ATM Tamil Romantic Novels

உரசி மலர்த்தாதே மாறா !-1 &2

உரசி மலர்த்தாதே மாறா! 
 
மலர்தல் -1
 
அது மலையும், மலை சார்ந்த பிரதேசமுமான குறிஞ்சி நில எழில் சொட்டும் உதகமண்டலம்!! 
 
பனிப்போர்த்திய முகடுகளை முகில்களுக்கு மட்டும் இரகசியமாகக் காண்பித்தபடி.. ஆழ்ந்த சயனநிலையின் வசம் ஆட்பட்டிருந்தன மலைத்தொடர்கள்!! 
 
எங்கும் பைன் மரக்காடுகளும், ஊசியாய் குத்தி என்பு மச்சை வரைத் துளைக்கும் குளிரும் கொண்ட.. பப்பரப்பான காலநிலை அது!! 
 
உதகமண்டல நகராட்சி நிர்வாகத்தின் கீழ் அமைந்திருக்கும் ஒரு தனியார் மருத்துவமனை, விடிந்தும், விடிந்திராத புலர்காலைப் பொழுதில்.. நிரம்பவும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. 
 
இது எதனையும் அறியாது.. அம் மருத்துவமனையில் தனக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருக்கும் அறையின் சாளரத்தின் பக்கம் நின்று, வெளியே தோட்டத்தில் முகிழ்த்திருந்த டெய்லியாஸ் மலர்களை.. கண்களில் இரசனையுடன் பார்த்த வண்ணம் நின்றிருந்தாள்! 
 
அவள், இந்தக் காதல்க் கதையின் இளம்நாயகி மீரா! மீரா கார்த்திக்கேயன்!! 
 
தன்னுடைய பொன்னிற ஷல்வாரின் மேல் சிவப்புநிற துப்பட்டாவை சால்வைப் போலப் போர்த்தியிருந்த அவள் ஒரு அழகி!! 
 
திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டும் குழந்தையின் மாசுமருவற்ற தன்மையுடைய அழகி!! 
 
மீராவின் கைகளில் அடைக்கலமாகியிருந்தது, ஒரு கப் காபி!! 
 
அதில் நின்றும் சூடான ஆவி பறந்துக் கொண்டிருக்க.. சாமரம் போல கன்னத்தை நோக்கி விசிறியாகப் படிந்த இமையை ஒரு கணம் மூடித் திறந்த வண்ணம்..காபியை ஒரு மிடறு ரசித்துச் சிப்பினாள் மீரா. 
 
அதன் நறுமணமும், சூடும் இவள் தொண்டைக்குள் இதமாக இறங்கிக் கொண்டிருக்க, அந்த இதத்தினைச் சுகிக்கும் கால அளவு.. மீராவுக்கு நிரம்பவும் கம்மி போலும். 
 
ஆம், அதற்குள், படாரென்று திறக்கப்பட்டது, அவளது அறையின் கதவு!! 
 
இவளும்.. ஒன்றும் அறியாதவளாக மிழற்றிய விழிகளோடுத் திரும்பிய போது, அங்கே.. வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தாள் நர்ஸ் கோகிலா. 
 
“டாக்ட.. டாக்டர் மீரா.. ப்ளீஸ் ஒரு எமெர்ஜென்சி கேஸ்.. நீங் நீங்க வந்தேயாகணும்.. அவசரம்!”
பீதியடைந்த வதனத்துடன் கூறியவளைக் கண்டதும்.. நம் நாயகி மீராவின் இதயத்திலும் அந்தக் களேபரம் தொற்றிக் கொண்டது. 
 
ஆம், மீரா ஒரு நரம்பியல் நிபுணர்! 
 
 முகத்தில்.. இமைகள் இடுங்க ஒரு பார்வை மாத்திரம் வெளிப்படுத்தி நின்றாள் மீரா. 
 
மீரா தான் கைகளில் வைத்திருந்த காபி கப்பினை.. ஒரு நொடி கூட தாமதியாமல்.. தன்னெதிரே இருந்த மேசை மீது வைத்து விட்டு.. கைகளில் ஸ்டெதஸ்கோப்பை எடுத்தவள், தன்னை நாடி வந்த தாதியுடன்.. அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி விரைந்தாள்.
 
அவள் பாதங்கள் சக்கரத்தைக் கட்டிக் கொள்ளாத குறையாக.. அதிவேக எட்டுக்கள் எடுத்து வைத்து வைத்து நடந்தேறின ஐசியூவை நோக்கி. 
 
தன் கைகளில் தொங்கிக் கொண்டிருந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்து, தோளில் மாட்டிக் கொண்டவள்.. அருகே தன்னுடன் இயைந்து நடந்து வரும் கோகிலாவிடம் பின்வருமாறு கேட்டாள். 
 
“ஆமா.. இப்போ டாக்டர் அரவிந்த்துடைய ஷிப்ட் இல்ல? அவர் இல்லையா?? என்னாச்சு? “என்று கேட்டாள் மீரா.
 
ஆனால், கோகிலாவுக்கோ.. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆடவன்.. தன் வாணாளில் கடைசித் தருணங்களைச் சந்தித்துக் கொண்டிருப்பவன் என்பதை அறிந்தவளாயிற்றே? 
 
ஆகையால், அவளுக்குள் இன்னும் தீராமல் களேபரம் தொற்றிக் கொண்டிருக்க.. குரலும் கலவர சாயையுடனேயே ஒலித்தது. 
 
“டாக்டர் அ..அரவிந்த்.. அவர் ஒயிஃப்க்கு டெலிவரி பெயின்னு கால் வந்ததும் அவசரமா கிளம்பி போயிட்டாரு மேடம்.. அதான் இப்போ உங்களை கூ..கூப்பிட வேண்டியதாகிருச்சு.” என்று  பீதியடைந்த த்வனியில் சொல்ல.. மீரா அனைத்தையும் சின்னத் தலையசைப்புடன் ஏற்றவளுக்கு.. தாதி கோகிலாவின் அதீத பதற்றம் அத்தனை உவப்பை நல்கவில்லை போலும். 
 
பட்டென்று.. தன் வேகநடையை நிறுத்தி விட்டு.. தாதி கோகிலாவை.. ஒரு பார்வைப் பார்த்து நின்றாள் மீரா. 
 
 “நர்ஸ் கோகிலா.. கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கும் மேலாக இந்த ஹாஸ்பிட்டல்ல வேலை பார்க்கறீங்க.. இருந்தும் ஏன் இன்னிக்கு அப்நார்மலா இத்தனை பதற்றம்? கண்டிப்பா இந்த பேஷன்ட்க்கு ஒண்ணும் ஆகாது.. பீ யுவர்செல்ஃப்.. உங்க நிதானமின்மை.. பிறருக்கு தான் பயத்தை ஏற்படுத்தும்.. காட் இட்?” என்று இவள் ஒரு வைத்தியராக அசத்தலான ஆளுமையான குரலில் எடுத்துரைக்கலானாள். 
 
அதை ஆமோதிப்பது போல, கோகிலாவும்.. எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு  ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு.. “ஓகே டாக்டர்” என்று தலையசைக்கலானாள்.
 
பின்பு மீரா தன் மின்னல்நடையுடன்.. அதிதீவிரச் சிகிச்சைப் பிரிவின் காரிடாரினை நோக்கி முகத்தைத் திருப்பினாள்.. அவள் பின்னாலேயே தானும் விரைந்து போகலானாள் கோகிலா. 
 
தன்னை சிறு மெல்லோட்டத்துடன் எட்டிப் பிடித்த கோகிலாவை நோக்கி, மீராவோ, “பேஷன்ட் பத்தி விவரம் சொல்லுங்க.. தெரிஞ்சுக்கறேன்” என்று சொல்ல, கோகிலாவும் தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் ஒப்புவிக்கலானாள்.
 
  “பேஷன்ட் பேர், வயது, ஊருன்னு எந்த டீட்டையிலும் இப்போதைக்கு தெரியலை.. ஆனா.. ஏதோ ஆக்ஸிடெண்ட் கேஸ்.. போலீஸ் விசாரிச்சதில் உள்ளூர் நபராகவும் தெரியல மேடம்.. ஊட்டிக்கு டூர் வந்திருக்க இடத்துல ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கு.. அவர் கண்ணு முழிச்சா மட்டும் தான் அவர் பத்திய தகவல்களை அறிய முடியும்.. ஆக்ஸிடென்ட் ஆனதுல.. கிட்னி பக்கத்துல பலத்த அடி பட்டிருக்கு..  இதனால நிறைய ப்ளட் லாஸ் ஆகியிருக்கு..   முள்ளந்தண்டு வடத்துலயும் காயம்பட்டிருக்கு மேடம்.”
 
கோகிலா நடந்ததை விபரிக்க விபரிக்க.. இதுவொன்றும் சுலபமாக மருத்துவம் பார்த்துவிடும் விஷயம் அல்ல என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது மீராவுக்கு. 
 
கோகிலா தனக்குத் தெரிந்த அனைத்தையும் ஒப்பித்து முடிக்கவும், அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் வாசற்புறம் வரவும் சரியாக இருந்தது. 
 
அறையின், ஜில்லென்ற உலோகக் கைப்பிடியில் கைவைத்துத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்த மீரா.. அங்கே கண்டது.. முழுதும் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஓர் வலிய திடகாத்திரமான ஆடவனைத் தான்!! 
 
 ஆம், உண்மையில், திண்ணிய திரண்ட தோள்புஜங்களும், அடுக்கடுக்கான வயிற்றுத்தசைகளும் கொண்டு, தெரிந்த, அவ்வாடவனின் நிலைமை மோசமாகத் தான் இருந்தது!! 
 
இதயத்துடிப்பை அளக்கும் கருவியின் குழாய்களும், இரத்த அழுத்தத்தை அளக்கும் கருவியின் குழாய்களும் அவன் வன்மையான தேகத்தில் பொருத்தப்பட்டிருந்தன. 
 
அறைக்குள் நுழைந்ததும்.. ஏனோ மீராவுக்குள் இன்னதென்று உணர முடியாத.. ஒரு எதிர்மறையான உணர்வு இதயத்தை கிடுக்குப்பிடியாகப் பிடிக்கத் துவங்கிற்று. 
 
இத்தனை திடகாத்திரமான ஆடவனுக்கு இந்நிலைமையா? அதனால் விளைந்த பரிதாபமா? இன்றேல் அவன் மீதான விட்ட குறையாக.. தொட்ட குறையாகத் துளிர்த்த கழிவிரக்கமா? எதுவென்று அவளாலும் இனங்காணவே முடியவில்லை. 
 
ஆனால், மனதிற்குள் வலியின் சலனம்!! 
 
முகம் முழுவதும்.. உச்சந்தலைக் கீறல்களில் நின்றும் நில்லாமல் வழிந்து வந்த உதிரம்.. வழிந்து கிடக்க.. அவன் யாரென்பது புரியவில்லை அவளுக்கும். 
 
ஆயினும், அவனை நோக்கி.. மீரா எடுத்த வைத்த ஒவ்வொரு எட்டிலும்.. தடுக்கவே மாட்டாது.. அவளது கைகளும், கால்களும் நடுக்குறத் தொடங்கின. 
 
மீரா தன் வாழ்க்கையில் முதல்முறையாக, ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திக் கொண்டு.. அவள் தன்னைத் தானே நிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை எழுந்தது. 
 
கட்டிலில் கிடந்தவனை நோக்கி முழுதாக நடந்து வந்தவளோ, “பேஷன்ட் இங்கே வந்து சேர்ந்து எவ்வளவு மணிநேரம் ஆகுது?”என்று கோகிலாவுக்கான கேள்வியைக் கேட்டாள்.  
 
கோகிலாவும்.. சின்ன அச்சத்துடன், “குறைந்தது ஒரு ஹாப் அன் ஹவர் இருக்கும் டாக்டர்.. ஆனா ஆக்ஸிடென்ட் ஆகி இரண்டு மணித்தியாலத்துக்கு அதிகம் இருக்கும்..” என்று சொன்னதைக் கேட்டு.. மீராவின் இதயத்தினுள் ஒரு திடுக்கம் பரவியது. 
 
அவள் வாழ்க்கையில்.. அவள் சந்தித்த மிக இக்கட்டான அறுவைச் சிகிச்சைகளுள்.. இதுவே முதன்மையானதாக இருக்கப் போகின்றது! 
 
ஆனால் ஏன்? ஏதோ ஏதோ.. அவளது உடல், பொருள், ஆவி என அனைத்திலும் கலந்து விட்டவனைப் போல.. இந்த முகம் சிதைந்து.. படுத்துக் கிடப்பவனைக் கண்டு மனம் மருகி.. துணுக்கம் கொள்வதும் ஏன்?? 
 
அவனுடைய குருதிப்போக்கினால், மஞ்சத்தின் போர்வை விரிப்பு நனைந்து.. காய்ந்த இரத்தத் திட்டாகத் தெரிந்தது. அவன் முகம் உத்திரத்தை நோக்கியிருந்தாலும்.. அவன் விழிகளோ நிர்ச்சலனத்துடன், எந்த உயிர்ப்புமின்றி மூடிக் கிடந்தது. 
 
அந்தக் கோலம்.. அவளது மனத்தினை உருக்க.. எஞ்ஞான்றும் இல்லாதவாறு இன்று.. மீராவின் இமைகளோரம் கோர்த்தது கண்ணீர். 
 
க.. கண்ணீரா? எதனால் இந்தக் கண்ணீர்?? 
 
யாருக்காக இந்தக் கண்ணீர்? அவள் வாழ்வில் எந்த இணுக்கிலும் சம்பந்தப்படாத ஒருத்தனுக்காகவா இந்தக் கண்ணீர்? 
 
தாதி கோகிலாவுக்கு சொற்ப நேரத்திற்கு முன்னர் தைரியம் சொன்னவளா இது? ஏனென்றே தெரியாமல்.. கலங்கி நிற்பது? அவள் மனசாட்சி அவளையே கேள்விக் கேட்டுச் சாடியது.
 
அவளோ.. நிமிடமும் தாமதியாமல் அறுவைச் சிகிச்சைக்குத் தயாரானவளாக, “நர்ஸ்” என்றவளாக கைகளை நீட்ட, மருத்துவர்கள் பொதுவாக சிகிச்சையின் போது அணியும் நீலநிற அங்கி அவளுக்கும் மாட்டுவிக்கப்பட்டது. 
 
தலையில் தொப்பியும், கைகளில் கையுறையும் அணிந்தவள்.. அனைத்திற்கும் ஒரு மனோதிடத்துடன் தயாரானாள்!! 
 
‘ரமா’ என்னும் இன்னொரு தாதிப்பெண்மணியோ.. அசைவற்றுப் படுத்துக் கிடப்பவனுக்கு.. இரத்தம் ஏற்றிக் கொண்டிருக்க.. இவள் மனம் மானசீகமாக உரையாடிக் கொண்டது, கடவுளிடம். 
 
‘கடவுளே.. இவன் யாருன்னு எனக்குத் தெரியல.. ஆனா இவன் இப்டி படுத்துக்கிடக்கும் போது.. என் மனசு ஏன் தவிக்குது.. அதுக்கும் பதில் தெரியல.. ஆனா இது ரொம்ப கிரிட்டிக்கலான கேஸ்.. இவன் பிழைக்கறதுக்கு உதவி பண்ணு’ என்று மனதார நெக்குருகிப் போனவளாக ஒரு பிரார்த்தனையை முன்வைத்து விட்டு, நிமிர்ந்தாள் மீரா. 
 
‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் சிடி ஸ்கேன்’ என்று அனைத்துவிதமான அறிக்கைகளிலும் கண்களை ஓட்டியவளுக்கு.. அவனது முதுகெலும்பு வன்மையாக சேதம் உண்டாகியிருப்பது புரிந்தது.
 
அடுத்து வந்த மணித்தியாலங்கள் அது, அவனுக்கு வாழ்வா? சாவா? என்று கடும் போராட்டமான மணித்தியாலங்களாகிப் போனது!! 
 
கிட்டத்தட்ட எட்டு மணிநேர அறுவைச் சிகிச்சை!! உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு.. தன் பணியில் செவ்வனே ஈடுபட்டவளுக்கு.. அதன் பலனை அனுபவிக்கும் மணித்துளிகளும் வந்தது. 
 
ஆம், வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு, அவள் உதடுகளிலிருந்து ஒரு திருப்திப் புன்னகை ஆசுவாசமாக வெளியேறியது. கையுறையினைக் கழற்றி விட்டு அவள் நிமிர்ந்த போது, மீராவின் நீளநேத்திரங்களில் எல்லாம் கண்ணீரின் கோர்ப்பு!! 
 
சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், ஆடவனின் உடல்நிலை, ஆரோக்கிய முன்னேற்றம் எல்லாமே தான் அதன் வெற்றியின் அளவீட்டை மதிப்பீடு செய்யும் அல்லவா? 
 
ஆகையினால், தன் சக தாதியை நோக்கி, “ஃபோர்ட்டிஎய்ட் ஹவர்ஸ் அப்சர்வேஷன்ல வைச்சுருங்க.. என்ன நடந்தாலும் உடனுக்குடன் தகவல் தாங்க.. அதுக்கப்றம் தான் பேஷன்ட் பத்தின எந்த முடிவுக்கும் வர முடியும்னு போலீஸ்க்கு சொல்லிருங்க” என்று அடுக்கடுக்காக கட்டளைகளைப் பிறப்பித்து விட்டு, மீரா அங்கிருந்தும் களைத்துப் போய் வெளியேறப் போன சமயம் அது. 
 
அக்கணம் தான் அவள் தன் வாணாளில் எதிர்பார்த்திராத சில விஷயங்களும் நிகழ்ந்தேறலானது. அவள் விழிகளும் விதிர்விதிர்த்து அடங்கும் வண்ணம், உயிரற்றுக் கிடந்தவனுக்கும் உயிர்ப்பு வந்ததுவோ? 
 
தன்னை விலகிச் செல்ல முனைபவளின் அதிமிருதுவான முன்னங்கையை.. இயலாத நிலையிலும், கண்மூடிப் படுத்திருந்த.. சுயமற்ற நிலையிலும்.. பற்றிப் பிடித்துக் கொண்டது.. அவன் கை!! 
 
இவளோ.. அதில் வெலவெலத்துப் போனவளாக அவனைப் பார்த்திருக்க, விழிமூடிய தருவாயிலும், அவனது உதடுகளில் நின்றும் வெளியேறியது ஒரு நாமம்!! 
 
அது அவளது நாமம்!! 
 
 அவனுடைய குரல் ஈனஸ்வரத்தில்.. கிசுகிசுப்பாக வெளிப்பட.. அவனோ.. “மீ.. மீராஹ்.. எ.. எ.. என்னை விட்டுப் போகாதே” என்றிருந்தான். 
 
உயிர் உருக்கி.. மனத்தைக் கரைக்கும்.. காதலனின் குரல் அது!! 
 
பைத்தியக்காரத்தனமாக.. பித்தனாக மாறி.. காதல் செய்யும் ஆடவனின் த்வனி அது! 
 
இவளோ.. சர்வமும் உறைந்து போனாள். இவன் யார்? மீராவின் நாமம் எப்படி அவன் அறிந்தான்? யாரோ ஒரு, ‘மீரா’.. என்றெண்ணி அவளை ஸ்பரிசித்தானோ? 
 
முகம் முழுவதும் மாவுக்கட்டுப் போடப்பட்டிருக்க.. வெளித்தெரிந்த முகத்தின் பாகத்தின் வழியே.. அவனை உற்று உற்றுப் பார்த்தாள் மீரா!! 
 
ம்ஹூஹூம், அவனை யாரென்று அவள் இதயத்துக்கோ, மூளைக்கோ அடையாளம் தெரியவில்லை!! 
 
அவள் கன்னங்களில்.. அனிச்சையாய் வழியும் கண்ணீர்? அதைத் துடைக்க மனமும் வரவில்லை.
 
 அவள் மனம் ஒரே ஒரு விஷயத்தைச் சுற்றி ஓடியது.
 
‘யாரவன்?’
 
‘அவள் நாமம் எங்ஙனம் உறுதியாக அறிந்தான்?’
 
‘மயக்க நிலையிலும் இவள் கையை எப்படி இத்துணை அழுத்தமாகப் பற்றிக் கொண்டான்?’
 
மீராவிடம் விடையில்லை!! 
 
  அவள் செக்கச்செவேலென சிவந்து போன கண்களால்.. முன்பின் அறிந்திராத அந்நியனைப் பார்த்தாள்;  பார்த்தாள்;பார்த்துக் கொண்டேயிருந்தாள். 
 
மனதினுள் ஏதும் தோன்றாமல் போக.. தன் கையை அத்துணை வலிமையாக இறுக்கிப் பற்றிக் கொண்ட.. அவன் கையை தன்னில் நின்றும் எடுத்து விட்டவாறு.. மனத்தினை இரும்பாக்கிக் கொண்டு நடந்தாள்! 
 
அவன்.. தன்னை, ‘போகாதே மீரா’ என்று கட்டளையிட்டதையும் கூட.. மறுத்திசைந்தவளாக நடந்தாள்!! 
 
உண்மையில் அவன் யார்?
 
 அவன்.. தன் கடந்தகாலத்தில் இராவணனாக அவதாரம் கொண்டவன்.. சொல்லொணா இம்சைகள் தந்த இராட்சசன் என்னும் உண்மையை அறிந்தால்.. ஆபத்தில் இருந்தவனைக் காப்பாற்றியிருப்பாளா அவள்?? 
 
சந்தேகமே!! 
 
***
 
அடுத்து வந்த நாற்பத்தியெட்டு மணிநேரங்கள் மாத்திரம் தான்.. அவன் அம்மருத்துவமனையில் சுயநினைவின்றி கிடந்ததே. 
 
தீராமல் நடந்த போலீஸ் விசாரணைகளின் பின்னர் தான் ஒரு திடுக்கிடும் உண்மை.. அனைவர் காதுகளிலும் உலா வரத் தொடங்கியது. 
 
ஆம், அவன் இந்திய பொருளாதாரத்தை மட்டும் அல்ல.. அதன் அரசியலையே சுட்டுவிரலில் ஒரு ஆட்டு ஆட்டுவிக்கும்.. தி கிரேட் பிஸினஸ் டைக்கூன், ‘அர்ஜூன் மனோஹர்’ என்பது தெரிய வந்ததும் முழு மருத்துவமனையுமே ஆடித்தான் போனது. 
 
மறுநிமிடம்.. அம்மருத்துவமனையில் நின்றும் பிரத்தியேக ஆம்புலன்ஸ் வாகனத்தில்.. அதியுயர் நவீன வசதிகள் கொண்ட.. அவனுக்கே அவனுக்கென்று சொந்தமான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான் அர்ஜூன். 
 
மலர்தல்-2
 
 கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 
 
கடந்து போன இரண்டு மாதங்களில்.. அவள் எங்கு சென்றாலும்.. யாரோ அவளைப் பின்தொடர்வது போலவும், நிதமும் கண்காணிப்பது போலவும்.. யாரோ அவளை வெறித்து வெறித்துப் பார்ப்பது போலவும்.. ஓர் பிரம்மை எழுந்த வண்ணமே இருந்தது அவளுக்கு.
 
அக்கணமெல்லாம் ஐயுற்று சலனம் கொள்ளும் மனம்!! 
 
‘ஏன் அவளால் என்ன முயன்றும்.. இந்த உணர்வினை விட்டும் வெளிவர முடியவில்லை? மீரா நீ ஒரு டாக்டர்.. இது பிரம்மை மறந்துரு மறந்துரு’ என்று தனக்குத்தானே மானசீகமாகச் சொல்லிக் கொண்டு அடுத்த வேலையைக் கவனிக்கத் திரும்பிச் சென்று விடுவாள் மீரா. 
 
அன்றொரு நாள், 
 
அவள் தன் பொறுப்பிலிருக்கும் நோயாளிகளை எல்லாம்.. காலையில் ஒரு எட்டு பார்த்து விட்டு மீண்டும் தன்னறையை அடைந்திருப்பாள். அங்கே என்றுமில்லாத பேராச்சரியமாக.. அவளது இருக்கையில் அமர்ந்திருந்தாள் அம் மருத்துவமனையின் இந்நாள் நிர்வாகி மற்றும் டாக்டர். உஷா.
 
 தன்னை விட ஐந்து வருடங்கள் பெரியவளான உஷாவைக் கண்டதும்.. நாயகி மீராவுக்குள், சிநேகபாவமும், கண்ணியமும் ஒருங்கே ஊறியது. 
 
இன்முகத்துடன் அறைக்குள் நுழைந்த மீராவோ, “வாட் அ சர்ப்ரைஸ் உஷா மேடம்.. என் ரூம்க்கு வந்திருக்கீங்க…” என்று கன்னங்குழியக் குழிய பேரழகாய் தன் தெற்றுப்பல் விகசிக்கக் கேட்டாள்.
 
ஆம், அவள் தெற்றுப்பல் கொண்ட பேரழகி!! 
 
டாக்டர் உஷாவும், தன் கண்களில் இருந்த மூக்குக்கண்ணாடியை சரி செய்த வண்ணமே, “யெஸ் மீரா.. சர்ப்ரைஸ் தான்.. உன்னால ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கு.. இங்கே வா இப்டி வந்து உட்காரு” என்று தன் முன்னிருந்த நாற்காலியைக் காட்டிச் சொல்ல.. மீராவின் விழிகளும்.. ஏதும் புரியாத வெள்ளந்தித்தனத்துடன் இடுங்கியது. 
 
மருத்துவமனை நிர்வாகியின் வார்த்தைகளை தட்டவும் முடியுமோ? 
 
மீராவும்.. பின்னிப் பிணைந்த பாதநடையுடன், அவளது அருகே இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்து கொள்ள, மேசை மீதிருந்த நாயகியின் கைகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டாள் உஷா. 
 
இந்த மருத்துவமனையின் இளம் நிர்வாகி தன் கையைப் பிடிப்பதன் அவசியம் என்னவோ? 
 
கேள்விகள் இருந்தும்.. விடையில்லாமல் உஷாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கலானாள் மீரா. மருத்துவமனை நிர்வாகியே உண்மைக்காரணத்தையும் மொழியலானாள். 
 
“இங்கே பாரு மீரா.. எங்க ஹாஸ்பிட்டல் இப்போ இந்த கொரோனா காலத்துக்கு அப்றம் நஷ்டத்துல ஓடிட்டிருக்கறது உனக்கே தெரியும்..டாக்டர்ஸ் சம்பளம், மெடிக்கல் எக்ஸ்பென்ஸஸ்னு அது இதுன்னு.. என் தலை மேல எவ்வளவு ப்ரஷர் ஓடிட்டிருக்கு தெரியுமா?” என்று உஷா ஏதேதோ சொல்ல.. அதே மருத்துவமனையில் தனக்கிடப்பட்ட பணியை மட்டும்.. ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்று செய்து முடிப்பவளுக்கு தலை, வால் என்று ஏதும் புரியாத நிலை. 
 
“அ.. ஆனா மேம்.. எ.. என்னால என்ன பண்ண முடியும்.. நானும் உங்க ஹாஸ்பிட்டல்ல வர்க் பண்ற சாதாரண டாக்டர்” என்று பூங்காரிகைப் பெண் குழப்பத்தில் தவித்த விழிகளுடன் கேட்டிருந்தாள். 
 
“நீ சாதாரண டாக்டர் தான்.. ஆனா நீ பண்ண காரியம் எவ்வளவு அசாதாரணமானதுன்னு உனக்கே தெரியல மீரா!”என்று பெரும்பீடிகையுடன் மூத்தவள் சொற்களை மிக மிகக் கவனமாகக் கையாண்டவளாக உரைத்திருந்தாள். 
 
உஷாவின் எதிராசனத்தில் அமர்ந்திருந்த பாட்டுடைத் தலைவி மீராவின் விழிகளும் ஒரு கணம் இமைத்தது, புரியாமையில். 
 
“எ.. என்ன மேம் சொல்றீங்க?”
 
இளையவளின் பதிலைக் கேட்டதும், சின்னப் புன்னகையுடன்.. சொகுசு நாற்காலியில் நின்றும் எழுந்து வந்த உஷா.. தற்சமயம்.. மீராவுக்கு பக்கத்தாசனத்தைத் திருப்பிப் போட்டு அமர்ந்து கொள்ளலானாள். 
 
இப்பொழுது உஷாவின் நாற்காலியும் சரி, அகமும் சரி, முகமும் சரி ஒருங்கே.. தெளிவற்ற வதனத்துடன் அமர்ந்திருந்த மீராவைத் தான் எதிர்நோக்கியிருந்தது. 
 
உஷா தொடர்ந்து சொல்லத் தொடங்கினாள். 
 
“ஆமா.. ரெண்டு மாசத்துக்கு முன்ன.. ஒரு எமெர்ஜென்சி கேஸ் வந்ததே.. நீ கூட தனியா நின்னு.. ஆபரேஷன் பண்ணீயே.. “அர்ஜூன் மனோஹர்”!!” என்று அவன் நாமத்தை உச்சரிக்க.. ஒரு கணம் அனைத்தும் நினைவில் வந்தாற் போல மின்னல் மின்னி அடங்கிய உணர்வு நாயகிக்குள். 
 
“ஆ.. ஆமா.. அதனால என்ன இப்போ?”
 
“இன்னைக்கு அவர் உயிரோட இருக்காருன்னா அதுக்கு நீ தான் காரணம்.. நஷ்டத்துல ஓடுற நம்ம ஹாஸ்பிட்டல விலைக்கு வாங்கக் கேட்டிருக்காரு.. அவர் மட்டும் எங்க கூட டீல் வைச்சுக்க ஒத்துக்கிட்டா.. நம்ம ஹாஸ்பிட்டல் தரமும் முன்னேறும்.. டாக்டர்ஸூக்கு சேலரி அதிகமாகும். நவீன மருத்துவ வசதிகள், கருவிகள் வரும்.. நம்ம ஹாஸ்பிட்டல் மாடர்னைஸ் ஆகும்.. இது எல்லாம் உன் கையில் தான் இருக்கு!!
 
மிகப்பெரும் சூட்சும சூத்திரத்தை.. சொற்கோர்வைகள் கொண்டு உஷா விபரிக்கலானாள்.ஆமாம்,நஷ்டத்தில் ஓடும் தன் மருத்துவமனையை தூக்கி நிலைநிறுத்தும் ஒரு பேரஸ்திரமாக மீராவை உபயோகிக்க எண்ணியிருந்தாள் மீரா. 
 
ஆனால், சூட்சுமங்களோ.. சூத்திரங்களோ.. சூனியங்களோ ஒன்றும் புரியவில்லை, நம் இளம் டாக்டருக்கு!! 
 
“எ.. எப்டி மேடம்?” – மீரா தன் ஒற்றைப்புருவம் நெற்றி மேட்டுக்கு மேலுயரக் கேட்டிருந்தாள். 
 
“இன்னிக்கு பகல்.. அர்ஜூன் மனோஹர் கூட..  எங்களுக்கு ஒரு அப்பாயின்மென்ட் இருக்கு… அதுக்கு உன்னையும் கூப்பிட்டிருக்காரு!”
 
உஷா தந்த உபரித்தகவலில்.. அவளுள் இருந்த திகைப்பு இன்னும் அதிகமானது. மருத்துவமனை நிர்வாகியான உஷாவும் பணமுதலை; அர்ஜூன் மனோஹரும் பெரும் பணமுதலை!! 
 
பணம், பணத்தை சந்திக்கப் போகின்றது;ஒத்துப்போகப் போகின்றது. இடையில், தன் உயிர் காக்கும் பணியை மட்டும் செவ்வனே செய்து முடித்த இவளை அவன் ஏன் பார்க்க நாட வேண்டும்? 
 
தத்தி டாக்ருக்குள்.. இழையோடியது பெரும் குழப்பம்!! அதனை வாய் விட்டுக் கேட்டும் விட்டிருந்தான் அவன். 
 
“என்னையா.. எ.. என்னை எதுக்கு கூப்பிடணும்?”
 
“தான் உயிரைக் காப்பாத்தின உனக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சிருக்கலாம். ஆனா இந்த விஷயத்துல நீ ஒரு லக்கி சார்ம்.. கண்டிப்பா நீ என்கூட வரணும்.. பேச வேண்டிய விதத்தில் நைச்சியமா பிஸினஸ் டீல் நான் பேசிக்கறேன். ஆனா உன்னைக் கண்டா அவர் மனம் இரக்கப்படலாம்.. அதனால வா!!”
 
பெரியவள், ‘உடன் வா’ என்றழைத்ததும் அறியாத பயத்தில் அவள் வயிறு இறுகியது. 
 
 அர்ஜூன் மனோஹர் ஏன் அவளை அழைக்க வேண்டும்? அவனைப் பாராமலேயே.. காட்டில் சிங்கம் புலியைப் போல அவளுள் பயப்பந்துக்கள் உருள்வதும் ஏன்? 
 
மருத்துவமனை நிர்வாகி இத்தனை தூரம் இறங்கி வந்து கேட்டபின்.. அவளுக்கு மறுத்துரைக்கவும் முடியுமோ? கேட்பது உயர்மட்டக் குழு ஆயிற்றே!! ஆக, ஒத்திசைவதைத் தவிர வேறு வழியில்லை.  
 
“சரி மேடம்.. வர்றேன்” என்று இவள் ஒப்புக்குச் சப்பாணியாக அர்ஜூன் மனோஹர் என்னும் காட்டு அரிமாவைப் பார்க்க.. அவனது குகைக்குச் செல்வதென்ற முடிவை எடுத்திருந்தாள் அவள். 
 
அவள் சம்மதம் சொன்னதும்.. ஒரே குஷியாகிப் போன உஷாவோ..  நாற்காலியை விட்டும் எழுந்து வந்து.. ஒரே தாவலில் இளையவளை தன் தோளோடு கட்டிக் கொண்டாள். 
 
“தேங்க் யூ.. தேங்க் யூ சோ மச்.. நீ தயாரா இரு.. லன்ச் டைம் வந்து அழைச்சுட்டுப் போறேன்” என்று மொழிந்து விட்டுச் சென்றதோடல்லாமல்.. சரியாக உரிய நேரத்திற்கு இவளை இங்கிருந்தும் அர்ஜூன் மனோஹரின் கெஸ்ட் ஹவுஸிற்கு அழைத்துச்செல்லவும் மறக்கவில்லை. 
 
ஆனால் இவளுக்குத் தான், மனதுக்குள்.. அர்ஜூன் மனோஹரின் வாசஸ்தலத்தை நெருங்க நெருங்க ஏனோ ஊழ்வினை வந்து உறுத்தப் போவது போல நெருடலாகவே இருந்தது. 
 
அவளும், உஷாவும் பயணப்பட்டு வந்த கார்.. அர்ஜூனின் இருப்பிடத்திற்குள் நுழைய.. அதன் போர்ட்டிக்கோ வனப்பைப் பார்த்த வண்ணமே, வந்த மீராவின் விழிகள் பேராச்சரியத்தைத் தத்தெடுத்துக் கொண்டன. 
 
வழியெங்கிலும் இருமருங்கிலும் குட்டி டியூலிப் மலர்களின் தோட்டம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்க.. அவற்றில் பல நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள் மேய்ந்து கொண்டிருக்கும் காட்சியை.. மீரா, மிகுந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்ட பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். 
 
 அவற்றின் எழிலைக் கண்டு..  அவள் நேத்திரங்கள் இன்னும் பேரழகாக விரிய.. கூட வந்த உஷாவுக்கும் அதே வாயடைத்துப் போகும் வண்ணம் அதிர்ச்சி தான் மேவியது. 
 
 மீராவின் காதுக்குள் கிசுகிசுப்பாக, “அர்ஜூன் சார் மல்ட்டி பில்லியனர்னு தெரியும்.. ஆனா இரசனைக்காரர்னு இப்போ தான் தெரியுது.. குட் டேஸ்ட்ல.. காத்து பூரா பூக்களோட நறுமணம்.. ஸோ ரிஃப்ரெஷிங்!”என்று உஷா கூற.. ஏதும் பேசாமல் மோனமாக தலையை மட்டும் அசைத்தாள் மீரா. 
 
இரு பெண்களும் வந்து சேர வேண்டிய இடம் வந்ததும் இறங்கிக் கொள்ள.. அவர்கள் வருவது முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்!! 
 
அவர்களை நோக்கி ஊட்டி குளிருக்குத் தகுந்தாற் போல மப்ளர் மற்றும் ஸ்வெட்டர் அணிந்து வந்த நபரொருவர்.. “உள்ளே வாங்க..சார் உங்களுக்குத் தான் வெயிட்டிங்” என்று மொழிந்து அவர்களை முன்னடத்திச் செல்லலானார். 
 
 அவர்களிருவரும்.. அர்ஜூன் மனோஹரின்.. கெஸ்ட் ஹவுஸிற்குள்.. இல்லையில்லை.. மாளிகைக்குள் நுழைந்தனர் என்று சொல்வது தான் சாலவும் பொருத்தம். 
 
காரிடாரின் இரு முனையிலும் எழுப்பப்பட்டிருந்த சுவர்கள் கண்ணாடியில் அமைக்கப்பட்டிருந்த.. நடுக்கூடத்தின் மையத்தில் நின்றும்.. செயற்கை நீரருவி உதித்தோடிக் கொண்டிருந்தது, மனதிற்கு மனோ இரம்யம் தருவதாய்!! 
 
அவ்விடம் எங்கனும் கமழ்ந்திழுந்ந நறுமணம் அவளைச் சற்று மனமயக்கும் விதமாகவே அமைந்திருந்தது. 
 
அவள் அங்கு வந்து சேர்ந்ததிலிருந்து.. இந்நொடி வரை..தன்னறையில் இருந்த பிரத்தியேக சிசிடிவி வழியாக அவளையே இரசித்து, நயந்து, லயித்துக் கொண்டிருந்தன இரு கழுகு விழிகள்!! 
 
பெண்மனத்திற்கோ ஏதோ உறுத்தத் தொடங்கிற்று, இயற்கையாகவே!! தன் புறமுதுகு சுள்ளென்று குத்தும் உணர்வு தோன்ற.. யாரோ தன்னை கண்காணிக்கும் உணர்வு அதீதமாக எழுந்து அலைக்கழிக்கத் தொடங்கியது அவளை. 
 
‘உஷா மேடத்திற்கும் அவ்வாறு தான் தோன்றுகின்றதா?’ என்று அவதானிக்கும் எண்ணத்துடன்.. பெரியவளின் முகத்தைப் பார்க்க, உஷாவோ சாதாரணமாகவே இருந்தாள். 
 
அது வேறு.. அவளை பெரிதும் அவஸ்தையுறச் செய்யப் போதுமானதாக இருந்தது. 
 
அழகிருக்கும் இடத்தில் அல்லவா ஆபத்தும் இருக்கும்? ஏனோ மீராவுக்கு இத்தனை அழகையும், ஆடம்பரத்தையும் கொட்டியிறைத்து மனம் மயக்கச் செய்யும் அந்த இடத்தோடு ஒன்ற முடியவில்லை. 
 
ஏனென்று சரிவர அறுதியிட்டுக் கூறிவிட முடியாத போதும், மீராவுக்கு.. இப்போதே இக்கணமே..   இந்த இடத்தை விட்டு வெளியேறி ஓடி விட வேண்டும் என்பது போல் ஓர் உணர்வு!! 
 
அவளைச் சூழ பிராணவாயு தூய்மையாய் சுழன்றடித்துக் கொண்டிருந்தாலும்.. மூச்சுக்கு முட்டித் தவிக்கும் ஓர் உணர்வு!! 
 
பிரம்மையாக, கடகடவென வெளியே ஓடிப் போய்.. சிரமப்பட்டு இதழ்கள் மூடி நிற்பவள்.. இதழ்களை நன்றாகத் திறந்து, “ஹாஹ்.. ஹாஹ்” என்று இழுத்து இழுத்து மூச்சை வெளியேற்றினால் தான் இந்த அவஸ்தை தீரும் என்ற உணர்வு!.
 
அவளொன்றும் அத்துணைக் கோழைத்தனமான ஸ்தீரி அல்லவே! ‘தைரியமா இரு’ என்று கோகிலாவையே அதட்டியவள் ஆயிற்றே? 
 
ஆனால், இந்த சூழல் அவளுள் ஒரு மாதிரியான மிரட்சியைக் கொடுத்தது. 
 
அவளுள் தோன்றிய மருட்சியில்.. தன்னருகே நடந்து வந்து கொண்டிருந்த உஷாவின் கைவிரல்களைப் பற்றிக் கொண்டவளோ, சுற்றுமுற்றும் சுழன்ற விழிகளுடன், “மேம்.. என்னமோ பேட் வைப்ஸா ஃபீலாகுது மேம்.. யாரோ நம்மளையே கண்காணிச்சிட்டிருக்கறாப்ல இருக்கு.. போயிரலாம் மேம்” என்று அவள் கிசுகிசுத்தாள்.
 
தங்கள் மருத்துவமனையின் தலைச்சிறந்த மருத்துவப் பெண் பேசும் பேச்சுக்கள் உஷாவுக்கு சின்ன மனச்சுணக்கத்தைக் கொடுக்கவே செய்தது. இருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல்.. வேறு மொழிந்தாள் உஷா. 
 
“அப்படிலாம் இல்ல மீரா.. இதோ பாரு அங்கங்கே சர்விலன்ஸ் கேமரா இருக்கு.. அதான் உனக்கு அப்டி தோணுது.. அதுவுமில்லாம.. நஷ்டத்துல ஓடுற ஹாஸ்பிட்டலை மீட்க ஒரே வழி இது தான்.. ப்ளீஸ் என் நிலமையை புரிஞ்சுக்க”  என்று அடிக்குரலில் இவளும் தன் பங்குக்கு கிசுகிசுத்துக் கெஞ்ச.. அதற்கு மேலும் தன்னுள் எழும் எதிர்மறை உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளவும் எங்ஙனம் இயலும் மீராவாலும்? 
 
இருவரும் கண்ணாடியிலான காரிடார் தாண்டி.. இன்னுமொரு பிரம்மாண்டமான  நுழைவாயிலில் நுழையவும்.. பாரம்பரிய முறைப்படி தேக்குமரத்தினால் ஆக்கப்பெற்ற அப்பெரிய கதவுகள் மூடவும் சரியாகவிருந்தது. 
 
கதவைப் பூட்டும் போது எழுந்த அரவம் கூட இவளுக்கு நல்லதை உணர்த்தாமல் போக.. மூடப்பட்ட கதவையே பார்த்திருந்த கணம் கேட்டது, அவர்களை வழிநடத்தி வந்த பணியாளனின் குரல். 
 
 “சாரைப் பார்க்க உங்க ரெண்டு பேரில் ஒருவர் மாத்திரம் உள்ளே போகலாம் மேடம்.. ..”என்று பணியாளனும் சொல்ல வந்த இரு பெண்களில் யார்தான் உள்ளே செல்ல முடிவெடுத்திருக்கவும் கூடும்? 
 
ஆம், சாட்சாத் அது மருத்துவமனையின் இளம் நிர்வாகி உஷாவே தான்!! இருப்பினும், தன்னோடு வந்த நாயகி மீராவை தனியே விட்டுச்செல்ல பிரியம் கொள்ளாமல்.. மீராவைத் திரும்பி.. ஒரு பார்வைப் பார்த்தாள் அவள். 
 
அந்தப் பார்வையில் அப்படி என்ன இருந்தது? 
 
‘நான் உள்ளே போய்ட்டு வர்றேன்.. நீ இருந்துக்குவேல்ல?’ என்று விழிகளாலேயே சங்கேத பாஷையில் கேட்பதுபோல இருந்தது உஷாவின் பார்வை. 
 
மெய்யாலுமே, மீராவுக்கும் கூட.. அவன்.. ‘அர்ஜூன் மனோஹரை’ப் பார்க்கும் எண்ணமோ.. அவனது நன்றி நவிலலை ஏற்றுக் கொள்ளும் எண்ணமோ ஒரு சிறிதும் இயல்பாகவே இல்லை. 
 
 ஆகையினால் , உஷா உள்ளே செல்ல முடிவு செய்தது மனதிற்கு ஒரு இதத்தைப் பரிசளிக்க.. மெல்ல தன்னையே பார்த்திருக்கும் உஷாவை நோக்கித் தலையாட்டினாள் தலைவி. 
 
“ம்ம்.. போய்ட்டு வாங்க மேடம்.. நான் இங்கேயே இருந்துக்கறேன்” என்று கூறி உஷாவை வழியனுப்பி வைத்தாலும் கூட.. ஏனோ மீரா அவ்விடத்தில் ஒரு அணுவும் ஆசுவாசமாய் உட்கார்ந்து விடவில்லை. 
 
   அவள் தன் உடலின் அட்ரினலின் சுரப்பு அனிச்சையாய் அதிகமாக, கைவிரல்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்துப் பிசைந்தவாறு நின்றாள். 
 
 அங்கே அவள் நின்றிருந்த ஒவ்வொரு நொடியும் ஏதோ இரு கண்கள்.. அவளை வேட்டையாடி விடும் வெறியுடன்.. அவளையே வெறித்துப் பார்த்திருப்பது போல ஒரு மனோபிரம்மையும் அதிகமானது. 
 
அக்கணம்.. தவிக்கும் மனதினை ஆசுவாசப்படுத்துவது போல.. திடீரென்று அவள் செவிகளில் தவழ்ந்து வந்து  விழுந்தது, ஒரு புல்லாங்குழல் கானம். 
 
 அது அலைப்புற்றுக் கொண்டிருந்த இவள் மனதினை சாந்தப்படுத்துவதாய் இருந்தது. இது, காடு, மேடெல்லாம் அலைந்து திரிந்த வேடந்தாங்கல் பறவையொன்று மீண்டும் தன் சொந்த இல்லத்திற்கே திரும்பியது போலத் திருப்தியைக் கொடுத்தது. 
 
குழலிசைப்பது ராதையின் கண்ணனோ? 
 
விழிகள் மூடி.. ஓர் மோன தியானத்தின் நிலைக்குச் சென்றவளின் பாதங்கள் அனிச்சையாய் நடந்தன.. இசை வந்த திசை நோக்கி!! 
 
இந்த இன்னிசை.. அவளின் இன்னுயிர் வரை ஊடுருவிக் கட்டிப்போடுவதும் ஏனோ? 
 
அது அந்த நடுக்கூடத்தை ஒட்டினாற் போலிருக்கும், பிறிதொரு அறையில் நின்றும் வருவது புரிய.. அவளும் இனிமை மயக்கத்தின் வசம் ஆட்பட்டாற் போன்று.. அறையைத் திறந்து உள்ளே நுழைந்தாள். 
 
அவளுள் ஓர் ஆர்வம்! பேரார்வம்!! புல்லாங்குழல் இசையின் கர்த்தாவைக் கண்டுவிடும் ஆர்வம்!! 
 
உள்ளே நுழைந்ததும்.. என்ன ஆச்சரியம்!! டப்பென்று அந்த இசைக்கானம் நின்று போனது. அதே சமயம் அறையில் உள்ளவற்றைப் பார்த்து.. அவள் விழிகளும் விரிந்தது. 
 
அப்படி அவள் விக்கித்து நிற்கும் வண்ணம்.. முழுதும் எங்கும் வெண்மை எதிலும் வெண்மை என்று காட்சி தந்த அறையில் எதைக் கண்டாள்? 
 
அது பற்பல எழுத்துருக்களைக் கொண்டு.. ஓர் அழகிய தேவதைப் பெண்ணின்.. கூந்தல் ஒழுக புறமுதுகு காட்டி நிற்கும் ஓவியம்!! 
 
அவ்வோவியத்திலுள்ள பெண்ணும், அவள் முதுகிலுள்ள மச்சமும் நிரம்பவும் காலம் காலமாகக் கண்டு பரிச்சயப்பட்டிருப்பதாக அவளுக்கு ஆணித்தரமாகத் தோன்றியது. ஏனோ? 
 
சின்னஞ்சிறு எழுத்துக்களைக் கொண்டு.. ஓர் பெண்ணின் பிரம்மாண்டமான ஓவியமா?அவள் நயனங்கள் விரிந்தது. 
 
 அந்தச் சின்னஞ்சிறு எழுத்துருக்களைக் கண்டதும்.. சற்றே அருகில் விரைந்து சென்று.. அவற்றை வாசித்து விடும் ஆர்வம் வந்தது, அவளுக்கு. 
 
 மெல்ல அருகில் சென்று.. அவற்றினை தன் விரல்கள் கொண்டு ஸ்பரிசித்தவளாக.. எழுதப்பட்டதை அவள் பார்க்க ஆயத்தமான போது, சற்றே அவளைத் திடுக்கிடச் செய்யும் வண்ணம் கேட்டது, பின்னாலிருந்து ஒரு பெண் குரல்.
 
அது.. சீருடை அணிந்து காணப்பட்ட அவனது மாடமாளிகையின் பணிப்பெண்ணின் குரல்!! 
 
 “மேடம்.. டீ?…”என்ற குரலில்.. திடுக்கிட்டுக் கலைந்து திரும்பியவள்.. தன் முன்னே நீட்டிய டிரேயுடன் நிற்கும்.. அப்பெண்ணிடம் நின்றும்.. கப்பினை வாங்கிப் பருகலானாள். 
 
மதிய உணவு நேரத்தில்.. உணவைக் கூட அருந்த விடாது, உஷா அவளை அழைத்து வந்திருக்கவே.. அவளுக்கும் பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டுதானிருந்தது. 
 
இருப்பினும், யானைப்பசிக்கு சோளப்பொறியாக சுடச்சுட வந்த டீயையாவது பருகுவோம் என்று தோன்றியதோ என்னவோ? ஏதும் மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொண்டாள் அவள். 
 
குளிருக்கு இதமாக அவள் நாவு நனைத்து தொண்டை வழி அமிர்தமாக இறங்கிப் போனது டீ!! 
 
இரண்டு சிப்களை சிப்பிக் கொண்டே.. இன்னும் போகாமல் நின்றிருந்த பணிப்பெண்ணிடம்.. தன்னை மிகவும் ஈர்த்த அந்த ஓவிய எழுத்துருக்களைப் பற்றி அளவளாவலானாள் மீரா. 
 
“இந்த பெயின்டிங்க்ல.. அப்டி குட்டிகுட்டியா என்ன எழுதியிருக்கு?” என்று அவள் அந்தப் பெண்ணிடம் கேட்டதும், ஏதோ ஹாஸ்யம் கேட்டதைப்போலத் தான் அந்தப் பெண் சிரித்தாள்.
 
 ” ஹஹஹா.. இது எல்லாமே எங்க சாரோட கைவண்ணம்.. சிறப்பா ஓவியம் வரைவாரு.. அப்டி அவர் வரைந்த ஓவியங்கள்ல ஒண்ணு தான் இது.. ஆனா அந்த சின்ன சின்ன எழுத்துருக்கள் பின்னாடி ஒரு அழகான கவிதை இருக்கு.. அவருடைய மனைவியின் ஞாபகார்த்தமா அந்தக் கவிதை.. “என்றவள்.. தன் அளவான மில்லி மீட்டர் சிரிப்பை உதிர்த்து விட்டு
 அங்கிருந்தும் கிளம்பிப் போனாள். 
 
ஆனால், அப்பணிப்பெண் கிளம்பிய பின்னும் கூட.. அவளின் அதிர்ச்சி மாத்திரம் அவளை விட்டும் கிளம்பியபாடில்லை. 
 
 மீரா.. தன்னால் சிகிச்சையளிக்கப்பட்ட முகமறியா வாலிபனின் இந்தக் கலாரசனை மிகுந்த ஓவியத்தையே.. அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் ஓரிரு சில கணங்கள் இமையாமல் பார்த்திருந்தாள். 
 
மனைவியை ஓவியத்தில் வடித்து.. அதில் சின்னச் சின்ன எழுத்துருக்கள் கொண்டமைந்த கவிதை வடிக்கும் அளவுக்கு.. தன் இல்லாள் மீது  பெரும் காதலா அவனுக்கு? 
 
எனினும், பணிப்பெண் உகுத்துச் சென்ற, “மனைவியின் ஞாபகார்த்தமாக ஓவியம்” என்னும் வாசகத்தில் பொதிந்துள்ள ஞாபகார்த்தம் என்பதன் பின்னுள்ள அர்த்தமும் யாதோ? 
 
ஞாபகார்த்தம் என்னும் போது.. அவனது மனையாள் தற்போது உயிருடன் இல்லையா? 
 
அதன் விரக்தியில் தான்.. தாறுமாறாக காரினை ஓட்டிச்சென்று கோரமான விபத்தினையும் சந்தித்தானா? 
 
உரியவன் வந்து நடந்தது இன்னது என்று சொல்லாமல்.. இவளது தறிகெட்டுப் பாயும் கற்பனைக் குதிரையோ தன்னிஷ்டத்துக்கு, ஏதேதோ கற்பனைகள் செய்து கொண்டது. 
 
இப்படி சிந்தனை வயப்பட்டபடியே அவள் அந்த அறையின் சோபாவை நோக்கி பையப் பைய நடந்த கணப்பொழுது அது. கண்களில் விழுந்த பொருட்கள் யாவும் இரண்டிரண்டாக தோற்றமயக்கம் கொண்டு புலனாகத் தொடங்கியது. 
 
 திடீரென்று அவள் பாதங்களும் தள்ளாடி.. நடுங்கத் தொடங்க.. அவள் தலையும் மெல்லச் சுற்றத் துவங்கியது.  
 
அவள் கையிலிருந்த காலி காபிக் கப்பும் திடீரென்று அவளில் நின்றும் நழுவி.. அந்த கலைநயம் மிக்க டைல்ஸ் தரையில் சடாரென்று வீழ்ந்து நொறுங்கிப் போன நொடி அது.  
 
காபி கப்.. சில்லு சில்லாகப் போன தரையில்.. மீராவும்.. சுயநினைவை இழந்து விழ எத்தனிக்க.. படாரென்று திறக்கப்பட்ட கதவு வழி.. எங்கிருந்தோ வந்தாள், மீண்டும் அதே பணிப்பெண்! 
 
தலைவியாளை.. தன் கைகளில் ஏந்திய பெண்ணோ, விழிமணிகள் இரண்டும் மேல்சொருக நிற்கும், மீராவின் செம்பவளக் கன்னங்களை தன் கையால் தட்டித் தட்டி எழ வைக்க முயன்றாள். 
 
“மேம்.. மேம்.. க.. கண்ண திறந்து பா.. பாருங்க மேம்!!” என்று அவள் சொல்வது யாவும் எங்கோ கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பது போல எதிரொலியுடன் கேட்டது. 
 
அவளுக்கு என்ன நடக்கின்றது? சொற்ப நேரத்திற்கு முன்பு வரை நன்றாகத் தானே இருந்தாள்? எனில், இந்தத் திடீர் மூர்ச்சையுறுதலுக்கு ருசுவும் என்னவோ? 
 
அவள் பருகிய காபியில் ஏதேனும்.. மயக்கம் தரும் வேதிப் பொருட்கள் கலக்கப்பட்டதுவோ? 
 
விழிகள் அவளையும் மீறி மூடிக் கொள்ளத் துடித்த அத் தருவாயிலும், “எ.. எனக்கு.. எ.. என்னாகு.. து??” என்று சந்தேகக் கேள்வி கேட்டவாறு.. இறுதியில் தன் விழித்திறப்புப் போராட்டத்தை கைவிட்டு விட்டு.. நேத்திரங்களை மூடிக் கொண்டாள் மீரா. 
 
 அவளைச் சூழ எங்கும் கும்மிருட்டு கவிழத் தொடங்க..அவள் தனக்கு என்ன நிகழ்கின்றது என்பதை அறியாத அப்பாவியானாள். .
 
 பணிப்பெண்மணியோ அவளை.. கைத்தாங்கலாக.. பாதங்கள் தரையில் வழிய வழிய அழைத்துச் சென்று அருகிலிருந்த சோபாவில் படுக்க வைத்த கணம்.. அறையின் எதிர்முனையில் இருந்த மற்றுமொரு கதவு திறக்கப்பட்டது.
 
அந்தக் கதவு வழியாக உள்ளே வருவதற்கும், வெளியேறிப் போவதற்கும் உரித்துடைய ஒரே நபர், அது அவன்!! 
 
தி கிரேட், “அர்ஜூன் மனோஹர்!”
 
மீராவை சோபாவில் கிடத்திய பெண்ணோ.. அறையில் நிழலாடுவது கண்டது மாத்திரம் தான் தாமதம், சட்டென்று தலையைக் குனித்து.. பெரிய ராஜாதிராஜர்களுக்கு, மரியாதை செலுத்தும் தோரணையில் நின்று போனாள். 
 
“அ.. அர்ஜூன் சார்” என்று திக்கித் திணறி உரைத்தவளின் குரலில் பயம், கண்ணியம், பெருமதிப்பு என அனைத்தும் மிளிர்ந்திருந்தது. 
 
அவன்.. திடகாத்திரமான இராட்சத வலுவுள்ள ஆடவன்.. தன் அழுத்தமான எட்டுக்கள் பதித்து.. சாவதானமாக நடந்து தன் காதற்கிழத்தியை நாடி வந்தான். 
 
தன்னவளைக் கண்டதும்.. அப்படியே அவளை அள்ளி நெஞ்சோடு அணைத்து.. வாரிக் கொண்டாட.. அவனது உடலின் ஒவ்வொரு செல்லும் பரபரத்து நின்றது. 
 
 அனிச்சையாய் மேலெழத் துடித்த கையினை அடக்கி.. தன் பேன்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்த வண்ணம் நின்றவனது பார்வை எல்லாம் அவள் மீது தான் அங்கிங்கெனாதபடி நிலைத்துப் பரவியிருந்தது. 
 
 தன் இரட்டைவிரலை மட்டும் அசைத்து.. பணிப்பெண்ணை.. “போ” என்பது போல சைகைச் செய்ய.. 
 அந்தப் பெண் மீண்டும் தலையை பவ்யமாக.. அசைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
 
 அவன் கண்கள்.. அவளும், அவனும் மாத்திரமென தனித்து விடப்பட்டிருந்த அந்த பிரத்தியேக அறையின் சோபாவில் படுத்திருக்கும் பூங்காரிகை மேல் விழுந்தன.
 
அவளது அருகே சென்று அமர்ந்தவனுக்கு.. என்ன தோன்றியதோ? 
 
இதுகாறும் இருந்த தவிப்பு.. தாங்கல், பிரிவு தந்த ஆற்றாமைத்துயர் என அனைத்தும் வெடித்து வெளிப்படும் போலிருந்தது. 
 
அவன்.. அவளை.. தன் கரங்கள் தழுதழுக்க.. நெஞ்சோடு வாரி அணைத்துக் கொண்டிருந்தான். 
 
தன் விழிகளை இக்கணம் ஆசுவாசமாக  மூடி அவளுக்கே அவளுக்கென்று மாத்திரம் சொந்தமான பிச்சிப்பூ வாசனையை ஆழமாக உள்ளிழுத்து நின்றான். 
 
அவனது உரசல்கள், தீண்டல்கள் ஏதும் அறிந்திராமல் சயனித்திருந்தவளின் காதுக்குள் தன் இதழ்களை நுழைத்தவன்.. “ம்ம்ம்.. மூணு வருஷம்.. கிட்டத்தட்ட உன்னைப் பிரிந்து மூணு வருஷம் இருந்திருக்கேன்.. எப்படி இருந்தேன்னு கே.. ட்டா எனக்கே சொல்லத் தெரியாது.. கடந்து போன ஒவ்வொரு நொடியும்.. நரக வேதனை போல இருந்ததுடீ” என்று 
 அவன் தன் தடிப்பான கரகரத்த டெஸ்டெஸ்டரான் குரலில் கிசுகிசுத்தான்.
 
அவளது முகமெங்கும்.. பிரிந்திருந்த தாபம் தாங்கொணாது.. ‘இச்சு இச்சு’ என்று முத்தாடிக் கொண்டே வந்தவன்.. இறுதியில்.. அவளது நனிமதுர சுவை கொண்ட இதழ்களைக் கௌவிக் கொண்டான். 
 
அசுரத்தனமாய்!! ஆராதிப்பாய்.. முத்தாய்ப்பாய்.. முகிழ்க்கச் செய்வதாய்.. தன்னுணர்வுகளைக் கட்டுப்படுத்தவே முடியாத மதம் கொண்ட வேழமாய் ஒரு முத்தம்!! 
 
அவன் இதழ்கள்.. அவளுடன் சண்டை செய்ய.. அவள் இதழ்களோ.. வெள்ளைக்கொடி காட்டினாற் போல எதிர்ப்போ, சலனமோ இன்றி இருந்தது. 
 
அவளது இதழ்கள் சிவந்து வீங்கிப் போனாலும்.. மூன்று வருட ஏக்கத்தை.. ஒற்றை முத்தத்தில் காண்பித்து விடும் வேகம் வேங்கைக்குள். 
 
“நீ வேணும் கண்ணம்மாஹ்..இந்த உலகத்திலேயே நீ மட்டும் தான் வேணும்” என்று அதிகாதலில் பிதற்றியவன்.. இவளிடம் செய்வது காதலா? அத்துமீறலா? 
 
ஒருவன்.. தன்னிடம் பெருங்காதலை மறைமுகமாக யாசித்து.. பெருந்தவம் புரிந்திருப்பது அறியாது.. இனி தன் விதியும் அறியாது உறங்கிக் கொண்டிருந்தாள் மீரா. 
 
அவள் அர்ஜூன் மனோஹரின், ஆசை மீரா!!
 
****
 
(இதோ ‘உரசி மலர்த்தாதே மாறா’ என்னும் புதுக்கதையின் முதல் அத்தியாயத்துடன் வந்துட்டேன். படித்து விட்டு எப்படியிருக்குன்னு கமென்ட்ல சொல்லுங்க. அப்போ தான் உற்சாகம் பொங்க அடுத்த யூடிக்களுடன் என்னால ஓடி வர முடியும். God bless and much love 😘😍🙏) 

10 thoughts on “உரசி மலர்த்தாதே மாறா !-1 &2”

  1. I’m not sure where you’re getting your information, but good topic. I needs to spend some time learning much more or understanding more. Thanks for magnificent information I was looking for this info for my mission.

    1. Your Tamil is very different, it’s really take time to read and understand, so pls write Tamil in simple otherwise you cannot stable in this field that my opinion.

      1. விஷ்ணுப்ரியா

        நான் ஒண்ணும் கத்துக்குட்டி இல்லைங்க.நாற்பத்தைந்து நாவல்களுக்கும் மேலே எழுதிட்டேன்.பத்து வருடங்களா தொடர்ந்து எழுதுறேன். அத்தனையும் புத்தகங்களாக பதிக்கப்பட்டுமிருக்கிறது.ஒன்று கூட Paperback ஆக இல்லாமல் இல்லை.அனைத்து புத்தகங்களும் எல்லா நூலகங்கள்,கடைகளிலும் கிடைக்கிறது.கூடவே அமேசான் நடத்திய kdp contest இல் நூற்றுக்கணக்கான நாவல்களில் இறைவனது அதீத கிருபையால் இரண்டாம் இடமும் பெற்றிருக்கிறேன்.

        இதுக்கப்றமும் இந்த பீல்டில் நிலைக்க என்ன தகுதி வேணும்னு சொல்ல வர்றீங்க?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top