ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 16

 

16

 

 

நிவேதிதாவை அனுப்பி வைத்து விட்டு காரில் சாய்ந்த நின்றவனின் காதுகளில் ரீங்காரமாய் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருந்தது அவளின் வார்த்தைகள்!! அதிலும் அந்த மாமிச மலைகள் சொன்னதாக அவள் சொன்ன வார்த்தைகள். 

 

உண்மைதானே!! அன்று இவனே அவளை அப்படித்தானே பஞ்சாயத்தார் முன்னிலையில் சொல்லி வழக்கை திசை திருப்பி விட்டான். இன்று மற்றவர்கள் சொல்லும் போது ஏனோ வலித்தது. அதுவும் அவள் நிலையில் இருந்து பார்க்கும்போது இன்னுமே வலித்தது வெற்றிக்கு!!

 

 

வெளிநாட்டில் பிறந்தவள் இம்மாதிரியான வார்த்தைகள் கண்டு கொள்ளமாட்டாள். அப்படியே இருந்தாலும் மூளைக்குள் இறக்கி ஆராய்ச்சி பண்ணி மனதில் போட்டு குழப்பி கொள்ளாமல் சாதாரணமாகக் கடந்து விடுவாள் என்று இவன் கணித்திருக்க..

இவன் கணிப்பை எல்லாம் தகர்த்து இருந்தாள் அவள்!!

 

 

முதல் முறையாக, அவளை நாம் கணித்தது தவறோ என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.. அதுவும் இரண்டு தடி மாடுகளிடம் இருந்து தப்பி சாலையில் உருண்டு பிரண்டு ரத்த காயங்களுடன் தன் முன்னால் நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்கு அவ்வளவு அலட்சியமாக அவளை கடந்து விட முடியவில்லை!! 

கண்டிப்பாக இந்த இடத்தில் எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவன் ருத்ரனாக மாறி அவர்களை பந்தாடி இருப்பது உறுதி!!

 

அதனால் அவள் ஒன்னும் தனக்கு எந்த விதத்திலும் முக்கியமோ பிரத்யேகமோ இல்லை.. என்று சிகையை கோதிக் கொண்டவன் வேகமாக காரில் ஏறி, அதை விட வேகமாக காரை விரட்டினான் வீட்டுக்கு. எதிலிருந்து தப்பிக்க இந்த ஓட்டம் என்று அவன் மனத்திற்கே வெளிச்சம்!!

 

இவன் வருவதற்குள் கதிர் வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க அன்னையர் இருவரும் அவன் அருகில் அவனோடு பேசிக்கொண்டே பரிமாறிக் கொண்டிருந்தனர். அவனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர்களின் முகம் புன்னகையில் தவழ்ந்து கொண்டிருந்தது. சிறுது நேரம் பார்த்தவன் தன் அறையை நோக்கி சென்றான்.

 

வெற்றியை பார்த்தவுடன் “வாயா சாப்பிடலாம்!!” என்று மரகதம் கூப்பிட.. சுலோச்சனாவோ மகனின் முகத்தில் உள்ள குழப்பத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தார். “வரேன் சித்தி சுத்தப்படுத்தி வரேன்” என்றவன் விடுவிடுவென்று மாடிக்கு ஏறினான்.

அவன் முகத்திலிருந்து இப்போதைக்கு சாப்பிட வர மாட்டான் என்று புரிந்துகொண்டார் சுலோச்சனா. தாய் அறியாத சூல் உண்டோ?

 

வெற்றி தன்னை சுத்தப்படுத்தி வந்தவன் இரண்டாம் மாடியில் உள்ள பால்கனியில் நின்று இருந்தான். வேட்டியும் கையில்லா பனியனும் கழுத்தை சுற்றி துண்டு போட்டு இருக்க.. இருளை விரித்துக் கொண்டிருந்தவனோ.. உயிர் கொண்டு வந்த மாம்மல்லபுர சிற்பத்தை போலவே இருந்தான்.

 

 

“சாப்பிட வா யா” என்று சுலோச்சனாவின் குரலில் தன்னை மீட்டவன் பால்கனியிலேயே அமர.. அவன் அருகிலேயே அமர்ந்து சாப்பாடு பிடித்துக் கொடுத்தார் அன்னை. அமைதியாக உண்டான். “ஏன் மா.. எதுவும் பேசல.. நான் எதுவும் தப்பா செய்றேனா?” என்று அன்னையின் முகத்தைப் பார்த்து அவன் கேட்க.. புன்னகைத்தாரே ஒழிய பதிலேதும் சொல்லவில்லை.

 

“மனசை போட்டு உலட்டிக்காதே யா.. இந்த வம்சத்தில் பிறந்த புள்ளைகளுக்கு தப்பு பண்ண தெரியாது.. அதனால் வெசனப்படாம சாப்பிடுக” என்றவர் அடுத்த வாயை அவனுக்கு ஊட்ட.. சட்டென்று பெரிய அன்னையின் கையை பிடித்து அதை தன் வாயில் வைத்துக்கொண்டான் கதிர்.

 

 

“நீ எப்படா வந்த.. மூக்கு வேர்த்திடுச்சு” என்று அவனை முறைத்துக் கொண்டே வெற்றி கேட்க..

 

“தனியா நின்னு சோக கீதம் வாசிச்சியே ணே அப்பவே வந்துட்டேன்.. நமக்கும் சோகத்துக்கு எல்லாம் ஏணி வைத்தா கூட எட்டாது. அதான் ஓரமாய் நின்னுக்கிட்டு இருந்தேன்” என்றான் அடுத்த வாயையும் தானே வாங்கி கொண்டு..

 

“ஆனா சோத்த பார்த்துட்டு வந்துட்ட” என்று தம்பியின் முதுகில் வெற்றி தட்ட.. “ஆமா பெரியம்மாவே எப்போதுதான் இந்த மாதிரி ஊட்டுவாங்க.. அதை எப்படி மிஸ் பண்ணுவேன்” என்றவன் கண்களும் கலங்கி இருந்ததோ??

 

அதை கண்டு கொண்ட வெற்றியை “நீ எல்லாம் செண்டிமெண்டா பேசாதடா சிரிப்பு வருது எனக்கு” என்றான் புன்னகைத்துக் கொண்டே..

 

“வரும்!! வரும்!! உனக்கு.. ஏன் உனக்கு மட்டும்தான் வேதனை வலி எல்லாம் இருக்கா.. எனக்கு இல்லையா? அதுக்காக நாள் பூரா மூஞ்சிய இப்படி உர்ருன்னு வச்சுக்க என்னால முடியாதுப்பா..” என்று அன்று வெற்றியை இலகு நிலையில் இருப்பதை கவனித்து வாருவாரு என்று வாரிக் கொண்டிருந்தான் வெற்றியை, கதிர்.

 

பெரும்பாலும் இம்மாதிரி இவர்கள் குடும்பமாய் செலவிடும் நேரம் குறைவே.. அப்படி அமைந்தால் தனது இறுக்கமான முகமூடியை தளர்த்திவிட்டு தம்பியுடன் இளக்கமாகவே இருப்பான் வெற்றி.

மூவரும் பேசி சிரித்துக் கொண்டே இருக்க சுலோச்சனாவின் கைகள் தானாக இரு மகன்களுக்கும் ஊட்டி விட்டுக் கொண்டே இருந்தது. இவர்களை எட்டிப் பார்த்துவிட்டு சிரிப்புடன் சென்றுவிட்டார் மரகதம்.

 

ஆனால் இவர்களுக்கு எதிர் பதமான மனநிலையில் தன் அறையில் படுத்து இருந்தாள் நிவேதிதா..

உடலில் இருந்த காயங்களை விட மனதில் இருந்த காயங்களே அதிகம்!!

 

 

வரதன் இவளை அழைத்து வந்த இலேசான விபத்துதான் என்று கூறி, அவளை அறைக்கு அனுப்பி வைக்க குடும்பமே பதறித்தான் போனது. சுவாதி மகளை “பார்த்து போறதில்லையா? இப்படித்தான் போய் முட்டிகிறதா?” என்று கடிந்தாலும் அவளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார்.

 

 

முதல் முறையாக அன்னையின் செயலுக்கு பின்னே இருக்கும் அன்பை புரிந்து கொண்டாள். அவளுக்கு உணவு கொடுத்து மருந்தும் கொடுத்து விட்டு “தூங்கு நிவே” என்று விளக்கை அணைத்து விட்டு அவர் கீழே வர.. இருளில் மூழ்கி இருந்த அறையை போல் அவளது மனமும் எங்கோ திக்குத் தெரியாத காட்டில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.

 

 

மகளுக்கு ஆக்சிடென்ட் என்றவுடனேயே மனம் பதறிப் போனது மேகநாதனுக்கு.. உயிர் பயம் என்பார்களே அதுபோல ஒற்றை மகள் மீது அவர் வைத்திருந்த அந்த உயிர் பயந்து போனது. அதன்பின் அவளுக்கு நல்லது செய்கிறோம் என்ற பெயரில் குழியில் தள்ள தயாரானார் பெற்றவர்.

 

சாப்பிட்டு முடித்து அனைவரும் ஓய்வாக அமரும் நேரத்தில் தான் தன் பேச்சைத் துவக்கினார் மேகநாதன்..

 

சிலருக்கு இடியாக..

சிலருக்கு சந்தோசமாக..

சிலருக்கு வருத்தமாக..

 

ஏற்கனவே இந்தியாவுக்கு அடம்பிடித்து மேகநாதன் வந்ததே பெரும் குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்த சுவாதிக்கு தங்கள் பெண்ணின் திருமணத்தை வசீகரனுடன் அவர் முடிவெடுத்தது இடியாக இருந்தது.

 

 

தனபாக்கியத்துக்கும் அப்பத்தாவிற்கும் தான் இந்த விஷயம் சந்தோஷத்தை அளித்தது. அவருக்கு ஒற்றை பேத்தி தன்னுடனே இருப்பாள் என்ற சந்தோஷம்.. தனபாகியத்துக்கு சொத்துக்கு சொத்தாக மகனின் எதிர்காலம் பல மடங்கு உயரம் என்று சந்தோஷம்.

 

புனிதாவுக்கும் அழகு சுந்தரத்திற்கும் சற்று வருத்தம். அவர்கள் பார்வையில் வசீகரனை விட இன்னும் நல்ல மாப்பிள்ளையை நிவேதிதாவுக்கு பார்க்கலாம். ஏன் இந்த அவசர முடிவு என்ற வருத்தம்!!

 

இதில் வருத்தமோ கோபமோ எந்த உணர்வுமே காட்டாமல் அமைதியாக இருந்தது என்றால் அது மருதுவும் வரதனும் தான். ஏனென்றால் இங்கே நடக்கும் எதையும் தடுக்கவோ.. எதிர்த்துப் பேசவோ அவர்களுக்கு அதிகாரம் இல்லை. பெற்றவரே தன் பெண்ணுக்கு பார்த்து முடிக்கும்போது என்ன செய்வது. ஆனாலும் மருதுக்கு மனது கேட்காமல் “சித்தப்பா கொஞ்சம் யோசிச்சு மெதுவா செய்யலாமே!!” என்று அவன் கூற.. மேகநாதனுக்கு முன் முந்திக் கொண்டார் தனபாக்கியம்.

 

 

“என்ன நெனச்சிட்டு இருக்க மருது நீனு? இப்பதான் அண்ணனே மனசு வந்து என் மருமகளுக்கு அவர் மருமகன கல்யாணம் பண்ணி கொடுக்கணும் சொல்லாறாரு.. நீ ஏன் வந்து குழப்பத்தை உண்டு பண்ணறுவன்” என்றவரின் வார்த்தையில் என் மகனுக்கு கிடைக்கும் நல்ல வாழ்க்கையை தடுக்காதே என்று மறைமுகமாக கட்டளை இருந்தது.

 

அதன்பின் அவன் ஏன் வாயை திறக்க போகிறான்!! ஆனாலும் தன் தங்கை இங்கே தங்களுடனே இருப்பது அவனுக்கு சந்தோஷம் அதனால் அமைதியாக அமர்ந்து விட்டான்.

 

 

மேகநாதன் சொன்ன அடுத்த கணமே அந்த ராத்திரியிலும் அவர்களின் ஆஸ்தான ஜோசியருக்கு அழைத்து திருவிழா முடிந்து ஒரு நல்ல நாளை பார்க்குமாறு அப்பத்தா போன் போட்டு சொல்லிவிட்டார். தனபாக்கியத்திற்கு கேட்கவா வேண்டும்? இறக்கைகள் இல்லாமலேயே பறந்தார். வசீகரன் இரண்டு நாள் இருந்துவிட்டு ஊருக்கு சென்றுவிட்டான். அதனால் மகனுக்கு விஷயத்தை கூற உடனே தனது அறைக்கு ஓடி விட்டார்.

 

 

இரவு மேகநாதன் அறையில் சுவாதி அவருடன் பேசாமல் அழுத்தமாக அமர்ந்திருக்க… “சுவாதி!!” என்று அழைத்தவரை திரும்பியும் பார்க்காமல் தன் கைவிரல்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

 

 

“ப்ளீஸ் சுவாதி.. என்னை அவாய்ட் பண்ணாத” என்று அவர் கெஞ்சலுடன் கூற..

 

“இந்த காலத்துல பிள்ளைகளோட கல்யாணத்தை தீர்மானிக்கிறது பெரும்பாலும் பெத்தவங்களா இருந்தாலும் பிள்ளைங்க கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்கனும் என்கிற.. பேஸிக் சென்ஸ் கூட உங்களுக்கு இல்லையா? அதிலும் நம்மளோட கல்யாணமே காதல் கல்யாணம்!! அந்த மாதிரி என் பொண்ணுக்கு நடக்கலைனாலும், இவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கூட நீங்க அவ கிட்ட கேக்கல? அப்பான்னு உங்களுக்கு அவ மேல உரிமை இருக்கிற மாதிரிதானே.. அம்மாவான எனக்கும் அவ மேல இருக்கும். என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டீர்களா?” என்று கோபமாக கத்தவில்லை சண்டை போடவில்லை ஆனால் அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் நறுக்குத் தெரித்தார் போல் மேகநாதன் நெஞ்சில் குத்தியது.

ஏற்கனவே குத்தம் செய்தவரின் நெஞ்சம் குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருக்க.. இப்பொழுது சுவாதியின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவருக்கு இன்னும் அந்த ரணத்தை காயப்படுத்தி விட்டு சென்றது.

 

 

“இப்ப நான் செய்த விஷயம் உனக்கு புரியாது. அதே நேரத்தில் உரிமை மீறலா கூட தெரியலாம். ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு நான் செய்தது தான் சரி என்று உனக்கு புரியும். அந்த நேரம் நான் உன் கூட இருப்பேனா தெரியாது?” என்றார் மேலே பார்த்துக் கொண்டு..

 

அவர் வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் கூர்மையாக அவரைப் பார்த்த சுவாதி “உங்க மனசுல ஏதோ ஒன்னு இருக்கு. அது இந்த வீட்டுல உள்ளங்களுக்கும் தெரியுது. ஆனா என்கிட்ட நீங்க சொல்ல மாட்டேன்கிறீங்க? இத்தனை வருஷம் நாம அந்நியோன்யமாக வாழ்ந்த தாம்பத்தியத்திற்கு என்ன அர்த்தம்னு என்னால கண்டுபிடிக்கவே முடியல.. ஆனா ஒன்னு என் பொண்ணுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லனா கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது” என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தவர் அவருக்கு முதுகு காட்டி விட்டு படுத்து விட்டார்.

 

 

மறுநாள்.. ஓரளவு உடல் வலி எல்லாம் சரியாக மதியத்திற்கு மேல் தான் முழித்தாள் நிவேதிதா. கீழே வந்தவளுக்கு புனிதா ஒரு பவுலில் நிறைய எலும்பு சூப்பை வைத்து “குடி பாப்பா.. அப்பதான் உடம்புக்கு தெம்பு வரும்” என்று கூற ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டே தனது அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள்.

 

 

“குட் மார்னிங் டாட்” என்று சோர்வாக ஒலித்த மகளின் குரலிலும் முகத்திலும் தெரிந்த வலியை பார்த்தவருக்கு உள்ளுக்குள் வலித்தது. மெல்ல மெல்ல அவள் கைகளை பிடித்து கொண்டு, நேற்று நடந்த பேச்சுக்களை எல்லாம் அவளிடம் கூறியவர் “உன் பதிலில் தாண்டா என் மொத்த நிம்மதியும் இருக்கு.. நீ இந்தியா வரேன்னு முன்னாடியே என்கிட்ட சொல்லியிருந்தா கண்டிப்பா நான் தடுத்து இருப்பேன். ஆனால் வந்து இங்க இவ்ளோ பிரச்சனை!! அது எல்லாம் நம்ம கைய மீறி போச்சு.. இனி வசீகரன் கல்யாணம் பண்ணிக்கிட்டா இங்கேயோ இல்ல ஆஸ்திரேலியாவிலோ உனக்கு பிடிச்ச இடத்துல நீ சுகமாய் இருக்கலாம். உன்ன பத்தின கவலை இன்றி நானும் நிம்மதியா போய் சேருவேன்” என்று அவர் மேலே பார்த்து கை நீட்ட அதில் பெண்ணுக்கு மனமுருகி வந்து அணைத்துக் கொண்டாள் தந்தையை.

 

“ஏன் டாட்.. இப்படி பேசுறீங்க? நீ இப்படி எல்லாம் பேசாதீங்க. என்னால தாங்க முடியல.. இப்ப என்ன வசீகரன் மாமா கல்யாணம் செய்துக்கணும்.. அதுதானே? பண்ணிக்கிறேன் விடுங்க” என்றாள் தந்தையை சமாதன படுத்த வேண்டும் என்று.. நிவேதிதாவுக்கும் சம்மதம் என்ற செய்தி அடுத்து அங்கிருந்த அனைவருக்கும் பகிரப்பட.. மீண்டும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மனநிலையில்!! ஆனால் சுவாதியால் இதை சிறிதும் நம்ப முடியவில்லை. தன் பெண் எவ்வாறு சம்மதித்திருக்க கூடும் என்று திரும்பத் திரும்ப அவளிடம் நான்கைந்து முறை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டே, நடப்பது நடக்கட்டும் என்று திருமணத்திற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.

 

திருமணத்தை பெரிய அளவில் எல்லாம் அவர்கள் நடத்தவில்லை.. வீட்டு அளவிலேயே நெருங்கிய உறவினர்கள் மட்டும் கூப்பிட்டு.. அதுவும் திருமணத்திற்கு முதல்நாள் அவர்களை அழைத்துக் கொள்ளலாம் என்று முழு மனதாக முடிவு எடுத்து இருந்தனர்.

 

 

வெற்றி என்னும் சூறாவளி எங்கே எப்படி நுழைந்து அவர்களை சூறையாடும் என்று அவர்களால் கணிக்க முடியவில்லை!! அதனால் அவர்கள் போதுமான மட்டும் தங்களை தற்காத்துக் கொண்டனர்!! 

 

காற்றுக்கு ஏது வேலி??

காற்றாகி வருவானோ?

புயலாகி பொங்குவானோ?

சூறாவளியாய் சுழன்று அடிப்பானோ?

அவன் மட்டுமே அறிந்த ரகசியம்!!

 

(பயபுள்ளை.. எனக்கு கூட சொல்ல மாட்டேங்குது)

 

இன்று மதுரை ஆளும் அந்த மரகத தேவிக்கு.. மரகத மணிகள் பதித்த மகுடம் தரிக்கும் நன் நாள்!!

 

காலையிலேயே வேந்தன் குடும்பம் தங்களது மரியாதையை பச்சைப்பட்டு கொடுத்து மீனாட்சி தேவியின் பட்டாபிஷேகத்தை கண்ணாரக்கண்டு விட்டு வந்து இருந்தனர்.

மாலை போல அம்மனின் திக் விஜயம்!!

ஈரேழு லோகத்தையும் வென்ற அந்த பரமேஸ்வரனின் மறுபாதியவள்.. தன்னவனின் ஒற்றைப் பார்வையில்.. பெண்ணாக மலர்ந்த நாள்!!

 

முக்கண்ணனின் ஒற்றை பார்வையில் தன் முத்தனங்களில் ஒன்று மறைய.. நாணங்கொண்டு தன்னவனையும் தன்னையும் உணர்ந்து காதல் கொண்ட பெருநாள்!!

 

ஊரே மீனாட்சியின் திக்விஜயத்தை கொண்டாடி மகிழ்ந்து இருந்த சமயம்..

அப்பாவின் அன்புக் கட்டளையை மீற முடியாமல் வசீகரனை கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்து இருந்தாலும் ஏனோ அவனை ஏற்க மனதே இல்லை.. கண்கள் மூடினாலே திம்மென்று தேகத்துடன் தன்னை இழுத்து அணைத்த அந்த நெடியவனின் முகம் மட்டுமே!!

 

 

“சச்சே.. அவனால் தானே எனக்கு இவ்வளவு தொல்லையும் தொந்தரவுகளும் பிரச்சினைகளும்.. தன்னை நாசம் செய்தவனையே தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேணும் எனும் பிற்போக்கு எண்ணங்கள் எனக்கு கிடையாது. அதேசமயம் வெளிநாட்டில் வாழ்ந்து வந்திருந்தாலும் கற்பை பறக்கவிட்டு கண்டமேனிக்கு சுற்றித்திரிந்தவளும் நான் கிடையாது. பின்னே ஏன் இந்த மனம் இப்படி தவியாய் தவிக்கிறது!! ஆனால் என்னை பயன்படுத்தி தூக்கி எறிந்தவனை விட.. வசீகரன் எவ்வளவோ மேல்” என்று கோபத்தில் முடிவெடுத்தாள்.

 

மனதின் எண்ணத்தை மாற்ற அன்றிரவு மருதுவோடு அவர்கள் கடை ஒன்றின் மாடியிலிருந்து திக்விஜயத்தை பார்த்தவள், “திக்கற்று இருப்பவர்களுக்கு நீயே துணை!!” என அந்த மீனாட்சி அம்மனை சரணடைந்தாள் நிவேதிதா!!

 

 

பொறுப்புடன் தங்கை அம்மனை வேண்டுவதை பார்த்த மருது தோளோடு அவளை அணைத்தவன், “இந்த கல்யாணத்துல நெசமாகவே உனக்கு விருப்பமா பாப்பா? பிடிக்கலேன்னா ஓபனா சொல்லிடு டா.. உன்னை யாரும் வற்புறுத்த மாட்டாய்ங்க.. அதுக்கு மேல உன்னை நான் இங்க இருக்க விட மாட்டேன்டா.. ஆஸ்திரேலியாவுக்கே உன்னை கூட்டிட்டு போயிடுறேன் சொல்லுடா பாப்பா” என்றான் பரிவாக…

 

ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவள் “எனக்கு.. என்னோட வாழ்க்கையின் முடிவுகள் எதுவுமே என் கையில் இல்லை ணா.. எப்போ ஆஸ்திரேலியாவில் இருந்து கிளம்பினேனோ.. அதுக்கப்புறம் விதி என்னை ஒரு பெரு வெள்ளத்தில் தள்ளி விட்ட மாதிரிதான் இருக்கு. அது போன போக்கில் தான் இப்ப நானும் போக முடிவெடுத்திட்டேன்” என்றவளை, “நீ இப்படி சோகமா இருந்தா எனக்கு பிடிக்கல..

 வா வா என் பிரண்டு கட பக்கத்துல இருக்கு ரொம்ப நாளா கூப்பிட்டுட்டு இருக்கானுவோ.. நாளைக்கு திருக்கல்யாணம் இல்லையா? நீயும் புதுசா பட்டு கட்டிட்டு போ” என்று கையோடு தங்கையை அழைத்துக் கொண்டு சென்றவன்.. பார்த்து பார்த்து தங்கைக்கு புடவை எடுத்துக் கொடுத்தான். அதற்கு மேட்சாக வேலைப்பாடு மிகுந்த ரெடிமேட் பிளவுஸ் எடுத்துக்கொண்டு அழைத்து வந்தான்.

 

“பாருடா தங்கச்சிக்கு மட்டும் புதுபுடவை எடுத்து கொடுத்திருக்கிறதை” என்று புனிதா மகனை கிண்டல் செய்தாலும் “ஏற்கனவே எடுத்த நிறைய பட்டு கூட இருக்குடா.. உனக்கு பிடிச்சதை கட்டு பாப்பா” என்றார் மகளிடம்.

 

வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் அவள் மனநிலையை சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்காக ஒவ்வொன்றாக செய்வதை உணரந்து நெகழ்ந்திருந்தாள் நிவேதிதா.

இவ்வளவு நாட்களாக இந்த பந்தம் சொந்தம் பாசம் அன்பு எல்லாவற்றையும் இழந்து இருந்தோமே என்று முதல் முறையாக வருந்தினாள். 

 

என்னதான் நமக்குத் துன்பம் வந்தாலும் அரணென காத்து ரட்சிக்க நமது குடும்பம் இருக்கும் என்று ஒரு எண்ணமே நமக்கு யானை பலத்தை தரவல்லது. 

ஒரு சிறு விஷயத்தில் கூட நான் செய்வது சரியே என என்னை என் பெற்றோர்கள் பிறந்தவர்கள் நம்புவார்கள் என்ற எண்ணம் மனத்தால் ஒருவனுக்கு நம்பிக்கையை கொடுத்து தடைக்கற்களை தகர்த்து வெற்றியை பெற உறுதுணையாக்கும்.

 

வேந்தன் வீடு அன்று பரபரப்பாக இருந்தது. மறுநாள் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்!! அதற்குத் தேவையான பட்டாடைகளையும் அங்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளையும் காலம் காலமாக இவர்கள் குடும்பம் செய்து வருகிறது. இன்றும் பெரியநாச்சி அமர்ந்து எல்லாவற்றையும் சரியாக இருக்கிறதா என்று பார்க்க அவருக்கு சுலோசனாவும் மரகதமும் உதவி செய்து கொண்டிருந்தனர்.

 

 

“ஏலே.. கதிரு அந்த பரமேஸ்வரன் இன்னும் புடவை கொடுத்து அனுப்பலடா.. உன்னைய வாங்கிட்டு வரச் சொன்னேனா? இல்லையா?” என்று தன் அல்லக்கைகளோடு அமர்ந்து ஃப்ரீ பையர் ஆடிக்கொண்டிருந்த கதிரை கேட்க..

 

“பேபி.. அவரு கரெக்டா கொண்டு வந்து கொடுத்திடுவேனு சொல்லி இருக்காரு” என்று ஆட்டத்தில் கவனம் வைத்துக்கொண்டே அவன் பதிலுரைக்க..

 

“அடே!! எடுபட்ட பயலே.. விளையாடுற நேரமா இது? இப்ப வாங்கிட்டு வர முடியுமா முடியாதா?” என்று அதட்டல் போட அவனோ அதை கண்டுகொள்ளாமல் மீண்டும் அவன் அடியார்களின் துணையுடன் ஆட்டத்திலேயே மும்முரமாக இருக்க.. சட்டென்று அவனது போன் பறிக்கப்பட்டது. நிமிர்ந்து பார்க்க அங்கே வெற்றி உதட்டை மடித்து கடித்து அவனை முறைத்துக் கொண்டிருக்க.. அவனின் இந்த நிதான பார்வை எப்பவும் எதிராளியை பயப்படுத்தக்கூடியது.. அதில் கதிர் மட்டும் விதிவிலக்கல்ல!!

 

 

“இதோ கிளம்பிட்டேன் ணே!! நீ போன மட்டும் கொடேன். எப்படிப் பறந்து போய் பட்டை வாங்கிட்டு வரேன் மட்டும் பாரு” என்றவன் போனுக்காக கைநீட்ட, ஒரு முறைப்புடன் போனை வெற்றி கொடுக்க.‌. வாங்கியவன் அடுத்த நிமிடம் தனது ஜாகுவாரில் மாமனார் ஊரை.. அதாங்க கைத்தறி நகரை நோக்கி பறந்தான்.

 

“அண்ணே!! அண்ணியை பார்த்து அப்படியே பேசிட்டு வாங்க” என்று பரமேஸ்வரியின் வீட்டுக்குள் நுழையும் கதிரை பார்த்து அவனின் ஆட்கள் கட்டைவிரலை தூக்கி ஆட்ட..

 

“அவ அப்படியே பேசிட்டாலும்” என்று அலுத்துக் கொண்டே சென்றவன், “இன்னுமா புடவை ரெடி ஆகல? கொண்டு வந்து தரேன் சொன்னிக.. மணி என்ன ஆச்சு நாளைக்கு காலைல வெள்ளனமே எடுத்துட்டு போனுமா இல்லையா?’ என்று சற்று அதட்டல் உடனே பரமேஸ்வரனிடம் இவன் கேட்க…

 

இது பொதுவாக எல்லாருக்கும் வரும் கோபம் தான்.. அதற்கு உள்ளுக்குள் இருந்து சிலிர்த்துக்கொண்டு தந்தையின் அருகே நின்றாள் பத்மா.

 

அவள் கண்களில் அவ்வளவு குற்றச்சாட்டு.. 

நீ எப்படி என் தந்தையை பேசலாம் என்று!!

 

“போடி.. போடி..” கண்களாலேயே அவளை தவிர்த்தான். அதில் இன்னும் உங்களுக்கு கோபம் மூண்டது.

 

“பாபா.. ந்நொவ்வ பை பித்தர் சேத்த.. கள்ளியாவோ ( புடவைக்கான புதுப்பை உள்ளே இருக்கு எடுத்துட்டு வாங்க அப்பா)” என்று தந்தையை உள்ளே அனுப்பி வைத்தவள் அடுத்த கணம் அவனை நோக்கி வந்து..

 

 

“சும்மா இருந்த புள்ளையே சுத்தி சுத்தி வந்து உசுப்பு ஏத்தி விட்டுட்டு இப்போ கண்டுக்காம இருக்கிரீரு.. அதுவுமில்லாம நான் உன்னைய சிக்கன் கேட்டா, அந்த வீணா போனா ஸ்விக்கி காரன அனுப்புரீரு.. அவனா என் மாமன்? அடுத்த முறை அவனை அனுப்பினீரு?” என்று அவன் உயரத்துக்கு எம்பி எம்பி இவள் ஒற்றை விரலைக் காட்டி சண்டை போட்டாள்.

 

 

அந்த ஒற்றை விரலை தன் விரலால் மடக்கிப் பிடித்தவன் “என்னடி செய்வ??” என்று கேட்க.. மீண்டும் ஒரு முறை தன் வீட்டினுள் எட்டிப் பார்த்தவள் ஒரே எம்பாக எம்பி அவனது கன்னத்தை கடித்து வைத்து ஓடிவிட்டாள். 

 

 

வெளியிலிருந்து இங்கே நடப்பவற்றை ஒரு சுவாரஸ்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அல்லக்கைகள் இவள் கடித்தத்தைப் பார்த்து ஆவென்று வாயைப் பிளந்தனர்.

 

 

பரமேஸ்வரன் கொடுத்த பையையோ.. அவர் சொன்ன பத்திரங்களையோ மற்ற செய்திகளையோ எதையும் காதில் வாங்காமல் கன்னத்தை கையால் தாங்கியவாறு வீட்டுக்கு வந்து சேர்ந்தான் கதிர்.

 

 

விடியக்காலை சுபமுகூர்த்தில்.. 

சொக்கநாதன் மீ

னாட்சியை தன் சகதர்மினியாக ஏற்று கொண்ட அதே நேரத்தில்… அதே இடத்தில்…

நிவேதிதாவின் சங்கு கழுத்தில் பொன் நாணை பூட்டிக் கொண்டிருந்தான் வெற்றி வேந்தன்!!

 

காதலே.. காதலே..

1 thought on “எங்கு காணினும் நின் காதலே… 16”

  1. 🤭🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🫶🫶🫂🫂🫂🫂🫂 endha gape la love vandhuchii vetri ku……..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top