Post Views: 1,597
5 – இத இதமாய் கொன்றாயடி
மகிழுக்கு அப்போது வயது பதினான்கு. அவள் அப்போ ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மதியத்தில் இருந்து அடிவயிற்றில் ஒரே வலி. நேரம் நேரமாக கடுமையாக இருந்தது. இருந்தும் பல்லை கடித்து பொறுத்துக் கொண்டாள். பள்ளி முடிந்ததும் முதல் ஆளாக கிளம்பினாள். அவள் தெருவில் வருகையில் அடிவயிற்றில் இழுத்துப் பிடித்த மாதிரி ஒரு சுருக்கென வலி. கால் வழியாக கொட கொடனு ஒரே இரத்தம். அப்படியே கால்களை மடித்து அமர்ந்துக் கொண்டாள்.
பின்னாலயே வந்த தமிழ் இதை எல்லாம் கவனித்தான். கால்களை மடித்து அமரும் நேரம் தமிழ் விரைவாக ஓடி வந்து,”மகிழு… என்னாச்சு…” என்று கேட்டான்.
“தெரியல மாமா… மத்தியானத்துல இருந்து ஒரே வயிற்றுவலி. இப்ப தான் தொடைல இருந்து ஒரே ர்த்தம் வருது…” வெள்ளந்தியாக சொன்னாள்.
அவன் அருவெறுப்பு படாமல்,“எனக்கு தெரியும்… நீ பெரிய மனுசியாயிட்டே கவலப்படாத…” என்று சுற்றியும் பார்த்தான். சோளக் காட்டில் வாய்காலில் நீர் பாய்ந்துக் கொண்டிருந்தது. அங்கே கை காட்டி,”அங்க போயி கால கழுலி சுத்தம் பண்ணிகிட்டு இந்த துண்ட அந்த இடத்துல கட்டிகிட்டு வா…” என கூறினான்.
அவன் சொன்னபடியே அதே மாதிரி சோளக்காட்டிற்கு சென்றாள். போனப் பிறகு தான் சோளப்பயிர் எல்லாம் இவளை மறைத்துக் கொண்டு நின்றது. அதனால் தான் இங்கு போகச் சொன்னான் என்று புரிந்தது. வாய்காலில் இடுப்போடு கழுவி விட்டு அவன் கொடுத்த துண்டைக் கட்டிக் கொண்டு வந்தாள்.
தமிழ்,”நீ முன்னால போ… நா இரண்டடி பின்னால வரேன்…” என்று சொன்னான். அதே போல் அவளை முன்னால் நடக்க விட்டு பின்னால் போனான். இதை ஊரெல்லாம் வேடிக்கைப் பார்த்தது. அதை மகிழு கீழே தலையை குனிந்துக் கொண்டு சென்றதால் கவனிக்கவில்லை. ஆனால் தமிழ் இவளை யாராவதுப் பார்க்கிறார்களா என்று கவனித்துக் கொண்டு வந்ததால், மலர்ந்தும் மலராத மொட்டு பின் தொடர்ந்து ஒரு விடலைபையன் போகிறான் என்று ஊரேல்லாம் வாயைப் பிளந்துக் கொண்டுப் பார்த்தது.அது புரியாமல் தங்களை இப்படி கவனிக்கிறார்களே என யோசித்துக் கொண்டுப் போனான்.
தமிழ் வீட்டையை நெருங்கியதும் மகிழ் கையைப் பிடித்து நிறுத்தி,”மகிழு நில்லு… நீ பாட்டுக்கு வீட்டுக்குள்ள நெடுனு நெடுனு போககூடாது. புழக்கடை வழியாக தான் போகனும்…” சொன்னான்.
“வீட்டுக்குள்ள போகாம ஏன் புழக்கடை வழியா போகனும்…” என்று மகிழ்விழி கேட்டாள்.
“நா எதுவும் சொல்லபடாது… உன் சந்தேகம்ல உன் அம்மாகிட்ட கேளு… அவங்க சொல்வாங்க…” அவளை பின்வாசல் பக்கம் அனுப்பி விட்டு வீட்டை எட்டிப் பார்த்து,”அத்த… அத்த.. “ என்று அழைத்தான்.
மந்தாகினி வெளியில் எட்டிப் பார்த்து,”ஏலே ராசா… என்ன இந்த பக்கம் எங்க…”என்றுக் கேட்டாள்.
தலையைக் குனிந்துக் கொண்டு,”மகிழு… புழக்கடை பக்கம் நிற்கா பாருங்க…” என்று சொல்லிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டான்.
மந்தாகினி சந்தேத்தோடு புழக்கடைப் பக்கம் சென்றாள். அவள் சந்தேகப்பட்ட மாதிரியே மகிழு வெட்கப்பட்டு உடலை நெளித்து நாணி கோணி நின்றாள். பார்த்ததும் மந்தாகினி மகள் செலவை வைத்துவிட்டாள் என்று கண்டுபிடித்துவிட்டாள்.
வேலாயுதத்திற்கு போன் செய்து என்ன விசயம் என்று சொல்லாமல் உடனே வீட்டுக்கு வாங்க என்று சொல்லி வரவழைத்தார்.
என்ன ஏது என்று சொல்லாமல் உடனே வீட்டுக்கு வாங்க என்று சொல்லியதும் என்னவோ ஏதோ என்று பதறியடித்துக் கொண்டு வந்தார். வந்ததும் விஷயத்தை சொன்னதும் பூரித்துப் போனார். புழக்கடைப் பக்கம் இருந்த மகளை எட்டி நின்று ரசித்தார்.
முறைச் செய்ய முதலில் தாய்மாமனுக்கு சொல்ல வேண்டும் என்று தாய்மாமானுக்கு நேரில் சென்று அழைத்தனர். அடுத்து தங்கள் உறவுமுறையை எல்லாம் அழைத்தனர்.வசந்தா வீட்டுக்குச் சென்றனர்.இவர்களைப பார்த்ததும் வசந்தா,”வாங்க… வாங்க…” என வரவேற்றார்.
சோபாவில் இவர்கள் அமர்ந்தும், வசந்தா சொம்பில் கொண்டு வந்த நீரைப் பருகினர். மந்தாகினி தான் பேச்சை ஆரம்பித்தார். “மதனி… மகிழு பெரிய மனுசியாகிட்டா… நாளைக்கு குடிசல் விடறோம் வந்துடுங்க… தமிமு தம்பிய கூட்டிட்டு வந்துடுங்க…” என்று அழைத்தார்.
வசந்தாவோ,”நா வரேன்.. தமிழு எல்லாம் சடங்கு வீட்டுக்கு எல்லாம் வர சங்கடப்படுவான்…” என்று முடித்துக் கொண்டார்.
வேலாயுதம்.”இருந்தாலும் தமிழுகிட்ட நாங்க வந்து கூப்பிட்டோம்னு ஒரு வார்த்தைய சொல்லிடுங்க… சரி நாங்க வரோம்…” என சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
விடிந்தால் குடிசையில் விடும் நாள் மகிழ்விழி கனவுலயே மிதந்தாள். தமிழுக்கு விடலைபருவம். மகிழைவிட நான்கு வயது மூத்தவன். அப்போது தான் அரும்பு மீசை முளைத்திருந்தது. அவள் கண்ணுக்கு ஒரு ராஜகுமாரன் போல காட்சி அளித்தான். அவள் ஏதோ கஷ்டப்படுவது போல ஒரு குதிரையில் வந்து காப்பாற்றியது போல நினைத்து கனவு கண்டாள். நாளை தமிழ் எப்படியும் வருவான் என்று எதிர்ப்பார்த்தாள்.
அதிகாலையில் வீடு பரபரப்பாக இருந்தது. அத்தைமார்கள் ஐந்து பேர் மகிழை முக்காலியில் உட்காரவைத்து பித்தளை சல்லடையில் வண்ணப்பூக்கள், வாசனை திரவியங்கள் கலந்த மஞ்சள் நீரை ஊற்றினர். பின்னர் செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் செய்தனர். புதுதாவணி அணிந்து தலை நிறைய பூச்சூடி, கழுத்து கைகளில் நகைகள் பூட்டி அலங்கார பூசிதையாக ஜொலித்தாள்.
பின்னர் குடிசையில் ஈடும் விழா சிறப்பாக நடந்தது. அதற்கு வசந்தா மட்டுமே வந்திருந்தார். மகிழ் எதிர்ப்பார்த்திருந்த தமிழ் வரவில்லை. அவளுக்கு அதுவே பெருத்த ஏமாற்றம் தான். அடுத்தது மூன்றுநாள் கழித்து சீர் சுற்றும் விழா வேலாயுதம் ஊரையே திரட்டி ஏற்பாடு பண்ணினார். அந்த சமயத்தில் அந்த பழக்கம் அந்த ஊரிலேயே இல்லை. பட்டணத்தில் வைப்பது பார்த்து அவர் முதன் முதலில் வைத்தார். அதற்கு தமிழும் நிச்சயமாக வருவான் என்று மகிழ் எதிர்ப்பார்த்தாள்.
ஆனால் வசந்தா மட்டுமே வந்தார். அப்போதும் தமிழ் வரவே இல்லை. அந்த ஏமாற்றம் கோபமாக மாறியது. அவனைப் பார்த்தால் கேட்கவேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
வேலாயுதம் சொன்னதில் தான் என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு தமிழை வற்புறுத்தி அழைத்தார். “வாயேன் தமிழு… வேலாயுதம் உம் அப்பாவின் பால்யகால சிநேகிதர். அவர் அவ்வளவு தூரம் கூப்பிட்டு இருக்கிறார் போகலனா நல்லா இருக்காது…”
“நா எப்பமா இந்த மாதிரி வீட்டுக்கு எல்லாம் வந்திருக்கேன்… நீ போயிட்டு வாம்மா…”
வசந்தா ஒரு பெருமூச்சுவிட்டாவாறு,”இட்லி வேக வச்சுட்டு, சட்னி அரச்சு வச்சுகிட்டு போறேன்… மறக்காம சாப்பிட்க்கோ…”
“சரி மறக்காம சாப்பிட்டுக்குறேன் போதுமா…” சொல்லி தாயை அனுப்பி வைத்தான். ஆனால் மனதிற்குள் அவள் தாவணிப் போட்டு அலங்காரத்தில் எப்படி இருப்பாள் என காணவேண்டும் கொள்ளை ஆசை. ஊருக்குள் இவர்கள் இருவரையும் இணைத்து தவறாக பேசியதால் அவன் காதுபடவே பேசியதால் அந்த ஆசையே மனதுக்குள் போட்டு புதைத்துக் கொண்டான்.
பதினாறாம் நாள் தலைக்கு தண்ணீர் ஊற்றி வீடு புகுந்தாள். அடுத்தநாள் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்ற ஆசையைவிட அவனை பார்க்க வேண்டும் என்ற ஆசை மிகுந்துக் காணப்பட்டது.
அப்போது தமிழ் வயலுக்கு கிளம்பினான். எதிரதிசையில் குனிந்த தலை நிமிராமல் அழகாக அன்னம் போல் நடந்து வந்தாள். அவன் பார்த்த நொடி அவள் நடக்கும் அழகைக் கண்டு கண்கள் ரசித்தன. அடுத்த நொடி ஊரார்கள் பேசின பேச்சு நினைவில் வந்து இவளால் தான் அந்த பேச்சு வாங்க வேண்டியிருந்தது கோபம் எழுந்தது.
அவள் அவனைப் பார்த்ததும் ஆசையாய்,”மாமா…” என்று ஓடி வந்தாள். அவளைப் பார்த்ததும் முகம் சுழித்து “ச்சீ…” என்று வெறுப்பை உமிழ்ந்து விட்டுப் போனான்.
பூவாய் மலர்ந்திருந்த முகம் வெந்நீரை கொட்டியது போல் சட்டென்று வாடிவிட்டது. ‘எப்பவும் போல மாமா என தான் கூப்பிட்டோம். அதுக்கு ஏன் இப்படி வெறுப்பை கக்கிவிட்டு போறார்…’ என புரியாமல் குழம்பியப் படியே பள்ளிக்கு வந்து சேர்ந்தாள்.
பள்ளிக்கு வந்ததும் இவளைப் பார்த்ததும் தோழிகள் சூழ்ந்துக் கொண்டு ஆளாளூக்குக் கேள்வி கேட்டு குடைந்து எடுத்துவிட்டனர். அதை எல்லாம் சமாளித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அவர்கள் கேள்வி கேட்டதில் தமிழை சுத்தமாக மறந்துப் போனாள். மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்புகையில் தமிழைச் சந்தித்தாள். அப்போது தான் காலையில் அவன் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு சென்றது தான் ஞாபகத்திற்கு வந்தது.
அதை சும்மா விடக்கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டு,”நில்லுங்க மாமா…” என்று கூப்பிட்டாள்.
“ஏய் யாருடி மாமா… நான் உனக்கு மாமாவா… இனி மாமா என்று கூப்பட்டினா நல்லா இருக்காது நாபகம் வச்சுக்கோ…” என எச்சரித்தான்.
“நீ எனக்கு மாமாதான.. நா பிறந்ததில் இருந்து அப்படித் தான் கூப்பிட்டு பழக்கம்… புதுசா அப்படி கூப்பிடாதனு சொன்னால் நா என்ன செய்யட்டும்…” அழுகையில் உதடு பிதுங்க சொன்னாள்.
அழுது மயக்கி நடிக்கிறாள் என நினைத்துக் கொண்டு,”இந்த மாய்மாலம் எல்லாம் காட்டாதே… எனக்கு உம்மை பத்தி தெரியும்… உம் நடிப்பை பத்தி தெரியும்…” என்று சொன்னவுடன், எங்கிருந்து கோபம் வந்ததோ என்று தெரியவில்லை… “நா எம்பட வாயால இனி மாமா என்று கூப்பிட்டால் பாருங்க…” என கோபமாக சொல்லிவிட்டு விடு விடுவென வீட்டிற்கு கிளம்பினாள்.
போகும் வழியெல்லாம் அவனை அர்சித்துக் கொண்டே சென்றாள்.”நா எப்படி ஆசயா மாமா என்று கூப்பிட்டே… அதுக்கு இவன் என்னய எப்படி நடிக்கிறானு சொல்லாம்… ஆளைப் பாரு… மூஞ்சிய பாரு… இஞ்சிய தின்ன குரங்காட்டம்… சத்தியமா இவன எல்லாம் இனி மாமானு கூப்பிடமாட்டேன்…”
வீட்டிற்கு வந்ததும் கண்ணில் பட்ட சாமானை எல்லாம் போட்டு உடைத்தாள். “ஏன்டி… இப்படி எல்லாத்தயும் போட்டு உடைக்கிறவ…” என மந்தாகினிக் கேட்டார். அவர் இவ்வளவு நாள் கழித்து பள்ளிக்கு செல்லவும், கூடப் படித்து பிள்ளைகள் ஏதோ கிண்டல் செய்யதுவிட்டார்களோ… அந்த கோபத்தில் பாத்திரங்களை போட்டு உடைக்கிறாளோஎன நினைத்துக் கொண்டு எதுவும் கேட்கவில்லை. ஒருவேளை அப்போதே கேட்டிருந்தால் கூட பிரச்சனை சிறிதாக இருக்கும் போது கூட பேசி முடித்திருக்கலாம். இப்படி பெரிதாக வளர்ந்து இருக்காது. யாரை குறை சொல்லி என்ன பயன்…