ATM Tamil Romantic Novels

புள்ளி மேவாத மான் – 16

       16 – புள்ளி மேவாத மான்

 

      கோயிலுக்கு செல்லும் போதே எழிலுக்கு உடம்பு ஒரு மாதிரி இருந்தது. வயிற்றை பிரட்டி கொண்டு வருவது போல இருக்க.. அதிகாலையில் எழுந்தது.. அதோடு கார் பயணம்.. அதனால் அப்படி இருக்கிறதோ.. என நினைத்து கொண்டாள்.

 கோயிலுக்கு சென்று பூஜைக்கான வேலைகள் செய்ய மிகவும் களைத்து போனாள். கனிமொழியை பொங்கல் வைக்க சொல்லி எழிலை உதவிக்கு வைத்து விட்டு திலகாவும் தேவியும் உரலில் மாவு இடிக்க சென்றனர்.

 அடுப்பின் அருகே உட்கார்ந்து வெல்லம் உடைத்து கொண்டு இருந்தவளுக்கு விறகு புகையால் இருமி ஓக்கரித்து கொண்டு வர ஓடிப்போய் வாந்தி எடுத்தாள்.

 கனி பதறி “அத்த.. அத்த.. இங்க வாங்க..”என கூப்பிட.. கனியின் சத்தத்தில் அனைவருமே வந்தனர். திலகாவும் தேவியும் எழிலை அருகே சென்று தண்ணீர் கொடுத்து வாய் கொப்பளித்து முகம் கழுவி கூட்டி வந்து கோயில் மண்டபத்தில் உட்கார வைத்தனர். அதற்குள் அனைவரும் என்ன என வந்துவிட்டனர்.

 திலகா “என்ன அரசி என்ன பண்ணுது காலைல சாப்பிட்டது ஏதாவது ஒத்துக்கலையா…”

 “இல்லைங்க அத்த இட்லி தான சாப்பிட்டேன். புகை தான் ஒத்துக்கல போல..”

 “ஏன் அண்ணி புகையால கண் எரிச்சல்னா கூட பரவாயில்ல… வாந்தி வருதுனா லாஜிக் இடிக்குதே…” என பிரசாத் நக்கல் பேச…

 “டேய் தம்பி… உனக்கு நேரம் சரியில்லடா….”என்ற திரு சொல்லிவிட்டு தலையை குனிந்து கொண்டு சிரிக்க…

 சுந்தரம் இவர்களை பார்த்து முறைக்க… கண்ணன் அமைதியா இருங்களேன்டா என கை ஜாடையாக பேச…

 மகன் சொன்னதை யோசித்த தேவி திலகாவின் காதில் ஏதோ சொல்ல.. திலகாவும் எழிலிடம் மெதுவான குரலில்,

 “கடைசியா எப்ப பீரியட்ஸ் ஆன..”

 முதலில் முழித்தவள்… பின்பு எப்போ என யோசித்தாள்.

 இரண்டு மாதத்திற்கு முன்பு… தனாவின் விபத்திற்கு முன்பு… தனாவை கவனிப்பதில் தன்னை கவனிக்க மறந்துவிட்டாள்.

 “அத்த இரண்டு மாசாமாச்சு”சொல்லும் போதே எழிலுக்கு ஏதோ புரிவது போல இருந்தது. நிஜமா… தனக்கா… கடவுள் கருணை காட்டிட்டாரா… என உள்ளம் பூரித்து போக..

 “நாளு தள்ளி போயிருக்கு தேவி” என சொன்னவர் வேகமாக கடவுளின் முன் போய் நின்று,

 “ஆத்தா… அங்காளம்மா… குலம் தழைக்க வச்சிருக்க.. சந்தோஷமா இருக்கு..  தாயும் பிள்ளையும் நல்லா இருக்கனும்” என மனதார வேண்டி கொண்டு விபூதி எடுத்து வந்து எழிலின் நெற்றியில் இட்டுவிட்டார்.

 பெண்கள் அவர்களுக்குள்ளேயே ரகசியமாக பேசிக் கொள்ள ஆண்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சுந்தரம் திலகாவிடம் என்னவென்று கேட்க.. திலகா சொல்லவும் குடும்பத்திற்கே மகிழ்ச்சி.

திலகா மருத்துவமனைக்கு சென்று உறுதி செய்யும் வரை வெளியில் யாரிடமும் சொல்லவேண்டாம் என்றிட… சுந்தரம் சீக்கிரம் பூஜையை முடித்துவிட்டு கிளம்பலாம் சொல்லவும்,

 விரைவாக பூஜையை முடித்து கொண்டு வந்திருந்த மதிய உணவை சாப்பிட்டு ஊர் திரும்பினர்.எழிலை வீட்டில் கொண்டு வந்து விட்டு திலகாவும் தேவியும் ஆயிரம் பத்திரங்கள் சொல்லி சென்றனர்.

 தனா இதை எல்லாம் பார்த்து கொண்டு தான் இருந்தான். வர லேட்டாகும் என நினைத்திருக்க..சீக்கிரம் வந்ததோடு இல்லாமல் தன் சித்திகள் எழிலிடம் ஏதோ மெதுவாக சொல்லிவிட்டு செல்வதையும் பார்த்தான். அதைவிட எழில் வழக்கத்துக்கு மாறாக இட்ட அடி நோகுமோ என மெல்ல நடந்து வருவதை பார்த்து  இவளுக்கு என்னாச்சு என குழம்பி தான் போனான்.

 தனாவிடம் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்றுவிட…  எப்பவும் மாமா என்ற அழைப்போடு தனது டிரேட் மார்க் புன்னகையோடு வருபவள் அமைதியாக செல்ல… எதாவது பிரச்சினையா என யோசித்து டிவியை அணைத்து விட்டு அறைக்கு வந்தான்.

 எழில் கட்டிலில் உட்கார்ந்திருக்க…தனா அவளின் அருகே சென்று தோளில் தட்டி

 “ஹேய்…எழில் என்னாச்சு ஏன் இப்படி இருக்க..”என கேட்கவும்… அவனை இடுப்போடு கட்டி கொண்டு மௌனமாக கண்ணீர் வடிக்க….

 அவள் அழுகையில் இவன் கவலையுடன் “ஏம்மா அழுகற… யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா”

 தனாவை இழுத்து தன் அருகே அமர வைக்க.. சற்று தடுமாறி அமர்ந்தவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு 

 “மாமா.. நமக்கு பாப்பா…”

 தான் கருவுற்றிருப்பதை அவனிடம் கிசுகிசுப்பான குரலில் சொன்னாள்.

 அவள் சொல்ல வருவது சரியாக புரியாமல் அவள் முகம் நிமிர்த்தி பார்க்க… அவனின் கண்கள் வழி விடுத்த கேள்விக்கு பதிலாக அவன் கைகளை எடுத்து தன் வயிற்றில் வைத்து

 “நம்மள அப்பா அம்மானு கூப்பிட பாப்பா வர போகுது மாமா…” 

 அவளின் செய்தியில் அவனுக்கு சொல்லமுடியாத சந்தோஷம். அவளை அணைத்து கொள்ள.. இருவரும் ஆர்பாட்டமின்றியே அந்த மகிழ்ச்சியை அமைதியாக அனுபவித்தனர். 

 குழந்தைக்காக எவ்வளவு எதிர்பார்த்து ஏங்கி தவித்தாள் என அவனுக்கு தானே தெரியும். அதற்காக அவள் பட்ட கஷ்டங்கள்… ஏச்சுபேச்சுக்கள்… 

 கோவிலில் நடந்தவற்றை சொல்லி முடிக்க.. சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள் இருளாயின் குரலில் தான் வெளியே வந்தனர்.

 எழிலரசியை தன் கைகளால் நெட்டி முறித்து திருஷ்டி கழித்தவர்,

 “இப்ப தான் திலகாத்தா… சொல்லுச்சு… ரொம்ப சந்தோஷம் தாயி.. ஐய்யா.. ராசா… ஐயனும் அம்மாவுமே உனக்கு புள்ளையா பிறப்பாங்க ராசா… இனி நீ கொப்பும் குலையுமா.. இருப்ப எனக்கு அது போதுமய்யா.. இனி இந்த கட்டை சந்தோஷமா வேகும்..” என கண் கலங்க… பொக்கை வாய் கொள்ளா சிரிப்புடன்..

 “ப்ச்ச் ஆயா..என்னை வளர்த்த மாதிரி என் பிள்ளையும் நீ தான் வளர்த்துவ.. இப்ப குடிக்க எழிலுக்கு ஏதாவது கொண்டு வா” என்க.. தள்ளாத வயதை மறந்து சிறுபிள்ளை போல சுறுசுறுப்பாக சென்றார்.

 “எழில் உங்க வீட்ல சொல்லிட்டியா” என்று தனா கேட்க.. 

“இல்ல மாமா.. உங்ககிட்ட சொல்லிட்டு சொல்லலாம்னு இருந்தேன்”

 தனா தனது போனில் இருந்தே அழைத்து எழிலின் கையில் கொடுக்க தன் தாயிடம் விபரம் சொல்ல..

உடனே எழிலின் குடும்பம் எழிலை பார்க்க வந்துவிட்டனர். முத்துக்குமார் மகளுக்கு பிடித்த பலகாரங்கள் பழவகைகள் என அத்தனை வாங்கி வந்திருந்தார்.

தனா அதை பார்த்து ஏன் என் பொண்டாட்டிக்கு நான் வாங்கி தரமாட்டனா… என கடுப்பானான். 

 சற்று நேரத்தில் சுந்தரம் குடும்பமும் கண்ணன் குடும்பமும் வர பேசி சிரித்து.. திலகா தேவி கற்பகம் மூவரும் இரவு விருந்து தடபுடலாக சமைக்க… எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு….என அடுத்த தலைமுறை வருகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

 எல்லோரும் கிளம்பி சென்றதும் தங்கள் அறைக்கு எழிலோடு வந்தவன்  அவளை நெருங்கி அவள் வயிற்றில் புடவையை விலக்கி முத்தம் தொடர்ந்து கொடுத்து கொண்டே இருக்க… அவனின் மீசையின் குறுகுறுப்பு தாங்காமல் நெளிந்தவள்..

 “மாமா.. கூசுது… போதும் விடுங்க”

 “என் புள்ளைக்கு கொடுக்கறேன் உனக்கென்னடி பொறாமையா..”

 “ஆமாம் எங்களுக்கு பொறாமையாம் பொறாமை.. ஒரு ஆமையும் இல்ல..”படபட பட்டாசாய் வெடிக்க..

 தனா சத்தமாக சிரிக்க.. அவனின் சிரிப்பை கண்டு உதட்டை சுழிக்க.. சுழித்த உதட்டை தன் உதடு கொண்டு அடக்க… அவள் மாமனை இறுக்கி அணைக்க.. இவனுக்கு தான் அடங்காமல் தாபம் கிளர்ந்தெழ.. தன் தாபத்த தீர்த்துக் கொள்ள மேலும் முன்னேறியவனுக்கு  குழந்தையின் ஞாபகம் வர.. சட்டென தாப அலை ஓய்ந்தது. அவன் நெற்றியில் முத்தமிட்டு விலகி படுத்துக் கொண்டான்.

 கேள்வியாக மாமனை பார்க்க.. அவளை எடுத்து தன் நெஞ்சில் போட்டு கொண்டு

 “பாப்பாவுக்கு ஏதாவது ஆகிடுமோனு பயமா இருக்கு”

 அவளுக்கும் ஒன்றும் தெரியாததால் அவனின் பயம் அவளுக்கும் தொற்றிக் கொள்ள… பயத்தில் அமைதியாக இருவரும் அணைத்து கொண்டு படுத்திருந்தனர்.

 இதற்கு நடுவே தமிழரசன் கீர்த்தியை யாரும் அறியாமல் சைட் அடிக்க.. கீர்த்தி மனசில் ஒரு சின்ன தடுமாற்றம்.. அதை மீறி தன் குடும்பத்தினரை நினைத்து பயம்.

 எழிலின் கல்யாணத்தின் போது தமிழரசனுக்கு கீர்த்தி மீதான பார்வை சிறுபிள்ளை என இருக்க… வெற்றியின் கல்யாணத்தில் சிறு சலனம்.. சலனம் சஞ்சலமாகி.. காதலாகி… இப்போ உரிமையோடு அவள் மீது பார்வையை பதிக்க… 

 கீர்த்தியை பொறுத்த வரை தமிழரசன் அண்ணியின் அண்ணன் அவ்வளவே…  விபத்து பிறகு தமிழரசன் தனாவை பார்க்க வரும் சமயங்களில் கீர்த்தியை சந்திக்க நேர்ந்த போது அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை தடுமாற செய்தது தான்.

 சிறுபெண் தானே ஏற்பதா.. எதிர்பார்ப்பதா.. என புரியாத நிலை.

 எழிலின் கர்ப்பம் தனாவுள் பல மாற்றங்கள். தன் மனைவி தன் குடும்பம் அதனுள் ஒரு புது வரவு பொறுப்புகள் கூடி போக.. இயலாமையை எரிச்சலாக காண்பிக்காமல்… எழிலை கஷ்டப்படுத்த விரும்பாமல்… அப்பா என்ற பதவி உயர்வு புத்துணர்ச்சியோடு ஓடும் வேகத்தை கொடுக்க… முன்பைவிட முனைப்பாக தன் உடலை நிலைப்படுத்த அனைத்தும் செய்தான்.

ஒருமாதம் ஓய்வு மீதமிருக்க… தன் முயற்சியில் பதினைந்து நாளில் முடித்து கொண்டு… டாக்டரிடம் முழுபரிசோதனை பண்ணிக் கொண்டு பேக்டரிக்கு கிளம்பிவிட்டான்.

 கோவிலுக்கு சென்று வந்த அடுத்தநாளே மருத்துவமனைக்கு சென்று கர்ப்பத்தை உறுதி செய்து வந்தனர் பெண்கள்படை.

 இதுநாள் வரை தனாவை கவனிக்க நேர்ந்ததால்… சரியான நேரத்திற்கு சரியான உணவு எடுத்து கொள்ளவதில் அசட்டை. அதனால் எழிலின் உடலில் கொஞ்சம் பலவீனம். மருத்துவரிடம் அதற்கான அறிவுரையோடு மருந்து மாத்திரைகளோடும்  வீடு வந்தனர்.

தாய்மார்கள் இருவருக்கும் சேர்த்தே இதை செய் அதை செய்யாதே என பட்டியலிட்டனர். ஒரு குழந்தை பிறப்பில் இவ்வளவு இருக்கா… என்ற மலைப்பே தனாவின் உத்வேகத்திற்கு காரணம்.

தனாவுக்கு எழில் செய்தது போய் எழிலுக்கு தனா செய்தான். எழில் சமைத்தாளா என பார்க்காமல் திலகாவும் தேவியும் செய்து கொடுத்தனுப்பி விடுவர்.

அவளை வேளைக்கு சாப்பிட வைக்கும் வேலை தனாவின் பொறுப்பாக்கி கொண்டான். 

“எழில் சொன்னா கேளும்மா.. இந்த ஒரு இட்லி மட்டும் சாப்பிடு…”

“மாமா… ப்ளீஸ் மாமா வேணாம் மாமா..”

“சொன்னா கேளுடி.. கொஞ்சம் சாப்பிடு” என வலுகட்டயாமாக ஊட்ட…

ஓடிப்போய் அத்தனையும் வாந்தி எடுத்தாள். சோர்வுடன் வந்தவளை லேசாக அணைத்து முகம் துடைத்து கைவளைவிலேயே அறைக்கு கூட்டி சென்று படுக்க வைத்து அவனும் அவளை நெருங்கி படுத்துக் கொண்டான்.

 அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்தவள் சிறிது நேரத்தில் அவனின் மீசையை பிடித்து இழுக்க… காதை கடிக்க… இதழோடு இதழ் உரச.. என சேட்டைகள் செய்ய…

எதற்கு இந்த சேட்டை என அறியாதவனா தனா… ஆனால் அவள் உடல்நிலை கருதி அமைதியாக இருந்தான். அவள் அவனை சீண்டிக் கொண்டே இருக்க…

“ஹேய்.. பேசாம இருக்கமாட்டியா…”

“மாமா..மாமா” சிணுங்க…

“வேணான்டி சொன்னா கேளு..மனுசன உசுப்பேத்திகிட்டு இருக்காதே…பாப்பாவுக்கு ஏதாவது ஆகிட போகுது..”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது”

“அதெப்படி உனக்கு தெரியும்.எல்லாம் தெரிஞ்சவ மாதிரி பேசாதே…”

“எல்லாம் தெரிஞ்சிகிட்டு தானே சொல்றோம்”

“யாரு சொன்னா.. டாக்டரா…”

“என் மாமியார்களும் உங்க மாமியாரும் நடத்தின பாடத்துல இதுவும் தான் அடக்கம்”

“நிஜமாவா… ஒன்னும் ஆகாதா”

“ஹூம்ம்…”என தலையாட்ட..

அதற்கப்புறம் அங்கு பேச்சுகளற்ற மௌனபாஷை தான் ஆட்சி செய்தது. அவளுக்கு வலிக்குமோ குழந்தைக்கு பாதிக்குமோ என பயந்து பயந்து  மென்மையாக அவளை ஆட்கொண்டான்

பயத்துடனே இருந்தாலும் நிறைவான தாம்பத்தயமாக தான் இருந்தது இருவருக்குமே.. அவளிடமிருந்து பிரிந்தவன் அவளருகே படுத்து வயிற்றை வருடி கொடுத்து

 

“வலிக்குதாடி… ஏதாவது பண்ணுதா…டையர்டா இருக்கா…  ஒன்னும் ஆகாதுல்ல..” என்றான்.

“ஒன்னும் ஆகாது மாமா..எதுக்கு இவ்வளவு பதட்டப்படறிங்க..” என்க

இருந்தாலும் அவன் முகம் தெளியவில்லை. கொஞ்ச நேரத்தில் அவள் தூங்கிவிட.. இவனுக்கு தான் வெகுநேரம் உறக்கம் வரவில்லை. அவளிடம் சிறு அசைவு ஏற்பட்டாலும் என்னவோ என பதறிப்போய் பார்த்தான்.

காலையில் எழுந்த பிறகும் அவளை பார்த்து கொண்டே அவள் பின்னாடி சுற்றி கொண்டு வயிறு வலிக்குதா… என்னாவது பண்ணுதா… கேட்டுகிட்டே இருக்க…

 எழிலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க… அதற்கும் பயந்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்கே எரிச்சலாகிவிட… போய்யா போய் பொழப்ப பாரு.. என திட்டிய பிறகே கிளம்பி பேக்டரிக்கு சென்றான்.

 செல்லும் போது எதுனாலும் எனக்கு கூப்பிடு என சொல்ல.. இவள் இடுப்பில் கை வைத்து அவனை முறைக்கவுமே.. கிளம்பி சென்றான். 

வீட்டில் கூடவே இருந்து கவனித்துக்கொள்ள பெரியவர்கள் இல்லாத நிலை.. இருளாயி இருந்தாலும் வேலைக்கு என இருப்பவர் உரிமையாக முடியாதல்லவா.. அதுமட்டுமின்றி வயதாகி தள்ளாமை வேற…

அதனால் தான் தான்  அவளை கவனித்து கொள்ள வேண்டும். அவளுக்கும் குழந்தைக்கும் தானே பொறுப்பு என்ற எண்ணமே.. அவனுடைய இந்த பதட்டத்திற்கு காரணம்.

தன்னை எப்படி எழில் கவனித்து கொண்டாள். அதைவிட இருமடங்கு அவளை கவனித்து கொள்வது தனது கடமை என நினைத்தான். கடமையாக தான் செய்ய நினைத்தான். காதலாக இல்லை. கடமைவுணர்ச்சி அதிகமாகி எழிலின் சீற்றத்துக்கு ஆளானான்.

6 thoughts on “புள்ளி மேவாத மான் – 16”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top