8
மகன் தன் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் அனுவின் முகம் வாடி விட்டது…
“இதுக்குத்தான் சொன்னேன் ஹனி… அவனை இந்த நேரத்துல தொந்திரவு பண்ணாதன்னு… நீ கேட்டால்தான…” என்றான் ஆதிரன்.
“அதுகில்லைங்க பத்ரி… வீட்டை விட்டு வெளியே போனதிலிருந்து ஒரு ஃபோன் கூட பண்ணி பேசணும்னு அவனுக்கு தோணலையே… என்ன கோவம் இருந்தாலும் என்கிட்ட கூடவா பேசக் கூடாது… எனக்கு உங்களையும் அவனையும் விட்டா யாருங்க இருக்கா… எல்லாம் என் தப்புதான்… அவன் போறேன்னு சொன்னப்போ தடுத்து இருக்கணும்… இப்போ மனசு கிடந்து தவிக்குதுங்க… எனக்கு பயமா இருக்குங்க… அவனுக்கு எதுவும் ஆகாது இல்லையா…?” என அனுவின் தாய் மனம் அடித்துக் கொண்டது…
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது ஹனி… நான் இருக்கேன்ல… நாம நாளைக்கே போய் அவனை பார்க்கலாம்… சரியா?” என மனைவியை சமாதானப்படுத்தினான்.
தன் எண்ணிலிருந்து அழைத்ததாலே பத்ரி அழைப்பை ஏற்கவில்லை என்பதை அறிந்துக் கொண்டவனுக்கும் உள்ளூர வருத்தம்தான்… ஆனால் அதை வெளிப்படுத்தினால் அவன் மனைவி மிகவும் உடைந்து போவாளே…
நாளை எப்படியாவது மகனை சமாதானம் செய்து மனைவியோடு பேச வைத்து விட வேண்டும் என நினைத்தவனுக்கு, எங்கே தெரியப் போகிறது அந்த “நாளை” என்ற விடியல் ஒன்று வராமலே போய்விடும் என்று…
மறுநாள் விடியல் என்னவோ அமைதியாகத்தான் விடிந்தது…
மாறி வரும் காலத்திற்கேற்ப அதிநவீனமாக மாறி இருந்தது அந்த பிருந்தாவனம் அப்பார்ட்மெண்ட்…
மகிழ்ச்சியின் நிறம், அன்பின் நிறம், காதலின் நிறம், நட்பின் நிறம் என அனைத்து நிறங்களையும் ஒருங்கிணைத்து அனைவரது வாழ்க்கையையும் வண்ணமயமாக்கும் தினம்… அதுவே வடக்கில் கொண்டாடப்படும் ஹோலி எனும் வண்ணங்களின் கொண்டாட்டமான தினம்…
அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள அனைவரும் ஒன்று கூடி விசேஷமாகக் கொண்டாடி வந்தனர்.
அதில் அர்ஜுன் மற்றும் காதம்பரியின் தம்பதிகளான இரட்டை பெண் குழந்தைகளான ஆர்த்தி மற்றும் அதிதி… வெள்ளை நிற உடையில் வான்தேவதைகளையும் தோற்கடிக்கும் வண்ணம் அத்தனை அழகான பெண் பொம்மைகளாக கையில் வண்ணங்களுடன் நின்றிருந்தனர்…
அவர்களுடன் அன்றைய கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வென்றே சக்கரவர்த்தி குடும்பமும் வந்து இருந்தனர்…
ஆரன் மற்றும் மியாவின் மகன் அபினவுடன் வந்திருந்தனர்…
அபினவ் ஒரு வளர்ந்து வரும் நடிகன். அவன் தந்தையின் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவன்… கை வசம் மூன்று ஹிட் படங்களை வைத்துக் கொண்டு பிசியாகச் சுற்றும் நடிகன்…
அகில் மற்றும் ஆருத்ராவும் தங்களைப் பற்றி பலர் புறம் பேசுவது பிடிக்காமல், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தையான பைரவியை அழைத்துக் கொண்டு வெளிநாட்டில் உள்ள அவர்களின் தொழிலை கவனிக்க குடும்பமாகச் சென்று விட்டனர்… அனுப்பி வைத்ததே ஆதிரன்தான்… எனவே அவர்களால் இதில் பங்குபெற முடியவில்லை… இருப்பினும் ஆதிரன், அவர்களை தங்கள் குடும்பத்துடன் ஒளி திரையில் பேச வைத்து விட்டுத்தான் இங்கு வந்தான்…
ஆதிரன் மற்றும் அனுவும் தங்கள் மகள் நக்ஷத்திராவுடன் வந்திருந்தனர்…
அனைவரும் ஒன்று கூடி இருந்த மகிழ்ச்சியான தருணத்தை கெடுக்க வென்றது அந்த செய்தி…
பிரபலமான நியூஸ் சேனல் ஒன்றில்…
“மும்பை பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவரும், திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவருமான திரு. பத்ரி சக்ரவர்த்தி, நேற்றைய இரவு கடற்கரைச் சாலையில் கார் பந்தயம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி… ஏற்கனவே பல பெண்களுடன் பழகுவதாக வதந்திகள் வந்த நிலையில், நேற்று அவருடைய படத்தில் நடிக்கும் நடிகையான லீனா கானுடன் நடுவீதியில் சல்லாபத்தில் ஈடுபட்டிருப்பதை நமது கேமராமேன் படம் பிடித்துள்ளார்.
அதை அறிந்த அவரின் நிழல் படையினர் வந்து நமது கேமராமேனையும், செய்தியாளரையும் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
அவர் மன்னிப்பு கேட்கும் வரை ஓயப்போவதில்லை என்று, அவரின் அலுவலகத்தின் முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் உறுதியாக இருக்கும் நிலையில்…
சற்று முன் கிடைத்த முக்கிய செய்தி…
நேற்று இரவு திரு. பத்ரிநாத் சக்ரவர்த்தியுடன் சல்லாப நிலையில் இருந்த நடிகை லீனா கான், இன்று அதிகாலை கடற்கரையில் பிணமாக மீட்கப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது…
போதையின் பிடியில் இருந்த பத்ரிநாத் சக்ரவர்த்தி, செல்வி லீனாவை கற்பழித்து கொன்று இருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கும் நிலையில்…
திரு. பத்ரி சக்ரவர்த்தியை தொடர்பு கொள்ள முடியவில்லை… ஒருவேளை அவர் தலைமறைவாகி விட்டாரா?
இதற்கு அவரின் குடும்பத்தாரின் பதில் என்ன…?”
என்ற செய்தியைக் கேட்டு, தலையில் இடி விழுந்தது போல் அமர்ந்து விட்டாள் அனு…
சத்தியமாக யாருமே இதை எதிர்பார்க்கவே இல்லை என்பது அவர்கள் முகத்திலிருந்தே அறியலாம்…
இல்லை என் மகன் கொலைகாரன் இல்லை நான் அவனை அப்படி வளர்க்கல என பித்து பிடித்தவள் போல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தாள் அனு அவளை என்ன சமாதானம் செய்தும் யாருக்குமே அவள் செவி சாய்க்கவில்லை…
புருவங்கள் இடுங்கப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரனுக்கு இச்செய்தி புதியது தான்…
பத்ரியைப் பற்றிய தகவல் அவனுக்கு உடனுக்குடன் கிடைக்கும் படியாகத்தான் ஏற்பாடு…
நேற்று இரவு செய்தியாளர்களை தாக்கியது வரை மட்டுமே ஆதிரனிடம் தெரிவிக்கப்பட்டது…
எனில் இச்செய்தி… என ஆதிரன் யோசிக்கும் போதே…
அனு அவ்விடத்திலேயே மயங்கி சரிந்தாள்…
“ஐயோ அனு…!” என அனைவரும் பதற, அர்ஜுன் அனுவை பரிசோதிக்க ஏதுவாக தன் அப்பார்ட்மெண்டிற்கு தூக்கிச் சென்றான்…
சிறு பிராயத்தில் தன் குறும்புத்தனத்தால் அத்தனை பேரையும் கவர்ந்திழுத்த குழந்தை… கண்ணனா இவன்…
பெற்றோரின் பேச்சைக் கேட்டு எத்தனை அருமையாக வளர்ந்த மகன் அவன்…
ஆனால்…??
ஆனால் அவன் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவத்தால், அவன் வாழ்க்கையே இப்படிப் புரட்டிப் போட்டுவிட்டதே…
இன்றைய நிகழ்ச்சிக்குப் பின் மகனை காணச் செல்லலாம் என்று எத்தனை ஆசையாக வந்தாள்…
ஆனால் இன்றைய செய்தி அவளை பெரிதும் பாதித்துவிட்டது…
ஆதிரன் தன் கையில் இருந்த போனில் சிலபல வேலைகளை செய்தவன், அனுவிடம் வந்து அவள் கைகளை அழுத்தி…
“இனி எல்லாம் மாறும்!!”
என்ற வார்த்தைகளில் அத்தனை நம்பிக்கை இருந்ததைக் கண்டு கொண்டாள்…
ஆழ்ந்த மயக்கத்திற்குள் சென்றாள் அனு…
ஆனால் நிலைமையோ, ஆதிரன் நினைத்ததை விட மோசமானதாக அமைந்து போனதுதான் அவர்கள் துரதிஷ்டம்…
லீனாவை கொலை செய்த விடயத்தில் சந்தேக நபராக இருந்த பத்ரி, முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டான்…
அவனுக்கு எதிராகவே அனைத்து சாட்சிகளும் இருந்தன…
குறிப்பாக, போதையில் இருந்த லீனா கானை பத்ரி கடைசியாக தன் காரில் ஏற்றிச் சென்ற வீடியோ ஆதாரம் முக்கியமான சாட்சியாகக் கருதப்பட்டது…
பத்ரியின் உருவப் படங்கள் எரிக்கப்பட்டன…
அவனது படம் வெளியான திரையரங்குகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன…
மகளிர் அமைப்பினர் வீதியில் இறங்கி பத்ரியை கைது செய்யக் கோரி போராட்டங்கள் நடத்தினர்…
பத்ரியை பிடிக்க மும்பை போலீஸ் சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்த வேளையில், அவன் தமிழகத்தின் தென் கோடியில் திருநெல்வேலியில் இராவணனின் கட்டுப்பாட்டில், நாயகனாக பவனி வந்தான்…
பிரச்சனையின் தீவிரம் சற்று அடங்கியதும் மகனை ஃபாரின் அனுப்பி வைத்து விடலாம் என ஆதிரன் நினைத்ததற்கு நேர்மாறாக…
அவன் மகன் மும்பை திரும்பி விட்டான்… அதுவும் தனியாக அல்ல… அவன் தாலி கட்டிய மனைவி சமேதமாக…
இருக்கிற பிரச்சனை போதாது என்று, ஊருக்கு வந்ததும் ஏழரை இழுத்து வைத்திருப்பதை அறிந்ததுமே ஓடோடி வந்தான் ஆதிரன்…
அவன் மீது தான் இத்தனை பெரிய பழியை சுமத்தினால் தாங்குவானா…??
ஆம்.
அன்று ஆதிரன் சக்ரவர்த்தியாக இருந்து எடுத்த முடிவு சரியாக பட்டது…
ஆனால் இன்று பத்ரியின் தந்தையாக இருந்து யோசிக்கும் போது, மாபெரும் பிழையாகத் தோன்றியது…
முற்றிலும் உண்மைதான்…
ஆனால்… அந்த நிலையில் வைத்து குடும்பமா, பிள்ளையா என்று வரும் போது, ஆதிரன் அன்று குடும்பத்தை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது…
விருட்சமாக நின்ற அந்த குடும்பத்தை காக்க, வேராக அவன் செய்த தியாகங்கள் வெளிச்சத்திற்கு எட்டப்படாதவை…
அவனைப் பொறுத்தவரையில் அது தியாகம்…
ஆனால் ஒரு தந்தையாக, தன் சொந்த மகனுக்கே அநீதி இழைத்துவிட்டான் அல்லவா…?
உலகோர் பழியிலிருந்து அவனை எப்படி மீட்க முடியும்…?
மீள முடியாத பாதாளத்தில் பத்ரியை தள்ளிய பெருமை, ஆதிரனையே சாரும்…
