5
பொல்லா இரவை பொழுதாக்கிக் கொண்டு விடிந்தான் ஆதவன்…
காலையில் யாரோ எங்கோ விட்டு எறிந்த கல் பட்டு கண்ணாடி உடையும் சப்தம் கேட்டு மெல்ல துயில் கலைந்தாள் கொற்றவை…
கைகள் இரண்டையும் தூக்கி சோம்பல் முறித்தவள்… சுற்றியும் முற்றியும் பார்த்து தன்னிலையை நினைவு கொணர்ந்தவள் எழுந்து மணியைப் பார்க்க, அது படார் என்கிற சத்தத்துடன் கீழே விழுந்து உடைந்தது… எப்படி என்று விளக்க வேண்டிய அவசியமே இல்லாமல் அருகிலே சாட்சியென வீசி எறியப்பட்ட அந்த கல்…
அதில் திடுக்கிட்டு திரும்பியவள், கல் வந்த திசையில் இருந்த சாளரம் வழியே எட்டி பார்த்தவளுக்கு மூச்சே நின்று விட்டது…
ஊரே ஒன்றுக் கூடி அவ்வீட்டு வாசலில் நின்று கல் எறிந்தாள்… அவளும் என்னதான் செய்வாள்… அவள் என்ன ஏது என்று யோசிக்கும் முன் மேலும் சில கற்கள் பறந்து வந்து விழுந்தன…
அவர்கள் எறியும் கல் தன் மீது படாமல் இருக்கும் படி தற்காத்துக் கொண்டவள்,
“என்னயா நடக்குது இங்க… மக்கள் ஒரு பக்கம் ஆவேசமாக கத்துறாங்க… என்னைய கட்டுன மகராசன் மாடியில மட்டையாகி மல்லாக்கப் படுத்துக் கிடக்குறாரு… இப்போ நான் என்ன பண்ணறது… போலீஸ்க்கு கூப்பிடலாமா…”
என யோசிக்கும் போதே…
போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் அவர்கள் வீட்டின் காம்பவுண்டுக்குள் கேட்டது…
“என்னது… மும்பை போலீஸ் இவ்வளவு ஸ்மார்ட்டா… மனசுல நினைச்சதுக்கே இவ்வளவு சீக்கிரம் வந்துட்டாங்க…!!”
என நினைத்த கொற்றவை அணில் குஞ்சாக வாயை பிளக்கவும், அவள் இருந்த மாளிகையின் கதவு தட்டவும் சரியாக இருந்தது…
“உள்ள யாரு… கதவத் திறங்க… நாங்க பத்ரிநாத் சக்ரவர்த்தியை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்… அவரை தப்ப வைக்க முயற்சி பண்ணாதீங்க… கொலை கேஸ்ல தேடப்படும் முக்கிய குற்றவாளி…!!”
என போலீஸ் வெளியிலிருந்து கூறுவதை கேட்டவள் அரண்டு விட்டாள்…
கொலையா…??
என விழித்தவள்,
“பின்னே நேற்று பார்ல பெருசா ஒன்னும் அடிபடலதானே… அந்த பார் ஓனர் சொன்னார்… ஒருவேளை இவர் நேற்று அடிச்ச அடியில செத்துட்டானா… இவர் அவ்வளவு ஸ்ட்ரோங்கா இல்லை… அவன் அவ்வளவு வீக்கா… தெரியலயே… தேவையில்லாம வில்லனிசம் பண்ணுனதால இப்போ இவர் ஜெயிலுக்கு போகப் போறாரே… இப்போ இவரை நினைச்சு பரிதாபப்படனுமா… இல்ல வருத்தப்படனுமா… எதுக்கும் மூஞ்சிய சோகமாவே வச்சிப்போம்…”எதோ ஒன்னு அவங்களே முடிவு பண்ணிக்கிட்டும்…
“இங்க பாருங்க… இந்த பங்களாவைச் சுற்றி போலீஸ் நிக்கிறது வீண் முயற்சி… எதுலயும் ஈடுபடாம ஒழுங்கா பத்ரியை எங்ககிட்ட சரண் அடைவதைத் தவிர வேற வழியே இல்ல… இப்போ நீங்களா கதவத் திறந்து வெளிய வரீங்களா… இல்லை நாங்களே கதவை உடைச்சிக்கிட்டு உள்ள வரட்டுமா…”
என ஒலிப் பெருக்கியில் கத்தியவர்…
உடனே மற்ற காவலர்களுக்கு சைகை இட, அவர்கள் பத்ரி வீட்டு கதவை உடைக்க முயன்றனர்…
டம்… டொம்… என்று கதவு உடைப்படும் சப்தம் கேட்டு கொற்றவை பதறி நிற்கும் வேளையில்… வெளியில் இருந்து கன கம்பீரமாக ஒரு குரல் ஓங்கி ஒலித்தது…
“என்ன இன்ஸ்பெக்டர்… காலையில இந்தப் பக்கம்…?”
என அரங்கம் அதிர விட்டபடி வந்தான் ஆதிரன்…
அவனின் சிங்கப் பார்வையில் காவலர்கள் அஞ்சி நடுங்க, வார்த்தைகள் தந்தியடித்தன…
“சார்… அது பத்ரி சார்… இருப்பினும் அவர் வாங்கிய இலஞ்சப் பணத்துக்காக நேர்மையாக இருக்க எண்ணியவர்…”
“சார்… பத்ரியை… ம்ம்… பத்ரி சாரை அரெஸ்ட் பண்ண வாரண்ட்டோட வந்து இருக்கோம்… அவரை எங்களுக்கு கோ-ஆபரேட் பண்ண சொல்லுங்க… அது தான் அவருக்கு நல்லது… இல்லன்னா…”
என அதுவரை இருந்த தைரியம் அடுத்த வார்த்தைக்கு போதவில்லை போலும்…
“இல்லன்னா…??? சொல்லுங்க இன்ஸ்பெக்டர்… நீங்க இன்னைக்கு காலையில நியூஸ் பார்க்கல போல… அப்படி இல்லன்னா ஒன்னும் பிரச்சனை இல்லை… வீட்டுக்கு போயிட்டு நிதானமா பாருங்க…”
“சார்… நீங்கள் எங்கள கடமை செய்ய விடாம தடுக்கிறீங்க…??”
என காக்கி சட்டை விறைப்பாக சொல்ல…
“அடடே… அப்படியா… ஆனால் கோர்ட் ஆர்டர் வேற மாதிரி சொல்லுதே…”
என ஆதிரன் சொன்னவுடன், அவனுக்கு பாடிகார்டாக வேலை செய்யும் ராஜ் இன்ஸ்பெக்டரிடம் கோர்ட் நோட்டீஸை ஒப்படைத்தான்…
அதில் பத்ரிக்கு போலீஸ் பாதுகாப்பில் நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பச்சை நிற மையால் பறைசாற்றி இருந்தது…
அதைப் படித்ததும் அந்த காக்கி சட்டை முகத்தில் பரவிய ஏமாற்றத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை…
“இன்னைக்கு அவனை (பத்ரியை) கைது செய்து நாய் மாதிரி ரோடு ரோடா இழுத்து வந்து உங்க மனச குளிர்விக்கிறேன் சார்…”
என அவர் யாருக்கோ கொடுத்த வாக்கு, அவர் காதுகளில் ரீங்காரமிட, அது நிறைவேறாமல் போனதில் பெரும் ஏமாற்றம் அடைவது எதார்த்தம் தானே…
ஆனால் அவர் ஒன்றை மறந்து விட்டார்…
அவர் கைது செய்ய வந்தது சாமானியனை அல்ல… சக்ரவர்த்தி பரம்பரையின் மூத்த வாரிசை… அதுவும் அவன் தந்தை ஆதிரன் என்று தெரிந்தும், அவர் பத்ரி மேல் கை வைக்க நினைத்தது அவருக்கே பாதகமாகி போனது…
“சார் கிட்ட அந்த லெட்டரையும் கொடுப்பா… எதையோ எதிர்பார்த்து வந்தவர் ஏமாந்து போக கூடாது இல்ல…”
என ஆதிரன் கேலியாக சொன்னதும், ராஜ் தன் பாக்கெட்டிலிருந்து மற்றொரு லெட்டரை இன்ஸ்பெக்டரிடம் நீட்ட…
அதை வாங்கி படித்தவர் முகம் குப் என வியர்த்து வெளிறிப் போனது…
“என்ன இன்ஸ்பெக்டர் சார்… போதைப் பொருள் கடத்தின வழக்குல அந்த முக்கிய பிரமுகர் மகனை லஞ்சம் வாங்கிக்கிட்டு விட்டுட்டு, அவனுக்கு பதிலா ஒரு அப்பாவியை அரெஸ்ட் பண்ணீங்களே… அந்த கேஸ்ல அந்த முக்கிய பிரமுகர் பையனே தான் தப்பு செஞ்சதா சரண்டர் ஆகி, நீங்கள் அவங்களை மிரட்டி லஞ்சம் வாங்கினத ஒத்துக்கிட்டானாம்… அதனால கேஸ் உங்க மேல திரும்பிடுச்சாமே…”
“இப்போ சார் என்ன பண்ணுவார் நினைக்கிற, ராஜ்…?
சார் அவரை காப்பாத்திக்க போறாரா…??
இல்ல கொடுத்த காசுக்கு விசுவாசமா பத்ரியை அரெஸ்ட் பண்ணியே தீருவேன்னு நிக்க போறாரா…??”
“சொல்றேன்னு… தப்பா நினைக்காதீங்க சார்… நானா இருந்தா முதல்ல என்னை காப்பாத்திக்கத்தான் நினைப்பேன்… இன்ஸ்பெக்டர் புத்தி உள்ளவர்… பொழச்சிக்குவார்னு தான் சார் நினைக்கிறேன்…”
என ராஜ் நிதர்சனத்தை சொல்ல…
துண்டை காணோம், துணியை காணோம் என்று அங்கிருந்து கிளம்பி சென்றது மொத்த போலீஸ் படையும்…
வெளியே நின்று பத்ரிக்கு எதிராக கோஷம் போட்ட மக்கள் கூட்டமோ, ஆதிரனின் கடைக்கண் பார்வையிலும், ராஜின் அதிரடியிலும் எண்ணிப் பத்தே வினாடிகளில் ஒரு ஈ காக்கா கூட நடமாடாத படி அப்புறப்படுத்தப்பட்டது…
அவர்கள் சென்ற பின் அவ்வீட்டின் பெரிய மரக்கதவை தட்டிய ராஜ்…
“மேடம்… கதவத் திறங்க… சார் வந்துட்டார்… இனி பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லை…”
என ராஜின் குரல் கேட்டு திறந்தது அலிபாபா குகை கதவு…
சூரிய ஒளிக்கதிரின் உள்ளே இருந்து வெளியே வந்தான் ஆதிரன்…
அவனை கண்டவர்கள், பின் நாற்பதுகளில் அவன் அகவை என்றால் அவ்வளவு எளிதில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… அத்தனை இளமை அவனிடத்தில் ஊஞ்சலாடியது… தலையில் ஆங்காங்கே எட்டி பார்த்த வெள்ளை முடிக்கூட அவனுக்கு தனி ஒரு அழகை தான் எடுத்துக் காட்டியது… இப்போதும் ரேம்ப் வாக் மாடல் போல் வலம் வந்தான் ஆதிரன்…
கம்பீர நடையிட்டு உள்ளே வந்த ஆதிரன்… கொற்றவையை ஏற இறங்க பார்த்தான்… அவள் இரண்டு நாட்களான உடையில் அழுக்கு மூட்டையாகத்தான் காட்சி அளித்தாள்…
முதல் கோணல் முற்றும் கோணலாகுமா…??
