தீ -1
விண்ணில் விரவித் தெளித்த இருள் மேகத்திரளிடையே வெட்டும் மின்னல் கீற்றுக்கு இணையாக…
மண்ணை துண்டாகப் பிளந்து கொண்டு வரும் எரிமலை பிழம்பை போல் தார் சாலையில் , சக்கரங்களில் தீப்பொறியை பறக்க விட்டப்படி, மித மிஞ்சிய அசுர வேகத்தில் பறந்து வந்தன அந்த பந்தய கார்கள்…
சீற்றம் மிகுந்த அந்த அரபிக்கடலையே மிஞ்சும் வகையில் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு தரையில் மோதி பார்த்தன அந்த எந்திர குதிரைகள்…விலைகளே விண்ணை முட்டும் எனில், அதை பயன்படுத்துபவர்கள் மட்டும் என்ன சாதாரண மனிதர்களாகவா இருக்க போகின்றனர்…
எல்லாம் செல்வம் கொழித்த பெரும் பணக்காரர்களின் வீட்டு வாரிசுகள் தான்…
வாரம் முழுக்க அடக்கி வைத்த அத்தனையும் தடுப்பாரின்றி கட்டவிழ்த்து விடப்படும் ஒரே இடம் வீக் எண்டு பார்ட்டி…
“டாடி மம்மி வீட்டில் இல்ல தட போட யாருமில்ல…!!”என இவர்கள் அடிக்கும் கொட்டத்திற்கு அளவே இல்லை… முன் அந்தி மாலையில் தொடங்கி மறுநாள் விடியும் மட்டும் நடைப்பெறும்… இது போன்ற அந்தரங்க பார்ட்டிகளில் ‘எதற்கும்’ பஞ்சம் இருக்காது…கப்பல் கரை தட்டும் வரை போதையிலே மிதப்பர்… தங்கள் இச்சைகளை தீர்த்து கொள்ளவே பெரும்பாலானோர் இது போன்ற அந்தரங்க பார்ட்டிகளையே தேர்ந்தெடுக்கின்றனர்… ரகசிய காப்பு மிகவும் முக்கியம் அமைச்சரே… பின்னே! இவர்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறினால் சரியப் போவது இவர்களைப் பெற்றவர்களின் செல்வாக்கும் ஷேர் மார்க்கெட்டும் தானே…
இன்றும் அதே போன்ற ஒரு பார்ட்டியில் மித மிஞ்சிய போதையில் இவர்களுக்குள் ஒரு பந்தயம், யார் பலவான் என்று…??
காசு பணம் என்றால் கவலை இல்லை, வெற்றி (வெட்டி) கெளரவம் ஆச்சே… தலைவன் வேறு மகுடத்தின் உச்சமல்லவா…
இல்லாதவனுக்கு வயிற்றுபாடு மட்டும் தான் இருப்பவனுக்கோ எல்லாமே பாடு தான் என்பது போல…
வெற்றி வேட்கையில் வெறி கொண்டு ஓடின சாலைகளில்… எந்திர புரவிகளின் சத்தத்தில் அந்த அலைகடலே அரண்டு அடங்கி போயின… பேரமைதியை கிழித்து கொண்டு வ்ரூஊம்… வ்ரூஊஊஊஊம்… இதயத்தை பதற வைக்கும் இரைச்சல் சத்தமும்
கண்ணை குருடாக்கும் வெளிச்சத்துடனும் காதை செவிடாக்கும் ஹார்ன் சத்தத்துடனும் பிரதான வீதியில் ஓர் பல பரீட்சை…
நேரமோ பன்னிரண்டு மணியை தாண்டி செல்ல உடன் வந்த எல்லா போட்டியாளர்களையும் கடந்து நான்கு சொகுசுகார்கள் மட்டும் இலக்கை நோக்கி அதி வேகத்தில் எல்லையை நெருங்கின…
ஒன்றை ஒன்று அடித்து நொறுக்கும் வேகத்துடன் சீறிப்பாய்ந்து வந்தது…கரணம் தப்பினால் மரணம் என்கிற பயமே இல்லாத காளையர்களோ வெற்றியை மட்டுமே இலக்காக்கி வந்து கொண்டு இருந்தனர்…
அதில் அனைத்து கார்களையும் துச்சமென என வீழ்த்தித் தள்ளிவிட்டு தன் அதீதவேகத்தில் முந்திக்கொண்டு வந்தது ரேஞ்ச்ரோவர் கார்.. அதுவே வெற்றி கனியையும் பறித்தது…
அவன் தான், அந்த உயர் ரக வாகனத்தை ஓட்டி வந்தவன் தான் வெற்றி பெறுவான் என எதிர்பார்த்தவர்கள் போல… யாஹூஹே!!! ஹே!! ராக் ஸ்டார் ராக் ஸ்டார் என ஆர்ப்பரித்த வண்ணம் வெற்றி வேந்தனை, தலையில் தூக்கி வைத்த வண்ணம் ஆடினர்….
அவன் வெற்றியை தங்களது விலையுயர்ந்த சாம்பியன் பாட்டில்களை பொங்க விட்டு கொட்டம் அடித்தனர், அந்த மேல் தட்டு மாந்தர்கள்… நுரை ததும்பிய அந்த சொர்க்க பானத்தை, ரசனை அற்றவனாய் ஒரே வாயில் சரித்து குடித்து விட்டு கண்கள் சிவக்க நின்றவனை அழகிகள் சூழ்ந்து கொள்ள…ஒரே அஜால் குஜால் தான்…
ஆனால் வெற்றி பெற்ற கோமகனுக்கோ அதில் சிறிய ஆர்வம் கூட இல்லாமல் உடல் எஃகு போல் விரைக்க உர்ர் என்றே நின்று இருந்தான்…
வாழ்க்கையில் நினைத்ததை நடத்தியே பழக்கப் பட்டவனுக்கு இந்த வெற்றி எல்லாம் ஒன்றுமே இல்லை…என்பது போல் இறுமாந்து நிற்க…
அதற்கு தூபம் போடுவது போல்…
“ஹே கைஸ் ! எப்பவும் போல இந்த முறையும் நம்ம ராக் ஸ்டார்க்கு தான் வெற்றி மகுடம்… ஹீரோனா இப்படி தான் இருக்கணும் என்று இந்த முறையும் நிரூபிச்சிட்டான்… அப்புறம் என்ன எல்லாம் நாம பெட் கட்டுன மாதிரி தோத்தாங்கோலிஸ் எல்லாம் அவங்க ட்ரெஸ் கழட்டி போட்டுட்டு, முழங்கால்ல மண்டி போட்டு இந்த பீச் முழுசா சுத்தி வந்து நம்ம ராக் ஸ்டார் கால்ல விழுந்து வணங்க வேண்டும்…அப்போவாவது உங்களுக்கு எல்லாம் ரோஷம் வந்து ஜெயிக்கிறங்களான்னு பார்ப்போம்…என அதீ நாகரிக அழகி ஒருத்தி இகழ்ச்சியாக பரிகாசிக்க…
தோல்வியுற்றவர்களில் தன்மானம் மிக்க சிலர் அதை ஏற்க மறுத்தும் விடாமல் அவர்களை மற்றவர்கள் வற்புறுத்திட… இதற்கெல்லாம் காரண கர்த்தாவான வெற்றிப் பெற்றவன் மீது கோபம் திரும்பிட…
“ஹே வாட் தி ஹெல் இஸ் திஸ்… ! ஸ்டாப் திஸ் ஷீட் மேன்… இந்தப் பந்தயத்தில் ஜெயிச்சதால மட்டும் அவன் என்ன பெரிய ஹீரோவா… ரியல் லைப்லை ஜெயிக்கணும் அது தான் ரியாலிட்டி… அப்படி பார்த்தா கேரியர்ல நான் பிக் சக்ஸஸ்ஃபுல் பிசினஸ் மேன்… ஆனால் அவன்…?? கம் ஆன் கைஸ் அவன் பெரிய பணக்காரன் என்றால்…?? நாமளும் தான் பெரிய பணக்காரர்கள் தான்… இவன் எல்லாம் ஒரு ஆளு இவன் முன்னாடி எல்லாம் என்னால மண்டி போட முடியாது போங்கடா… என ரோஷம் கொண்டு ரோஹித் காச் மூச் என்று கத்த…
அங்கிருந்த அனைவருமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து தான் போயினர்… இதுவரை அவர்களில் எவருமே ராக் ஸ்டாரை எதிர்க்கவோ அல்லது அவனுக்கு எதிராக செயல்பட்டதோ இல்லை… அவ்வளவு ஏன் அதற்கான துணிவு கூட அவர்களில் எவருக்கும் இல்லை என்பதே மெய்… அப்படி இருக்க அவர்களில் ஒருவன் அதுவும் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது… பல்வேறு மனநிலையில் இருந்தவர்களுக்கு பல்வேறு சிந்தனையை அளித்தது…
ராக் ஸ்டார் அதற்கு பதில் அளிப்பான் அல்லது சண்டையிடுவான் குறைந்தது கோபமாவது கொள்வான் என அனைவரும் அவனை பார்க்க அவனோ எதுவுமே நடக்காதது போல கையில் இருக்கும் மதுவின் குளிர்ச்சியை கன்னத்தில் வைத்து சோதித்து கொண்டு இருக்க… மற்றவர்கள் புரியாது விழித்து நின்ற சமையம்…
அடுத்த நிமிடம் அங்கிருந்தவர்களின் பிரத்தியேக தொலைபேசிக்கு தொடர்ந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்து அனைவருமே அதிர்ந்து போயினர்…அடித்த போதை எல்லாம் அப்பொழுதே இறங்கி விட்டது…
“சற்றுமுன் கிடைத்த முக்கிய செய்தி உலகம் முழுவதும் பரவி வரும் பொருளாதார வீக்கத்தால் இந்திய பங்கு சந்தையில் பெரும் நெருக்கடியை சந்தித்து உள்ளது அதன் அடிப்படையில் மும்பையின் பிரபல தொழில் அதிபரான திரு சுனில் மல்கோத்தராவின் **** நிறுவன பங்குகள் யாவும் வரலாறு காணாத அளவில் பெரும் சரிவை சந்தித்து உள்ளது …தொடர்ந்து **** நிறுவனம் திவாலான நிலையில் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பலரும் தங்கள் பணத்தை திருப்பி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில்…திரு சுனில் மல்கோத்ரா தலைமறைவாகி உள்ளார்… தலைமறைவாகிய அவரை மும்பை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்…”என பரபரப்பாக பேச பட்ட செய்தியை கண்டவர்கள்… மனநிலையோ இவன் பொல்லாதவன்… இவனிடம் வச்சிக்கவே கூடாது என்றே இருந்தது…
அவனால் பாதிக்கப்பட்ட ரோஹித்தோ…
“யூ ***டர்ட்… உன்னை கொல்லாம விடமாட்டேன்டா ****… என ராக் ஸ்டார் மீது கொலை வெறியுடன் பாய்ந்தான்…
ரோஹித் அவனை நெருங்கும் முன் தடுத்து பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்பட்டான் ராக் ஸ்டாரின் மெய் காப்பாளர்களால்…
“ டேய் உனக்கு தைரியம் இருந்தா உன் பேருக்கு பின்னாடி இருக்குற அந்த பேரை விட்டு தனியா வாடா…மோதி பார்க்கலாம் அப்போ காட்டுறேன் நான் யாருன்னு… உங்க அப்பன் பேர் மட்டும் இல்லனா நீ ஒண்ணுமே இல்லை நீ வெறும் குப்பை யூ ஆர் பிக் ட்ராஷ்…இன்னும் எத்தனை நாள் உன் ஆட்டம் நினைக்கிற கூடிய சீக்கிரமே எல்லாமே உன்னை விட்டு போகும் உன் பேர், பண , புகழ், உன் திமிர் எல்லாமே உன்னை விட்டு போயிடும்…இன்னைக்கு நான் நடு ரோடுக்கு வந்தமாதிரி நீயும் ஒரு நாள் வருவடா… டேய் **** என பொங்கி வந்த கோபத்திலும் அவனை எதுவுமே செய்ய முடியாத கோவத்திலும் சபித்த வண்ணம் அடித்து இழுத்து செல்லப் பட்டவனை பார்த்து…
இதழ்கள் வளைய ஏளனமாக சிரித்தது… அவன் ஏன் சிரிக்க மாட்டேன் …
பின்னே ,உலக வரைபடங்களில் உள்ள அத்தனை கண்டங்களிலும் அவனது குடும்ப தொழில் வேரூன்றி கொடி கட்டி பறக்கிறது… குண்டூசி முதல் கோபுரம் வரை தயாரிக்கும் நிறுவனங்கள் அவனிடம் உள்ளது…கோடிகளை கோடிகளால் பெருக்குகின்றவன் அவன் குடும்பம்… அவன் தந்தை ஆதிரனோ நினைத்த மாத்திரத்தில் எதிரியை அழிக்கவல்லவன் என்றால் இவனோ தனக்கு எதிரியாய் வரக் கூட ஒரு தகுதி வேண்டும் என்று எதிரியாய் எவரையுமே உருவாகவே விட மாட்டான்… அவனை எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் சிந்தையில் உதிக்கும் முன்பே அவர்களை சர்வ நாசம் செய்து விடுபவன்… அவனே சக்ரவர்த்தி பரம்பரையின் இளையத் தலைமுறையின் முதல் வாரிசு… ஆம் இவனே நீங்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த பத்ரிநாத் சக்ரவர்த்தி…
கொஞ்சி பேசும் கண்கள் எங்கே…??
எந்நேரமும் கோபத்திலும் போதையிலும் செவ்வேறிய கணங்கள் எங்கே…??
கள்ளமற்ற பிள்ளை முகம் எங்கே…??
வயதுக்கு மீதிய முதிர்ச்சியும் இறுகிய தடை வரிகளிடையே முழுநேர மூர்க்க தனத்தையும் முன் கோபத்தையும் வெளிப்படுத்தும் கற்பாறை முகம் எங்கே…??
காண்போரை கவர்ந்து ஈர்க்கும் குறும்பு கண்ணனின் குணம் எங்கே…??
ம்ம்ம் எனும் முன் வெடித்து சிதறும் இவன் சீற்றம் எங்கே… பிறரை வலிக்க அழ வைக்கும் இவன் அசுர குணம் எங்கே…??
சிறு பிராயத்தில் பார்த்த பத்ரியா இவன் என சந்தேகிக்க வைக்கும் வண்ணமே அவனுடைய தற்போதையே மாற்றம் இருந்தது…
பத்ரியின் இந்த மாற்றத்திற்கு யார் காரணம்…??
super start sis
நன்றி நன்றி சகிமா ❤️❤️❤️