ATM Tamil Romantic Novels

யாரார்க்கு யாரடி உறவு 4

அத்தியாயம் 4

அடையார் சென்னை நகரத்தின் ஒரு முக்கியமான மற்றும் பிரபலமான பகுதி. அங்கே இருக்கும் பெரிய பங்களாவை நோக்கி சென்றது ஆதித்யா கரிகாலனின் உயர்ரக வாகனம். தன்னருகே தூங்கிக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் ஒரு விரலால் வருடியவன், மெல்ல அவள் காதருகே குனிந்து, 

 

“வீடு வந்துருச்சு.. எழுந்துக்கோ..” என்று சொல்ல, மெல்ல தன் இமைகளைப் பிரித்து பார்த்தவளின் விழிகளில் கம்பீரமாய் அரண்மனை போல் காட்சியளித்தது ஆதித்யா கரிகாலனின் இல்லம். 

 

“சரி.. பார்த்தது போதும் கீழே இறங்கு..” என்றவாறே காருக்குள் இருந்து கீழே இறங்கியவன், மறுபுறம் வந்து காரின் கதவைத் திறந்து, பாரதியின் கையில் இருந்த மயூரியை வாங்கிக் கொண்டான். காரை விட்டு இறங்கியவள், தன் முன்னே இருக்கும் அரண்மனை போன்ற வீட்டை பயத்துடன் பார்த்தவாறே நின்றிருந்தாள் பாரதி. 

 

“என்ன பார்வை இது? ஏதோ அரண்மனை பார்ட் ஃபை படத்துக்கு வந்துருக்குற மாதிரி.. ஒரு பார்வை.. உள்ள வா..” என்றவன் பாரதியின் தோளில் ஒரு கையிட்டவாறே, மறு கையில் மயூரியை தோளில் சுமந்தவாறு வீட்டு வாசலுக்கு முன் வர,

 

“கொஞ்சம் அப்படியே நில்லுங்க.. என் பேத்தி முதல் முதலா குழந்தையோட உள்ள வீட்டுக்கு வர்றா.. ஊர்ல இருக்குற அத்தனை கண்ணும் அவ மேல தான்..” என்றவாறே எதிரே வந்தார் வள்ளியம்மை. அவரைப் பார்த்ததும்,

 

“பாட்டிஇஇஇ..” என்று கட்டிக் கொண்டாள் பாரதி. அவரும் அவளை ஆரத்தழுவிக் கொள்ள, இருவரது கண்களில் இருந்தும் கண்ணீர் வழிய தொடங்கியது. 

 

“அம்மாடி.. பாரதி.. எப்படிடா இருக்க? இப்படி துரும்பா இளைச்சிட்டியாம்மா.. அய்யோ என் பேத்தி.. எப்படி மெலிஞ்சி போய், கருத்து போய் வந்துருக்கா..” என்றவர் பாரதியின் கன்னத்தில் முத்தமிட்டு,

 

“என்ன சும்மா வேடிக்கை பார்த்துட்டு நிற்குற? என் மகனும் பேத்தியும் ஜோடியா, குழந்தையோட முதல் முதலா வீட்டுக்கு வந்துருக்காங்க.. ஆரத்தி எடுக்காம அப்படியே வெறிச்சு வெறிச்சு பார்த்துட்டு நிற்குற.. சீக்கிரம் எடு..” என்ற வள்ளியம்மை, தனது சமையல்காரம்மாவிற்கு உத்தரவிட, அவளும் அதிசயத்தை பார்த்தவாறே அவர்கள் இருவருக்கும் ஆரத்தி சுற்ற,

 

“ஆமா.. இதுக்கு முன்னாடி உங்க பேத்தி.. அப்படியே உலக அழகி மாதிரி இருந்தா.. இப்ப உள்ளுர் கிழவியாகிட்டா.. ஆமா, என்ன இவ திடீர்னு வந்துருக்கா? நாம எல்லோரும் வேணாம்னு தானே மூணு வருஷத்துக்கு முன்னாடி இங்கே இருந்து ஓடி போனா? இப்ப புள்ளையோட வந்து நிற்குறா..” என்றவாறே அங்கு வந்தார் வடிவழகி. 

 

“வடிவு.. உன்னோட வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? முதல்ல நீ உன் வீட்டுக்கு கிளம்பு..”

 

“ஏம்மா.. மூணு வருஷத்துக்கு முன்னாடி ஓடிப் போயி.. ஒரு குழந்தையோட திரும்பி வந்துருக்கா.. அவளை நான் எந்த கேள்வியும் கேட்கக்கூடாதா? என் தம்பியோட வாழ்க்கையே போச்சு.. இவளை கட்டி வைச்சதுக்கு பதிலா வைஷுவை கட்டி வைச்சுருக்கலாம்.. எத்தனை தடவை சொன்னேன்.. இவ ஒரு ப்ராடு.. இவ சொல்றதெல்லாம் பொய்யினு.. எத்தனை தடவை சொன்னேன்.. இப்போ.. யாருக்கோ பிறந்த புள்ளையை தூக்கிட்டு வந்து, என் தம்பிக்கு தான் பிறந்ததுன்னு சொல்றா..அய்யோ.. இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா? அய்யோ! என் தம்பி வாழ்க்கை இப்படியா ஆகணும்?” என்று வாசலில் நின்று கத்திய வடிவழகியை பார்க்கும் போது, ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது பாரதிக்கு.. ஆதித்யா கரிகாலனின் கையில் இருந்த மயூரியை வாங்கிக் கொள்ள முயற்சி செய்தவளின் கையை தடுத்தவன்,

 

“சும்மா இருக்க மாட்டியா? அம்மா.. இப்போ, ஆரத்தி எடுத்து முடிச்சிட்டீங்களா? நாங்க உள்ள போகலாமா?” என்று கேட்டவாறே பாரதியின் தோளில் கை போட, அவனை விட்டு விலக முயன்றவளை தன் வளைவிற்குள் வைத்தவாறே,

 

“அக்கா.. மாமா பிஸ்னஸ் ட்ரிப் முடிச்சிட்டு இந்நேரம் வீட்டுக்கு வந்துகிட்டுருப்பாரு.. வைஷுவும் வீட்டுக்கு வந்துருப்பா.. நீ சீக்கிரம் கிளம்பு..” என்றவன் மேலும் யாரிடமும் எதுவும் பேசாது, தன் மனைவி மற்றும் மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான். தனது அறைக்குள் நுழைந்தவன், தனது குடும்ப மருத்துவரை அழைத்தான். 

 

“ஹலோ.. டேவிட்.. உடனே நீ உன்னோட டீம்மை கூட்டிட்டு இப்பவே என்னோட வீட்டுக்கு வா.. என்னது ஹாஸ்பிட்டலுக்கு வரணுமா? நோ.. நோ.. என் பொண்ணு.. எப்பவும் என் கண்ணு முன்னாடி தான் இருக்கணும்.. ஆமா.. எஸ்.. எனக்கு ரெண்டரை வயசுல பொண்ணு இருக்கா.. சீக்கிரம் வாடா.. அவ மெடிக்கல் ரிப்போர்ட்டை உனக்கு மெயில் பண்ணியிருக்கேன்.. செக் பண்ணிட்டு வா.. மதியம் உனக்கு லன்ச் நம்ம வீட்டுல தான்.. ஓகே?” என்று தன் கைப்பேசியில் பேசிவிட்டு பால்கனியில் இருந்து அறைக்குள் நுழைந்தவன் கண்ணில், தனது பெரிய படுக்கையில் தாயும் சேயுமாக ஒருவரை ஒருவர் இறுக அணைத்தபடி படுத்து உறங்கிக் கொண்டிப்பது படவே, அவனது உதட்டில் சிறு புன்னகை ஒன்று வந்து போனது. தனது ஆடைகளை களைந்து, தன்னை சுத்தப்படுத்தி கொண்டவன், அவர்கள் இருவரையும் அணைத்தவாறு, அவர்களோடு தானும் தன்னை இணைத்துக் கொண்டான். பதினொரு மணி போல் அலாரம் ஒலிக்க, எழுந்து கொண்டவன், தன்னருகே படுத்திருந்தவர்களை தேட, அங்கு யாரும் இல்லாததால், வீட்டின் ஒவ்வொரு புறமும் தேட ஆரம்பித்தான். 

 

“அம்மா.. அம்மா..”

 

“என்னடா..”

 

“ரதி எங்க? மயூரி எங்க? ரெண்டு பேரும் எங்க போனாங்க?”

 

“எதுக்கு இப்படி தேடுற? இங்க தான் எங்கேயாவது இருப்பாங்க..”

 

“அம்மா.. உங்களுக்கு தெரியாது.. சின்னதா கேப் கிடைச்சா போதும்.. என் பொண்ணைத் தூக்கிட்டு ஓடிடுவா.. எங்கயிருக்காங்க?” என்றவன் சமையலறைக்குள் புகுந்து தேடிக் கொண்டிருக்கும் போது,

 

“ப்பா.. இங்கப்பாருங்க.. எவ்ளோ பெரிய முட்டை.. பாப்பா.. முட்டை.. முட்டையாவிடுறேன்.. பாருங்களேன்..” என்றவாறே சோப்பு நுரையை எடுத்து ஊத, அது வட்ட வட்டமாக மேலே பறந்தது. 

 

“ஹேய்.. இங்கப்பாரு.. இங்கப்பாரு.. பெரிய.. பெரிய முட்டை..”

 

“ஆமாடா கண்ணா.. பெரிய முட்டை.. சோப்பு தண்ணி சிந்துது பாரு.. அப்புறம், பாப்பா வாய்க்குள்ளேயும் போகுது.. ம்ம்.. இங்கப் பாட்டிக்கிட்ட வாங்க..” என்ற வள்ளியம்மை தனது கொள்ளுபேத்தியை தூக்கி, உச்சி முகர்ந்தார். 

 

“என் தங்கம்.. செல்லம்.. எவ்வளவு அழகா இருக்கா.. அப்படியே என் பொண்ணு மாதிரி.. எனக்கு தான் அவ கூட இருக்கக் கொடுத்து வைக்கல..” என்று பெருமூச்சு விட்டவர், சட்டென தன்னை தேற்றிக் கொண்டார். 

 

“அதனால் என்ன.. அதான் என் பொண்ணு மாதிரி.. நீ இருக்கியே கண்ணம்மா.. அது போதும் இந்த பாட்டிக்கு.. நீ வா.. பாட்டி.. உனக்காக சுறாப்புட்டு, வறுத்த மீன், அப்புறம் காடை முட்டை பொறிச்சு வைச்சுருக்கேன்.. சாப்பிட போலாமா?” என்றவர் பாரதியின் புறம் திரும்பி,

 

“உனக்கு பிடிச்ச மீன் குழம்பு வைச்சுருக்கேன்.. சாப்பிட வா..” என்று கூறிவிட்டு உணவு மேஜைக்கு செல்ல, பிறந்ததில் இருந்து வளர்ந்த வீடு, இப்போது அந்நியமாக தெரிந்தது. உணவு மேஜைக்கு செல்லாது, தங்களது அறைக்கு திரும்ப செல்ல முயன்றவளின் கையைப் பிடித்து தடுத்தவன்,

 

“டேவிட், இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துருவான்.. நம்ம மெடிக்கல் டீம்மை வைச்சு.. பாப்பாக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிருச்சுறலாம்.. ஆனா, அதுக்கு நீ ஹெல்தியா இருக்கணும்.. நீ தான் அவளுக்கு சப்போர்ட்டா இருக்கணும்.. சாப்பிட வா.. நாம எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு?” என்று கூறியவாறே, பாரதியின் கையைப் பிடித்து தரதரவென உணவு மேஜைக்கு அழைத்துச் சென்றான். அங்கே உணவு மேஜையின் மீது அமர்ந்து, தன் பிஞ்சு கைகளால் சாப்பாட்டை அலைந்து, ஒவ்வொரு பருக்கையாக சப்புக் கொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மயூரி. தன் மகள் சாப்பிடும் அழகை ரசித்துக் கொண்டே அவளின் எதிரே வந்து அமர்ந்தவன், தனக்கு அருகில் பாரதியையும் அமர வைத்தான். 

 

“பாப்புக்குட்டிக்கு மம்மம் புடிச்சுருக்கா?” என்று கேட்டவன், முள்ளில்லாமல் மீன் தூண்டை பிய்த்து, அவளுக்கு ஊட்டி விட்டான். 

 

“ம்ம்..” என்றவாறே சாப்பிட்ட மயூரி, தனது பிஞ்சு கைகளால் சாப்பாட்டை அள்ளி, தன் தாயின் வாயருகே கொண்டு சென்றாள். 

 

“ம்மா.. ஆஆஆஆ.. யம்யம்யம்.. ம்மா.. ஆஆஆஆ..” என்று கூறி, அவளது வாயில் தன் பிஞ்சு விரல்களை திணிக்க, அவளது வாயில் சில பருக்கைகள் மட்டுமே சென்றன. ஆனால், அதன் சுவை அவளது மனதிற்குள் சென்றது. இந்த உலகில் அவள் நேசிக்கும் ஒரு ஜீவன், அவளை நேசிக்கும் ஒரு ஜீவன், அவளது மகள் மட்டுமே.. அவளது கண்கள் கலங்க, அதனை பார்த்த சின்னஞ்சிட்டு, என்ன நினைத்ததோ, 

 

“ம்மா.. அழுவாத.. அழுவாத..” என்றவாறே அவளது கண்ணீரை துடைக்க, அச்சின்னப் பெண்ணின் கையைப் பிடித்து தன் கண்களில் வைத்துக் கொண்டாள் பாரதி. அதனைப் பார்த்த வடிவழகியோ,

 

“எப்பா.. என்ன சீனு? என்ன சீனு? ச்சே.. சாவித்திரி.. கே.ஆர்.விஜயாவெல்லாம் என்ன நடிகைங்க.. இங்க ஒருத்தி உட்கார்ந்திருக்கப் பாரு.. நடிப்பின் இமயம்.. யப்பா.. யப்பா.. என்ன நடிப்பு? சான்சே இல்ல?!” என்று கூற, உணவு மேஜையில் இருந்து எழுந்து கொள்ள முயன்றவளின் கையைப் பிடித்து தடுத்தவன், வலுக்கட்டாயமாக அமர வைத்தான். 

 

“அக்காஆஆஆஆ..” என்று பல்லைக் கடித்தவனிடம் என்ன கண்டாரோ, அதன் பின்னர் வாயை சாப்பிடுவதற்காக மட்டுமே திறந்தார். பாரதியின் முன்னே இருந்த தட்டில் சாதத்தை போட்டு, மீன் குழம்பை ஊற்றி பிசைந்தவன், 

 

“ம்ம்.. ஆஆஆக்காட்டு..” என்றவளின் வாயின் அருகில் சாப்பாட்டை கொண்டு செல்ல, தன் முகத்தை திருப்பினாள் பாரதி. 

 

“ம்ம் ம்ம்.. எனக்கு பாப்பாவோட அம்மாவும் பாப்பாவாத் தான் தெரியுது.. சீக்கிரம்.. ஆஆஆவாங்கு..” என்றவன் அவளது இதழ்களை பிரித்து அதனுள் சாப்பாட்டை திணிக்க, கண்ணீருடன் வாங்கிக் கொண்டாள். 

 

“என்ன ரொம்ப காரமாயிருக்கா?” என்று அவளிடம் கேட்டவன்,

 

“ஏன்மா.. குழம்புல காரம் அதிகமா போட்டீங்க.. ரதிக்கு காரம் ஒத்துக்காதுன்னு தெரியாதா? அவளுக்கு சின்ன வயசுல இருந்தே காரம் ஆகாதுல? யாரு இவ்வளவு காரம் போட்டது?” என்றவன் சீற,

 

“நான் தான் தம்பி.. எப்பவும் போல மீன் குழம்புல காரம் போட்டுட்டேன்.. மன்னிச்சுடுங்க தம்பி.. இப்படி இவங்க.. இன்னைக்கு வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கல தம்பி.. அதான் எப்பவும் போல, உங்களுக்கு பிடிச்ச மாதிரி சமைச்சுட்டேன்.. மன்னிச்சுடுங்க தம்பி.. இனிமே கவனமா நடந்துக்குறேன்..” என்று சமையல்காரம்மா கூற, 

 

“ஆமா.. இனிமே நாம எல்லோரும் கவனமா தான் நடந்துக்கணும்.. மேடம், வந்துட்டாங்கல்ல.. நாம கவனமா தான் நடந்துக்கணும்.. ஏன்னா.. இங்க இனிமே இவங்க தானே முதலாளியம்மா.. ஆனா என்ன ஒன்னு, எப்ப.. எந்த ராத்திரியில வீட்டை விட்டு ஓடு வாங்கன்னு நமக்கே தெரியாது..” என்றவாறே சாப்பிட்டு விட்டு வடிவழகி எழுந்து செல்ல,

 

“அக்காஆஆ..” என்ற கத்திய ஆதித்யா கரிகாலனை மெல்ல திரும்பி பார்த்தவர்,

 

“இவளை கூட்டிட்டு வந்து பெரிய தப்பு பண்ணிட்ட ஆதி.. இன்னும் கொஞ்ச நேரத்துல அனிதா வந்துடுவா.. அவளுக்கு என்ன பதில் சொல்ல போற? அவ உனக்காக பிறந்ததுல இருந்து இந்த நிமிஷம் வரைக்கும் காத்திட்டுருக்கா.. இவளை மாதிரி பாதில விட்டுட்டு ஓடல.. உங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் நடக்க அம்மா எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டாங்க.. ஒன்னு அனிதாவை கல்யாணம் பண்ணு.. இல்ல என் பொண்ணு வைஷுவை கல்யாணம் பண்ணு.. ஆனா, இவ மட்டும் இந்த வீட்டுல இருக்கக்கூடாது.. இதை மட்டும் நல்லா புரிஞ்சுக்கோ ஆதி..” என்றவாறு முன்னே செல்ல,

 

“ஆதி டார்லிங்.. நான் வந்துட்டேன்..” என்று துள்ளிக் குதித்து ஓடிவந்த அனிதா, ஆதித்யா கரிகாலனின் கழுத்தை சுற்றி வளைத்து, அவனது தோளில் தன் முகத்தை வைக்க, உணவு மேஜையில் இருக்கும் தன் மகளை தூக்கக் கொண்டு தங்களது அறைக்கு கிட்டத்தட்ட ஓடி வந்தாள் பாரதி. நடந்து முடிந்ததை மாற்ற முடியாது.. நடப்பதை தடுக்கவும் முடியாது.. வெறும் பார்வையாளராக இருப்பது எவ்வளவு கொடுமை என்பதை உணர்ந்த பாரதிக்கு சோகமும் ஏமாற்றமும் தோன்ற, தன் மகளை தோளில் சாய்த்துக் கொண்டு,

கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள். அனிதாவின் வருகையால் பாரதியின் வாழ்க்கை என்னவாகுமோ?

2 thoughts on “யாரார்க்கு யாரடி உறவு 4”

  1. Bezpieczne miejsce parkowania przy lotnisku Chopina – monitoring i transfer w cenie
    bezpieczny parking przy lotnisku z dowozem [url=https://parking-chopin-48.pl/]bezpieczny parking przy lotnisku z dowozem[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top