ATM Tamil Romantic Novels

காதல் கருவாயா!!!09

அத்தியாயம் 9

 

ஆர்வமாய் வாசலைத் திரும்பிப் பார்த்தவளின் கண்ணில் என்றுமில்லாத சந்தோஷ மின்னல் பளீரென வெட்டுவதை அப்போது தான் வீடு வந்து சேர்ந்திருந்த  கௌதமிற்கு மிகவும் சுவாரஸ்யமாகிப் போனது.

 

“ஹேய் மஞ்சு.. சுபா.. வாங்க.. வாங்க.. ப்ளீஸ் கம் இன்சைட்.” என அனைவரையும் வரவேற்றபடி அவர்களின் கைகளை வேகமாக ஓடிச் சென்று பிடித்தவளிடம், 

 

வெகுநாள் கழித்து பார்த்த தனது சகாக்களைக் கண்ட உற்சாகம், தன்னையும் வந்து ஒட்டிக் கொள்வதை உணர்ந்தவனுக்கோ, அவ்வுணர்வு விசித்திரமாக இருந்தது.

 

“நான் சொன்னேன்ல. இவ அப்டில்லாம் ஓவர்லோடு ஆகிருக்க மாட்டான்னு. ஓய் மஞ்சு.. நாளைக்கு நீயும் இப்டி தான்.. பாத்துக்கப்பா.. கல்யாணமெல்லாம் வேணுமா.. வேணாமான்னு..” என தோளை ஸ்டைலாகக் குலுக்கியபடி ராக்கேஷ் கிண்டலடிக்க,

 

“வாடா நல்லவனே.. இவரு பெரிய ரெஸ்ட்லிங் வீரரு.. அங்கங்க வீங்குன மசில்ஸ்ஸ ஒளிச்சு வைக்கத் தெரியாம போராடி அலுத்து என்னைக் கிண்டல் பண்ண வந்துட்டாரு..” என தன்னை நக்கலடித்த தன் தோழனின் ஒல்லியான உடல்வாகை பதிலுக்கு கிண்டலடித்து சிரித்தாள் ஆர்த்தி.

 

அதனைத் தொடர்ந்து கொள்ளென சிரித்தக் கும்பலைப் பார்த்து பெருமூச்சு விட்டவாறு, “அதானே.. என்னை வாறலைன்னா உங்களுக்கெல்லாம் தூக்கம் வராதே..” என தோழமையாய் சலித்தவன் அங்கே கௌதம் அமர்ந்திருப்பதைக் கண்டு அனைவருக்கும் ஜாடைக் காட்டி அடக்கினான் ராக்கேஷ்.

 

அவர்களின் அமைதியைக் கண்டவளுக்கு அப்போது தான் சுற்றுச்சூழல் நினைவுக்கு வந்தது. ஆனாலும் தன் குரலுயர்த்தி, “மங்கம்மா…” என ஓங்கிக் கத்தியதும் பவ்யமாக வந்து வேலைக்காரப் பெண் வந்து நிற்பதை வியப்புடன் பார்த்தனர் அவளது சகாக்கூட்டங்கள்.

 

“மூணு ஆரஞ்சு ஜீஸ்.. நாலு ஆப்பிள் ஜுஸ்.. சீக்கிரம்..” என கம்பீரமாய் உத்தரவிட்டு விட்டு கௌதமிடம் அழைத்து வந்தாள் ஆர்த்தி. “இவங்க எல்லாரும்…” என அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே,

 

“ஹலோ சார்.. எங்கள நியாபகமிருக்கா?! உங்கக் கல்யாணத்துல கேக் வெட்டி அலப்பறையக் கூட்டுனோமே..” என முந்திரிக்கொட்டையாய் முந்தியபடி பேசிய ரவியைப் பார்த்து புன்னகைத்தபடி கைகுலுக்கினான் கௌதம்.

 

“ஓ..எஸ்.. உங்கள மறக்க முடியுமா?! வாங்க.. உக்காருங்க..” என உபசரித்து கலகலப்புடன் பேசியவனைக் கண்டு, ‘எப்டியெல்லாம் நடிக்கிறார்?! ஃப்ராடு…’ என உள்ளூர எரிச்சல் மூண்டாலும் அதை அடக்கியபடி அமைதியாக இருந்தாள் ஆர்த்தி.

 

ஆனந்தச்சிரிப்புடன் நடுஹாலில் ஆள்அரவ சத்தம் கேட்டதும் மந்தாகினி வேகமாக வந்து எட்டிப் பார்த்தபடி வந்து நிற்பதைக் கண்டுகொள்ளாமல் வேண்டுமென்றே தோழியுடன் பேசுவதைத் தொடர்ந்தாள் ஆர்த்தி.

 

‘திமிரப் பாரேன்.. பாத்துக்குறேன்டி..’ எனக் கறுவியவாறு நகர முயன்றவரைப் பார்த்து, “இவுங்க என்னோட அம்மா.” என இயல்பாகத் தன் அன்னையை அறிமுகப்படுத்தியதும்,

 

 மரியாதை நிமித்தமாக அனைவரும் வணக்கம் தெரிவித்தபோது ஆர்த்தியின் அலட்சிய பாவனையைக் கண்டு மந்தாகினியின் முகம் கடுத்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்,

 

“பெரியவுங்க யாருமில்லாம இப்டி எல்லாரும் கூட்டமா வந்துருக்கீங்களே.. என்ன விஷயமா வந்துருக்கீங்கம்மா?” என மந்தாகினி படக்கென அவர்கள் அனைவரையும் பார்த்துக் கேட்கவும் கௌதம் முதற்கொண்டு அனைவருக்கும் என்னவோ போல் தோன்றி விட்டது.

 

அதை சமாளிக்கும் விதமாக முகமலர்ச்சியுடன், “எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிருக்கு ஆன்ட்டி. அதான் ஆர்த்தியையும் கௌதம் சாரையும் இன்வைட் பண்ணிட்டு போகலாம்ன்னு வந்துருக்கோம்.” எனக் கூறியபடி கல்யாணப் பத்திரிக்கையை மந்தாகினியிடம் கொடுத்தாள் மஞ்சுளா.

 

“முன்னெல்லாம் பெரியவுங்க வந்து தாம்பூலத்தட்டோட பத்திரிக்கைக் கொடுப்பாங்க. இப்பல்லாம் அப்டியா நடக்குது?!” என குறைபாடியவாறு அப்பத்திரிக்கையை வாங்கியபோது மஞ்சுவின் முகம் வாடுவதைக் கண்டு ரசித்தவர் ஓரக்கண்ணால் ஆர்த்தியை வென்றுவிட்டக் களிப்புடன் மெத்தனத்துடன் பார்த்தபோது உணர்ச்சித் துடைத்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் அவள்.

 

தனக்குள் இருக்கும் ஆத்திரத்தை வெளிக்காட்டும் விதமாக, “மங்கம்மா…” என ஓங்கிக் கத்தியதில் மந்தாகினியுமே சற்று அரண்டு தான் போனார். ஜூஸ்ஸுடன் அங்கு விரைந்து வந்தவளிடம்,

 

“ஏம்மா.. உனக்கு எத்தனை தடவ சொன்னாலும் அறிவே வராதா? உனக்கு இந்த வீட்டுல தொடர்ந்து இருக்கணும்ன்ற எண்ணம் இருக்குற மாதிரியே தெரியலியே…” என அதட்டியபோது நேரடியாகவே மந்தாகினியிடம் திரும்பி நின்று திட்டியவளை வேடிக்கைப் பார்த்த அனைவருக்கும் தெரியும் அந்த அதட்டல் யாருக்கானது என்று.

 

அவளது தோழியின் முகம் வாடியதற்கு தன்னைத் தான் ஜாடையாக வசைபாடுகிறாளென்று அறிந்தவருக்கு உள்ளூர எரியத் துவங்கியது. 

 

“மன்னிச்சுருங்கம்மா… கொஞ்சம் லைட்டாகிடுச்சு..” என பம்மியவாறு அனைவருக்கும் ஜூஸ்ஸைக் கொடுத்தாள் மங்கம்மா. தனது தோழி-தோழர்களுக்கு ஐந்து ஜூஸ் கொடுத்தது போக, கௌதமிற்கும் ஆரஞ்சு ஜூஸ் வழங்கப்பட்டது.

 

மீதமிருக்கும் ஆப்பிள் ஜூஸ்ஸை மந்தாகினி எடுக்கச் சென்றபோது, “அய்யோ அத்தை.. உங்களுக்கு பிபி, சுகரெல்லாம் அளவுக்கு அதிகமா இருக்கு. அதுன்னால ஆப்பிள் ஜூஸ் உங்களுக்கு ஆகாது அத்தை. அ.. மங்கம்மா.. அத்தைக்கு பாவக்கா ஜூஸ் போட்டுக் கொண்டு வா. அது தான் இப்போதைக்கு அவுங்களுக்கு ஏத்த ஜூஸ்..” என அந்த ஜீஸ்ஸை தனது கையில் எடுத்தவாறு அக்கறை ததும்பும் குரலில் தனது மாமியாரை உபசரித்தாள் ஆர்த்தி.

 

பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கியவாறு அவளது சகாக்கள் அமர்ந்திருக்க, கௌதமிற்கும் அதுவரை தன் தாயின் மீதிருந்த கோபம் போய் புன்னகை வரப் பார்த்தது கண்டு மந்தாகினிக்கு அவமானத்தால் முகம் கறுத்தது.

 

‘பாழாப் போனவ.. இப்பத் தான் என்மேல அக்கறை இருக்குற மாதிரி நடிச்சு கழுத்தறுப்பா.. உன்னை பாத்துக்குறேன்டி..’ என உள்ளூரக் கறுவியவாறு பத்திரிக்கையை கௌதமிடம் போட்டு விட்டு, முகத்தை சுளித்துக் கொண்டு விறுவிறுவென உள்ளே சென்று விட்டார்.

 

அக்கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தவனின் கண்கள் பளிச்சிட்டன. “கோவா…?!” என ஆச்சர்யச் சிரிப்புடன் கௌதம் கேட்க, “ஆமா சார். எங்க ரிலேட்டிவ்ஸ் நார்த் சைடுலயும் இருக்காங்க சௌத்துலயும் இருக்காங்க. சோ… இரண்டு தரப்புக்கும் பொதுவா கோவால மேரேஜ் வச்சுட்டோம்..” என மஞ்சு விளக்கியபோது,

 

“அதுமட்டுமில்ல சார். மேடம் ரொம்ப சிக்கனமா யோசிச்சு, அங்கயே மத்த ப்ளானும் பண்ணிட்டாங்க.” எனக் குறும்பாகக் கூறியபடி தன் தோழியைப் பார்த்து கண்ணடித்தாள் சுபா.

 

மாதுளம்பூ போல சிவந்தக் கன்னங்களுடன் மஞ்சுளா, “ஏய்.. சும்மா இருடி.. சார்.. நீங்களும் ஆர்த்தியும் கண்டிப்பா எங்க மேரேஜ்க்கு வரணும். நாங்க ரூம்ஸ்ஸெல்லாம் கூட அரேன்ச் பண்ணிட்டோம். ப்ளீஸ் சார்..” எனக் கெஞ்சியபடி கௌதமிடம் கூறிவதைக் கேட்ட ஆர்த்தி,

 

மந்தாகினியின் நடவடிக்கைகளை கவனித்து விட்டு கௌதமிடம் தன் தோழி வேண்டுகோள் வைக்கிறாளென புரிந்து, “ஹேய்.. மஞ்சு.. இதென்ன ரிக்வஸ்ட்லாம் பண்ற?! உன் கல்யாணத்துக்கு அவர் வர்றதுக்கு தோதில்லைன்னாலும் கண்டிப்பா நான் வருவேன்.” என நாசூக்காக கௌதமைக் கலட்டி விட்டதைக் கவனித்த கௌதம்,

 

சின்னச் சிரிப்புடன், “கண்டிப்பா நாங்க கபுள்ஸ்ஸா உங்க மேரேஜ்க்கு வருவோம். ஜூஸ்ஸக் குடிங்க..” என உறுதியளித்து உபசரித்து அனுப்பி வைத்தான். அவனது வார்த்தைகளில் திடுக்கிட்டவள், “ஆமாமா.. பெரிய்ய நாட்டாமை.. வாக்கு கொடுக்குறாராம் வாக்கு.. ஹிம்..” என வெடுக்கென முகத்தை சிலுப்பியவள் தனதறைக்கு செல்ல எழுந்தாள் ஆர்த்தி.

 

இவர்களின் பேச்சு வார்த்தைகளை அதுவரை ஒட்டுக் கேட்டபடி உள்ளே நின்றிருந்த மந்தாகினி, “என்னடா.. இந்தக் கல்யாணத்துக்குல்லாமா நீ போற?! அங்க உனக்கு யாரத் தெரியும்..?! வேணா.. வேணாம்.. யாரும் எங்கயும் போக வேண்டாம்.” என உத்தரவிட்டவரிடம் நிதானமாகத் திரும்பி,

 

“ம்மா… எனக்கும் கோவாவுல ஒரு பிசினஸ் மீட்டிங் இருக்கு. அதுனால நானே ஆர்த்தியக் கூட்டிட்டு போயிட்டு வந்துடுறேன். இதுல எதுவும் எனக்கு ப்ராப்ளமில்ல. உனக்கு ஏதும்…??” என தன் தாயிடம் மொழிந்து விட்டு, ஆர்த்தியிடம் திரும்பி வினவினான் கௌதம்.

 

‘தன்னுடன் இவர் சேர்ந்து வருவதா?!’ என உள்ளுக்குள் குமைந்தவள் முதலில் ‘முடியாது’ என வாய்திறந்து கூற முற்பட்டபோது மந்தாகினியின் முகம் கண்டு துணுக்குற்றாள். ஒருவிதக் கலவரம் நிறைந்து காணப்பட்ட அவரது முகம் கண்டு, ஏதோ புரிந்தது போல புன்னகைத்தபடி,

 

“ஓ… நாம தாராளமா போலாமே.. நாம தான் ஹனிமூனே போகலியே..* என கௌதமைப் பார்த்து ஆர்த்தி கூறியபோது கௌதமே ஒருகணம் தடுமாறி விட்டான். அங்கே மந்தாகினியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் பாவனைத் தெரிய குறும்புடன் சிரித்தபடி அறைக்கு சென்று விட்டாள்.

 

அவளது பார்வைப் பரிமாற்றங்களையும் தன் தாயையும் கண்டவனுக்கு, அதன்பிறகு தான் புரிந்தது இது அவளது மனமார்ந்த பதிலல்ல என்று. இருந்தாலும் ஒன்றாக செல்வதற்கு அவள் ஒப்புக் கொண்டதே தனக்குள் உற்சாகம் ஊற்றெடுப்பதற்கு போதுமானதாக இருந்தது.

 

அன்றைய மாலைநேரம் முழுவதும் அவனது புன்னகை ததும்பும் வதனத்தைக் கண்டவளுக்கு சற்றே எரிச்சல் வர, இரவின் தனிமையில் அலுவலக அறையிலிருந்து வெளிவந்தவனிடம், 

 

“கல்யாணத்துக்கு சேர்ந்து போறோம்.. அவ்ளோ தான். அதுக்கு மேல பெருசா கற்பனை பண்ணிக்க வேண்டாம்.” எனக் கறாரான குலில் ஆர்த்தி கூறுவதைக் கேட்டவனுக்கு உள்ளுக்குள் நகைப்பு வந்தாலும்,

 

“என் லிமிட் என்னன்னு எனக்குத் தெரியும். உன் விருப்பமில்லாம என் சுண்டுவிரல் கூட உன்மேல படாது. போதுமா?!” என இயல்பாகக் கூறிவிட்டு அங்கிருந்து மீண்டும் தனது அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டான் கௌதம்.

 

நாட்கள் எப்போதும் போல உருண்டோடின. தற்போதெல்லாம் ஆர்த்தி முன்பு பார்த்த வேலைகள் எதையும் செய்யாமல் தன்னுடைய வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தியக் காரணத்தால் மந்தாகினி அதுவரை அந்தந்த வேலை செய்த ஆட்களை நிறுத்தி வைத்திருந்தவர், மீண்டும் அவரவர் வேலைகளை செய்யச் சொல்லி வேலைக்கு அமர்த்தினார்.

 

ஒருமுறை இருக் கை நிறைந்த துணிப்பைகளுடன் ஆர்த்தி வெளியே செல்வதைக் கவனித்த கௌதம், ‘வீட்டை விட்டு செல்கிறாளோ?!’ என்று உள்ளூர எழுந்த பயத்துடன் பார்த்தவாறு, அவளைப் பின்தொடர்ந்தான்.

 

ஆனால் ஆர்த்தி சென்றதோ ஆதரவற்றோர் இல்லத்திற்கு. அங்கே நிர்வாகியை சந்தித்து தன்னிடமிருந்த உடைமைகளை அவர்களிடம் ஒப்படைத்து அங்குள்ள சிறுபிள்ளைகள், இளவயதினர் என அனைவருக்கும் அதை பிரித்துக் கொடுத்து, பின் ஓடி விளையாடி மகிழ்வுடன் இருப்பதைக் கண்டவனுக்கு, ஒன்று மட்டும் புரிந்தது. ஒருவரின் தோற்றத்தை வைத்து குணத்தை எடை போடக்கூடாதென.

 

தனது மனதில் ஆர்த்தி மேலும் மேலும் உயர்வதை உணர்ந்தவனுக்கு இன்னும் அவளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் வெகுவாகத் தோன்ற ஆரம்பித்தது. முன்போல ஆர்த்தி சேலை மட்டுமே உடுத்துவதை நிறுத்தியிருந்தாள்.

 

சுடிதார், ஜீன்ஸ் அன்ட் டாப் எனத் தனக்கு எது கம்பீரத் தோற்றத்தை வழங்குமோ, அதையே விரும்பி அணிந்து கொண்டாள். அவளது உடைகளின் நேர்த்தி மற்றும் அணியும் முறை கண்டு மாலாவிற்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்கத் தொடங்கியது கண்டு மந்தாகினி தவிர்த்து அனைவருக்குமே மகிழ்ச்சியாக இருந்தது.

 

காலப்போக்கில் மாலாவும் அர்ஜூனும் ஆர்த்தி மாலையில் படிக்கும் சமயங்களில் ஒன்று சேர்ந்து படிக்கத் தொடங்கியது மட்டுமல்லாமல் அவர்களது படிப்பு சார்ந்த சந்தேகங்களுக்கு அவளது பொறுமையான விளக்கங்களும் மிகவும் பிடித்தது.

 

இவ்ரகளது கூட்டணி கண்டு கீர்த்திவண்மனுக்கும் கௌதமிற்கும் ஆனந்தமாக இருக்க, மந்தாகினி ஆர்த்தியின் கோவா ட்ரிப்பைக் கெடுக்கும் வேலைகளை மிகக் கவனமாக செய்து கொண்டிருந்தார்.

 

சரியாக இரயில் நிலையத்திற்கு கௌதமும் ஆர்த்தியும் கிளம்பும் தருவாயில் அங்கே காரில் வந்து இறங்கினாள் ஸ்வப்னா கையில் பயணப் பொதியுடன்.

2 thoughts on “காதல் கருவாயா!!!09”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top