50 ஃப்ரீலான்ஸர்கள் முன்னால்..
“வெற்றிகரமான எஸ்சிஓ ஃப்ரீலான்ஸராக மாறுவதற்கும் வாடிக்கையாளர்களின் நிலையான ஸ்ட்ரீமைப் பெறுவதற்கும் நீங்க.. நீங்கள் செய்தவற்றை ஒவ்வொருத்தராக எங்களுக்கு வந்து காட்டலாம். இதில் தேர்வாகிய முதல் 20 பேர் அடுத்தடுத்த நேர்முகத் தேர்வுக்கு சென்று இறுதியாக ஒருவரை தேர்ந்தெடுப்போம்” என்றவன் அடுத்தடுத்து அங்குள்ள 50 பேர்களின் வடிவமைப்புகளை எல்லாம் பார்த்து அதில் 20 நபர்களை தேர்ந்தெடுத்தான்.
அதில் ஆரணி வெண்பாவும் ஒருத்தி..!
அடுத்தடுத்த நேர்முகத் தேர்வில் சிறப்பாக செய்து அஸ்வத் மற்றும் ப்ராடக்ட் மார்க்கெட்டிங் டீம்மால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட ஐந்து நபர்களின் மாதிரிகளைக் கொண்டு ஜிஷ்ணுவிடம் காட்டினான் அஸ்வத்.
அதில் தன் மனதில் உள்ளதை அப்படியே இம்மி பிசகாமல் செய்திருந்த ஒன்றை தேர்வு செய்தான் ஜிஷ்ணு ஆச்சரியம் குறையாமல்..!
“வாவ்..! அப்படியே நான் நினைச்சது டா இந்த மாடல்” வியந்தான் ஜிஷ்ணு.
“இத கிரியேட் பண்ணது ஒரு பொண்ணு அண்ணையா..!” என்றான் அஸ்வத் அதே அதிர்ச்சி குறையாமல்..!
அவனை முறைத்தவன் “ஏன் பொண்ணுனா இந்த மாதிரி வெப் டிசைனிங் நல்லா பண்ண கூடாதா? ஆம்பளைங்க தான் பெஸ்ட் பொம்பளைங்க எல்லாம் இதுக்கு சரி பட்டு வர மாட்டாங்க.. இப்படிப்பட்ட எண்ணத்தை முதல்ல மாத்து அஸ்வத்..! அவங்கள வர சொல்லு மத்தவங்களை எல்லாம் அனுப்பிடு” என்றான் முடிவாக..!
அதன்படி அந்த கம்பெனியின் ஃப்ரீலான்சர் ஆவதற்கு என்னென்ன விதிமுறைகளோ அவற்றையெல்லாம் ஹெச்ஆர் டிபார்ட்மெண்ட் இடம் செய்ய சொல்லிவிட்டு அஸ்வத் ஆரணியை ஜிஷ்ணு கேபினுக்குள் வர சொன்னான்.
சற்றே பதட்டத்தோடு “இவ்வளவு பெரிய கம்பெனிக்கு நாம் வெப் டிசைன் செய்ய போறோமா?” நம்பா முடியா மனதில் முகிழ்த்த சந்தோஷத்தோடும்..
“நம்மால் முடியுமா?” என்ற சிறு நடுக்கத்தோடும்..
“கண்டிப்பாக முடியும்..! முடிய வேண்டும்..! அப்போ தான் நம் கஷ்டம் குறையும்..!” என்று அனேக வேண்டுதலோடு ஜிஷ்ணுவின் அறைக்குள் நுழைந்தாள் ஆரணி வெண்பா..!
உள்ளே நுழைந்தது முதல் அவளது முக உணர்வுகளை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு.
“வெல்கம் மிஸ் ஆரணி வெண்பா..! உங்க நேம் யூனிக் அண்ட் டிஃப்ரண்ட்” என்றவனின் குரலில் அவள் நிமிர்ந்து பார்த்து “குட் நூன் சார்..!” என்றாள்.
அடுத்த நொடி.. அந்த அறையை நிறைத்தப்படி ஆளுமையாக இருந்தவனைப் பார்த்தவளின் கண்களில் கூர்மை ஏற.. சட்டென்று ஒரு கலக்கம் அவள் நீள நயனங்களில்..!
அதனோடு கூட “இவனா?? ஆண்டவா..!” என்று அந்த செவ்விய இதழ்கள் மெல்லமாக முணுமுணுக்க அடுத்த நொடி வேரறுந்த மரம் போல சாய்ந்தாள் ஆரணி.
“ஹே அஸ்வத்.. அஸ்வத்.. கம் குவிக்..! சீக்கிரம் வாடா.. என்ன ஆச்சுன்னு பாரு இவங்களுக்கு?” என்று பதறினான்.
அதற்குள் எங்கிருந்தோ இரண்டு மூன்று பேர் ஓடி வந்து எப்பொழுதும் அவன் அலுவலகத்தில் இருக்கும் ஹெல்த் ஸ்பெலிஸ்டை வரச் செய்து பார்க்க செய்தான்.
“ஜஸ்ட் இவங்க நர்வஸ்னால மயக்கம் ஆகிட்டாங்க.. ஒரு வித டென்ஷன்ல தான் பயந்து மயக்கம். மத்தபடி ஓகே..! கொஞ்சம் வீக்கா இருக்காங்க..” என்று அவளை தூக்கிச் சென்று சலைன் போட்டு விட்டார்கள்.
“நான் நினைச்சது அப்படியே இந்த பொண்ணு தான் டிசைன் பண்ணுச்சு கடைசில பாத்தா இந்த பொண்ணு இப்படி மயங்கி விழுந்துடுச்சு..! இன்னும் ரெண்டு நாள் லான்ச் பண்ணி ஆகணும்..!” என்று புலம்பி கொண்டு இருந்தவன் முன்னே
“எக்ஸ்கியூஸ் மீ.. சார்..!” என்றபடி பவ்யமாக வந்து நின்றாள் ஹெச்ஆர்-ல் வேலை பார்க்கும் அர்ச்சனா.
“வாட் மிஸ்?” என்று சற்று எரிச்சலோடு அவன் கேட்க..
“இல்ல சார்.. இப்போ இண்டர்வியூல செலக்ட் ஆன ஆரணி வெண்பா..”
என்று அவள் இழுக்க..
“ஆமாமா.. அந்த பொண்ணு தான். அந்தா மயக்கம் போட்டு விழுந்து கிடக்கு பாரு.. இத்தன பேர விட்டுட்டு இந்த பொண்ண செலக்ட் பண்ணா இப்படி பொத்து பொத்துன்னு மயக்கம் போட்டு விழுது” என்று கடுப்பாக அஸ்வத் கூற, அவனை முறைத்தான் ஜிஷ்ணு.
“வாட் ஃபார் ஹேர்??” என்று சற்றே அலுப்போடு அர்ச்சனாவிடம் ஜிஷ்ணு கேட்டான்.
“இல்ல சார்.. அவங்க வரும்போது அவங்க பையனையும் கூட்டிட்டு வந்திருந்தாங்க.. இப்ப அவங்க பையன் அவங்க அம்மாவ தேடுறான்..” என்றாள் ஜிஷ்ணு ஏதும் கோபமாக கத்து விடுவானோ என்று பயத்தோடு.
“என்னது பையனா?” என்று இருவரும் அதிர..
“எஸ் சார்..!” என்று வெளியில் நின்றிருந்த அவனை அழைத்து வந்தாள்.
ஜிஷ்ணுவின்
சிறுவயதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்தது போல தன் முன்னால் இருந்த உருவத்தை பார்த்து அதிர்ந்தான் ஜிஷ்ணு..!
அவனுக்கு குறையாத ஏக அதிர்ச்சியில் அஸ்வத்..!
தொடரும்..
wow super sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌