அத்தியாயம் 1
மங்கள வாத்தியங்கள் ஒருபுறம் தடபுடலாக முழங்கிக் கொண்டிருக்க, திருமண அரங்கமெங்கும் சொந்த பந்தங்களின் ஆனந்த சலசலப்புகளின் ஓசை இனிய நாதங்களாக காற்றில் மிதந்து கொண்டிருந்தது.
மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டுப் பெரியோர்களின் கால்தடங்கள் அவ்வரங்கம் முழுவதும் பதிந்தபாடாய் இருக்க, இரு உள்ளங்கள் மட்டும் வெவ்வேறு அறையில் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தன.
“நாழியாகிறது.. மாப்பிள்ளைய அழைச்சுண்டு வாங்கோ..” என்ற ஐயரின் உத்தரவிற்கிணங்க பட்டு வேஷ்டி பட்டு சட்டையுடன் கம்பீரமாக நடந்து வந்து இறுகிய முகத்துடன் மனையில் அமர்ந்தான்.
இங்கே மணவறையிலோ குட்டி போட்ட பூனை போல அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தாள் ஆர்த்தி. “இப்ப என்ன செய்றது.. என்ன செய்றது.. கடவுளே.. எனக்கு பயம்மா இருக்கே.” என வெளிப்படையாக புலம்பியவளின் முகத்தில் அலங்கார ஒப்பனைகளையும் மீறி வியர்க்க தொடங்கியிருந்தது.
“ஹலோ… நான் கௌதம் பேசுறேன்.” என்றக் கம்பீரக்குரல் தன் காதில் தேனாய் இனிக்க மெய்மறந்து நின்றாள் ஆர்த்தி. ஏனெனில் இன்னும் ஒரே வாரத்தில் தனது கழுத்தில் மங்களநாணை அணிவிக்கப் போகும் மணவாளனல்லவா!!!
சிறுவயதிலிருந்தே கலகலவெனப் பேசிப் பழகும் பண்புள்ள ஆர்த்திக்கு தற்போது கௌதமிடம் பேச முற்பட்டபோது வார்த்தைகள் யாவும் தந்தியடித்தது. முதன்முதலில் மாப்பிள்ளையை யாருக்கும் தெரியாமல் தன் தந்தையுடன் பார்த்து வந்த நினைவு மனதை இன்பமாய் நனைத்தது.
ஊர்க்கோவில் திருவிழாவில் தன் சகாக்களுடன் தன் அழகிய முத்துப்பற்கள் தெரிய, வாய்விட்டு சிரித்தபடி கண்ணில் கூலர்ஸ்ஸுடன் நடந்து வந்ததைத் தன் தந்தை தன்னிடம் ஆர்வத்துடன் காண்பித்ததை எப்படி மறப்பாள்?!
அந்த மோகனச்சிரிப்பில் தன்னை மொத்தமும் தொலைத்தவளாய் நின்றிருந்தவளின் கன்னங்கள் தானாய் செம்மை பூசிக் கொண்டதைக் கண்ட ஜனார்த்தனின் உள்ளம் பூரிப்படைய, “என்னம்மா.. உனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா?” என வினவவும் மௌனமாய் தலைகுனிந்து தன் சம்மதத்தை புன்னகையுடன் தெரிவித்தாள் ஆர்த்தி.
பால் வியாபாரம் செய்யும் ஜனார்த்தன் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பஸ்தனாய் வாழ்ந்து வருபவர். ஒரு ஆண்பிள்ளை மதுரன் மூத்தபிள்ளையாக, இரு பெண்பிள்ளைகள் ஆர்த்தி மற்றும் ஆராதனா என இளையபிள்ளைகளாக பெற்றெடுத்திருந்தனர் ஜனார்த்தன்-ஜோதி தம்பதியினர்.
மெக்கானிக் இன்ஜினியராக தனியார் நிறுவனமொன்றில் மதுரன் வேலை பார்க்க, பிரபல நகை மாளிகையில் கேஷியராக ஆர்த்தி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். பிபிஏ முதல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றாலும் அடுத்ததாக தன் தங்கையின் படிப்புச் செலவைக் கருத்தில் கொண்டு தன் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தாள் ஆர்த்தி.
தனியார் வங்கி நிறுவனத்தில் வேலைக்காக தேர்வு பெற்றிருந்த வேளையில் தான் ஆர்த்திக்கு உயர்தட்டில் இருந்த கீர்த்திவர்மன்-மந்தாகினி தம்பதிகளின் தவப்புதல்வனான கௌதமின் கல்யாண வரன் தானாய் தேடிவந்தது.
முதலில் பெரிய இடத்து சம்பந்தமென பயந்து ஒதுங்கிய ஜனார்த்தனை விடாது துரத்திப் பிடித்து சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தார் கீர்த்திவர்மன். அவரது வற்புறுத்தலின் பேரில் சம்மதித்தவர் கௌதமின் புகைப்படத்தைக் கண்டதும் மனம் நிறைந்து விட்டது.
மனதை ஈர்க்கும் வசீகரப்புன்னகையுடன் பார்ப்பவரை சுண்டியிழுக்கும்படி பார்த்திருந்தான் கௌதம். இருவரின் ஜாதக அமைப்பும் அபூர்வமாக பத்துப் பொருத்தத்திற்கும் முழுமையாக பொருந்தியதும் கூட மனநிறைவைத் தந்தது ஜனார்த்தனுக்கு.
தன் குடும்ப அங்கத்தினருக்கும் மாப்பிள்ளையை மிகவும் பிடித்துப் போக பெண் பார்க்கும் படலத்தை மிகவும் எளிமையாக கோவிலில் நடத்த ஏற்பாடு செய்திருந்த போது கீர்த்திவர்மன் அப்போதே தாம்பூலத்தை மாற்றிக் கொண்டது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி என்றால் கௌதமிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
தன் மனம் பற்றி மணப்பெண்ணிடம் பேசிவிட முடிவு செய்திருந்த கௌதமிற்கு அவ்வாய்ப்பு மட்டும் அளிக்கப்படவேயில்லை. தன் மகனிற்கு ஆர்த்தியை மிகவும் பிடித்திருப்பதாக வாய்மொழி வார்த்தையாக கீர்த்திவர்மன் கூறியதை ஜனார்த்தன் குடும்பத்தினர் அப்படியே நம்பி விட்டனர்.
“ஹலோ.. லைன்ல யாராவது இருக்கீங்களா? கொஞ்சம் ஆர்த்திக்கிட்ட ஃபோனக் கொடுங்க.” என்று சற்றே எரிச்சல் மிகுந்த தோரணையில் கௌதமின் குரல் ஓங்கி ஒலிப்பதைக் கேட்டு நிதர்சனத்திற்கு வந்தவள், “நான்.. நான் ஆர்த்தி தான் பேசுறேன். சொல்லுங்க..” என நாணத்துடன் தடுமாறியவாறு ஆர்த்தி கூறியதும் எதிர்முனையில் சிலநொடிகள் அமைதி நிலவியது.
“இதப் பாருங்க ஆர்த்தி.. நான் ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்ன உங்கக்கிட்ட சொல்லணும்.” எனத் தயங்கியபடி ஆரம்பித்தவனின் குரலோசையில் ஏதேதோ இன்பக் கற்பனைகளுக்குள் செல்லலானாள் ஆர்த்தி.
“சொல்லுங்க.. என்ன சொல்லணும்?” என சின்னச்சிரிப்புடன் அவள் கேட்க, “எனக்கு இந்தக் கல்யாணத்துல சுத்தமா விருப்பமில்ல. நான் வேற ஒரு பொண்ண காதலிக்கிறேன்.” எனக் கூறியதைக் கேட்டு எவரோ ஒருவர் தன் முகத்தில் வெந்நீரை அள்ளித் தெளித்தாற் போல இருந்தது அவளுக்கு.
கையில் வைத்திருந்த ஃபோன் ரிசீவர் தடுமாறி விழப் போக, சட்டென சுதாரித்து பிடித்து விரல்கள் நடுங்க தன் காதில் அழுத்தமாக பதித்துக் கொண்டாள். ‘எங்கே.. தான் கேட்டது பொய்யோ?!’ என்ற பதட்டத்தில்,
“ஹலோ..ஹலோ.. சரியா கேக்கலங்க.. ஹலோ..” என ஆர்த்தி பதறுவதைக் கேட்டு எரிச்சலடைந்தவனோ, “ஹலோ.. நல்லாக் கேட்டுக்கோம்மா.. உன்னை எனக்கு பிடிக்கல.. எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்ல. நான் வேற ஒரு பொண்ணை விரும்புறேன்.” என சத்தமாக கௌதம் கூறியதும் மயக்கமே வந்துவிடும் போல இருந்தது ஆர்த்திக்கு.
‘ஆக.. நான் கேட்டது பிரம்மையில்லை. உண்மை தான். இப்போ நான் என்ன பண்ணணும்?’ என தனக்குள்ளேயே கேள்வி கேட்டவளை யோசிக்க விடாமல் திடீரென ஒரு பெண் குரல் ஃபோனில் அழைத்தது.
“ஹலோ.. லைன்ல இருக்கியா இல்லையா?! ஏதாவது சொல்லித் தொலை..” என மரியாதையில்லாமல் அறிமுகமற்ற பெண்குரல் ஒன்று பேசவும் ஆர்த்திக்கு கோபம் வந்தது. “ஹலோ.. யார் நீங்க?! மரியாதையில்லாம என்கிட்ட பேச உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?” என படபடவென பொரியத் துவங்கியதும்,
சட்டென ஃபோன் கைமாறி, “இதப் பாரு ஆர்த்தி. இதெல்லாம் உனக்கு அநாவசியம். இந்தக் கல்யாணத்துல எனக்கு விருப்பமில்ல. அதனால..” என மேற்கொண்டு கூற முடியாமல் தயங்கியவாறு கௌதம் தன் வார்த்தைகளை நிறுத்த, ஆர்த்தியின் மனதினுள் அபாயமணி அடித்தது.
“அதனால..” என எடுத்துக் கொடுத்தபடி ஆர்த்தி கௌதமை ஊக்குவிக்க, வேறுவழியில்லாமல் மேலும் தயங்கியவாறு, “நீதான் எப்டியாவது இந்தக் கல்யாணத்த நிறுத்தணும். இல்லைன்னா விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். நியாபகம் வச்சுக்கோ..” எனக் கூறிவிட்டு ஆர்த்தியின் ஒப்புதல் பதிலுக்காக காத்திருந்தான் கௌதம்.
ஆனால் இங்கே ஆர்த்தியின் நிலை தான் மிகவும் பரிதாபகரமாக இருந்தது. “என்னது… நான் இந்தக் கல்யாணத்த நிறுத்தணுமா?! ஏன்.. எதுக்கு..? நீங்க தானே கல்யாணம் வேணாம்ன்னு சொன்னீங்க. அப்போ நீங்க தான் முயற்சி பண்ணணும்.” என துக்கத்தால் வரண்ட தன் தொண்டையை விரல்களால் தேய்த்து விட்டுக் கொண்டே பதில் கூறினாள் ஆர்த்தி.
“என்னால முடியாதனால தான் உன்னை பண்ண சொன்னேன். நான் சொல்றத நீ செஞ்சா மட்டும் போதும். இல்லைன்னா அதுக்கான பராபலன நீதான் அனுபவிக்கணும். ஓகே.. எல்லாத்தையும் முடிச்சுட்டு எனக்கு கால் பண்ணு.” என தனது மொபைல் எண்ணை ஆர்த்தியிடம் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்தான் கௌதம்.
‘முடிந்தது.. எல்லாம் முடிந்தது.. என்னவெல்லாம் கனவு கண்டிருந்தேன்?! கடைசியில் இவ்வாறாகிவிட்டதே..’ என அப்படியே சுவற்றில் சாய்ந்து கீழை சரிந்து அமர்ந்தபடி விசும்பத் தொடங்கினாள் ஆர்த்தி.
‘என்ன தைரியம்…?! இவர் யார் எனக்கு ஆர்டர் போடுவதற்கு?! இவரைத் தான் மணப்பேனென்று நானா அடம்பிடித்தேன்?! இவர்களாக வந்து பெண் பார்த்து திருமணம் வரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு திடீரென இப்படியொரு குண்டைத் தூக்கி போட்டு விட்டார்களே..’ என மனமுடைந்து குமுறியபடி அமர்ந்திருந்தவளின் கைகளில் ஆதுரமாக ஒருக் கை வந்து தழுவியது.
விழுக்கென நிமிர்ந்து பார்த்தபோது ஆர்த்தியின் எதிரே அவளது அன்னை ஜோதி அமர்ந்திருந்தார். ஆர்த்தியின் அழுகையைக் கண்டவர் கனிவுடன் அவளது கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்து விட்டு,
“பொண்ணாப் பொறந்த எல்லாருமே ஒருநாள் பெத்தவங்களப் பிரிஞ்சு போய் தான்டா தீரணும். அதை நினைச்சு தானே அழுகுற?” என ஆர்த்தியின் நாடி பிடித்து கொஞ்சிக் கொண்டே கேட்டவரின் தோளில் ஆற்றாமையுடன் சாய்ந்து மேலும் கதறி அழத் தொடங்கினாள் ஆர்த்தி.
அவளது முதுகை மென்மையாகத் தடவிக் கொடுத்துக் கொண்டே அமைதியாக இருந்தார் ஜோதி. ஆனால் ஆர்த்தியின் மனமோ உண்மையை சொல்லவும் முடியாமல், சொல்லாமல் மென்று முழுங்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்து போனாள்.
ஓரளவிற்கு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “அம்மா.. நான் ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும்.” என ஆரம்பித்தவளின் பேச்சில் குறுக்கே புகுந்து,
“நீ என்ன சொல்ல வர்றன்னு எனக்கு தெரியும்மா.. உனக்கு பேங்க்ல வேலை கிடைச்சிருக்குன்னு அப்பா சொன்னாரு. ஆனா நம்ம காதர் பாய்க்கிட்ட சொல்லி இந்த ஊர்லயே உனக்கு நல்ல பிரான்ச்சா பாத்து போட உங்கப்பா ஏற்பாடெல்லாம் பண்ணிட்டாரு. அதுக்கு அவர் கொடுத்த விலையென்ன தெரியுமா?! பனிரெண்டு லட்சம்!!!” என கண்கள் கலங்க ஜோதி கூறவும் தான் என்னக் கூற வந்தோமென்பதை மறந்து வாயடைத்துப் போய் அதிர்ந்து பார்த்தாள் ஆர்த்தி.
“என்னம்மா சொல்றீங்க?! அது அப்பா வீடு கட்ட வச்சுருந்த பணமாச்சே..” என வருத்தத்துடன் ஆர்த்தி கூற, “இருக்கட்டும்டா.. யாருக்காக பண்றோம்.. உனக்காக தானே..” என மென்மையான புன்னகையுடன் தன் தாய் கூறுவதைக் கேட்ட ஆர்த்தி அப்போதும் மனம் தாளாமல்,
“என்னம்மா நீங்க..?! இதப்பத்தி அண்ணாக்கும் ஆராதனாக்கும் தெரியுமா?” எனக் கேட்டபோது சட்டென அவளது உதடுகளில் விரல் வைத்து எச்சரித்தார் ஜோதி.
“உஷ்ஷ்.. அதெல்லாம் அவுங்கக்கிட்ட எப்டி சொல்லணுமோ.. அப்டி சொல்லிக்கலாம். நீ கண்டதையும் நினைக்காம கல்யாணப் பொண்ணா சந்தோஷமாயிரு. சரியா..?! சரி.. சரி.. வா.. உனக்கு முகூர்த்த சேலை எடுக்கணும். சீக்கிரம் கிளம்பு..” என ஆர்த்தியைத் துரிதப்படுத்தி அழைத்துக் கொண்டு முகூர்த்தப் புடவை எடுப்பதற்காக அழைத்துச் சென்றார் ஜோதி.
ஆர்த்திக்கோ வரும் வழியெல்லாம் கௌதம் சொன்ன வார்த்தைகள் ஒருபுறம் மனதைத் தாக்க, மறுபுறம் தன் பெற்றோர் தங்களின் சக்திக்கு மீறி தனக்காக பாடுபடுவதைக் கண்டு வேதனைக் கொள்ளவென படாதபாடு பட்டுப் போனாள்.
மற்ற நேரமாக இருந்திருந்தால் அவளது ஆனந்தத்தின் ஜொலிஜொலிப்பு அவளது செயல்களில் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கும். ஆனால் இப்போது எதிலும் நாட்டமில்லாமல் தன் பெற்றோருக்காக வலுக்கட்டாயமாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
ஜவுளிக்கடைக்கு புடவை எடுப்பதற்காக இரு வீட்டாரும் வந்திருக்க, அங்கே கௌதமும் இருப்பதைக் கண்ட ஆர்த்தியின் கால்கள் நிலைகொள்ளாமல் தடுமாறி விட்டது. ஏனெனில் முகம் முழுவதும் புன்னகையுடன் எப்போதும் போல ஆடைகளை தேர்வு செய்து தன் சகோதர, சகோதரிகளிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த ஆர்த்திக்கு ஒன்றும் புரியாமல் தலையே சுற்றிவிட்டது.
‘நான் காண்பதென்ன கனவா.. இல்லை நனவா..? எதுவுமே தெரியாதது போல சிரித்து பேசிக் கொண்டிருக்கிறாரே.. ஒருவேளை என்னிடம் விளையாட்டுக்காக அப்படி பேசினாரா?! இல்லையே.. ஒரு பெண்குரல் வேறு இடையில் புகுந்ததே..’ என குழம்பியபடி தன்மீது வைத்த சேலைகளில் பார்வையைப் பதித்தவாறு அமர்ந்திருந்தாள் ஆர்த்தி.
அப்போது மந்தாகினி ஆர்த்தியின் அருகில் வந்து, “ஆர்த்தி.. என்னம்மா பகல்லயே கனவா?! அதெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். இப்ப இந்தப் புடவை நல்லாருக்கான்னு பார்த்து சொல்லு..” என அவளை மெல்ல உளுக்கி கேட்டதும் அனைவரும் கொல்லென சிரித்து விட்டதைக் கவனித்த ஆர்த்திக்கு கன்னங்களிரண்டும் செம்மை பூத்தன.
அனைவரும் அதனை ரசித்துப் பார்த்திருக்க, இரு ஜோடி விழிகள் மட்டும் வெறுப்பை உமிழ்ந்தவாறு இருந்தன.
Super story flow
Super🥰🥰🥰
Super arambamey kalakkal sis