அத்தியாயம் 15
அடுத்த நாள் காலையில் எழுந்தவளால் நடக்கக்கூட முடியவில்லை.
“அம்மா.. இடுப்பு இப்படி வலிக்குது..” என்றவள் மெல்ல நடந்து செல்ல, அவள் முன்னே வந்து நின்றான் ஆதித்யா கரிகாலன்.
“மயூரிக்கு உடம்பு சரியில்லை.. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கேன்.. உன்னைய எழுப்பலாம்னு பார்த்தேன்.. பட், நீ டயர்டுல நல்லாத் தூங்கிட்டு இருந்த.. அதான் உன்னைய எழுப்பல.. சீக்கிரம் கிளம்பு.. பாப்பா உன்னையே பார்க்கணுங்குறா..” என்றவனைத் தொடர்ந்து, பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள் திவ்ய பாரதி.
“டாக்டர்.. இப்ப பாப்பா.. எப்படி இருக்கா?” என்ற திவ்ய பாரதியை கவலையோடு பார்த்த டேவிட்,
“ஃபைனல் இஆர்.. ட்ரீட்மெண்ட் பண்ணிருக்கேன்.. பட், இது வெறும் டெம்பரவரி தான்.. அவ ஃபுல்லா க்யூர் ஆகுறது இப்போ உங்க ரெண்டு பேரோட கையில தான் இருக்கு..” என்று கூறிவிட்டு செல்ல, கண்ணீர் வழிந்தது அவளது விழிகளில்.. அவள் நின்றிருந்த கோலம் ஆதித்யா கரிகாலனை பெரிதும் வருத்த, அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அண்ணார்ந்து அவன் முகம் பார்க்க,
“கவலைப்படாத.. மயூம்மாக்கு எதுவும் ஆகாது.. ஆகவும் விடமாட்டேன்..” என்றவன் அவளது நெற்றியில் முத்தம் வைக்க, நிம்மதியில் கண்மூடினாள் திவ்ய பாரதி. மயூரியின் அருகிலேயே அமர்ந்திருக்கும் ஆதித்யா கரிகாலனின் மனமோ முதன் முறையாக இறைவனிடம் மன்றாடியது. தனக்கென்று வரும்போது தளாராதவன் தன் மகளுக்கென்று வரும் போது பாசத்தில் கோழையாகிப் போனான். வீட்டிற்கு திரும்பும் வழியில் பள்ளிச் சீருடை அணிந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை பார்த்த மயூரி, ஆதித்யா கரிகாலனின் தோளில் கைகோர்த்தபடி,
“ப்பா.. ப்பா..” என்றழைக்க ஒரு நிமிடம் கார் ஸ்டீரிங்கில் அவனது கைகள் தடுமாறின. இத்தனை நாளாக தன்னை அப்பாவென்று அழைக்காத மகள், தன் முத்து புன்னகையைக் காட்டி, அப்பாவென அழைக்க, மெய் மறந்து போனான்.
“சொல்லும்மா..” என்றவனின் குரலில் இருந்த மென்மையில் திவ்ய பாரதிக்கு தன் மகளின் மீதே பொறாமை வந்தது.
“ப்பா.. அவங்கல்லாம் எங்க போறாங்க?” என்ற குழந்தை கை நீட்டி கேட்ட திசையை பார்த்தவனின் கண்களில் பள்ளி செல்லும் குழந்தைகள் பட,
“அவங்க எல்லாம் ஸ்கூலுக்கு போறாங்க..” என்று பதில் கூறினான். தனது நாடியில் சிறு பிஞ்சு விரலை வைத்து தட்டியவாறே,
“எதுக்கு ஸ்கூலுக்கு போறாங்க?” என்று கேட்க, நாசா விஞ்ஞானியைப் போல் தோற்றமளிக்கும் மகளை ஒரு கையால் அணைத்துக் கொண்டான் ஆதித்யா கரிகாலன். தன் மகளை தோளோடு அணைத்தவாறே அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறலானான்.
“ஸ்கூலுக்கு போய் படிக்கப் போறாங்க..”
“அம்மா தான் வீட்டுலேயே சொல்லித் தர்றாங்களே.. அப்போ அவங்க அம்மாவும் வீட்டுலயே சொல்லி கொடுக்கலாம்ல.. எதுக்கு ஸ்கூலுக்கு அனுப்புறாங்க?”
“ஸ்கூலுக்கு போனா.. புது ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க.. ஜாலியா விளையாடுவாங்க.. அதுனால தான் ஸ்கூலுக்கு போறாங்க..”
“ப்பா.. பாப்பாவும் ஸ்கூலுக்கு போகணும்.. பாப்பாவும் ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாடணும்..”
“அப்பா.. பாப்பாவை.. நாளைக்கே ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன்..”
“தாங்க்யூப்பா..” என்ற மயூரியிடம் சிரித்தபடியே திவ்யபாரதியின் முகத்தை பார்த்தான் ஆதித்யா கரிகாலன். அவளோ தன் முகத்தை வேறு புறம் திரும்பிக் கொண்டாள். வீட்டிற்குள் நுழைந்தவனின் தோளில் “மாமா..” என்றவாறே தொற்றிக் கொண்டாள் வைஷ்ணவி. அதனைப் பார்த்த திவ்ய பாரதியோ,
‘இவரெல்லாம் திருந்தவே மாட்டார்..’ என்று நினைத்தபடி அங்கிருந்து தன் அறைக்கு செல்ல, அதனை பார்த்த ஆதித்யா கரிகாலனோ,
“ப்ச்.. விடு.. விடு.. வைஷு..” என்றவாறே அவளை விலக்கி நிறுத்தியவன்,
“இங்கப்பாரு வைஷு.. நீ என்னொட அக்காப் பொண்ணு தான்.. உன்னைய நான் தோள் மேல் தூக்கி வைச்சு வளர்த்தேன் தான்.. ஆனா, நான் இப்போ கல்யாணமானவன்.. இதுக்கு மேல இப்படி தொட்டு பேசறது தப்பு புரிஞ்சுதா?” என்று கூறிவிட்டு, அருகில் நின்றிருந்த வடிவழகியை பார்த்தவன், அப்போது தான் சமையலறையில் இருந்து தன் பேத்திக்காக சத்துபானம் ஆற்றி எடுத்து வந்து கொண்டிருந்த வள்ளியம்மையைப் பார்த்து,
“ஏன்மா.. அக்காக்கு தான் அறிவில்ல.. கல்யாணமான பசங்கக்கிட்ட இருந்து தள்ளி நிக்கனும்னு.. சொல்லி வளர்க்கமாட்டேங்குறா.. நீங்க கூட சொல்லி வளர்க்க மாட்டீங்களா? எல்லா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனும் திவிக்கு மட்டும் தானா? முதல்ல நீங்க பெத்த பொண்ணுக்கு நல்ல புத்திமதி சொல்லு..” என்று கூறியவன், அவர் கையில் இருந்த சத்துபானத்தை தன் கையில் வாங்கிக் கொண்டு,
“இது மயூகுட்டிக்கு தானே? கொடுங்க.. நான் கொண்டு போறேன்..” என்றவாறே திவ்யபாரதியின் அறைக்குள் சென்றான்.
“கொஞ்சநாள் முன்னாடி வரைக்கும் ஒரு வார்த்தை எதிர்த்து பேசாதவன்.. இப்ப என்ன பேச்சு பேசுறான் பாருங்கம்மா.. மத்த ஆம்பிளைங்களும் இவனும் ஒன்னா? தாய்மாமங்குற உரிமையில பழகுற பிள்ளையை என்ன பேச்சு பேசிட்டு போறான்.. நீங்களும் பார்த்துட்டு நிற்குறீங்களே?”
“வடிவு.. அவன் பேசுறது ஊசி குத்துனது மாதிரி இருந்தாலும்.. அது நம்ம பிள்ளை நல்லதுக்கு தானே? நாளைப்பின்ன இன்னொரு வீட்டுல போய் வாழப் போற பிள்ளை.. இப்படி சட்டு சட்டுன்னு அவன் மேல தொங்குனா.. நாளைக்கு கட்டிக்கிட்டவன் முன்னாடியும் இதே பழக்கம் தானே வரும்.. அதான் சத்தம் போட்டுட்டு போறான்.. மாமாவாகவே இருந்தாலும் கல்யாண வயசுல பிள்ளைங்க தள்ளி தான் நிற்கணும்னு.. வைஷூக்கு சொல்லி புரிய வை.. உன்னைய நான் இப்படியா வளர்த்தேன்?” என்ற வள்ளியம்மை, வைஷ்ணவியின் மீது அதிருப்தி பார்வையை செலுத்திவிட்டு செல்ல, தொங்கிப் போன முகத்துடன் நின்றிருந்த தன் மகளின் அருகில் வந்த வடிவழகி,
“நீ வருத்தப்படாத டா.. இவனை விட அறிவா? அழகா? ஒருத்தனை உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்குறேன்..” என்றவரின் மனதில் திவ்ய பாரதியின் மீதான வன்மம் இன்னும் அதிகமானது.
அறைக்குள் நுழைந்த திவ்ய பாரதி, மயூரியை குளிக்க வைத்து, ஆடைகளை அணிவித்து கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தான் ஆதித்யா கரிகாலன்.
“மயூக்குட்டி.. இங்க பார்த்தியா.. அப்பா உனக்கு மில்லெட்ஸ் கொண்டு வந்துருக்கேன்.. இதை குடிச்சதும்.. பேபி, சூப்பர் பேபியா மாறிடுவீங்களாம்.. எங்க குடிங்க.. சீக்கிரம்..” என்றவாறே மயூரியை குடிக்க வைத்தவன், அவளை வீட்டிற்கு பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, அவளோடு பந்து விளையாடிக் கொண்டிருக்க, அதனை மேலே தனதறையில் இருக்கும் பால்கனியில், ஊஞ்சலில் அமர்ந்தவாறே பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யபாரதி. அவளுக்கு அவளது சிறு வயது ஞாபகம் வந்து போனது. இதே போல் அவளுடனும் விளையாடுவான்.. பாவாடை கூட ஒழுங்காக கட்டத் தெரியாதவளுக்கு, தலை சீவி, பூ வைச்சு.. பாடம் சொல்லிக் கொடுத்து, விளையாட வைத்து மகிழ்வான். அவனுக்கு என்ன பிடிக்கும் என்று அவனுக்கு தெரியுமோ? தெரியாதோ? அவளுக்கு நன்றாக தெரியும்.. அதே போல் அவளை நன்கு அறிந்தவன் அன்றி வேறொருவரில்லை.. ஊஞ்சலில் அசைந்தவாறே பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் அமர்ந்தார் வள்ளியம்மை. ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தவளின் கையில் சூடான காய்கறி சூப்பை கொடுத்தவர்,
“என்னமா! என்ன யோசனை?” என்று கேட்க, சூப்பை மிடறு விழுங்கியவள்,
“மயூக்குட்டி நாளைக்கு ஸ்கூலுக்கு போறா பாட்டிம்மா..” என்று கூற, அவரது முகமோ வேதனையில் சுருங்கி விரிந்தது.
“மயூ ஸ்கூலுக்கா? இப்பவேவா?”
“சின்ன குழந்தைங்கக் கூட விளையாடணும்னு ஆசைப்படுறா.. அதுவுமில்லாம ப்ளே ஸ்கூல்.. அவளுக்கு புதுதில்ல பாட்டிம்மா..”
“அப்போ.. அவளுக்கு துணையா நானில்லை.. அதுனால சேர்த்து விட்டுருப்ப.. இப்ப தான் நான் இருக்கேனே.. நான் பார்த்துக்குறேன்.. எதுக்கு பிள்ளையை இப்பவே ஸ்கூலுக்கு அனுப்புற?”
“பாட்டிம்மா.. அவளும் எல்லோர் கூடவும் பழகணும்.. புதுசா ஏதாவது கத்துக்கணும்..”
“சரி.. என்னவோ போ.. இந்த பிள்ளைங்க எங்க பெரியவங்க பேச்சை கேட்குறீங்க? உங்களுக்கு எது சரின்னு படுதோ.. அதையே செய்யுங்க..”
“என் மேல கோபமா பாட்டிம்மா?”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.. சின்ன வருத்தம்.. உன் அம்மாவும் இப்படி தான் இருப்பா.. என் பொண்ணு வளர்ந்தா.. யாரையும் எதிர்பார்த்துகிட்டு இருக்கக்கூடாது.. அவளுக்கு நான் எல்லாத்தையும் சொல்லி கொடுப்பேன்.. அவ வாழ்க்கையில நிறைய பேரை சந்திக்கணும்.. அனுபவப்பாடம் ஒரு நாளும் மறக்காதுன்னு சொல்லிக்கிட்டேயிருப்பா.. நீ உன்னோட சொந்த கால்ல நின்றதுக்கு அப்புறம் தான், உனக்கு கல்யாணம் பண்ணணும்.. அப்படின்னு ஆதித்யாக்கிட்ட சொல்லிட்டாருப்பா.. அப்போ அவன் சின்ன பையன்.. உன் அம்மா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவன் மனசுல பசுமரத்தாணி போல பதிஞ்சுடுச்சு.. அன்னைக்கு நீ ஹாஸ்பிட்டல் போயிட்டு திரும்பி வரும்போது கூட.. உன்னைய பெங்களூர் காலேஜ்கு அனுப்பி.. டிகிரியை முடிக்க வைக்கணும்னு தான் அவ்வளவு கோபமா.. உன்கிட்ட நடந்துக்கிட்டான்.. என் மேல தான் தப்பு.. அவன் சொன்னப்பவே, உன்னைய காலேஜ்கு அனுப்பி வைச்சுருக்கணும்.. என் மேல தான் தப்பு..”
“என்னது.. அவர் என்னைய காலேஜ்கு அனுப்புறதுக்கு தான் வீட்டை விட்டு போக சொன்னாரா?”
“ஆமா.. பின்ன உன்னைய வீட்டை விட்டு அனுப்ப.. அவனுக்கென்று கிறுக்கா பிடிச்சுருக்கு? சும்மாவே அவனோட மனசு பூரா நீ தான் இருக்க.. அவன் எப்படி உன்னைய வீட்டை விட்டு வெளியே போக சொல்லுவான்?”
“அப்போ.. அனிதா?!”
“அவளும் அவனை கல்யாணம் பண்ணிக்கணும்னு அஞ்சு வருஷமா தவமிருக்கா.. இவன் பிடி கொடுத்தால் தானே? காலேஜ் படிக்கும் போது கூட, எந்த பொண்ணையும் கிட்டக்கூட நெருங்க விடமாட்டான்.. நான் கூட இவன் இப்படியே பிரம்மாச்சாரியா இருந்துடுவானோங்குற பயத்துல தான் அனிதாவை பேசி முடிச்சேன்.. ஆனா, இன்னார்க்கு இன்னார்னு நாம் முடிவு பண்ண முடியுமா? அது படைச்சவன் கையில தான் இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன்.. உன் மேல எனக்கு கோபம் இருந்துச்சு.. ஆனா, நான் உன்னைய வெறுக்கவில்லை.. எப்ப நீ மாசமா இருக்குறதை என்கிட்ட சொல்லாம.. அதை நாங்க ஏதாவது பண்ணிடுவோம்னு வீட்டை விட்டு போனியோ? அப்போவே அந்த கோபமும் போயி.. இப்ப வருத்தம் மட்டும் தான் மிச்சமிருக்கு..”
“அவருக்கு.. நான் மாசமா இருக்கேன்னு?”
“தெரியும்.. உன்னைய அவன் தேடாத இடமில்லை.. அவன் நிம்மதியா சாப்பிட்டு.. தூங்கி.. ரொம்ப நாளாச்சு.. அவன் சிரிச்சு மூணு வருசமாச்சு.. அவனோட சந்தோஷம்.. நிம்மதி.. ஏன் அவனோட உயிரே நீ தான்னு, எனக்கு அப்புறமா தான் விளங்குச்சு.. இதை முன்னாடியே தெரிஞ்சுருந்திருந்தேனா.. உன்னைய அப்படி போக விட்டுருக்கமாட்டேன்மா..”
“ப்ச்.. நடந்து முடிஞ்சதை விடுங்க பாட்டிம்மா.. திரும்பத் திரும்ப அதையே பேசிட்டுருந்தா.. மனசு தான் வலிக்கும்..” என்றவளின் பார்வை எங்கோ வெறித்துப் பார்க்க,
“திவிக்குட்டி.. பாப்பா ஸ்கூலுக்கு போனதும்.. என்ன பண்ணலாம்னு இருக்க?” என்றவரை ஆர்வமாக பார்த்தாள் திவ்யபாரதி.
“நானும் அவக்கூடவே ஸ்கூல்ல வேலைக்கு சேரலாம்னு இருக்கேன் பாட்டிம்மா..” என்றவளின் பின்னால் இருந்து,
“உன்னைய வெளியில வேலைக்கு அனுப்ப முடியாது.. நீ ஒன்னும் வேலைக்கு எல்லாம் போக வேண்டாம்..” என்ற ஆதித்யா கரிகாலனின் குரலில் தூக்கி வாரி போட திரும்பிப் பார்த்தாள் திவ்யபாரதி. அவளின் ஆசையை புறக்கணிப்பானா ஆதித்யா கரிகாலன்?
