ATM Tamil Romantic Novels

சண்டியரே… சண்டியரே.. 5

சண்டியரே 5

 

 

“கெட் ரெடி டி பொண்டாட்டி..!” அவள் கன்னத்தை தட்டி சென்ற ஆதிரனை தான் அதிர்ந்து விரிந்த விழிகளோடு பார்த்திருந்தாள் தங்கமயில்.

 

இதே வார்த்தைகளை சில வருடங்களுக்கு முன் கேட்ட நாளும் ஆளும் நினைவில் வர.. தலையை உலுக்கிக் கொண்டாள் தங்கமயில்.

 

இப்படி எல்லாம் பேசி செல்பவனே கிடையாது ஆதிரன். ‘அதுவும் தன்னிடம் இவ்வளவு கோபமாகவும் பேச மாட்டாரே மாமா.. அப்படி மாமனை கோபப்படும் அளவு இந்த அப்பாரு என்ன பேசி இருப்பாரு?” என்று ஒரே யோசனை அவளுக்கு. 

 

இவள் தனியாக நிற்பதை பார்த்து பத்தடி தூரத்தில் நின்றிருந்த வேம்பு மூச்சிரைக்க ஓடிவந்து “என்னடி ஆச்சு? ஏன் இப்படி பேய் அடிச்ச மாதிரி நிக்கிற..?” என்றதும் 

 

“பேய் அடிக்கல டி.! என் மாமன் தேன் அடிச்சிடுச்சு..!” என்றாள் விஷமமாக..

 

“என்னது உங்க மாமா அடிச்சிட்டாரா? இதை என்னை நம்ப சொல்றியா போடி போ.. அவரு அப்படி அப்படியெல்லாம் பொம்பள புள்ள கிட்ட கைநீட்ட மாட்டார்” என்று நாணி கூனி நின்றாள் வேம்பு.

 

“அடியே நெசமா தான் டி. வார்த்தையால அடிச்சிட்டு போறாரு டி.. என்ன கோபம்னு தெரியல எங்க அப்பாரு என்ன கோபப்படுத்தினாருனு தெரியல. எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தான்னு எல்லா கோபத்தையும் என் மேல காட்டிட்டு போகுது இந்த மாமா” என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு மயில பேச வேம்புக்கு ஒரே குஷி. 

 

“அப்போ கல்யாணம் ஸ்டாப்பா..?? சூப்பர்.. சூப்பர்..!” என்று அவள் குதிக்க கையில் வைத்திருந்த பையால் அவளை மொத்திய மயில் “பிச்சிருவேன் பிச்சி.. நாளைக்கு கல்யாணம் இன்னிக்கு நான் பார்லர் போறேன். இப்ப வந்து அபசகுணம் மாதிரி கல்யாணம் நடக்காதானு கேக்குற? நானே முதன் முதல் பார்லருக்கு போறேன் போடி..!” என்று சிடு சிடுத்தாள் தங்கமயில். 

 

“இல்ல உங்க மாமா கோவமா போச்சுன்னு சொன்னியா அதான் கல்யாணம் நிறுத்திட்டாரோன்னு நெனச்சு..” என்று தங்கமயில் அடித்ததில் புஜம் வலிக்க அதை தேய்த்துக் கொண்டே பேசினாள் வேம்பு. 

 

“லூசு.. அது கோபமே வேற தெரியுமா? போகும்போது என்ன சொல்லிட்டு போச்சு தெரியுமா?” என்று கேட்டாள்.

 

“என்ன சொன்னாங்க? என்ன சொன்னாங்க?” என்று ஆர்வமாக வலியை மறந்து கேட்டாள் வேம்பு. 

 

“உனக்கு ஏண்டி இவ்ளோ ஆர்வம்? உன்னை எல்லாம்..” என்று தலையில் அடித்துக் கொண்ட மயிலு “கெட் ரெடி பொண்டாட்டி நாளைக்கு கல்யாணத்துக்குனு சொல்லிட்டு போறாரு டி” என்றாள். வேம்பு முகமோ விழுந்து போனது.

 

“என்னது??!! கோவமா இருக்காருன்னு சொன்ன.. அப்புறம் பொண்டாட்டின்னு சொல்றாருனு சொல்ற? ஆக்சுவலா கோவமா இருந்தா எல்லாரும் கல்யாணத்த தானடி நிறுத்துவாங்க.. அதான உலக வழக்கம்..! உங்க மாமா என்னடி புதுசா சொல்லிட்டு போறாரு?” என்று மேவாயில் கை வைத்து யோசித்தாள் வேம்பு. 

 

“ஒழுங்கு மரியாதையா வண்டியில ஏறு.. வீட்டுக்கு போய் தான் என்ன ஆச்சுன்னு எங்க அப்பார கேட்கணும். அதுக்கு முன்னாடி பார்லர் போகணும். இன்னொரு முறை இந்த மாதிரி பார்லர் போற வாய்ப்பு எல்லாம் நமக்கு கிடைக்குமோ கிடைக்காதோ?” என்றவள்,

 

“கப்பு முக்கியம்.. அது பிகிலுக்கு.. பார்லர் முக்கியம்.. இது மயிலுக்கு..!” என்று வேகமாக வண்டியை விரட்டினாள் திருவாரூரை நோக்கி. 

 

பொறுமையாக ப்ளீச்சிங் பேசியல் த்ரெட்டிங் மெனிக்குர் பெட்டிக்கூர் இன்னும் என்னென்ன இருக்கிறதோ அனைத்தையும் முகம் கை காலுக்கெல்லாம் செய்து கொண்டே வீடு திரும்பினாள்.

 

கூட வந்ததற்காக வேம்புவிடம் “மட்டன் பிரியாணி வாங்கி தர வாடி?” என்று மயிலு கேட்க..

 

“பிரியாணி எல்லாம் எப்ப வேணாலும் சாப்பிடலாம். ஆனா லைஃப்ல ஒன் டைம் தான் வாய்ப்பு கிடைக்கும். அதை நான் தவற விட மாட்டேன். அதனால் நானும் பேசியலே பண்ணிக்கிறேன். உன் காசு நீயே செலவு செய்” என்றவளை புரியாமல் பார்த்தாள் மயில்.

 

“சப்போஸ் நாளைக்கு உங்க அப்பா பிரச்சனை பண்ணி கல்யாணம் நின்னு போச்சுன்னு வச்சுக்க.. ஒரு பேச்சுக்கு தான் முறைக்காதடி.. திடீர் பொண்ணை தேடுவாங்க தானே உங்க மாமனுக்கு.. நம்மளும் பக்கத்துல பளிச்சுன்னு நின்னா ஒரு வேளை உன் மாமனுக்கு சரிபாதியாக உனக்கு மாமியாக வர வாய்ப்பு எனக்கு உண்டு தானே?” என்றவளை வாய் பிளந்து பார்த்தாள் மயில்.

 

“அடிப்பாவி..! கல்யாணம் நடக்காதுன்னு முடிவே பண்ணிட்டியா டி?? நீ எல்லாம் திருந்தவே மாட்டடி பக்கி” என்ற படியே இருவரும் வேலை முடித்து மாலை போல வீட்டுக்கு வந்தனர். 

 

காலையில் இவள் புறப்படும் போது இருந்த சுறுசுறுப்பு வீட்டில் இல்லை வீடு ஏதோ ஒரே அமைதியாக இருக்க “என்னமா.. வேலை செஞ்சிட்டு இருந்த ஆட்கள் எல்லாம் எங்க?” என்றபடி வந்து நின்றாள் அன்னையிடம்.. 

 

அவர் மூக்கு சிந்து கொண்டே “எல்லாம் உங்க அப்பன் கிட்ட போய் கேளு. புள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை எடுத்துக் கொடுக்க துப்பில்லை. இதுல பேச்சு மட்டும் பாரு எப்படி இருக்கு?” என்றவரிடம் அப்பா எங்கே என்று கேட்டு தேடி வந்தாள் மயில். அவரோ தீவிரமாக யாரிடமோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். 

 

“அம்மா இந்த டைலர் என் டிரஸ் இன்னும் கொடுக்கல மா.. நான் அப்பவே சொன்னேன் ரெடிமேட்ல எடுத்துக்கிறேன்னு. நீ தான் தைக்க கொடுடானு சொன்ன.. இப்ப பாரு சட்டை இன்னும் ரெடி ஆகலையாம்” என்று வந்து புகார் படித்தான் மயூரன். 

 

“போடா பொசகெட்ட பயலே..! கல்யாணம் நடக்கிறதே இங்கே கேள்வி குறியா இருக்கு. இதுல உனக்கு புது துணி கேக்குதா?” என்று அருகில் இருந்த முறத்தை எடுத்து மகன் மீது வீச..

 

மயூரனோ “முறத்தால புலிய அடிச்சு தான் கேள்வி பட்டு இருக்கேன் புறம் முதுகு காட்டி ஓடுற மகன நீ தான் அடிக்கிற மா. தப்புமா இது ரொம்ப தப்புமா!” என்றபடி ஓடினான். 

 

மகள் போய் நின்றதும் அவளை கை காட்டி உள்ளே போக சொன்னார் தியாகேசன். எதுவுமே மகளிடம் சொல்லவில்லை. மனைவியிடமும் பேசவில்லை. ஃபோனும் கையுமாக அலைந்தார். பிறகு சிறிது நேரம் அமருபவர், மீண்டும் கையும் ஃபோனுமாகவே நின்று கொண்டிருக்க.. ஒரு மணி நேரம் பார்த்த மயிலுக்கோ வெறுத்து போனது தந்தையின் நடவடிக்கையில்.. “எப்படியோ போங்க.!” என்றவள் கமலாவை பிடித்தாள். 

 

“மா என்ன நடந்ததுன்னு சொல்லு? நீங்க எதுவும் பண்ணாம மாமா என்கிட்ட வந்து கோவமா பேச வாய்ப்பே இல்லை?”என்று கேட்டு சத்தம் போட்டாள்.

 

அவர் திடுக்கிட்டு “என்ன தம்பி உன்கிட்ட வந்து பேசுச்சா? அதுவும் கோபமா வா? என்னடி சொல்ற?” என்று பதட்டத்தோடு கேட்டார். 

 

‘ஆதிரன் இப்படி சட்டென்று கோபப்படும் ரகம் அல்ல. கோபம் வந்தால் கூட அதை நிதானமாக கையாளுபவன். அவனே இப்படி கோபப்பட்டு பேசி இருக்கிறான் என்றால் எந்த அளவு மனதால் பாதிக்கப்பட்டிருப்பான்.. எல்லாம் புருஷனாக வந்து வாய்ச்ச இந்த மனுஷனால்..’ என்று வாய்க்குள் திட்டிக் கொண்டிருக்க.. மகளோ அவர் கையை பிடித்து “எம்மோவ்.. இப்ப நீ சொல்ல போறியா இல்லையா மா?” என்று உலுக்கினாள்.

 

“அதை ஏன் டி கேக்குற ஒரு வாரத்துக்கு முன்ன உங்க மாமன் ஊருக்கு போறேன்னு போனான் இல்ல.. வரும்போது கைல ஒரு புள்ளையோட வந்து இருக்கான்” என்றதும் “என்னது?” என்று இவள் அதிர்ச்சியாக..

 

“முழுசா கேளடி.. நீயும் உங்க அப்பன மாதிரி அரைகுறையா கேட்டு அதிர்ச்சியாகி வாய பொளக்காத..” என்று அவள் கன்னத்தில் குத்தியவர் “அது ஆரூரனோட குழந்தையாம்..!” என்றதும் முன்னை விட இப்பொழுது தான் அவளுக்கு அதிர்ச்சி அதிகமானது. 

 

*என்னமா சொல்ற? ஆரூ மாமா தான் ஊரை விட்டு போயி ரொம்ப வருஷம் ஆச்சே.. அவர் புள்ளையா? அது எப்படி ஆதி மாமா கிட்ட வந்துச்சு? எதையும் முழுசா சொல்ல மாட்டியா மா நீ? இப்படி பிட்டு பிட்டா சொன்னா லிட்டில் ஹார்ட்டு தாங்குமா? பாரு நீ பேச பேச அதிர்ச்சியாகி அதிர்ச்சியாகி பேசியல் பண்ணிட்டு வந்த மூஞ்சே மாறி போச்சு” என்று அன்னையிடம் எகிறினாள்.

 

“இல்லனா மட்டும் அங்க தேனும் பாலும் வடியுதாக்கும்” என்று மகளை பேசியவர் பின் மென் குரலில் “எனக்கென்னமோ உன் ரெண்டு மாமன்களும் தொடர்புல தான் இருந்திருப்பானுங்கன்னு தோணுது. அப்பப்போ இவனும் வெளியூர் போவான்.. எஸ்கேப் ஆகுவான்.. இப்ப என்னன்னா தம்பி புள்ளய தூக்கிட்டு வந்து இருக்கான். அப்போ இதுக்கு முன்னாடி தெரியாமலா இருந்திருக்கும்? இந்த ஆதி பய எதையோ மறைக்கிறான்?” என்றார் கமலா யோசனையாக…

 

“அம்மா இப்ப வரைக்கும் நீ எதையும் தெளிவா சொல்லவே இல்லமா முதல்ல என்ன நடந்தது எல்லாத்தையும் சொல்லு?” என்றதும் இவர்கள் சென்றது.. குழந்தையை பார்த்தது.. அது தன்மகள் என்று ஆதிரன் கூறியது.. பின்பு ஆரூரன் பற்றியும் அவன் மனைவி பற்றி கூறியது.. அவள் இறந்தது குழந்தையை அதிரனிடம் ஒப்படைத்துவிட்டு ஆருரன் எங்கோ சென்றது.. என்று அனைத்தையும் கூறி முடித்து, தியாகேசனுக்கும் ஆதிரனுக்கும் நடந்த பேச்சு வார்த்தையும் கூறி ஒரு பெருமூச்சு விட்டார் கமலாம்பிகை. 

 

“ஏம்மா இதுல அப்பாரு கோபப்பட என்ன இருக்கு? அது ஆரூ மாமா பொண்ணு தானே.. நான் என்னமோ இவர் குழந்தைக்கு சித்தியா போற மாதிரி ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு வந்திருக்கிறாரு அப்பாரு?” என்று கேட்டாள் மகள்.

 

“நல்லா சொல்லுடி..! இத நின் சொன்னா கேக்க மாட்டேங்குற அந்த மனுஷன்..! நீ அந்த வீட்டுக்கு போனா நீ தான் அந்த குழந்தையை பார்த்துக்கணுமாம். அப்போ உன் தலையில தான் எல்லா வேலையும் விடியுமாம். என்னமோ இந்த வீட்ல உங்க அப்பா என்னைய சொகுசா மகாராணி மாதிரி வச்சு வாழுற மாதிரி.. என் பொறந்த வீட்ட பத்தி பேசுறாரு” என்று அதுதான் சாக்கு என்று தியாகேசனை மட்டுமல்ல அவர் குடும்பத்தையே கிழித்து தோரணம் கட்டிக் கொண்டிருந்தார் கமலாம்பிகை. 

 

மயிலு காதை பொத்திக்கொண்டு “மா.. அப்பாரு பாவம்.. அப்பாரு பாவம்..” என்றவன் “ஐயோ எம்மோவ்.. தாத்தா பாவம் தாத்தா என்ன பண்ணாரு.. இவர பெத்ததை தவிர அவரு ஒன்னும் பண்ணலையே?” என்று அவள் முடிக்கு முன் அடுத்தது கமலாம்பிகை மாமியாரை கழுவி ஊற்ற..

 

“ஐயோ அப்பத்தா பாவம் மா.. அது ஒரு அப்புராணியா இருந்து செத்துப்போச்சு. ஏன்‌மா இழுக்குற?” என்று காது பொத்திக்கொண்டு ஒரு கண்ணை மூடி ஒரு கண்ணால் அம்மாவை பார்க்க அவர் வாயோ ஓயவே இல்லை.

 

“எங்க அப்பாரு குடும்பம் மொத்தமும் டேமேஜ் போ..!” என்றவள் இப்ப கல்யாணம் நடக்குமா நடக்காதா என்று யோசனையோடு தன் அறைக்குள் சென்றாள், “அப்போ மொத்த பேஸியலும் வேஸ்ட்டா?” என்ற யோசித்தப்படி.

 

வயல் வேலையினை முடித்து மாலை போல வீட்டுக்கு வந்த ஆதிரனை பிடித்துக் கொண்டார் விஜயராகவன். என்ன என்றவனிடம் “நீ தான் சொல்லணும் குரு.. என்ன யா நாளைக்கு விடிஞ்சா கல்யாணம்.. சொந்த பந்தம் எல்லாருக்கும் சொல்லியாச்சு.. ஊர் முழுக்க பத்திரிக்கை வைச்சாச்சு.. இப்படி உன் அத்தாங்காரன் பேசிட்டு போயிருக்காரு.. இப்ப கல்யாணம் நடக்குமா என்னன்னு தெரியலையே யா? நாளைக்கு ஊரு சொந்தங்களுக்கு என்ன பதில் யா சொல்றது?” என்று வருத்தத்தோடு கேட்டார் விஜயராகவன். 

 

திரும்பி தன் வீட்டை பார்த்தான். கல்யாண கலை கட்டியிருந்தது. வாசலில் பந்தல் போட்டு தோரணம் முதல் லைட் செட்டிங் வரை அனைத்தையும் சொன்னது கல்யாணத்தை..!! 

 

“புள்ள கல்யாணம் நடக்கலன்னு பீல் பண்றீங்களா இல்ல நாளைக்கு வர சொந்தக்காரங்களை ஃபேஸ் பண்ணனும்னு ஃபீல் பண்றீங்களா?” என்று ஆதிரன் கேட்டு சிரிக்க..

 

“என்ன குரு.. விளையாடுற நேரமா இது?” என்று சலித்துக் கொண்டார். 

 

“நீங்க ஏன் கவலைப்படுறீங்க நாளைக்கு கண்டிப்பா கல்யாணம் நடக்கும். அப்படியே உங்க மாப்பிள்ளை பொண்ண குடுக்கலனாலும் என் அக்கா மகளை தூக்கிட்டு வந்தாதவது தாலி கட்டுவேன் சரியா?” என்றான் அதுதான் உண்மையிலேயே நடக்கப் போவது என்று தெரியாமல்..

 

அன்று இரவு தங்கமயில் வீடு அவ்வளவு அமைதியாக இருந்தது. இது புயலுக்கு பின்வரும் அமைதியா இல்லை முன்வரும் அமைதியா என்று புரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தனர்.

 

“என்ன எழவு விழந்து போச்சுன்னு இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு உட்கார்ந்து இருக்க.. என் பொண்ணு தப்பிச்சிட்டானு நான் சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன். இவ என்னவோ மூஞ்ச தூக்கி வச்சுட்டு இருக்கா.. அப்படி ஒன்னும் உங்க அப்பாரு வீட்டுல தேனும் பாலும் வழியில.. பொன்னும் மணியும் கொட்டி கிடக்கல.. அங்க போனா என் பொண்ணு வேலைக்காரியா தான் இருக்கணும். போ போ நேரம் ஆயிட்டு மனுசனுக்கு பசிக்குது வெளியில போயிட்டு வந்து இருக்கான்னு தெரிய வேணாம். போய் சாப்பாடு எடுத்து வை..” என்று அதட்டினார் கமலாவை பார்த்து தியாகேசன். 

 

“ஓ உங்க பவுசுக்கு நீங்க உங்க வீட்டுக்கு வந்த மருமகள உள்ளங்கையில வச்சு தாங்கனிங்களோ? அதே வேலைக்காரியா தானே வச்சிருக்கீங்க.. இத்தனை வருஷமும் ஆக்கி போட்டுகிட்டு தானே இருக்கேன். கல்யாணம் பண்ணி குடுக்குற வயசுல பொம்பள புள்ளைய இருக்கா.. என்னைக்காவது உங்க பொண்ணு இந்த வீட்டில் ஒரு வேலை பார்த்து இருக்காளா? ஒரு வித்து பார்த்து இருக்காளா? இல்ல சாப்பிட தட்ட தான் கழுவி இருக்காளா? எல்லா வேலையும் என் தலையில தானே..!” என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டார். 

 

“வீட்டு வேலை பாக்குறதெல்லாம் ஒரு வேலையா? குடும்பத்து பொம்பள பேசுற பேச்சா இது?” என்ற தியாகேசன் வாயை விட..

 

“வீட்டு வேல மட்டும்தான் நான் பார்த்தேனா? வாக்கப்பட்டு வந்த நாள் முதலா கொல்ல வேலையிலிருந்து.. நடவாளுங்க வரலைன்னா அந்த வய வேலையும் சேர்த்து நான் தானே உங்க வயல்ல வந்து செஞ்சு இருக்கேன். நீங்க என்னமோ பகுமானமா என்னை பார்த்த மாதிரி என் குடும்பத்தை பத்தி பேசுறீங்க? என்ன தெரியும் என் குடும்பத்தை பத்தி உங்களுக்கு?” என்று ஆரம்பித்து விட்டார் கமலாம்பிகை. 

 

அம்மா பேச பேச தான் ‘அவர் இந்த வீட்டில் இத்தனை வருடங்களாக இத்தனை வேலை பார்த்திருப்பார் நாம் என்ன செய்தோம்?’ என்று யோசனை செய்தது தங்க மயிலின் மூளை.

 

என்னதான் வாய் அடித்தாலும் எல்லா வேலையும் தெரிந்திருந்தாலும் கமலாவாக திட்டும் வரை அவளாக எந்த வேலையும் செய்தது கிடையாது. ஒரு டம்ளரை கூட இருந்த இடம் மாற்றி வைத்தது கிடையாது.

 

அதுவும் இப்பொழுது சில வருடங்களாக கைவினைப் பொருட்கள் செய்வதால் ‘சமையல்கட்டா? அது எந்த பக்கம் இருக்கிறது? கோழி குழம்பு வாசனை வருதே.. அப்போ இந்த பக்கம் தான் இருக்கும்’ என்று தான் சொல்லுவாள் தங்கமயில்.

 

யாருக்கு தான் தன் அம்மா வீட்டை பற்றி பேசினால் பொறுத்துக் கொள்ள முடியும்? பொறுமை பறக்கும் அதோடு சேர்ந்து பாத்திரங்களும் பறக்கும்…

 

ஏன் டா வாய் கொடுத்தோம் என்று ஆகிவிட்டது தியாகேசனுக்கு. ஆனாலும் மனுஷர் கெத்து விடாமல் “சாப்பாடு எடுத்து வைக்க முடியுமா முடியாதா? என்று கோபமாக கேட்க,

 

“யார் சமைச்சா? வீட்டுல சமைக்கல. அதான் வெளியில க்ளப்புக்கடை அத்தன கடை இருக்குல்ல எதுலயாவது போய் புரோட்டா வாங்கி தின்னுங்க. போங்க..” என்று முகத்தை திருப்பி திரும்பவும் தூணுக்கு அண்டை கொடுத்து அமர்ந்துவிட்டார் கமலா. 

 

அருகில் இருந்த பாத்திரத்தை உதைத்து தள்ளிவிட்டு வெளியே சென்ற தியாகேசன், திரும்ப வரும்போது பார்சலும் வாங்கிட்டு வந்திருந்தார்.

 

என்ன என்று கேட்ட மகனிடம் “உங்க ரெண்டு பேருக்கும் வாங்கிட்டு வந்து இருக்கேன். நீங்க சாப்பிடுங்க.. உங்க அம்மா தான் பெரிய ராசா வீட்டு குடும்பத்து பொண்ணாச்சே, அவளே செஞ்சு சாப்பிட்டுக்கட்டும்” என்றதும் பிள்ளைகள் இருவரும் இப்பொழுது உணவை தொட தயங்கினர். 

 

“அம்மாவை விட்டு எப்படி சாப்பிடுவது?” என்று மயூரன் கேட்கவே அவனை கன்னத்தில் ஓங்கி அறை விட்டார் தியாகேசன். 

 

பிள்ளைகளை அடித்ததில்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அவ்வப்போது கோபத்தில் கை நீட்டுவதுதான்.. ஆனால் இன்று தேவையே இல்லாமல் இவரின் இந்த கோபம் கமலாம்பிகைக்கு மனதில் ஒரு திடுக்கிடலை கொடுத்தது. 

 

அதாவது தியாகேசன் ஏதேனும் தவறு செய்தால் அந்த தவறை மறைக்க அடுத்தவர்கள் மீது கோபத்தை காட்டுவது வழக்கம். இத்தனை வருட தாம்பத்தியத்தில் அவரை தெரியாத என்ன கமலாவிற்கு??

 

மயூரன் விக்கித்து நிற்க.. மயில் சென்று தம்பியை அணைத்துக்கொள்ள அவனும் அக்கா என்று அவளோடு ஒண்டிக் கொண்டான். 

 

“சொல்றேன்ல சாப்பிடுனு.. என்ன சாப்பிட மாட்டீங்களா?” என்று மீண்டும் தியாகேசன் கத்த..

 

மெல்ல கணவனை நோக்கி கூர்பார்வோடு நடந்து சென்ற கமலாம்பிகை “என்ன தப்பு செஞ்சிட்டு வந்தீங்க? இப்போ யார் குடியை கெடுக்க போறீங்க? உண்மய சொல்லுங்க?” என்று கேட்டார்.

 

“ஏய்.. என்ன.. உளறுற.. ஏலேய் உங்க அம்மாளுக்கு பைத்தியம் புடிச்சு போச்சு டா.. கூட்டுட்டு போ உள்ள” என்று கத்தினார்.

 

“உங்களை எனக்கு தெரியாத? இப்படி தேவையில்லாம நீங்க கோவப்படுறீங்கனா நீங்க ஏதோ செஞ்சுட்டு வந்து இருக்கீங்க.. இல்ல செய்யப் போறீங்கன்னு அர்த்தம்..! சொல்ல போறீங்களா இல்லையா?” என்று அவர் சட்டையை பற்றி உலுக்கி கேட்க ஒரே தள்ளாக தள்ளிவிட்டார் மனைவியை தியாகேசன்..

 

“அம்மா..!!” என்ற பிள்ளைகள் இருவரும் பதறி ஓடி வந்து கமலம்பிகையை தாங்கிக் கொள்ள..

 

“என்ன பண்ணாங்க.. நான் ஒன்னும் பண்ணல ஏதாவது ஓரண்ட இழுக்காம போய் வேலையை பாரு கமலா.. சாப்பாடு இருக்கு. சாப்பிட்டா சாப்பிடுங்க இல்லை பட்டினியா கிடங்க” என்றவர் மீண்டும் வாசலுக்கு போக எட்டி தன் வலிமையை கொண்டு அவர் கையை பிடித்து தடுத்து நிறுத்தினார் கமலா.

 

“இல்லை நீங்க ஏதோ பண்ணிட்டு வந்து இருக்கீங்க.. சொல்ல போறீங்களா இல்லையா?” என்று அவர் தள்ளி விட்டதில் வலது கை முட்டியில் நல்ல அடி.! ஆனாலும் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அவரிடம் விவாதம் செய்து கொண்டிருந்தார் கமலா. 

 

“ஆமா செஞ்சிட்டு வந்துருக்கேன் தான்..! இப்ப என்ன? என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு வந்து இருக்கேன். நாளைக்கு குறிச்ச அதே நேரத்துல.. அதே கோவில்ல.. என் பொண்ணுக்கும் என் பங்காளி மச்சான் சம்பந்தன் மகன் லோகநாதனுக்கும் கல்யாணம்..!” என்று அதிராமல் அணுகுண்டை போட்டார் தியாகேசன். 

 

“நீங்க என்ன சண்டை போட்டாலும் பிரச்சனை பண்ணாலும்.. நாளைக்கு லோகநாதனோட தான் என் பொண்ணுக்கு கல்யாணம்.!” என்றவர் மூவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு சென்று விட்டார்.

 

நாளைக்கு மயில் திருமணம் யாரோடு?

1 thought on “சண்டியரே… சண்டியரே.. 5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top