2
அதிகாலை நேரம், சூரியன் தன் இரவு தூக்கத்தை விடுத்து மெல்ல மெல்ல கண் விழித்து தன் பார்வை என்னும் கதிர்களை, பூமி பெண்ணவள் மீது மெதுவாக வீச, அதற்காகவே காத்திருந்தது போல தன் அதரங்களை விரித்து வாங்கி கொண்டாள் அவள்..
அந்த நடுத்தர ஒற்றை அடுக்கு வீட்டு மொட்டை மாடியில் அந்த அதிகாலை வேளையில், வெண்ணிற பைஜாமா அணிந்து, தன் பயிற்சியை தொடங்கினாள் பெண் ஒருத்தி…
சூரிய நமஸ்காரம் தொடங்கி, மூச்சு பயிற்சி, தியானம், பத்மாசனத்தில் இருந்து சக்கராசனம் வரை நேர்த்தியோடு செய்து விட்டு, கண்களை மூடி , இரு கை கூப்பி சூரியனை வணங்கியவாறு நின்றாள் வைசாலி…
அவள் வைசாலி தேவி…
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே….
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே…
என்ற பாடல், அவளை பார்த்தவுடன் நம்மை அறியாமல் நம் மண்டைக்குள் வந்து பாடுவார் கார்த்திக்..
ஆண்களை நிமிர்ந்து பார்க்காது நேருக்கு நேராக பார்க்கும் நெடு நெடுவென வளர்த்தி.. பொன்னில் மஞ்சள் குழைத்து செய்த சிற்பம் போல மின்னும் உடல்.. தனஞ்செயன் வில்லென வளைந்து இருக்கும் புருவங்கள் இரண்டும்… கூர் நாசி… கடலில் துள்ளி விளையாடும் கயல்யென கண்கள், விட்டில் பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் ஒளியென பழுப்பு நிற பாவைகள்… அதில் எப்போதும் இருக்கும் சிநேக பாவம்.. இதழ்களா இல்லை செர்ரி பழ தோட்டமா என்று பார்ப்பவரை சிறிது நேரம் அதில் தொலைய வைக்கும் உதடுகள்..
பண்டைய பாவளர்கள் பாடிய மொத்த பெண்ணிய அழகும் சேர்ந்து பெண்ணாய் பிறந்ததா என்ற எண்ணம் கொள்ள வைக்கும் பெண்ணவள்.. கண்களில் சிநேக பாவத்தை தாண்டியும் எப்போது இருக்கும் ஒரு அழுத்தம் , அனாவசியமாக என்னிடம் நெருங்காதே என்று கூறும்.. நிமிர்ந்த நன்னடை…. நேர் கொண்ட பார்வை என பாரதியின் பெண்ணவள்…
கோவையின் சாய் பாபா காலணி தான் அவளின் வாஸ்த்து தளம், தற்போது..
” ம்மா… சாப்பாடு எடுத்து வைச்சிட்டியா, ஸ்நாக்ஸ் பாக்ஸ்… ?” என்று தன் வலது கையில் வாட்ச் கட்டி கொண்டே கேட்டாள் அன்னையிடம் வைசாலி..
” இன்னும் கிண்டர் கார்டன் புள்ள மாதிரி, ஸ்நாக்ஸ் பாக்ஸ் வேற.. எல்லாம் ரெடி டாம்மா”
“ம்மா.. அந்த செமினாருக்கு எடுத்த நோட்ஸ் இங்க வைச்சிருந்தேன்.. பார்த்தீயா ம்மா?”
” உன் ஃபைல்லுக்குள் தான் இருக்கு..”
” ஓ.. சாரி.. மறந்துட்டேன் ம்மா”.
” ஏன்டா மா.. இவ்வளோ டென்ஷன்.. எல்லாம் ரெடி பண்ணிட்டே தானே?”
“பண்ணிட்டேன் தான் .. இருந்தாலும் கொஞ்சம் நேர்வஸ் ஆ இருக்கும்மா” என்று சலுகையாக அவரின் தோலில் சாய்ந்து கொண்டாள்.
அவரும் அவளின் தலையை கோதி, “உன்னால முடியும் டாம்மா.. என் பொண்ணுக்கு இருக்கிற திறமை யாருக்கு இருக்கு சொல்லு”
” நீ எப்போ மா.. வேலைக்கு போகனும். மார்னிங் டூட்டி தானே”
” ஆமாம்.. டா.. ஒன்பதுக்கு கிளம்பிடுவேன். வைஷூ சாப்பாடு மிச்சம் வைக்காதே.. ப்ரெண்ட்ஸ் கூட அரட்டை அடிச்சிட்டு அப்புறம் டைம் இல்லைன்னு சொல்லாத.. சரியா”
” மா.. நான் ஒன்னும் சின்ன பிள்ளை இல்ல.. சமர்த்தா சாப்பிடுவேனாக்கும்..”
” பார்க்க தானே போறேன்.. உன் சமர்த்தை சாயங்காலம்”
அம்மாவுக்கு ஒரு அசட்டு சிரிப்பு ஒன்றை அவசரமாக கடத்தி விட்டு, அவசர அவசரமாக காலை உணவினை உண்டாள்.
” மெதுவா வைஷூ..” அவள் அன்னை அதட்டியது எல்லாம் எங்கே காதில் ஏறியது..
“ம்மா.. பொங்கல் சூப்பர்.. நிலக்கடலை சட்னி அள்ளூது…” சாப்பாட்டை எப்போதும் ரசித்து ருசித்து தான் உண்பாள் தந்தை போல…
அவள் அம்மா செய்த பொங்கலை நம் ஊர் வேக பந்து வீச்சாளர் போல வேக வேகமாக தொண்டைக்குள் தள்ளி விட்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.
அவளின் அன்னை சபர்மதி.. தலைமை செவிலியர் ஆக பணியில் உள்ளார் கோவை அரசு மருத்துவமனையில்.. தந்தை இப்போது போட்டோவில் மட்டுமே..
வழக்கம் போல தன் தந்தையின் படத்திற்கு முன் ஒரு நிமிடம் நின்று விட்டு,தன்னுடைய பக், லஞ்ச் பக் சகிதம் புறப்பட்டாள் கல்லூரிக்கு..
அன்னை வாசல் வரை வர வழி அனுப்ப, அழுந்த முத்தம் ஒன்று அன்னைக்கு கொடுத்து விட்டு கல்லூரி பஸ் நிற்கும் இடம் நோக்கி விரைந்தாள் வைசாலி..
வழக்கம் போல பேருந்தில் அவளிடத்தில் அமர்ந்து , அன்றைக்கு தான் செமினாரில் எடுக்க வேண்டிய குறிப்புகளை பார்த்து கொண்டே வந்தாள்.
அவள் கல்லூரி வரும் முன் அவள் குடும்பத்தை பற்றி பார்த்துடுவோம். அவளின் தந்தை சிவில் என்ஜினீயர் ஆக பணிபுரிந்து, ஒரு விபத்தில் இறந்து விட்டார். தாத்தா , அவரின் அப்பா என அனைவரும் சுதந்திர போராட்ட வீர தியாகிகள்…
உண்மையாக மக்களிடம் அன்பு கொண்டு, நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்லது செய்ய வேண்டி தங்களை ,. தங்கள் சொத்துகளை இழந்து நின்றவர்கள்.. இக்கால அரசியல்வாதி வார்த்தைகளால் சுருங்க சொன்னால், பிழைக்க தெரியாதவர்கள்.. தன் மக்கள் மீது சொத்து சேர்க்காமல், மக்களுக்காக தங்கள் சொத்தை கரைத்த வெட்டிகள்..
தங்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்கு பதிலாக புண்ணியமும், சமூகத்தில் நன் மதிப்பையும் மட்டுமே அவர்களால் பெற்று தர முடிந்தது.. ஆனால் அதை எதுவும் தாயும் மகளும் கண்டு கொண்டது இல்லை.. தன் கையே தனக்குதவி என்ற கொள்கை உடையவர் சபர்மதி… அதையே தான் பெண்ணுக்கும் போத்திதார்.. கணவனே ஆனாலும் சுயமரியாதை முக்கியம் என்று..
பல சீர்தருத்த கொள்கையும் கொண்டவள் வைசாலி.. அதனால் பக்தி இல்லையா என்று கேட்டால், கிருத்திகை விரதம் தவறாமல் எடுக்கும் முருகன் பக்தை.. கர்நாடக சங்கீதம் கற்று கொண்டாலும், ஜும்பா , சிலம்பம் என்று கலக்கும் நவயுக யுவதி… தன் மனதிற்கு சரி என்றதை, மிக சரியாகவே செய்யும் பெண் சாணக்கியன் அவள்… ஆகா…அதற்குள்ள அவள் கல்லூரி வந்திடிச்சு… இனி கதையின் ஒட்டதோடு அவளையும் தெரிந்து கொள்வோமே….
அவளை பார்வையாலே விழுங்க துடிக்கும் பல கண்களை, பார்த்தும் பார்க்காதது போலவே கடந்து விடுவாள்.. அப்படியும் நெருங்குபவர்களுக்கு முதலில் அவள் வாய் பதில் சொல்லும், அடுத்து கண்கள் தான்..
நண்பர்களுக்கு இவளை போல உற்ற தோழி கிடையாது.. நட்புக்கு என்றுமே முதல் மரியாதை தான்.. காதல் என்றால் அவமரியதை தான் அவளிடம்.. அதனால் பெரும்பாலான ஆண்கள் நட்பே துணை என்று வைசலியடம் பேச முனைவார்கள். அவர்களையும் அவர்களின் எல்லையில் நிறுத்தியே பழகுவாள்..
தன் இடத்தில் அமர்ந்து மீண்டும் செமினார் குறிப்புகளை தான் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
” ஹாய்.. வைசு… ” என்றபடி அவள் அருகில் அமர்ந்தாள் சங்கீதா..
” ஹாய்.. சங்கீ.. “
” என்னடி.. இன்னுமா பிரப்பரேஷன் முடியல.. நீயே இப்படின்னா , என் நிலைமை எல்லாம்”
” சங்கீ… பஸ்ட் டைம் டி.. ஹோல் காலேஜ்ஜூம் இருக்கும்.. அதான் கொஞ்சம் பக் பக் இருக்கு”
” அதெல்லாம் நீ ஜம்மாய்ப்ப பாரு.. எனக்கு விசில் அடிக்க வராது.. அதனால பசங்கள ஏற்பாடு பண்ணவா.. உன் செஷன் முடிஞ்சதும் விசிலடிக்க..” என்று கண் அடித்து சிரித்தவளை பார்த்து இவளுக்கும்
சிரிப்பு தொத்தி கொண்டது..
” ஏண்டி.. அந்த ப்ளூ பெர்ரி கிட்ட நான் மாட்டவா?”
” அந்த ப்ளூ பெர்ரிக்கு, செமினார் ஹால் இருட்டுல யாரு விசில் அடிச்சான்னா தெரிய போகுது?”
” அதுவும் சரி தான்.. “
இவர்களால் ப்ளூ பெர்ரி என்று அன்பாக அழைக்கபடும் , அவர் நீலமேகம்.. அவர்களின் எச். ஓ.டி.. அவரின் தொப்பைக்காக இந்த பெர்ரி விகுதி …
பிரம்மாண்டமான அந்த கல்லூரி அரங்கத்தில் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . அந்த கல்லூரியில் பயிலும் முதுநிலை மாணவர்கள் அனைவருக்குமான கருத்தரங்கு. மாணவிகள் வழக்கம் போல் அல்லாமல் சற்று தங்களை அழகுபடுத்தி ஜொலித்துக் கொண்டிருந்தனர்.
நந்தன் அப்போதுதான் நான் அதை கவனித்தான். சில பல மாணவிகள் அரங்கத்தினுள் செல்வதும் வருவதுமாக இருந்ததை. உடனே தன் அல்லக்கையிடம்,
“இன்னைக்கு என்னடா விசேஷம்… கேர்ள்ஸ் எல்லாம் ஜொலிக்கிறாங்க..”
” அது.. இன்னிக்கு செமினார் டா .. “
“ஓ அதான் இப்படியா… ஆமா என்ன செமினாரு”
“படிப்புக்கும் நமக்கும்தான், பூமிக்கும் நிலவுக்கும் உள்ள டிஸ்டன்ஸ் ஆச்சே… எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்.. ஏதோ பிஜி ஸ்டுடென்ட்ஸ் செமினாருனு பேசிக்கிட்டு இருந்தாங்க பசங்க..”
“நமக்கு தெரியாமல் , நம்ம காலேஜ்ல ஒரு செமினார் ஆ… வா வா.. போய் முதல்ல அது என்னன்னு பார்த்துட்டு வருவோம்…”
“என்னது செமினாருக்கு நாமளா.”… என்று அந்த அல்லக்கை அதிர்ந்து நோக்க…
“ஆமாண்டா வாடா… போய் உள்ள அப்படி என்னதான் நடத்துறாங்க பார்த்துட்டு வருவோம்…” என்று அரங்கத்தை நோக்கி சென்றான் . அங்கே தன் விதி மாற்றி எழுதப்படபோவதை அறியாமல் நந்தன்….
இவர்கள் சென்ற போது நடந்து கொண்டிருந்த செஷன் இவர்கள் பிரிவுக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தது..
உடனே தன் அல்ல கையை நோக்கி ..” அந்த சொட்டை என்னடா சொல்றான்… ஒண்ணுமே புரிய மாட்டேங்குது… “
” மச்சி .. நமக்கு நம்ம சைடுல இருந்து சொன்னாலே தெரியாது.. புரியாது… அவன் வேற டிபார்ட்மெண்ட் போல, அதை பேசுறான்னு நினைக்கிறேன்…”
“அப்படியா… என்னதான் சொல்லு இவங்க நடத்தும் போது வர தூக்கம்.. சான்ஸே இல்லடா… அதை யாராலும் தர முடியாது டா… “
“நீ தூங்கவா வந்த மச்சி … அதுக்கு நாம வெளியிலேயே தூங்கலாம்.. நல்லா காத்தாட… “
“சும்மா சொன்னேன்டா .. தூங்குறதுக்கா உள்ள வந்தோம் … கலர் கலரா
..விதவிதமா … டிசைன் டிசைனா இருக்காங்க ..” என்று கூறி கண் அடித்தான்.
“சரி.. அப்ப நீ உன் வேலையை கண்டினியூ பண்ணு, நான் என் வேலையை பார்க்கிறேன்”
“என்னடா உன் வேலை..?”
“தூக்கம்தான்.. ” என்று கூறி அவனுடன் வந்த அல்லக்கையான ஹரிஷ் கர்ச்சீஃப் எடுத்து முகத்தை கட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டான்..
நந்தன் சுற்றி முற்றி, தங்களை சுற்றியிருந்த பெண்களை நோட்டம் விடுவதும் .. செஷனில் யார் என்று பார்ப்பதும் … அப்போப்போ வாட்ச் பார்ப்பதுமாய் இருந்தான் .. இப்படியாக ஒரு அரை மணி நேரத்திற்கு மேலாக அவனால் அங்கு உட்கார இயலவில்லை.
‘இதுக்கு மேல தாங்காது நாம எழுந்து வெளியில் போகலாம் ’என்று அவன் நினைத்து எழ, அவனைக் கவர்ந்து இழுத்தது ஒரு பெண்ணின் குரல்..
சட்டென்று திரும்பி எங்கிருந்து வந்தது அந்த குரல் என்று பார்க்க… முதலில் தெரியவில்லை.. திரும்பவும் மேடையின் மீது பார்க்க அவள் நின்று கொண்டிருந்தாள் … ஆம் வைசாலி தான்…
மயில் நீலநிற புடவையில் , மிதமான ஒப்பனையில்.. ஜொலித்தாள். அவனால் கண்களை வேறு எங்கும் செலுத்த முடியவில்லை.
அரை மணி நேரத்தை தன்னுடைய குரலால் அந்த அரங்கத்தையே ஆட்கொண்டு இருந்தாள் பெண்.. ஒவ்வொரு பேச்சுக்கும், அவளுடன் சேர்ந்து அவள் கண்களின் நர்த்தனமும், கூடவே கற்றை முடியை தூக்கி போனி டைல் போட்டு இருக்க, அதுவும் அவளுடன் சேர்ந்து நடனம் ஆடியது..
அவளுடைய இந்நடனங்களை தான் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் நந்தன்.
” கார்சியஸ்” என்றான் அவனை அறியாமலேயே..
கிரெடிட் பைனான்ஸ் என்கிற தலைப்பில் அவளின் அழுத்தம் நிறைந்த குரலில் மிக தெளிவாக விளக்கி கொண்டு இருந்தாள். நந்தனுக்கு ஃபைனான்ஸ் பற்றி ஏதோ சொல்லுகிறாள் என்று மட்டுமே புரிந்தது.. அதை தாண்டி ஒன்றும் அவன் சிற்றறிவுக்கு எட்டவில்லை..
அவள் தன் செஷன் முடித்து திரும்பிய உடன் அரங்கத்தில் ஆரவாரம் கேட்டது.. அந்த சத்தத்தில் தான் அவன் தன்னிலை பெற்றான்.
உடனே அருகில் உள்ளவனை எழுப்ப, அவன் பதறி அடித்து எழ, நந்தன் அவளை காட்டி..” டேய்.. எனக்கு அவளை பத்தின டீடெய்ல் வேணும்… வீத்தின் ஹாஃப் அன் அவர்…” என்று கட்டளையிட்டான்.
ஹரிஷ் குழம்பி போய், ” ஏன் டா… ” என்றான் தூக்கம் கலையாமலே… அவன் பிடரியில் ஒன்று விட்டு, ” போ டா.. இல்லை இன்னைக்கு நீ எங்கிட்ட தொலைஞ்ச…”
அவனும் யார்கிட்ட உதவி கேட்க என்று யோசிக்க.. நினைவில் வந்தது சந்துரு…
உடனே நந்தனிடம், ” மச்சி… சந்துரு கிட்ட கேட்கலாம்.. அவன் ஒரு ஆல் ரவுண்டர்.. எல்லா டிபார்ட்மெண்ட்லையும் எல்லோரையும் தெரியும் டா..”
நந்தன் யோசனையாக , யாரு சந்துரு என்று நோக்க, ” அவன் தான் டா.. எம்.பி.ஏ ஃபைனான்ஸ் படிக்கிறான்ல.. அவங்க அப்பா உன் கம்பனில தான் ஆடிட்டர் ஆ இருக்கிறார்.. “
இப்போது நியாபகம் வந்தது அவன் சந்துரு யார் என்று… மேலும் அவன் சொன்ன ஃபைனானஸ் வேற அவனை உந்த, ” உடனே அவனை இழுத்துட்டு வா டா…” என்றான்.
செமினாரை கவனமாக கவனித்து கொண்டிருந்தவனை, நந்தனின் அல்லகைகள் கண்டுபிடித்து அள்ளி கொண்டு வந்தனர் ஹரிஷ் தலைமையில்.. நந்தன் பெயரை கேட்டவுடன் அவனும் மறுப்பு சொல்லாமல் வந்து விட்டான்.
” உட்காரு சந்துரு” என்ற நந்தனின் உபசரிப்பில் பயந்த வண்ணமே அவன் அருகில் அமர்ந்தான் சந்துரு.
” அப்புறம்.. படிப்பு எல்லாம் எப்படி போகுது?.. செஷனிலே மூழ்கீட்டியா” என்றான் நக்கல் குரலில்..
” அது.. நல்லா போகுது…” என்றான் திக்கி திணறி..
” எனக்கு ஒரு பொண்ணு பத்தின டீடெய்ல் வேணும்.. அநேகமாக உன் டிபார்ட்மெண்ட் ஆக இருக்க சான்ஸ் அதிகம்.. ”
அய்யோயோ பொண்ணா… செத்தேன் நான் இன்னைக்கு.. என்று மனதுக்குள் புலம்பியவாறு…” கேளுங்க.. எனக்கு தெரிஞ்சா சொல்கிறேன்”
” குட்… இப்போ கொஞ்சம் நேரம் முன்ன.. செமினார் எடுத்த பொண்ணு.. மயில் நீலநிற புடவை.. போனி டைல் போட்டு இருந்தா..”
சந்துருக்கு திக் என்று ஆனது அவன் சொன்னதை கேட்டு… திரும்ப ஒரு முறை தெளிவு படுத்த நினைத்தான்.
” செமினார் அட்டெண்ட் பண்ணுனவங்களா…” என்று உலர்ந்த குரலில்..
” நோ.. நோ… செமினார் எடுத்தவ… ம்ம்… ஏதோ ஃபைனான்ஸ் … கிரெடிட்ஸ் அப்படின்னு பேசினா…” என்றான். சொல்லும் போதே அவன் கண்களின் மையலை சந்துரு கவனித்து கொண்டு தான் இருந்தான்.
” சொல்லு.. தெரியுமா… இல்லை தெரியலைனாலும் பரவாயில்லை… ஈவ்னிங் வரை டைம் எடுத்து, விசாரிச்சு சொல்லு” என்று ஆணை இருந்தது அவன் குரலில்..
” அது.. அது…” மீண்டும் திக்கின சந்துரு குரல்…
” டேய் ஒழுங்கா.. திக்காம சொல்லு.. இல்லை” நந்தன் தன் மூஷ்டியை முறுக்க, அவனை பற்றி ஏற்கனவே அறிந்தவன் ஆகையால்… பயந்து கொண்டே…
” அவங்க… அவங்க… ஸ்டூடண்ட் இல்லை.. லெக்சரர்.. ” என்றான் சந்துரு..
“என்னது லெக்சரராரா….. ” என்று அதிர்ந்தது நந்தன் கோஸ்ட்டி…..
ம்.. லெக்சரர் தான்…
அதான் அந்த டைட்டீல் சாங்..
கர்வம் வளரும்…
Very nice 👍
Super sis 💞