அத்தியாயம் 5
ரணவீரனின் எல்லையைத் தொட்டதும் அங்கு நின்றிருந்த அவனது பாதுகாப்பு படைத்தளபதி தனது ராஜமுத்திரையை காண்பிக்க, பல்லாக்கு கைமாறப்பட்டது. அடர்ந்த காட்டு வழியாக பலத்த பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்த பல்லாக்கினை கள்வர்கள் வழிமறித்து தாக்கத் தொடங்கினர். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருக்க, பல்லாக்கை கீழே தவறவிட்டனர். அதிலிருந்த ஆருஷா, வெளியே வந்து விழ, அதைக் கண்ட கள்ளர்கூட்டத் தலைவன்,
“அட விலைமதிப்புள்ள பொருட்களோடு, விலைமதிப்பற்ற பரிசும் நமக்கு கிடைத்திருக்கின்றது. இன்று நமக்கு நல்ல நாள் தான் போல! ஜெய் பாதாள பைரவி!” என்றவாறு ஆருஷாவை பார்த்துக் கொண்டே முன்னேறத் தொடங்கினான். அவனை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான் படைத்தளபதி. அவனையும் மீறி ஆருஷாவை நெருங்கும் தருணத்தில் அம்பொன்று சீறிப் பாய்ந்து வந்தது. ஆருஷாவை தொடமுயன்றவனின் கையில் அம்பொன்று பாய, அடுத்து வந்த அம்பு, சரியாக அவனது இதயத்தை துளையிட்டு சென்றது. யாரென்று நிமிர்ந்து பார்த்த ஆருஷாவின் கண்ணெதிரே முகம் தொடங்கி உடல் முழுவதும் போர்க்கோலம் பூண்டு, இடது தோளில் வில்லை ஏந்தி, வலது தோளில் முதுகுப்பக்கம் கற்றை கற்றையாக எண்ணற்ற அம்புகளைப் பிணைத்து, அம்பறாத்தூளியை எடுத்துக்கட்டிக் கொண்டு, இடது இடையில் போர்வாளுடன் கூடிய உறையை எடுத்து இறுகக்கட்டிக்கொண்டு, வலதுகையில் நெடிய ஈட்டியையும் இடதுகையில் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு போர்க்களம் நோக்கி ஓடி வந்து, எதிரில் நிற்கும் கள்வர் கூட்டத்தின் மீது புலிபோல் பாய்ந்தான் ரணவீரன். தனது உயிரைப்பற்றி துளியும் கவலைப்படாமல், மதம்கொண்ட யானையைப்போல் வெறியுடன், தன்னை நோக்கி ஓடி வரும் எதிரிகளின் தலைகளை சீறும் வேங்கையென வெட்டித்தள்ளினான். தன்னை தாக்க வந்த கள்ளர்களை விட, தன் கண் முன்னே பல கலைகளை அசாதாரணமாக வெட்டிச் சாய்க்கும் ரணவீரனின் மீது தான் பயம் வந்தது. போர்க்கவசத்தினால் அவனது முகமும் மறைக்கப்பட்டிருக்க, அவளால் அவனது முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை. வாள் ஏந்தி நிற்கும் வேங்கையென எதிரிகளை மிச்சமில்லாமல் கொன்று குவித்தவன், தான் வந்த வேலை முடிந்ததென எண்ணியவனாய், தனக்கு மணமுடிக்க உறுதி செய்யப்படிருக்கும் பெண்ணை மறந்து புரவியில் ஏறிச் சென்று விட்டான். அங்கு நடந்த போரை பார்க்க முடியாது மரத்திற்கு பின்னால் அமர்ந்திருந்த ஆருஷா,
“என்னது ஒரு சத்தமும் கேட்கல. சண்டை முடிஞ்சுருச்சா?” என்றபடி திரும்பிப் பார்க்க, அங்கு இறந்த சடலங்களை தவிர வேறு யாரையும் காணவில்லை.
“அய்யய்யோ! அடியேய் மல்லி! மல்லி!”
“இங்கே மேலேப் பாருங்கள் இளவரசியாரே!”
“மரத்து மேல உட்கார்ந்து என்னடி பண்ணிட்டுருக்க? அவங்க எல்லோரும் போயிட்டாங்க. கீழ இறங்கி வா.” என்று ஆருஷா கூறியதும் கீழே குதித்து இறங்கினாள் மல்லி.
“இளவரசியாரே! தங்களை மறந்து அனைவரும் சென்றுவிட்டனரே?! இப்போது என்ன செய்வது?” என்று மல்லி வினவ,
“இங்கப்பாரு இந்த மண்ணுல குதிரையோட கால்தடம் பதிஞ்சுருக்கு. பொழுது சாயுறதுக்குள்ள அதை பார்த்துட்டே ஊருக்குள்ள போயிடலாம்.” என்று ஆருஷா பதிலளிக்க, அதன்படி குதிரை கால்தடத்தை பின்பற்றி ஊருக்குள் சென்றனர். அவர்கள் செல்லும் சமயம் எல்லைதடுப்புச் சுவற்றின் கதவை மூடத் தயாராகியிருந்தனர்.
“அடேய் லகுட பாண்டிகளா! என்னடா செய்யுறீங்க. கதவை மூடாதீங்க டா. அய்யோ! என்னால ஓடக் கூட முடியலையே. இதோ வந்துட்டேன். கதவை மூடாதீங்கடா.” என்று கத்திய படியே ஓடி வந்த ஆருஷா, அவர்கள் கதவை மூடுவதற்குள் உள்ளே நுழைந்தாள்; அவளைத் தொடர்ந்து மல்லியும் நுழையவே கதவையடைத்திருந்தனர்.
“அய்யோ என்னால் முடியல. இதுக்கு மேல என்னால ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. என்னோட கால் கை எல்லாம் கழண்டு விழுகுற மாதிரி இருக்கு.”
“அப்படியென்றால்?”
“அடியேய்! இந்த நேரத்துல விளக்கம் கேட்குறா பாரு. உன்னை?”
“இளவரசியாரே என்னத் தேடுகிறீர்கள்?”
“ஒரு நல்ல கல்லா தேடுறேன்.”
“அய்யோ அரண்மனை மீது கல்லெல்லாம் எரியக் கூடாது.”
“அரண்மனை மேல எரியப் போறதில்ல. அதை உன் தலை மேல் போட்டு சோலிய முடிக்குறதுக்கு.”
“அப்படியென்றால்?”
“அடியேய் கேள்விக்கு பிறந்தவளே! கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு நில்லுடி. ஏற்கனவே சிறுகுடல பெருங்குடல் திங்குற அளவுக்கு பசிக்குது. ஏதாவது பேசுன? மவளே கடிச்சு திண்ணுருவேன்.”
“இதையெல்லாம் நீங்க பேசவில்லை. அந்த பாதாள பைரவி பேச வைக்கிறாள். கடவுளே! எங்கள் இளவரசியாரை திருப்பிக் கொடுங்கள்.”
“அதுக்கு நீ கிணத்துல தான் குதிக்கணும். நீ குதிக்க ரெடினா, நான் தள்ளிவிட ரெடியாயிருக்குறேன். ஏய்! போதும் திரும்பவும் அப்படியென்றால்னு கேட்ட, அவ்வளவு தான்.” என்று கண்களை உருட்டியவள், ரணவீரனின் அரண்மனையினுள் செல்ல முயன்ற போது, வாயிற்காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டாள்.
“என்னையவா தடுத்து நிறுத்துற? உன்னைய?” என்று துள்ளிக் குதிக்கத் தொடங்கிய ஆருஷாவின் கையைப் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினாள் மல்லி.
“இளவரசியாரே! பொறுமை, பொறுமை. இப்படியெல்லாம் செய்தால் தங்களோடு சேர்த்து நானும் சிறை செல்ல நேரிடும். நான் பேசுகிறேன். நீங்கள் சற்று அமைதி காத்திருங்கள்.” என்று கூறிய அல்லி, தானே வாயிற் காவலரிடம் பூவிழியாழை ரணவீரனுக்கு மணமுடிக்க வென்று பேரரசரிட்ட அரசகட்டளையைப் பற்றி கூறினாள். ஆருஷாவை மேலிருந்து கீழாக பார்த்த வாயிற் காவலன், அவர்களை காத்திருக்குமாறு கூறிவிட்டு தகவல் பரிமாறினான்.
“ம்ஹும் இது ஆகுறதுக்கில்ல. இவனுங்க உள்ள போய் சொல்லி, அதை அந்த ராணாகிட்ட சொல்லி, அப்புறம் அவன் வந்து என்னைய உள்ளே அழைச்சிட்டு போறதுக்குள்ள, எனக்கு மலர்வளையமே வைச்சுடுவாங்க. நீ வா என்கூட.” என்று மல்லியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்ற ஆருஷா,
“இது ஒன்னும் மைசூர் பேலஸ் இல்ல. எகிறி குதிச்சு உள்ளப் போக முடியாத அளவுக்கு. கொஞ்சம் உயரம் தான். மல்லி அங்கப் போய் குனிஞ்சு நில்லு.”
“இதோ இறவரசியாரே!” என்றவாறு சுவற்றை ஒட்டி மல்லி குனிந்து கொள்ள, மல்லியின் இரு தோள்களிலும் காலை வைத்து சுவற்றை பற்றுக் கோலாக பிடித்துக் கொண்டு ஆருஷா ஏறி நின்றாள். மல்லி கொஞ்சம் எழுந்து நிற்கவும் கோட்டைச்சுவற்றின் உயரத்திற்கு வந்த ஆருஷா, சுவற்றின் கைப்பிடியைப் பிடித்து எழுந்து கொண்டு உள்ளே குதித்தாள்.
“இளவரசியாரே நலமா?!”
“ஏன்டி கத்துற? உள்ள நாய் ஏதாவது இருந்து கொத்தா புடிங்கிட்டு போகப் போகுது. மல்லி! முதல்ல நான் உள்ளப் போயி மெயின் கேட்டை திறந்து விடப் சொல்றேன்.” என்றவள் மல்லியின் பதிலுக்கு காத்திராமல் அரண்மனைக்குள் சென்றாள். அவ்வளவு பெரிய அரண்மனையில் எங்கு செல்வதென்று அறியாது தன் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள் ஆருஷா.
“இவ்ளோ பெரிய அரண்மனைல ஒருத்தர் கூடவா கண்ணுல தெரியமாட்டாங்க? இல்ல எல்லாம் குடிச்சுட்டு மட்டையாகிடுச்சா?” என்று முணுமுணுத்தவாறே, தனக்கு எதிரே இருந்த அறைக்குள் நுழைந்தாள். அறை மொத்தமும் இருளில் மூழ்கியிருக்க, எங்கு செல்வதென்று அறியாது தடுமாறியவளை சட்டென்று தனது வளைகரம் கொண்டு அணைத்த இரும்புகரத்தினை உணர்ந்தவள், கத்துவதற்காக வாயைத் திறக்கும் போது அவனது மறுகையில் இருந்த அரிக்கேன் விளக்கின் மூலம் அவனது முகத்தினை மிக அருகில் கண்டாள் ஆருஷா. விழிகள் இரண்டும் மோதி கவி பாட, இருவரது வாயிலிருந்தும் ஒரே நேரத்தில் உதிர்த்தன அந்த வார்த்தைகள்,
“யார் நீ?”
அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் யாரென்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் யாரென்று அறிந்த விதி தன் ஆடுபுலியாட்டத்தை பிள்ளையார் சுழியோடு ஆரம்பித்திருந்தது.
அத்தியாயம் 6
“ஹேய் நீ அந்த ராணாவோட அல்லக்கை தானே?”
“அல்லக்கையா? அப்படியென்றால்?”
“அதான்பா அந்த ரணவீரனோட உதவியாளர் தான நீ? அப்போ உன்கிட்ட நான் என்னைய மறைச்சு பிரயோஜனமில்ல. நான் தான் உங்க மாவீரர் ரணவீரனை கல்யாணம் பண்ணிக்க போறப் பொண்ணு. பயப்படாத, நீ என்னைய இப்படி இறுக்கி கட்டிப்பிடிச்சுட்டு இருக்குறதை அவர்கிட்ட சொல்லமாட்டேன். ஓகேவா?” என்று தன் கடைசி மூன்று விரல்களை விரித்து, கட்டைவிரலோடு ஆள்காட்டி விரலோடு சேர்த்து மடக்கி காண்பிக்க, அவளை விநோதமாக பார்த்தான் ரணவீரன். அவளை சட்டென விட்டு விலகியவனின் அருகே சென்று பார்த்தவள்,
“உன் பெயரென்ன? நீ இவ்ளோ அழகா இருக்கியே? எப்படி இங்க வந்து மாட்டிக்கிட்ட? பாவம். உன்கிட்ட போய் கேட்குறேன் பாரு. நீயே அவரைப் பார்த்து பயந்து தானே போயிருப்ப. ஆனா எனக்கு பயமில்லப்பா. நான் கேட்குற கேள்விக்கு நீ சரியா பதில் சொல்லிட்டேனா, கண்டிப்பா இதுக்கு பதிலா உனக்கு நான் ஏதாவது உதவி பண்ணுவேன். என்ன முழிக்குற? என்ன கேள்வி கேட்கப் போறேன்னு நினைக்குறியா? அது ஒன்னுமில்ல. எங்க அந்த ரணவீரன்?” என்றவளை இமைக்காது பார்த்திருந்தான் ரணவீரன்.
‘யாரிவள்? என் பெயரைச் சொல்லி அழைக்கும் தைரியம், இவ்வுலகில் யாருக்குமில்லை. இவளுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது? பார்க்க இளமையாக, அழகாக இருக்கிறாள். என்னை திருமணம் செய்து கொள்ள வந்திருக்கிறேன் என்கிறாள். இவள் பேசுவதில் சில விஷயங்கள் புரியவில்லை. இவள் யாராக இருக்கும்? எதிரி நாட்டு ஒற்றனா? பெண்ணை அனுப்பி உளவு பார்க்கிறார்களா?’ என்று சந்தேகமாக நினைத்தவனின் அருகே வந்த பூவிழியாழ் (இனி ஆருஷா பூவிழியாழாக கருதப்படுவாள்),
“உனக்கு ஒன்னு தெரியுமா? அவன் சரியான மாங்கா மடையனா இருப்பான் போல?” என்றவளை புருவம் உயர்த்தி பார்த்தவன்,
“மாங்கா மடையனா?”
“ஆமா! பின்ன? யாராவது கட்டிக்கப் போற பொண்ணை அம்போன்னு விட்டுட்டு போவாங்களா? அரை மெண்டல், சரியான காட்டுமிராண்டி.”
“அரை.. ம்ம் காட்டுமிராண்டி?”
“பின்ன என்னப்பா? நீ இன்னைக்கு அங்க இருந்துருக்கணும். பாவம். நீ தான் இங்க அவரோட திங்க்ஸ் எல்லாத்தையும் க்ளீன் பண்ணிட்டுருந்தியே! அதனால உனக்கு இதெல்லாம் தெரியாது. என்ன செய்யுறது? நீ இன்னும் வளரணும் தம்பி.” என்று அவனது தோள்களை தட்டிக் கொடுத்தவள்,
“அத்தனை பேரையும் ஆட்டை வெட்டுற மாதிரி சும்மா சதக் சதக்னு வெட்டிட்டு போயிட்டே இருந்தான் தெரியுமா? அப்புறம் இன்னோன்னு கேட்கணும். நீங்கல்லாம் சட்டையே போட மாட்டீங்களா? இப்படி தான் காத்தோட்டமா திறிவீங்களா? ஆமா! இதெல்லாம் கோல்டா? இல்ல ரோல்ட் கோல்டா? இல்ல அந்த ரணவீரன் இல்லாத நேரமாப் பார்த்து அவனோடதை ஆட்டையப் போட்டுட்டியா?” என்று கண்ணடித்துக் கேட்டவளைப் பார்க்க ஒருபுறம் சிரிப்பு வந்தாலும் மறுபுறம் விசித்திரமாக உணர்ந்தான் ரணவீரன்.
“அவர் தான் உங்களை மறந்து விட்டுவிட்டு வந்துவிட்டாரே! பின் எதற்காக இங்கே வந்துள்ளீர்கள்?” என்று ரணவீரன் கேட்க,
“லூசாப்பா நீ?! நான் என்ன கடைப்பொருளா விட்டுட்டு வந்த உடனே, திரும்ப சம்பந்தப்பட்டவங்க கிட்ட அப்படியே திருப்பி அனுப்ப? நான் என் அப்பாக்கிட்ட போய், அந்த ராணா மலைகுரங்கு விட்டுட்டு போயிடுச்சுன்னு சொன்னா, உடனே அவரும் அப்படியா மகளே?! நல்ல காரியம் செய்தாய்னு என்னைய வைச்சு கொஞ்சப் போறாரா? எப்படியும் என்னைய வீட்டை விட்டு விரட்டத்தான் போறாரு. அதான் ஒன்னு அந்த ராணாவை நான் கொல்லணும்; அப்படியில்லன்னா அவன்கூட குடும்பம் நடத்தணும். இதுல ஏதாவது ஒன்னு கண்டிப்பா நடக்கணும். அதுக்காக தான் திரும்பி வந்துருக்கேன்.” என்று நீண்ட உரையாற்றியவள்,
“எப்பா ராசா! காலைல சாப்பிட்டது, இப்போ ராத்திரியாகிடுச்சு, சாப்பிட ஏதாவது இருக்குமா? ரொம்ப பசிக்குது.” என்று பாவமாய் கேட்பவளை ஏதும் செய்ய ரணவீரனுக்கு மனம் வரவில்லை. பழங்கள் இருக்கும் திசை நோக்கி தனது கையை நீட்ட,
“ஐ! மாதுளம் பழம், மாம்பழம்; வாவ் வாழைப்பழம்.” என்றவள் அதனை எடுத்து உண்ணத் தொடங்கியவள், சட்டென தன் நெற்றியில் அடித்து கொண்டாள்.
“அடக்கடவுளே! மல்லியை எப்படி மறந்து போனேன்?” என்று தனக்குள் பேசியவளாக, ஒருகையில் வாழைப்பழத்தையும் ஒருகையில் மாம்பழத்தையும் எடுத்துக் கொண்டு, அதில் ஒன்றை வாயில் வைத்து உள்ளே தள்ளிக்கொண்டே மீண்டும் ரணவீரனைத் தேடி வந்தவள்,
“எப்பா ராசா! வெளிய என்னோட ப்ரெண்ட் வெயிட் பண்ணிட்டு இருக்கா. அவளையும் உள்ளே கூப்பிடணும். நான் ரொம்ப பிஸியாக இருக்கேன். நீயே போய் அவளை கூட்டிட்டு வந்துடுறியா?” என்றவளை புரியாது பார்த்தவனை,
“அய்யோ! உனக்கு புரியலையா? அதாவது என்னோட.. ம்ம்ம்.. தோழி.. தோழி.. அவ எனக்காக வெளிய காத்திட்டுருக்கா, தயவுசெய்து அவளை கூட்டிட்டு வர்றியா?” என்று கூற, அவளை பார்த்தவாறு அப்படியே நின்றிருந்தான் ரணவீரன்.
“சரி நீ ரொம்ப பயப்படுற போல! வாயிற்கதவிற்கு எப்படி போகணும்னு சொல்லு. நானே போயிக்குறேன்.” என்றவள் கேட்க, தன் கையை நுழைவு வாயில் நோக்கி காண்பித்தான் ரணவீரன்.
“அச்சோ பாவம்! ரொம்ப பயந்து சுபாவம் போல. அந்த குண்டனுக்கு ரொம்ப பயப்படுவான் போல. டேய் குண்டா! உனக்கிருக்குடா. நான் அடிச்சா தாங்க மாட்ட; நாலு நாள் தூங்க மாட்ட; மோதிப்பாரு வீடு போயி சேரமாட்ட.” என்று முணுமுணுத்து கொண்டே நுழைவு வாயிலிற்கு சென்றாள் பூவிழியாழ். அவள் அங்கு செல்லும் போது, படைத்தளபதியின் உதவியாளன் ஒருவன் மல்லியின் கழுத்தில் வாளை வைத்து,
“சொல்லு! எதிரி நாட்டு உளவாளி தானே நீ?! உன்கூடவே வந்த உன்னுடைய கூட்டாளி எங்கே?” என்று மிரட்டிக் கொண்டிருக்க,
“அய்யோ நாங்க உளவாளிகள் அல்ல. இளவரசியார், மாவீரரைப் பார்க்க அரண்மனையினுள் சென்றிருக்கிறார்.” என்று கதறினாள் மல்லி.
“பொய் சொல்லாதே பெண்ணே! வெகு நேரமாக நான் இங்கு தான் காவல் காக்கின்றேன். என்னை மீறி ஒருவரும் உள்ளே செல்ல முடியாது. உண்மையை கூறு. எங்கே அந்த உளவாளி?” என்று தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருந்தான். அதனைக் கண்ட பூவிழியாழ்,
“ஆமாண்டா! உன் கண்ணுல விளக்கெண்ணையைத் தான் ஊத்தணும். வேஸ்ட் ஃபெல்லோ.” என்று முணுமுணுத்தவாறே அவ்விடத்திற்கு விரைந்தாள். அவன் படைத்தளபதியின் உதவியாளன் என்று அறியாத பூவிழியாழ், அவனை ரணவீரன் என்று தவறாக எண்ணிக் கொண்டாள்.
“ஹேய்! ஹேய்! நிறுத்துங்க. என்னப் பண்றீங்க? நான் தான் உங்களை மணமுடிக்க காத்திருக்கும் பெண். அரசர் மதிவாணனின் மகள் பூவிழியாழ்.” என்று கூற அவளை புரியாது பார்த்திருந்தான் அந்த உதவியாளன். அவளுக்கு பின்னே வந்து கொண்டிருந்த ரணவீரனை கண்டதும் மண்டியிட்டு மரியாதை செலுத்தவே, தன் உதட்டில் விரல் வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்ய, உதவியாளனும் அமைதி காத்தான்.
“இப்ப இப்படி மன்னிப்பு கேட்ட சரியாப் போச்சா? இவளுக்கு ஏதாவது ஒன்னு ஆகிருந்தா, என்ன பதில் சொல்லுவீங்க? இதுக்கெல்லாம் காரணம் யாரு?” என்றவள் கேட்க,
“மாவீரர்?!” என்றவன் கூற,
“என்னது மாவீரரா? மாவீரரா இருந்தா மட்டும் போதுமா? நம்பி வந்த பெண்ணை இப்படி தான் விட்டுவிட்டு வருவதா?” என்று கத்திக் கொண்டிருந்தாள் பூவிழியாழ். பூவிழியாழை நிமிர்ந்து பார்த்த மல்லி, அவளுக்கு பின்னால் ரணவீரன் நிற்பதை கண்டு கொண்டாள். அதை எப்படியாவது பூவிழியாழுக்கு உணர்த்திவிட எண்ணியவள், கண்சாடை காட்ட, அதனை புரிந்து கொள்ளாத பூவிழியாழ்,
“என்ன மல்லி? கண்ணுல தூசி ஏதும் விழுந்துடுச்சா? ஏன் இப்படி பண்ற? உள்ள வா. முதல்ல சாப்பிடு. அப்புறம் இந்த மாவீரனை ஒருகை பார்க்கலாம்.” என்று கூற, தன் காலை தரையில் உதைத்த மல்லி,
“இளவரசியாரே! தங்களுக்கு பின்னால் தான் மாவீரர் நின்று கொண்டிருக்கிறார்.” என்று கூற, சட்டென திரும்பியவள், உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தாள். அவனின் முன் தன் கையை நீட்டி,
“மாமன்னர்ர்ர்ர்ர்ர்.. மாவீரர்ர்ர்ர்.. ரணவீரன்.. நீயா?” என்றவளின் முன்னே வந்து நின்றவன்,
“அங்கதா! இவள் தான் மன்னர் மதிவாணனின் மகள் என்பது உறுதியாகும் வரை, நம் விருந்தினர் மாளிகையில் சிறைக்காவல் வையுங்கள்.” என்று உத்தரவிட்டுச் சென்றான்.
‘அய்யகோ! இமயம் சரிந்ததே! கோபால்! என்ன கோபால் இதெல்லாம்? இப்படி மொக்கை வாங்கிட்டியே! இனி எந்த முகத்தை வைத்து கொண்டு அவனை பார்ப்பாய்? இப்படி பல்ப் வாங்கிட்டியே!’ என்றெண்ணியவள் தன் மறுகையில் இருந்த மாம்பழத்தை கடித்துக் கொண்டே உதவியாளனுடன் விருந்தினர் மாளிகைக்கு சென்றாள்.
**************************************
“வா! வா! சீக்கிரம் வா! ஆருஷா. கல்யாணம் தான் நேரம், காலம் பார்க்காம நடந்துருச்சு. மத்ததாவது நேரங்காலம் பார்த்து நடக்கணும். முதல்ல உங்க ரெண்டு பேருக்கும் ரிசப்ஷன் வைக்கணும். அப்பத்தான் இவனுக்கு கல்யாணம் ஆச்சுன்னு ஊருக்கு தெரியும். இல்லேனா நானும் சிங்கிள் தான்னு சொல்லிட்டு திரிவான்.” என்று மரகதவல்லி கூற,
“பாட்டி! எது எடுக்குறதா இருந்தாலும் சீக்கிரம் எடுங்க. எனக்கு நிறைய வேலையிருக்கு.” என்று பல்லைக் கடித்தான் ராக்கி. அவனுக்கு இப்பொழுது முக்கியமான மீட்டிங் இருக்கும் பட்சத்தில், அவனை வம்பாக நகைக்கடைக்கு ஆருஷாவுடன் இழுத்து வந்திருந்தார் மரகதவல்லி. இவர்களுடன் கூடவே வந்திருந்தார் வேலுநாச்சியார்.
“அடேய்! எலி தான் காயுதுன்னா, எலிப்புழுக்கையும் ஏன்டா சேர்ந்து காயணும். இவ முதல்ல என்னோட பேத்தியே இல்லடா. இதை சொன்னா, நம்பள பைத்தியக்காரப் பட்டம் கட்டி ஓரமா உட்கார வைச்சுருவாங்க. நாச்சி! மூச்சு விடக்கூடாது.” என்றெண்ணிய வேலுநாச்சியார் அமைதியாக ஆருஷாவின் அருகில் நின்று கொண்டார். அந்த நகைக்கடை மாளிகை முழுவதும் குளிருட்டப்பட்டிருக்க, தன்னருகே நின்றிருந்த வேலுநாச்சியாரிடம்,
“வெளியில் வெப்பமாக இருந்தது. உள்ளே வந்தால் குளிருகிறதே. ஏன் அப்படி?” என்று கேட்க,
“அதுவா?” என்றவர், தன் மனதுக்குள்,
‘மாட்னடா பம்மர் கட் மண்டையா! என்னையவா என் பேரன் கிட்ட மாட்டிவிட்ட? இனி காலத்துக்கும் நீ பிரம்மச்சாரி தான்டா.’ நினைத்தவர்,
“உன் புருஷன் ஒரு மாயாவி! எல்லா மாயஜாலமும் தெரிஞ்சவன். உன்னையக் கூட வசியம் பண்ணி பலி கொடுக்கத் தான் இந்த நகை அப்புறம் புடவையெல்லாம் எடுத்துக் கொடுத்து அவனோட மாயஜாலத்தால உன் மனசை மாத்தப் பார்க்குறான். நீ அவனோட வலைல விழுந்துடாதடா கண்ணு. நீ என்னோட பேத்தி மாதிரி. அவனை தொடவிட்ட, நீ கெட்ட. உன்னைய கொன்னுடுவான்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்று விட்டார். அவர் கூறியதிலிருந்து ராக்கியை விட்டு பத்தடி தள்ளி நின்றவள் ஆருஷாவாக இருக்கும் பூவிழியாழ். திருமண வரவேற்பிற்காக நகை மற்றும் பட்டுப்புடவை அனைத்தையும் வாங்கியவர், தங்களது வீட்டிற்கு வந்ததும் அதனை இருவரையும் அணிந்து வரச்சொன்னார்.
“பாட்டி! ஏன் இப்படி படுத்துற?” என்று பட்டுவேட்டி சட்டையோடு வந்தவனைப் பார்த்து கண்கலங்கினார் மரகதவல்லி.
“நான் கண்ணை மூடுறதுக்குள்ள உன்னைய கல்யாணம் கோலத்துல பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். பார்த்துட்டேன். அப்படியே உன்னோட குழந்தையையும் பார்த்துட்டேனா, நிம்மதியா கண்ணை மூடிடுவேன்.” என்று மரகதவல்லி கூற,
“நீ பண்ற அலப்பறைக்கு அவனே ஒருநாள் உன்னை கொல்லப் போறான்.” என்று முணுமுணுத்து கொண்டே அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் வேலுநாச்சியார். அவருக்கு அவரது பேத்தியை எங்கு சென்று தேடுவது? அவளை எவ்வாறு திரும்ப இக்காலத்திற்கு கூட்டிக் கொண்டு வருவது? என எதுவும் தெரியாது பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருந்தார். அவரது வாழ்நாளில் இனி தன் பேத்தியை காணவே போறதில்லையோ என்ற பயம் தொற்றிக் கொண்டது. அவரது பயம் நிஜமாகுமா? காலம் அவருக்கு இன்னும் என்ன அதிர்ச்சியெல்லாம் தரக் காத்திருக்கின்றதோ? எல்லாம் விதிவசம்.
Veryyy niceeeeeeeee epii nd different type of story 💐💐💐❤️🥰🎉💕💕💞💕💞💞💕💕💞
Thank you sis 🤩🤩🤩🤩🤩
Super sis ❤️