ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 27

27

 

 

காலையில் வரவேற்பறையில் கார்த்திக்கை கண்டவுடன் தேவாவிற்கு அத்தனை பெரிய கோபம் வந்தது. எப்பொழுதும் வந்தவனை வாடா மச்சி என்று ஆசையோடு அழைப்பவன் இன்று முறைத்துக்கொண்டு பார்ப்பதை ” ஏன் இவனுக்கு என்ன ஆச்சு?? ஏன் இப்படி முறைக்கிறான் ?? என்று புரியாமல் பார்த்தான் கார்த்திக்.

 

 

அவனுக்கு எங்கே தெரிய போகிறது புதிதாக கல்யாணம் ஆன ஆண்கள் டெடிபியரினால் படும் அவஸ்தை. பாதி நேரம் இந்த மனைவிகள் கணவனை விட டெடிபியரை தான் அணைத்து உறங்குகிறார்கள் என்று அவனுக்கு யார் சொல்லி புரியவைப்பது.. ஒருவேளை மிரு புரிய வைக்கலாம் அவர்கள் கல்யாணத்துக்கு பிறகு…

 

 

அலுவலகத்திற்கு கிளம்பி வந்த வைஷூ கார்த்திக்கை பார்த்து சிறு குழந்தை போல ஓடி வந்து அவன் கையை பிடித்து “அண்ணா டெடிபியர் ரொம்ப பிடிச்சிருக்கு தேங்க்ஸ்.. தேங்க்ஸ்.. அண்ணா “என்றாள்.

 

தேவா அவளை வைரத்தால் இழைத்தால் கூட இவ்வளவு சந்தோசம் அவள் காட்ட மாட்டாள் போல சாதாரண ஒரு டெடிபியர், அதற்கு இவ்வளவு சந்தோஷப்படுகிறாள் என்று கார்த்திக்கு இன்னும் பாசம் பொங்கியது வைஷூ மேல்..

 

கார்த்திக்கின் கண்ணை பார்த்து அவன் கருத்தை படித்த தேவா , இவன் இன்னும் பாச மிகுதியில் இன்னும் நாலைந்து டெடி பியரை வாங்கி வைத்தால் நம் நிலைமை என்னாவது என்று நினைத்தவன் ஓ மை காட்.. 

 

கார்த்திக் பதில் பேச முன் ” வைஷூ நீ டிபன் எடுத்து வை.. எனக்கு கார்த்தி கிட்ட கொஞ்சம் பிசினஸ் பேசணும் ” என்று அவனை தனியாக அழைத்துக் கொண்டு சென்றான். 

 

அவனிடம் தன் நிலைமையை சொல்லி தேவா புலம்ப… கார்த்திக் வயிற்றை பிடித்து கொண்டு விழுந்து விழுந்து சிரிக்க… அதில் தேவாவுக்கு கோபம் பொங்கி ” டேய் நாளைக்கு என் தங்கச்சி வரும்போது இந்த மாதிரி பத்து டெடி வாங்கி நான் அனுப்புவேன் ஞாபகம் வச்சுக்கோ ” என்று மிரட்ட… அதற்கு பிறகு அவன் எங்கே சிரிக்க போகிறான்.. தன் வாயை ஜிப்பை மூடியது போல் சைகை காட்டி அமைதியாக நின்றான் . 

 

 

அதன்பிறகு இவர்களுடனே காலை உணவை முடித்து விட்டு, கண்களால் மிருவை பருகி விட்டு, கார்த்தி கிளம்பிவிட தேவா தம்பதியினரும் தங்கள் அலுவலகம் நோக்கி சென்றனர்.

 

 

இவர்கள் அலுவலகம் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அறைக்கதவு தட்டப்பட தேவாவின் அளுமையான குரல் ” எஸ்.. கம்மின் ” என்றது. சிறு தயக்கத்துடனே உள்ளே நுழைந்த நந்தாவை பார்த்து இருவருக்கும் மகிழ்ச்சியே.. 

 

மனதில் இருந்த இளக்கத்தை தேவா முகத்தில் காட்டாமல் சற்று கம்பீரம் கலந்த விரைப்புடனே அவனைப் பார்த்து உட்கார் என்றான். தேவாவிற்கு நன்கு தெரியும் இவனுக்கு சிறிது இடம் கொடுத்தாலும் அதை பயன்படுத்தி தலையில் ஏறிக் கொள்ளும் ரகம் என்று.. 

 

சிறு பிள்ளையை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்பும் பொழுது அப்பிள்ளையின் முகத்தில் வருமே விருப்பமின்மை கலந்த ஒரு பிடிவாதம் அதுதான் இப்போது நந்தனின் நிலையும்.

தேவாவின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது, அவன் போலீசில் சொன்னா கூட சரிதான் போடா என்று போய்க் கொள்ளும் ரகம் அவன். ஆனால் தந்தையிடம் சொல்லி விட்டால், அவர் அட்வைஸ் என்கிற பெயரில் பேசிய நம்மை கொன்று விடுவாரோ என்று பயந்து தான் அப்பாவுக்கு தேவாவே மேல் என்று இங்கு வந்து சேர்ந்தான்.

 

சிறுது நேரம் அவனையே தனது கூர் விழிகளால் துளைத்த தேவா அவனை பார்த்துக் கொண்டே ” வைஷூ த பால் இஸ் இன் யுவர் கோர்ட் ” என்றான்.

 

மென் புன்னகையுடன் அவனை ஏறிட்ட வைஷூ நான் பார்த்துக்கிறேன் என்று கூறி ஒரு பைலை எடுத்து வந்து நந்தனின் கையில் கொடுத்து ” இதுல உள்ள டீடைல்ஸ் எல்லாம் பார்த்துட்டு இருங்க.. கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன்” என்றாள்.

 

பின் தன் மேனேஜரை அழைத்த தேவா அவரிடம் நந்தனை அறிமுகப்படுத்தி ” இவன் என் தம்பி.. ஒரு ப்ராஜெக்ட்காக வந்துருக்கான். அவனுக்கு வெளியில் ஸ்டாப்ஸ் கூட ஒரு தனி கேபின் அரேஞ்ச் பண்ணுங்க” என்றான். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் ஏற்பாடு செய்து விட, வெறுப்புடனே சென்று அந்த கேபினில் அமர்ந்து , அதீத வெறுப்புடன் அந்த ஃபைலை பார்வையிட தொடங்கினான் நந்தன்.

 

 

முதலில் எதோ மேம்போக்காக பார்த்துக்கொண்டு இருந்தான். அப்புறம்தான் புரிந்தது அது வைஷூவின் முதல் ப்ராஜெக்ட்.. ‘அடப்பாவிகளா எந்த ப்ராஜெக்ட் நான் செய்யவிடாமல் தடுக்கனும் நினைச்சேனோ.. அதே ப்ராஜெக்ட் என்ன வைச்சு செய்ய போறீங்களா !!! நல்லா வருவீங்க டா நீங்க எல்லாம்!!’ என்று மனதுக்குள் பொறிந்து கொண்டே மீண்டும் அதில் பார்வையை ஓட்டினான் நந்தன். வைஷூவை பற்றி, வலித்தால் கூட அழ முடியாத மாதிரி அடிப்பா என்ற தேவா வார்த்தை கொஞ்சம் புரிந்தது அவனுக்கு. அவ்வ்வ்….

 

 

அதை அவன் படிக்க படிக்கத்தான் ஒன்று புரிந்தது பணத்தையும் தாண்டி வைஷூ சில நல்ல விஷயங்களை செய்ய நினைப்பது. அதுவும் நலிந்தவர்களுக்கு என்று ஆரம்பித்திருக்கும் இந்த ப்ராஜெக்ட். மனதில் சிறு புள்ளியாக ஏதோ ஒரு உறுத்தல் நந்தனிடம். அச்சிறு புள்ளி பெரியதாகி அவனை மாற்றுமா அல்லது அவன் அதை தவிர்த்து தன் போல இருப்பானா காலம் மட்டுமே அறியும். 

 

 

தேவா தன் சித்தப்பாவிற்கு நந்தனின் இந்த செயல்களை இரு தினம் முன்னமே தெரிவித்திருந்தான். கூடவே அவன் கையாண்ட பணத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தையும் விலாவாரியாக கூற அவருக்கு ஹார்ட் அட்டாக் வராத குறைதான். இழந்த பணத்தை விட அவன் தேவாவை எதிர்த்தான் என்பதை தான் அவரால் தாங்க முடியவில்லை. ஏனென்றால் உறவினனாய் இருக்கும் தேவா வேறு… தொழில் துறையில் இருக்கும் தேவ்ஜி வேறு என்று அறியாதவரா அவர்.

 

” தேவா ஏதோ சிறு பையன் தெரியாம பண்ணிட்டான். அதெல்லாம் ஒன்னும் மனசில் வெச்சுகாதேப்பா “என்று அவர் தன்மையாக மகனிடம் மன்னிப்பு கோர..

 

” விடுங்க சித்தப்பா அவனுக்கு தேவா மட்டும்தான் தெரியும்.. இப்ப தான் தேவ்ஜிய பார்க்க ஆரம்பிக்க போறான். அதனால இந்த ஒரு ஆறு மாசத்துக்கு அவன் என் கூட தான் இருப்பான். ப்ராஜெக்ட் என்று சொல்லி தான் அவனை இருக்க வச்சு இருக்கேன். நீங்க எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க.. இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிடிச்சினு அவனுக்கு தெரிஞ்சா அவன் அலட்சியமாக மாற சான்ஸ் இருக்கு ” என்று சித்தப்பாவிடம் கூறி அவரை அவன் திட்டத்திற்கு ஒப்ப வைத்திருந்தான்.

 

 

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வைச்சு நந்தனை அழைத்து, அந்த புராஜக்ட்டில் அவன் புரிந்த விசயங்களை கேட்க, நந்தன் தேவாவை பார்த்து, ” நான் ஏன் போக மாட்டேன் அவங்க கிட்ட சொன்னேன்னு… இப்போ புரியுதா?’ என்று பார்க்க… தேவா சிரிப்பை வாய்க்குள் புதைத்து அவனை முறைப்பாக பார்த்து சொல்லு என்றான். 

 

“என்னை இன்னும் நீங்க இரண்டு பேரும் ஸ்கூல் ஸ்டூடண்ட் மாதிரியே டிரீட் பண்ணிறீங்க” என்று சலித்து கூறியவன், தான் புரிந்தவற்றை கூற, வைஷூ சில இடங்களில் அவனை திருத்தி, மேலும் ஒரு ஃபைலை கொடுத்து, ” அதில் இருக்கும் கஸ்டமர் டீடைல்ஸ் பத்தி ஃபீல்டு ஒர்க் பாருங்க ” என்று அசால்ட்டாக கூற..

 

” வாட்.. ஃபீல்டு ஒர்க் ?? மீ ?? ஐ காண்ட் டூ திஸ்..” என்று ஆரம்பித்து பேசி கொண்டே செல்ல, தன் விரலால் காதுகளை குடைந்து கொண்டாள், தன் புறங்கை மறைத்து கொட்டாவி விட்டாள் அவன் பேசுவதை கண்டு கொள்ளாமல்..

 

” முடிச்சிட்டீங்களா… சீக்கிரம் போங்க. அப்புறம் ஈவ்னிங் இன்னொரு கஸ்டமர் பார்க்க போகனும்.. இல்லைன்னா.. தேவா அந்த வீடியோஸ் எங்ககக….” என்று அவள் இராகம் இழுக்க.. அவன் தன் தலையில் அடித்து கொண்டு, வெளியில் சென்றான். 

 

” ஆனாலும் உனக்கு இவ்வளோ கொழுப்பு ஆகாதுடி, ரொம்ப படுத்துற அவனை” என்று மனைவியின் கன்னம் கிள்ளி சொல்ல.. ” இப்போ தான் ஆரம்பிச்சி இருக்கேன். அவரை மாற்றனுமா ?? வேண்டாமா?? நீங்களா ஆச்சு உங்க தம்பி ஆச்சு என்ற நகர்ந்தவளை ” தாயே.. சிறப்பா செய்.. ஆனா பதமா செய்”

என்று அவன் சரண்டைய… அது என்று கூறி அவள் ஆசிர்வதிக்க.. அடிங்க என்ற தேவா வைஷூவை துரத்தி அவன் ஸ்டைலில் தண்டனை கொடுத்தே விலகினான்.

 

 

அன்று மாலை மயங்கிய வேளை வழக்கம்போல மாடி ஊஞ்சிலில் அமர்ந்து இயற்கை காற்றை இனிமையாக சுவாசித்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. அவளோ இயற்கையை ரசித்துக் கொண்டிருக்க , தேவாவோ அவளை தான் பார்த்துக்கொண்டே மாடி திட்டில் ஒரு காலை ஊன்றி இரு கைகளையும் இலகுவாக அதிலேயே வைத்துக்கொண்டு தன்னவளை ரசித்துக்கொண்டிருந்தான்.

 

வைஷூ என்று அழுத்தமாக அழைத்தான்.. அவன் இவ்வாறு அழைத்தால், ஏதோ ஒன்றை சொல்லப் போகிறான் என்று புரிந்த வைஷூ, அவனை தீர்க்கமாகப் பார்க்க.. ” நீ இன்னும் சொல்லவே இல்லை ” என்றான். 

 

அவன் எதை கூறுகிறான் என்று புரியாமல் இல்லை அவளுக்கும்.. வானில் உலா வரும் நிலாவை பார்த்துக் கொண்டிருந்தவள், தன் தொண்டையை லேசாக செறுமி ” சொல்லிதான் தெரியனுமா ” என்று கூற.. 

 

அவளை நெருங்கி வந்தவன் ஊஞ்சல் பின் நின்று கொண்டு அவள் தலையை பின்னால் தன்னை நோக்கி சாய்த்து, ” கண்டிப்பாக.. அதுவும் உன்‌ கண் பேசுறத பார்த்தே ஆகனும் ” என்று கூறி மென்மையாக அவர் இரு கண்களிலும் மாறி மாறி முத்த மழை பொழிந்தான். கண்களை தொடர்ந்து அவன் அதரங்கள் அவள் முகத்தில் கோலமிட்டு கொண்டே செல்ல இதழை நெருங்கும் நிலையில் அவனுடைய போன் அழைத்தது இடைஞ்சலாக… அவன் உச்சுக் கொட்டி மீண்டும் முன்னேற முயல மீண்டும் மீண்டும் அழைத்து என்னையும் கவனியேன் என்றது தொலைபேசி இல்லை இல்லை தொல்லைபேசி.. 

 

 

இடைஞ்சலை கண்டு தேவா முகம் தூக்கி வைத்துக் கொள்ள அதை பார்த்த வைஷூவிற்கோ தாளமாட்டாமல் சிரிப்பு…

” முதல்ல போன கவனிங்க.. அப்புறம் என்னை கவனிக்கலாம்” என்று அவள் விலகிக் கொள்ள.. 

 

” இருடி ” என்றவன் முன்னே வந்து ஊஞ்சலில் அவளருகில் அமர்ந்து தோளுடன் அவளை அணைத்துக் கொண்டு அடுத்து வந்த காலை அட்டன்ட் செய்தான்.

 

அதில் சொன்ன செய்தி அவனை அதிர்ச்சி கொள்ள செய்ய வாட் என்று அதிர்ந்து எழுந்தான் தேவா. வைஷாலி அவனின் பதற்றத்தை பார்த்து அவளும் பதட்டத்துடன் ” ஏங்க.. என்ன ஆச்சு ?” என்று அவனிடம் கேட்க வலி நிறைந்த கண்களால் அவளைப் பார்த்தவன், கையை பற்றி அழுத்தம் கொடுத்து விட்டு வா என்று அழைத்து கீழே சென்றான். 

 

கீழ்தளத்தில் வரவேற்பறையில் அவன் தந்தை கோபத்துடன் அமர்ந்திருக்க, அருகில் தமயந்தியும் கையை பிசைந்தவாறு , அழுக தயாராகும் நிலையில் மிரு நின்று கொண்டிருந்தாள்.

 இவர்களுக்கெல்லாம் விஷயம் தெரிந்து விட்டது என்று பார்த்த மாத்திரத்தில் தெரிந்த கொண்ட தேவா, அடுத்து என்ன செய்யலாம் என்று அப்பாவை நெருங்கவும் உச்சக்கட்ட கோபத்தில் உள்ளே நுழைந்தான் நந்தன். 

 

வந்தவன் அண்ணன் என்றும் பாராமல் தேவா சட்டையை கொத்தாகப் பற்றி, ” என்னடா பண்ணி வச்சிருக்க ? நீ எல்லாம் ஒரு ஆம்பளையா டா.. மனுஷனாடா.. கொஞ்சம் கூட உனக்கு மனச்சாட்சி இல்லையா?? அதுவும் கட்டுன பொண்டாட்டிய இப்படி செஞ்சிருக்க.. நீ எல்லாம் என்ன புருஷன் டா..” மரியாதை விடுத்து ஏக வசனத்தில் அவனை திட்டிக் கொண்டே செல்ல..

 

தமயந்தியும் மோகனும் இதில் இடையிடாமல் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நிற்க.. முதலில் திகைத்தாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு வைஷாலி தேவாவின் அருகில் வந்து நந்தனின் கையை அவன் சட்டையில் இருந்து எடுத்து விட்டாள். 

 

” என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க ? எதுக்கு இப்ப மரியாதை இல்லாமல் பேச்சு பேசுறீங்க. அப்படி என்ன பண்ணிட்டார்? ” என்று கோபத்தில் அவள் பொரிய…

 

” என்ன பண்ணியிருக்கானா ?? என்ன பண்ணிருக்கான் தெரியுமா ?? நான் எப்படி சொல்லுவது நீங்களே பாருங்க ” என்று தன் போனில் வெளிவந்த ஒரு செய்தியை அவளுக்கு காட்டினான்.

 

பார்த்த வைஷூவின் கண்கள் நிலை குத்தி் போய் நின்றது அச்செய்தியிலேயே..

கண்களில் நீர் மல்க தன்னவனை வெறுமையாக பார்க்க.. அவளின் பார்வை வீச்சு தாங்காமல் தேவா வைஷூமா என்று கதறி அவளை அணைக்க அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் பெண். 

 

குள்ளநரி செய்த குள்ள நரித்தனம் வெளியில் வந்து ஒவ்வொருவரின் வாழ்க்கையும் புரட்டிப் போட்டது…

 

அக்காணொளியில் வந்த செய்தி.. 

 

பெண்களின் பல வேஷங்கள்.. கல்லூரியில் ஒருத்தன்.. கற்பிக்கும் வேளை ஒருத்தன்.. கணவனாக ஒருத்தன்.. 

என்ற‌ வைஷாலி படங்களுடன் மூன்று ஆண்கள் படம் வெளிவந்திருக்க.. அதிலொன்று கணவனிடத்தில் தேவாவும்.. கற்பிக்கும் என்ற இடத்தில் நந்தனின் படமும் இருந்தது.. கல்லூரி என்ற இடத்தில் முகம் தெரியாத ஒரு இளைஞனின் படமும்.. 

 

பார்த்த மாத்திரத்தில் தன்னுயிர் போய் விடாதா என்ற நிலையில்தான் வைஷாலி. இதற்கு காரணம் தெள்ளத்தெளிவாக தீனா என்று தேவாவுக்கு புரிந்திருந்தாலும்.. இப்போதுள்ள நிலையில் மனைவியை தனியாக விட்டு அவனை தண்டிக்க செல்ல முயலவில்லை. 

 

அவனின் முதல் கடமை தன்னவளை இதிலிருந்து எவ்வாறு மீட்பது என்பது மட்டுமே.. உடனடியாக தன் ஆட்களுக்கு போன் செய்து நெட்டிலிருந்து இவை அனைத்தையும் நீக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை பார்க்குமாறு பல சில உத்தரவுகள் இட்டுக்கொண்டே இருந்தான் தேவா. 

 

வைஷாலியோ எதையும் அறிய முயலா அதிர்ச்சியில் சிலையென அமர்ந்திருக்க அவள் இரு புறமும் தமயந்தியும் மிருவும் அமர்ந்து அவளை தேற்றிக் கொண்டிருந்தனர்..

 

ஆனால் நந்தனோ மிகக் கோபமாக உக்கிரமாக தேவாவையே முறைத்துக் கொண்டிருந்தான். இதற்கு மிக முக்கிய காரணம் அவனல்லவா அவன் ஆரம்பித்து வைத்ததை இன்று தீனா முடித்து வைத்திருக்கிறான் என்ற முழு கோபமும் தேவாவின் மீது அவனுக்கு. 

 

” நீ அவங்க வாழ்க்கையில இடையில் வரலேனா.. இவ்வளவு பிரச்சனை கிடையாதுடா.. ” என்று மீண்டும் நந்தன் சண்டை பிடிக்க ஆரம்பிக்க…

 

இம்முறை ஏற்கனவே தீனாவின் மீது இருந்த கட்டுக்கடங்காத கோபம்.. தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே தன்னவளை பாதுகாக்க வேண்டி என்று தன் மீதான வருத்தம்.. கூடவே இடையிடையே நச்சரிக்கும் நந்தனின் பேச்சு அவனை வெறி கொள்ள செய்ய.. நந்தனை வேகமாக தள்ளி விட அவன் பொத்தென்று கீழே விழுந்தான்.

 

“யாருடா இடையில் வந்தா யாரு?? நானா ?? கொன்றுவேன் உன்னை.. இடையில் வந்தது நீதாண்டா… எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் நீயும் உன் அப்பாவும் தான். ஆரம்பம் முதல் இப்ப வரைக்கும் அவ வாழ்க்கையில் இருக்கிற ஒரே ஆண் நான் தான்.. நான் மட்டுமே தான்.. கல்லூரியினு போட்டு இருக்கிற ஃபோட்டோவில் வைஷாலி பக்கத்துல இருக்கிற அந்த நபர் நான் தான் ” என்று இரு கைகளையும் தன் பாக்கெட்டில் விட்டபடி முழு உயரத்துக்கு தன் முன்னே நின்று தேவாவை பார்த்து அதிர்ச்சியில் வாய் பிளந்தான் நந்தன்..

 

அவன் மட்டுமா அதிர்ச்சியில் நாமும் தான்.. 

 

கர்வம் சரியும்..

4 thoughts on “என் கர்வம் சரிந்ததடி சகியே.. 27”

  1. Indhuuu ena pudhuu twist ah varutheeeeee lovlyyyyyyyyyy epiii 💕💕💕💕💕💕 veryyyyyy intresting epiiiii ❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Reply to Kaviya manoharraj Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top