ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம்..
சனிக்கிழமை நடுநிசி.. வயது வித்தியாசமின்றி அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தங்கள் வார இறுதியை வரவேற்க களிப்புடன் கொண்டாடிக் கொண்டிருந்த பிரபலமான பப் அது..
ஒரு புறம் சற்று வயது முதிர்ந்தவர்கள் தங்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டு குட்டி குட்டி கோப்பைகளில் மதுவை அருந்தி கொண்டிருக்க..
ஒருபுறம் நடுத்தர வயதினர் தங்கள் இணைகளோடும்.. இணையாக அழைத்து வந்திருந்த யுவதிகளோடும் கையில் மதுவையும் மாதுவையும் மாறிமாறி அணைத்து கொண்டிருந்தனர்.
இன்னொருபுறம் காதைக் கிழிக்கும் இசையுடன் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் விஜே தனது இசையையும் பாடலையும் மாற்றி மாற்றி விட்டுக் கொண்டிருக்க.. இளம்வயது யுவதிகளும்.. யுவன்களும் தங்களை மறந்த நிலையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அந்த இசையுடன் ஒன்றியிருந்தனர்.
அந்த இளைஞர் கூட்டத்துக்கு நடுவே இசைக்கு ஏற்றபடி தன் அங்க லாவயங்களை அசைத்து அசைத்து.. சற்றே சிறுத்த இடையை வளைத்து நெளித்து.. ஆடிக் கொண்டிருந்தாள் யுவதி ஒருத்தி.. அவள் நிவேதிதா மேகநாதன்!!
இந்திய வம்சாவளியில் பிறந்த அன்னைக்கும் இந்தியாவிலிருந்து வேலைக்காக ஆஸ்திரேலியாவில் குடியேறிய தந்தைக்கும் பிறந்தவள்.
இந்திய பெண்களுக்கே உள்ள அந்த தனித்துவமான கோதுமை நிற வண்ணத்தில் மிளிரும் அவளது தேகம்.. சுருண்ட அலையென கேசம் தோல் வரை வெட்டப்பட்டு அவள் ஆட்டத்திற்கு ஏற்ப அதுவும் துள்ளாட்டம் போட்டது.. சிறு பொட்டை கூட இதுவரை கண்டிராத பிறைநுதல்.. வில்லென வளைந்த புருவங்கள் அவள் பேசும் போது ஏறி இறங்கி அழகு காட்டும்.. கூரிய மூக்கு.. செப்பு இதழ்கள்.. மொத்தத்தில் ஐந்தடி அல்ட்ரா மாடர்ன் கன்னியவள்.
இந்த கொண்டாட்டத்திற்கு என்ன அவசியம் என்று அவசியமான கேள்வியை அவர்களைப் பார்த்து நாம் கேட்க முடியாது. ஏனென்றால் மேல்தட்டு வர்க்க பழக்கத்தில் பெரும்பாலும் வார விடுமுறையை இவ்வாறுதான் ஏதாவது ஒரு பப்பில் கழிக்கும் இன்றைய தலைமுறையின் ஐகான் இவள்..
இதுவரை பெரிதாக எந்தவித பொறுப்புகளும் அற்று கல்லூரி காலத்தை கூட்டை விட்டு வெளியே வந்த பறவை என உல்லாசமாக துள்ளித் திரிந்து அனுபவித்து இதோ இன்றோடு முடிந்து விட்டது. நாளை மூட்டை கட்டிக்கொண்டு தாய் தந்தை வாழும் சிட்னி நகருக்கு செல்ல வேண்டும்.
அதனால் தான் திகட்டத் திகட்ட.. திணறத் திணற.. விடிய விடிய.. ஆடி குடித்து களித்து களைத்து கொண்டிருந்தாள் தன் நண்பர்கள் கூட்டத்தோடு..
“நிவே.. நிவே.. டேஸ்ட் திஸ் டூ” என்று அந்நாட்டை சேர்ந்த இவளின் நண்பன் டேனியல் சின்ன குப்பியில் ஒரு மதுவை கொண்டு வந்து கொடுக்க… அது என்னவென்று எல்லாம் ஆராயாமல் இரண்டு விரல்களில் பிடித்து தொண்டைக்குள் சரித்துக் கொண்டு தன் ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்தாள். அந்த ஐந்தடி உடலும் எவ்வளவு தான் இவளது ஆட்டத்தை தாங்கிக்கொள்ளும்.. முட்ட முட்ட குடித்தது வேறு.. வேர்க்க வேர்க்க ஆடியது வேறு அவளை களைப்பில் தள்ள.. தன் ஆட்டத்தை முடித்துக் கொண்டு அருகில் இருந்த மேசையில் ஏறி அமர்ந்து கொண்டாள். அருகில் யார் இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதெல்லாம் கவனத்தில் இல்லை.. பின் தன் நண்பர்களை பார்த்து கையசைத்து தான் செல்கிறேன் என்று கூற.. அவளோடு வந்த அந்நாட்டைச் சேர்ந்த நண்பி லீவி பெர்னாண்டஸ்.. நானும் வரட்டுமா என்று கை அசைவில் அங்கிருந்தே கேட்டாள்.
நிவேதிதாவும் தன் இரண்டு கட்டை விரல்களின் தூக்கி அவளிடம் சைகை காட்டி “நான் ரொம்ப ஸ்டெடி” என்று விட்டு பார்க்கிங் நோக்கி சென்றாள்.
‘பாட்டா போடுறானுங்க பாட்டு!! என்ன இருந்தாலும் தமிழ் குத்து பாட்டு போட்டு ஆடுற சுகமே தனிதான்.. இவங்களுக்கெல்லாம் எங்க அது தெரிய போகுது’ என்று உள்ளுக்குள் இருக்கும் தமிழ் மண் அவ்வாறு அவளை பேச சொன்னது. அதுவரை தான் தன்னை மறந்து ஆடியதை மறந்துவிட்டு புலம்பிக்கொண்டே சென்றவள் எதிரில் இருந்த பெருத்த தூணில் முட்டி கொள்ள..
‘”நிவி உனக்கு ஓவராயிடுச்சு ஏத்தாப்ல இருக்கிறது என்னென்னு கூட உன் கண்ணுக்கு தெரியல.. இப்படியா முட்டிக்குவ” என்று தன் நெற்றியை தேய்த்து வைத்து அந்த தூணை சுற்றி கொண்டு செல்ல முயல.. இம்முறையும் அதே தூணில் சென்று முட்டி கொண்டாள்.
“நாம தான் தண்ணி அடிச்சு இருக்கோம் சரி.. தூணுமா தண்ணி அடிச்சு இருக்கும்? நம்மள மாதிரி அதுவும் ஆடிக்கிட்டே இருக்கு. நம்மள விட அது பெரிய தண்ணி பார்ட்டியா இருக்கும் போலயே?”என்று மேவாயில் ஒற்றை விரலை வைத்து யோசித்தவள் கண்களை நன்றாக கசக்கி விட்டு மீண்டும் ஒரு அடி எடுத்து வைக்க.. அதே தூணில் முட்டிக்கொண்டு கீழே சரிய அவளை விழுந்துவிடாமல் இரு வலிய கரம் பிடித்து இருந்தது.
ஆனால் இவளோ போதையில் இருக்க சற்றும் அந்தக் கரத்திற்கு உரிய நபரை அவளால் பார்க்க இயலவில்லை. மங்கலாக தெரிய கண்களை நன்றாக தேய்த்துக் கொண்டு பார்க்க முனைய இரண்டாக தெரிந்தது இப்பொது நான்கு நான்காக தெரிந்தது. “யூ ஆர் கம்ப்ளீட் டவுன் நிவி” என்று அந்த கைகளில் மயங்கி சரிந்தாள்.
மறுநாள் காலை அவள் விழித்தது என்னவோ அவளது அறையில் தான்.. கண்களை சுருக்கி மெல்ல அருகில் அடித்து கொண்டிருந்த அலாரத்தை எடுத்து ஆப் செய்துவிட்டு மொபைலில் மணியை பார்க்க அது பத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. இன்னும் கண்களை சுருக்கி அதைக் கூர்ந்து பார்க்க மணி பத்து பத்து என்று கண்டதும் ஐயோ என்று அலறி எழுந்து அமர்ந்தாள் நிவேதிதா.
“என்னடா சரக்கு அது.. தலையை எப்படி கிண்ணுனு வலிக்குது. ஃபாரின் சரக்குனு நம்பி அடிச்சது தப்பா போச்சு.. லோக்கல் விட மகா மட்டமா இருக்கு.. அந்த டேனி பையன் என்னத்த கொண்டு வந்து கொடுத்தான். ஒரே ஹேங் ஓவரா இருக்கே” என்று இரு கைகளால் தலையை பிடித்துக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்து இருந்தாள்.
அப்புறம்தான் மணி பத்து என்று அவளுக்கு மூளைக்கு உறைக்க பதினோரு மணிக்கு பிளைட்.. ‘நல்லவேளை நேத்திக்கு பாதி திங்ஸ் பேக் பண்ணி வச்சோம்’ என்று மீதி இருந்த மற்ற பொருட்களையும் அவசர அவசரமாக தன் கையில் கிடைத்த பெட்டியிலும் பேக்களிலும் திணித்துக்கொண்டு அந்த அறையையும் காலி செய்து ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு கீழே தடதடவென தன் பெட்டிகளை இழுத்துக்கொண்டு வந்தாள் நிவேதிதா.
தான் நேற்று எப்படி தன் அறைக்கு வந்தோம் என்று கேள்வி எல்லாம் ஃப்ளைட்டுக்கு நேரமாகிவிட்டது என்று அவசரத்தில் பின்னுக்கு போய்விட்டது நிவேதிதாவுக்கு.
அங்கே அவள் பேயிங் கெஸ்டாக தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் எலிசா அவளை முறைத்துப் பார்த்து, “எத்தனை முறை சொல்லி இருக்கேன் நிவே? இப்படி படியில் தடதடவென பெட்டியை இழுத்து கொண்டே வராதே என்று” என்று அவர் கடிந்து கொள்ள..
சட்டென்று தன் கையில் உள்ள பெட்டி எல்லாம் ஓரத்தில் போட்டவள் அவரை இறுக்க அணைத்து “ஐ லவ் யூ.. ஐ மிஸ் யூ எலிசா டார்லிங்.. உம்மா உம்மா” என்று இரு கன்னங்களிலும் அவருக்கு முத்தங்களை வைக்க அதில் கரைந்து போனார்.
இரண்டு ஆண்டுகளாக இங்கு தங்கி தான் தனது மாஸ்டரை படித்துக் கொண்டிருந்தாள் நிவேதிதா. என்ன குறும்பு செய்தாலும் இந்த இந்தியப் பெண்ணை அவருக்கு ரொம்பவே பிடிக்கும். அவளும் ஹாலிடேஸ் வீட்டிற்கு சென்று வரும்போது இவருக்கு என்று இந்திய பொருட்களை அன்புடன் கொடுப்பாள், அவர் மறுத்தாலும் விடுவதில்லை.. அவருக்கு என்று உறவுகள் யாரும் இல்லை. இந்த வீட்டில் உள்ள சிறுசிறு போஷன்களை இம்மாதிரி படிக்க வரும் வேலை செய்யும் பெண்களுக்கும் பேயிங் கெஸ்டாக வாடகைக்கு விட்டு அதில் தான் அவர் வாழ்கிறார். அதில் நிவேதிதா அவருக்கு ரொம்ப ஸ்பெஷல்.
“நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த டார்லிங்கை பார்க்க வர மறக்காதே” என்று கலங்கிய கண்களுடனும் குரல் தழுதழுக்க அவர் கூற.. பாசத்துக்கு ஏங்கும் அவரைக் கண்டவுடன் அவளுக்கு மனக்கண்ணில் சில முகங்கள் மின்னி மறைய மீண்டும் அவரை ஒருமுறை இறுக்க அணைத்து.. “கண்டிப்பா.. மாதத்துக்கு ஒருமுறையாவது கண்டிப்பா வந்து உங்களை தொந்தரவு செஞ்சுட்டு போவேன்” என்று சொல்லி அவள் கண்ணடித்தாள்.
“யூ நாட்டி” என்று சிரித்தவர் “ஆல்வேஸ் வெல்கம் மை டியர்” என்று அவளுக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பினார்.
அனைத்து பெட்டிகளையும் தனது காருக்குள் போட்டவள் தன்னை ஒரு முறை திரும்பிப் பார்க்க தான் நேத்து போட்டிருந்த உடையின் மீது மேலும் ஒரு ஓவர் கோட்டை போட்டு இருந்தாள். குளிக்காமல் முகம் மட்டுமே கழுவி வந்து இருக்க தன் மீது ஏதோ வாடை தோன்றுவது போல தோன்ற, பையில் இருக்கும் பர்பூம்மை அவசரமாக வாயில் இருந்து எடுத்து உடல் முழுக்க ஒருமுறை அடித்துக்கொண்டு இப்போ பெட்டர் என்று காரை விமான நிலையத்தை நோக்கி விரட்டினாள்.
அறிவிப்பு கொடுத்து வெகு நேரம் கழித்தே இவள் அவசர அவசரமாக உள்ளே நுழைந்து தனது டிக்கெட்டை உறுதிப்படுத்திக் கொண்டு விமானத்தில் ஏறி தன் சீட்டை கண்டுபிடித்து அமர்ந்தவளுக்கு ஏகத்துக்கும் மூச்சு வாங்கியது. “அப்பா ஒரு வழியா ஏறியாச்சு.. சுவாதி கிட்ட இருந்து தப்பிச்சாச்சு .. இல்லைன்னா இதுக்கும் அரை மணி நேரத்துக்கு லெக்ச்சர் எடுத்திருப்பா” என்று கூறிய சுவாதி நிவேதிதாவின் அம்மா.
மெல்ர்போனில் இருந்து கிளம்பவே அவளுக்கு மனசு வரவேயில்லை. பின்னே சுதந்திரப் பறவையாக இங்கே பறந்து திரிந்து விட்டு கூண்டுக்குள் அடைபட எந்த கிளிக்கு தான் பிடிக்கும்.. அது தங்கக்கூடே என்றாலும்!!
சுவாதி ஒவ்வொரு நாளையும் தனக்குள் வகுத்து கட்டமைத்து அதன் படியே நடக்கும் பெண்மணி. இல்லையென்றால் இந்த ஆஸ்திரேலியாவில் தனி ஒரு மனுஷியாக தொழிலையும் திறம்பட நிடத்தி வீட்டையும் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? அதுவும் கடந்த 5 ஆண்டுகளாக..
அப்போ ஐந்தாண்டுகளாக தானா? அதற்கு முன் இலகுவாக தான் இருந்தாரா? என்று கேட்டாலும் ‘இல்லை!!’ என்று தான் சொல்ல வேண்டும். அவர் பிறப்பிலே அப்படித்தான் அவரது மரபணவிலும் அவரது தந்தையின் வளர்ப்பிலும் வந்தது அந்த கட்டுக்கோப்பு..
வடிவேல் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் “எதையுமே பிளான் பண்ணி தான் செய்யணும்!!”என்பவர். ஆனால் இதே சுவாதி தான் மேகநாதனின் மீது காதலில் விழுந்தார், ஆனால் இவருக்கு நேர் எதிர்மறை குணம் உடையவர் அவர்.
வாழ்க்கையின் போக்கை அதன் சுவாரஸ்யத்திலேயே கழிக்க விருப்பம் உடையவர் மேகநாதன். தமிழகத்தின் ஒரு கிராமத்தில் இருந்து தன் நிலையை படிப்பால் உயர்த்தி ஆஸ்திரேலியாவுக்கு வேலை தேடி வந்த இடத்தில் சுவாதியின் காதலில் திக்குமுக்காடிப் போனார் என்று தான் சொல்ல வேண்டும். ஒற்றை வாரிசான சுவாதியின் நேர்மையிலும் நிமிர்விலும் கூடவே அழகிலும் கவரப்பட்டவராக.. இதோ இந்த நொடி வரை விளக்கை சுற்றும் விட்டில் பூச்சியாக அவரைதான் சுற்றி வந்து கொண்டிருக்கிறார் மேகநாதன்!!
மேகநாதன் பெரும் கூட்டு குடும்பத்தில் இருந்து வந்தவர். இங்கே மனைவியோடு ஆஸ்திரேலியாவிலேயே செட்டிலாகிவிட்டார்.
மாமனார் இறந்த பின்பு அவரின் இரும்பு தொழிற்சாலை மேகநாதன் கைக்கு வந்து விட்ட.. அதன்பின் அவரது மொத்த நேரமும் தொழிற்சாலையே விழுங்கிக் கொண்டது.
கூடவே அன்பு மகளும் அழகு மனைவியும்!!
பின் எங்கே பெற்றவரையும் பெற்ற மண்ணையும் பற்றி நினைக்க!!
இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஒரு வாரம் சென்று இவர் மட்டுமே இருந்து விட்டு வருவார். அது என்னவோ சுவாதிக்கு அங்கே வர பிடிப்பதே இல்லை அதிலும் தன் கணவனையும் ரொம்ப நாளும் விட்டு வைத்திருக்க மாட்டார். மேகநாதனும் ஒரு வாரத்திற்கு மேல் அங்கே இருந்ததும் இல்லை!! நிவேதிதாவும் தன் சொந்தங்களோடு எப்பவாது அப்பா வீடியோ காலில் பேசும் போது ஒரு ஹாயோடு கடந்து விடுவாள்.
நேற்று அடித்த சரக்கின் சொச்ச மிச்சமெல்லாம் இருக்க அந்த இரண்டு மணி நேர பயணத்தில் நன்றாக உறங்கி எழுந்தாள் அவள். மெல்போர்னில் பயன்படுத்தி வந்திருந்த வண்டியை விமான நிலையத்திலேயே விட்டு விட சொல்லி சுவாதி ஏற்கனவே கட்டளையிட்டிருந்தார்.
ஒரு வாரம் நண்பர்களுடன் இருந்து விட்டு வருவதாக அவள் எவ்வளவு சொல்லியும் சிறிதும் காதில் வாங்காமல் பரீட்சை முடிந்த மறுநாளே கிளம்பி வர ஆணையிட்டிருந்தார். ஆம் ஆணையே தான்!!
“வர வர இந்த மம்மியோட டார்ச்சர் தாங்கல.. ஒரு வாரம் நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறா” தனக்குள் புலம்பியவாறு அவள் விமான நிலையத்தை விட்டு வெளியே வர, அவளை அழைத்து செல்ல வந்த நின்ற காரை பார்த்து கண்களை விரித்தாள். ‘எப்படித்தான் அந்த மம்மிக்கு மூக்குல வேர்க்கமோன்னு தெரியல.. கரெக்டா கார அனுப்பிட்டா.. ஒரு கேப்ல கூட வர எனக்கு சுதந்திரம் இல்லை’ என்று பொறுமியவாறு அதில் ஏறி தன் வீட்டிற்கு சென்றாள். வீடா? சிறு அரண்மனை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர் வசம் இருந்த அந்த வீடு பல கைகள் மாறி கடைசியாக சுவாதியின் தந்தையை வந்து அடைந்தது.
அவளுக்கு இந்த வீட்டை பார்க்க பார்க்க..
கூண்டுக்குள் அடைபட்டது போலவே வரும் நினைவை தவிர்க்க இயலவில்லை.
பெருமூச்சோடு வீட்டுக்குள் செல்ல அன்னை வீட்டில் இல்லை. அது அறிந்ததே!! பின் தந்தையை சென்று பார்த்தாள் மகள்.
தொடர்ந்து 5 ஆண்டுகளாக முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொண்டு வீல் சேரிலேயே தனது காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார் மேகநாதன்.
தந்தையைப் பார்த்ததும் கண்களில் குளம் கட்ட ஓடி சென்று இறுக்க அணைத்துக் கொண்டாள் தந்தையை. “ஐ மிஸ் யூ டேட்.. மிஸ் யூ வெரி பேட்லி” என்று அழுகுரலில் அவள் கூற..
மகளை இறுக்க அணைத்து “மீ டூ பேபிமா” என்று குளறலான வார்த்தைகளால் மகளின் நெற்றியில் முத்தம் வைத்தார். தீவிர சிகிச்சையின் பலனாக கை மற்றும் வாய் சிறிது பழைய நிலைக்கு திரும்பி விட, கால்கள் மட்டுமே முற்றிலுமாக முடிங்கி விட்டது.
“நீ போய் ரெஸ்ட் எடு பேபிமா” என்று மகளை அனுப்பி வைத்தவர், போகும் மகளிடம் “அம்மா வரதுக்குள்ள குளிச்சிடு பேபிமா” என்று கூறி சிரிக்க..
தந்தை தன்னை கண்டு கொண்டார் என்று உணர்ந்த நிவேதிதா அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு தன் அறையை நோக்கி ஓடினாள்.
அதன்பின் குளித்து சிறிது நேரம் ஓய்வெடுத்து மாலை வேளை அன்னையின் அழைப்பில் அரண்டு புரண்டு எழுந்தாள்.
அந்த பெரிய தோட்டத்தில் நடுவே இவர்கள் மாலைவேளை டீ சாப்பிடுவதற்கு என்று போடப்பட்டிருந்த அலங்காரமான நாற்காலியில் ஒன்றில் சுவாதி அமர்ந்திருக்க, அவருக்கு அருகிலேயே மேகநாதன் அமர்ந்திருந்தார். அன்னையை பார்த்து மெதுவாக புன்னகைத்து அவர் அருகில் அமர்ந்து கொண்டாள். தந்தையிடம் செய்ததுபோல மெல்லாம் கட்டிப்பிடித்து கொஞ்சும் வழக்கமெல்லாம் சுவாதியிடம் செல்லுபடியாகாது. அவரே நினைத்தால் பெண்ணின் தலையைத் தடவி விட்டு நெற்றியில் முத்தம் இடுவதோடு சரி.. மேல்தட்டு வர்க்க பழக்கம்..
கணவனுக்கும் மகளுக்கும் தன் கையாலேயே டீ கலந்து கொடுத்தவர் “நாளிலிருந்து நீ கம்பெனில வேலைக்கு வந்திடனும் நிவே” என்று கூற, இது நாள் வரை புலி வருது வருது என்று நினைத்த விஷயம் வந்துவிட.. மறு பேச்சின்றி தலையை அசைத்து ஒப்புதல் அளித்தாள்.
அதன் பின் ஆறு மாத காலமும்.. நிவேதாவுக்கு ராகுகாலம்.. ஏழரை காலம்..
என்று எல்லாம் சேர்ந்த காலமாகவே இருந்தது. சுவாதிக்கு இயற்கையாகவே இருந்த ஆளுமை அவர் தந்தைவழி சொத்து என்றால், நிவேதாவிடம் இருக்கும் இலகுவான அதேசமயம் வாழ்க்கையை ரசித்து வாழும் விருப்பம் இவள் தந்தையிடமிருந்து வந்தது. இரண்டு மகள்களும் ஒன்றில் மட்டுமே ஒற்றுமை.. பிடிவாதம், தான் நினைத்தது தான் சரி என்கிற எண்ணம்.. பெரும்பாலும் அன்னையின் வேலை பளுவும் அவரின் குணமறிந்து பல விஷயங்களில் விட்டுக் கொடுத்தாலும் சில விஷயங்களை விட்டுக் கொடுக்காமல் தன் பிடிவாதத்திலே நிற்பாள் மகள். அது தொழில் வாழ்க்கை இரண்டிலுமே!!
அவள் அம்மாவின் தாரக மந்திரம் “உழைக்க அஞ்சக் கூடாது என்பதே!! இதுதான் நீ கத்துக் கொள்கிற நேரம்!! நேரம் காலம் பார்க்காமல் உழைக்கணும். இது நம்ம கம்பெனி ஆபீஸ்க்கு வரும் முதல் நீயா தான் இருக்கனும், ஆபீஸ் விட்டு போற கடைசி ஆளும் தான் நீயாக தான் இருக்கணும்”
இவ்வாறு அவர் பேசும் நேரங்களில் தலையை தலையை ஆட்டி விட்டு சென்று விடுவாள்.. சில சமயம் மகளின் சோர்ந்த முகத்தைப் பார்க்கும்போது சுவாதிக்கும் மகளை ரொம்ப கஷ்டப்படுதிதுறோமோ என்று தாயாக நினைத்தாலும், அதே சமயம் இவ்வளவு பெரிய கம்பெனியை அடுத்த நிர்வகிக்கும் சிஇஓ அவள்தானே அதற்கான பயிற்சியை கொடுத்தே ஆகவேண்டும் என்று மனதை மாற்றிக் கொள்வார்.
சுவாரசியமே இல்லாமல் காலை முதல் இரவு வரை வேலை வேலை என்று ஓடுவதால் மாதத்திற்கு இரண்டு நாட்கள் எலிசாவை பார்க்க சென்று வருகிறேன் என்று தன் நண்பர்களுடன் மெல்போர்னில் என்ஜாய் செய்து விட்டு தான் வருவாள்.
அவளின் வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை இன்னும் கூட்ட அவள் வாழ்க்கையில் நுழைந்தான் ஒருத்தன்.. இல்லை இல்லை சுவாதி நுழைத்தார்.
அவன் ஹரிஷ் நீலகண்டன்..
இவர்களைப் போல வசதியான பின்னணி இல்லை என்றால் அவர்கள் குடும்பமும் நல்ல அந்தஸ்தான நிலையில்தான் இருக்கிறது. ஹரிஷின் வேலை திறமையை பார்த்து தான் பிற்காலத்தில் தன் மகளுடன் கைகோர்த்து இந்த கம்பெனியை பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் தான் அவனை தேர்வு செய்திருந்தார் சுவாதி. மேகநாதனுக்கு இதில் பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லை அவரும் அவனிடம் பழகி இருக்கிறார் நல்ல பையன் நல்ல குடும்பம் என்று அவருக்கும் விருப்பம்.
மறுநாள் மகளிடம் அவனை அறிமுகப்படுத்தி வைக்க.. அன்று பிடித்தது அவளுக்கு சனிப்பெயர்ச்சி!! இருவருமே அப்படித்தான் நடந்து கொண்டார்கள் அவளிடம்!! ஒரு பக்கம் சுவாதியோ.. “நாளைக்கு காஸ்ட்யூம் டிசைனர் வர சொல்லி இருக்கேன்.. நீங்க ரெண்டு பேரும் டேட்டிங் போறதுக்கு உனக்கும் பிடித்தமான உடையை தேர்வு பண்ணிக்கோ”
“இருக்க இருக்க உனக்கு முகம் எல்லாம் டல்லடிக்குது. கூடிய சீக்கிரமே எங்கேஜிமெண்ட் வரப் போகுது. பார்லர் ரெகுலரா போய் முகத்தை கவனிக்கற வழியை பாரு”
“இந்த வாரம் உன்னோட இடுப்பு 2 இன்ச் கூடிவிட்டதா ஜிம் மாஸ்டர் சொன்னாரு.. இனிமே மெல்போர்ன் போற வழக்கத்தை நிப்பாட்டு.. அவர் சொல்லுற டயட்டை பாலோ பண்ணு”
என்று சுவாதி ஒருபக்கம் அவளை வறுத்து எடுத்தார் என்றால்.. ஹரிஷ் மறுபுறம் அவளைப் படுத்தி எடுத்தான்.
கரெக்டாக இரவு 10 மணிக்கு கால் செய்பவன் ஐந்து நிமிடத்திற்கு மேல் அவளிடம் பேச மாட்டான். கேட்டால் அவன் வாழ்க்கையை வரையறுத்து வாழ்வதாக அறிவிப்பான். கூடவே அந்த ஐந்து நிமிடங்களும் தன் தொழிலை பற்றியும், தன் வேலை திறமை ஆளுமை பற்றியும் கூறுபவன், பிற்காலத்தில் அவளோடு சேர்ந்து அவளது கம்பெனி எவ்வாறு பார்த்துக் கொள்வான் என்பது வரை திட்டமிட்டு வைத்திருப்பது எல்லாம் கூறுவான். ஆனால் ஒருமுறை கூட இவளுடன் சேர்ந்து வாழும் வாழ்வை பற்றி பேசியதே கிடையாது.
பிடித்தம் இல்லாத தொழிலை அன்னைக்காக செய்தாலும், இந்த ஹரிஷ் விசயத்தில் அவரின் கட்டளைக்கு அடிபணிய முடியாமல்.. இந்த லாகிரிதம் (ஹரிஷூக்கு அவள் வைத்த பெயர்) கட்டி மேய்க்க முடியாமல் மன அழுத்தம் மிக ரொம்பவே ஒய்ந்து போனாள் நிவேதிதா.
இதைவிட கொடுமை என்னவென்றால் “அடுத்த வாரம் ஹரிஷ் அவர்கள் பெற்றோர்கள் முன்னிலையில் அவளுக்கு மோதிரம் அணிவித்து திருமணத்தை உறுதி செய்யப் போகிறான்” என்று கூறி அதற்கு ஒரு முறை பார்லரில் சிட்டிங், ட்ரஸ் பிட்டிங் என்று சுவாதி பாடாய் படுத்த.. அழுத்தம் தாங்க முடியாமல் தந்தையின் அறைக்கு சென்று கட்டிலில் அமர்ந்தவரின் மடியில் முகம் புதைத்தாள்.
மகளின் உணர்வுகளை படித்த அந்த தந்தையும் “உனக்கு எது பிடிக்குமோ அதை செய் பேபிமா.. எப்பவுமே உன் கூட நான் இருப்பேன்” என்று அவளுக்கு தைரியம் அளிக்க.. தந்தையின் தைரியம் அவளுக்கு ஒரு புத்துணர்வை தந்தது. அடுத்த வாரத்தின் முதல் நாளே, யாருமறியாமல் வீட்டை விட்டு.. இல்லை இல்லை நாட்டைவிட்டே கிளம்பி இருந்தாள் நிவேதிதா..
தங்க கூண்டை விட்டு பறந்து சென்ற கிளி பருந்திடம் அகப்படுமா? இல்லை வேடனிடம் அகப்படுமா?
காதலே… காதலே..
Nice