ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 3

 

3

 

காரில் ஏறிய நிவேதிதா பின்னால் திரும்பி பார்க்க.. தூரத்தில் சிறு புள்ளிகளாக தெரிந்தனர் கதிரும் அவன் ஆட்களும்..

அப்பாடா என்று மூச்சிரைத்த நெஞ்சில் கைவைத்து சீட்டில் பின்பக்கம் சாய்ந்து தன்னை ஆசுவாசப் படுத்தி கொண்டாள்.

 

 

“சரியான காட்டானுங்க.. அவனும் அவன் மூஞ்சியும்.. நடமாடும் ஜூவல் ஷாப் போல ஜூவல்ஸ் போட்டு சுத்துறான்.. ஜஸ்ட் மிஸ்..

இதுக்கு தான் மாம் என்னை இங்க அனுப்பாம இருந்தாங்க போல” என்று தன்போல் புலம்பிக் கொண்டிருந்தவளை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அந்த நெடியவனோ காரினை லாவகமாக ஓட்டி கொண்டிருந்தான்.

 

 

“தாங்க்ஸ் அ லாட் சார்.. நீங்க மட்டும் இப்போ வரலைன்னா?? ஓ மை காட்!! நினைக்கவே பயமா இருக்கு.‌ பை த வே.. ஐம்..”

 

“நிவேதிதா மேகநாதன் ஃப்ரம் ஆஸ்திரேலியா.. தி க்ரேட் விமன் பிசினஸ் மேக்னட் சுவாதி உங்க அம்மா.. கரெக்ட்டா?” என்றான் அவள் புறம் திரும்பாமலே!!

 

இவனுக்கு எப்படி தெரியும்? தன்னைப்பற்றி என்று அவளின் விழிகளை முட்டை அளவு விரித்து அவனை நோக்க.. அந்த நெடியவனோ இவள் புறம் திரும்பவே இல்லை. வெகு நேர்த்தியாக வண்டி ஓட்டுவதிலேயே தன் முழு கவனத்தை வைத்திருந்தான். அவனைப் பற்றி முழுதாக கணிக்க முடியாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள் நிவேதிதா..

 

பாண்டி கோவிலோ அல்லோல கல்லோலப் பட்டது. முதலில் நிவேதிதா அன்னையோடு இருப்பாள் என்று மருது நினைத்திருக்க.. புனிதாவும் இங்கே எங்கையாவது தான் இருப்பாள் என்று அவரும் நினைத்து சொந்தங்களுடன் பேசிக்கொண்டிருக்க.. அழகு சுந்தரம் போன் செய்து “மருது.. கடைவீதிக்கு போய்ட்டீங்களா? எந்த கடைன்னு சொல்லு நான் ஒருக்கா பேசுறேன்” என்றவுடன் மருதுவோ, அச்சச்சோ ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டோமே என்றவாறு “இல்லப்பா பாண்டிகோவில தேன் இருக்கோம்.. இதோ கிளம்பி விட்டோம்” என்று போனை வைத்தவன் அம்மாவையும் நிவேதிதாவையும் தேடிக் கொண்டு வர..

 

அப்பொழுதுதான் யாரோ நிவேதிதா பற்றி கேட்க “இங்கன தேன் இருக்கா” என்று தன் பின்னே பார்த்த புனிதாவும் அவளைக் காணாமல் அங்கே இங்கே தேட.. “மா.. போகலாமா நேரமாச்சு” என்றபடி வந்து நின்றான் மருது.

 

 

புனிதாவுக்கு ஒன்றும் கூற முடியாத நிலைமை.. அப்போவே மகன் வேண்டாம் என்று சொல்லி வற்புறுத்தி கோயிலுக்கு அழைத்து வந்தது தான் தானே.. இப்போ என்னவென்றால் இவளை காணோமே என்று உள்ளுக்குள் நடுங்க, கைகளை பிசைந்தவாரே “தம்பி பாப்பாவ காணல” என்று திக்கித் திணறி கூறினார்.

 

“என்னது??” என்று அதிர்ந்த மருதுவோ “என்னம்மா சொல்றீங்க? உங்களோட தானே நின்னுகிட்டு இருந்தா எங்கன போயிருக்க போறா?” என்று அன்னையை கடிந்து கொண்டு போனில் தனது அடியாட்களை கேட்க, அவர்களோ..

 

“அண்ணே நாங்க வெளியில தான்ணே நிற்கிறோம் பாப்பா இங்கிட்டு எல்லாம் வரவே இல்லையே” என்று கூறியவர்கள் அடுத்த நிமிடம் அந்த பாண்டி கோயிலுக்கு அருகே வரிசையாக விருந்து பரிமாறி கொண்டிருந்த இடத்தில் எல்லாம் தேட ஆரம்பித்தனர்.

 

 

“அதெல்லாம் கவலைப்படாத மதனி.. விருந்து வேடிக்கைனு மக்கா மனுசால பார்த்துக் கொண்டே அந்த புள்ள இப்படி இங்கன எங்கேயாவது தான் சுத்திகிட்டு இருக்கும்” என்று அழுது கொண்டு இருந்த புனிதாவுக்கு சொந்தக்கார பெண் ஆறுதல் கூற..

 

 

ஏற்கனவே பேத்தியை பத்திரமாக அழைத்து போய் வா என்று ஆயிரம் முறை மாமியார் கூறியிருக்க.. அதற்குமேல் வாயாலும் கண்களாலும் அத்தனை பத்திரம் சொல்லி அனுப்பிய கணவன் ஒருபுறம்.. கோவிலுக்கு வேண்டாம் வேண்டாம் என்று சொல்லி வம்படியாக அழைத்து வந்ததால் கோபமாக மகன் ஒரு புறம்.. தெரியாத ஊரில் அந்தப் பொண்ணு எங்க போய் விட்டதோ என்று மகளை நினைத்து வருத்தம் ஒருபுறம் என்று சிக்கி தவித்தார் புனிதா.

 

மருதுவும் சுற்றுபுறம் தேடிக் கொண்டு தனது ஆட்களை விட்டு தேடிக் கொண்டும் பற்றாக்குறைக்கு அங்கு விருந்துக்கு வந்த ஆட்களும் சேர்ந்து அனைவரும் தேட..

 

 

அப்போது ஒருத்தன் வேகமாக ஓடிவந்து அவன் காதில் எதையோ கிசுகிசுத்து விட்டு சென்றான். இதுவரை எதுக்காக பயந்தானோ.. அதுவே நடந்து விட்டதோ? என்று நடுக்கம் மனதில் இருந்தாலும் அதைத் தாண்டி கோபம் மீதூர.. அருகில் இருந்த அரிவாளை எடுத்தவன் நேராக சென்றது என்னவோ இரண்டு விருந்துகள் தள்ளி நடக்கும் விருந்தில் நல்லியை மென்று தின்று கொண்டிருந்த கதிரிடம் தான்!!

 

 

நடுவில் கதிரும் அவனது இருபக்கமும் அவனது அடியாட்களும் அமர்ந்திருக்க.. நல்லியை குவியலாக வைத்து “டேய் சாதத்தை போட்டு இன்னும் கொஞ்சம் குழம்பு ஊத்து”

 

“அய்த்த..அங்கிட்டு வேடிக்கை பார்க்காம இவனுக்கு இன்னும் கொஞ்சம் எலும்பை எடுத்து வை..”

 

“என்னங்கடா ஒரே சவுக்கு சவுக்குனு இருக்கு கறி.. இளம் ஆட்டை வெட்டாம.. உன்னை போல நல்ல முத்தி போனா ஆட்டை வெட்டியிருக்கியா மச்சான்??” என்று நக்கல் அடித்தபடியே விளையாடிக்கொண்டிருந்தான் விருந்தை!!

 

 

கோபத்தோடு மருது புறப்பட சட்டென்று அவனை அழைத்து வந்த அந்த ஒன்றுவிட்ட மாமன்காரரோ.. “மாப்புள வருது நீ பாட்டுக்கு அருவாள எடுத்துட்டு கிளம்புறீறு.. நானும் விசாரிச்சிடேன்.. அவன் வந்ததிலிருந்து நம்ம தங்கபாண்டி விருந்துல தான் இருந்திருக்கானாம். அவசரப்பட்டு நீ கைய வச்சிட்டா.. அவிங்களும் சும்மா இருக்க மாட்டானுக” என்று அந்த மாமா அறிவுரை கூற..

 

“என்ன மாமா வயசு ஆனவுடன் உயிர் மேல பயம் வந்துருச்சோ.. ரத்தம் சுண்டி போனாலே அப்படித்தான்!! நீங்க செத்த ஓரமா ஒக்காரும்.. இன்னைக்கு அவனா? நானா??பாத்துட்டு வரேன்” என்று வீராவேசத்துடன் அருவாளை வாயில் கவ்விப் பிடித்தவாறு வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அவன் முன்னே செல்ல.. அவனுடைய கோஷ்டியும் ஆளுக்கொரு வீச்சருவா வேல்கம்பு என்று பின்னால் சென்றது.

 

மருது வந்து பார்த்தது என்னவோ.. தான் உண்டுவிட்டு மற்றவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்த கதிரை தான்.. 

 

“செய்வதையும் செஞ்சு போட்டு இங்கே வந்து விருந்து கொண்டாடிறியலோ விருந்து??” என்ற பற்களை நறநறவென்று கடித்தான் கதிரை பார்த்து..

 

 

“ஏன்டா நல்லி கேட்டா தர போறாய்ங்க.. அதுக்கு ஏன்டா வெறும் பல்ல போட்டு கடிக்கிறவன்.. ஏலே கணேசா.. அந்த தூக்கு சட்டியை எடுத்துட்டு வாடா வெரசா” என்று கதிர் கத்த..

 

அந்த கணேசனாக பட்டவனோ நல்லி இருந்த தூக்கி வாளியை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி வந்து நின்றான். அதைக் கண்ட மருதுவக்கு இன்னும் கோபம் எகிற.. வாளியை தன் கையில் வைத்திருந்த அரிவாளால் ஒரே தட்டாக தட்டிவிட அங்கே நல்லி மழை பொழிந்தது..

 

 

“நல்லி போச்சே!!!” என்று சத்தமாக உச்சுக் கொட்டிய கதிரை கொலைவெறியுடன் பார்த்தவன் “எங்க டா என் தங்கச்சி” என்று இவன் கேட்க..

 

“என்னடா தங்கச்சி.. தங்கச்சின்னு கேக்குற உங்க அப்பனுக்கு நீ ஒரு புள்ள தானே.. ஒருவேளை செட்டப் தொடுப்பு ஏதும் உங்க அப்பாரு..???” என்று அவன் கண்ணடித்து கேட்க..

 

அதுவரை இருந்த பொறுமை எல்லாம் பறந்தபோய் எட்டி அவன் சட்டையை பிடித்து கழுத்தில் அரிவாளை வைத்தான் மருது. எப்பவும் சட்டென்று கோபப்படுபவன் இன்று மருதுவை பார்த்து நக்கலாக சிரித்து..

 

 

“பேர பாரு மருதுவாம் மருது..

என் வாயில நல்லா வருது.. 

ஏன்டா அருழாள தூக்கிட்டா நீ எல்லாம் பெரிய சண்டியரோ? உடம்பை மட்டும் அய்யனார் கணக்கா வளர்த்து வைச்சிருக்க.. இந்த மண்டைக்குள்ள இருக்கிற மூளையையும் கொஞ்சம் வளர்த்து வைக்கணும்.. எங்க வந்து யாரும் இல்ல அருவா வைக்கிற கொஞ்சம் திரும்பி பாருடி மாப்புள” என்று கூற…

 

 

மருதுவோடு வந்த ஆட்களை தங்கள் அரிவாளை வைத்து தடுத்து நிறுத்தினர். இங்கே மருதுக்கு பின்னாடி கதிரின் அடியாட்கள் அறுவாவை வீச காத்திருந்தனர்.

 

இவன் ஒரு அரிவாளை வைத்திருக்க அங்கு நான்காக திரும்பி வந்தது..

 

உள்ளுக்குள் சற்று ஜெர்க்கானாலும் அதை எல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் திமிராகவே பார்த்துக் கொண்டு நின்றான் கதிரை மருது.

 

“பாரு பயபுள்ளைங்க கண்ணுல எவ்வளவு சந்தோசம்னு.. ரொம்ப நாளைக்கு அப்புறம் அருவா புடிச்ச சந்தோஷம். லைட்டாக வாய் அசைக்கனும் கூட அவசியம் கூட இல்ல கண்ண அசைச்சாலே போதும் ஒரே வெட்டு.. சோலி முடிஞ்சது” என்று அவன் நாக்கை வெளியே துருத்தி காட்டி தலையை சாய்த்து காட்ட.. மருது அப்போதும் அவன் கழுத்தில் இருந்து அருவாளை எடுக்கவே இல்லை.

 

 

“ஒழுங்கு மரியாதையா என் தங்கச்சி எங்க இருக்கான்னு சொல்ல போறிய இல்லையாடா?” என்று அவன் அதையே கேட்க..

 

“ஸ்ஸப்ப்ப்ப்பா..” என்று அருவாளை சற்று மேலாக பிடித்து வழக்கம் போல சட்டை காலரை பின்னாடி தள்ளிவிட்டு அவன் திரும்பவும் கழுத்தருகே அருவாவை வைத்தான் பொம்மையிடம் விளையாடுவது போல..

 

 

சற்று தள்ளி நின்று கொண்டிருந்த அவனது ஆட்களை பார்த்து “ஏன்டா இவனுக்கு காது கேட்குமா? கேட்காதா டா? திரும்பத் திரும்ப சொல்றேன் இவனுக்கு தங்கச்சி இருக்கிறது எனக்கு தெரியாதுனு.. அவங்க அப்பா எத்தன ஊர்ல தொடுப்பு.. அதுல எத்தன தங்கச்சி தம்பி இருக்கிறதை கணக்கு பார்க்கிறதாடா எனக்கு ஜோலி” என்று நக்கலாக பேசியவனை பார்த்து இம்முறை சற்று கோபம் கொண்டு சட்டையை இறுக்கிப் பிடித்தவன்,

 

 

“என் தங்கச்சினு நான் சொல்றது என் சித்தப்பா பொண்ணு.. ஆஸ்திரேலியா இருக்கிற என் சித்தப்பா மேகநாதனோட பொண்ணை” என்றவன் சற்று உரத்து கூற..

 

 

அதுவரை இலகுவாக பேசிக்கொண்டிருந்த கதிரின் முகம் இறுக்கமாக மாற “அவன் ஒரு ஆளு.. பேடி பய..‌ ஓடி ஓளிஞ்சிக்கிட்டான்..

அவனோட சாவு என் கையால தான்டா என்னைக்கு இருந்தாலும்.. அவன் பொண்ணுனு தெரிஞ்சு இருந்தா.. விட்டு இருப்பேனா என்ன?” என்று மீசையை முறுக்கிவாரே அவன் பேச..

 

அதற்குள் கதிரின் பக்கம் இருந்தும் நிறைய சலசலப்பு தோன்றியது.

 

“ஏன்டா மாப்புள அவன் பொண்ண ஏன்டா விட்ட.. தூக்கியிருக்க வேண்டியது தானே..”

 

“டேய் தம்பி.. முதல்ல இவனை போட்டு தள்ளிட்டு அந்த புள்ளைய கட்டி தூக்கிட்டு வாடா…”

 

“இவன் வூட்டு பொண்ணுங்க மட்டும்‌ அம்புட்டு பவுசு பத்திரமோ? விடாத பங்காளி..”

 

என்று ஆளாளுக்கு கதிரின் பின்னால் கூச்சலிட்டப்படியே வேட்டியை மடித்துக் கொண்டு மீசையை முறுக்கிக் கொண்டும்

நிற்க..

 

“இது ரொம்ப தொந்தரவு செய்யுது.. கொஞ்ச நேரம் இதை பிடிச்சிக்கடா வேலு” என்று தன் கழுத்து பக்கத்தில் இருந்த அரிவாளை அருகில் இருந்தவனிடம் கொடுத்துவிட்டு “செத்த நேரம் எல்லாம் பேசாம இருங்க” என்று கத்த.. அடுத்த நிமிடம் சலசலப்பு எல்லாம் முணுமுணுப்பாக உருமாறி அமைதியானது அவ்விடம்..

 

 

“இங்க பாரு மருது.. எனக்கு உன் தங்கச்சி இந்த ஊருக்குள்ள காலெடுத்து வைத்த செய்தி தெரிஞ்சு இருந்ததுன்னா அடுத்த நிமிஷமே அவள தூக்கி இருப்பேன்.. அவ நல்ல நேரமோ என்னவோ? விஷயம் இப்ப நீ சொல்லித்தான் எனக்குத் தெரிய வருது.. இனிமே தான் உன் தங்கச்சியை ரொம்ப பத்திரமா பாத்துக்கணும் நீ.. கிடைச்சானா? இப்போ உன்ன விட உன் தங்கச்சி பத்திரமா தேடி கண்டுபிடிக்கிறது தான் என் வேலையே” என்று நக்கலுடன் சொன்னவன் அங்கிருந்தவர்களை பார்த்து, “டேய் மொதல்ல அந்த ஃபாரின்காரா பான்ட்ஸ் பாப்பாயை தேடி கண்டுபிடிங்கடா..” என்று உத்தரவிட்டப்படியே

சென்றவன், மருதுவை திரும்பிப்பார்த்து “போ.. போ இங்கன வீணா கூச்சல் போட்டுட்டு இருக்காம உன் தொங்கச்சிய தேடுற வழியை பாரு” என்று விட்டு சென்றான்.

 

 

அதற்குள் அங்கு இருந்த ஒரு பெரிய தலை மருதுவை நோக்கி வந்து “இங்க பாரு மருது.. சும்மா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ பலியை போடக்கூடாது.. கதிரு தம்பி காலையிலிருந்து இங்கன தான் இருக்கு.. அப்படியே அது செஞ்சாலும் நான் தான் செஞ்சேன் தன் நெஞ்சை நிமிர்த்து கிட்டு சொல்லும்.. எதுக்கு உன்கிட்ட பொய் சொல்லணும்? அந்த புள்ள வேற எங்கேயாவது வழி தவறி இருக்காளான்னு பாரு” என்று அவர் கூறி சென்றார்.

 

 

அவர் சொன்னது போல கதிரும் அப்படித்தான்.. செய்தால் நான்தான் செய்தேன் என்று தில்லாக ஒத்துக் கொள்ளும் தன்மை அவனிடம் உண்டு..

அதை அறிந்திருந்த மருதுவும் வேறு எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து நகர்ந்தவன் பாண்டி கோயிலிலேயே சல்லடை போட்டு தேடினார்கள்.

 

 

அதற்குள் புனிதா மனம் தாங்க முடியாமல் தனது கணவனுக்கு போனை போட்டு கூற அடுத்த நிமிடம் அழகுசுந்தரம் தனபாக்கியம் அவரது கணவன் வரதன் என்று அனைவரும் வந்து சேர்ந்தனர்.

 

 

எப்படி மந்திரம் போட்டதுபோல இங்கிருந்து அவள் மறைந்து போக முடியும் என்று ஒரே குழப்பம் அவர்களுக்கெல்லாம்…

 

 

ஆனாலும் கதிர் குடும்பத்தின் மீது அவர்களது சந்தேகம் முழுவதுமாக நீங்கவில்லை. ஒருவித உறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது.

 

 

காரில் சென்று கொண்டிருந்த நிவேதாவோ ‘நான் ஊரிலிருந்து வந்து ஒரு வாரத்திற்குள் தான் இருக்கும்!! அதுவும் வெளியே வராமல் யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்னை இவன் எப்படி சரியாக கண்டுபிடித்து கூறினான்? அதுவும் அப்பா பெயர் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு.. ஆனால் அம்மாயின் பெயரையும் அவரது தொழிலையும் குறிப்பிடுகிறானே??” என்று அவனையே சிறிது நேரம் குழப்பமாக பார்த்தவள்..

 

“எப்படி தெரியும் உங்களுக்கு? எப்படி தெரியும் என்னையும் என் குடும்பத்தையும் பற்றி??” என்று சற்று கராராகவே கேட்க..

 

 

மெல்ல அவளைப் பார்த்து அலட்சிய புன்னகை ஒன்றை சிந்தியவன், தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி.. “ஆமா அவங்களை ஏன் காட்டானாங்கனு சொன்ன?” என்று இவன் கேட்க..

 

 

“அவனுங்க ஆளும் ட்ரஸூம் அப்படித்தானே இருந்தது.. வேட்டி சட்டை கூடவே முகம் முழுக்க மீசையும் தாடியுமா” என்று தோளைக் குலுக்கி பிடித்தமின்மையை அவள் முகத்தில் காட்ட..

 

 

“அப்போ நான்? எந்த தைரியத்துல என் கார்ல நீ ஏறுன?” என்று திருப்பிக் கேட்டான் அவன்..

 

 

“உங்கள பாக்கவே டீசண்டா இருக்கீங்க..”

 

“ஆஹான்!!”

 

“நீங்களும் வேட்டி தான் கட்டியிருக்கிங்க.. ஆனாலும் அதில் ஒரு டீசென்ஸி தெரியுது!!”

 

“ம்ஹூம்..??”

 

“எனக்கும் ஒருத்தங்களை பார்த்தாலே அவங்களை பத்தி அக்கியூரட்டா சொல்ல முடியலைன்னாலும், கொஞ்சமாச்சும் கெஸ் பண்ண முடியும்.. யூ ஹார்ம்லஸ்” என்று கூறி அவள் புன்னகை சிந்த..

 

 

“ஓஹ்ஹோ??” என்றவன்..

 

“நீ சொன்ன அந்த காட்டனுங்க எல்லாம் தான் மதுர மண்ணோட பூர்வீக குடிகள்.. ஒருத்தவங்க போடுற உடுப்பில் இல்லை அவங்களோட டீசென்ஸி.. நடக்கிற விதத்துல இருக்கு.. நீ இருக்கிற ஆஸ்திரேலியா முன்ன ஒரு காலத்துல ஆங்கிலேயர்களோட ஜெயிலா வச்சிருந்தாங்க.. அப்படின்னா அங்கிருக்கிறவங்க எல்லாம் இப்பவும் திருடன் கொலைகாரன் என்று சொல்லமுடியுமா?” என்று எதிர் கேள்வி கேட்க..

 

‘நாம ஃபைனான்ஸ் அக்கவுண்ட்ஸ் படிச்சு முடிக்கவே மூச்சு முட்டுச்சு.. இதுல ஹிஸ்டரி ஜோகிரபி எல்லாம் யார் படிச்சா?’ என்று மைண்ட் வாய்ஸ் உடன் அவனைப் பார்த்து சிரித்தாள்.

 

“இன்னொன்னு என்ன சொன்னா?? என்ன பார்க்க டீசென்ட்டா இருக்கேன்னா??” என்று பலமாக தலையை பின்னால் சாய்த்து சிரித்தவன்..

 

“உன்ன இப்ப கடத்திட்டு போக போறதே.. இல்லயில்ல போய்க்கிட்டு இருக்கிறதே நான் தான்!! அந்த காட்டானுங்க இல்ல.. இந்த ஹார்ம்லெஸ் மேன்” என்றவனின் முகம் இதுவரை இல்லாத ஒரு சினத்தை முகத்தில் காட்ட, அதில் அரண்டவள் சட்டென்று வண்டியின் கதவை திறக்க முயற்சிக்க..

 

“அது சென்டர் லாக்!!” என்றான் வண்டியை இன்னும் வேகம் எடுத்தபடி..

 

அவளோ “விடுடா.. என்னை இறக்கி விடு..” என்று சத்தமாக கத்தியபடி அவனது கைகளில் அடித்தவள், அடுத்த நிமிடம் அவள் எதிர் பார்க்க நேரம் கார் ஸ்டேரிங்கில் கை வைத்து கண்டபடி திருப்பினாள்.

 

அப்போதாவது பயந்து அவன் காரை நிறுத்திவிடுவான், தான் தப்பித்து செல்லலாம் என்ற எண்ணத்தில்…

 

அவனோ எத்தனுக்கெல்லாம் எத்தனாக இருக்க.. ஒரே கையால் அவளது இரு கைகளையும் சிறைப்பிடித்து மற்றொரு கையால் மிக லாவகமாக ஓட்டியவனின் வண்டி.. கொடை ரோடை நோக்கி சென்றது.

 

 

கார் உள்ளே “என்னை யாராவது காப்பாத்துங்க.. ப்ளீஸ்!! ப்ளீஸ்!! விடுடா என்னை!!” என்று கோபம் அழுகை விரக்தி என்று நவரசங்களையும் குரல்களை காட்டி கத்திக் கொண்டே இருந்த நிவேதிதாவின் குரலோ.. அந்தோ பாவம்!! அந்த ஏஸி காரை விட்டு வெளியே வரவில்லை.

 

 

இங்கே பாண்டி கோவிலிலோ தங்கள் வீட்டு குல தெய்வம் அந்த மீனாட்சியே வந்திருக்கிறாள் என்று சந்தோஷமாக அவளை கொண்டாடி கொண்டிருந்த குடும்பம் அவளை காணாது, தவியாய் தவித்து அழுது கரைந்து கொண்டிருந்தது.

 

விஷயம் கேள்விப்பட்ட அப்பத்தாவோ, மயக்கம் போட்டு விழ அவரை படுக்கையில் கிடத்தி சுற்றிலும் சொந்தங்கள் அமர்ந்திருக்க.. அந்த வீடே சோகமயமாக காட்சி அளித்து இருந்தது.

 

 

அப்பத்தாவின் வாயோ விடாமல் தன் பேத்தியை நினைத்து புலம்பிக் கொண்டே இருக்க..

 

புனிதாவும் தான் செய்த தவறை மன்னிக்கும்படி கணவனை கெஞ்ச, மனைவி மகன் என்று பாராமல் இருவரையும் வறுத்து எடுத்து விட்டார் அழகு சுந்தரம்.

 

கூடவே தனபாக்கியமும் தன் அண்ணியை தாளித்து எடுத்து விட்டார். உடனே சென்னையில் இருக்கும் தனது மகன் வசீகரனுக்கு போன் செய்து கிளம்பி வருமாறு பணித்தார். அவர் மனதிலும் புதிதாக திட்டம் ஒன்று முளைத்து வேரூன்ற ஆரம்பித்தது.

 

அங்கே விருந்தை நன்றாக அனுபவித்து விட்டு தன் சிவப்பு நிற ஜாக்குவாரில் ஜம்பமாக அமர்ந்து வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தான் கதிர் வேந்தன்..

 

“அண்ணே அந்த புள்ளைய பாக்கவே இல்லையேன்னு சொன்னீக.. ஆனா விரட்டிவிட்டு போனிங்க” என்று அவனது அடியாட்களில் ஒருவன் சந்தேகத்தை கேட்க…

 

 

“ஆமாம் போனேன்.. இப்போ அதுக்கு என்னடா கருவாயா?” என்று அலுத்துக் கொண்டான்.

 

“அண்ணே.. அப்ப அந்த வண்டி…” என்று அவர்கள் சந்தேகத்தோடு இழுக்க..

 

 

“ஆமாம்மே தான் டா.. தாண்டவரான்ங்களா.. அந்தக் கார் வெற்றி அண்ணாவோடது” என்றான் கர்வம் பொங்க கதிர் வேந்தன்.

 

அந்த காரை ஓட்டிக் கொண்டிருந்தவனோ வேந்தன் குடும்பத்தின் முதல் வாரிசான வெற்றி வேந்தன்!!

 

 

காதலே.. காதலே…

1 thought on “எங்கு காணினும் நின் காதலே… 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top