5 – புள்ளி மேவாத மான்
குளித்து அவள் பரிசளித்த பேண்ட் சர்ட் அணிந்து தான் வழக்கமாக அணியும் கைகடிகாரத்தை தவிர்த்து அவள் கொடுத்த புதியதை கட்டிக் கொண்டு வந்தான்.
‘மாமா ஜீன்ஸ் போடுவாரா வேட்டி கட்டுவாரா’ என சிந்தனையில் இருந்தவள் பேண்ட் போட்டுவிட்டு வரவும் ஆச்சரியம். தனஞ்ஜெயனின் தந்தைக்கு விவசாயமே பிரதான தொழில் . ஊரில் இவர்களின் நிலபுலன்கள் அதிகம். பூர்வீக சொத்தை சரிசமமாக தம்பிகளுக்கு பிரித்து கொடுத்து இருந்தாலும் அதற்கு பிறகு தன் உழைப்பால் நிறைய விவசாய பூமியை வாங்கி இருந்தார் மாணிக்கவேல்.
தனஞ்ஜெயன் குவாலியர் ஐடிஎம் யூனிவர்சிட்டியில் பி.டெக் அக்ரி படித்து விட்டு வந்தவன் சர்க்கரை ஆலை தொடங்க ஆசைப்படுவதாக கூறவும் தன் மகன் மேல் உள்ள அசாத்திய நம்பிக்கையில் மாணிக்கவேல் அதற்கு தேவையான நிலம், நிதி எல்லாம் கொடுத்தார்.
சர்க்கரை ஆலை தொடங்கி நன்றாக நிர்வகித்து இரண்டு வருடங்களில் அவர் கொடுத்த தொகையை திருப்பிக் கொடுத்தான் . அதில் அவருக்கு அவ்வளவு பெருமை .
மாணிக்கவேல் லட்சுமியிடம் “லட்சு புலிக்கு பிறந்தது பூனையாகுமா… என் சிங்கக்குட்டி” என பெருமையாக மீசையை நீவி விட்டு கொண்டு சொல்ல….
“ஏ மாமா உங்க மவன புலிங்கறிங்களா இல்ல…. சிங்கக்குட்டிங்கறிங்களா….” என லட்சுமி கிண்டலடிக்க.…
“நம்ம மவன் சிங்கக்குட்டி நீ வேணா பாரு இந்த ஊருல என்னை விட ஒரு படி மேல உசந்து தான் நிப்பான்” என பெருமைப்பட்டுக் கொண்டார்.
மாணிக்கவேலின் வாக்கை உண்மையாக்கினான் தனஞ்ஜெயன். தந்தைக்கு பிறகு அவருடைய விவசாய நிலங்களையும் பார்க்க நேரிட்டதால் அது வரை பேண்ட் மட்டுமே அணிந்து வந்தவன் வேட்டி கட்ட ஆரம்பித்தான். அது தான் வயலுக்கு செல்ல வசதியாக இருந்தது . அதுமட்டுமில்லாமல் மாணிக்கவேலின் ஊர்தலைவர் பதவி இவனுக்கு வழங்கப்பட எப்போதும் வேட்டி தான் என்றானது. சட்டை மட்டும் பிளெய்ன் கலர் சர்ட்டாக இருக்கும்.
அதை யோசித்து தான் எழிலரசி தன் ஆசைக்கு ஜீன்ஸ்ம் , அவன் வசதிக்கு வேட்டியும் வாங்கியிருந்தாள். அவன் ஜீன்ஸ் அணிந்து வரவும் ரொம்பவும் மகிழ்ந்து போனாள்.
வந்தவன் பூஜை அறைக்கு சென்று , “எழில் இங்க வா” என அழைத்தான். தன் மாமனின் முகம் பார்க்க வெட்கப்பட்டு பேசாமல் போய் நின்றாள். வந்தவளை கையைப் பிடித்து அருகில் நிறுத்தி கொண்டு சாமி கும்பிடுமாறு கண்களால் ஜாடை காட்டி அவளோடு ஜோடியாக நின்று வணங்கினான்.
வணங்கிய பின் தன் நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு , அவள் நெற்றியில் குங்குமம் இட்டான். இதை எதிர்பார்க்காத எழிலுக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கிவிட்டது. கண் கலங்க நின்றவளை தோளோடு சேர்த்து லேசாக அணைத்து விடுவித்தான்.
“ஆயா நாங்க கோயிலுக்கு போயிட்டு வரோம்.”
“இல்ல மாமா நீங்க போயிட்டு வாங்க….”
“ஏன்” என்றான் கேள்வியாக
“இல்ல மாமா….அது… வந்து…” என தயங்க
அவளை கண்கள் இடுங்க பார்த்தவன் அடுத்த நொடி எழிலரசியின் தந்தைக்கு முத்துக்குமாருக்கு அழைத்திருந்தான்.
“மாமா நான் தனா பேசறேன். நான் எழில கூட்டிட்டு கோயிலுக்கு போயிட்டு வரேன்” கூட்டிட்டு போய் வரவா எனவெல்லாம் பெர்மிஷன் கேட்கவில்லை. உத்தரவாக கூட்டிட்டு போகிறேன் என கேட்டான்.
அவர் என்ன சொன்னாரோ”அதை நீங்களே உங்க பொண்ணுகிட்ட சொல்லிடுங்க” என போனை அவளிடம் நீட்டினான்.
அதை வாங்கி காதில் வைத்தவள் அவள் தந்தை என்ன சொன்னாரோ “சரிங்கப்பா… சரிங்கப்பா…”என்றவள் அவனிடம் போனை கொடுத்தாள்.
“இப்ப கிளம்பலாமா..” என்ற போதும் தயக்கத்துடன் பாட்டியை பார்த்தாள்.
வாழ்ந்த மனுசியல்லவா ஒரு பெண்ணாக அவளின் தயக்கம் புரிந்தவராக “போயிட்டு வா தங்கம் யாரு ஏதும் சொல்வாங்களோனு தயங்காத எங்க ராசாவ எவனாவது வாய் மேல பல்லுப் போட்டு பேசிடுவானுங்களா.. ஊருகுள்ள எவனுக்கு அந்த தகிரியம் இருக்கு”
தனஞ்ஜெயனிடம்”ராசா பிளஷர்ல(காருல) கூட்டிட்டு போய்யா புடுபுடு வண்டில(புல்லட்டில்) வேணாம்”
பாட்டி சொல்லவும் இருவரும் தலையாட்டி காரில் கிளம்பினர். அவளுக்கும் மாமனோடு அவன் இடுப்பில் கைப் போட்டு அவனுடைய ராயல் என்பீல்டுல போகனும் என்பது அவளுடைய தீராத தாகத்தில் ஒன்று. ஆனால் கிராமத்தில் கல்யாணத்திற்கு முன்பு இது போல எல்லாம் செய்ய முடியாதே அது வீணான பல பேச்சுக்களுக்கு இடமாகி விடுமே.
இருவரும் கோயிலுக்கு சென்று எழிலரசி அவன் பெயர் நட்சத்திரம் எல்லாம் சொல்லி அர்ச்சனைக்கு கொடுக்க அவனோ அவளுடைய பேர் நட்சத்திரத்தையும் சொல்லச் சொல்லி இருவருக்கும் சேர்த்தே செய்ய சொன்னான்.
கோயிலுக்கு போயிட்டு திரும்பி வரும் போது ,”என் நட்சத்திரம் உனக்கு எப்படி தெரியும்” என தனஞ்ஜெயன் கேட்க
“இது கூட தெரியாதா எனக்கு என் மாமாவப் பத்தி எல்லாம் தெரியும்”
“அதான் எப்படினு கேட்கிறேன்”
“ஹீ ஹீஹீ…அது அது”
“என்னடி ரொம்ப வழியற..”
“அது… அது.. உங்க ஜாதகத்தை பார்த்துட்டு அப்பா சொன்னாங்க…”
பேசியபடியே வீடு வந்தனர். அவன் காரை நிறுத்தி விட்டு வருவதற்குள் சமைத்தவற்றை டேபிளில் எடுத்து வைத்தாள். அவன் வந்து அமர்ந்ததும் அவனுக்கு அருகில் இருந்து பரிமாற எப்பவும் விட ஒருபிடி சேர்த்தே உண்டான்.
அவன் சாப்பிட்டதும் எழிலையும் உட்கார்ந்து சாப்பிட சொன்னான்.
“நான் சாப்பிட்டுகிறேன் நீங்க கிளம்புங்க மாமா”
“இல்ல நீ சாப்பிடு நான் இருக்கேன் தனியா சாப்பிடறதுக்கு கஷ்டமா இருக்கும்”
அவன் சொல்ல இவளுக்கு வலித்தது. முகம் கசங்க அவனைப் பார்த்து “தனியா சாப்பிட கஷ்டமா இருக்காங்க மாமா”என்றாள்.
அவள் கேட்டதும் அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவள் கையை தட்டி கொடுத்து”அது தான் இனி நீ இருப்பில்ல. இப்ப அமைதியா சாப்பிடு” என்றான் கரகரப்பான குரலில்.
அவள் சாப்பிட்ட பிறகே வேலைக்கு கிளம்பி சென்றான்.மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தவனுக்கோ அவன் வீடு தானா என்று ஆச்சரியம்.
ஒற்றை மனிதனாக தான் மட்டும் இருக்கும் வீடு எப்பவும் அமைதியாக இருக்கும் . இன்று வீட்டில் இருந்து சலசலனு பேச்சு குரல்களும் கிண்கிணியாக சிரிப்பு சத்தமுமாக ஒரே ஆர்ப்பாட்டமாக இருந்தது.
வீட்டினுள் நுழைந்தவன் ஹாலில் இவன் சித்தப்பாக்கள் , எழிலின் தந்தை முத்துக்குமார், அண்ணன் தமிழரசு , கருணா, வெற்றி, திரு , பிரசாத் என எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க..
இவனின் சித்திகள், எழிலின் அம்மா, கீர்த்தி , வசந்தி, எழில் அனைவரும் சமயலறையில் கிண்டலும் கேலியுமாக பேசிக்கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தனர் .
கருணாவையும் தம்பிகளையும் பார்த்தவன் ‘ இவனுங்க இவ்வளவு நேரம் ஆலைல எங்க கூட தான இருந்தானுங்க ஒன்னும் சொல்லவே இல்லை . எனக்கு முன்னால வீட்ல இருக்கானுங்க . எல்லாம் கூட்டு களவாணிங்க.’ முறைத்தவாறே நினைக்க
கருணா தனஞ்ஜெயனின் மைண்ட் வாய்ஸை சரியாக படித்தவனாக “டேய் மாப்பிள்ளைகளா உங்க அண்ணன் நம்மள மனசுல வகை வகையா வக்கணையா திட்டிட்டு இருக்கான்டா”
திரு”விடு மாம்ஸ் அவரு திட்றதும் நாம திட்டு வாங்கறதும் புதுசா என்ன நமக்கு தான் பழகி போச்சுல்ல…” என்றான்.
அதற்குள் சுந்தரம்”தனா வந்தாச்சு திலகா.. சாப்பாடு எடுத்து வைங்கமா” என்றார். முன்தினமே வீட்டிற்கு வர அனுமதி கேட்கும் போதே அனைவரையும் மதிய விருந்துக்கு அழைத்திருந்தாள். பெண்கள் அனைவரும் தனஞ்ஜெயன் ஆலைக்கு சென்ற சிறிது நேரத்தில் வர அனைவரும் சேர்ந்தே சிரிப்பும் பேச்சுமாக சமையல் செய்தனர்.
பந்தி பாய் விரித்து இலை போட்டு பருப்பு ஒப்பிட்டு, புடலங்காய் கூட்டு, கேரட் பீன்ஸ் பொரியல், சாம்பார், புளிக்குழம்பு , ரசம், தயிர்,வடை, பாயாசம் என இலை நிறைய பெண்கள் பரிமாற ஆண்கள் சாப்பிட என தனஞ்ஜெயனின் வீடே கலகலப்பாக இருந்தது.
சாப்பிடும் போது தனஞ்ஜெயனிடம் அவனருகே அமர்ந்திருந்த அவன் சித்தப்பா கண்ணன் எழில் வீட்டுக்கு வர அனுமதி கேட்டதும் விருந்திற்கு அழைத்ததையும் சொல்லி கொண்டு இருந்தார். தனஞ்ஜெயனுக்கு எழிலரசியை நினைத்து பிரம்மிப்பாக இருந்தது.
திருமணம் செய்வதற்கு முன்பே தனிக்குடித்தனம் போகவேண்டும். உறவுகளோடு உறவாடகூடாது . உன் வருமானம் என்ன என் செலவுக்கு என்ன தருவாய் கண்டீசன் அப்ளை பெண்களுக்கு நடுவே திருமணத்திற்கு முன்பே தனித்திருக்கும் தன்னை தன் உறவுகளோடு சேர்த்து அரவணைத்து கொள்ளும் அவளின் குணம் தன்னைப்பற்றி அடி முதல் நுனி வரை தெரிந்து வைத்திருக்கும் பாங்கு என தனஞ்ஜெயனுக்கு எழிலரசி எட்டாவது அதியசமாகவே தெரிந்தாள் .
ஆண்கள் உண்டு முடித்து பெண்கள் தங்களுக்குள் தாங்களே பரிமாறி கொண்டு சாப்பிட்டனர் . அப்போது திலகா, “ஏ தேவி… லட்சுமி அக்கா இருந்த போது இந்த வீட்டில் இப்படி எல்லோரும் ஒன்னாக சாப்பிட்டோம் பல வருஷத்துக்கு அப்புறம் இப்ப தான் இப்படி இருக்கோம்.”
“ஆமாக்கா அது அக்காவோட போச்சு இனி எங்க இந்த மாதிரி ஒன்னா கூடி சேர்ந்து சமைச்சு சாப்பிடப் போறோம்னு பல நாளு நான் நினைச்சு வருத்தப்பட்டு இருக்கேன். ஆனா அக்கா மாதிரியே மருமகளும் தங்கமா வந்துருக்கா”
“எங்க காலத்துக்கு அப்புறமும் வீட்டுக்கு மூத்த மருமகளா இருந்து இந்த குடும்பம் ஒடையாம காப்பத்துவேனு எனக்கு நம்பிக்கை வந்திருச்சுமா…” என திலகா எழிலரசியின் கன்னம் வழித்து சொல்ல அதை தேவியும் ஆமோதித்தார்.
உடனே வசந்தி “இதா பாருமா எழிலு… மாமியார் இரண்டு பேரையும் கைக்குள்ள போட்டுகிட்டோம். அதனால பிக்கல் பிடுங்கல் இருக்காதுனு நினைச்சிராத… கொழுந்தியாளுக நாங்க இரண்டு பேரு இருக்கோம் . சும்மா விடமாட்டோம் பார்த்துக்க ஆமாம்” என கீர்த்தியையும் கூட்டு சேர்த்து கொண்டு கேலியாக மிரட்டினாள் .
பதிலடியாக எழில்”நானும் உங்களுக்கு கொழுந்தியா தானுங்க பதிலுக்கு பதில் தான் அண்ணி பார்த்து பதிவுசா இருந்துகுங்க…”என்றாள்.
திலகாவும் தேவியும் சிரித்து கொண்டே ” யாரு எங்க மருமககிட்டயேவா….. பதிலுக்கு பதில் கொடுத்து வாயை அடைச்சாளா….”
“மாமியார் மருமகனு எல்லாம் ஒன்னு கூடிட்டீங்க… ம்ம்ம் இனி என் பேச்சு எங்க அம்பலத்துல ஏறும்.” என சிரிப்புடன் நொடித்து கொள்ள வெகு நாட்களுக்கு பிறகு அந்த வீடு சிரிப்பும் கும்மாளமாக மகிழ்ச்சியாக இருந்தது.
இதை எல்லாம் பார்த்த கற்பகத்திற்கு தன் மகளை நினைத்து பெருமையாக இருந்தது. பின்னே இருக்காதா தன் மகள் போகும் வீட்டில் அவளை கொண்டாடும் சொந்தங்கள் கிடைத்தால் எந்த தாய்க்கும் பெருமையாகத் தான இருக்கும்.
ஏற்கனவே அவளின் காதலில் திக்குமுக்காடி போயிருந்தான். ஆண்களோடு பேசி கொண்டு இருந்தவனின் பார்வை எல்லாம் தன் நாயகிடமே. அவள் கண்களை சிமிட்டி பேசுவதும், கன்னத்தில் குழி விழ சிரிப்பதும் பார்த்தவனுக்கு புத்தி பேதலித்து கண்கள் மயங்க அவளை அள்ளி அணைத்து இன்றே ஆண்டு விட துடித்தது.அவனின் தாபத்தை அடக்க பெரும்பாடு பட்டு போனான்.
தனஞ்ஜெயனின் தனிமை வாழ்வை விரட்ட அத்தனை வசந்தங்களையும் வாரி சுருட்டி கொண்டு வந்தாள் எழிலரசி என்னும் தேவதை. வரம் தரும் தேவதையாக அல்ல . வரமாகவே வந்தாள் இந்த தேவதை .
எல்லோரும் உண்டு முடித்து அவரவர் வீட்டுக்கு சென்றனர் . முத்துக்குமார் தனஞ்ஜெயனிடம் “அப்ப நாங்களும் கிளம்பறோம் மாப்பிள்ளை” என்க
எழில் கிளம்புகிறாள் என்றதும் சட்டென அவன் முகம் வாடிவிட , நொடியில் தன்னை மாற்றிக் கொண்டவன்”சரிங்க மாமா ” என விடை கொடுக்கும் விதமாக தலையாட்ட ,
வினாடி நேரமாக இருந்தாலும் தன் மாமனின் முகவாட்டத்தை கண்டு கொண்டாள். அவளுக்கு அவன் முகவாட்டத்தை பார்த்து ஒருமாதிரி ஆகிவிட்டது.
எழிலின் தந்தை தனஞ்ஜெயனின் கைகளை பிடித்துக்கொண்டு “போயிட்டு வரோம் மாப்பிள்ளை”என விடைபெற்று கிளம்ப பெற்றோர் முன் எதுவும் பேச வழியில்லாது எழிலும் “போயிட்டு வரேன் மாமா” என சொல்லி கொண்டு வெளியே சென்றவள்
“அப்பா என் செல்ல விட்டுட்டு வந்துட்டேன்.எடுத்துட்டு வந்திடறேன்” என சொல்லி நிற்காமல் ஓடிவிட்டாள். ஓடோடி வந்தவளைப் பார்த்து
“என்னடி என்னாச்சு ஏதாவது விட்டுட்டு போயிட்டியா”
“ஆமாம் மாமா உங்களை அம்போனு விட்டுட்டு போயிட்டேன்” என கூறியவள் சட்டென அவன் தோள்களை பிடித்து எம்பி கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவனை நெருங்கி நின்று முத்தமிட்டவுடன் அவளின் நெருக்கமும் அவளின் மேனியின் வாசமும் அவனின் தாபம் கிளர்ந்தெழ செய்ய போதுமானதாக இருக்க அவளை அப்படியே அள்ளி அணைத்திருந்தான். எழிலின் இதழ்களை தன் இதழ் கொண்டு சிறை செய்தான் . அவனின் கரங்களோ அவள் மேனி எங்கும் மேய அவள் கூச்சம் கொண்டு நெளிய அவள் இதழை விடுத்து
“கொஞ்ச நேரம் நெளியாம இருடி”என்றான் சற்று எரிச்சலான குரலில்
“மாமா ப்ளீஸ்… அப்பா அம்மாலாம் வெளியே எனக்காக வெயிட் பண்றாங்க ப்ளீஸ் மாமா ப்ளீஸ்….”
அவள் சொன்னதும் சூழ்நிலை உணர்ந்து அவளை விடுவித்தான். அதற்குள் எழிலின் தந்தை அவளை அழைத்திருந்தார்.அவள் தந்தை அழைக்கவும் ஓடியவளை கைப்பற்றி நிறுத்தி இவனால் நெகிழ்ந்து இருந்த உடைகளை காட்டி
“ஏய் அம்மு சரி பண்ணிட்டு போடி” என்றான் மந்தகாச சிரிப்புடன்
அவன் காட்டிய விதத்திலும் பேசிய பேச்சிலும் வெட்கம் கொண்டு திரும்பி நின்று கொண்டு சரி செய்தாள். சரி செய்து கொண்டு அவனிடம்”மாமா நான் போயிட்டு வரவா” என்று மையலாக கேட்டாள்.
அவளின் அருகில் வந்து அவளின் முடிகளை திருத்தி நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு “போயிட்டு வா போனதும் போன் பண்ணு” என சொல்லி அவள் எடுக்க மறந்த செல்லை கொடுத்து
” வேணும்னே தான வச்சிட்டு போன”என்று கன்னத்தை செல்லமாக கிள்ளி அனுப்பி வைத்தான்.
எழிலின் அன்பையும் அனுசரனையும் மட்டுமே பார்த்தவனுக்கு எழிலின் கோபத்தையும் பிடிவாதத்தையும் பார்க்கும் நாளும் வந்தது.
கொடும் கோடையில் தவித்து
கிடந்தவனை கைப்பிடித்து
முள்பாதையில் இருந்து
மலர்பாதையில் மெல்ல
நடத்தி வசந்த காலத்திற்கு
அழைத்து வரும் தேவதை
இவள்….!
Super and very nice epi sis