ATM Tamil Romantic Novels

இராட்ஷஸ மாமனே… 1

மாமனே 1

 

 

மண் மட்டுமல்ல மல்லிகையும் மணக்கும் மதுரை‌!!

 

சங்கம் வைத்த மதுரை…

பங்கம் பண்ணும் எதிரியை..

தங்கமாய் தாங்கும் உறவை..!!

 

ஊரு முழுக்க உறவாய்…

உறவே ஊராய்… இப்படி எங்கேயாவது பாத்திருக்கீங்களா அப்போ மதுரைக்கு வாங்க!!

 

அட… மதுரைக்கு மார்க்கெட்டிங் பண்ணலங்க! மாணிக்கவேலின் வாழ்க்கையை பார்க்க போறோம்!!

 

யார் இந்த மாணிக்கவேல் இதுதானே உங்களின் யோசனை?

 

அப்படியே டைம் ட்ராவல் போனாலும் சரி இல்ல மூஞ்சிக்கு முன்னாடி சுருளு சுருளு விட்டு பிளாஷ்பேக் போனாலும் சரி… எல்லாரும் கருமத்தம்பட்டிக்கு வந்து சேருங்க!

 

“அட! இது நம்ம மணிமேகலை ஊரு இல்ல?”

 

“கரெக்ட்!! அந்த மணிமேகலை பின்னாடி ஒரு தலை ராகம் பாடி சுற்றி திரிந்தானே.. மாணிக்கவேல்..!! ஞாபகம் இருக்குங்களா?”

 

“மாணிக்கவேலா??!!”

 

“ஆம்!! அவனைத் தான் பார்க்க போறோம்!!”

 

“கொங்குகாரவனுக்கு மதுரையில் என்ன வேலைனு நினைக்கிறீர்களா?”

 

“ஓஓ.. பொண்ணு கிடைக்காத விரக்தியில மதுர மண்ண தேடி வந்துட்டான் போல இருக்கு.. நம்ம மாணிக்கவேல்!!

 

“இல்லிங்க.. இந்த மதுரை தேன் அவன் அக்காக்களை கட்டி கொடுத்த ஊர்!”

 

“தெரியும் இல்ல அவனுக்கு நாலு அக்காங்க… எல்லாரையும் இங்கன தேன் கட்டி கொடுத்து இருக்காக..

கூடல்நகர்.. சோழவந்தான் திருபுவனம் மற்றும் சுப்ரமணியபுரம்!! இப்படி மதுரையை சுற்றி தான் அவன் அக்காக்கள் எழில்மலர் ஞானமலர் கனிமலர் ஒளிமலர் என்று மலர்களே மணக்கும் மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெரியப்பா சித்தப்பா பிள்ளைகளுக்கு கட்டிக் கொடுத்திருந்தார்கள்!!

 

தொழில் காரணமாக நால்வரும் மதுரை சுற்றி தள்ளித்தள்ளி இருந்தாலும் ஏதாவது ஒரு விசேஷம் திருவிழா கோவில் கொடை என்றால் ஒன்றாக கூடி விடுவார்கள்.

 

இதில் அவன் பெரிய அக்கா எழில்மலருக்கு தேன்மலர் என்ற பெண்ணும்.. ஞான மலருக்கு வள்ளிமலர் என்ற பெண்ணும்!! கனிமலருக்கு ஜீவன் என்று ஒரே ஒரு பையன் மட்டுமே! ஒளிமலருக்கோ பார்த்திபன் என்ற மகனும் நறுமலர் என்ற பெண்ணும்!!

 

அல்லிமலர் என்ன நேரத்தில் தன் பெண்களுக்கு மலர் என்று பெயர் வைத்தாரோ… அவர் மகள்களும் அதை என்னவோ வீட்டு பாரம்பரியமாக அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றனர்!!

 

இப்படி மலர்களாய் சேர்ந்து தோட்டமாய் குலுங்கி சிரிக்கும் குடும்பத்தில் தனியாய் தனித்து நின்றது என்னவோ மாணிக்கவேல் தான், ஒரு தலைக் காதல் தோல்வியுற்றதால்…

 

ஊரிலே இருந்தால் மகன் வேலையை பார்க்கிறானா இல்லையோ சென்றவளை நினைத்து மனம் உருகுவான் என்று நான்கு மாப்பிள்ளைகளையும் அழைத்து, “மகர் இங்க இருந்தாருன்னா… அந்த பொண்ண நினைச்சு வருத்தப்படுவாருங்க… அதனால நீங்க அங்க கூட்டிட்டு போய் உங்க தொழில ஏதாவது கத்துக் கொடுங்க மாப்பிள்ளை” என்றார் தொய்வோடு!!

 

 மதுரைக்கு அழைத்து செல்லுங்கள் என்று சுந்தரவேல் கூறி விட ஆவலாய் அழைத்துக் கொண்டனர் நால்வரும்!!

 

பின்னே சொத்துள்ள மச்சானை கண்டால் கசக்குமா என்ன? கூடவே தங்கள் வீட்டிலும் கல்யாண வயதில் இரண்டு பெண்கள் இருக்க.. அவற்றில் ஏதாவது ஒரு பெண்ணை கட்டிக் கொடுத்து விடலாம் என்று நினைப்பு!!

 

“அதுக்கென்ன மாமா… எங்க மச்சான நாங்க பாத்துக்காம வேற யாரு பார்த்துப்பா?” எழில்மலரின் கணவன் கலியமூர்த்தி!!

 

“அண்ணன் சொல்றது தான் சரி! நீ கிளம்பு மச்சான் மதுரையை ஒரு கலக்கு கலக்குவோம்!” இது ஞானமலரின் கணவன் ஞானசேகர்!

 

“தொழிலுக்கா பஞ்சம்? எங்க நாலு பேரு தொழிலுல எந்த தொழில் உனக்கு புடிக்குதோ.. அதுல வந்து பார்த்துக்கோ மச்சான்!” கனிமலரின் கணவன் மணிகண்டமூர்த்தி!!

 

“சும்மா என்ன நொய் நொய்னு பேசிகிட்டு இருக்கீக.. போய் முதல்ல பொட்டி படுக்கையெல்லாம் காட்டுக.. மதனி.. போங்க போங்க…” என்றார் அரிசி வியாபாரம் பார்க்கும் ஒளிமலரின் கணவர் சந்திரசேகர்!!

 

ஆனால் நாலு அத்தான்கள் எதை மனதில் வைத்து முடிவு எடுக்கிறார்கள் என்று புரிந்தவனோ

“மதுரை எல்லாம் வேண்டாமுங்க ஐயா.. நான் வேற ஊரு பக்கம் போறேனுங்க!” என்றான் மாணிக்கவேல்!!

 

“அதெல்லாம் தனியா எங்கேயும் போக வேண்டாம் ராசா.. உன்னை தனியா விட்டு என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாது!” என்றார் அல்லிமலர் முந்தானையில் மூக்கை சிந்தியப்படி!!

 

சுந்தரவேலு எப்பொழுது மகனை அனுப்ப வேண்டும் என்று முடிவு எடுத்தாரோ.. அப்போதிலிருந்து முற்றத்து தூணில் சாயந்து அமர்ந்து கொண்டு ஒப்பாரி வைக்க தொடங்கியவர் தான் இப்போது வரை முடியவில்லை!!

 

“என்ற மவன் ராசா கணக்கா இருக்கான். என்ன.. அந்த படிப்பு தான் கொஞ்சம் வரலிங்.. மத்தபடி சொத்து சுகத்துல குறை இருக்கா? சொந்த பந்தத்துல குறை இருக்கா? இல்ல அந்தஸ்துக்கு தான் குறை இருக்கா? என்ற மவன் ராசா!! அந்த மேனா மினுக்கி வேணாம்னு போனா.. என்ற‌ மவன அதுக்காக ஊர் கடத்துவீங்? இந்த மவனே பிறந்தநாள் எப்படி இருப்பேனுங்கோ?” என்று 

மகனின் பெருமைகளையும்.. அவன் மீது தான் கொண்ட பாசத்தையும்.. தன் வெண்கல குரலில் கூறி அழுது புலம்பி கொண்டிருந்தவர், இப்போது மகன் வேற ஊருக்கு செல்கிறேன் என்றதும் தன் ஒப்பாரை டெம்பரவரியாக நிறுத்திவிட்டு சுந்தரவேல் முன்னால் வந்து நின்று விட்டார்.

 

“ஏனுங் ம்மா… நீங்களும் புரிஞ்சுக்காம பேசுறீங்க? இப்படியே மாத்தி மாத்தி பேசி பேசி எல்லோரும் எனக்கு தலைவலியை தான் ஏத்துறீங்க!” என்றான் சற்று குரலை உயர்த்தி..

 

“அச்சோ ராசா கண்ணு… எங்க வலிக்குது. காட்டு நான் பத்து போட்டு விடுறேன்!” என்று மீண்டும் தன் பாச அலப்பறையை அல்லிமலர் கூட்ட…

 

“அல்லி..!!” என்ற சுந்தரத்தின் அழைப்பில் தான் சற்று வாயை மூடினார். அதன் பின் மகனை அவர் தீர்க்கமாக பார்க்க…

 

“சரிங்க ஐயா.. நான் மதுரைக்கே போறேனுங்க! ஆனா மாமனுங்க கூட எல்லாம் சேர்ந்து தொழில் பார்க்க முடியாதுங்க.. நான் தனியா பண்றேனுங்க!” என்றான்.

 

“இங்கே வரைக்கும் விவசாயம் ஊர் சுத்தறதுதான் பண்ணிட்டு இருந்தீங்க.. அப்படி என்ன தொழில் நீங்க பாக்க போறீங்க?” என்றார் சுந்தரவேலு.

 

“முதல்ல அந்த ஊருக்கு போறேனுங்க ஐயா.. மொதல்ல அந்த ஊரை படிக்கிறேனுங்க.. அப்புறம் தொழில் படிச்சு தனியா தொழில் பண்றேனுங்க..!! என்னதான் உறவுனாலும் பொண்ணுங்கள கட்டிக் கொடுத்த இடத்துல தொழில் வச்சிக்கிட்டோம்னா.. அது நாள பின்ன உரசல உண்டு பண்ணுமுங்க… எனக்கு எங்க அக்காள்களோட உறவு ஆயுசுக்கும் வேணுமுங்க…” என்றான் தீர்க்கமாக!!

 

அவன் சொன்னதில் அவனது அக்காள்கள் மனம் குளிர்ந்து போக.. அவர்கள் அனைவரும் தங்கள் கணவன்மார்களை திரும்பி ஒரு முறை முறைக்க.. அப்புறம் ஏன் அவர்கள் வற்புறுத்த போகிறார்கள்?

 

ஒருவிதத்தில் மகன் சொல்வதும் சுந்தரவேலுக்கு சரியாக பட்டது “தம்பி சொல்றதும் சரிதானுங்களே!” என்றார் மாப்பிள்ளைகளை பார்த்து.

 

எப்படியாவது மச்சானை தங்கள் ஊருக்கு தள்ளிக் கொண்டு சென்று மாப்பிள்ளையாக மாற்றுவது தான் அவர்களுக்கு முதல் மிஷின்!! “அதனால் என்ன.. பரவால்ல மாமா மச்சான் சொன்னபடி ஆகட்டும்!” என்றனர்.

 

அக்கா மார்களும் தங்கள் வீட்டில் வந்து தங்கு என்று கூறி வற்புறுத்த.. “ஒருத்தவங்க வீட்டில தங்கி மற்றவருக்கு மன வருத்தத்தை தர நான் விரும்பலங்க.. நான் தனியா இருந்துக்குறேனுங்க.. அப்பப்போ வந்து உங்களை எல்லாம் பார்க்கிறேனுங்க..”:என்று முடித்துக் கொண்டான். 

 

இவன் தனியாக இருப்பதைக் கண்ட கனிமலர் தனது மகன் ஜீவனை அவனோடு தங்க அனுப்பி வைத்தார்.‌ காரணம் என்னவோ கொஞ்சம் கொஞ்சமாக மாமன் மனதை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தல் பின்பக்கம்..

 

ஜீவன் பாலிடெக்னிக் பயில, அதே கேம்பஸில் நகை மதிப்பீட்டாளர் பற்றிய கோர்ஸ் இருப்பதை தெரிந்தவன் அதில் சேர்ந்தான். 

 

மாமன்மார்களுக்கு தெரிந்த கடையில் மீதி நேரம் வட்டி தொழிலை பற்றி கற்றுக் கொண்டான். பின் வட்டி தொழிலை கையில் எடுத்தான்.

 

அவனின் ஆங்குதோதான உடல் அமைப்புக்கும்.. முறுக்கிய மீசைக்கும்.. ஐந்தே முக்காலடி திராவிட நிறத்திற்கும்.. வெண்ணிற ஜாவா பைக்கில் உலா வரும் அவன் தோற்றத்துக்கும்…. (அதுவும் ஒற்றை சீட்டு கொண்ட பைக்) கழுத்தில் தொங்கும் ஒன்பது பவுன் முருக்கு தங்கச் செயினுக்கும்… பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்தியது இந்த தொழிலுக்கு!!

 

மதுரைக்கு வந்து தொழில் ஆரம்பித்த இந்த மூன்று வருடத்தில் அவனின் உடல் மொழி மட்டுமல்லாமல்.. ஆளே மாறி போய் இருந்தான். பார்ப்பவர்களுக்கு 

பக்கா மதுரைக்காரனாக தோன்றினாலும் பேச்சில் அதே கொங்குகாரன் தான்!!

 

“டேய் ஜீவா.. ஜீவா..” என்று இவன் வெளியேறிலிருந்து தனது வெண்கல தொண்டையில் கத்த…

 

“கத்தாத மாமா!! இப்பதேன் குளிச்சிட்டு வந்தேன். அப்படியே அரை குறையா வா வர முடியும். உனக்கு ஓகேனா சொல்லு வரேன்!” என்று ஒற்றை துண்டை கட்டி கொண்டு வந்து நின்ற அக்கா மகனை பார்த்து இவன் முறைக்க…

 

“சீ.. அப்படியெல்லாம் பாக்காத மாமா! எனக்கு வெக்கமா இருக்கு! அதுக்கு தேன் என் அக்காளுக ரெண்டு பேரு இருக்காளுங்கள.. அவளுகள பாரு மாமோய்!” என்றவன் அடுத்து மாணிக்கவேல் பேசும் முன் உள்ளே ஓடிவிட்டான். இல்லை என்றால் வண்ண வண்ணமாக அவன் பேசுவதை காது கொடுத்து யாரால் கேட்க முடியும்?

 

“இந்த ஆள கட்டிக்கிறேன் கட்டிக்கிறேன்னு சொன்ன அந்த ரெண்டு சிறுக்கிகளுள ஏதாவது ஒரு சிறுக்கிய இவருக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம். இல்ல ரெண்டு பேரையுமே இவருக்கு கல்யாணம் பண்ணி வெச்சி இருக்கலாம். தேவையில்லாம மாமா மனச மாத்துன்னு சொல்லி என்னையே தாரை வார்த்துட்டு போயிட்டாங்க என் தாய்மாருங்க… ஜீவன பெயர் வச்சதுக்கு தகுந்த மாதிரி என் ஜீவனே எடுக்கிறாரு..” என்று தாய் மாமனை திட்டிக் கொண்டு தயாராகியவன் வெளியில் வந்தான்.

 

“நான் சிம்மக்கல் வரைக்கும் போயிட்டு வரேன் ஜீவா.. வழக்கம் போல பஜார் பக்கம் இருக்குற கடையை நீ போய் பாரு.. நான் மதியத்துக்கு மேல தான் அங்க வருவேன்” என்றவன் ஜாவாவை உதைத்து பறந்து சென்றான்.

 

நவயுக கொங்கனவராய் எந்திர புரவியில் வலம் வரும் தன் மாமனை ஒரு பெருமூச்சோடு பார்த்தவன் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு அவன் சொன்னது போல பஜாரை நோக்கி சென்றான்.

 

ஏற்கனவே வேலையாழ் வந்து கடையை திறந்து கூட்டி சுத்தம் செய்து வைத்திருக்க.. இவன் வழக்கம் போல விளக்கேற்றி ஒரு சிறு பூஜை செய்துவிட்டு அவனுக்கு என்று இருக்கும் இடத்தில் அமர்ந்தது தான் தாமதம் வரிசையாக போன்மேல் ஃபோன்!!

 

முதலில் தேனின் கால்.. அடுத்தது வள்ளி என்று மாறி மாறி அழைக்க..

 

“இவளுக ஆரம்பிச்சிட்டாளுங்க!” என்றவன் இருவருக்கும் கான்ஃபரன்ஸ் கால் போட்டு “என்ன மாமா எழுந்தாரா? பல்லு விளக்கினாரா? டீ குடிச்சாரா? வேட்டி கட்டினாரா? சாப்பிட்டாரானு தெரியனுமா? இதையே பொழப்பா டெய்லி எனக்கு போன் பண்றீய்ங்க உங்களுக்கு எல்லாம் வேற பொழப்பே இல்லையா?” என்றான் காட்டதோடு!

 

“இல்லடா.. தம்பி!” என்று கோரசாக வந்தது தேன்மலர் மற்றும் வள்ளிமலரின் குரல்கள் படு உற்சாகமாக…

 

இருவருமே இவனுக்கு இருவகை சொந்தம். ஒன்றுவிட்ட பெரியப்பா மக்கள் இந்த பக்கம் பெரியம்மாவின் மகள்கள்!! அதையெல்லாம் தாண்டி ஒரே குடும்பமாய் வாழ்ந்து வருபவர்கள். இப்படி இருவரும் மாணிக்கவேலின் மீது மையல் கொண்டிருக்க.. அவனோ ஒருத்தரையும் திரும்பி பார்க்காமல் முரட்டுக்காளையாக சுற்றிக் கொண்டிருந்தான் மதுரையில்.

 

“அக்காச்சிகளா.. சொன்னா கேளுங்க! அந்த முரட்டு பீஸ நம்பிகிட்டு இருக்காதீங்க.. இப்போதைக்கு படியுற மாதிரி தெரியல.. நீங்க வீட்ல பார்க்கிற மாப்பிள்ளை கட்டிக் குடும்பம் நடத்துற வழிய பாருங்க!” என்று அவன் அண்ணனாய் மாறி அறிவுரை கூற..

 

“டேய் டுபுக்கு.. நிப்பாட்டு!” என்று தேன் கூற..

 

“எதே டுபுக்கா?” என்று அவன் அதிர்ச்சியடைய..

 

“ஆமாண்டா அதுக்கு இப்ப என்னங்குற?” என்றாள் வள்ளியும்..

 

“சொல்லுவீங்கடி.. சொல்லுவீய்ங்க! உங்களுக்கா மாமன கரெக்ட் பண்ண மாமா வேலை பாத்துட்டு தான் இங்கன உட்கார்ந்து இருக்கேன்ல! இதுவும் சொல்லுவீக இன்னமும் சொல்லுவீக? அப்படியே படிஞ்சாலும் ஒருத்திக்கு தான் கிடைப்பாரு.. இன்னொருத்தி நாமம் போட்டுட்டு போக வேண்டியது தான்” என்றதும், 

 

“பின்ன என்னடா? பெரிய இவன் மாதிரி காலசேபம் பண்ற! எங்களுக்கு இது தெரியாதா? நாங்கள் ஏற்கனவே எங்களுக்குள்ள ஒரு டீல் போட்டுகிட்டோம்!” என்றாள் தேன்.

 

“என்ன டீலு?* என்றான் இவன் அதிர்ச்சி குறையாத குரலில்…

 

“வேற ஒன்னுமில்ல… எங்க ரெண்டு பேர்ல யார மாமா கட்டிக்க ஆசைப்படுறாரோ…” என்று தேன் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே இடை புகுந்த ஜீவன் “மத்தவ விட்டுக் கொடுத்துட்டு 

வாழ்த்திட்டு போடுவீங்களா?”

என்று கேட்டான்!

 

“ச்சீ… அப்படி எல்லாம் எதிர்பார்க்காதே… அதே மேடையில மத்தவளையும் கல்யாணம் பண்ணிக்கணும்! ரெண்டு பேரும் பாலிடிக்ஸ் பண்ணாம குடும்பம் நடத்தணும்! அப்படின்னு ஒரு ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்டுக்கு நாங்க வந்து இருக்கிறோம்” என்றாள் வள்ளி!!

 

“அடிப்பாவி.. அடிப்பாவி!! என்னடி இது டீலு! இருங்கடி உங்கள நான் அம்மாச்சி கிட்ட போட்டு கொடுக்கிறேன்” என்றான் ஜீவன் அதிர்ந்து!!

 

“சொல்லிக்கோ.. எங்களுக்கு ஒன்னும் கவல கிடையாது! ஏன்னா.. ஐடியா கொடுத்ததே அம்மாச்சி தேன்!” என்றார்கள் இருவரும் கோரசாக!! 

 

“எப்பேர்பட்ட குடும்பத்தில் வந்து மாட்டி இருக்கேன் நானு? ஃபோன வையுங்கடி! இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் வந்தாரு.. நான் கதற கதற வார்த்தைகளால என்னை கற்பழிச்சிடுவாரு!” என்று இவன் ஃபோனை வைத்துவிட்டு அருகில் இருந்த தண்ணீர் எடுத்து மடமடவென்று குடித்துக் கொண்டான்.

 

அக்காள்கள் சொன்னது நிஜமா பொய்யா என்றெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. ஆனால் இருவரில் யாரையாவது ஒருத்தியை கட்டி எனக்கு விடுதலை கொடு டா என்று மாமனை மானசிகமாக வேண்டினான்!! அவனை பொறுத்தவரை கம்சனை போல இந்த மாணிக்கவேலும்.. ராட்ஷஸ மாமானே!!

 

ஆனால் இந்த ராட்ஷஸ மாமனை கதற வைக்கும் கன்னிகை… தன்னை காப்பாற்றும்படி கயவர்களிடமிருந்து ஓடி வந்து கொண்டிருந்தாள்!!

5 thoughts on “இராட்ஷஸ மாமனே… 1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top