ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 7

7

 

மதுரையின் முக்கிய பகுதியான சிம்மக்கல்லில் அமைந்திருக்கும் மிகப் பெரிய வீடு அது!! அழகுசுந்தரத்தின் வீடு!! அந்த காலக் கட்டிடக்கலையும் இக்கால நவீன வசதிகளையும் சேர்த்து பிரம்மாண்டமாக இருந்தது. அதன் இரண்டாம் மாடியில் இருக்கும் பால்கனி போன்ற அமைப்பில் தொங்கிக் கொண்டிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து யோசனையில் மூழ்கியிருந்தாள் நிவேதிதா.

 

கல்லூரி நாட்களில் சிறகடித்துப் பறந்த காலத்தை தான் நினைத்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு அழகான தருணம்.. எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக சுற்றி பறந்த காலம்.. ஆனால் அடுத்த ஆறே மாதத்தில் தன் வாழ்க்கையில் எவ்வளோ மாற்றங்களா? என்று அவளால் நம்பவே முடியவில்லை!!

 

 

அன்னையுடன் சேர்ந்து தொழிலை பார்த்த நேரத்தில் கூட இப்படி ஒரு வெறுமையை அவள் அனுபவித்ததில்லை.

மூச்சு முட்ட வேலை இருக்கும்.. 

கூடவே அன்னையின் கண்டிப்பு இருக்கும்.. எதற்கும் அவர் முகம் பார்த்தே செயல்பட வேண்டியிருக்கும்.. ஆனால் இம்மாதிரியான இறுக்கமான சூழல் இல்லை.

 

இப்போது அவள் மனம் பூராவும் தனது தாயுமானவனா மேகநாதனை தான் தேடிக் கொண்டிருந்தது. சற்று நேரம் அவர் மடியில் தலை சாய்த்து படுத்தால் போதும்.. 

மெல்ல தலை வருடி “பேபிமா என்னாச்சு டா?” என்று கேட்டாலே போதும்.. அவ்வளவு இதமாக இருக்கும்.. ஆனால் அழகுசுந்தரம் கண்டிப்பாகச் சொல்லி விட்டார் இங்கே நடந்தது எதையும் சுவாதிக்கோ.. மேகநாதக்கோ யாரும் தெரிவிக்கக்கூடாது என்று!!

 

 

தந்தையின் உடல் நிலை கடந்த 5 ஆண்டுகளாக சரியில்லாதது அவளுக்கும் தெரியும் தானே.. அதனால் அவளும் ஒத்துக் கொள்ள.. இப்போது இங்கே தனியே அமர்ந்து உள்ளுக்குள் மருகி கொண்டு இருக்கிறாள்.

 

 

அந்த சமயம் அவளது செல் போன் அடிக்க வேறு யார் மகளின் மனதை தொலைதூரத்தில் இருந்தும் அறிந்தாரோ என்னவோ மேகநாதன் தான் அழைத்திருந்தார்.

 

“பேபி மா!!” என்று குளறலான பேச்சு தான்..

ஆனால் அவ்வளவு நிறைவாக.. அவ்வளவு தேவையாக இருந்தது அந்நேரத்தில் நிவேதிதாவுக்கு.. 

 

 

“டாட்..” என்றாள் சற்றே கலங்கிய குரலில்..

 

“பேபிமா நல்லா இருக்கத்தானே? ஏன் வாய்ஸ் சரியில்லை” என்று அவர் கவலையாக கேட்க..

 

தன்னை சமாளித்துக் கொண்டவள் “உங்களை எல்லாம் மனசு தேடுது.. உங்களோட பேபி மா.. ஈவினிங் கார்டன் காபி.. தலை கோதி விடுறது.. எல்லாத்தையும் விட என்னோட லேடி ஹிட்லரோட நிவே.. அவங்களோட போடுற சண்டை.. ஆர்க்கியுமென்டஸ்.. அட்வைஸ்.. இப்படி நிறைய நிறைய..” என்று அழுகையும் சிரிப்பும் ஆக அவள் கூற..

 

கலகலப்பாக சிரித்தார் மேகநாதன். “பாத்தியா பேபிமா என்னதான் அப்பா உன்மேல பாசத்தை அள்ளி கொட்டினாலும் உனக்கு உங்க அம்மாவ தான் அதிகமா தெரியுது இல்லையா?” என்று அவர் கேட்க..

 

 

“இல்லை டாட்.. உங்களை தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்றாள் மகள் பாசத்தோடு..

 

“இல்லையே.. நீ சொன்னா பெரிய லிஸ்டில் ரெண்டு மட்டும் தான் என்னது.. மீதி பூராவும் உங்க அம்மாவோடதுதான்.. பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிட்டு அவள தான் உனக்கு உள்ளுக்குள்ள ரொம்ப புடிச்சிருக்கு” என்று கூறி சிரித்தார் மேகநாதன்.

 

“டாட்..” என்று இவள் சினுங்க..

உண்மை அதுதான் பேபி மா..”

 

“அதெல்லாம் இல்லை எப்ப பார்த்தாலும் என்னை அவங்க விரட்டி கிட்டே தான் இருப்பாங்க.. அப்புறம் எப்படி உங்களை விட அவங்க மேல எனக்கு பாசம் வரும்?” என்று யோசனையாக இவள் கேட்க..

 

 

“அப்படி இல்லடா அது!! நான் வளர்ந்த விதம் வளர்க்கப்பட்ட விதம் வேற.. அவ வளர்ந்த வளர்க்கப்பட்ட விதம் வேறு.. என்னதான் உன் மேல அவ கண்டிப்பா இருந்தாலும் அதுக்கு பின்னால இருக்கிறது அன்பு பாசம் மட்டும் தான்.. அடித்து அடித்து புடம்போட்ட தங்கம் தான் மின்னும்.. அதுபோல உன்னை புடம் போட தான் அவளுடைய அந்த கடினமான பேச்சுக்கள் எல்லாம்.. எப்பவுமே ஒருவர் சொல்லிலிருந்து நாம புரிஞ்சுக்கிறதைவிட அவருடைய செயலிலிருந்து புரிஞ்சிக்கிறது தான் அவருடைய உள்மனதை ஈசியா சொல்லும்.. இது என் அனுபவ பாடம்.. இதை நீயும் கடைப்பிடி.. மனிதரை ஈசியா நாம ஐடன்டிஃபை பண்ணிடலாம்..” என்று நீண்ட விளக்கம் கொடுத்தவருக்கு சற்றே மூச்சு வாங்க.. 

 

 

“போதும்.. போதும்.. நீங்க ரொம்ப பேச வேணாம். பாருங்க எப்படி மூச்சு வாங்கறீங்க? பக்கத்துல நர்ஸ் இருக்காங்களா? இல்லையா? கூப்பிடுங்க.. அவங்கள என்னென்ன பார்க்க சொல்லுங்க” என்று இவள் இங்கிருந்து படபடப்பாக பேச…

 

 

“ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ் பேபி மா.. டாட் இஸ் ஆல் ரைட்.. ரொம்ப நேரம் தொடர்ந்து கஷ்டப்பட்டு பேசினது அப்படி ஆகுது.. வேற ஒன்னும் இல்ல..” என்று சமாதானப் படுத்தினார்.

 

“உடம்ப பாத்துக்கோங்க டாட்” என்று இவள் அக்கறையோடு கூற..

 

“பேபி மா.. எந்தக் காலத்திலும் உங்க அம்மாவை வெறுத்துடாதே.. அவ பேசுறது எல்லாம் உன் வருங்காலம் வளம் இருக்கனும் தான்.. விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே ஒரு நூல் இழை தான்.. புரிஞ்சு நடந்துக்கோ டா.. அம்மா கிட்ட பேசு.. ஆயிரம் இருந்தாலும் அம்மா தானே!!” என்று அவர் கூறி வைத்துவிட.. மகளுக்கு மனது பூரா அன்னையின் நினைவே!!

 

 

ஆனால் இப்போது இருக்கும் நிலைமையில் அவரிடம் பேச, அவர் எதேனும் அட்வைஸோ இல்லை உடனே வர சொல்லி ஏதும் கட்டளை இட்டாலும் கண்டிப்பாக மனதில் இருக்கும் கோபத்தை எல்லாம் அவர் மீது தான் காட்டுவேன் என்று நினைத்தவள் அன்னையிடம் பேசுவதை தள்ளிப் போட்டாள்.

 

 

பால்கனியில் சற்று நேரம் உலாவிக் கொண்டிருக்க.. அருகே ஒரு மரத்திலிருந்து சிறிய குருவி குஞ்சு ஒன்று பால்கனி ஸ்லாப்பில் உள்ள வலையில் விழுந்து கடந்து தனது பிஞ்சு குரலில் கத்திக் கொண்டிருந்தது.. மெல்ல எட்டிப் பார்த்தாள். சற்று புரண்டால் கூட கீழே விழுந்து உயிர் போய்விடும் அபாயம் அந்தப் பறவைக்கு.. தாய்ப் பறவையை அந்த குஞ்சியை வட்டமிட்டு கத்திக்கொண்டே பறந்துகொண்டிருந்தது.

 

 

அந்தத் தாய்ப் பறவையின் பரிதவிப்பு ஏனோ அவளை நெகிழ்த்த.. சட்டென்று தான் போட்டு இருந்த சுடிதாரின் சாலை கழட்டி கீழே போட்டாள். மெல்ல அந்த சிலாப்பில் குதித்து வலைக்குள் கிடந்த அந்த குஞ்சினை எடுத்து சுற்றுமுற்றும் பார்க்க.. சற்று மேலே கிளையில் அந்த குருவிக்கூடு தெரிந்தது. அதில் மெல்ல காலை எக்கி அவள் வைத்துவிட.. இப்பொழுது தாய் புறவின் கூக்குரலோ சந்தோஷ குரலாக மாறியது.

 

அதைப் பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு தன் உள்ளத்தில் உள்ள மனக் கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போக.. தன் நிற்கும் இடத்தை மறந்து அதை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

 

 

அந்த நேரம் பார்த்து இவளைப் பார்க்க வந்த தனபாக்கியமும் வசீகரனும் இவள் பால்கனி நிற்பதை பார்த்து அவள் ஏதோ தவறான முடிவு எடுக்கிறாள் என்று நினைத்து..

 

 

“ஐயையோ ஓடிவாங்க.. ஓடிவாங்க.. சீக்கிரம் யாராவது ஓடிவந்து என் மருமகள காப்பாற்றுங்க.. பாப்பா தப்பான முடிவு எடுக்கப் போறா.. அண்ணே மதனி மருது ஓடி வாங்க.. சீக்கிரம் ஓடி வாங்க” என்று அவர் கூப்பாடு போட..

 

 

வசீகரனோ “நான் இருக்கும் போது நீ ஏன் மா அவங்களை எல்லாம் கூப்பிடுற” என்று தன்னை ஹீரோவாக பாவித்து..

 

 

“இங்க பாரு நிவேதா எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு கிடையாது. ஏதாவது இருந்தாலும் நாம பேசி சரி பண்ண முடியும். சரி பண்ண முடியாத விஷயமே வாழ்க்கையில இல்லை” என்று அவன் பக்கம் பக்கமாக டயலாக் பேசிக் கொண்டே இருக்க..

 

நிவேதாவுக்கு ஒன்றும் புரியவில்லை இந்த பக்கி என்ன பேசுகிறான் என்று!!

 

அவளோ இன்னும் சிலாப்பில் இருந்து பால்கனி கட்டையில் சாய்ந்துகொண்டு அவனையே உத்து பார்க்க..

 

 

தன் பேச்சைக் கேட்டு அவளது மனம் மாறிவிட்டாள் என்று நினைத்தவன் “அப்படித்தான்.. அப்படித்தான்.. கொஞ்சம் கொஞ்சமாய் மேலேறி வந்து விடுமா.. வா.. வா.. மாமா உன் கைய புடிச்சுகிறேன். மேலே ஏறி வா வா நிவேதா வா…” என்று இருக்கும் இடத்தில் இருந்து ஒரு இன்ச் கூட நகராமல் கையை மட்டும் நீட்டி அவளை பிடிக்க முயல..

 

 

அப்போதுதான் இவர்கள் இருவரும் தான் தவறான முடிவுக்கு செல்வதை நினைத்து கூப்பாடு போடுகிறார்கள் என்று நினைத்தவள் அவன் கையை வேகமாக தட்டி விட்டாள். 

 

 

“ஐயோ மருமகளே.. நீ எந்த தப்பான முடிவுக்கும் போகாத.. அந்த பாவிப்பய செஞ்சதுக்கு உன் வாழ்க்கை இதோடு முடிந்து விடாது.. உன் மாமா இருக்கான் உனக்கு வாழ்க்கை கொடுக்க.. உன்னைய ராணி மாதிரி கையில வச்சு தாங்குவான்.. அத்தை உன்னைய பொண்ணு மாதிரி பாத்துக்குவேன்.. மேலே எதிரி வந்துடா நிவேதா.. என் தங்கம்ல” என்று அவர் உருகி கரைய..

 

இருக்கிற என் நிலைல இவங்க இம்சை வேற எந்த நினைத்தவள் பால்கனி தண்டில் கையை வைத்து சரேலென்று ஒரே ஜம்ப் ஆக அந்த பக்கம் வந்து குதித்தாள்.

 

அவளது இந்த சாகசத்தை விழி தெறிக்க பார்த்துக்கொண்டு நின்றான் வசீகரன்.

 

இவர்கள் போட்ட சத்தத்தில் மொத்த குடும்பமே அங்கு ஆஜராகி விட..

 

சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த தனபாக்கியம் தனது அண்ணன் அழகு சுந்தரத்தை பார்த்து “ஐயோ அண்ணே.. என் மருமக அந்தப் பயல் செஞ்ச விஷயத்துல பாதிக்கப்பட்டு தற்கொலை வரைக்கும் போயிட்டாண்ணே.. என் மகன் இல்லேன்னா இந்நேரத்துக்கு அவ இங்கன இருந்து குளிச்சிருப்பா… நம்ம மருமக நம்ம கைக்கு கிடைத்து இருக்கவே மாட்டா..” என்று வராத அழுகையை வரவழைத்து முந்தானையால் மூக்கை சிந்தி கொண்டு அண்ணனின் தோள் புஜத்தில் தன் முகத்தை வைத்து குலுங்கி குலுங்கி அவர் அழுக..

 

 

ஆச்சரியத்துடன் வாயைப் பிளந்து பார்த்தாள் நிவேதிதா.. இந்த மாதிரி டிராமா எல்லாம் அவள் வளர்ந்த நாட்டில் அவ்வளவாக பார்த்ததில்லை.

 

 

தனபாக்கியம் சொன்ன விஷயத்தை கேட்டு அழகுசுந்தரமும் புனிதாவும் பயந்து தங்கள் மகள் அருகே ஓடி வர..

 

“ஏன்மா இப்படி எல்லாம் பண்ணுன.. எங்களுக்கு இருக்கிறது நீ ஒரு பெண் வாரிசு டா.. நீ இப்படி பண்ணினா உங்க அப்பாவோட நிலைமை யோசிசியா? உங்க அம்மாவோட நிலைமையை யோச்சியா?” என்று புனிதா கலங்கிய விழிகளுடன் அவளிடம் கேட்க..

 

அழகுசுந்தரமோ தன் பங்கிற்கு “என்னடா இது?” என்று தழுதழுக்க கேட்க..

 

நல்லவேளை அப்பத்தா உடல்நிலை குறைவால் இன்னும் படுக்கையில் தான் இருந்தார். அவர் மட்டும் இந்நேரம் இருந்திருந்தால் அடுத்த ஒரு ஒப்பாரி கன்ஃபார்ம்.

 

மேலும் மருதுவும் வெளி வேலை என்று சென்று இருந்தான். அவன் இருந்திருந்தால் இந்நேரம் தங்கை செய்ததற்கு காரணம் வெற்றியும் கதிரும் தான் என்று அவர்களிடம் ஏதாவது செய்யப் போய் நன்றாக வாங்கி கட்டி இருப்பான்.

 

 

புனிதாவும் அழகுசுந்தரமும் பேசப்பேச தனபாக்கியமோ இன்னும் குரலெடுத்து ஓங்கி அழ ஆரம்பித்தார்.

 

 

“ஐயோ ஸ்டாப் திஸ் ட்ராமா.. ஏன் நடக்காத ஒரு விஷயத்தை அழுது ஆர்ப்பாட்டம் பண்றீங்க” என்று இவள் கத்த..

 

 

அருகில் இருந்தவர்கள் அனைவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ள..

 

“இப்போ என்ன நடந்து போச்சு நான் தற்கொலைக்கு பண்றதுக்கு.. தப்பு செஞ்ச அவனே நல்லா ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கான. தப்பு செய்யாத நான் எதுக்கு தற்கொலை பண்ணிக்கனும்.. அங்க கீழ ஒரு குட்டி பேர்ட் விழுந்துருச்சு.. அதை எடுத்து அதோட கூட்டுல வச்சேன். அதை பார்த்துட்டு தான் இவங்க ரெண்டு பேரும் இந்த ஆர்ப்பாட்டம்.. ஐ ஹேட் திஸ் டைப் ஆஃப் ஆக்டிங்” என்று முக சுளிக்க பேசி முடித்துவிட்டு சரசரவென்று கீழே இறங்கி விட்டாள்.

 

 

அழகுசுந்தரமோ தனபாக்கியத்தை ஒரு முறை முறைத்து.. “இங்க பாரு தனம்.. வீட்டுக்குள்ள ஏற்கனவே நிறைய பிரச்சினைக போயிட்டு இருக்கு.. இதுல நீ வேற புதுசா எதையாவது கிளப்பி விட்டு இன்னும் பிரச்சனையை இழுத்து விடாதே..

புரிஞ்சு நடந்துக்கோ” என்றார்.

 

 

“ஐயோ அண்ணே.. என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீய்ங்க.. நான் வந்து பார்க்கும்போது பாப்பா அந்த பக்கம் நின்னுக்கிட்டு இருந்தது. அதை பார்த்த அப்படியே ஒரு நிமிஷம் என் ஈர குலையே நடுங்கிச்சு.. அதுதான் உங்களையெல்லாம் கூப்பிட்டேன்.. உங்களுக்கு எப்படி உங்க தம்பி மக மேல உசுரோ.. அதே மாதிரி எனக்கும் என் அண்ணன் பொண்ணு மேல உசுரு..”

என்று அவர் அழுகையை தொடர..

 

 

“சரி சரி போய் எல்லாரும் வேலைய பாருங்க” என்று சபையை கலைத்து விட்டார் அழகு சுந்தரம்.

 

 வேந்தன் வீட்டில் மதிய உணவின் போது.. மகன் மீது ஆயிரம் கோபம் வருத்தம் இருந்தாலும் அதையெல்லாம் ஒரு புறம் வைத்து.. தொழில் பற்றிய பேச்சுகளை பேசிக்கொண்டிருந்தார் வாஞ்சி.. கூடவே மலரும்.. இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்க.. கதிரோ தான் உண்டு தன் அயிர மீனு குழம்பு உண்டு என்று அதில் மூழ்கி விட்டான். 

 

 

இவனைப் பற்றி தெரிந்தது தானே என்று மலர் அவனை ஒரு முறை முறைத்துவிட்டு மூவரும் தொழில் பற்றியே பேசிக் கொண்டிருக்க அப்போது…

 

 

“மச்சக்கன்னி உன்ன தூக்க போறேன்..” என்று பாட்டு சட்டென்று அலற..

 

 

“டேய் கதிரு அந்த மொபைல் கத்திக்கிடடு பாரு.. மொபைல் ஆஃப் பண்ணு சாப்பிடும்போது என்ன வெட்டிப்பேச்சு” என்று மலர் கத்த..

 

 

“ஆமா இவரு அப்படியே ஐநாசபை பிரச்சனையை இங்கன பேசிட்டு இருக்காரு” என்று முணுமுணுத்துக் கொண்டே சாப்பிட “கதிரு” என்று வாஞ்சியின் அதட்டலில்.. “சாப்பிடுறேன் தானுங்க சொன்னேன் பெரிய ஐயா” பம்மி விட்டான்.

 

 

தந்தைமார்கள் இருவரும் சாப்பிட்டுவிட்டு சென்றுவிட.. அவர்கள் போனவுடன் ஒரு பெருமூச்சு விட்டு “ஒரு பாட்டு நிம்மதியா கேட்க விட மாட்டுறாய்ங்க” என்றவாறு பாட்டை ஒலிக்க விட்டான்.. 

 

 

வெற்றி என்னவோ சாப்பிட்டுகிட்டுக் கொண்டே இருந்தாலும் அவனது கவனம் முழுக்க எதிரில் இருந்த கதிர் மேல்தான்..

 

 

கண்களில் ரசனையுடன் வாயில் மீன் குழம்புடன் பாடலை தலையாட்டி கேட்டுக்கொண்டிருந்த கதிரை பார்த்த வெற்றி..

 

 

“என்னடா பாட்டெல்லாம் பலமா இருக்கு?” என்று கேட்க..

 

 

“ஒரு பாட்டு கேட்டது குத்தமா ஆபிசர்” என்று இவன் அண்ணனை கேட்க..

 

 

“பாட்டு கேட்கிறதெல்லாம் குத்தமில்ல.. பாத அடிக்கடி மாறி போறதுதான் குத்தம்” என்றான் மீனில் இருந்த முள்ளை எடுத்துக் கொண்டே..

 

 

“என்ன ப்ரோ நான் என்னைக்கு பாதை மாதிரி போய் இருக்கேன்.. உன் பாதம் பின்னால் தானே என்னோட பாதை” என்று உருக்கமாக வார்த்தை வந்தாலும் முகம் என்னவோ அப்பாவியாக இருந்தாலும் தம்பியின் குறும்புத்தனம் தெரியாதவனா வெற்றி..

 

 

வழக்கம்போல கீழுதட்டை மடித்துக் கடித்து அவனைக் கூர்ந்து பார்க்க இவனோ அசட்டு சிரிப்பை உதிர்த்தான்..

 

 

“இப்பதான் ஒரு பஞ்சாயத்து முடிஞ்சிருக்கு அடுத்த பஞ்சாயத்து நீ வைக்காத”

என்று அர்த்தத்துடன் அவனைப்பார்த்து கூறிவிட்டு சாப்பாட்டை அவன் தொடர..

 

 

‘இப்பதானே நானே பிள்ளையார் சுழி போட்டேன்.. அதுக்குள்ள எண்டு கார்டு போட வைச்சிடுவாய்ங்களோ?’ என்று தன் மச்சக்கன்னியை யோசித்தவாறே மீனை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான்.

 

 

தனபாக்கியம் மெதுவாக யாரும் அறியாமல் தன் மகன் வசீகரனை தன் ரூமுக்கு அழைத்து சில ரகசியங்களை பேசி அனுப்பினார்.

 

அப்படி என்ன ரகசியம்?

 

வேற என்ன இவர மாதிரி ஆட்கள் பேசிவிட போகிறார்கள்?

 

எப்படியாவது அண்ணன் பெண்ணின் மனதில் இடம் பிடித்து.. அவளை எப்படியாவது தங்கள் வலைக்குள் விழ வைத்து.. சொத்தை வகைப் படுத்தலாம் என்று தான்.

 

 

இங்கு உள்ள சொத்து எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே கிடையாது. மாமனார் வீட்டோடு வரதன் இருந்தாலுமே அவருக்கு என்று தனி தொழில்கள் சொத்துக்கள் சோழவந்தானில் இருக்கிறது..

 

அவருடைய கண்ணெல்லாம் மகன் இம்மாதிரியான கிராம வாழ்க்கையில் கஷ்டப்படாமல் சொகுசாக வெளிநாட்டில் படகு போன்ற காரில் வந்து இறங்க வேண்டும்.. மாளிகை போன்ற வீட்டில் வாழ வேண்டும்.. தூசு தும்பு இல்லாத பளபளவென்ற கோட் சூட்டில் இருக்க வேண்டும் அதுவே..

 

 

அதனால் தான் சிறு வயது போதனையாக அவனை கணிப்பொறியில் தான் எதிர்காலம் என்று அவனை அதன் மீது நாட்டம் கொள்ள வைத்து.. இப்போது சென்னை ஐடியில் வேலை பார்க்க வைத்திருக்கிறார்..

 

 

சொந்த புத்தி எல்லாம் அவனுக்கு கிடையாது. தன் தாயின் மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவனும் இதுநாள்வரை செய்து கொண்டிருக்கிறான்..

 

 

தனபாக்கியத்தின் உத்தரவின்படி நிவேதிதாவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுவதற்காக என்று வீட்டு ஆட்களிடம் பொய் சொல்லி அவளை வெளியே அழைத்து வந்திருந்தான்..

 

 

“இந்த ஊருல எங்கே அழைத்துப்போக? சுற்றுமுற்றும் கோயிலாக இருக்கிறது சென்னை மாதிரி ஒரு மால் இருக்கிறதா? இல்லை பார்கோ பீச்சோ இருக்கிறதா?” என்று அவளிடம் புலம்பிக்கொண்டே இவன் வர..

 

“அதையெல்லாம் நான் எங்க ஊர்ல நிறைய பார்த்து இருக்கேன்.. அங்க இல்லாத பீச்சு மாலுமா உங்க சென்னையில் இருக்க போகுது?” என்றவள் “எனக்கு இந்த மாதிரி அமைதியா.. கோயில் மாதிரி இடத்துக்கு கூட்டிட்டு போ” என்றாள்..

 

 

கோயிலுக்கு அழைத்துப் போய் என்ன காதல் வளர்க்க என்று புரியாமல் முழித்தவனுக்கு சட்டென்று ஐடியா உதிக்க.. 

 

 

அழகர் மலை கொண்டிருக்கும் அவரது மருமகன் இரு மனைவிகளுடன் அருள்பாலிக்கும் பழமுதிர் சோலைக்கு அழைத்து வந்திருந்தான்..

 

 

காரை நிறுத்திவிட்டு இவன் வர மெதுவாக நடைபெற்று கொண்டே சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு வந்தாள் நிவேதிதா..

 

 

காடு என்றால் குரங்குகளுக்கு பஞ்சமா என்ன? அங்கே அவைகளுக்கு கொடுக்க வேண்டி.. பொரிகளும் பிஸ்கட் பாக்கெட் போன்ற செயற்கை உணவுகள் விற்றுக் கொண்டிருப்பார்கள். அவற்றைக் கொடுத்து அவைகளின் இயற்கையான உணவுகளை தேடலை குறைத்துக் கொண்டு தான் வருகிறார்கள்..

 

இல்லாதவர்கள் கொடுத்தால் புண்ணியம் என்பதை மனிதர்கள் இவ்வாறு மாற்றிக் கொண்டார்களோ?

 

 

நம் மூதாதையரை பற்றி சரியாக அதுவும் நம் ஊரில் வாழும் அவைகளின் அறிவை பற்றி சரியாக புரியாத நிவேதிதா.. ஆசையுடன் ஒரு பொரி பாக்கெட்டை வாங்கி மீன்களுக்கு தூவுவவதை போல தூவிக் கொண்டே வர அவைகளை அடுத்த நிமிடம் அவளை சுற்றி வட்டம் கட்டியிருந்தன..

 

இவள் அலறி அவைகளுக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் எடுக்க.. ஆனால் கையிலிருந்த பொரி பாக்கெட்டை கீழே போட்டாள் இல்லை..

 

 

அதில் ஒரு குட்டி குரங்கு அவள் நெஞ்சோடு அணைத்து ஓடிக்கொண்டிருந்த பொரியை பிடுங்குவதற்காக தாவி அவள்மீது அதை பிடிங்கி செல்ல.. அவள் போட்டிருந்த மெல்லிய சுடிதாரின் ஒரு பாகமும் அதன் கையோடவே சென்றது..

 

 

அதில் இன்னும் பயந்து அலறி கைகளை முன்புறமாக வைத்துக்கொண்டு ஓடியவளை ஒரு கை அழுத்தமாக தன் பக்கம் இழுத்து காருக்குள் அள்ளிக்கொண்டு அவ்விடம் விட்டு பறந்தது..

 

 

காதலே.. காதலே…

20 thoughts on “எங்கு காணினும் நின் காதலே… 7”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top