ATM Tamil Romantic Novels

இத இதமாய் கொன்றாயடி

 

2. – இத இதமாய் கொன்றாயடி

 

 

 

   மகிழ்விழியை பழி வாங்கவேண்டும் என்று உறுதி எடுத்தவுடன் நிம்மதியாக உணர்ந்தவன் அந்திமாலைப் பொழுதையும் சூரியன் மறையும் அழகையும் ரசிக்க ஆரம்பித்தான். காற்று வந்து கேசம் கோத மகிழ்ச்சியாக புல்லட்டில் பறந்தான். 

 

அதே மகிழ்ச்சியுடன் விசில் அடித்துக் கொண்டே மேஜையில் அமர்ந்து அன்றைய வரவு செலவு கணக்கை சரி பார்த்தான். கடையில் இருக்கும் பையன் சதீஸ் அவனை ஆச்சரியமாக பார்த்து,”இன்றைக்கு ரொம்ப சந்தோஷமாக இருப்பிங்க போல இருக்கு…” கேட்டான்.

 

சட்டென முகம் வன்மாக மாறியது. “ஏண்ணா… நா இப்ப என்னன்னு கேட்டுட்டே… மூஞ்சிய அஷ்டகோணலா மாறுது…” சதீஸ் கேட்டதும் நொடியில் சிரிப்புடன் முகத்தை வைத்துக் கொண்டான்.

 

“ஆங்… ச்சே… ச்சே… அப்படி எல்லாம் ஒன்னுமில்ல… இப்ப நா நல்லா இருக்கேன்…” என்று சொல்லிவிட்டு உரமூட்டைகளைக் கணக்கு எடுத்தான். இருப்புக்கும் வரவுக்கும் சரியாக இருக்கிறதா எனப் பார்தான். பிறகு களைப்பாக இருந்ததால் இரவானதும் சதீஸை அனுப்பிவிட்டு உரக்கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பினான்.

 

“ம்மா… ம்மா…” என்று அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். இவன் குரல் கேட்டதும் சமையலறையில் இருந்து வசந்தா வந்தார். 

 

வந்தவர் மணியைப் பார்த்துவிட்டு,”இன்றைக்கு நேராமா வந்துட்டே.. வேல கம்மியோ…” என்றார்.

 

“இன்றைக்கு சலிப்பா இருந்தது… அதான் நேரமா பூட்டிவிட்டு வந்திட்டே…” சோம்பல் முறித்தவாறு சொன்னான்.

 

“கைகால் அலம்பிட்டு வா… இராவுக்கு சட்னி ஆட்டி இட்லி வார்த்துகலாம் நனைச்சிருந்தே… அது நீ நேரமா வந்துட்டில்ல… அப்ப தோச சுட்டுக்கலாம் விடு…” என்று கூறி விட்டு அவசர அவசரமாக சட்னி அரைக்கச் சென்றார்.

 

கைகால் அலம்பிட்டு வந்தவன் அம்மா கொடுத்த உணவை உண்டு விட்டு தன்னறைக்கு சென்று சிறிது புரண்டு புரண்டுப் படுத்தான். தூக்கம் கண்களுக்கு எட்டவில்லை. விடிய விடிய தூங்காமல் மகிழ்விழியை எப்படி பழி வாங்கலாம் என்று சிந்தித்துக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் சிந்தித்து சிந்தித்தே மூளை சோர்வடைந்து கண்கள் சொருக… அவனை அறியாமல் உறங்கிப் போனான்.

 

விடியற்காலையில் வசந்தா எழுந்து டீ போட்டு விட்டு மகன் வருவான் என்று காத்திருந்தார். நேரம் சென்ற போதும் மகன் அறையை விட்டு வெளியே வரவில்லை என்றதும் அவரே எழுந்து சென்றுப் பார்த்தார். அங்கோ மகன் நல்ல உறக்கத்தில் இருந்தான். பார்த்து விட்டு சரி அசந்து தூங்குகிறான் எண்ணி விட்டு வந்து சோபாவில் அமர்ந்துக் கொண்டார்.

 

சிறிது நேரத்திற்கு ஒரு முறை எழுந்து சென்று பார்த்தார். மகன் விழிக்கவேயில்லை என்றதும் அவரே எழுப்பிவிட்டார். “டேய்… ராசா… பொழுது விடிஞ்சி வெகு நேரமாகுது பாரு… எந்திரி… “ என்று எழுப்பிவிட்டார்.

 

கண்கள் எறிய அதை தேய்த்துக் கொண்டே முழிக்க முடியாமல் முழித்துப் பார்த்தான். ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் எட்டி பார்த்தது. அப்பொழுது தான் சூரியன் உச்சிக்கு வந்துவிட்டான் என்று புரிந்ததும்,”ஏம்மா… என்னய எழுப்பிருக்கலாம்ல… இம்புட்டு நேரம் தூங்கிட்டேனே…” புலம்பினான். 

 

“ஏன்டா மவனே… நா என்னத்த கண்டேன்… நீயே அசந்து தூங்கறே… அதனால தான் இம்புட்டு நேரம் எழுப்பாம விட்டுட்டே… இப்ப தான் சூரியனை உச்சிக்கே வந்துடுச்சு என்று எழுப்பிவிட்டே…”

 

“அடப்போம்மா… நீ வேற கத பேசிக்கிட்டு இருக்கா….” சலித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்துக் குளிக்கச் சென்றான்.

 

“அடிய் ஆத்தி… இவன் தூங்கிட்டு என்னய சடைஞ்சுகுறான்…” என்று சலிப்புடன் சொன்னார். 

 

பின்பு அவசரமாக குளித்துவிட்டு தயாராகி வயலுக்கு,”நாந்தான் தூங்கிட்டனா… இந்தம்மாவது எழுப்புவதற்கென்ன…” புலம்பிக் கொண்டே விரைவாக நடந்தான்.

 

எதிரில் மகிழ்விழி இவனைப் பார்த்ததும் வேறுதிசையில் போகாமல் வம்பிழுக்கும் நோக்கத்துடன் வந்துக் கொண்டிருந்தாள்.

 

எதிரில் வந்தும்,”வராரு பாரு மல்லுவேஷ்டி மைனரு… இப்ப தான் பொட்ட கோழி கூவுச்சி போல…” நக்கலடித்தாள்.

 

“ஆமாம்… இப்ப தான் கூவிக்கிட்டு இருக்கு…” என்று ஜாடையாக சொல்லி அவளை மேலும் கீழும் பார்த்தான்.

 

அவளை தான் சொல்கிறான் என்றுஅவன் பேசிய பேச்சிலும், ஜாடையாக பார்த்த பார்வையிலும் புரிந்தக் கொண்டாள். தன்னையை எப்படி இப்படி சொல்லாம் என்ற கோபத்தில்,”ஏய்… யார பார்த்து கோழினு கீழினு சொன்ன வகுந்துடுவேனு வகுந்துடுவேன்…” கத்தினாள்.

 

“வகுந்துடுவேனு சொன்ன கைய முறிச்சுடுவே…”

 

“முறிப்பே முறிப்ப… பார்த்துகிட்டு இருக்க… நா ஒன்னும் கேனச்சி இல்ல…”

 

“என்னடி… பண்ணுவ… உன்னால என்ன பண்ண முடியும்…” நையாண்டிப் பேசினான். 

 

“என்னன்னு பண்ணுவேனு கேட்ட… கைய முறிச்சு அடுப்புல வச்சிடுவே… பார்த்துக்கோ…”

 

“நீ அடுப்புல வைக்குற வரைக்கும் என் கைய என்ன புளியங்கா பறிச்சுகிட்டு இருக்குமாடி…”

 

“புளிங்கா பறிக்குமா… மாங்கா பறிக்குமானு எனக்கு தெரியாதுடா…”

 

“டா… போட்டு பேசினா மருவாத கொட்டு போயிடும்…” விரல் நீட்டி எச்சரித்தான்.

 

“ஆமாம்டா… அப்படி தான்டா கூப்பிடுவேன்டா… என்னடா பண்ணவடா…” என்று வார்த்தைக்கு வார்த்தை “டா” போட்டு பேசினாள்.

 

கோபத்தில் அவளை பிடித்து சேற்றில் தள்ளிவிட்டு திரும்பி கூடப் பார்க்காமல் போய்விட்டான்.

 

எரிச்சலுடன் எழுந்து,”போடா எரும மாடே…” என்று வசை பாடி விட்டு அங்கிருந்த பம்பு செட்டில் குளித்துவிட்டு, ஈரக்காற்றில் நடுங்கியப்படியே சென்றாள்.

 

ஈருடையுடன் வந்த மகளைப் பார்த்து வேலாயுதம்,”ஏத்தா… எதுக்கு இப்படியெல்லாம் துணிமணிய நனைச்சுகிட்டு வந்து நிற்கறவே…” கேட்டார்.

 

அவள் அம்மா மந்தாகினி,”இவ போய் யாருகிட்டயாவது மல்லுக்கு நின்னிருப்பா… சும்மா விடுவாங்களா…” என்றார். 

 

“சும்மா வம்பு இழுக்க நா ஒன்னும் கேனச்சில்ல… அவன் முதல்ல வம்பு இழுத்தான். அப்புறம் தான் மல்லுக்கு நின்னே…” திமிராகவே பதில் சொன்னாள்.

 

“அவனா யாரு தாயி…” என்று வேலாயுதம் கேட்டார்.

 

“அந்த பூந்தமிழ்செலவன்… பேர… பாரு பூந்தமிழ்செல்வனாம்… பூந்தமிழ்செல்வன்… ஆளையும் பாரு… அவனையும் பாரு…” என்று நக்கலாக பேசினாள்.

 

“ஏம்மா… இப்படி சொல்ற… என்ன இருந்தாலும் அவர் நம்ம மாப்பிள்ளயில்ல…” என்றார் வேலாயுதம்.

 

“மாப்பிள்ளயாம் மாப்பிள்ள… பொல்லாத மாப்பிள்ள… அந்தாள் எனக்கு என்ன முறைமாமனாம்… ஏன் இப்படி காமெடி பண்ணறிங்க…”

 

“இருந்தாலும் என் சிநேகன் பையன் இல்ல… மாமானு தான் கூப்பிடனும்…”

 

“சிநேகிதன் பையனா இருந்தாலும் மாமானு எல்லாம் கூப்பிட முடியாது. அவன் எனக்கு பூந்தமிழ்செல்வன் தான்…”

 

“நீங்க கொஞ்சம் நகருங்க… இவள எல்லாம் இப்படி சொன்னா கேட்கமாட்டா…” வேலாயுத்தை நகர்ந்து நிற்க சொல்லி அடிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று சுற்றியும் முற்றியும் தேடிப் பார்த்தார். 

 

அங்கிருந்த சீவக்கட்டை கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கொண்டு ஒரு கையால் அவள் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு,”அட செருப்பால நாயே… மாப்பிள்ளய பேர சொல்லி கூப்பிடுவியா… அவர பார்த்து என்ன வார்த்த சொன்னா… “ இன்னொரு கையால் சொல்லியே சொல்லி அடித்தார்.

 

மகள் அடிவாங்கறதை காணப் பொறுக்க முடியாமல் வேலாயுதம் வீட்டை விட்டு வெளியறிவிட்டார். அத்தனை அடி வாங்கியும் மனதுக்குள் அவனை வசை பாடியே சகித்துக் கொண்டாள். மந்தாகினி கை ஓயும் வரை அடித்தார். அப்பகூட கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. அப்படி அவள் அழுத்தமாக இருந்தாள். 

 

மந்தாகினிக்கு கை ஓய்ந்த பின்பு தான் அடிக்கறதை நிறுத்திவிட்டு,”நீயெல்லாம் ஒரு மனுஷியாடி… இத்தன அடி வாங்கியும் கல்லு பிள்ளயார் நிற்கிற… தெரியாம தான் கேட்கிறேன் உனக்கு கொஞ்சம் கூட வலிக்கல… ஆனு ஊனு கொஞ்சம் கூட சத்தம் போடல…” சொல்லி வெறுப்புடன் சீவக்கட்டையை விட்டு எறிந்தார்.

 

மகிழ்விழிக்கு உடம்பு எல்லாம் அடித்ததால் சிவந்து வரி வரியாக கண்ணிப் போய் இருந்தது. அப்படியே திண்ணையில் கூனி குறுக்கிப் படுத்துவிட்டள். வாய் விட்டு அழுதிருந்தால் கூட காய்ச்சல் வந்திருக்கதா என்னவோ… மாலையே உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. நேரம் நேரமாக குளிருடன் காய்ச்சலும் வந்துவிட்டது. குளிரால் நடுங்கும் உடலை தாவணியை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். 

 

காய்ச்சல் அதிகமானதால் உடல் தூக்கி தூக்கிப் போடவும்… தன்னை மறந்து உளர ஆரம்பித்தாள். என்னவென்று மந்தாகினி வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அருகே வந்து உடலை தொட்டுப் பார்த்தார். அனலாக கொதித்தது. உடல் பூராவும் தடுப்பு தடுப்பாக இருந்தது.

 

உடனே ஓடிப் போய் சமயலறையில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதி வந்தவுடன் சுக்குமல்லிப் பொடியை போட்டு தீயை குறைத்து வைத்துவிட்டு,அதற்குள் ஒரு கிண்ணத்தில் மஞ்சளுடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து எடுத்து வைத்து, தயாராக இருந்த சுக்குமல்லிக் காபியை ஒரு டம்ளரில் காபியை வடித்து உற்றிக் கொண்டு இரண்டையும் எடுத்து ஓடி வந்தார்.

 

மகளை மடியில் படுக்க வைத்து காபியை வாயில் ஊற்ற… வாயை இறுக்கி மூடிக் கொண்டாள். வேறுவழியில்லாமல் மந்தாகினி கெஞ்சிக் கூத்தாடி கொஞ்சம் காபியை ஊற்றினாள். மஞ்சப்பற்றை கண்ணிப் போய் இருந்த இடத்தில் எல்லாம் தடவிட்டாள். மகிழ்விழி கத்தாமல் அந்த வலியையும் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டாள்.

 

மந்தாகினியோ,”அடிபாதகத்தி இப்பவும் கத்தாமல் பல்ல கடித்து பொறுத்துறவ… எவ்வளவு நெஞ்சழுத்தம் உனக்கு…” தலையில் அடித்துக் கொண்டு அழுதார். இவர் அழுகும் வேளையில் தான் வேலாயுதம் வீட்டுக்குள்ளே நுழைந்தார்.

 

மகள் கிறிக்கி படுத்திருப்பதும், மனைவி மகளை மடியில் கிடத்தி தலையில் அடித்துக் கொண்டு அழுவதும் ஒன்றும் புரியாமல் அருகில் வந்தார். மகள் இருந்த நிலையைப் பார்த்து பதறிப் போய் மகளை தூக்கிக் கொண்டு தோளில் போட்டுக் கொண்டு ஆரம்பசுகாதாரமையத்திற்கு ஓடினார். பின்னாலே மந்தாகினியும் ஓடி வந்தாள்.

 

அங்கிருந்த டாக்டர் காய்ச்சல் குறைய ஊசிப் போட்டு, காயத்தை எல்லாம் சுத்தம் செய்து மருந்திட்டு கட்டுக் கட்டினார்.

 

பிறகு அழுதுக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்த்து,”இந்த பொண்ணை மாட்டை அடிக்கற மாதிரி யாரு அடிச்சது…” எனக் கேட்டார்.

 

மந்தாகினி தலையைக் குனிந்துக் கொண்ட அழுதிருக்க… வேலாயுதம் அவரை முறைந்தவாறு நின்றிருந்தார்.

டாக்டர் தலையை அசைத்தவாறு சென்றுவிட்டார்.

 

இரவின் தனிமையில் இவள் கொழுப்பை எப்படியாவது அடக்கவேண்டுமே என்று நினைத்துக் கொண்டு படுத்திருந்து எப்படியோ தூங்கிவிட்டான். காலையில் எழுந்தும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள் என்று கேள்விப்பட்டதும் வருத்தப்பட்டான். 

 

அவளைப் போய் பாரக்கவே பிடிக்கவே இல்லை என்றாலும் அவள் தந்தைக்காக போய் பார்க்கனும் என்று நினைத்து பார்க்கப் போனான். இவனைப் பார்த்தும் முகத்தை திருப்பிக் கொண்டாள். அவள் முகத்தை திருப்புவது பார்த்து இவனுக்கு அவள் மேல் உள்ள வன்மம் கூடிப் போனது.

 

இருக்கிற வன்மத்தில் என்ன செய்வானோ…. சண்டைப் போடுவானோ… பழி

வாங்குவானோ… யாருக்கு தெரியும்… அவனுக்கும் கடவுளுக்கும் மட்டும் தான் தெரியும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top