அத்தியாயம் 8
அதிகாலையில் யாரோ பலமாக தட்டும் சத்தம் கேட்க, திறக்க முடியாது கண்களை திறந்து பார்த்தவனின் முன்னே உறங்கும் தங்க நிலவென தெரிந்தது திவ்ய பாரதியின் முகம். கனவாக இருக்கும் என்று நினைத்து கண் மூடியவன், பட்டென மீண்டும் கண்ணை திறந்து நன்றாக பார்த்தான். கனவாகவே இருந்தாலும் அவன் எப்படி திவ்யபாரதியை அப்படி பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்ற, சட்டென எழுந்து அமர, அவனது கை வளைவில் பஞ்சு பொதியென தன் உடல் முழுவதையும் சுருட்டிக் கொண்டு, சிறு குழந்தையென அவன் மீது கை கால்களை போட்டு கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த திவ்ய பாரதியும் எழுந்து அமர்ந்தாள். சிறு குழந்தையென மழங்க மழங்க விழுந்தவளின் இளமை யாவும் அதிகாலை கதிரில் பளிச்சென்று அவனது கண்களுக்கு விருந்தாக, கட்டிலுக்கு கீழே இருந்த அவளது ஆடைகளை அவள் மீது எறிந்தவன், தன் ஆடைகளையும் எடுத்து அணிந்து கொண்டான். ஆடைகளை அணிந்து கொண்டே,
“ஹேய்.. நீ எப்படி இங்க? எப்ப வந்த? எப்படி இதெல்லாம்?” என்று கேட்க, பதிலளிக்க வேண்டியவளோ, பயத்துடன் தனது ஆடைகளை அணிந்து கொண்டிருந்தாள்.
“ஹேய் சொல்லு..” என்று கத்தயவனுக்கு மேற்கொண்டு நேரம் கொடுக்காது, கதவை உடைத்து விடுவது போல் யாரோ கதவை தட்டுவது கேட்க, அவள் ஆடைகளை மாற்றி கொண்டதை உறுதிபடுத்தியவன், கதவை திறக்க செல்ல, எங்கே தன்னால் அவனுக்கு அவமானம் ஏற்பட்டு விடுமோ, என்ற எண்ணம் தோன்ற, சட்டென குளியலறைக்குள் செல்ல முயன்றவளை, தடுத்து நிறுத்தினான் ஆதித்யா கரிகாலன். அவளது கையைப் பிடித்தவாறே கதவைத் திறந்தவனின் முன்னே,
“பாருங்க.. நல்லாப் பாருங்க.. எம் பொண்ணு வாழ்க்கையை நாசமாக்கிட்டான்.. அய்யோ.. இனிமே என் பொண்ணை யார் கல்யாணம் பண்ணுவா? சின்னப் பொண்ணு.. இன்னும் ஹையர் செகண்டரி கூட முடிக்கல.. இப்போ நான் என்ன பண்ணுவேன்..” என்று வடிவழகி கத்தி, அழுது கொண்டிருக்க, அங்கிருந்த அனைவரின் பார்வையும் ஆதித்யா மற்றும் திவ்ய பாரதியின் மீது விழ, அவர்களது பார்வையின் வீரியம் தாளாது, இயல்பாக ஆதித்யா கரிகாலனின் பின்னால் ஒளிந்து கொண்டாள் திவ்யபாரதி.
“இதுக்கு தான்பா.. இந்த பணக்கார சம்பந்தத்தை நம்பக்கூடாதுன்னு சொல்றது..” என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் கூற,
“ச்சே.. ஒரு பொம்பளை பொறுக்கியைப் போய் எங்க வீட்டு பொண்ணுக்கு பார்த்துக்குறீங்களே? இவனுங்களை எல்லாம் சும்மா விடக்கூடாது, போலீஸை கூப்பிட்டு, இவன் பேரை நாறடிக்கணும்..” என்று ஒருவர் கத்த,
“அவரு தான் குடி போதைல இருக்காருனா, இந்த பொண்ணு எப்படி அவர் ரூம்க்கு தைரியமா போயிருக்கு பாரேன்.. கொஞ்சங்கூட வெட்கங்கெட்ட ஜென்மம்.. இவளெல்லாம் ஒரு பொண்ணா?” என்று பெண்மணி கூற,
“சும்மா.. வாய்க்கு வந்த படி பேசாதீங்க.. என் பொண்ணு பச்சை குழந்தை மாதிரி.. அவளுக்கு இதெல்லாம் தெரியாது.. இவன் தான் என் பொண்ணை ஏதாவது பண்ணிருப்பான்..” என்று கூட்டத்தைப் பார்த்து கூறியவர், “ஏதோ.. போதைல அவர்களுக்கே தெரியாம நடந்துருச்சு.. அதுக்காக அவங்களை குறை சொல்ல முடியாதே.. இப்ப என் பொண்ணுக்கு வழி சொல்றதை விட்டுட்டு ஏதோதோ பேசிட்டு இருக்கீங்க?” என்று பொய்யாய் அழுதவாறு வள்ளியம்மையை பார்க்க,
“அம்மா.. இந்த எனக்கு யாருமே காஃபியே கொடுக்கலை..” என்றபடி வடிவழகியின் முன்னால் வந்து நின்றாள் வைஷ்ணவி. கூட்டத்தில் தன் மகளை பார்த்த வடிவழகிக்கோ, எதுவும் புரியவில்லை. சட்டென திரும்பி ஆதித்யா கரிகாலனை பார்க்க, அவன் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த திவ்ய பாரதி தெரிந்தாள். ‘அய்யோ..’ என்றிருந்தது வடிவழகிக்கு..
தான் ஒரு கணக்கு போட்டு, இவையெல்லாம் அவர் செய்திருக்க, விதியோ, அது தன் கணக்கினால் அவரை அதிரச் செய்திருந்தது.
“ஏது? அறியாத பொண்ணா.. பச்சை மண்ணா? அதுவும் இவளா? எனக்கு அப்போவே சந்தேகம் இருந்துச்சு.. எதுக்கெடுத்தாலும் திவி.. திவின்னு இவன் கொஞ்சுனப்பவே டவுட்டானேன்.. ஆனா, என் பொண்ணு சொன்னதை நம்பி ஏமார்ந்துட்டேன்.. ச்சீ.. நீ எல்லாம் ஒரு பொண்ணா? பெத்தவ உயிரோட இருந்து வளர்த்திருந்தா? இப்படி அலைஞ்சுருக்க மாட்டா.. பெத்து இல்லாம திரிஞ்சா.. இப்படித்தான் நடக்கும்..” என்ற அனிதாவின் தாயார்,
“ச்சீ.. ச்சீ.. இந்த மாதிரி பொண்ணை எல்லாம் சாப்பாட்டுல விஷத்தை வைச்சுக் கொள்ளணும்.. சீக்கிரம்.. இவளை இங்க இருந்து துரத்தி விடுங்க.. செக்யூரிட்டி.. செக்யூரிட்டி..” என்று கத்தியவாறே பாதுகாப்பாளர்களை அழைக்க, அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா கரிகாலனோ,
“ஸ்ஸ்ஸ்ஸுஸுஸு.. இங்க என்னக்கூட்டம்?” என்றவன், உடைந்து போய் ஓரமாக நின்றிருந்த வள்ளியம்மையை கூர்மையாக பார்த்தவாறே,
“நடந்தது ஒரு ஆக்ஸிடென்ட்.. இதுல திவியோட தப்பு எதுவும் இல்ல.. அம்மா.. திவிக்கும் எனக்கும் தான் கல்யாணம்..” என்றவன், கூடி இருந்த அனிதா வீட்டு ஆட்களைப் பார்த்து,
“இந்த பொம்பளை பொறுக்கிக்கு உங்க பொண்ணை கொடுக்க வேணாம்.. வேற நல்ல பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க..” என்று கூற,
“அதெப்படி.. ஊர் உறவு எல்லோரும் கூடி இருக்கும் போது, நடக்க இருந்த கல்யாணம் நின்னு போச்சுன்னா.. அந்த பொண்ணுக்கு எவ்வளவு அவமானமா இருக்கும்? நீ தான் நடந்தது ஒரு விபத்துன்னு சொல்லிட்டியே.. அப்போ அனிதாவையே கல்யாணம் பண்ணிக்கோ.. ஒரு பொண்ணோட பாவம் பொல்லாதது.. தலைமுறை தலைமுறையா தொடர்ந்து வரும்.. வம்சம் தழைக்காது..” என்ற வடிவழகியின் மனதில், ‘ தனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.. தனது எதிரிக்கு அது கிடைத்துவிடவேக் கூடாது’ என்ற எண்ணம் ஓட, தன் மகளை முறைத்துக் கொண்டே, அனிதாவிற்கு ஆதரவு கரம் நீட்ட, அவரை சந்தேகமாக பார்த்தான் ஆதித்யா கரிகாலன்.
“என்னப்பா.. இவங்கக்கிட்ட போய் பேசிக்கிட்டு, போலீஸை கூப்பிடுவோம்.. அவங்க வந்தத்தான் நம்ம பொண்ணுக்கு நியாயம் கிடைக்கும்..” என்று கூட்டத்தில் ஒருவர் பேசுவதை கேட்ட ஆதித்யா,
“ஓ.. தாரளாம கூப்பிடலாம்.. ஆனா, அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு விஷயம் தெரியணும்.. நேற்று நான் குடிச்சது போதை மருந்தை கலந்தது யாரு?” என்று கணீரென்ற குரலில் கேட்க, அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போயிருக்க, அனிதாவின் முறை மாப்பிள்ளை மட்டும்,
“என்னடா.. உன் குட்டு தெரிஞ்சுடும்னு பயந்து, ஏதோதோ கதை சொல்ற? இது என்ன, உங்க ஊரு மாதிரி நினைச்சியா? இங்க இருக்குற எல்லோரும் வெள்ளந்தி மனசுக்காரங்க.. அப்படி உனக்கு போதை கொடுக்க வேண்டிய அவசியமென்ன?” என்று வாதிட, அதே நேரத்தில் ஆதித்யா கரிகாலனின் அழைப்பேசியில் வீடியோ ஒன்று வர, அதனை ஓடவிட்டு பார்த்தவன், முறை மாப்பிள்ளையின் முன்னே தான் கண்ட வீடியோவை காட்டி,
“அந்த அவசியமென்னன்னு இப்ப நீயா சொல்றியா? இல்ல போலீஸை நான் கூப்பிடட்டுமா?” என்று கேட்க, அந்த வீடியோவை உற்றுப் பார்த்தனர் அனைவரும். அதில், யாருக்கும் தெரியாது ஆதித்யா கரிகாலனின் மதுக்கின்னத்தில் போதை மருந்தை கலந்து கொண்டிருந்தான் முறை மாப்பிள்ளை. அவன் கலந்து வைத்துவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில், கைப்பேசியில் பேசிக் கொண்டு வந்த ஆதித்யா கரிகாலன், அதனை எடுத்து அருந்திய சிறிது நேரத்தில் தள்ளாடியபடி அங்கிருந்து எழுந்து செல்வது பதிவாகியிருந்தது. இதனை பார்த்த அனைவரும் முறை மாப்பிள்ளையை முறைத்துப் பார்க்க, அதுவரை அமைதியாக நின்றிருந்த அனிதா, அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.
“ஏன்டா.. இப்படி பண்ண? நான் உனக்கு என்ன பண்ணேன்? எதுக்கு என் வாழ்க்கையை கெடுத்த?” என்று அறைய,
“அனி.. அனி.. இதெல்லாம் பொய்.. அவன் என்னைய பற்றி தப்பா சொல்றான்.. அந்த வீடியோல இருக்குறது நான் இல்ல.. ஏதோ எடிட்டிங் வேலை பார்த்துருக்கான். உனக்கு என்னைப் பற்றி நல்லாத் தெரியும் தானே? நான் போய்.. அதுவும் உன் கல்யாணத்தப்போ இப்படி பண்ணுவேனா? நாம் ரெண்டு பேரும் அப்படியா பழகிருக்கோம்?” என்ற முறைமாப்பிளையை குழப்பமாக பார்த்தாள் அனிதா. அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்த ஆதித்யா கரிகாலன், தன் கைப்பேசியை எடுத்து, பேசிவிட்டு அங்கிருந்தவர்களைப் பார்த்து,
“ஃபைன்.. நான் போலீஸை வரச் சொல்லிருக்கேன்.. அவங்க வந்து நடந்தது என்னன்னு விசாரிச்சுக்குவாங்க.. யார் பொய் சொல்றா? யார் உண்மை சொல்றான்னு கண்டுபிடிச்சுடலாம்.. சோ, எல்லோரும் சாப்பிட்டு வீட்டுக்கு கிளம்பலாமே?!” என்று கூறிவிட்டு, வள்ளியம்மையைப் பார்த்து திரும்பியவன்,
“இப்போ கல்யாணம் எப்படியும் நடக்காது.. சோ, நாம திரும்பி போக ஏற்பாடு பண்றேன்.. அதுக்கு முன்னாடி நான் எல்லோர்கிட்டேயும் பேசணும்.. எல்லோரும் கொஞ்ச உள்ள வர்றீங்களா?” என்று விட்டு, ஹரிதாஸிற்கு போன் செய்து, அவரையும் விரைவாக வரச் செய்தான். தான் தங்கிருந்த ஹோட்டலை காலி செய்து, வீட்டுக்கு வந்தவன், ஒடுங்கி போயிருந்த திவ்யபாரதியை பார்த்து,
“நீ எப்படி என் ரூம்க்கு வந்த? எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. மிட் நைட்ல யார் ரூம்கும் போகக்கூடாதுன்னு?” என்று உள்ளடங்கிய கோபத்தில் கேட்க, கை கால்கள் நடுங்க வைஷ்ணவியை பார்த்தாள் அவள். எங்கே தான் செய்த அனைத்தும் வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில்,
“அது எப்படி அவ சொல்லுவ? திட்டம் போட்டு தானே இந்த மாதிரி கீழ்த்தரமான வேலையை பார்த்துருக்கா.. அவளால எப்படி வாயை திறந்து பேச முடியும்?” என்று அவசர அவசரமாக பதிலளித்தார் வடிவழகி. சரியாக அதே நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த ஹரிதாஸின் காதில் வடிவழகி கூறிய அனைத்தும் விழவே, ஹாலின் நடுவே நின்றிருந்த திவ்ய பாரதியை கூர்மையாக பார்த்தவாறே,
“யார் என்ன பண்ணா? எதுக்கு எல்லோரும் திரும்பி வந்துட்டீங்க? கல்யாணம் அதுக்குள்ள முடிஞ்சுருச்சா? இல்லையே.. இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே..” என்றவரை பயத்துடன் திரும்பி பார்த்தாள் திவ்யபாரதி. வானத்தில் ரெண்டு வெள்ளை காக்கா பறக்குதுன்னு வடிவழகி சொன்னார் என்றால், ‘ஆமாம்மா.. சொய்ங்குனு பறக்குதுன்னு..’ சொல்லும் ஹரிதாஸிடம், திவ்யபாரதி எவ்வளவு சொன்னாலும், உண்மை எடுபடாதே.. இதுக்கு மேல வீட்டுல இருக்குறவங்கக் கிட்ட பேசியும் எந்த ப்ரொயோஜனமும் இல்லைன்னு முடிவு செய்தவள், வாயிருந்தும் ஊமையாகிவிட்டாள். வீட்டிற்குள் நுழைந்தவரிடம் ஏதோ திவ்யபாரதி திருமணத்தை நிறுத்தவென்று திட்டம் தீட்டி தவறு செய்ததாக கண்ணீருடன் வடிவழகி கூற, அதனை அப்படியே நம்பிவிட்டார் ஹரிதாஸ். ஆதித்யா கரிகாலனின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தவளை தன் முன் இழுத்து நிறுத்தியவர்,
“ச்சீ.. நீ எல்லாம் ஒரு பொண்ணா? அப்படியென்ன சுகம் கேட்குது உனக்கு?” என்று அருவருப்பான பார்வையை அவள் மீது வீச, உள்ளுக்குள் கூனி குறுகி போனாள் திவ்ய பாரதி. யார் தன்னை நம்ப வேண்டும் என்று நினைத்தாளோ, அவரே அவளை மிகக் கேவலமாக பார்க்க, அதற்கு மேல் எதுவும் பேசக்கூட தெம்பில்லாது போனாள். தன் பக்க நியாயத்தை கேட்கக்கூட யாரும் தயாராக இல்லை என்பதை புரிந்து கொண்டவளின் உள்ளம் வலித்தது. யாரும் எதிர்பாராத வண்ணம் தன் இடுப்பில் இருந்த பெல்ட்டை கலட்டி, திவ்யபாரதியின் மீது வீசத் தொடங்கியிருந்தார். உள்ளம் மரத்து போனதாலோ, என்னவோ அவர் அடிக்கும் போது துளியும் வலி தெரியவில்லை. எதுவும் பேசாது அவர் அடிப்பதை வாங்கிக் கொண்டு நின்றிருந்தவளை இழுத்து தனக்கு பின்னால் மறைத்துக் கொண்டான் ஆதித்யா கரிகாலன்.
“விடு மாப்பிள்ளை.. இன்னைக்கு இந்த கேடு கெட்டவளுக்கு ஒரு முடிவு கட்டுறேன்.. இவளை பெத்ததுக்கு, இவளை நானே அடிச்சு கொன்னுடுறேன்..”
“அவ தப்பு பண்ணான்னு அடிக்குறீங்க.. அப்போ எனக்கு தண்டனை? நானும் தானே தப்பு பண்ணேன்.. என்னையும் அடிங்க..” என்றவன் தன் கைகளை பின்னால் கட்டி, அவர் முன்னால் தலை கவிழ்ந்து நிற்க, அவனை மறைத்துக் கொண்டு முன்னே வந்து நின்றாள் திவ்யபாரதி.
“ப்பா.. மாமா.. மாமா.. மேல எந்த தப்பும் இல்ல.. நான்.. நான் தான் எல்லாம் பண்ணேன்.. என்னைய அடிச்சு கொன்னுருங்க..” என்றவளின் கண்ணில் தாங்க முடியாத வலி இருந்ததே ஒழிய, அவளது கண்களில் கண்ணீர் இல்லை.. அதுவும் வரண்டு விட்டதோ?
“அப்பாவா? இனிமே அந்த வார்த்தை உன் வாயில் இருந்து வரக்கூடாது.. இன்னைல இருந்து என்னோட பொண்ணு செத்துப் போயிட்டா.. வடிவு வீட்டு வாசல்ல குடத் தண்ணியை எடுத்து வை.. தலை முழுகணும்..” என்றவர் கூற, அவரை அசையாது பார்த்தாள் திவ்யபாரதி. இவருக்கு மனசாட்சியே கிடையாதா? இப்படிப்பட்டவர் தான் என் அம்மா, எனக்காக விட்டு சென்ற உறவா? என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்தார் வள்ளியம்மை.
“நான் அப்பவே சொன்னேன்.. பஞ்சும் நெருப்பும் பக்கத்துல பக்கத்துல இருக்கக்கூடாது.. இவளை அவ அப்பா வீட்டுக்கு அனுப்பிடு.. அங்கேயே வளரட்டும்னு சொன்னேன்.. நீ கேட்டியா? இப்போ நம்ம குடும்பத்தோட மானம் மரியாதை எல்லாத்தையும் காத்துல பறக்க விட்டுட்டியே.. இப்போ, இவளை என்ன பண்ணப் போற? சின்னப் பொண்ணு.. சின்னப் பொண்ணுன்னு செல்லங்கொடுத்தியே.. இப்ப இவளை என்ன பண்ணப் போற? இனிமே இவளை யார் கல்யாணம் பண்ணிக்குவா? இல்ல, இவளை இப்படி வைச்சுக்கிட்டு, நீ தான் இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிப்பியா? அய்யோ.. வளர்மதி இருந்திருந்தா.. இப்படி எல்லாம் நடக்க விட்டுருப்பாளா? மொத்தத்துல என் குடும்பமே நாசமாப் போச்சே?!” என்றவர் கண்ணீர் வடிக்க,
“அம்மா, எந்த காலத்துல இருக்கீங்க.. இது விபத்து.. நாங்க ரெண்டு பேரும் சுய நினைவு இல்லாம நடந்தது..” என்றவன் கூற,
“நிறுத்துடா.. இன்னொரு தடவை விபத்துன்னு சொன்ன.. அப்புறம் நான் மனுஷியாவே இருக்கமாட்டேன்.. நீ சுய நினைவுல இல்லைன்னு சொல்லு.. நான் ஒத்துக்குறேன்.. ஆனா, இவ சுய நினைவோட தானே இருந்தா.. காப்பாத்துங்கன்னு கத்திருக்கலாமே? இல்ல, உன்னை அடிச்சுருக்கலாம்.. கடிச்சுருக்கலாம்.. ஒரு பொண்ணை கட்டாயப்படுத்தி, அவ வாழ்க்கையை நாசப்படுத்தக் கூடிய அளவுக்கு என் மகன் மிருகமில்லையே.. ஹரிதாஸ் அடிக்குறதுல தப்பில்லயே.. இவளால தானே, ராஜவாட்டம் இருந்த என் பையன் தலை குனிஞ்சு நிற்குறான்.. இதுக்கு இவ என்ன பதில் சொல்லப் போறா? இல்ல, நீ என்ன பதில் சொல்லப் போற?” என்றவர் கண்கள் சிவக்க கத்தியதை பார்த்தவனுக்கு திக்கென்றானது.
“அம்மா.. டென்ஷன் ஆகாதீங்க.. திவி.. என்னோட பொறுப்பு.. அவளை கடைசி வரைக்கும் நான் பார்த்துப்பேன்.. நம்ம குடும்பத்தைப் பத்தி யாரும் பேசாம நான் பார்த்துக்குறேன்..”
“உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாதேடா.. உன் முன்னாடி பேச பயந்தாலும், உன் முதுகுக்கு பின்னாடி பேசுவாங்களே.. அப்போ என்ன பண்ணுவ? இவளை நாக்கு மேல பல்லைப் போட்டு பேசுவாங்களே.. அப்போ என்ன பண்ணுவ? இவளே ஏதாவது பண்ணிக்கிட்டானா.. என்ன பண்ணுவ? எல்லா நேரமும் இவக்கூடவே திரிவியா?”
“இப்ப என்ன தான் பண்ணணுங்குறீங்க?”
“ஒன்னு அவ கழுத்துல தாலி கட்டு.. இல்ல, இங்க இருக்குற உன் அத்தை பொண்ணுங்க, யாராவது ஒருத்தர் கழுத்துல தாலி கட்டு.. எனக்கு இப்ப உன் கல்யாணம் நடந்தாகணும்..”
“அம்மா..”
“இப்போ.. நீ நான் சொன்னதை பண்ணல.. நான் செத்தாக்கூட என் மூஞ்சில முழிக்காத..” என்றவர் அடக்கப்பட்ட கோபத்தில் பேச, அங்கே சுற்றியிருக்கும் அனைவரையும் கண்ணால் அளந்தான். பல மில்லியன் சொத்துக்கான ஒரே வாரிசு.. அவனை மருமகனாக அடையப் போகும் சந்தர்ப்பத்தை கைவிட அவர்கள் அனைவரும் என்ன முட்டாள்களா? அனைவரும் நான் நீ என பெண் தர போட்டிப் போட, வேகமாக வள்ளியம்மையின் அறைக்குள் சென்றவன், அவரது நகைப்பெட்டியில் இருக்கும் வளர்மதியின் திருமாங்கல்யத்தை எடுத்து வந்தான். உற்றார் உறவினர் நண்பர்கள் முன்னிலையில் திவ்ய பாரதியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு, அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான் ஆதித்யா கரிகாலன். நடப்பது அனைத்தையும் சிலை போல் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் காதில் ஏதோ உரசுவது போல் இருக்க, சுயநினைவுற்று நிமிர்ந்து பார்க்க, தன்னைத் தொட்டு தாலி கட்டியிருந்தான். குனிந்து தன் தாயின் திருமாங்கல்யத்தை கையில் எடுத்துப் பார்த்தவளுக்கு கண்ணீர் ஆறாய் பெருகியது. அங்கிருந்த சாமியறைக்கு அவளை அழைத்துச் சென்றவன், குங்குமத்தை எடுத்து அவளது உச்சி வகிட்டில் வைக்க, மெய் சிலிர்த்தது. ஹாலில் நின்றிருந்த அனைவரையும் கண்ணால் கூர்மையாக பார்த்தவாறே,
“இவ.. இந்த ஆதித்யா கரிகாலனின் பொண்டாட்டி.. என் பொண்டாட்டியை பத்தி தப்பா பேசுறவன்.. இந்த ஆதித்யா குரூப்ஸை எதிர்த்து நிற்குறது சமம்.. தப்பாப் பேசுறவனோட தொழில் இருந்த இடம் தெரியாம பண்ணிடுவேன்.. என்ன சவால் விட்டு பார்க்குறீங்களா?” என்று கேட்க, அவனை எதிர்க்க யாருக்கு தைரியம் வரும்? அனைவரும் வாயை மூடிக்கொண்டு நிற்க, தன் செகரெட்ரியை அழைத்து, என்னக் கூறினானோ? அங்கிருந்த கூட்டம் அனைத்தும் பத்தே நிமிடங்களில் காணாமல் போனது. அவனைப் பற்றிய எந்த தகவலும் மீடியாவிற்கு தெரியாது பார்த்துக் கொண்டான். சும்மாவா சொன்னார்கள் பணம் பாதாளம் வரை பாயும் என்று.. ஆதித்யா கரிகாலனின் பணம், அதையும் தாண்டி பாய்ந்தது. நடந்த கலவரத்தை மறக்கவென திவ்யபாரதியை வள்ளியம்மையிடம் விட்டுவிட்டு, தொழில் காரணமாக வெளிநாடு செல்ல நேரிட, அசோகவனத்து சீதையானாள் திவ்யபாரதி. திவ்யபாரதியின் மேல் இருந்த கோபத்தில், அவளை பார்ப்பதைக் கூட தவிர்த்தார் வள்ளியம்மை. கேட்பாரற்ற ஓவியமாக, தூசி படிந்து, உண்ணாது, உறங்காது, எடையிழக்க ஆரம்பித்தாள். வடிவழகியை அங்கு இருக்கவிடாது அவளோடு சேர்த்து வைஷ்ணவியையும் தன்னோடு சென்னைக்கு அழைத்து வந்திருந்தார் ஹரிதாஸ். ஆதலால் அவர்களது குத்தல் பேச்சிற்றின்றி, கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள். அவன் அவளோடு இல்லாத நேரத்தில் வீட்டிற்கு பின்னால் இருக்கும் தோட்டத்தில் பூஞ்செடியை நட்டு வளர்ப்பதை தன் பொழுதுபோக்காக மாற்றிக் கொண்டாள். அங்கு வேலைக்கு வரும் குழந்தைகளுக்கு தனக்கு தெரிந்த நடனக் கலையை கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருந்தாள். பள்ளியில் என்றோ ஒரு நாள் பயின்ற நடனம், இன்று நிம்மதியை தந்தது. காலையில் நடனம் சொல்லி கொடுப்பவள், மாலையில் ஆங்கிலக்கல்வியை சொல்லி கொடுக்க தொடங்க, அவள் மீது அக்கிராமத்தில் இருந்த தவறான அபிப்ராயம் மாறிப் போனது. இரண்டு மாதங்கள் ஓடிய நிலையில், அவளோடு தோட்ட வேலை செய்யும் ராசாத்தி,
“எம்புள்ள.. ஆதித்யா ஐயா.. போன் ஏதாவது பண்ணாரா?” என்று கேட்க, பதிலேதும் அளிக்காமல் சோபையாக புன்னகைத்தாள் திவ்ய பாரதி.
“இப்படி பட்டும் படாம சிரிச்சா.. என்ன அர்த்தம் புள்ள? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போற? நடந்தது நடந்து போச்சு.. நடந்ததையே நினைச்சுட்டு இருந்தேனா? சின்னய்யாக்கூட எப்படி வாழுவ? அவர் தான் போன் பண்ணலைன்னா என்ன? நீயாவது போன் பண்ணி பேசு.. இப்படியே இருந்தா.. நஷ்டம் உனக்கு தான்..”
“இதுக்கு மேல நஷ்டப்பட என்கிட்ட என்ன இருக்குக்கா? அதுவும் இல்லாம, நான் அவருக்கு செஞ்சது எந்த விதத்திலேயும் நியாயம் இல்லை..”
“ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையாது தான்.. இல்லைன்னு யார் சொன்னா? ஆனா, தாலின்னு ஒன்னு கட்டிருக்காரே.. நீ தானே அவரோட பொஞ்சாதி.. அதை யாரும் மாத்த முடியாதே.. நீ அவர்கிட்ட உனக்கான நியாயம் கேளு புள்ள..”
“அக்கா.. உங்களுக்கு ஒரு கதை தெரியுமா? ராமாயணத்தில், வானர சேனையுடன் ராமர் இலங்கைக்கு செல்லும் போது, அணில்கள் கூட தங்களால் முடிந்த உதவியைச் செய்ய வந்துச்சாம். அவை பாறைகளை கடலில் வீச முடியாது, ஆனால், சின்னச் சின்ன கற்களை எடுத்துக் கொண்டு வந்து போட்டன. ராமர் அதை பார்த்து அணில்களின் உழைப்புக்கு ஆசீர்வாதம் செஞ்சார்.
ஆனால், அப்போ எதிர்பாராமல் ராமர் அணிலை மிதிச்சுடுறார். ஆனால், அணில் கத்தவில்லையாம். அதை பார்த்த ராமர், அதற்குக் காரணம் கேட்டப்போ, அணில் சொல்லிச்சாம்,
“எல்லோரும் என்னை அடிக்கும்போது, ‘ராமா, ராமா’ என்று அழைப்பேன். ஆனால், இன்னைக்கு அந்த ராமனே அடிக்கிறான், நான் யாரை அழைக்கப் போகிறேன் என்று கேட்டுச்சாம்?” இப்போ நானும் அந்த அணில் மாதிரி தான் அக்கா.. எல்லோரும் என்னைய கஷ்டப்படுத்தும் போது, அவரைப் பார்த்தாப் போதும்.. என் கஷ்டம் எல்லாம் பஞ்சா மறைஞ்சுரும்.. ஆனா, இப்போ அவரே என்னைய கஷ்டப்படுத்துனா, நான் எங்க போவேன்?” என்றவளின் கண்ணில் இருந்து நீர்த்துளி உருண்டோட, அமர்ந்திருந்தவள் சட்டென மயங்கி விழ, பதறிப் போன பெண்மணியோ, வள்ளியம்மையை அழைக்க, அவரோ ராசாத்தியை கூப்பிட்டு திவ்ய பார
தியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். மருத்துவரிடம் சென்றவளுக்கு என்னாயிற்றோ?