ATM Tamil Romantic Novels

தீயை தீண்டாதே தென்றலே -6

 

6

 

தன் முன்னால் ஜோராக வந்து நின்ற ஆதிரன் சக்ரவர்த்தியை கொற்றவை வியப்பாகப் பார்க்க… இவர்களோ தன் முன்னால் நின்ற கொற்றவையின் தோற்றத்தை வைத்து இவளா சக்ரவர்த்தி வீட்டின் மருமகள் என எண்ணாமல் இருந்தால் தான் ஆச்சர்யமே…

 

 

“இது தான் என் மருமகளா…?” எனக் கேட்ட ஆதிரன் குரலில் என்ன இருந்தது—ஏமாற்றமா? அல்லது கோபமா? இல்லையே, அதற்கும் மேலாக அதிகாரத் தோரணை அல்லவா அதில் இருந்தது…

அது அயர்ந்து நின்ற கொற்றவையை நிமிர்ந்து நிற்க வைத்தது…

 

ஆமாம் மாமா, உங்க புள்ள என் கழுத்துல தான் தாலி கட்டி இருக்கிறார்… என இவளும் சரிக்குச் சரியாக நின்றாள்…

 

கொற்றவையின் இந்த பதிலை ஆதிரன் எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகத்திலிருந்தே தெரிந்தது…

 

இராவணன் இவளைப் பற்றி சொல்லி இருந்தாலும், தன் வீட்டுக்கு மருமகளாகும் தகுதி இவளிடம் உள்ளதா என்றே ஆதிரன் சோதிக்க…

தாலி கட்டினதால மட்டும் பொண்டாட்டி ஆகிட முடியாதே என வேண்டுமென்றே கேட்க…

 

கரெக்ட் தான், ஆனால் தாலி கட்டியவனை கணவன் இல்லைன்னு சொன்னா இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா… என ஆதிரனையே மடக்கிப் பேசினாள் கொற்றவை…

 

சபாஷ் என அவன் மனதில் மெச்சிக் கொள்ளும் போதே… மேலிருந்து பத்ரியின் குரல் கரகரத்துக் கேட்டது…

அவன் சப்தம் கேட்டதும் படபடவென்று மாடிப் படியேறியவள், அவன் அறைக்குச் சென்று பார்க்க…

 

தன்னிரு பலம் பொருந்திய கரங்களால் சுமக்கவே பாரமாக இருந்த தன் தலையைத் தாங்கி அமர்ந்து இருந்தவன்…

முன்னால் சென்று பார்க்க…

நேற்று சண்டையின் போது அவன் கையில் ஏற்பட்ட காயம் ரணமாக மாறி இருந்தது…

 

அவள் கிடந்த சோர்வில் அதை எல்லாம் நேற்று கவனிக்கவில்லை; இன்று பட்ட பகல் வெளிச்சத்தில் அவளுக்குக் குற்றவுணர்வைத் தூண்டியது…

 

உடனே அவ்வறையில் இருந்த மருந்துப் பெட்டியை எடுத்து வந்தவள், பத்ரியின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து அவன் கையில் மருந்திடுவதை மேலேறி வந்த ஆதிரன் பார்க்கவும், அவன் மனம் கனிந்து விட்டது…

 

தன் மகன் மேல் கரிசனை காட்டும் மருமகளை எல்லா மாமனாருக்கும் பிடிக்குமா என்பது தெரியாது; ஆனால் ஆதிரனுக்குப் பிடித்தது என்பது மட்டும் மெய்…

 

கொற்றவைக்கு பத்ரி மேல் கரிசனையா என்று கேட்டால்—இல்லை என்பதே பதில்.

காரணம், சக உயிர் துன்பப்படுகிறதே என்ற அனுதாபமும் மனிதாபிமானமும் அடிப்படையில் மட்டுமே, பத்ரி அவ்வளவு செய்த பிறகும் அவனுக்கு மருந்திடுவது…

கொற்றவை மருந்திடும் வரையிலும் போதையின் பிடியில் இருந்தவனுக்கு எதுவும் பிடிபடவில்லை…

 

தலையை குலுக்கிக் குலுக்கி போதையைத் தெளிய வைக்க முயன்றவன்…

 

முன்னால் பழச்சாறு நீட்டப்படவும், யார் என்று அப்போது தான் பார்த்தான்…

 

பார்த்தவன் கண்களுக்கு நான்கு, மூன்று, இரண்டு என மாறி மாறி கொற்றவை பிம்பங்கள் தெரிய…

தெரிந்த மாத்திரத்தில் பத்ரிக்கு கோவம் கொந்தளித்துக் கொண்டு வர, அவள் நீட்டிய ஜூஸைத் தட்டி விட்டவன்… அதே கோவத்தில் கர்ஜிக்க…

 

“இதான் இந்த கோவம் தான் இன்னைக்கு போலீஸை வீடு வர கொண்டு வந்து விட்டிருக்கு…

ஆரம்பத்தில் இருந்தே இந்த ஆத்திரமும் அவசரமும் தான் உங்களை இங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு…!!”

என கொற்றவை சொல்வதை எல்லாம் காதிலே கேட்காதவன் போல், அந்த அறையில் எதையோ தேடியவன்…

 

கண்களுக்கு கிட்டாமல் போகவும்…

“சரஆஅண்…!”

என அந்த இடமே அதிர்ந்து குலுங்கும் படி இவன் போட்ட அமையத்தில் கொற்றவைக்கு தூக்கிப் போட்டது…

 

“சரண்… சரண்… டேய் சரண்…”

என பைத்தியம் பிடித்தவன் போல் பத்ரி கத்தவும், என்னவோ எதோ என பதறிய மற்ற இருவரும் அவனை அணுக முயற்சிக்க…

 

அடாவடியாக அவர்கள் இருவரையும் விளக்கி நிறுத்தியவன்…

பெருங்குரலெடுத்து மீண்டும் ஒரு முறை அந்த மாளிகை மொத்தமும் அதிரும் வண்ணம் கத்த…

விளக்கிலிருந்து வெளி வந்த பூதம் போல் எங்கிருந்தோ அவர்கள் முன்னால் வந்து குதித்தான் சரண்…

பத்ரியின் பர்சனல் பி.ஏ… @ அல்லக்கை…

 

நேரே பத்ரியிடம் சென்றவன், அவன் வாய் திறந்து கேட்கும் முன்னே, அவன் கையில் ஆகச் சிறந்த வலி நிவாரணியான விளைவுற்ற மது குப்பியை கொடுத்தவன்…

 

அவனுக்கு தேவையான தகவலையும் கொடுக்கலானான்…

பாஸ், நேத்து நீங்கள் மும்பை வந்ததிலிருந்து உங்களைப் பற்றியும், மேடம் பற்றி ஒவ்வொரு அசைவும் தகவலாக உங்க எதிரி ஏ.கே-வுக்கு அனுப்பி இருக்காங்க…

 

நீங்கள் மும்பை வந்தது பற்றி போலீஸுக்கு தகவல் கிடைச்சதுக்கும் அவங்க தான் மூலக் காரணம்…

இறந்து போன மிஸ் லினா கான்வோட ஃபேன்ஸை தூண்டி விட்டு போராட்டம் பண்ண வச்சதும் அவங்க தான்…

 

போராட்டத்துல அவங்களோட ஆட்களை இறக்கி விட்டு கல் எறிய வச்சி கலவரம் உண்டு பண்ணதும் அவங்க தான் பாஸ்…

என துல்லியமான தரவுகளை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் சரணைக் கண்டு, ஆதிரன் மெச்சுதலாக பார்த்துவிட்டு, உடனே தான் பாடிகார்ட் ஆன மார்க்கையும் “கத்துக்கோ” என்பது போல் பார்க்க…

அவனோ கோட்டை விட்டுட்டோமே என அவமானத்தில் தலை கவிழ்ந்து கொண்டான்…

 

அதெல்லாம் சரி தான்… எல்லாம் நான் கணிச்சபடி தான் நடந்து இருக்கு…

நான் சொன்னது என்ன ஆச்சு…?

என பத்ரி புருவத்தை உயர்த்திக் கேட்க…

 

“பாஸ்ஸ்ஸ்… அதுஉ…”

என சரண் இழுத்துக் கொண்டே ஆதிரனை பார்க்கவும், புரிந்து விட்டது—ஆதிரன் இடையில் புகுந்து விளையாடி விட்டார் என்பது…

 

“உன்னை என்ன ஆச்சுன்னு கேட்டேன் சரண்?”

பல்லை கடித்தபடி பத்ரி கேட்க…

அது பாஸ்… 

 

நேத்து நீங்கள் நினைச்சபடி பார்ல வச்சி அடிச்ச ஆளுங்களுக்கும் ஏ.கே-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…

 

ஆனா அவங்க தான் லினா கான் கேஸ்ல உங்களுக்கு எதிரா சாட்சி சொன்னவங்க…

 

அவங்க ச… சக்ரவர்த்தி குடும்பம் மேல உள்ள தீராத வன்மத்தால உங்களுக்கு எதிரா பொய் சாட்சி சொல்ல வந்தவங்க தான் பாஸ்…

அது மட்டும் இல்ல…

 

நேத்து நீங்கள் பார்ல வச்சி மண்டைய உடைச்சீங்களே—அந்த ரோஹித், கபூர் குடும்பத்தோட வாரிசு அவன்…

அவன் கேர்ள் ஃப்ரெண்ட்க்கு உங்க மேல ஒரு இதுவாம்…“உங்களை மாதிரி அவன் இல்லைன்னு” விட்டுட்டு போயிடுச்சாம்…

அந்த வன்மத்துல தான் நேத்து உங்க கூட வந்த கொற்றவை மேடம் கிட்ட தவறா நடந்துக்க முயற்சி பண்ணதா அவன் கொடுத்த வாக்குமூலத்தை நான் பத்திரப்படுத்தி வச்சி இருக்கேன்…

 

நாளைக்கே கோர்ட்ல அவன் நமக்கு எதிரா சாட்சி சொன்னா, இதை வச்சி அவனுடைய சாட்சியை ஈஸியா உடைச்சிடலாம் பாஸ்…

அப்புறம்…என சரண் மேலே சொல்லத் தயங்க…

 

“ம்ம்ம்…”

என பத்ரியிடம் வந்த உறுமலில், மேலே சொல்லு என்னும் தகவல் இருக்க…

 

நீங்கள் நினைச்சபடி இன்னைக்கு மட்டும் போலீஸ் உங்களை அரெஸ்ட் பண்ணி இருந்தா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சி இருக்கும்…

ஆனா… பெரிய பாஸ் தலையிட்டு உங்களை காப்பாற்றினதோடு மட்டும் இல்லாம…

உங்களை… உங்களை…?

 

 

“என்னை?” – பத்ரி

 

உங்களை வீட்டு பாதுகாப்புல வைக்கும் படி செஞ்சுட்டாரு…

என ஒருவாறு சொல்லி முடித்தான் சரண்…

 

“வாஆஆட்…!”

என துள்ளிக் குதித்து எழுந்த பத்ரி, நேரே ஆதிரன் முன் போய் நின்று…

 

“டாட்… யாரைக் கேட்டு இப்படி செஞ்சீங்க?”

என கத்த…

 

“என் மகனை காப்பாற்ற நான் யாரையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை”

என அலட்சியமாக ஆதிரன் சொல்ல…

 

“உங்களால தான்…

உங்களை யாரு என் வாழ்க்கையில தலையிட சொன்னது?

என் பிரச்சனையை சரி செய்யக்கூடிய திறம் என்கிட்ட இருக்கு…

தேவை இல்லாமல் குறுக்க வந்து எல்லாத்தையும் பாழாக்கிட்டு காப்பாத்துறாராம்…

இங்க பாருங்க…

என் விஷயத்துல தலையிடுறது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்…

எனக்கு தெரியும் என்னை எப்படி காப்பாத்திக்கணும்னு…

இனி என் வழில குறுக்க வராதீங்க…

அது தான் உங்களுக்கு நல்லது!”

என அதிரனின் சிங்கக் குட்டிக் கிடந்து கத்தியது…

 

 

“போதும்! நிறுத்துடா…

என்னத்த நீ பார்த்துப்ப இதுவரை?

நீ பார்த்த இலட்சணத்தை ஊரே பேசுதே… உன்னால சக்ரவர்த்தி குடும்பத்துக்கு ஒரு அசிங்கம் வந்தா,

உன் தகப்பனாவே இருந்தாலும் நான் அதை பொறுத்துக்க மாட்டேன்…

எல்லாத்தையும் இத்தோட நிறுத்திக்கோ பத்ரி…

அது தான் உனக்கு நல்லது…

இல்லன்னா, உங்க அப்பனோட சுயரூபத்தை நீ பார்க்க வேண்டி வரும்…!!”

என ஆதிரன் அக்ரோஷமாக கத்திட, அங்கிருந்த அனைவரும் தந்தை–மகன் சண்டையில் அதிர்ந்து போயினர்…

 

“வீணா என்னை பயமுறுத்திப் பார்க்காதீங்க டாட்…

இதுக்கெல்லாம் மசியிற ஆள் நான் இல்லைன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்…என்னை என் போக்குலே விட்டுடுங்க…அது தான் உங்களுக்கும் எனக்கும் நல்லது”என நறுக்குத் தெறித்தாற்போல் பேச…

 

“எதுக்குடா விடணும்?

ஏன் விடணும்?

உன்னை உன் விருப்பப்படி விட்டு விட்டுத்தான் எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கேன்னு தெரியுமா?”

என ஆதிரனின் ஆவேசத்தை அசட்டையாக பார்த்தவனின் சட்டையைப் பிடித்து…

 

“டேய்ய்…

நான் இவ்வளவு தூரம் பாடுபடுறதே உனக்காக தான்டா…

அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குற?

ஏன்டா இப்படி பண்ற?

நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் சாதாரண கேஸ்ல நீ மாட்டல…

உன் மேல இருக்கிறது ரேப் அண்ட் மர்டர் கேஸ்டா, பாவி…!”

என ஆதிரன் கத்தியதை கேட்டுக் கொண்ட கொற்றவையின் தலையில், பெரும் இடியே விழுந்தது…

 

 

அவள் காலுக்கு இடையில் இருந்த பூமி பிளந்துக் கொண்டது…

பாவியை மணந்து கொண்ட பாவையின் வாழ்க்கை

கேள்விக்குறியானதோ…??

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top