16
படியாத பரட்டை தலையும் முறுக்கு மீசை நிதம் ஒரு கலர் சொக்காவும் அதற்கு தோதாக தொங்கும் தொடர் தங்க சங்கிலிகளும்… கையில் காப்பும் அணிந்து கொண்டு வரி ஓடிய நரம்புகள் புடைக்க முறுக்கி பிடித்து புல்லட்டை ஓட்டும் போது இளசுகள் பெருசுகள் எல்லாம் வாயை பிளக்கும் அத்தனை அம்சமாக இருப்பான் சீராளன்… வெயிலில் உழைத்து மெருகேறிய நிறம்… கடின உழைப்பால் வலுவான கற்பாறை தேகம்… என அந்த ஊரை காக்கும் சுடலை மாடன் சாமியை போல் இருந்தான் அவன்…
தொழில் என்னவோ விவசாயம் தான்… ஆனால் அதை மட்டும் நம்பி இருக்க முடியாதே என குடும்ப சொத்தில் ஒரு பாதியை எடுத்து அறுவடை இயந்திரத்தை வாங்கி போட்டு வாடகைக்கு விடுவதும்… வட்டிக்கு பணம் கொடுப்பதுமே இவனின் பிரதான தொழில்… அநியாய வட்டி வசூலிக்க மாட்டேன் என்பது அவன் கொள்கை… அதற்குப் பிழைக்க தெரியாதவன் என்று பட்டம் கொடுத்தது ஊர்…
ஊர் திருவிழாவில் கருநீல தாவணியில் அழகு தேவதையாக வந்த ரதியை கண்டு மனம் மயங்கி விட்டான்… ஒரே இனம் தான் ஆனால் என்ன வசதி குறைவு… உங்க அளவுக்கு சீர் கொடுத்து செய்ய முடியாது என பெற்றவர்கள் தயங்க…
அதுக்கு என்ன நான் போட்டு செஞ்சுக்குறேன் கல்யாணத்துக்கு அப்புறம் என் கூட வாழ போறவ தானே என்னைக்கா இருந்தாலும் என்னோடது எல்லாம் அவளுக்கு தான சேரும்… அதை முன்னவே செஞ்சுட்டு போறேன்… நீங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க… என சீராளன் முடிக்க …
ஒன்னும் தெரியாத என் தம்பிய வளச்சி போட்டுக்கிட்டாளுங்க… ஏண்டா ஊரே மெச்சும் ராஜா நீ ஒண்ணுத்துக்கும் வக்கில்லாதவன் வீட்டுல பொண்ணு எடுக்கேங்கற… அவசரப்படாதடா நம்ம இனத்திலேயே நல்ல வசதியான புள்ளையா பார்த்து என்ற தையல்நாயகியின் பேச்சை ஓரம் கட்டி விட்டு… திருமண மாப்பிள்ளையாய் தயாரானான் சீராளன்…
சுப மங்கள நாளில் ரதியின் கழுத்தில் திருநாணல் பூட்டி அவளை தன் சரிபாதியாக ஏற்று கொண்டான்…
அளவான வருமானம் அழகான மனைவி இதை விட வேறு என்ன பெரிதாக வேண்டும் ஒரு ஆணுக்கு… சிறகில்லாமல் வானில் மிதந்தான் சீராளன் ஆசைப்பட்ட வாழ்க்கை கை கூடியதில்…
முகூர்த்த நேரம் முடிந்து திருமணம் நடந்தேறிய பின்பும் உறவுகளின் வருகை நிற்கவில்லை மொத்த தென்காசி மக்களும் திரண்டு வந்தனர்… சீராளன் வீட்டு திருமணத்திற்கு இத்தனை மனிதர்கள் வருகை புரிந்தார்களா… அவன் அவ்வளவு பெரும் செல்வந்தனா என்றால் ஆம் செல்வந்தன் தான் பணத்தில் மட்டுமல்ல மனதிலும் பெரும் செல்வந்தன் தான்…
பொன் பொருள் நிலம் சேர்த்தால் தான் சொத்தா??? அதற்கு நிகராக மெய் அன்பு காட்டும் நட்பு என்னும் சொத்தும் அளப்பரியதுதான்…
“அடியே ஊமச்சி வாசுகி எங்கடி போய் தொலைஞ்சா உன் பொண்ண அந்த மினுக்கி இந்த மொத்த ஜில்லாவும் என் தம்பி கல்யாணத்துக்கு நிரம்பி வழியுது அங்க அடுப்புல வச்ச சோத்து பானை வெந்தது வெந்த படியே கிடக்கு… மூட்ட மூட்டையா காய் கறி போனது போன தடம் தெரியல… இங்க எடுத்துக்காட்டி செய்ய என்னை விட்டா யாரு இருக்கா… வேலை செஞ்சு செஞ்சு எனக்கு குறுக்கு ஒடிஞ்சு போச்சு… நமக்கு கூட மாட ஒத்தாசையா இருப்பாள்னு பார்த்தா எங்க போய் தொலைஞ்சா அந்த சீமையில் இல்லாத சிறுக்கி…!!” தன் கணவன் இறந்த துக்கத்தில் முடங்கி போனவர் மகள் படும் துயரத்தை கண்டு நெஞ்சை பிடித்துக் கொண்டு படுத்தவர் தான்… அதன் பிறகு எழுந்து நடக்கவே இல்லை பேச்சு முற்றிலும் நின்று போனது… அடுத்தவர் பேசுவது அவருக்கு புரியும் என்பதற்கு ஒரே சான்று அவர் செய்யும் கண்ணு அசைவு மட்டும் தான்…
தையல்நாயகி கேட்ட கேள்விக்கு கண்களை மட்டும் மூடி திறந்து பதில் சொல்ல…
என்னத்த சொல்றியோ போ ஒன்னும் புரியல… இருக்குற பாரம் பத்தலைன்னு உங்களை வேற கட்டிட்டு அழணும்னு விதி எனக்கு… எல்லாம் இந்த கூறு கெட்ட மனுஷனை சொல்லணும்… என தையல் நாயகி திட்டி கொண்டு இருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தாள் திலோத்தமா கையில் அன்னைக்கு கொடுக்க வேண்டிய உணவு மருந்துடன்…
தங்கள் அறையில் தையல்நாயகி நின்று இருப்பதை கண்டு திடுக்கிட்ட திலோத்தமா… வேகமாக விரையும் போதே அவரது சொற்கள் அவளது காதில் நன்கு விழத்தான் செய்தது… ரோஷம் பொத்துக் கொண்டு வந்தாலும் அதை காண்பிக்கும் நிலையில் அவள் இல்லையே… அடுத்த வேளை உணவுக்கே அவர்களை நம்பி இருக்கையில்… சூடு சூரணையை மட்டும் வைத்து கொண்டு என்ன செய்ய முடியும்…
“எங்கடி போய் தொலைஞ்ச உன்னை தேடி வர வேற ஆளு வைக்கணுமா… அங்க போட்டது எல்லாம் போட்ட படியே கிடக்கு வந்த ஜனம் வந்துகிட்டே இருக்கு… பரிமாற ஆளு பத்தலை கூடவே இருந்து பார்த்து பரிமாறுரத விட்டுட்டு இங்க வந்து என்னடி பண்ணிட்டு இருக்க…?? என்றார் சிறிதும் மனசாட்சியே இல்லாது…
நேற்று முன்தினம் முதல் மற்ற வேலை ஆட்களோடு சேர்ந்து இவளும் அத்தனை எடுபிடி வேலைகளையும் செய்து கொண்டு தான் இருக்கிறாள்… இப்பொழுது கூட தன் அன்னைக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தான் வந்தாள்… மிஞ்சி மிஞ்சி பத்து பதினைந்து நிமிடம் கூட ஆகி இருக்காது… அதுக்குள்ளே இவளை தேடி வந்து விட்டு இந்தம்மா பேசுறதை பாருங்க மக்களே…
தையல்நாயகி எது பேசினாலும் அமைதியாக இருந்து கொள்வது அவளது காதுகளுக்கு நல்லது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டவள் என்பதால்… நாயகி என்ன பேசினாலும் வாயை மூடி கொண்டு அமைதியாகவே நின்றாள்…
என்னடி நான் சொல்லிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு குத்துக் கல்லு மாதிரி நின்னுட்டு இருக்க… கிளம்பு அங்க பார்க்க வேண்டிய சோலி நிறைய கிடக்கு… என விரட்டிட…
சற்று தயங்கியவள் பின் தைரியமாக… அத்தை அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வந்துடுறேன்… என கீழ் குரலில் கெஞ்சினாள் பேதை…
க்கும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… உங்களுக்கு தண்ட சோறு போடுறது பத்தாதுனு இவளுக்கு மருந்து மாத்திரை சேர்த்து அழ வேண்டி கிடக்கு… இதெல்லாம் எங்க கொண்டு போய் முடிய போகுதோ… என் வாய பார்த்துட்டு நிக்காம சீக்கிரம் உங்க அம்மாக்கு சோத்த அள்ளி கொடுத்துட்டு வா உங்க அம்மாவ எந்த நாயும் தூக்கிட்டு போயிடாது மெத்தனம் காட்டாம சீக்கிரம் வந்து சேறு அப்படியே பின்னாடி இருக்கிற வூட்டுல இருந்து நாலு ஜமுக்காலமும் பரிமாற தேவையான வாளி கரண்டி எல்லாம் பரண் மேல எடுத்து வச்சி இருக்கேன் வரும் போது அதையும் எடுத்துட்டு வந்துடு…என்று விட்டு போக…
“ஏன்மா அழுவுற இது என்ன நமக்கு புதுசா… இத்தனை வருஷமா அத்தை நம்மள பார்த்துகிட்டதே பெருசுமா…!!” என்று கண்களில் கண்ணீர் வழிய பார்த்து இருந்த அன்னைக்கு ஆறுதல் சொல்லி அள்ளி தந்தவளுக்கும் ஒரே ஆறுதல் அவள் அன்னை மட்டுமே அல்லவா… ஏழைகள் என்றும் கண்ணீர்க்கு அப்பாற்பட்டவர்களோ…
ஒரு குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல் தன் அன்னைக்கு அள்ளிக் கொடுத்து மருந்தையும் புகட்டி அவர் வாயை சுத்தம் செய்துவிட்டு அவரை உறங்க வைத்து போர்வை போர்த்தி விட்டு வந்தவள் தையல் நாயகி சொன்ன பொருட்களை எல்லாம் எடுக்க புறக்கடை பக்கம் சென்றாள்…
அது வீட்டை விட்டு சற்று தொலைவில் ஒரு சிறிய ஓட்டு வீடு இருக்கும்… அதுதான் பஞ்சாட்சரத்தின் முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக வீடு… இப்பொழுது வசிக்கும் வீடும் வசதி வாய்ப்புகள் வந்ததும் கட்டிக் கொண்டது… பல தலைமுறைகள் அங்கு வாழ்ந்ததன் அடையாளமாக அவ்வீட்டை அவர்கள் பாதுகாத்து வந்தனர்… ஆட்கள் அங்கு புழங்காவிட்டாலும் பொருட்களை பத்திரப்படுத்தி வைக்க அந்த வீட்டை பயன்படுத்தி கொண்டனர்…
தையல் நாயகி விசேஷ சாமான்கள் போன்றவற்றை அங்கு தான் வைத்திருப்பார் தேவைப்படும் சமயம் அவ்வப்போது எடுத்து பயன்படுத்திவிட்டு மீண்டும் அங்கே வைத்து விடுவார்… எனவே அவர் கூறியதும் திலோ எதுவும் யோசிக்காமல் அங்கு பொருட்களை எடுக்க சென்றாள்…
வீட்டிலிருந்து பத்து நிமிடத்திற்கு மேல் நடந்தால் தான் அந்த ஓட்டு வீடு வரும். வழியில் வெளிச்சம் இல்லை என்பதால் டார்ச்ச லைட் அடித்து கொண்டு சென்றாள்…
சாமான் எடுக்கச் சென்றவளுக்கு அங்கு உள்ளே கண்ட காட்சியில் பயந்து போய் கத்த வாய் எடுத்த சமயம் அவள் வாயை பின்னால் இருந்து பொத்தி அணைத்துக் கொண்டு போய் இருட்டு அறையில் போட்டது ஒரு உருவம்… அவள் மீது கொண்ட ஆசை வெறியில் அத்துமீறிட… அலறி துடித்து போனாள் திலோத்தமா… அவனின் முரட்டு தனமான கையாடலில் மூர்ச்சையாகி போனாள் பேதை… காப்பாற்றுவார் இன்றி அவளது எதிர்காலம் இங்கு கருகிக் கொண்டு இருக்க…
மறுபக்கமோ…
பணத்திற்காக ஆசைப்பட்டு சீராளனை கட்டிக்கொண்டாள் ரதி… அவனது பணத்தில் பகட்டாக வாழலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தவளின் எண்ணம் எல்லாம் அவளின் முன்னாள் காதலனை கண்டதும் தவிடு பொடியாகி போனது…
அவள் காதலை மறக்க முடியவில்லை என்று கெஞ்சினான்… முடியாது என்று மறுத்தவளிடம் காரணம் கேக்க… அவள் பணத்திற்கு மயங்கி விட்டாள் என்பது புரிந்து கொண்டவன்…கெஞ்சலை விட்டு மிரட்டலுக்கு தாவினான்… கடைசியாக நீ இல்லை என்றால் செத்து விடுவேன் என்று அவள் காலிலே விழ…
இவளுக்கு பழைய காதல் காலம் எல்லாம் கண் முன்னே வந்து போக… அவன் இறந்து விடுவேன் என்று சொன்னதும் குற்ற உணர்வு மேலோங்க அவனோடு செல்ல சம்மதித்து விட்டாள்…
திருமணம் முடிந்து மஞ்சள் தாலியின் ஈரம் கூட காயும் முன்பே அவள் பழைய காதலனுடன் செல்ல முடிவெடுத்துவிட்டாள்… என்ன?? எப்படி?? எங்கு?? செல்வது என இருவரும் பேசிக் கொண்டிருந்ததை… “பொண்ணுக்கு துணையா இரு” என்று தையல் நாயகி அனுப்பி விட்டதால் ரதியை தேடி வந்த மேனகைக்கு அவர்கள் பேசியது பிற்பாதி மட்டுமே கேட்டதாலும் அவளுடைய அறியாத வயதின் காரணத்தாலும் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று புரியாமல் குழம்பி நின்றாள்…
அவளுக்கு புரிந்ததெல்லாம் அவளின் மாமன் மனைவியான ரதி மற்றொரு ஆணின் கையைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தது மட்டுமே புரிந்தது… ஏன் எதற்கு என்று புரியும் விவரம் அவளுக்கு இல்லை…
ஏன்கா அழுவுறீங்க அந்த மாமா யாரு எதுக்கு உங்க கைய புடிச்சுகிட்டு நிக்கிறாரு என்று இவள் விவரம் புரியாமல் கேட்டதற்கு…
“நான் ஒன்னும் அழலை பாப்பா கண்ணுல தெரியாம தூசி பட்டுருச்சு அவ்வளவு தான் அவர் என் பிரண்டு பாப்பா… ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததால கை கொடுத்தார் அவ்வளவுதான்… ஆமா நீ ஏன் இங்க வந்த ஓ என்ன தேடி வந்தியா சரி வா போகலாம்… அப்புறம் பாப்பா இங்க பார்த்ததை யாருகிட்டயும் சொல்லக்கூடாது சரியா…!!” என ரதி நைசாக பேசியபடி அவள் காதலனுக்கு கண்களை காட்டி விட்டு மேனகையை அழைத்துச் செல்ல…
“ஏன் சொல்லக்கூடாது??” என மேனகை கண்கள் சுருக்கி விவரம் கேட்க…
“அது அது வந்து ஆங் உன் மாமாவுக்கு அத்தை அழுதா பிடிக்காது அத்தை அழுதா உங்க மாமாவும் அழுவார்… உங்க மாமா பாவம் இல்லை அவர் அழுதா நல்லா இருக்குமா இல்லைல… நீ சொல்லு உனக்கு மாமா அழனுமா..? சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே இருக்கணுமா…?? என வாய்க் கூசாமல் பொய்யை உதிர்த்தாள்…
“சந்தோஷமா இருக்கணும் என் சீராளன் மாமா எப்பவும் சந்தோசமா சிரிச்சிக்கிட்டே இருக்கணும்… அவர் ரொம்ப நல்லவர் நான் எது கேட்டாலும் வாங்கி தந்திடுவார்.. எவ்வளவு சேட்டை பண்ணாலும் திட்ட மாட்டாரு…அவர் எப்பவும் யாருக்காகவும் அழவே கூடாது… அதுனால மாமாகிட்ட இங்க நடந்த விஷயத்தை சொல்ல மாட்டேன் அக்கா வாங்க போலாம்… !!” என்ற மேனகை அப்படியே விட்டு விட்டால் அவள் மட்டும் நடந்ததை அப்போதே யாரிடமாவது கூறி இருந்தால்… சீராளனின் வாழ்க்கை தடம் புரண்டு இருக்காதே…
ஆசைப்பட்டு தாலி கட்டியவள் அவளோடு வாழ்க்கை, நினைப்பே உள்ளூர போதை கொடுக்க ஆவலோடு முதல் இரவு கதவை திறந்தவனுக்கு… காத்திருந்தது ஏமாற்றமும் அவன் மனைவி எழுதி வைத்திருந்த காதலனுடன் ஓடிப் போகிறேன் தேடாதீர்கள் என்கிற மொட்டை கடிதமும் தான்…
சீராளன் தலையில் மொத்த இடியையும் இறக்கிவிட்டு அவன் மனைவி ஓடிப் போய்விட்டாள்… என்கிற செய்தி ராவோடு ராவாக அந்த ஊர் முழுவதும் பரவி விட… அங்கு ஒருவன் வாழ்க்கை அலங்கோலமானது இங்கு ஒருத்தி வாழ்க்கை கேள்வி குறியானது…