ATM Tamil Romantic Novels

கதைப்போமா காதலே‌.. 18,19

கதைப்போமா 18

 

கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு பிறகு அம்மாவை பார்த்து நவிக்குள் அத்தனை கும்மாளம்!!

 

எவ்வளவு சொன்னாலும் சென்னையில் அவளோடு வந்து தங்க மறுத்துவிட்டார் அவர். “எனக்கு அந்த ஊரும் புகையும் ஒத்துக்கவே ஒத்துக்காது!! இவ்வளவு தண்ணில புழுங்குனவள.. அந்த ஊரு ஒரு பக்கெட் தண்ணில குளிக்க சொன்னா நான் எப்படி குளிப்பேன்?” என்று ஆதங்கப்படுபவர்!!

 

அவ்வப்போது மட்டும் அவளும் அவளது ஃபிரண்ட்சம் சேர்ந்து எடுத்திருக்கும் வீட்டில் இரண்டு ஒரு நாள் தங்கி விட்டு சென்று விடுவார். மும்பைக்கு சென்று வந்ததும் அதுவும் விதுரனின் பாராமுகத்தில் அன்னையை சென்று பார்க்க வேண்டும் என்று தான் அவள் வந்தது.

 

ஆனால் இந்த இரண்டு நாள் பயணம் அவளது மனதை விதுரனின் காதலால் மாற்றிவிட்டது. அதே நேரம் அன்னைக்கு தெரியாமல் காதல் புகுந்த மனது வேறு கள்ளத்தனம் செய்ய சொன்னது.

 

அங்கிருந்த இரண்டு நாளும் தாயிடம் மகளாக கொஞ்சி.. விளையாண்டு.. பிடித்த உணவை சாப்பிட்டு.. நிறைவாக பேசி.. அவ்வப்போது தம்பிக்கு வீடியோ கால் செய்து அவனிடம் அம்மாவின் கையால் உணவு ஊட்டுவதை காட்டி வெறுப்பேத்தி என்று ஏக கலாட்டாக்கள் செய்துவிட்டு தான் சென்னை திரும்பினாள் புத்துணர்வோடு!!

 

இடையிடையில் நவி விதுரனுக்கு செய்த மெசேஜ்கள் எதுவும் பார்க்கப்படாமல் இருந்தது. அவனும் தன் குடும்பத்தோடு தானே செலவிடுவான் என்று அதை பெரிதாக எண்ணிக் கொள்ளவில்லை நவி.

 

இவளை போல் அவன் தனியாக வீடு எடுத்து தங்கவில்லை. பெற்றோருடன் தான் அவன் தங்கி இருக்கிறான் அல்லவா? அதனால் நினைத்த நேரத்தில் எல்லாம் பேச முடியாது என்று புரிந்தவளுக்கு, ‘இரவில் கூட ஒரு மெசேஜ் அனுப்ப தெரியாதா இந்த மட்டிக்கு?’ என்று கோபம் தான். செல்லமாக திட்டிக் கொண்டு வந்தாள் சென்னை வரும் வரை விதுரனை!!

 

சென்னை வந்ததும் மீண்டும் வேலை அவளை சுருட்டிக் கொள்ள.. முன்னை விட அதிகமான ஓட வேண்டி இருந்தது.

 

“டார்கெட்… டார்கெட்..” என்று சொல்லி சொல்லியே ஒரு வழி ஆக்கினார்கள் அவளை.

 

கூடவே அவளது சேல்ஸ் மேனேஜர் கிருஷ்ணா வேறு “நவி இந்த மாசம் டார்கெட் 110% நம்ம எம் பண்ணினா தான் அட்லீஸ்ட் 100 % பண்ண முடியும்” அப்படி இப்படி என்று ஏக போதனைகள்!! அனேக அறிவுரைகள்!!

 

இவளோடு மொத்தம் சென்னையை சேர்ந்த மற்ற சக ஊழியர்களும் மாத இறுதியில் நொந்து நூடுல்ஸ் ஆகி போனது தான் மிச்சம்!!

 

“எவன் டா கண்டுபிடிச்சான் இந்த டார்கெட்.. அச்சீவ்மென்ட்.. மன்த் எண்ட் எல்லாம்.. நம்மள போட்டு பாடா படுத்துறான் டா அந்த கிருஷ்ண பரமாத்மா… முடியல.. முடியல!!” என்றான் குரு.

 

“நவி எங்களாலயே முடியல நீங்க எப்படித்தான் இப்படி எங்களுக்கு சமமா ஓடுறீங்க?” என்று சுரேஷ் ஆச்சரியப்பட…

 

“ஏன் நாங்க உங்களுக்கு நிகரானவங்க இல்லையா?” என்று இவள் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு செல்ல..

 

“தெய்வமே!! சண்டை போடுற தெம்பெல்லாம் எனக்கு இல்லவே இல்லை.. நான் கேட்டது இந்த எனர்ஜியை.. சில சமயம் வண்டி ஓட்டி எங்களுக்கே முதுகெல்லாம் வலிக்கும். ஆண்களைப் போல பெண்கள் பிசிகலி அந்தளவு ஸ்ட்ரென்த் கிடையாது தானே? அதனால கேட்டேன் தாயே!! மன்னிச்சிடு!!” என்றதும் மெல்ல புன்னகை பூத்தவள் அவனின் எதிரே அமர்ந்து, அவன் கொறித்துக் கொண்டிருந்த பகோடாவில் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

 

“முடியும் சுரேஷ்!! முடியனும்!! ஏன்னா 65 வயசு வரைக்கும் வெளிநாட்டுல கஷ்டப்பட்டு பொண்ணையும் புள்ளையும் நல்லா படுக்க வச்சா போதும்னு தன் உடம்ப பாத்துக்காம திடீர் ஹார்ட் அட்டாக் இறந்து போன அப்பா.. இருக்கிற கடன் தொல்லை எல்லாம் முடிச்சுட்டு பொண்ண எப்படியாவது கரை ஏத்தனும்னு பாடுபடுற அம்மா.. தனது சொந்த பிசினஸ் தொடங்கும் கனவு எல்லாம் மூட்டு கட்டி வச்சுட்டு எனக்காக துபாய் வெயிலில் கஷ்டப்படும் தம்பி… இது எல்லாம் விட சொந்த பந்தங்களோடு தொந்தரவு டார்ச்சர்கள்.. இதை எல்லாத்தையும் நம்ம எதிர்கொள்ளனுமா.. நாம இதைவிட வேகமாக ஓடணும்!!” என்றவளை கண்டவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

 

“ஏய்.. என்ன உடனே சென்டியா ஆயிட்டீங்க… எல்லாம் சைலன்டா இருக்கீங்க!! எனக்கு பின்னால மட்டும் கிடையாது மேன்.. என்னை மாதிரி ஓடுற ஒரு பெண் மட்டும் இல்ல ஒவ்வொரு ஆண் பின்னாலையும் ஒவ்வொரு குடும்பங்கள் இருக்கு.. அவங்க சுறுசுறுப்புக்கும் அவங்க தான் காரணம்!! அவங்க வாழறதுக்கும் அவங்க தான் காரணம்!!” என்றவளை அவர்களும் ஆமோதிக்க, அதே நேரம் அவர்களது சேல்ஸ் மேனேஜர் கிருஷ்ணாவும் வந்து சேர்ந்தான்.

 

“என்ன எல்லாரும் மன்த் எண்ட் டார்கெட் பிளான் பண்ணிட்டீங்களா? ஒரு பர்சன்டேஜ் கூட குறைக்க கூடாது!! புரியுதா? புரியுதா?” என்று அவன் மீண்டும் ஓட வைக்க அனைவரும் அவனை பாவம் போல் பார்த்தனர்.

 

“இங்க பாருங்க கைய்ஸ்!! நான் சொல்றது எனக்காக மட்டும் இல்லை.. உங்களுக்காக தான்!! இந்த தடவை டார்கெட் நீங்க முடிச்சீங்கன்னா.. பர்சன்டேஜ் வைஸ் தான் நமக்கு இன்சன்டீவ் போடுவாங்க. அப்போ நீங்க வந்து 110% மேல இருந்தா அதோட பர்சன்டேஜே லெவலே வேற தான். நீங்க வேணும்னா கம்பேர் பண்ணி பாருங்க!! 100% வாங்குறவங்களுக்கு 110% வாங்குற உங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை.. அந்த வித்தியாசம் தான் உங்களோட உழைப்பு!! இவ்வளவு நேரம் நீங்க சொன்னீங்க இல்லையா உங்க குடும்பத்திற்கான நிறைவு.. அது தான்!!” என்றதும் அதுவே அவர்களுக்கு பூஸ்ட் கொடுத்த உணர்வைத் தர மீண்டும் தங்கள் ஓட்டத்தை தொடர்ந்தனர்.

 

இவர்கள் மட்டுமல்ல உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொருவரின் ஓட்டத்திற்கு பின்னேயும் அவர்கள் குடும்பமும் குடும்ப நலமும் மட்டுமே!!

 

அந்த மன்த் எண்ட் அவர்கள் சேல்ஸ் மேனேஜர் கிருஷ்ணா சொன்னது போல வெற்றிகரமாக 112% என்று இவர்கள் முடித்து விட.. அனைவருக்கும் அன்று இரவு டின்னர் கிருஷ்ணாவுடையது என்று கூறி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.

 

அவ்வப்போது சிறு சிறு உபசரிப்புகள்.. கண்டிப்புகள்.. கூடவே இம்மாதிரி சர்ப்ரைஸ்கள் கலந்ததுதான் வேலை மட்டும் அல்ல!! வாழ்க்கை கூடவும்!!

 

சனிக்கிழமை இரவு முதலில் இவளுக்கு டின்னர் முடித்து அனுப்பி விட “ஓய் என்ன தண்ணி பார்ட்டியா? அனுபவிக்கிறீங்க டா நீங்க!! நடத்துங்க.. நடத்துங்க.. ஆல்கஹாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குடிங்க டா.. அப்படியே குடிச்சு குடலு அவிஞ்சு போயிடாம” என்று பொறுமலுடன் சென்றவளின் கையில் ஃபேமிலி பேக் ஐஸ்கிரீமை அந்தோணி திணிக்க.. முகம் முழுவதும் புன்னகை பூசிக் கொண்டது நவிக்கு.

 

“எங்க இப்ப சொல்ல உன் சாபத்தை?” என்றதும்..

 

“அதுதான் மனச ஐஸ்கிரீம் கொடுத்து குளிர வச்சுட்டியே மகராசா… இனி உன்னை சபிப்பேனா? ஆல்கஹாலை குடித்து ஆனந்தமா இருங்கடா!!” என்றவளை கேப்பில் ஏற்றிவிட்டு இவர்கள் தங்கள் தீர்த்தவாரிக்கு சென்றனர்.

 

இவளோடு இன்னும் இரண்டு பெண்கள் சேர்ந்து தான் ஒரு வீட்டை வாடகை எடுத்து தங்கி இருந்தனர்.‌ தந்தை இறந்த உடனே ஹாஸ்டலை விட்டு வெளிவந்து அன்னையை அழைத்துக் கொள்ள வீடு பார்த்து இவள் தங்க.. இங்கே வந்த இரண்டே மாதத்தில் அவர் இருக்க இயலாமல் சென்றுவிட.. தனியாக இருக்க முடியாமல் இரண்டு தோழிகளையும் சேர்த்துக் கொண்டாள் நவி.

 

ஃபேமிலி பேக் ஐஸ் கிரீம் வைத்து மூவரும் ரவுண்டு கட்டி கொண்டு இருந்தார்கள். நவியின் கண்கள் எல்லாம் அவளது ஃபோனில் தான். 

 

‘சனிக்கிழமை இரவுமா இவன் பிஸியாக இருப்பான்?’ எத்தனை முறை முயன்றும் அவளது அழைப்பு ஏற்கப்படவே இல்லை!! எத்தனை முறை மெசேஜ் அனுப்பியும் அது பார்க்கப்படாமல் இருந்தது.

 

சில சமயம் பார்க்கப்பட்டாலும் அதற்கு பதிலும் இல்லை. என்ன இவன் எப்படி இருக்கிறான் என்று கூட சொல்ல மாட்டேங்கறானே? என்று ரொம்ப வருத்தினாள் பெண். கோயம்புத்தூரில் இவனது கொலீகை பிடித்தால் என்ன? என்று எண்ணம் தோன்ற.. யாரிடம் நம்பர் வாங்குவது என்று யோசிக்க.. இவளது நண்பர்கள் எல்லோரும் இப்பொழுது தீர்த்தவாரியில் அல்லவா இருப்பார்கள்.

 

“அவனுங்கிட்ட நம்பர் வாங்க முடியாது.. என்ன செய்ய?” என்று யோசித்து இரவை நெட்டி தள்ளியவள்.. மறுநாள் காலை அந்தோணிக்கு போன் செய்ய அவனும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க போன் எடுக்கப்படவில்லை.

 

“எருமை நல்லா குடிச்சிட்டு தூங்குறான் போல.. தண்ணி லாரிங்க.. தண்ணி லாரிங்க..” என்று திட்டி விட்டு எழுந்து தலைக்கு ஊற்றியவள், அந்த வர வேலைகளை முடித்துவிட்டு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டாள் அமைதியை தேடி..

 

மனதில் எந்த பிரார்த்தனையும் இல்லை அவளுக்காக!! அனைத்தும் அவனுக்காக மட்டுமே!!

 

“என் விதுரன் நன்றாக இருக்க வேண்டும் தாயே.. பத்து நாளாக பேசவே இல்லை.. எப்படி இருக்கான் தெரியல.. நீ தான் அவனை பார்த்துக்கணும்!!” என்று வேண்டுதல் மட்டுமே!!

 

 பிரார்த்தனை முடித்து பிரகாரத்தில் அமர்ந்தவள் மனதில் விதுரனுக்கு ஏதோ பிரச்சனை என்று உள் மனம் கூறிக் கொண்டே இருந்தது. இல்லை என்றால் எத்தனை நாளில் தன்னிடம் ஒரு வார்த்தை பேசாமல் இருக்க மாட்டானே? அதுவும் காதல் சொன்ன பிறகு எவ்வாறு இருக்க முடியும்? என்று மனம் அலைபுற.. 

 

கண்களை மூடி 108 முறை அம்மன் பெயரை உச்சரித்தவள் அதன் பின்னே அவள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தாள்.

 

இவள் வீட்டிற்குள் நுழைய அங்கே காரிடரில் அமர்ந்திருந்த பெண்மணியை கண்டதும் தேங்கி நின்றது இவளது கால்கள்!!

 

“நீங்க..” என்று இவள் விசாரிக்க எழுந்தவரும் அவளைத்தான் அங்குலம் அங்கலமாக பார்த்து “என் பேரு லட்சுமி மா!” என்றதும் இவள் கைகூப்பி “வணக்கம் மா சொல்லுங்க!!” என்றாள்.

 

“நான் விதுரன் அம்மா!!” என்றதும் ஒரு நிமிடம் சந்தோஷம் மின்னிய அவள் கண்களில் அடுத்த நிமிடமே அது கலக்கமாக மாறியது.

 

“உன்னிடம் கொஞ்சம் பேசணுமே? அதுவும் தனியா!!” என்றதும் உள்ளே இவள் தோழிகள் இருவரும் இவளை தான் குறுகுறு என்று பார்க்க “ஒரு நிமிஷம் மா!!” என்றவள் உள்ளே சென்றாள்.

 

“யாருடி இவங்க? வந்ததும் உன்னை தான் கேட்டாங்க.. நீ கோவிலுக்கு போயிருக்கேன்னு சொன்னோம். ஒரு வார்த்தை கூட எதுக்கு வந்தாங்கன்னு சொல்லல.. உன்ன தான் பாக்கணும்னு ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க!! யாரும் தெரிஞ்சவங்களாடி? சொந்தக்காரங்களா?” என்று இருவரும் மாத்தி மாத்தி கேள்வி கேட்க…

 

“ஆமாண்டி.. விதுரனோட அம்மா!!” என்றாள் சிறு வெட்கத்தோடு…

 

“ம்ம்ம்.. என்னடி மாமியாரே தேடி வந்திருக்காங்க?” என்று ரூபா மகிழ்ச்சியாக சொன்னாலும் புவனாவோ அவளை பார்த்து “ஏதோ சரியில்லை நவி.. இவ்வளவு தூரம் உன்னை தேடி வந்திருக்காங்களே? அதுவும் கொஞ்ச நாளா அவரு உன்னிடம் பேசவில்லை என்று சொன்னாயே?” என்றாள் பதட்டத்தை மறைத்து..

 

“எனக்கும் அது தாண்டி பயமா இருக்கு!! என்ன பண்றதுன்னு தெரியல.. ரொம்ப டென்ஷனா இருக்கு.. தனியா வேற பேசணும்கிறாங்க..” என்றாள் பயந்து..

 

“எல்லாம் நல்லா தான் நடக்கும் பேசிட்டு வா.. ரொம்ப தூரம் வெளியில போகாத! ஓனர் அம்மா மேலே இருந்து பாத்துகிட்டு தான் இருக்கும். அதனால கொஞ்சம் தள்ளி நின்னு பேசிட்டு வா.. அவங்க கூட யாரோ ஒரு ஆள் வந்தாரு.. வெளிய போயிருக்காரு” என்று புவனா அவளுக்கு தைரியமூட்டி அனுப்பி வைத்தாள்.

 

“ஆன்ட்டி..” என்று அவரிடம் டீ கொடுக்க வாங்கி குடித்தவர், “உன்கிட்ட தனியா பேசணும்னு சொன்னேன்!!” என்றார்.

 

*என் பிரெண்ட்ஸ் உள்ள இருக்காங்க ஆன்ட்டி.. நான் கூப்பிடுற வரைக்கும் இங்க வரமாட்டாங்க. வெளியில போய் பேசுறது அவ்வளவு சேஃப் இல்லை. எதா இருந்தாலும் இங்கேயோ சொல்லுங்க ஆன்ட்டி!!” என்றாள் தண்மையாகவே நவி.

 

“உன்னை பத்தி சொல்லேன்!!” என்றார். இவர் எந்த விதத்தில் கேட்கிறார் என்று தெரியாமல் “எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் வல்லம் ஆண்ட்டி!! அம்மா மட்டும்தான். அப்பா இல்லை.. ஒரே ஒரு தம்பி வெளிநாட்டில் வேலை பார்க்கிறான் இப்போது ஆறு மாசமா.. அவ்வளவுதான் வேற சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்ல. இந்த கம்பெனி எல்லாம் கிட்டத்தட்ட ஒரு மூணு வருஷமா வேலை பார்க்கிறேன்” என்றாள்.

 

“ஓ.. அப்போ நீ வீட்டுக்கு ஒரே பொண்ணு!! இவன தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு போய் உங்க அம்மா முன்னாடி நின்னா உங்க அம்மாவால தாங்க முடியுமா? உனக்காக அப்பா இல்லாமல் கஷ்டப்பட்டு வளர்த்தவங்க.. அவங்க மனசு நோக செய்ய முடியுமா? உன்னை நம்பி.. இப்படி பொண்ணுங்க தனியா வீடு எடுத்து தங்குற அளவுக்கு உன் மேல நம்பிக்கை வைத்து அனுப்புனவங்களுக்கு துரோகம் செய்ய முடியுமா? பெண்ண படிக்கறது இந்த காலத்துல பெருசு அதுவும் இவ்வளவு ஊரு தள்ளி உன்னை வேலைக்கு அனுப்பி இருக்காங்க.. அவங்க நம்பிக்கைய நீ தகர்க்க முடியுமா?” என்றவரின் ஒவ்வொரு கேள்வியும் நவியின் இதயத்தை சென்று தாக்கியது.

 

அவர் சொல்வது அத்தனையும் உண்மை தானே? அதற்கு பதில் அளிக்க முடியாமல் தலை குனிந்து அமிர்தவளின் கண்கள் கண்ணீரில் குளமாகின..

 

“உனக்கு தம்பின்னு சொன்னேன்ல.. நீ லவ் மேரேஜ் பண்ணிட்டு போயிட்டா அவனும் வெளிநாட்டுல இருக்கான். உங்க அம்மாவுக்கு ஒரு ஆத்திரம் அவசரம்னா யாருமா பார்ப்பா?” என்றதும் தலை குனிந்து அமர்ந்த பெண் திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள்.

 

“சரி உங்க அம்மா நல்லாவே இருக்கட்டும்!! நானும் ஆண்டவனை வேண்டுகிறேன்.. ஆனால் உனக்கு அப்புறம் உன் தம்பிக்கு பொண்ணு கொடுக்கும் போது இந்த பொண்ணு லவ் மேரேஜ் பண்ணிட்டு போனதுன்னு உங்க சமூகத்தில் சொந்தத்தில் யாராவது வந்து அவனுக்கு பொண்ணு கொடுப்பாங்களா? இல்லை உன் தம்பிக்கு கல்யாணம் பண்ணும் போது இந்த பேச்சு வராமல் இருக்குமா? அந்த சமயம் உங்க அம்மா எவ்ளோ மனசு கஷ்டப்படுவாங்க.. இதெல்லாம் யோசி பார்த்தியா நீ?” என்று நிதர்சனத்தை பொட்டில் அறைந்தது போல அவர் கூட.. பரிதவித்து போனாள் நவனீதா!!

 

*இப்ப சொல்லுமா இதுக்கு மேலயும் உனக்கு விதுரன் வேணுமா?” என்றார்.

 

இப்படி எமோஷனலாக பிளாக்மெயில் செய்தவருக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் வேதனையோடு பார்த்தவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது!!

கதைப்போமா 19

19

 

இதற்குப் பின்னும் விதுரன் வேண்டுமா என்று எமோஷனலாக பிளாக்மெயில் செய்தவருக்கு என்ன பதில் கூறுவது என்று புரியாமல் கண்களில் கண்ணீர் தளும்ப பார்த்தாள் நவி.

 

“இது மட்டும் இல்ல… நான் சாதி மதம் சமூகம் இதெல்லாம் பார்க்கல!! ஆனாலும் அத தாண்டி எங்க வீட்டுல சைவம் தான்.. ஆனா உங்க வீட்ல அசைவம்னு கேள்விப்பட்டேன்!! இப்போதைக்கு இதை பார்த்தா சின்ன விஷயமா தான் தெரியும்!! நாளைக்கு இந்த சின்ன சின்ன விஷயங்கள் தான் நம் கண் முன்னே வளர்ந்து பூதாகரமாக தெரியும்!! இது ஒரு சாம்பிள் தான் இதுபோல நிறைய இருக்குமா…” என்று பெருமூச்சு விட்டபடி அவள் முகத்தை தான் ஆழ்ந்து பார்த்தார் லட்சுமி.

 

“அதற்கு மேல என்ன சொல்ல? ஈன் புள்ளைக்கு வேற வரன் பார்க்கலாம்னு யோசிக்கிறோம்” என்றதும் அதுவரை விழவா நின்றிருந்த கண்ணீர் மொளுக்கு என்று நவியின் கன்னங்களை நினைத்து ஓடியது.

 

“நீ படிச்ச பொண்ணு!! கூடவே தனியா இருந்து நல்லது கெட்டது பாத்துக்கற பொண்ணு!! நீயே யோசி உனக்கே புரியும்?” என்றவர் “சரிமா நான் கிளம்புறேன்!!” என்றார்.

 

“ஒரு நிமிஷம் ஆன்ட்டி இவ்வளவு தூரம் என்னை பார்க்க வந்து இவ்வளோ அறிவுரை எல்லாம் சொன்ன உங்களுக்கு ரொம்ப நன்றி!! உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும்?” என்றவளை, ‘என்ன?’ என்பது போல அவர் பார்க்க.. ஆனால் மனதுக்குள் இந்த பெண் என்ன கேட்டு வைப்பாளோ என்று நிறைய யோசனைகள் அவருக்கு.

 

“விது… விதுரன் நல்லா இருக்கார் தானே?” என்றதும் அவர் என்னென்னமோ எதிர்பார்க்க இந்த பெண் இப்படி கேட்டதும் சொல்ல வார்த்தையின்றி பார்த்தவர் “நல்லா இருக்கான் மா!!” என்றார். அதுவரை கவலை குழப்பம் கண்ணீர் என்று பல பரிமாணங்களை காட்டிய நவியின் முகம் மென் புன்னகையை தத்தெடுக்க.. அதில் தான் எத்தனை அழகு அவள் என்று லக்ஷ்மி ஒரு கணம் வியந்தார்.

 

“இவ்வளவு தூரம் வந்துட்டீங்க சாப்பிட்டு போலாம் ஆண்ட்டி!! அதுவும் நீங்க விதுரனோட அம்மா இல்லையா?” என்றதும் அவர் சங்கடமாக பார்க்க…

 

“ஒரு வேளை சாப்புடுறதுனால உங்கள நீங்கள் மாதிக்க வேண்டியதில்லை ஆன்ட்டி!! உங்க கூட வந்த அங்கிளுக்கு போன் பண்ணி வர சொல்லுங்க” என்று அவள் வெகுவாக வற்புறுத்த..

 

“இல்லமா.. நாங்க வெளியில பாத்துக்குறோம்… இங்க நீங்க பொண்ணுங்களா இருக்கீங்க” என்றதும் மீண்டும் அவரை வற்புறுத்தியே சம்மதிக்க வைத்தாள்.

 

“ஆனால் அங்கிள் வர மாட்டார் மா!” அவர் சாப்பிட சம்மதித்ததை கண்டு புன்னகையோடு “பத்து நிமிஷம் ஆன்ட்டி உள்ள வந்து உட்காருங்க!!” என்று அழைக்க உள்ளே வந்தவரை ஒரு பாய் விரித்து அமர வைத்தவள் தோழிகளுடன் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

 

“என்னடி? என்ன ஆச்சு? ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்று புவனா கேட்க மற்றவள் கண்களும் அதையே பிரதிபலிக்க அதெல்லாம் “ஒன்னும் பிரச்சனை இல்ல டி… அவங்க சாப்பிட்டு போக சொல்லி இருக்கேன். வாங்க சாப்பாடு ரெடி பண்ணலாம்” என்றதும் எப்பொழுதும் ஞாயிறு மதியம் என்றால் இவர்களுக்கு அசைவம் தான்!! 

 

இன்று விதுரனின் அம்மாவிற்காக அது சைவமாக மாற “நீங்க அரிஞ்சு மட்டும் கொடுங்க நான் சமைக்கிறேன்” என்றவளை இருவரும் குறுகுறுப்போடு பார்க்க “போங்கடி மைண்ட் வாய்ஸ் ஓட்டாம… சீக்கிரம்” என்றாள்.

 

மனதில் பல எண்ணங்கள் அணிவகுத்து வர…அனைத்தையும் ஓரம் வைத்துவிட்டு சமையலை கவனிக்கலானாள் பெண்!! சமையலும் ஒரு வகை மனதை அமைதி படுத்தக் கூடியதுதான் பலருக்கு.. அந்த பலருள் நவியும் ஒருத்தி!!

 

லட்சுமிக்கு நவியை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அரை மணி நேரத்தில் சமைத்து முடித்தவள் அவருக்கு பரிமாற “நீங்களும் சேர்ந்து சாப்பிடலாமே” என்றதும் “இல்லை ஆன்ட்டி நீங்க சாப்பிடுங்க” என்று அவள் மறுக்க…

 

“தனியா சாப்பிட ஒரு மாதிரி இருக்குமா! என்றதும் அனைவருமே சேர்ந்து உண்டனர்.

 

“சாப்பாடு நல்லா இருந்ததுமா. நான் கிளம்புறேன்” என்றவரை கவனிக்காமல் அவள் மொபைலில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தவள் “ஆன்ட்டி உன்கூட வந்த அங்கிள் பேர் என்ன?” என்றாள்.

 

‘இவள் என்ன சம்பந்தமில்லாமல் பேசுகிறாள்?’ என்று யோசித்தாலும்.. “ஏம்மா… அவர் பெயர் சுந்தரம்!!” என்றார்.

 

“ஓகே ஆன்ட்டி!!” என்று மீண்டும் மொபைலில் கவனிக்க.. என்ன இந்த பெண் நான் பேசுவதை காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறாளே என்று அவளை பார்த்தார்.

 

“அது ஒன்னும் இல்ல ஆன்ட்டி இப்ப நீங்க கிளம்பினீங்கனா மிட் நைட் தான் போய் சேருவீங்க.. அந்த டயத்துல உங்க ஏரியாவுக்கு பஸ் இருக்கிறதோ இல்லையோ? அதான் நைட்டு ட்ரெயின் புக் பண்ணி இருக்கேன்!! ஸ்லீப்பர் தான். ரிலாக்ஸா போகலாம்.. இங்கிருந்து 6 மணிக்கு கிளம்பின சரியா இருக்கும். 8 மணிக்கு தான் ட்ரெயின்” என்று அவள் சடசடவென பல திட்டங்களை போட இப்பொழுது அவளை வியந்து பார்த்தார் லட்சுமி என்ன பெண் இவள் என்று!!

 

‘நான் வந்த வேலை என்ன? அவளிடம் தான் சொன்ன விஷயத்தில் சாராம்சம் என்ன? கடைசியில் இது நடக்கவே நடக்காது என்று சொன்னது என்ன? அனைத்தையும் கேட்டுவிட்டு நமக்கு விருந்தோம்பி.. கடைசியில் போவதற்கு ட்ரெயினிங் புக் செய்கிறாளே!!” என்று வாயை பிளந்தார்.

 

லட்சுமி மட்டுமல்ல அவளது தோழிகளுமே அவளைத்தான் ‘இவ என்ன நினைக்கிறாள்னு தெரியவில்லையே?’ என்று தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

அவர்களையெல்லாம் கவனிக்காமல் “கொஞ்ச நேரம் படுக்குறீங்களா ஆன்ட்டி?” என்று அவர் சிரம பரிகாரத்திற்கு அவள் வேலை செய்ய இன்னும் அசந்து தான் போனார் லட்சுமி.

 

“அங்கிளுக்கும் ஃபோன் பண்ணி சொல்லுங்க ஆன்ட்டி.. இங்கே வாசல்ல வேணும்னா வெயிட் பண்ணட்டும்” என்றதும், அவர் ஃபோனை எடுத்துக் கொண்டு வாசலுக்கு சென்று பேசிவிட்டு வந்தவர் “இல்லம்மா அவர் பக்கத்துல இருக்குற பார்க்கல இருக்காராம்” என்றார்.

 

“சரி ஆன்ட்டி” என்று அவர் படுக்க உதவியவள், தானும் அருகில் படுத்து கொண்டு “படுங்கடி!! சண்டே மதியம் தூங்குவதெல்லாம் பெரும் பாக்கியம்.. மிஸ் பண்ணாதீங்கடி அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க” என்று அவளின் கேலி குரலில் தோழிகளும் அவள் அருகிலேயே படுக்க…

 

“ஈவினிங் ஆன்ட்டியை விடப் போகும்போது அப்படியே டி நகர் வரைக்கும் போயிட்டு வந்துடுவோம்டி!! ஷாப்பிங் போய் ரொம்ப நாள் ஆகிறது டி” என்றவளின் மனதை அங்கிருந்து மூன்று பெண்களாலும் கணிக்கவே முடியவில்லை!!

 

அதன்படி ஐந்து மணிக்கு எழுந்தவள் ரெடி ஆகி அவரையும் எழுப்பி விட்டு சூடாக இஞ்சி டீ போட்டுக் கொடுத்து நால்வரும் கிளம்ப.. “பரவால்ல மா.. அங்கிளுடன் நான் போகிறேன்” என்றவரை வம்படியாக கார் புக் செய்து அழைத்துக் கொண்டாள். போகும் வழியில் பார்க்கில் இருந்த அங்கிளையும் அள்ளிப் போட்டுக் கொண்டது இவர்கள் சென்ற கேப்!!

 

இருவருக்கும் தண்ணீர் பாட்டிலும் இரவு உண்பதற்கு இலகுவான உணவையும் வாங்கிக் கொடுத்தவளை கண்டு லட்சுமிக்கு தான் பெரும் குற்ற உணர்வாய் போனது. ஆனால் அதுதான் அவள் கண்டு கொள்ளவே இல்லையே!!

 

அவர்களை கோச்சில் அமர வைத்துவிட்டு “விருந்தோம்பல்.. நம் தமிழர் பண்பாடு!! அதுவும் நான் தஞ்சாவூர் காரி ஆன்ட்டி!! ஒரு காலத்தில் உலகுக்கே சோறு போட்டவங்கனு எங்க அம்மா சொல்லுவாங்க.. அந்த வழக்கம்தான்” என்று சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், பின்பு நிமிர்ந்து லட்சுமியை கூர்ந்து பார்த்தாள். அதுவரை இருந்து அவளின் பாவம் அல்ல இது புதிய பாவம்!!

 

“அப்புறம் ஆன்ட்டி.. நீங்க கேட்டீங்க இல்லையா? இதுக்கு அப்புறம் விதுரன் வேணுமான்னு…” என்று நிறுத்தி அவரை நிதானமாக பார்த்தாள் நவி.

 

“விது.. விது தான் வேணும்!! கண்டிப்பா… அவன் மட்டும் தான் வேணும் எப்பவுமே!!” என்றாள் நிமர்வோடு சற்றே குறும்போடு!!

 

“நீங்க லவ் மேரேஜ் தானே!! அவர் ஒரு தரம் என்கிட்ட சொல்லி இருந்தாரு… அதுவும் அங்கிள் உங்களை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணாராம்!! அந்த கஷ்டமெல்லாம் என் விதுவுக்கு நான் வைக்க மாட்டேன் ஆன்ட்டி” என்று கண்களில் குறும்பு கொப்பளிக்க சிரித்தவளை என்ன சொல்வது என்று இருவரும் தெரியாமல் பார்க்க…

 

“என் காதலை என் அம்மாவிடம் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் கிடையாது ஆன்ட்டி!! ஏன்னா நான் தப்பு செய்யல.. ஒருத்தர் மேல காதல் எந்த புள்ளியில் எந்த சந்தர்ப்பத்துல வரும்னு யாருக்கும் தெரியாது!! அது மாதிரி எனக்கு விது மேல வந்ததும்.. இதில் என்ன தவறு என்ன இருக்கிறது.. எனக்கு புரியவில்லை!! இது இயற்கை ஆன்ட்டி!! ஆண் பெண் ஒருத்தரை ஒருத்தர் விரும்புவதும் காதல் கொள்வதும்.. 

 

முறையா செய்து வைக்கிற கல்யாணத்துல வராத வேறுபாடுகளா லவ் மேரஜில வந்திட போகுது? அப்படியே வந்தா வரட்டுமே… வரணும்!! அதுதான் எங்கள் காதலை சோதிக்கும் காய்கள்.. அதையும் நாங்கள் கடந்து வருவோம்!!” என்றவளின் பேச்சில் அவ்வளோ தெளிவு!!

 

“போய் உங்க பிள்ளை கிட்ட சொல்லுங்க.. அவர் எதிர்பார்த்த மாதிரியே.. அவர் பொண்டாட்டி அவங்க அம்மா அப்பாவை தைரியமா எதிர்கொண்டு நல்லபடியா பார்த்து அனுப்பி வச்சானு!!” என்றதும் லட்சுமிக்கு ஒரு கணம் ஆடி தான் போனது மனது!! இதே வார்த்தை.. இதே வார்த்தையை தான் விதுரனும் இவர்கள் கிளம்பி வந்த போது சொல்லி இருந்தான்!!

 

‘எப்படி? எப்படி? இருவரும் ஒரே மாதிரி எண்ணத்திலும் இருக்க முடியுமா?’ என்று காதல் திருமணம் செய்து கொண்ட அவர்களே சற்று வியக்கத்தான் செய்தனர் நவி விதுவின் எண்ண ஒற்றுமையையும் அவர்களது அன்பையும் கண்டு!!

 

இதற்கு மேல் எதை மறைக்க? என்று அவர் நடந்த விஷயத்தை சொல்ல முனைய… “வேண்டாம் ஆன்ட்டி இதுவரை தெரியாதது தெரியாததாகவே இருக்கட்டும்!!” என்றாள். அதே நேரம் வண்டி கிளம்புவதற்கான விசில் ஊதப்பட்டதும் திரும்பி அவரை பார்த்து “உடனே உங்க பிள்ளைய நாளைக்கு வந்து நிக்க சொல்லாதீங்க!!” என்றாள் போகிற போக்கில்..

 

பக்கென்று சிரிப்பு சிரித்துக்கொண்டார் சுந்தரம் மனைவியின் முகத்தை பார்த்து.. இது தேவைதானா உனக்கு என்று!!

 

திருச்சியில் இருந்து செல்லும் போது அர்த்த ஜாமம் ஆகியது விதுரன். அவனும் அவன் தம்பியும் பயன்படுத்தும் அறையில் படுத்தவன் அவளுக்கு குட் நைட் மற்றும் சில பல முத்த ஸ்மைலிகளையும் அனுப்பி வைத்தவன் ஆழ்ந்த உறக்கத்தில்..

 

காலையில் அலாரம் சத்தத்தில் எழுந்த விதுரனின் தம்பி விகர்ணன் அண்ணனை பார்த்து மகிழ்ந்து சத்தம் போடும் ஃபோனில் அலாரத்தை ஆப் செய்தவன் கை பட்டு கேலரி திறந்து கொள்ள.. அதில் நவியும் விதுரனும் சேர்ந்த ஃபோட்டோக்கள் சற்று அதிர்ச்சியாகி உள்ளே பார்த்தவனுக்கு இன்னும் பேரதிர்ச்சி!!

 

ஒன்றாக இவர்கள் கூபேயில் பயணம் செய்த போது தன் கைவளைவில் தூங்கிய பெண்ணுக்கு தெரியாமல் ஒரு சில செல்பிக்களை எடுத்து இருந்தான் விதுரன்!!

 

அவ்வளவு அந்தரங்கம் இல்லை என்றாலும் அண்ணனின் கை வளைவில் தூங்கும் பெண்.. முதலில் இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று விகர்ணனுக்கு தெரியவில்லை. எழுந்ததும் அண்ணனிடம் கேட்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயம் உள்ளே வந்த லட்சுமியும் இதை பார்த்துவிட… அவ்வளவுதான் வெடித்தது பூகம்பம் அங்கே!!

 

என்னதான் காதல் திருமணமே செய்திருந்தாலும் அதன்பின் அவர்கள் பட்டப்பாடு கொஞ்சம் நெஞ்சம் இல்லை. அதைப்போல தன் பிள்ளைகளுக்கும் நடந்து விடக்கூடாது என்பது தெளிவாக இருந்தார். அதிலும் இப்போதெல்லாம் காதல் என்று வரும் பிள்ளைகள் அடுத்த மூன்றே மாதத்தில் கோர்ட்டுப்படியில் விவாகரத்தோடு பிரிவதை கண்டவருக்கு.. இவர்கள் கொண்டிருப்பதெல்லாம் வெறும் லஸ்ட் என்றுமே நினைத்திருக்க… அவரது சீமந்திர புத்தரனும் இதோ காதல் வலையில் விழுந்து விட்டான் என்று உரக்கக் கூறியது அவன் எடுத்த செல்பிக்கள்!!

 

அவன் எழும்பரை அமைதியாக இருந்தவர், அவன் எழுந்து சாப்பிட்டதும் “விதுரா உனக்கிட்ட பேசணும்!!” என்றார்.

 

அன்னையின் முகமே சரியில்லாதது கண்ட விதுரனும் அமைதியாக எதிரில் நிற்க.. அதற்குள் தோட்டத்திற்கு சென்று வந்த சுந்தரமும் வந்து விட்டார். ஏற்கனவே அவரிடமும் விஷயத்தில் மெவாக சொல்லி வைத்திருந்தவர் அவன் முன்னே செல்போனை தூக்கி போட கொஞ்சம் விதிர்விதிர்த்து போனான் விதுரன்.

 

அந்த பயம் அவன் கொண்ட காதலால் அல்ல.. அந்தரங்கமாக எடுத்த புகைப்படத்தால்!!

 

அதுக்கு அடுத்தது எவ்வளவு எதிர்ப்புகள்.. கேள்விகள் ஏமாற்றங்கள்.. அழுகை.. கோபம் என்று அனைத்தையும் கொட்டி விட்டார் லட்சுமி.

 

“அம்மா நீங்க நினைக்கிற மாதிரி இது வரும் இன்பாக்சுவேஷனோ லஸ்டோ கிடையாது. சரி ஒத்துக்கிறேன்… நேத்து நான்தான் அவளை கம்பல் பண்ணி கூபேயில கூட்டிட்டு வந்தேன். கிட்டத்தட்ட மூணு வருஷம்… மூணு வருஷமா அவள காதலிக்கிறேன். அவளும் அப்படித்தான்!! ஆனா இதுவரை அவகிட்ட பகிர்ந்தது இல்லை!! ஆனால் இனியும் அது போல இருக்க முடியாது என்று தான் ட்ரைனிங் முடித்து வரவும் சொல்லிட்டேன்!! புரியுது… எனக்கான கடமைகள் அணிவகுத்து நிற்கிறது என்று புரியுது… அதற்காக என் காதலை… என் வாழ்க்கையை என்னால் விட முடியாது!! எனக்கு இருப்பது போல தான் அவளுக்கும் பொறுப்புகள் இருக்கு… எங்கள் பொறுப்புகளை நாங்கள் இருவருமே கைகோர்த்து பார்ப்போம்” என்றவனின் தெளிவான பதிலில் சற்று ஏமாந்து போனார் லட்சுமி.

 

அவர் திருமணம் தான் யாரும் அறியாமல் கோவிலில் நடந்தது என்றால் பிள்ளைகள் திருமணம் வெகு சிறப்பாக நடக்க வேண்டும் என்பது அவரது கனவு. கூடவே அவரது திருமணத்தால் தள்ளி சென்ற உறவுகளை எல்லாம் மகனின் திரும்ப மூலம் திரும்ப அழைத்து விடும் வேகமும் நெடுநாளைய கனவும் அவரது!! அதையெல்லாம் மகன் தூள் தூளாய் தகர்த்ததை எண்ணி அவரால் தாள முடியவில்லை.

 

“இதெல்லாம் நம்பற மாதிரி கிடையாது.. கண்ணில் இருந்து மறைந்தால் கருத்தில் இருந்து மறைந்து விடும் விதுரா… இப்போ உள்ள இந்த இன்டர்நெட் உலகில் உங்களால மூணு நாள் பேசாம இருந்தாலே உங்க காதலெல்லாம் பிச்சுக்கிட்டு போயிடும்” என்று அவர் சற்று ஏகத்தாளமாக கூற.. அன்னை தன் காதலை பரீட்சித்துப் பார்க்க எண்ணுகிறார் என்று எண்ணியவன் தன் ஃபோனை திருப்பி அவரிடமே கொடுத்தான்.

 

“என்னது மட்டும் இல்லை அவளுடைய காதலும் உண்மையானது!! வெறும் ஒரு வாரம் மெசேஜோ காலோ செய்யாததினால் எங்கள் நேசம் அழியாது. நீங்களா இந்த ஃபோனை திருப்பி கொடுக்கிற வரைக்கும். அவளுக்கு நான் மெசேஜ் போன் பண்ண மாட்டேன்!! வேறு யார் போனில் இருந்தும்.. இது என் காதலுக்கான என் அக்னி பரீட்சையாகவே இருக்கட்டும்” என்றவன் அது போலவே பத்து நாட்கள் கம்பெனிக்கு விடுமுறை எடுத்து வீட்டு வேலை.. தோப்புத்துறை என்று இருந்தானே ஒழிய மருந்துக்கும் யாரிடமும் பேசவில்லை.

 

பத்து நாள் முடியவும் மகனிடம் முகத்தை பார்க்க… இன்னும் இன்னும் அது காதலால்.. அவள் மீது கொண்ட நம்பிக்கையால் மிளிர்ந்தது!! அதை கண்டு வியந்தார் லட்சுமி.. அவரும் ஒருவரை மனம் உருகி காதலித்து திருமணம் முடித்தவர் தானே!!

 

அவர் மகனின் காதலை நேரில் கண்டுவிட்டார். தன் பிள்ளை அளவு அந்தப் பெண்ணும் மகன் மீது காதல் கொண்டுள்ளாளா என்பதை அறியத்தான் இந்த சென்னை விஜயம்!!

 

அதுவும் அவளது குற்ற உணர்வை தூண்டிவிட்டு சமூகத்திடம் எவ்வாறெல்லாம் அவள் வதைபட வேண்டும் என்பதை தன் திருமணத்தில் கண்டதை எல்லாம் கூறி அவளின் மனதை மாற்ற செய்ய.. முதலில் குழம்பித் தவித்தவள் பின்பு தெளிந்துவிட்டாள் போல அவளது நடவடிக்கைகள் அவரை ஆச்சரியப்படுத்தின!!

 

மகனின் தேர்வு சோடை போகவில்லை என்பதை அறிந்து அவருக்கும் சந்தோசமே!!

 

ஒவ்வொன்றாக அவருக்கு அவள் பார்த்து பார்த்து செய்த விதத்திலும் நேர்த்தியிலும் கொஞ்சம் கூட கலங்காமல் அவள் நின்று நிமிர்விலுமே அசந்தே போய்விட்டார் லட்சுமி!!

 

ட்ரெயின் கிளம்பிய சிறிது நேரத்திலேயே மகனுக்கு அழைத்தார்.

 

“என்னமா? மருமக ட்ரெயின் ஏத்தி விட்டுட்டா போல…” என்று மகன் கேட்க அருகில் இருந்த கணவனை ஆச்சரியத்தோடு பார்த்தார் லட்சுமி.

 

“கண்டதும் காதல் கொண்டு.. கொண்டதே கோலம் என்று கொண்டு நாங்கள் இல்லை மா.. சிறுக சிறுக சேர்த்து.. நெஞ்சில் கோர்த்து.. மூன்று ஆண்டுகள் தவமிருந்து கிடைத்த வரம் அவள் எனக்கு!! அவளைப் பற்றி எனக்கு தெரியாதா என்ன?” என்று மகனின் புரிதலில் பச்சைக்கொடி காட்டினார் லட்சுமி.

 

“மகனே கடைசியாக ஒன்னு சொல்ல சொன்னாடா என் மருமக என்று சுந்தரம் கூறியதும்..

ஆவலோடு என்ன என்று விதுரன் கேட்டான்.

 

“நாளைக்கு வந்து நிக்க வேணாம்னு உங்க பிள்ளை கிட்ட சொல்லுங்க ஆன்ட்டி என்று சொல்லிட்டு போனா டா!!” என்று அவர் சிரிக்க… அங்கே அவனோ பல்லை கடித்தான்!! கூடவே கொஞ்சம் நெஞ்சில் பயம்..

 

“செம கோவத்துல இருக்கா போலே ராட்சசி?? இவள எப்படி மலை இருக்க போறேன்னு தெரியலையே?” என்றவன் விடியல் நவ்னீதாவின் வீட்டில் தான் விடிந்தது!!

 

கதைப்போமா???

2 thoughts on “கதைப்போமா காதலே‌.. 18,19”

  1. Vani Prabakaran

    So so so beautiful episode 😍😍 Nivi and Vidhu amazing pair…Janvi sis unga story naley positive thoughts thaan…love it a lot❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top