ATM Tamil Romantic Novels

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 4

வானவில் 4

 

 

ஒரு மாதம் வெறும் வெறுமையாக தான் சென்றது வர்ணாவுக்கு. புது வேலை என்றாலும் இவள் ஜூனியர் என்பதால் பெரிதாக யாரும் வேலை கற்றுக் கொடுக்கவில்லை. இவளே ஏதும் செய்தாலும்..

 

“இதெல்லாம் உனக்கு தெரியாது!!” 

 

“எடுத்தவுடனே இந்த இடத்துக்கு எல்லாம் வர முடியாது பாப்பா கொஞ்சம் வெயிட் பண்ணு!!” என்று நக்கலாக பேசுபவர்களும்..

 

“மெது மெதுவா தான் கத்துக்கிட்டு வரணுமா வந்தவுடனே டைரக்ட்டா சீட்டில் உட்கார முடியுமா?” என்று கேட்கும் பெருசுகளும் இவளுக்கு தலை வலியை கொடுத்தாலும், “கற்றுக்கொள்வோமே!! இதில் என்ன தப்பு இருக்கு!!” என்று அவளும் கற்றுக் கொள்ளத்தான் முயன்றாள். 

 

ஆனால் அங்கு இருப்பவர்களுக்கு எல்லாம் அந்த எண்ணம் இல்லை. பெரும்பான்மையான மக்கள் ‘தன்னை சுற்றியுள்ளவர்கள் எங்கே தன்னை விட அதிக திறமை கொண்டு மேலிடத்தில் நல்ல பெயர் வாங்கி விடுவார்களோ?’ என்று பொறாமை சூழ் உலகு அது!! அதுவும் ஊடகவியலில் கேட்கவும் வேண்டுமா??

 

இப்படியாக போவதும் சீட்டை தேய்ப்பதும் திரும்பி வருவதுமாக இருந்தாள் அவள். பல கனவுகளோடு சென்ற வேலைக்கு அவள் தன் முழு உழைப்பை போட முனைந்தாலும் மற்றவர்கள் குறுக்கே புக.. கைகட்டி வேடிக்கை பார்ப்பதை தவிர ஒன்றும் முடியவில்லை வர்ணாவால்!! அப்பொழுதுதான் அவளுக்கு உதவி செய்ய வந்தாள் பிரியாமணி..

 

பொதுவாக இருவரும் ஒரே மாதிரி இருந்தால் அனைவருக்கும் ஒரு சினேக தன்மை தானாகவே ஏற்படும். அதுபோலவே வர்ணாவுக்கும் அந்த பிரியாமணியுடன் ஏற்பட அவளும் தன் வேலைகளை பற்றி அவளுக்கு கூறினாள்.

 

“பொதுவா நான் சேனலை விட ப்ளாக்கில் தான் அதிகமிருப்பேன். மீடியாவில் வேலை இருக்கிறதை விட சோசியல் மீடியா தான் நமக்கு நிறைய வேலை தரும். ஏன்னா எந்த விஷயம் நடந்தாலும் அது டைரக்ட்டா நம்ம சேனலுக்கு வர‌ முன்னே அது டக்குனு பர்ஸ்ட் சோஷல் மீடியாவுல தான் போடுவாங்க” 

 

“ஆமா.. கா.. நானும் நிறைய பார்த்து இருக்கேன் அது போல” என்றாள் வர்ணா.

 

“எஸ்.. அந்த மாதிரி நியூஸ் தான் நமக்கு ஹெல்ப் பண்ணும். அதை எல்லாம்‌ கலெக்ட் செய்து ப்ரோக்ராம் ஹெட்டுக்கு அப்பப்போ அனுப்பி கிட்டே இருக்கணும். அது மட்டுமல்ல நம்ம சேனலுக்குனு தனியாக ஒரு சோசியல் மீடியா இருக்கு. அங்கேயும் நிறைய போடணும். உப்புச்சப்பில்லாத மேட்டரை கூட ஏதோ இருக்குமோனு நெனச்சு படிக்க தோதா டைட்டில் கொடுத்து படிக்க வைக்கணும். அதில் ஸ்கிரிப்டும் இருக்கு, வீடியோவும் இருக்கு போட்டோஸ் இருக்கு.. நம்ம இஸ்டம் தான் பூந்து விளையாடலாம்.. அப்பப்போ டாப் செலிப்ரிட்டிஸ் பத்தி ஹாட் அண்ட் ஸ்பைசி டாபிக் கொடுத்தா.. இன்னும் எகிறும்!!” என்று அவள் விளக்கிக் கொண்டே செல்ல இவ்வளவு இருக்கா இதில் என்று வாயை திறந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள் வர்ணா!!

 

அதன் பின் வந்த நாட்களில் ப்ரியாமணி கூட சேர்ந்து அவ்வப்போது வேலை செய்வாள் வர்ணா. ஆனாலும் அவளின் அந்த விஜே மற்றும் ப்ரோக்ராம் ஹெட் கனவை விடவில்லை.

 

ஆதி சேனலின் சேர்மன் ஆதித் நிகேதன்!! தமிழ்நாட்டில் ஆதி குரூப்ஸை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அத்துணை பாரம்பரியமிக்கது!! பணத்தில் மட்டுமல்ல அதிகாரத்திலும் கோலோச்சும் குடும்பம். வாரிசு வாரிசாக அரசியலிலும் தொழிலிலும் கலந்திருக்கும் குடும்பம். ஆதித்தின் தந்தை அருணாச்சலம் எம்பி.. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்களுடைய தொகுதியில் இவர் மட்டுமே வாகை சூடுவார். பல ஆண்டு காலமாக பெரும் வாக்கு வத்தியாசத்தில் வெற்றி பெற்று வருபவர்.

 

ஆதித்துக்கு பெரிதாக அரசியலில் நாட்டம் இல்லாததால் அவன் தொழிலை கையெடுக்க.. அவனது சித்தப்பா மகன் பெரியப்பாவுக்கு வாரிசாக அரசியலில் குதித்துள்ளான். அதில் கடந்த நான்காண்டுகளாக ஊடகத் துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தான் இவன் என்றால் மிகையாகாது. அருத பழசான நாடகங்களை மட்டுமே போட்டு வந்த சேனல்களுக்கு மத்தியில் இவன் ஐந்தாறு சேனல்களுடன் இளமை ததும்ப இறங்க.. தமிழ்நாட்டில் மட்டுமல்ல சேட்டிலைட் உலகத்தையே இவன் கட்டி ஆண்டு கொண்டிருந்தான். இப்படிப்பட்டவனுக்கு பெரும் சவாலாக வந்து இறங்கினான் விநாயக்!!

 

தமிழ்நாட்டில் விவிஆர் சேனல் மெல்ல மெல்ல தலை எடுக்க டிஆர்பி ரேட்டிங்கில் எப்பொழுதும் முதலிடத்தை தக்க வைத்திருந்த ஆதி சேனல் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. புதுசுதானே என்று மெத்தனமாக இருந்த காரணத்தினால் இப்பொழுது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டதிலிருந்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறான் ஆதித்.

 

தினமும் மீட்டிங்.. வாரம் ஒரு முறை புது புது டிரென்ட்.. மாதமொருமுறை புதிய நிகழ்ச்சி.. என்று புதுசு புதுசாக என்று தன் ஊழியர்களை விரட்டி.. அவர்கள் மூளையை கசக்கி.. உடலுழைப்பை பிழிந்து.. என இவன் களமிறங்கினான் தளத்தில். ஆனால் விவிஆர் சேனலோ.. அமைதியாக ஆனால் விவேகமாக தனது வெற்றியை பதிவு செய்தது.

 

ஆதி சேனலின் ஊழியர்களும் பல வருடங்களாக ‘நாம் தான் முதலில் என்றுமே!! நமக்கு போட்டியாளர்கள் இல்லை!!’ என்று சற்று மமதையிலும் வெற்றிக் களிப்பிலும் இருந்தனர்.

 

“போட்டி இல்லாததால் நாம் எது போட்டாலும் மக்கள் ரசிப்பார்கள்!! எப்பொழுதும் நாம் முதலிடம் தான்!” என்று சற்று அலட்சியத்தில் இருந்ததால் வந்த சரிவு இது!!

 

ஆனால் விவிஆர் சேனல் ஊழியர்களோ பெரும் நாளாக சரியான வழிநடத்தல் இல்லாமல் தலைவன் இல்லாமல் பின்தங்கி இருந்தனர். இப்பொழுது சரியான தலைவன் கிடைக்க தனது தடத்தை கற்பனை வளத்தை அழகாக நேர்த்தியாக புது புது உத்திகளைக் கொண்டு தடம் பதித்து வந்தது.

 

ஊடகவியலை பொருத்தமட்டில் ஆண்களை விட பெண்களுக்கே அங்கே முதல் மதிப்பு.. அதாவது பெண்களின் உணர்வுகளும் உணர்ச்சிகளும் தாம் அவர்களின் முதலீடு!! பெண்கள் எதை விரும்பி பார்க்கிறார்களோ அதன் டிஆர்பி எகிறி செல்லும். அதை தான் கையில் எடுத்தது விவிஆர் சேனல். 

 

பக்தி மார்க்கம், ஜோதிடம் ஒரு‌பக்கம் என்றால்.. மனதை தொடும்.. நெகிழ வைக்கும் தொடர்கள் மறுபக்கம்… ரியால்டி ஷோ, எண்டர்டெயின்மெண்ட் ஷோ என்று ஒரு பக்கம்.. இப்படி கலந்து கட்டி அடித்து மக்களை தங்கள் பக்கம் தூண்டில் போடவில்லை வலை போட்டு பிடித்தனர். கூடவே அவ்வப்போது பரிசுகள்.. சர்ப்ரைஸ் கிஃப்ட் என்று மக்களை எப்போதும் தங்களை பற்றியே நினைக்க வைத்து‌‌.‌.. பேச வைத்து அவர்களை பிஸியாகவே வைத்திருந்தனர் விவிஆர் சேனல்.

 

இப்படியாக.. விநாயக் மற்றும் ஆதித்

இருவரும் மேலும் மேலும் தங்கள் தடத்தை பதிக்க இடைவிடா முயற்சிகளை மேற்கொண்டனர் ஒருபுறம்.

 

மறுபுறம் விநாயக்கை வஞ்சகமாக வீழ்த்த அவனை பற்றி அந்தரங்கங்கள்.. காதல் லீலைகள் என்று ஏக விசாரிப்புகள் நடந்தன துப்பறியும் நிறுவனத்தின் மூலம். எல்லாம் பின்னால் இருந்து ஆராய சொன்னான் ஆதித்.

 

ஆனால் கை சுத்தம் மனசுத்தமாக இருந்தது விநாயக்கு. பெயரை போலவே அவனும் பிரம்மச்சாரியாக இருந்தான் விநாயக்.

 

ஆதித் தான் புலம்பி தள்ளினான் அந்த துப்பறியும் நிறுவனத்தின் ஆளிடம்!! கூடவே அவ்வளவு கோபம்!!

 

“இவ்வளவு பெரிய பணக்காரன்.. மல்டி மில்லினர்.. அதுவும் வெளிநாட்டில் படித்து வந்தவன், அவனுக்கு ஒரு கேர்ள் பிரண்ட் கூடவா இல்லை?? இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கு? நீங்க சரியா விசாரிக்காம இருக்கிங்க. கண்டிப்பா நல்லா விசாரிச்சா ஏதாவது ஒரு க்ளு உங்களுக்கு கிடைத்தே தீரும்!! முதல்ல அது என்னன்னு கண்டுபிடிங்க!! இப்படி வந்து ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்லைன்னு சொல்லவா உங்களுக்கு லட்சம் லட்சமா பணத்தை கொட்டிக் கொடுத்து அவனை பற்றி விசாரிக்கச் சொன்னேன்!! இன்னும் ஒரு வாரத்துக்குள்ள ஏதாவது ஒன்று அவனை பத்தி எனக்கு வந்ததே ஆகும். அது ஹாட்டா இந்த சிட்டி ஃபுல்லா பரவி அவனது டிஆர்பி ரேட்டை குறைத்தே ஆகவேண்டும்!!” என்று கோபமாக கத்தி தீர்த்தான் ஆதித்.

 

ஒருத்தனின் ஒழுக்கம் என்பது அவன் மல்டி மில்லியனராகவோ இல்லை சாமானியனாக இருப்பதிலோ இல்லை!! 

 

அவன் வளர்ந்த வளர்ப்பிலும்.. அவனின் மனதிடத்திலும் உள்ளது!!

 

மேலும் அவனின் அன்னை வளர்ப்பிலும்.. ஆம்!! சாருமதி ஒழுக்கத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பவர்.

அவனின் டீன் ஏஜிலே ஒழுக்கத்தைப் பற்றி முற்றுமுழுதாக போதித்தார். அவன் உள்ளூரில் படித்தால் என்ன.. வெளிநாட்டில் படித்தால் என்ன.. அவனது அன்னையின் போதனைகள் என்றும் அவனை தடுமாறி செல்ல விடவில்லை.

 

கூடவே அந்நாட்டில் பெண்களுக்கு ஏற்பட்ட மான அவமானங்களை எல்லாம் கூறி இதுபோல் எக்காலத்திலும் நீ நடக்கக் கூடாது என்று சத்தியம் வாங்கி இருக்கிறார் சாருமதி! ஆனால் அந்த சத்தியத்தையும் தகர்த்தெறிய போகிறான் தனயன் என்று அப்போது தெரியவில்லை அவர்!!

 

ஆதித் பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தாலும் அவனைச்சுற்றி முழுவதும் அரசியல் கல்மிஷன்கள் மற்றும் தொழில்துறை பார்ட்டிகள் என்று இப்படித்தான்.. அதிலும் அவனின் தந்தை சித்தப்பா எல்லாம் அவ்வளவு ஒழுக்க சீலர்கள் கிடையாது. இடத்திற்கு தகுந்தாற் போல் நடந்து கொள்வார்கள். அதே நேரத்தில் பெரிதாக அயோக்கியர்கள் என்றும் சொல்ல முடியாத நிறைகுறைகள் கொண்ட சாதாரண மனிதர்களே!! 

 

அதைப் பார்த்து வளர்ந்தவனும் அதை தான் பின் பற்றினான்.. தனது வாழ்விலும் தொழிலிலும்.  

 

இப்படியாக அடுத்தவனை எப்படி சாய்க்கலாம் என்று இவன் முற்றுமுழுதாக யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தன் நிறுவனத்தை எப்படி முன்னுக்கு கொண்டுவந்து விடலாம் என்று யோசித்திருந்தால் நல்லதாக இருக்கும். 

 

இன்று பலரும் இப்படித்தான் அடுத்தவனை எப்படி கவிழ்க்கலாம் என்று யோசித்து யோசித்து குழிபறித்து பின்புதானே அதில் விழுந்து விடுகின்றனர்.

 

இப்படி இராப்பகலாக அவன் சிந்தையின் மொத்தத்தையும் தனதாக்கி இருந்தான் நம் நாயகன் விநாயக்!!

 

அப்படி திரிந்தவனுக்கு கையில் லேட்டாக வந்து கிடைத்தது ஒரு வீடியோ. அதுவும் அந்த வீடியோவை பிரியாமணி கொண்டுவந்து பர்சனலாக அவனைப் பார்த்து கொடுத்தாள்.

 

அவ்வளவு சீக்கிரம் கம்பெனியின் முதலாளியை நேரடியாக காண முடியாது. ஆனால் விஷயம் விநாயக் பற்றியது என்று அவள் பிஏ மூலம் வலியுறுத்தி இருக்க.. உடனே அவன் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.

 

அந்த வீடியோவில் ஒரு பெண் அவசர அவசரமாக ஒரு அறையிலிருந்து பயந்து ஓடி ஓடி வெளியே வருவது தெரிந்தது. அதிலும் உடைகள் நசுங்கி.. தலையெல்லாம் கசங்கி.. முகம் தெளிவாக தெரியவில்லை என்றாலும் எதிலிருந்து தப்பித்து வந்தது போலிருந்தது அந்த வீடியோ. பார்த்தவன் நெற்றி சுருக்கி அவளைப் பார்க்க..

 

“சார் இந்த வீடியோ ஹோட்டல் ராயல் பார்க்ல வேலை செய்ற என் பிரண்டு கிட்ட இருந்து கிடைச்சது. இந்த பெண் ஓடிப்போனது டிவி சேனல் ஓனர் விநாயக் தங்கியிருந்த அறையில் இருந்து.. அவர் அறை எண் தெரியுது பாருங்க!!” என்றாள்.

 

“என்ன?? என்ன??” என்று அதிர்ந்து எழுந்து நின்றுவிட்டான் ஆதித்!!

 

பின்னே லட்சம் லட்சமாக பணம் செலவு செய்து அவனைப்பற்றி ஒரு அந்தரங்க விடயம் கிடைத்துவிடாதா என்று இவன் பாடுபட.. அப்படி ஒன்றும் இல்லை அவனது கை அத்துணை சுத்தம் என்று ரிப்போர்ட் வந்திருக்க.. இப்போதென்றால் இப்படி ஒரு வீடியோ!! லட்டாய்!! 

 

விட்டு விடுவானா என்ன??

 

“சூப்பர்!! சூப்பர் பிரியா.. இனி நான் சொல்றதுதான் நீங்க உங்களோட சோசியல் மீடியால போடணும். இந்த சிட்டியே பரபரப்பாக ஒரு செலிப்ரிடிஸ்ஸ் பத்தி பேசிட்டு இருக்கீங்க இல்லையா.. அந்த ஒருத்தரை பற்றி எழுத போறேன் சொல்லுங்க.. முதலில் அவனோட பராக்கிரமங்கள்.. தொழில் திறமைகள் சாணக்கியத்தனம் அனைத்தையும் இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து சுவாரசியமாக கொடுங்க. ஆனாலும் அவருக்கு சின்னதாய் சில பலவீனங்களும் இருக்கு என்று இல்லாத ஒன்றை நாமே திரித்துக் கூறி கூறி மக்கள் மனதில் பதிய செய்து.. கடைசியாக இந்த வீடியோவை வெளியிட வேண்டும். இரண்டு நாளைக்கு ஒருமுறை இந்த பதிவுகள் வர வேண்டும்!! இதற்கென்று தனி பிளாக்கில் செய்யணும் நீங்க. இந்த சேனல் பெயரில் வேண்டாம்!!” என்று அவன் கூற அவள் பயந்து விழிக்க.. 

 

“கவலைப்படாதீங்க!! உங்க பேரு எதுவுமே வராது இந்த விஷயத்தில.. நான் நினைச்சது போல அவனது டிஆர்பி குறைய குறைய உங்களோட இன்கமிங் ஏறிக்கொண்டே இருக்கும். கூடவே பெங்களூரில் இருக்கிற நம் இன்னொரு பிரான்சுக்கு ப்ரோக்ராம் ஹெட்டா உங்களை புரோமோஷனோட ட்ரான்ஸ்பரில் அனுப்பி வைக்கிறேன். ஈஸ் தட் டீல் ஓகே??” என்றான்.

 

வெறும் பிரியா என்ற பெயரில் எத்தனையோ பேர் இருக்க நம்மை கண்டு பிடிக்க முடியாது. கூடவே நிறைய வருமானம் அதோடு கூடிய புரோமோஷன். அதுவுமில்லாமல் பெங்களூர்!! நம் கனவு நகரம்!! இதை விட வேறு என்ன வேண்டும்? என்று அவளும் ஒத்துக் கொண்டாள்.

 

இந்த குறுக்கு வழியில் உயர நினைக்கும் குப்பைகளில் ஒருத்தியாய் அவள் மாற.. அவளுக்கு உதவிக்கு என்று கூறி வர்ணாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டாள்‌. அதில் ஒரு சுயநலமும் இருந்தது. அப்படி மாட்டினாலும் இவள் தான் அந்த பிரியா என்ற தப்பித்துவிடலாம் என்று!!

 

“இது ஒரு முக்கியமான ப்ராஜக்ட் வர்ணா.. ஒரு செலிபிரிட்டி பற்றி எழுத போறேன். ஆனா நாம நடுநிலையானவங்க..சோ சேனல் ஐடியிலிருந்து பேசப்போவதில்லை. தனியா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு. இது நம் எம்டி சார் தான் தனியாக செய்ய சொல்லி இருக்கார்.. என் கூட நீயும்!! இது சக்சஸ் ஆச்சுன்னா.. உனக்கும் இங்கே அடுத்த நிலை விஜே வா ப்ரோமஷன். நானும் என்னோட அடுத்த ஸ்டெப்புக்கு ஏறிடுவேன்!!” என்று கூற இதை விட சந்தோஷம் வேண்டுமா என்ன? 

 

வர்ணாவும் “கண்டிப்பா கா.. இதை நாம செய்து முடிக்கலாம்!” என்று அவளும் பங்கெடுத்துக் கொண்டாள். நடக்கப்போகும் விபரீதம் அறியாமல்..

 

இப்படியாக இவர்கள் ஆரம்பித்த பிரியா பிளாக்கில் தன்னையும் அறியாமல் வர்ணாவும் சேர்ந்து கொள்ள முதல் இரண்டு நாள் ஹாட் டாபிக்காக விநாயக் பேசப்பட்டான்.

 

அவனும் அவனது பிஏவும் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதுபோல் முகநூலிலும் பிளாக்கிலும் தங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்கான சிலபேர் செலிபிரிட்டி பற்றி எழுதுவது சகஜம்தானே!! அதுபோல இது ஒன்றும் தவறு இல்லை என்று!! மேலும் அவனைப் பற்றிய புகழுரைகள் தான் அதிகமாக இருந்தது. 

 

அதில் எழுத வேண்டிய சாரம்சங்கள் எல்லாம் வர்ணா அழகாக எழுதி கொடுக்க.. அதை பதிவேற்றுவது பிரியாமணி. ஒன்றிரண்டு அவனது படங்களையும் சேர்த்து போடுவாள்.

 

இப்படியாக முதல் வாரம் நல்லாவே சென்றது. அடுத்தடுத்த வாரங்களில் அவனது போட்டோக்கள் அதுவும் பார்ட்டிகளில் பெண்களோடு நிற்பது போலவும்.. ரிசார்ட் நீச்சல் குளத்தில் இருப்பது போலவும் போட்டோக்கள் வெளியாகி.. இன்னும் ஹாட் டாபிக்காக மாறியது.

 

அதில் வார்த்தைகளில் அவன் பலவீனங்களை கூறாமல் போட்டோக்கள் மூலம் முதலில் பதிய வைக்க ஆரம்பித்தனர்.

 

அப்புறம் என்ன நம் மக்களுக்குத்தான் இதேபோல் ஒரு விஷயம் கிடைத்தால் நெட்டிசன்கள் என்ற பெயரில் தன் கருத்துக்களை கொட்டி தள்ளிவிடுவார்களே.. 

அப்படித்தான் ஆனது!!

 

 சிலபேர் ‘இதையெல்லாம் இப்பொழுது கலாச்சாரம்!’ என்றார்கள், சிலர் ‘இதில் என்ன தப்பு இருக்கிறது?’ என்றார்கள்.. சிலர் ‘பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் தொழிலதிபர்கள்! நாமெல்லாம் அதை கண்டு கொள்ளக்கூடாது!’ என்று மறைமுகமாக குத்தினார்கள் பலவித பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டு இருந்தது.

 

அடுத்தடுத்து வர்ணா எழுதி கொடுத்ததில் அவ்வப்போது பிரியாமணியாக சில விஷயங்களை அவனின் பலவீனங்கள் என்று சேர்க்க ஆரம்பித்தாள். கூடவே மார்பிங் செய்த போட்டோகளோடு அழகிகள் இடைபற்றி வலம் வந்தான் விநாயக்.

 

அவனைப் பற்றிய பேச்சுக்கள் ஒருபுறம் போய்க் கொண்டிருந்தாலும். அவனது சேனலின் டிஆர்பி எந்தவிதத்திலும் அதை பாதிக்கவே இல்லை. அதைக் கண்டு பொறுமை இழந்த ஆதித் அந்த வீடியோவையும் வெகு சீக்கிரத்தில் வெளியிட முடிவு செய்தான்.

 

ரபின் இந்த விஷயங்களையெல்லாம் விநாயக் காதுக்கு எடுத்துக் கொண்டு சென்று “இந்த பிளாக்கை ரிப்போர்ட் செய்யும்படி நாம் கம்ப்ளைண்ட் கொடுத்தால் என்ன சார்?” என்று பதட்டத்தோடு கேட்டான்.

 

“வேண்டாம் ரபின்!! நம்ம ஹேக்கர்சை வைத்து இது யார் எங்கிருந்து பண்றாங்கன்னு மட்டும் கண்டுபிடிங்க பார்த்துக்கலாம்! அவசரப்பட்டு நாம ப்ளாக் பண்ணனுமம்னா வேற ஒன்னை புதுசா ஆரம்பிச்ச திரும்பவும் இதுபோல ஏதாவது வதந்திகளை தான் செஞ்சுக்கிட்டே இருப்பாங்க! சோ.. மொத்தமா முடிக்கணும்!! அப்பதான் அடுத்து இதே மாதிரி என்னை பத்தி எழுது யோசிப்பாங்க!!” என்றான் கண்கள் கோபத்தில் மின்ன..

 

ஆனால் அன்று இரவே இந்த வீடியோ பதிவிடப்பட்டது. அவனைப் பற்றி இன்னும் மோசமான விஷயங்கள் திரிக்கப்பட்டு கூறியிருந்தது. ‘அதன்படி தன்னிடம் வேலைக்கு என்று வரும் பெண்களை இவன் கட்டாயப்படுத்துவதும்.. ஹோட்டல் ரூமில் உல்லாசமாக சல்லாபம் கொள்வதும்.. தொடர்கதை.. இதற்கு இல்லையா முடிவுரை!’ என்று அவனைப்பற்றி வந்திருந்தது.

 

அதுவும் நடு நிசி நேரத்தில்.. இதுவே காலையில் இருந்தால் கண்டிப்பாக இவர்கள் டீமில் யார் கண்ணிலாவது பட்டிருக்கும். எல்லாரும் அசந்து உறங்கும் இரண்டு மணிக்கு மேல் இந்த வீடியோவும் அதன் செய்திகளும் வெளிவந்திருக்க.. விடியற்காலையில் மொத்தமாக பரவி விட்டிருந்தது.

 

காலையில் தன்னைக் காண வேர்க்க விறுவிறுக்க வந்த நின்றவனைப் பார்த்ததுமே ஏதோ நடந்துள்ளது என்று புரிந்துகொண்ட விநாயக் என்ன என்று கேட்க அவன் அந்த வீடியோவை மட்டும் போட்டு காண்பித்தான்.

 

ஏனெனில் இன்னும் அதே ஹோட்டலில் அதே சூட் அறையில் தான் தங்கி இருக்கிறான் விநாயக்!!

 

“தூக்கு!! தூக்கு ரபின்!! ஆளை தூக்கு மொத்தமா!! இந்த வீடியோ எவ்வளவு பெரியதாக பரவி இருக்கும்.‌ எல்லத்தையும் ஹேக்கர்ஸ் மூலம் டெலீட் பண்ண சொல்லு!! இதை போட்டவன் என் கைக்கு வந்தே ஆகணும்!!” என்று அவன் ரௌத்திரமாக கட்டளையிட..

 

இது எதையும் அறியாத வர்ணா அன்று சந்தோஷமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தாள். ஆம் இந்த வீடியோவை அப்லோட் செய்த மறுநாளே பிரியாமணி பெங்களூருக்கு மாற்றப்படுவாள் என்று உணர்ந்து, முதல் நாளே அவளிடமும் “நீ நாளை முதல் விஜே ஒரு ரியாலிட்டி ஷோவை செய்யலாம்” என்று அதற்கான உத்தரவு கடிதத்தை கொடுத்துவிட்டு சென்றாள்.

 

அந்த பிளாக் வர்ணாவின் அடியிலிருந்து தான் கிரியேட் செய்யப்பட்டிருந்தது. கூடவே சேனலில் இவளுக்கு கொடுக்கப்பட்ட லேப்டாப்பில் மூலமாக தான் அனைத்தையும் பதிவேற்றம் செய்திருந்தாள் ப்ரியாமணி. அலுவலகத்தில் கொடுத்தது அலுவலகத்துக்காக உபயோகப் படுத்துகிறார்கள் என்று வர்ணாவும் இருந்து விட.. அவள் அறியாமல் அவளே ஒரு சூழலில் சிக்கிக் கொள்ள நேரிட்டது.

 

காலையில் சந்தோசமாக “ரியாலிட்டி ஷோ செய்ய போகப்போகிறேன்!!” என்று கூறி ஹாஸ்டலை அதகளப்படுத்தி தான் கிளம்பி இருந்தாள்.

 

வார்டன் முதல் அங்கு வேலை செய்யும் பெண்கள் வரை “இன்னைக்கு ஷோ மறக்காம பார்க்கணும்!! பார்க்கணும்!!” என்று அத்தனை தரம் சொல்லி இருந்தாள் வர்ணா!! அவர்களும் சந்தோசத்தோடு சரி என்க.. ஆனால் மாலையே கடத்தப்பட்டு இருந்தாள் ப்ரியவர்ணா!!

 

கியூபிட்டோ “அப்பாடி இரண்டு‌ துருவத்தையும் ஒன்றாக நெருங்க செய்தாகி விட்டது!!” என்ற சந்தோசத்தில் இருந்தது.

 

வானவில் வளரும்..

6 thoughts on “வானவில்லே எனை வளைத்ததேனடி.. 4”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top