புள்ளி மேவாத மான் – 2
பெரியவர்கள் தட்டை மாற்றியவுடன் தனஞ்ஜெயனையும் எழிலரசியையும் உட்கார வைத்து சந்தன நலுங்கு வைத்தனர். எழிலரசியின் முகம் பூரித்து போய் இருந்தது தன் மாமனின் அருகில் ஜோடியாக உட்கார்ந்து இருப்பதே அவள் மனிதில் ஆனந்தத்தை அள்ளி கொடுத்தது . பத்து வருடங்களாக கண் பாராது அவனின் நினைவை மட்டும் சுமந்து கொண்டு இருந்தவளுக்கு அவன் அருகில் இருப்பது பல நாட்கள் பட்டினி கிடந்தவளுக்கு விருந்து படைத்தது போல இருந்தது.
தனஞ்ஜெயனுக்கோ அந்த இடத்தில் பொருந்தி போக முடியவில்லை அவன் நினைத்து வந்தது வேறு நடந்தது எதிர்பாராதது ஏற்றக் கொள்ளவும் முடியவில்லை மறுக்கவும் முடியவில்லை தொண்டையில் சிக்கிய மீன் முள் போல அவஸ்தையாக இருந்தது .
நலுங்கு வைத்து முடித்தவுடன் சுந்தரம் வந்து தனஞ்ஜெயனின் கையில் ஒரு செயினை கொடுத்து அவளுக்கு போட்டு விடச் சொன்னார் .
அதை கையில் வாங்கியவன் அவள் கழுத்தில் அணிவிக்கும் போது நேர் கொண்டு அவள் கண்களை பார்க்க அந்த கண்களில் வழிந்த நேசம் கொண்ட பார்வை இவனின் பார்வையை கவ்வி கொண்டது ஏதோ ஒரு மாய சூழலில் சிக்கி கொண்ட உணர்வு .
அடுத்தடுத்து நடந்த எதுவும் அவனின் கட்டுப்பாட்டில் இல்லை இருவரையும் நிற்க வைத்து போட்டோ எடுத்தனர் எழிலரசி மகிழ்வுடனும் தனஞ்ஜெயன் பிடிப்பில்லாமலும் நின்றனர் .
இருவரையும் ஒன்றாக அமர வைத்து சாப்பிடும் போதும் அப்படி தான் அவனுக்கு சாப்பாடு தொண்டையில் இறங்கவில்லை அதை பார்த்த எழிலரசியோ ” ஏன் மாமா சாப்பாடு பிடிக்கலையா ஆனா உங்களுக்கு பிடிச்சத தான அப்பாகிட்ட சொல்லி செய்ய சொன்னேன் “
” உங்களுக்கு பிடிச்ச சாப்பிடுங்க மாமா கஷ்டப்பட வேண்டாம் காபி கொண்டு வர சொல்லவா ” என்றவளிடம் எதுவும் பேசாமல் சாப்பிட்டான் .
இவளோ அவன் சாப்பிட “பூசணி அல்வா உங்களுக்கு பிடிக்கும் தான இன்னும் கொஞ்சம் வைக்க சொல்லவா “
” மாமா இந்த பூரி வேணாம் ஒரே எண்ணெய்யா இருக்கு வேற சாப்பிடறிங்களா ” என அவள் சாப்பிடாமல் இவன் இலையை பார்த்து கொண்டே தொண தொணக்க எரிச்சலுற்றான் .
“ஏய் என்னைய பார்க்காம உன் இலையை பார்த்து சாப்பிடுடி ” கோபமாக சொல்ல அவன் என்னமோ இவளுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த மாதிரி முகம் கொள்ளா புன்னகையுடன் சந்தோஷமாக சாப்பிட்டாள் .
அவளின் செய்கை இவன் மனதிற்கு எரிச்சலையும் மீறி கொஞ்சமே கொஞ்சம் இதமளித்தது . இவர்களையே பார்த்து கொண்டு இருந்த தனஞ்ஜெயனின் குடும்பத்தாருக்கு தனஞ்ஜெயன் கோபப்பட்டாலும் எழிலரசி முகம் வாடாமல் சிரிப்போடு பேசுவதை கண்டு நிம்மதியடைந்தனர் .
சாப்பிட்டவுடன் எழிலரசி தன் அறைக்கு சென்று விட தனஞ்ஜெயனின் தங்கை கீர்த்தி (கண்ணன் – தேவியின் மகள் பிரசாத்தின் தங்கை) அவள் வயதுடைய உறவு பெண்கள் சிலரோடு எழிலரசியிடம் சென்று கேலியும் கிண்டலுமாக பேசி கொண்டு இருந்தனர் .
சிறிது நேரத்தில் கீர்த்தி வந்து தனஞ்ஜெயனிடம் ” அண்ணா உங்க போன் கொடுங்க ” என கேட்க எதுவும் கேட்காமல் கொடுத்தான் போனை கொண்டு போய் எழிலரசியிடம் கொடுத்தாள்
கீர்த்தி ஏற்கனவே லாக் ஓபன் பண்ணி கொடுத்து இருக்க எழிலரசி தன் நம்பரை தன் பேர் போட்டு தன் படத்தையும் பதிவு செய்தாள் அதே போல் அவனின் நம்பரை’ ஜெய்மாமா ‘ என போட்டு தன் போனில் பதிவு செய்து கொண்டாள் .
பிறகு எழிலரசி போனை கொடுக்க கீர்த்தி நல்லபிள்ளை போல பதுவிசாக தன் அண்ணனிடம் போனை கொண்டு போய் கொடுக்க தனஞ்ஜெயனும் போனை வாங்கி சட்டைப்பையில் வைத்து கொண்டான் .
கீர்த்தி யாரும் அறியாமல் தன் மற்ற அண்ணன்கள் மற்றும் கருணாவிடம் கண்ணை உருட்டி கட்டைவிரலை உயர்த்தி காட்டி சிரிப்போடு தன் தாயின் அருகில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
அடப்பாவிகளா ஒருத்தனை சம்சார சாகரத்தில் தள்ள குடும்பமே தீயா வேலை செய்யுது .
மேற்கொண்டு மாப்பிள்ளை வீடு பார்க்க முகூர்த்த தேதி மற்ற சடங்குகள் என எல்லாவற்றிற்கும் நல்லநாள் நேரம் குறித்து பெரியவர்கள் சபையில் வாசிக்க அனைவராலும் சம்மதம் பெறப்பட்டது .
தனஞ்ஜெயனின் குடும்பம் சுந்தரம் குடும்பத்தினரிடம் சொல்லி கொண்டு கிளம்ப எழிலரசியோ தனஞ்ஜெயனின் முகத்தையே பார்த்து கொண்டு நின்றாள் அவளின் எதிர்பார்ப்பை கண்டு கருணா தனஞ்ஜெயனின் அருகில் வந்து ” டேய் தனா அந்த புள்ளகிட்ட சொல்லிட்டு வாடா ” என்க கருணாவைப் பார்த்து முறைத்தான் .
அவனின் கண்ணன் சித்தப்பா ” தனா புள்ளைகிட்ட சொல்லிட்டு வாப்பா புள்ள முகம் பார்த்து நிக்குது பாரு ” என சொன்னார் வேறு வழியின்றி அவளைப் பார்த்து எந்த உணர்வுமின்றி தலையை மட்டும் ஆட்டிவிட்டு கிளம்பினான்
அதற்கே எழிலரசியின் முகம் பூவாய் மலர்ந்தது வீடு வரும் வரை தனஞ்ஜெயன் யாரிடமும் எதுவும் பேசவில்லை. ஏதோ சிந்தனையுடனே இருந்தான் வீட்டிற்கு வந்ததும் தாய்தந்தை அறைக்குள் நுழைந்து கொண்டான் .
மனம் குழப்பத்திலோ சோர்வாக இருக்கும் போதோ பெற்றோர் அறையில் தஞ்சம் அடைவான் . அந்த அறையில் சிறிது நேரம் இருந்தாலே அவனுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்
இன்றும் அதே போல சென்று தந்தையின் நாற்காலியில் அமர்ந்து கொண்டான் . அவன் பின்னாலேயே வந்தவர்கள் அந்த அறைக்குள் செல்லவதை பார்த்து விட்டு அமைதியாக இருளாயி பாட்டியிடம் சொல்லி விட்டு கிளம்பினர்
சிறிது நேரம் கண்மூடி அமர்ந்தவன் தலையை யாரோ கோதுவது போல இருக்க கண் திறந்து பார்க்க யாரும் இல்லை கோதி விட்டதை அவன் நன்றாக உணர்ந்தான் அவனின் தாய் அப்படி தான் கோதி விடுவார்
மீண்டும் கண்மூடி அமர ” தம்பி மனசு சஞ்சலப்படாதே இந்த பொண்ணால உன் வாழ்க்கை செழிப்பா தான் இருக்கும் ” என தந்தையின் குரல் அசரீரியாக ஒலித்தது
உடல் சிலிர்த்து போக கண்திறந்தவனனுக்கு மனம் சஞ்சலம் நீக்கி தெளிவு கிடைத்தது. அறையில் இருந்து வெளியே வந்தவன் இருளாயி பாட்டியிடம் சொல்லி கொண்டு வேலையை பார்க்க சென்றான்.
எப்பவும் அதிகாலையில் எழுந்து வாக்கிங் மாதிரி வயல் வரப்பை பார்த்து விட்டு வந்து இருளாயி பாட்டி கொடுக்கும் டீயை குடித்து விட்டு மற்ற வேலைகளை பார்ப்பான் அன்றும் அதாவது எழிலரிசியை நிச்சயம் செய்து விட்டு வந்த அடுத்த நாள் அதுபோல வாக்கிங் போயிட்டு வீட்டிற்குள் நுழையவும் அவனது செல்பேசி சிணுங்கவும் எடுத்துப் பார்க்க திரையில் எழிலரசியின் படத்துடன் எழிலரசி அழைக்கிறாள் என்ற எழுத்துக்கள் மின்ன பார்த்தவனுக்கோ ஒன்றும் புரியவில்லை
இவள் போட்டோ மற்றும் நம்பர் நம் போனில் எப்படி வந்தது என புரியாமல் முழித்தான் அதற்குள் போன் நின்று மீண்டும் அடிக்க எடுத்து இவன் ஹலோ சொல்லும் முன்பே ” மாமா எந்திருச்சு வாக்கிங் போயிட்டு வந்துட்டிங்களா டீ குடிச்சிட்டிங்களா இன்னும் அந்த கிழவி டீ கொடுக்கலையா டீயா அதுக்கு கழனிதண்ணி தேவலாம் ” இவனை பேசவிடாமல் அவளே பேசினாள்
அவள் போனை எதிர்பார்க்காதவன் அசந்து நின்றது கொஞ்ச நேரம் தான் ” ஏய் மூச்சு விட்டுட்டு பேசுடி அதென்ன பெரியவங்கள மரியாதை இல்லாம பேசறது சரி அதெல்லாம் விடு என் போன்ல உன் போட்டோ நம்பர் எல்லாம் எப்படி வந்தது யார் பார்த்த வேலை இது உனக்கு தெரியும் தான சொல்லு “
“அச்சோ மாமா நேரமாச்சு பாருங்க போய் டீ குடிங்க நான் ஒருத்தி நேரம் காலம் தெரியாம பேசிக்கிட்டே இருக்கேன் போன வைச்சிடறேன் ” தனஞ்ஜெயனை பேச விடாமல் போனை வைத்துவிட்டாள் .
எப்படி தன் போனில் இதை யார் செய்தது என யோசிக்கும் போது தான் நேற்று கீர்த்தி தன் போனை வாங்கி கொண்டு எழிலரசியின் அறைக்கு சென்றது ஞாபகம் வந்தது இருந்த குழப்பமான மனநிலையில் அப்போ அதை கவனிக்கவில்லை இப்ப ஞாபகம் வந்தது .
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம மழுப்பிட்டு போன வெச்சிட்டா ” என முணுமுணுத்து கொண்டே உள்ளே சென்றான் டீ குடித்து குளித்து தயாராகி பூஜையறை சென்று வணங்கி விட்டு சாப்பிட சாப்பாட்டு மேஜையில் அமர போன் அடித்தது எடுத்து பார்க்க திரையில் எழிலரசி மின்னினாள் .
போனை எடுத்தவுடன் ” மாமா சாப்பிட்டிங்களா என்ன சாப்பிட்டிங்க வழக்கம் போல கிழவி இட்லி தான் செஞ்சுதா எத்தனை இட்லி சாப்பிட்டிங்க பதில் சொல்லுங்க மாமா “
“ஏய் என்னை பேச விட்டா தான பதில் சொல்ல இட்லி தான் இன்னும் சாப்பிடல இன்னும் என்ன தெரியனும் உனக்கு அப்புறம் பெரியவங்கள மரியாதை இல்லாம பேசாத “
” சரி சரி சாப்பிடுங்க ” என சொல்லி போனை வைத்துவிட்டாள் லேசான சிரிப்புடன் இருளாயி பாட்டி வைத்த உணவை சாப்பிட பல வருடங்களுக்கு பிறகு இவனின் முகத்தில் நிறைந்த சிரிப்பை காணவும் ” யாருய்யா போனுபொட்டில பேசுனது ” என பாட்டி கேட்டார்
“எல்லாம் உன்ற பேத்தி தான் “
“ஆடி ஆத்தி அரசி புள்ளயா என்ன கேட்டுச்சு ராசா “
“ம்ம்ம் சாப்பிடிங்களானு கேட்டா ” இட்லியை சாம்பாரில் தொட்டு சாப்பிட்டு கொண்டே சிரிப்புடன் சொன்னான். இதுவரை எழுந்தியா சாப்பிட்டியா என அவனின் பெற்றோர் மறைவிற்கு பிறகு அந்த வீட்டில் அவனை யாரும் கேட்டதில்லை .
இருளாயி பாட்டி சாப்பாட்டு மேஜைக்கு வந்தவுடன் அந்த வேளைக்கு ஏற்றார் போல சாப்பாடு டீ காபி கொடுப்பார் தான் அதுக்கு மேல் இவனாக ஏதாவது கேட்டால் செய்து கொடுப்பார் தவிர அவராக எதுவும் கேட்கமாட்டார் . இவனும் அவரின் வயோதிகத்தை மனதில் கொண்டு செய்து வருவதை சாப்பிட்டு கொள்வான் .
விசேச நாட்களில் மற்றும் அசைவ உணவு செய்யும் நாட்களில் தனஞ்ஜெயனின் சித்தப்பா வீடுகளில் இருந்துஉணவு பலகாரங்கள் இவனுக்கு வந்துவிடும் . நீண்ட நாட்களுக்கு பிறகு அவனின் மீது உரிமையுடன் கூடிய அக்கறை கொண்ட பேச்சு அவனை கொஞ்சம் நெகிழச் செய்தது .
அதே புன்னகையுடன் வயலுக்கு சென்று வேலைகளை பிரித்து கொடுத்து விட்டு சர்க்கரை ஆலைக்கு வந்தான் . எப்பவும் வேலை செய்யும் இடத்தில் கண்டிப்புடன் இறுக்கமாக இருக்கும் முகம் இன்று கொஞ்சம் இளகி புன்னகையை உதட்டில் ஒட்ட வைத்தது போல காட்சி அளிக்க வேலை செய்பவர்கள் ஆச்சரியப்பட்டு போயினர்
முதலாளிக்கு கல்யாண களை வந்துவிட்டதாக பேசிக் கொண்டனர் வெற்றி, திரு , கருணா , மூவரும் தனஞ்ஜெயனை பார்த்து மயக்கம் போடாத குறை தான்
கருணாகிட்ட வந்து தனஞ்ஜெயனின் தாடையை பிடித்து இடது வலமாக திருப்பி “மாப்புள்ள என்னடா தலைக்கு பின்னாடி ஒரு ஒளிவட்டம் தெரியுது ஏதாவது சங்கதி உண்டா ” என ஒன்றும் தெரியாதது போல கேட்க வெற்றியும் திருவும் தலையை குனிந்து கொண்டு உதட்டை மடக்கி நமுட்டு சிரிப்பு சிரிக்க இதை எல்லாம் பார்த்த தனஞ்ஜெயனுக்கு வெட்கம் வர அதை மறைப்பதற்காக
“என்னடா என்ன உளறிகிட்டு இருக்கறிங்க போய் வேலையை பார்க்காம வெட்டி அரட்டை அடிச்சுகிட்டு போங்கடா போய் வேலையை பாருங்க ” என விரட்டி கொண்டு இருக்கும் போது தனஞ்ஜெயனின் போன் அடித்தது .
எடுத்துப் பார்க்க போன் திரையில் எழிலரசி சிரித்து கொண்டு இருந்தாள் எல்லாம் இவளால வந்தது பார்த்து ஒருநாள் தான் ஆகுது அதுக்குள்ள என் பொழப்ப சிரிப்பா சிரிக்க வைக்கறா என நினைத்து போனையே எடுத்து பேசாமல் பார்த்து கொண்டு இருந்தான் .
கருணா அருகில் வந்து போன் திரையை எட்டி பார்க்க முயல வெடுக்கென போனை மறைத்து கொண்டு தள்ளி போய் நின்று பேசினான் .
போனை எடுத்தவுடன் “மாமா ஆலைக்கு வந்துட்டிங்களா வெயில்ல அலையாதிங்க எளநீ குடிங்க “
இருந்த கடுப்பில் “எல்லாம் எனக்கு தெரியும் வைடி போனை ” தனஞ்ஜெயன் எகிற
“மாமா ரொம்ப சூடா இருக்கறிங்க இரண்டு எளநீயா குடிங்க ” என சொல்லி போனை வைத்துவிட்டாள்
இவளை என்ன செய்ய என பல்லை கடித்தவாறு திரும்ப அங்கு ஒரு வேலையாள் இரண்டு சீவின இளநீரோடு நின்று கொண்டு இருந்தான்
அவனை முறைத்துக் கொண்டே ” நான் உன்ன கேட்டனா “
“இல்லிங்க அய்யா சின்ன அம்மணி தான் போன் போட்டு சொன்னாங்க இனி தினமும் இந்த நேரத்துக்கு உங்களுக்கு எளநீ சீவி கொடுக்கோனும்னு அம்மணி பேச்ச எப்படிங்க அய்யா தட்டறது “
“டேய் உங்களுக்கு நான் முதலாளியா அவ முதலாளியாடா “
“நீங்க தான் ய்யா முதலாளி அவங்க முதலாளிக்கு முதலாளிங்க ” கையை கட்டி கொண்டு பணிவுடன் சொல்ல
” போடா முத இங்கிருந்து ” என கத்த இளநீரை நீட்டி கொண்டு அசையாமல் நின்றான்
எரிச்சலுடன் இளநீரை வாங்கி குடித்து வேகமாக தூக்கி எறிந்து விட்டு தன் அலுவலக அறைக்கு சென்று விட்டான்
வில்லாளனின் வாழ்க்கை
வானம் பார்த்த பூமியாக இருக்க
எழிலுக்கு அரசியானவள்
பூவன சோலையாக மாற்ற
மாரியாக வருகை தருகிறாள்
அவளின் வருகையால்
இவனின் வாழ்வில்
வசந்தங்கள் வீசுமோ .…..
Super sis 💞
Thanks for your comment