புள்ளி மேவாத மான் – 12
எழில் தான் பூங்கொடியை பார்த்து வந்தாள். தனா ஊர் திரும்பிய பின் பூங்கொடியை பார்க்க என கோவிந்தன் வீட்டுக்கு செல்லவில்லை. தனாவின் காதல் ஊருக்குள் முன்பே ஓரளவு தெரிந்திருக்க….. இப்போது தான் அவளைப் போய் பார்த்தால் தவறான பேச்சிற்கு இடமாகி விடும் என்பதோடு மட்டுமில்லாமல் மதுரை போகாமல் இருந்திருந்தால் பூங்கொடிக்கு இந்த நிலைமை வந்து இருக்காதோ என்ற எண்ணம் அவன் மனதை வாள் கொண்டு அறுப்பது போல இருந்தது.
இதில் சுந்தரத்திடம் தனா சந்துருவை பார்த்து விட்டு வந்ததை சொல்ல.. சுந்தரம் பிடிபிடியென பிடித்துவிட்டார். பெரியவங்களை கேட்காமல் தனியாக எதுக்கு போன… நீ போனதால தான பிரச்சினை முத்திடுச்சு…பெரியவங்க பார்த்து எதுவும் செய்யமாட்டோமா…. என்க அதுவும் சேர்ந்து கொள்ள.…
தனாவின் மனதில் பல குழப்பங்கள்.அதனால் அவனின் இயல்பில் அவனில்லை. அவனை அவ்வாறு பார்க்க எழிலுக்கோ வேதனையாக இருந்தது. எழிலை வேதனைப் படுத்துக்கிறோம் என அறியாமல் வேதனைப் படுத்திக் கொண்டு இருந்தான்.
கோவிந்தனுக்கு மகளைப் பார்க்க பார்க்க சந்துருவை கொன்று விடும் வெறி. கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்துவிட்டேன் என புலம்பித் தீர்த்தார்.
பூங்கொடி படுக்கையில் இருந்து எழவே பத்து நாட்களானது. சந்துருவின் மேல் வழக்கு பதிவு செய்து இருக்க…. சந்துருவிடம் இருந்து விவகாரத்து வாங்கிடனும். போதும் மகள் வாழ்ந்தது. உயிரோடு இருந்தால் சரி என்ற முடிவுக்கு வந்து இருந்தார் கோவிந்தன்.
சுந்தரம் வீட்டில் ஊர் பெரியவர்களை வைத்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என முடிவு செய்ய கோவிந்தன்அழைப்பின் பேரில் எல்லோரும் ஒன்று கூடினர். ஊர் பிரசிடென்ட் என்ற முறையில் தனாவையும் அழைத்திருக்க…. தனாவுக்கோ மிகவும் தயக்கம். அதனால் போகலாமா வேண்டாமா என யோசனையில் இருக்க… சுந்தரம் பேசியில் அழைத்துவிட்டார்.
சுந்தரத்திற்கு தனாவின் மனது புரிந்த போதும் அவன் வரட்டும் பேசலாம் என எல்லோரும் காத்திருக்க வேறு வழியின்றி அழைத்தவர்.…
“தனா எல்லோரும் உனக்காக தான் வெயிட் பண்றாங்க வரய்யா தம்பி”
வேறு வழியின்றி வருவதாக சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு எழிலிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி சென்றான்.
தனா ஏதும் எழிலிடம் சொல்லவில்லை என்றாலும் வெற்றி தன் அண்ணிக்கு சொல்லி இருந்தான். தனா சொல்லாமல் சென்றது எழிலுக்கு வருத்தமாக இருந்தது. ஆனாலும் தனா மீது கோபம் எல்லாம் இல்லை. அவனுக்காக தான் வருத்தப்பட்டாள்.
தனா வரவும் எல்லோரும் வயது வித்தியாசம் பார்க்காமல் எழுந்து நின்று கை கூப்பினர். இதைப் பார்த்த கோவிந்தனுக்கு தான் செய்த முட்டாள்தனம் புரிந்தது.
எல்லோரின் வணக்கத்திற்கு பதில் வணக்கம் வைத்தவன் அமைதியாக அமர்ந்து கொண்டான். என்ன செய்வது என ஆளுக்கு ஒன்றாய் பேச எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்து வேடிக்கை மட்டுமே பார்த்தான்.
இறுதியில் சந்துருவின் வழக்கை வாபஸ் வாங்கி விட்டு விவகாரத்து மட்டும் வாங்கி கொள்ளலாம் என முடிவு செய்தனர். தனாவிடம் கேட்க ஒப்புதலாக தலையை மட்டுமே அசைத்தான். தனாவிற்கோ பூங்கொடி விசயத்தில் எதை பேசவும் ஒரு பயம்.அதனால் கடைசி வரை பேசாமல் இருந்து விட்டு விடைபெற்று கிளம்பிவிட்டான்.
சுந்தரமே தனக்கு தெரிந்தவக்கீல் மூலம்சந்துருவிடம் இருந்து விவாகரத்து பெற ஏற்பாடு செய்து கோவிந்தனுக்கு எல்லா உதவிகளையும் செய்தார்.
ஒரு மாதம் கடந்த நிலையில் வழக்கம் போல அன்று தனா கோயிலுக்கு செல்ல… அங்கு பூங்கொடி வந்திருக்க…. அவளைக் கண் கொண்டு தனாவால் பார்க்க முடியவில்லை.
பூங்கொடி ஆள் இளைத்து கருத்து கண்களில் ஜீவனே இல்லாமல் கருவறையின் எதிரே நின்று கடவுளை தன்னிலை மறந்து வெறித்து பார்த்தபடி இருந்தாள்.
எப்படி இருந்தவள் கல்லூரிக்கு செல்லும்போது பார்த்திருக்கிறானே…துறுதுறுனு தன் தோழிகளோடு கலகலனு சிரித்து பேசிக் கொண்டு… அப்போது அவள் சிரிப்பில் கண்களும் மலர்ந்து முகம் விகசித்து அது ஒரு தனி சோபையோடு அன்று அலர்ந்த மலர் போல இருக்க… அந்த அழகில் தலை சுற்றிப் போய் தான் தனா அவளிடம் காதலில் வீழ்ந்தான்.
இன்று அந்த கண்கள் ஜீவனற்று ஏதோ உயிரை கையில் பிடித்து கொண்டு இருப்பது போல கடவுள் முன் நின்று இருக்க….
அவளின் அந்த நிலை தனாவை உயிரோடு மரித்துப் புதைக்க… செய்வதறியாத குழப்பத்திலும்….ஒன்றும் செய்ய முடியாத தன் கையறுநிலையையும் அறவே வெறுத்தான்.
சாமி தரிசனம் கூட முடிக்காமல் வீட்டிற்கு சென்றவன் வழக்கம் போல தன் பெற்றோர் அறையில் நுழைந்து கொள்ள…. சாப்பிட வராமல் செல்வதை பார்த்து ஏதோ சரியில்லை என நினைத்த எழில் சென்று பார்க்க… பெற்றவர்கள் படுக்கையில் ஒருக்களித்து படுத்திருந்தான்.
அவன் படுத்திருந்த நிலை எழிலை பதற செய்ய… வேகமாக அவனருகில் சென்றவள் தன் பதற்றை விடுத்து நிதானத்தை கைக்கொண்டு அவன் தலைமாட்டில் அமர்ந்து மெதுவாக தலைமுடியை ஒதுக்கி நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு
“என்னாச்சு மாமா… ஏன் இங்க வந்து படுத்துக்கிட்டிங்க… பேக்ட்ரிக்கு போகல… உடம்புக்கு ஏதாவது பண்ணுதா… தலைவலிக்குதா… தைலம் தேச்சுவிடவா…”
எழிலின் மடியில் கவிழ்ந்து படுத்தவன் பேசவே இல்லை சிறிதுநேரம் கழித்து தன் மடியில் ஈரத்தை உணர்ந்தவள் துடித்து போய் அவன் முகத்தை நிமிர்த்தி அவனின் கன்னத்தை தன் கைளால் தாங்கி தன் முகம் பார்க்க செய்தவள்…
“மாமா.. மாமா என்னாச்சு… எதுக்கு அழுகறிங்க… என்னன்னு சொல்லுங்க….எதுனாலும் பார்த்துக்கலாம்” என்க..
அவளின் முகம் பார்த்து “உன் காதல் போல என் காதல் இல்லையா…” தவிப்புடன் கேட்டான்.
“என்ன மாமா சொல்லறிங்க…” என புரியாமல் அவன் முகத்தை பார்க்க…
“உன் காதல் என்னை வாழ வச்சுது… ஆனால் என் காதலால் பூங்கொடி வாழ்க்கை ஒன்றும் இல்லாமல போச்சு அது மட்டுமில்லாமல் அப்பா அம்மாவையே நிரந்தரமா என்கிட்ட இருந்து பிரிச்சிடுச்சு…”
“உங்க மேல எந்த தப்பும் இல்லையே. உங்களுக்கு பிடிச்சு இருந்துச்சு காதலிச்சிங்க… முறைப்படி பொண்ணும் கேட்டிங்க… கோவிந்தன் சித்தப்பா தான முடியாதுனு சொல்லிட்டாரு… சரியா விசாரிக்காம அவசர அவசரமாக கல்யாணம் சித்தப்பா பண்ண வச்சாரு…இதுல உங்க தப்பு என்ன மாமா இருக்கு… எல்லாமே சித்தப்பாவோட அவசரபுத்தி தான் பூங்கொடிக்கா வாழ்க்கை இப்படி ஆனதுக்கு காரணம்”
“இல்ல அவள் வாழ்க்கை கெட என் காதல் தான காரணமாகிடுச்சு…”என சொன்னவன் மீண்டும் கண் கலங்க…
இதற்கு என்ன சொல்வது என எழிலுக்கு தெரியவில்லை. அவள் அமைதியாக இருக்க…..
தனா நிமிர்ந்து அவளின் முகம் பார்க்க…. அவன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு….
“மாமா… உங்களை நீங்களே வதைச்சுக்காதிங்க.. இப்பவும் சொல்றேன் இதுல உங்க தப்பு எதுவுமல்ல….”
“ஆனா அப்பா அம்மா சாவுக்கும் நாந்தான காரணம். எல்லாம் என்னால தான…”என தலையில் அடித்துக் கொள்ள….
தனாவை எழில் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொள்ள..அவள் தோளில் சாய்ந்து கொண்டு இதுவரை யாரிடமும் சொல்லாத தன் மனசஞ்சலங்களை அவளிடம் கொட்டித் தீர்த்தான்.
“என் விருப்பத்துக்காக பூங்கொடி வீட்டுக்கு போயி அவமானப்பட்டு வந்தாங்க… அதை அப்பாவால தாங்கிக்க முடியல… ரொம்ப வருத்தமா இருந்தார். அப்பாவ பார்த்து பார்த்து அம்மாவும் வேதனைப்பட்டாங்க….”
“இவங்க இரண்டு பேரையும் பார்க்க பார்க்க எனக்கே என்ன நினைச்சு அசிங்கமா இருந்துச்சு… எப்படி இருந்த வீடு…. நான் தான் அவங்கள வற்புறுத்தி ஹரித்துவார் ரிஷிகேஷ் போயிட்டு வாங்கனு அனுப்பி வைச்சேன். அவங்களுக்கு ஒரு மனமாற்றமா இருக்குமே அப்படினு…”
“போன முதல் நாள் தான் ஒரு மாதிரி டல்லா பேசினாங்க. அதுக்கப்புறம் தினமும் நைட் போன் பேசும்போது அன்னைக்கு போன இடம் பார்த்தது என அவ்வளவு சந்தோஷமா பேசினாங்க.”
“கடைசியா அன்னைக்கு காலைல வெளியே கிளம்பும் முன்ன அம்மா எவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தாங்க தெரியுமா… அது தான் கடைசி பேச்சு என தெரியாமயே அம்மா என்கிட்ட கண்ணு… ராசா… சாப்பிடயா தங்கம்… வேல வேலைனு அலையாம நேரத்துக்கு வீடு வந்திடு சாமி…. சீக்கிரம் தூங்குய்யா…. எல்லாம் சரியாயிடும். நான் எல்லா சாமிகிட்டயும் உனக்காக வேண்டி இருக்கேன் கவலைப்படாதய்யா… கடைசி வினாடில கூட அவங்களுக்கு என் நினைப்பு தான். அம்மாவோட குரல் இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு…”
தன் தோள் சாய்ந்திருந்த தனாவின் முடியை மெல்ல கோதிவிட்டாள் எழில். அவளுக்கு தான் எல்லாம் தெரியுமே….இருந்தபோதும் அவன் மனதில் உள்ளதை கொட்டி தீர்க்கட்டும் என அமைதியாக செவி சாய்த்தாள்.
“அப்போ அங்க தீடிருனு பயங்கர மழை. இவங்க போன வண்டி நிலச்சரிவுல மாட்டிக்குச்சு… அந்த வண்டில இருந்த பதினைஞ்சு பேரும் ஸ்பாட் அவுட்… ஐந்து நாள் கழிச்சு தான் மீட்க முடிந்தது…இங்க கொண்டு வர முடியாம நானும் கருணாவும் சுந்தரம் சித்தப்பாவும் கண்ணன் சித்தப்பாவும் மட்டுமே போயி அங்கயே எல்லா காரியமும் செஞ்சிட்டு வந்தோம். அவங்க வாழ்ந்த ஊருல எதையும் செய்ய முடியாம போச்சு..”
“இதை நினைச்சு நினைச்சே எனக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்… உன்னால தான் கொஞ்சம் அதுல இருந்து மீண்டு வந்தேன். இப்ப பூங்கொடி விசயம் என் மனச அறுக்குது… எல்லாம் என்னால தாங்கற பழி பாவத்துக்கு ஆளாகிடுவேனோனு பயமா இருக்கு எழில்”என அவளை கட்டி கொண்டு கண்ணீர் சிந்தினான்.
எழிலோ”அப்படி எல்லாம் எதுவும் ஆகாது மாமா… உங்க காதல் கண்ணியமானதான இருந்துச்சு. உங்க குணம் ஊருக்கே தெரியாதா ? யாருக்கு தைரியமிருக்கு உங்கள சொல்ல….” என்றவள்..
தன் சேலை தலைப்பால் அவன் முகத்தை துடைத்துவிட்டு அவனை படுக்க வைத்து தானும் அவனை அணைத்தாற் போல படுத்தாள். எழிலின் அணைப்போ…. இல்லை நெடுநாளாக தன் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்த ஆசுவாசமோ… சிறிது நேரத்திலேயே ஆழ்ந்த தூக்கம் அவனுக்கு.
அவன் மனபாரத்தை இறக்கி வைத்துவிட்டான். இவள் மனதில் அதை ஏற்றிவிட்டான்.
அவன் தூங்குவதை உறுதி செய்து கொண்டு மெல்ல வெளியே வந்து சோபாவில் அமர்ந்து தன் போக்கில் சிந்தனையில் மூழ்கிவிட்டாள்.
எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்து இருந்தாளோ… கருணா வந்து அழைக்கவும் தான் சுயம் பெற்றாள்.
“அரசி… அரசிம்மா… கூப்பிட்டு இருக்கேன். அது கூட தெரியாம அப்படி என்ன யோசனை”
“ம்ம்ம்… என்ன அண்ணா கேட்டிங்க”
“தனா எங்கம்மா… பேக்டரிக்கும் வரல.. போன் சுவிட்ஆப்னு வருது”
“மாமா தூங்கறாரு.. நான் தான் அவர் போன ஆப் பண்ணி வச்சிட்டேன்”
“என்னாச்சு உடம்பு சரியில்லயா எங்க மேல படுத்து இருக்கறானா”
“இல்லண்ணா அத்தை மாமா ரூம்ல படுத்து இருக்காரு”
அதை கேட்டவுடன் பதட்டத்துடன் “என்ன பிரச்சனை உன் முகமும் சரியில்லை..” என கேட்டு கொண்டே தனாவை பார்க்க சென்றான்.
முகம் சோர்வாக இருக்க.. நிராதவரான குழந்தை போல தூங்கி கொண்டு இருந்தவனைப் பார்த்து வேதனையாக இருக்க…
சப்தம் செய்யாமல் வெளியே வந்த கருணா எழிலிடம் என்ன என கேட்க எல்லாம் சொல்லிவிட்டாள்.
“அவன் யார்கிட்டயும் சீக்கிரம் மனசு விட்டு பேசமாட்டான். அவனுக்கா ஏதோ சரியில்லாம போகவும் சொல்லிட்டான் போல… பார்த்துக்கம்மா… அவன் நல்லா தூங்கட்டும். நாங்க பேக்டரி வேலையை பார்த்துக்கறோம் வரேன்” என்று விடைபெற்று சென்றான்.
வெகுநேரம் கழித்து எழுந்தவனிடம் எழில் சாப்பிட வருமாறு அழைக்க…. மனதும் சற்று தெளிவாக இருக்க…. சாப்பிட அமர்ந்தான். எழில் பரிமாற இரண்டு வாய் உண்டவன் அவள் கையை தன்னருகே அமர வைத்து அவளுக்கு ஊட்டி விட
“நீங்க சாப்பிடுங்க மாமா…”
“எனக்கு தெரியும் நான் சாப்பிடாம நீ சாப்பிடமாட்டே.. பேசாமல் சாப்பிடு”என்ற ஊட்ட…. அவனின் அந்த செயல் காலையில் இருந்த மனநிலைக்கு சற்று இதமாக இருந்தது.
சாப்பிட்டு முடித்ததும் தனா எழிலின் கைகளை புடித்துக் கொண்டு “தேங்க்ஸ் எழில்… உன்கிட்ட எல்லாம் சொல்லவும் மனசுல பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு…. உன்னோட ஆறுதல் தான் எனக்கு கொஞ்சம் ஒரு தெளிவ கொடுத்திருக்கு”என்று பிடித்திருந்த அவள் புறங்கையில் முத்தம் கொடுத்து தன் நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டான்.
மாலை வரை எழிலோடு இருந்து விட்டு பேக்டரிக்கு போயிட்டு வந்து நேரமாகவே வந்து சாப்பிட்டு எழிலை அணைத்து கொண்டு நிம்மதியாக தூங்கினான்.
விடிந்ததும் அவன் நிம்மதி தொலைந்து….. எந்த பழி பாவத்து அஞ்சினானோ…. அதுவும் நடந்து உயிருக்கு போராடும் நிலை வரும் என தெரியாமல் நிம்மதியான உறக்கம் கொண்டான்.
Super sis 💞
Its like you read my thoughts! You seem to understand a lot
about this, such as you wrote the book in it or something.
I believe that you just could do with a few
p.c. to pressure the message home a little bit, however other than that, this is excellent blog.
An excellent read. I’ll certainly be back.