21புள்ளி மேவாத மான்
தனா எழிலிடம் மன்னிப்பு கேட்டதும் அமைதியாகினால் தவிர சமாதானம் ஆகவில்லை. தனா எவ்வளவோ சமாதானம் செய்தும் வீட்டிற்கு வர ஒத்து கொள்ளவில்லை. நீண்ட நேரம் போராடி அவளை ஒரு வழியாக ஒத்துக் கொள்ள வைத்திருந்தான். அப்போதும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு தான் இருந்தாள்.
தனது மாமனார் மாமியாரிடம் எழிலை வீட்டுக்கு அழைத்து செல்வதாக தனா சொல்ல கற்பகம் சந்தோஷப்பட்டார். ஆனால் முத்துக்குமாரோ..
“என் பொண்ணை அனுப்ப முடியாது”
“ஏன்” என்று தனா கேள்வி எழுப்ப..
“என்னங்க” கற்பகம் தடுக்கும் விதமாக…
“நீ பேசாம இரு கற்பகம்” என்று மனைவியை அடக்கியவர் தனாவிடம்
“உங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சிருந்தும்
என் மாணிக்கத்தோட பையன்… என் பொண்ணு ஆசைப்பட்டா… அதனால தான் உங்களுக்கு என் பொண்ண கட்டி கொடுத்தேன். மாணிக்கத்தோட நல்ல குணத்துல பாதியாவது உங்ககிட்ட இருக்கும் என நினைச்சு தான் என் பொண்ணுக்காக ஒத்துகிட்டேன்”
“ஆனா நீங்க பொண்டாட்டி வாயும் வயிறுமா இருக்கும் போது அவள பார்க்காம இன்னொரு பொண்ண பார்க்கப் போயிருங்கிங்க இந்த மாதிரி தரங்கெட்டவரோட என் பொண்ண அனுப்ப முடியாது”
“நிறுத்துங்கப்பா… பேசினது போதும் நிறுத்துங்க”என்றாள் எழில் சீற்றத்துடன்..
ஏற்கனவே தந்தை தன் கணவனிடம் பேசாமல் முறைத்துக் கொண்டு இருந்தது பிடிக்கவில்லை தான். அவர் ஆதங்கம் ஏதோ செய்கிறார் என அமைதி காத்தவள்.
தன் கணவனின் நடத்தையை தவறாக பேசவும் அவளால் பொறுக்கமுடியவில்லை.
மகளின் சீற்றத்தில் முத்துககுமார் அதிர்ந்து போய் எழிலை பார்க்க..
இதற்கு தான் ஆரம்பத்திலேயே தடுத்தேன்.. எங்க நாம சொல்றது புரிஞ்சா தான.. வாங்கி கட்டுங்க.. அப்ப தான் அடங்குவிங்க. கற்பகத்தின் மைண்ட் வாய்ஸ்..
தனா மாமனாரை வெட்டவா.. குத்தவா.. பார்வை பார்த்து கொண்டு இருந்தான் தனா..
“அவரு பூங்கொடி அக்காவுக்கு ஏதோ நல்லது செய்யலாம்னு தான் போனாரே தவிர வேற எந்த தப்பான எண்ணம் கிடையாது”
” அது உங்களுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது நீங்க எப்படி அவர தப்பா பேசலாம்”
மகளின் புருஷனுக்கான பேச்சில் முத்துகுமாரின் தந்தை மனம் அடி வாங்கியது.
“இருக்கட்டுமே அவரு மேல தப்பே இல்லைனே இருக்கட்டும். ஆனா யாருகிட்டயும் சொல்லாம இவரு எதுக்கு அந்த புள்ளய போய் பார்க்கனும். அட யாருகிட்டயும் வேணாம். உங்கிட்டயாவது சொல்லி இருக்கலாம்ல.. எதுக்கு மறைக்கனும்” என்றார் எழிலிடம்..
அவர் கேட்பது நியாயம் தானே.. இதுக்கு என்ன பதில் சொல்வது..
இருந்த போதும் புருஷனை விட்டு கொடுக்க மனமில்லாமல்…..
“அது அவரு ஏதோ மன ஆதங்கத்துல எதாவது நல்லது செய்யலாம்னு தான்.. செய்தாரு..அதுக்கு அவர நிக்க வச்சு கேள்வி கேட்பிங்களா..”
என்ன தான் தன் மேல் கோபம் இருந்தாலும் தந்தையிடம் கூட தன்னை விட்டு கொடுக்காமல் பேசும் மனைவி மீது இன்னும் காதல் கூடி போனது தனாவிற்கு…
“கண்டிப்பா கேட்பேன்.. நான் கேட்பேன் பதில் சொல்லி தான் ஆகனும் என் பொண்ணு வாழ்க்கைகாக ஒரு தகப்பனா நான் கேட்க தான் செய்வேன்”
தந்தையின் பேச்சில் எழில் தடுமாற…மாமனாரின் தார்மீக கோபம் புரிபட தனா தான் சட்டென தன் கோபத்தை விட்டு இறங்கி வந்தான்.
“மாமா… நான் ஏதோ மனக் குழப்பத்தில் செஞ்சிட்டேன். ஆனா தப்பா ஏதும் செய்யல.. அநத பொண்ணு வாழ்க்கை நல்லா இருந்தா நான் கொஞ்சம் நிம்மதியா எழிலோட இருப்பேனு தோனுச்சு..அதான் இப்படி…. இனி இது போல நடக்காது..” என சொல்லியவன்..
மறந்தும் மாமனாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை. தன் செயலுக்கு விளக்கம் தான் அளித்தான். மனைவியிடமே மன்னிப்பு கேட்க யோசித்தவன் மாமனாரிடமா கேட்பான்.
அது தெரிந்து முத்துக்குமார் அவனிடம் முறைத்துக் கொண்டு நின்றார்.
கற்பகமும் ” மாப்ள தான் அவ்வளவு சொல்லறாருல… எழிலை கூட்டிட்டு போகட்டும். அடுத்த மாசம் வளைகாப்பு பண்ணி கூட்டிட்டு வந்திடலாம்.” கணவரை சமாதானமாக பேசி சரிகட்ட…
என்னது… அடுத்த மாசமா… என அதிர்ந்தவன்.. ம்ஹூம் ஒன்பதாம் மாசம் அனுப்பலாம் எழில.. முதல்ல இங்கிருந்து கூட்டிகிட்டு போவோம்.. அப்புறம் பேசிக் கொள்ளலாம். என தனக்குள் ஒரு கணக்கு போட்டு கொண்டு தனா யோசித்து கொண்டு இருக்க..
ஒருவாறாக எழிலை அனுப்ப மனமே இல்லாமல் தனாவிடம் “அரசியும் கற்பகமும் சொல்றதால அனுப்பறேன். இதே தப்பு மறுபடியும் நடந்தா அரசிய நிரந்தரமா எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவேன்.. அதப் பார்த்துக்குங்க..”என்றார் எச்சரிக்கும் விதமாக..
அவருடைய பேச்சு தனாவிற்கு உள்ளுக்குள் கோபத்தை கிளப்ப..பல்லை கடித்து தன்னை அடக்கியவாறு எழிலை அழைத்து செல்வதற்காக அமைதி காத்தான்.
கற்பகம் மகளை அனுப்புவதற்கான ஏற்பாட்டை கவனிக்க எழிலோடு சென்று விட.. வந்த போது இருந்ததை போலவே மாமனார் மருமகன் இருவரும் எதிரெதிர் சோபாவில் அமர்ந்து முறைத்துக் கொண்டு இருந்தார்கள்.
வேலைக்கு சென்று அப்போது தான் திரும்பி வந்த தமிழரசன் வீட்டில் நடந்தது எதுவும் தெரியாததால்.. அவனும் அவன் பங்கிற்கு தனாவை முறைத்துக் கொண்டே.. தாயைத் தேடி உள்ளே சென்றான்.
வேலையை விட்டு வரும் வழியில் காலேஜ் பஸ்ஸில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்த கீர்த்தி இவனை பார்த்தும் பார்க்காதது போல செல்ல… ஏற்கனவே தனா மேல் இருந்த கோபமும் சேர்ந்து கொள்ள… வழி மறித்து சண்டை போட்டு வந்திருந்தான்.
கீர்த்தியிடம்”என்னடி உங்க குடும்பத்திற்கே திமிரு அதிகமாடி.. என்னைய பார்த்துட்டு பார்க்காத மாதிரி போற..”
“ஹலோ.. நான் எதுக்கு உங்கள பார்க்கனும். உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு”
“உனக்கும் எனக்கும் ஒன்னுமே இல்லயாடி…” என்றான் ஆத்திரத்துடன்…
அவனின் கேள்வியும் கோபமும் மனதுக்குள் சாரலாக இறங்கியது. இருந்த போதும் அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல்….
“இருக்கு.. ஆனா நீங்க நினைக்கற மாதிரி இல்ல..”என அவனிடம் சொல்ல..
இருக்கு என்று சொன்னதும் அவன் முகம் மலர்ந்ததையும்.. அடுத்த வார்த்தையில் மலர்ந்த முகம் கூம்பி போனதையும் கண்டவளுக்கு மனதுக்குள் வலித்தாலும்.. அதை அவள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
“நான் என்ன நினைக்கறேனு உனக்கு தெரியுமா…”
தன் வாயை பிடுங்கி வார்த்தையை வாங்க பார்க்கிறான் என உஷாரான கீர்த்தி
“அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க..எனக்கு நீங்க அண்ணியோட அண்ணன் அவ்வளவு தான்..”என சொல்லி விட்டு நிற்காமல் சென்றுவிட்டாள்.
அவளின் பேச்சால் உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்த கோபத்தை பைக்கை உதைத்து ஓட்டும் வேகத்தில் காண்பித்தான். பாவம் அந்த பைக்கிற்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..
அதே கோபத்தோடு வீட்டுக்கு வந்த தமிழரசன் தனாவை உறுத்து விழித்தவாறு உள்ளே சென்றான். என்னடா உங்களுக்கு பிரச்சினை எல்லாரும் என்னையவே வெறிக்க வெறிக்க பார்க்கறிங்க.. என தனா நினைத்து காண்டாகினான்.
உள்ளே சென்று தன் அம்மாவிடம் மனதுள் இருந்த கோபத்தை குரலில் காட்டி
“என்னவாம் அவருக்கு”என்றான்.
எழில் தன் துணிகளை எடுத்து வைக்க அவள் அறையில் இருக்க..
கற்பகம் மகனிடம்”டேய் சும்மா இருடா.. அவ காதுல விழுந்திட போகுது.. இப்ப தான் உங்க அப்பா வாங்கி கட்டிகிட்டார்..”
தங்கையை பற்றி அறிந்ததால் அமைதியானவன்
“இப்ப எதுக்கு வந்திருக்காரு..”என்றான் எரிச்சலோடு..
“எழிலை கூட்டிட்டு போக..”
“இனி இது மாதிரி இன்னொருக்கா செஞ்சாரு மனுஷனா இருக்கமாட்டேன். சொல்லி வைங்க..” என்று தாயிடம் எகிற..
“என்ன பேசனுமோ… எல்லாம் பேசி தான் இருக்கோம்.. நீ வேற ஆரம்பிக்காத.. போய் வேற வேலை இருந்தா பாரு”
தாயின் பேச்சில் சமாதானம் ஆகாமல் முனுமுனுத்து கொண்டு தங்கையை பார்க்க சென்றுவிட்டான்..
இப்படி மாமனாரு மச்சினன் முறைப்பை எல்லாம் சமாளித்து ஒருவழியாக எழிலை வீட்டிற்கு அழைத்து வந்தான்.
வீட்டிற்கு வந்தும் எழில் தனாவோடு முகம் கொடுத்து பேசாமல் முறுக்கி கொண்டு இருந்தாள்.
எழில் வந்தது தெரிந்து சுந்தரம் கண்ணன் குடும்பம் வந்து பார்த்து சென்றனர்.
சுந்தரம் எழிலையும் “குடும்பத்துல பெரியவங்ககிட்ட சொல்லாம கொள்ளாம கிளம்பிடறதா..நாங்க எதுக்கு இருக்கோம்.. உங்க அப்பாரு கேட்கறதுக்கு என்னால பதில் சொல்ல முடியல.. எதுனாலும் நம்ம குடும்பத்துக்குள்ள தான் இருக்கனும்.வெளிய போககூடாது”என்று திட்டி விட்டு தனாவையும் சேர்த்தே அர்ச்சித்து விட்டு சென்றார்.
என்னங்கடா இது ஒரு நல்லது பண்ண நினைச்சது குத்தமா… அதுக்கு இப்படி எல்லாரும் ரவுண்டு கட்டறிங்க…என மண்டை காய்ந்தான் தனா…
அவனை மேலும் காய்ச்சி எடுக்க எழில் வேறு காத்திருந்தாள். எல்லோரும் சென்றதும் இரவு உணவுக்கு சாப்பாட்டு மேஜைக்கு வந்தான்.
“எழில் டிபன் போடறியா…”என எழிலை கூப்பிட்டான்.
வரேன் வந்து மண்டைலயே போடறேன் என முனகி கொண்டே வந்தவள் பாத்திரங்களை சத்தம் வருமாறு நங்கென்று வைத்தாள்.
அவள் முனகல் அவன் காதுகளில் விழுகவில்லை.
“எதுக்குடி இப்படி உடைக்கற.. “
“ம்ம்ம் அப்படி தான் உடைப்பேன்.. அதுக்கு என்னங்கறிங்க இப்ப..”
“இப்ப என்னதுக்கு சண்டகோழி மாதிரி சிலுத்துகிட்டு வர…”
“நீங்க செஞ்ச வேலைக்கு வச்சுகிட்டு கொஞ்சுவாங்களா..”
ஆஹா இவ அத மறக்கமாட்டா போல இருக்கே..டேய் தனா இவள வேற மாதிரி பேசி டைவர்ட் பண்ணு என்ற அவன் மைண்ட் வாய்ஸ்கு அடி பணிந்தான்.
“ஹீஹீஹீ….கொஞ்சினா நல்லா தான் இருக்கும். எங்க நீ தான் செய்யமாட்டேங்கற..”என்று அசடு வழிந்தான்.
“வேணாம்.. ஏதாவது ஏடாகூடாம பேசிகிட்டு இருந்திங்க.. என்ன செய்வேனு எனக்கே தெரியாது”
எதற்கு வம்பு என அமைதியாக தனா சாப்பிட.. எழிலும் சாப்பிட்டு எல்லாம் ஒதுக்கி சுததம் செய்துவிட்டு வர…
எழில் வரும் வரை டிவி பார்க்கலாம் என டிவி பார்த்து கொண்டு இருந்த தனாவை கண்டு கொள்ளாமல்..எழில் படுக்க சென்றுவிட்டாள்.
தன்னருகே வந்து ஏதாவது பேசுவாள் என நினைத்திருந்த தனாவிற்கு.. எழிலின் செயல் மனதிற்கு சட்டென ஒரு வெறுமையை கொடுத்தது.
அவனும் படுக்கையறைக்கு வந்து எழிலின் அருகில் படுத்தான். இருவருக்குமே உறக்கம் வரவில்லை. எழில் கண்ணை மூடி உறங்க முயற்சிக்க… அவளுடைய கால் குடைச்சலால் அவளால் உறங்க முடியவில்லை..
அவளையே பார்த்தவாறே படுத்திருந்த தனாவிற்கு.. அவள் உறங்க சிரமப்படுவதை தெரிந்தும் முதலில் திட்டுவாளோ என தயங்கியவன்.. மனது கேளாமல் எழுந்து காலை பிடித்துவிட..
எழில் கண்ணை திறவாமலே காலை உருவிக்கொள்ள முயற்சிக்க.. விடாப்பிடியாக இழுத்து வைத்து அழுத்திவிட்டான் தனா.
அவனின் பிடிவாதத்தில் அவனை திட்டுவதற்காக.. கண் திறந்து கணவன் முகம் பார்க்க.. அவனின் முகம் களையிழந்து வாடி போய் இருக்க…
இருந்தும் தன் காதல் அறியாமல் அவன் செய்த செயலை மன்னிக்க மனம் இடம் தராததால்.. கண்களை மூடி உறங்க முயற்சித்து உறங்கியும் விட..
தனாவிற்கோ அவளின் அணைப்பின்றி உறக்கம் வராமல் விடிய விடிய தவிப்போடு முழித்து கொண்டு இருந்தான்.
தனா எழிலை சமாதானம் செய்வானா… எழில் தனாவை மன்னித்து அரவணைப்பாளா..
Supero super sis 💞
yMEkKsoRVClunw
cfjvqrBID