20 – புள்ளி மேவாத மான்
எழிலின் காதல் அறிந்த நொடி தனா தன்னை ஒரு மகாராஜா போல கர்வம் கொண்டான். முன்பை விட இப்போது எழில் மேல் ஏக்கம் அதிகமானது. முதல் வேலையாக ஏழிலை கூட்டி வந்திட வேணும் என முடிவு செய்தே பிறகே நிம்மதியான உறக்கம் கொண்டான்.
வழக்கத்தை விட நேரமாக எழுந்து கிளம்பி கொண்டு இருந்தான். அப்போது பேக்டரியில் இருந்து போன் வந்தது. ஏதோ இயந்திரம் பழுதாகி விட்டதாக… உடனே டெக்னீஷியனுக்கு போன் செய்துவிட்டு தானும் கிளம்பி சென்றான்.
எழிலின் தந்தைக்கோ தனா மேல் மிகுந்த கோபம். எழிலோ வந்ததில் இருந்து கணவனைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை யாரையும் பேசவிடலை. கற்பகம் தான் என்ன நடந்தது என உருட்டி மிரட்டி தெரிந்து கொண்டார்.
தெரிந்ததை கணவரிடமும் சொல்லி தெரியாமலேயே ஒரு பிழை செய்தார். பெண்களுக்கு மகள் வாழ்க்கையில் சிக்கல் என்றால் பக்குவமாக கையாண்டு குடும்பம் என்றால் அப்படி தான் என அதையும் இதையும் சொல்லி புருஷனோடு அனுப்பி விடுவர்.
இந்த சூட்சமம் அறியாத ஆண்கள் பிள்ளை மேல் உள்ள பாசத்தில் மருமகனிடம் பகைத்து கொண்டு மகளின் வாழ்வை சிக்கலாக்கி விடுவர்.அதே தவறை முத்துக்குமாரும் செய்தார்.
சுந்தரத்தை செல்பேசியில் அழைத்து என் சிநேகிதனின் மகன் என்பதாலும் கௌரவமான குடும்பம் என்பதாலும் தான் என் மகளை உன் அண்ணன் மகனுக்கு கொடுத்தேன்.
அவன் காதல் கண்றாவி எல்லாம் தெரிந்திருந்தும் நீ வந்து கேட்டதால் கொடுத்தேன். என் மகள் இருக்கும் போது பழைய காதலியை தேடி போறானோ.. என காச்மூச் என கத்தி என் மகளை இனி அனுப்பமாட்டேன் நானே வைத்து பார்த்து கொள்கிறேன் என சத்தம் போட்டு வைத்துவிட்டார்.
சுந்தரம் காலங்கார்த்தாலயே இது என்னடா சிக்கல் என டென்ஷன் ஆகிவிட்டார். பேக்டரியில் பிரச்சினை என வெற்றியும் சென்று இருக்க… வரட்டும் பேசி கொள்ளலாம் என அமைதி காத்தார்.
தனா வர மதியம் ஆகிவிட்டது. வந்தவன் கசகசப்பு நீங்க குளித்து எழிலை பார்க்க தயராக…
சுந்தரம் வீட்டிற்கே வந்துவிட்டார் மனைவி சகிதமாக.. வரும்போதே தம்பிக்கும் அழைத்து சொல்லிவிட்டு தான் வந்தார்.
சுந்தரம் வந்த சிறிது நேரத்திற்கு எல்லாம் கண்ணனும் வந்துவிட.. இவர்களின் வருகையும்… சுந்தரத்தின் கோப முகமும் தனாவிற்கு ஓரளவு விஷயத்தை சொல்லிவிட்டது.
சுந்தரம் மிக கோபமாக ” நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்க.. அரசி எதுக்கு கோவிச்சுகிட்டு போச்சு”
தனா அமைதியாக இருக்க… சுந்தரத்திற்கு ஏகத்திற்கும் கோபம் ஏற…
“இப்படியே அமைதியாக இருந்தா எதுவும் எங்களுக்கு தெரியாது என நினைச்சிட்டு இருக்கறியா..உனக்கு கல்யாணம் ஆகி உனக்குனு ஒரு குடும்பம் ஆகி போச்சு.. இப்ப அந்த பூங்கொடி புள்ளய பார்த்து பேசினா நல்லாவ இருக்கு..”
அவர் அவ்வாறு கேட்கவும் தனா கோபமாக “என்னைய தப்பா நினைக்கறிங்களா..பொண்டாட்டி இருக்கும் போது இன்னொரு பொண்ண தேடி போறவனா நானு…”
உடனே கண்ணன் தணிவாக “தம்பி உன்னை எங்க அண்ணனோட மறுபதிப்பா தான் பார்க்கிறோம். உங்கள எப்படி தப்பா பேசுவோம். அண்ணன் என்ன சொல்ல வராங்கனு பொறுமையா கேளு தம்பி”
“உங்கள தப்பா பேசல தம்பி பனை மரத்துக்கடிய நின்னு பால குடிச்சாலும் ஊரு உலகம் கள்ளுனு தான சொல்லும். நீங்க அந்த புள்ளைக்கு நல்லது செய்ய நினைச்சாலும் ஊரு கண்ணுக்கு அது தப்பா தான் தெரியும்”
“நான் நல்லா வாழும் போது அவ கஷ்டபடறத பார்த்தா எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு”
அவனின் பேச்சில் சுந்தரம் பல்லை கடித்து கோபத்தை அடக்கியவாறு..
“அந்த புள்ள வாழ்க்கையை பார்க்க பெத்தவன் இருக்கான்.. நாங்க பெரியவங்க இருக்கோம் பார்த்து ஏதாவது செய்வோம்”
“இல்லையில்லை அவ புருஷன் கொடுமைக்கு என்னை வச்சு தான பேசறான்.அதனால நான் தான் ஏதாவது செய்யனும்”
அவனின் பேச்சில் சுந்தரம் கோபத்தின் உச்சிக்கே சென்று விட”அவ அப்பன் தான உங்களுக்கு கட்டிக் கொடுக்க மாட்டேனு சொன்னாரு..அவரே தான பொண்ணுக்கு இந்த பையன பார்த்து கட்டி வச்சாரு.. அவரு தேடி தந்த வாழ்க்கை தான.. அவரு தான் சரி பண்ணனும். நீங்க உங்க பொழப்ப மட்டும் பாருங்க…நீங்க தேவையில்லாம தலையிட்டு அந்த புள்ள பேரு இன்னும் கெட்டு போறதும் இல்லாம உங்க வாழ்க்கையும் சிக்கல் பண்ணிக்காதிங்க”
“உங்களுக்குனு கௌரவம் அந்தஸ்து பிரசிடென்ட் பதவி எல்லாம் இருக்கு அதுக்கு தக்கன நடந்துங்குங்க அதான் உங்க வாழ்க்கைக்கும் நல்லது நம்ம குடும்பத்திற்கும் நல்லது”
“முத்துக்குமார் மாமா கேட்கற கேள்விக்கு எங்களால பதில் சொல்ல முடியல.. போய் முதல்ல அரசிய சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர வழியை பாருங்க” என சொல்லிவிட்டு விருட்டென எழுந்து சென்றுவிட்டார்.
கண்ணன் தேவி திலகா மூவரும் அவனிடம் பொறுமையாக பேசி சில விஷயங்களை புரிய வைத்து விட்டு சென்றனர்.
அதன் பிறகே தனா கொஞ்சம் தெளிந்தான்.உடனே எழிலை கூட்டிட்டு வர கீரனூர் சென்றான்.
இவன் சென்ற நேரம் முத்துக்குமார் வீட்டில் இருந்தார். மருமகனை வா என அழைக்காமல் முகத்தை திருப்பி கொண்டார்.
என் பொண்ணு இவனுக்கு அவ்வளவு இளக்காரமா போயிட்டாளா… சிநேகிதன் மகனாச்சேனு பார்க்கறேன்.. இல்ல நடக்கறதே வேற.. என மனதில் தனாவை தாளித்து கொண்டு இருந்தார்.
தனாவிற்கு அவரின் செயல் முகத்தில் அடித்தாற் போல இருக்க அவரை முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.
இவரு என்ன இப்படி முகத்தை திருப்பி கிட்டு இருக்காரு.. என் பொண்டாட்டி நான் சண்ட போடுவேன். கொஞ்சுவேன் எதுனாலும் நானாச்சு… என் பொண்டிட்டியாச்சு.. இந்தாளுக்கு என்ன வந்துச்சாம்.. என மனதோடு வசை பாடி கொண்டு இருந்தான்.
கற்பகம் தான் வரவேற்று காபி பலகாரம் என உபசரித்தார். எழில் அவன் வந்தது தெரியாமல் அவள் அறையில் உறங்கி கொண்டு இருந்தாள்.
தனா எழிலை பார்வையாலே தேடினான். மருமகனின் பார்வை உணர்ந்து கற்பகம் தான்
“அரசி தூங்கிட்டு இருக்கா மாப்பிள்ள.. இருங்க எழுப்பி விடறேன்”
“இல்லல்ல வேணாம் எழுப்ப வேணாம் அத்தை.. நான் பார்த்துக்கறேன்” என சொல்லிவிட்டு சிறு தயக்கத்துடன் எழிலின் அறைக்கு சென்றான்.
இவன் சென்று பார்த்த போது எழில் அசந்து தூங்கி கொண்டு இருந்தாள். என்ன செய்வது என தெரியாமல் அவள் காலடியில் அமர்ந்து கொண்டான்.
அப்போதும் அவள் பாதங்கள் சற்று வீக்கமாயிருக்க… மெல்ல பிடித்து விட ஆரம்பித்தான்.
அவனின் செயலில் சற்று தூக்கம் கலைய “ம்மா விடுங்க தூங்கனும்”என சொல்லி அசைந்து படுத்து மீண்டும் தூங்கிவிட்டாள்.
தன் செயல் அவள் தூக்கத்தை கெடுக்கிறதை உணர்ந்து மெல்ல நகர்ந்து அவள் அருகில் அவளை தொந்தரவு செய்யாமல் படுத்து கொண்டான்.
அவள் மேடிட்டு இருந்த வயிறு அவள் ஒருக்களித்து படுத்து இருந்ததில் சற்று சரிந்து புடவை விலகி இருக்க… எழில் தான் தூங்கி கொண்டு இருந்தாள். ஆனால் அவள் பிள்ளை தூங்கவில்லை.
பிள்ளை துள்ளலோடு அம்மாவின் வயிற்றை உதைக்க.. ஒரு நொடிக்கும் குறைவான நேரம் தான் என்றாலும் தனாவின் பார்வைக்கு அது தப்பவில்லை.
தான் பார்த்தது நிஜமா.. பிரம்மையா என அவன் உணரும் முன்னமே.. வயிறு இயல்பாகி விட பிரம்மிப்பில் இருந்தான்.
அவனோ எழுந்து அமர்ந்து எழிலின் வயிறையே பார்த்து கொண்டு இருக்க.. மறுபடியும் ஒரு துள்ளல்…
தனாவிற்கோ மனதில் சொல்ல முடியாத பரவசம். தன்னை தந்தையாக உணர்ந்தான் அந்த நொடி. அவனை அறியாமல் மகிழ்ச்சியில் கண்கள் கலங்கிவிட்டது.
இதை எல்லாம் கவனிக்காமல் உணராமல் தேவை இல்லாத பிரச்சினையில் தன்னை தொலைக்க இருந்த மடத்தனத்தை எண்ணி தலையில் அடித்துக் கொண்டான்.
குழந்தைக்கு பசி எடுத்துவிட மீண்டும் மீண்டும் தாயின் வயிற்றை முட்ட.. தனா மெதுவாக எழிலின் வயிற்றில் கை வைத்து அதன் ஸ்பரிசத்தை உணர முயன்றான்.
பிள்ளையின் துடிப்போ…. தனாவின் கை அழுத்தமோ… எழிலின் தூக்கத்தை தடை செய்ய…
மெல்ல எழுந்தவள் தன்னருகில் இருந்த தனாவை அவள் எதிர்ப்பார்க்கவில்லை என்பதை அவள் பார்வையே சொன்னது.
சட்டென பார்வையை மாற்றி கொண்டு அவனை முறைத்து பார்த்து கொண்டே இருக்க..
அவளின் கோபத்தை கலைக்கவென பிள்ளை என்னை முதல்ல பாருமா என துள்ளாட்டம் போட்டது. உடனே தன் தாயை தேடி சென்றாள்.
தனாவிற்கோ பிள்ளை பற்றிய சிந்தனையில் அவளின் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளவில்லை..
என் பிள்ளை என்னை போல அமைதியாக இல்லாமல் இவளை போல துறு துறுனு இருப்பான் போல… இருந்தாலும் என்னை போல ஆக்டிவா தான் இருப்பான்.என என் பிள்ளை… என் பிள்ளை… என பூரித்து போய் இருந்தான்.
சற்று நேரத்தில் எழில் திரும்பி வர.. தனா உட்கார்ந்து கொண்டு கனவுலகில் தன் பிள்ளையோடு உறவாடி கொண்டு இருக்க..
கற்பகம் எழிலுக்காக சுண்டல் தாளித்து இருக்க.. அதையும் எழிலிடம் மருமகனுக்காக கொடுக்க..
அதை வாங்க மறுத்த எழிலை கண்டித்து அவள் கைகளில் திணித்து அனுப்பி விட…
ஏற்கனவே தனா மேல் கோபத்தில் இருந்தவளுக்கு இந்த மாப்பிள்ளை உபச்சாரம் எரியற தீயில் எண்ணை வார்க்க…
கடுப்புடன் சுண்டல் கப்பை நங்கென்று அங்கிருந்த டீப்பாயில் வைக்கவும்.. அந்த சத்தத்தில் கனவுலகில் இருந்து மீண்டு நிகழ்விற்கு வந்தான்.
அப்போதும் அவன் பார்வை ஆசையாக எழிலின் வயிற்றின் மேலேயே இருக்க…
பார்த்தவளுக்கு பற்றி கொண்டு வந்தது.
“எழில் கிட்ட வாயேன். பாப்பவ தொட்டு பார்க்கனும் போல ஆசையா இருக்கு.. “
“இப்ப இங்க எதுக்கு வந்திங்க”
“என்னடி இது கேள்வி பாப்பவ பார்க்கனும் போல இருக்கு” என புதிதாக தோன்றிய பிள்ளை பாசத்தில் என்ன சொல்லுகிறோம் என தெரியாமல் உளறி வைத்தான்.
“ஆக என் மேல உள்ள அன்பினால வரலை..புள்ள பாசத்துல வந்திருங்கிங்க..”
“என்னடி இப்படி பேசற.. நம்ம புள்ள..”என்றான்.
“பிள்ளைக்காக வந்திங்களா.. எனக்காக வந்திங்களா..” வெட்டு ஒன்று துண்டு இரண்டு என கேட்க..
“அப்படி எல்லாம் இல்ல.. உன்ன பார்க்க தான் வந்தேன். உன்னைய கூட்டிட்டு போகலாம்னு தான் வந்தேன்”
“ஓஓஓ… அப்படி எல்லாம் வரமுடியாது. நீங்க கூப்பிட்டா வந்திடனுமா.. வந்து என்ன செய்ய.. மறுபடியும் அந்த பூங்கொடி நினைப்புல சுத்துவிங்க.. என்னைய ஒதுங்குவிங்க.. பார்த்துட்டு மூலை உட்கார்ந்துட்டு கண்ணீர் வடிக்கனுமோ…”
“இனி பூங்கொடி பத்தி பேசவேமாட்டேன். நம்ம வாழ்க்கைல இனி எப்பவும் பூங்கொடி கிடையாது. உன் காதல புரிஞ்சுக்காம நான் பண்ணினது தப்பு தான்”
“எந்த மரத்துல இந்த ஞானோதயம் வந்துச்சு”
மிகவும் தயங்கி தயங்கி “உன் டைரி… படிச்சேன்…” என்றான்.
அவ்வளவு தான் பொங்கிவிட்டாள் எழில்.
“ஓஹோ… டைரி படிச்சதால வந்த பரிதாபமா.. இத்தனை நாள் கூட வாழ்ந்த போது தெரியல.. டைரி படிச்சு தான் தெரிஞ்சுதோ..”
“இல்ல டைரி படிக்காததுக்கு முன்னாடியே உன்னை வந்து கூட்டிட்டு போவனும் தான் இருந்தேன். நைட் நீ இல்லாம தூக்கம் வரலையா.. அதான் டைம் பாஸ்கு படிச்சேனா.. அப்படி தான் தெரிஞ்சுகிட்டேன்”
என்னது டைம் பாஸ்கா… என அதிர்ந்தவள் “நான் உயிர கொடுத்து காதலிச்சா..யோவ் உனக்கு டைம் பாஸா” என கத்த ஆரம்பித்தாள்..
அவசர அவசரமாக கிட்ட வந்து அவள் வாயை மூடியவன்..
” ஏய்.. மெதுவா பேசுடி.. ஏற்கனவே உங்க அப்பா முறைச்சிகிட்டு இருக்காரு.. பத்தாதுக்கு சித்தப்பாவுக்கு போன் பண்ணி சொல்லி சித்தப்பா வந்து என்னை திட்டு திட்டுனு திட்டி உடனே அரசி கூட்டிட்டு வர என சொல்லிட்டார்”
எழிலுக்கு முத்துகுமார் சுந்தரத்திடம் பேசினது எல்லாம் தெரியாது.
“இது எப்போ..”
“இப்ப தான் மத்தியானம்”
“அப்ப உங்களுக்கா என்னை வந்து பார்க்கனும்னு தோனல..டைரி படிச்சதாலயும்… மாமா திட்டுனதாலும் வந்திருங்கிங்க இதெல்லாம் நடக்கலைனா இப்பவும் வந்திருக்கமாட்டிங்க..”
அய்யோ நானா ஒரு ப்ளோல எல்லாத்தையும் உளறிட்டேன் போல இருக்கே.. மொத்தமா மலை ஏறிட்டாளே.. எப்படி இறக்க போறேனோ தெரியலையே… என மௌனமாக புலம்பியவாறே பரிதாபமாக அவளை பார்த்தான்.
“ம்ம்ம்.. அப்படி தான் வந்ததும் என்னைய பார்த்திங்களா.. உங்க புள்ளய தான பார்த்திங்க…” என அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்தாள்.
“இல்லடி உன்னைய தான் பார்த்தேன் உன் கால எல்லாம் அமுத்திவிட்டேன் தெரியுமா… உன் தூக்கத்துக்கு தொந்தரவா இருக்கவும் விட்டுட்டேன். அப்புறம் தான் பாப்பாவ பார்த்தேன்” என்றான் அவசரமாக பதட்டத்துடன்…
அவனின் பேச்சில் உண்மை இருப்பது போல தெரியவும்.. எழிலுக்கு மனதுக்குள் கொஞ்சம் சந்தோஷமாக தான் இருந்தது. இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் கெத்தாக..
“சரி சரி இப்ப எதுக்கு வந்திங்க.. அத சொல்லுங்க” என்றாளே….
அய்யோ மறுபடியும் முதல்ல இருந்தா என தனா தனக்குள்ளயே புலம்பியவாறே…
“அம்மா… தாயே… நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன்.. மீ ரொம்ப பாவம்.. அறியாத புள்ள தெரியாம பண்ணிட்டதா.. நினைச்சு மன்னிச்சு விட்று” என்றான் நொந்து போய்…
“மன்னிச்சறு.. மன்னிச்சுறுனா மன்னிப்பு கேட்காம எப்படி மன்னிக்கறது ம்ம்” என்றாள் அதிகாரமாக…
சட்டென அவளை நெருங்கி அவள் கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு
“நான் பண்ணினது தப்பு தான். சாரி..சாரி..இனி இது மாதிரி பண்ணமாட்டேன். சாரி.. மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றான் தன் தப்பை உணர்ந்து..
எழில் தனாவை மன்னித்தாளா.. தனாவுடன் சென்றாளா…
Supero super sis